Saturday, March 24, 2007

இசை என்னும் இன்ப வெள்ளத்தில்...

இன்று எனது மனைவி ஒரு முக்கியமான அலுவல் காரணமாக அலுவலகம் சென்றுவிட காலையில் நான் இன்றைய பொழுதை தனியாக எப்படி கழிப்பது? என்ற கேள்வியுடனேயே எழுந்தேன். இன்றைய தமிழ்மணத்தில் பதிவுகள் முழுவதும் இந்தியாவின் தோல்வியை சுற்றியே இருக்கும் என்பதால் அதை கூடுமான வரை தவிர்த்திட முனைந்தேன். வேறு என்ன செய்வது? என்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது தற்செயலாக என் கண்ணில் பட்டது ஜெயா TV யில் ஒளிபரப்பான இளையராஜாவின் Live-In Concert.


You Tube இல் சிறு சிறு துண்டுகளாக மொத்தம் 51 படங்கள். மொத்தத்தையும் இன்றே பார்த்து விட்டேன். அருமையான ஒரு நிகழ்ச்சி. நிகழ்ச்சி தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை. எது முன்? எது பின்? என்று தெரியாமல் அனைத்தையும் பார்த்தேன். அதைப் பற்றிய ஒரு அலசல்.


முதலில் கடவுள் வாழ்த்தாக அவர் பாடிய "ஜணனி ஜணனி" பாடலை கேட்டவர் அனைவரும் மெய் மறக்க செய்தது என்றால் அது மிகை இல்லை. பலரது கண்கள் கலங்கி விட்டது. குறிப்பாக K.J. யேசுதாஸ் அவர்களின் துணைவியார் "ஜெகன் மோகினி நீ! சிம்ம வாகினி நீ!" என்று அவர் பாடிய போது அழுதே விட்டார். இந்த பாடலை இறை நம்பிக்கை இல்லாத கமல் எவ்வாறு ரசிக்கிறார் என்பதை அறிய ஆவலாக அவரை காட்டுகிறார்களா என்று பார்த்தேன். கடைசி வரை காட்டவில்லை.

கடவுள் வாழ்த்தை தொடர்ந்து தனக்கு நிகழ்ச்சியை நடத்த தெரியாததால் தனக்கு உதவ யுவன் மற்றும் கார்த்திக்கை அழைத்தார். அவர்கள் தயங்கவே வேறு யாராவது உதவ முடியுமா? என்று கேட்க மைக்குடன் வந்தார் பார்த்திபன்.


அதன் பிறகு நான் பார்த்தது இளையராஜா ச, ரி, க என்று மூன்று சுவரங்களை மட்டுமே கொண்டு இசையமைத்த ஒரு தெலுங்கு பாடல். அதை பாடியவர் ஷ்ரேயா கோஸல். பாடல் அருமையாக இருந்தது. இசை அறிவு இல்லாத எனக்கு ஏதோ ஒரு மிகவும் கடினமான காரியத்தை இளையராஜா சாதித்திருக்கிறார் என்பதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

பின்னர் சித்ராவின் குயில் குரலில் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், மனோ மற்றும் சித்ரா பாடிய ஓ ப்ரியா ப்ரியா, SPB பாடிய மன்றம் வந்த தென்றல், மாங்குயிலே பூங்குயிலே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, ஹரிஹரன் பாடிய கஜுரஹோ, என்னை தாலாட்ட வருவாளா?, ஜெயசந்திரன் பாடிய ராசாத்தி உன்ன, உமா ரமணன் பாடிய ஏ பாடல் ஒன்று போன்றவை அனைத்தும் ஒன்றை விட ஒன்று மிகச் சிறப்பாக இருந்தன.

அடுத்து ஷ்ரேயா கோஸல் குரலில் காற்றில் எந்தன் கீதம், ஸ்வர்ணலதா குரலில் அடி ஆத்தாடி, சாதனா சர்கம் குரலில் செண்பகமே செண்பகமே போன்றவை வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தன. குறிப்பாக ஷ்ரேயா கோஸல் முதலில் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தோடுதே என்று பாடியவர் கடைசியில் தவறை உணர்ந்து தேடுதே என்று மாற்றிப் பாடினார். அவர் கடைசி முறை சரியாக பாடிய போது பலத்த கைத்தட்டல் அரங்கினுள் எழுந்தது. பாடி முடித்த பிறகு தவறுக்கு மன்னிப்பு கேட்கும் விதம் இது தமிழில் தனது முதல் மேடை நிகழ்ச்சி என்று குறிப்பிட்டார். ஆனாலும் அது ஒன்றை தவிர அவரது தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருந்தது. ஜானகி நிகழ்ச்சிக்கு வராத குறையை இது தீர்த்தது.

கடைசியாக நான் பார்த்தது இளையராஜா பாடிய நான் தேடும் செவ்வந்தி பூவிது பாடல். அருமையாக இருந்தது. நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த பாடல் தான். எனது எண்ணத்தையே எங்கே இருந்த ரசிகர்களும் பிரதிபளித்தார்கள். Once more கேட்டு மீண்டும் ராஜாவை பாட செய்தார்கள்.

இளையராஜாவை பாராட்டி பேசியவர்களில் SPB அவரை அடிக்கடி இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார். கமல் பேசிய போது தமிழ் நாட்டு மக்கள் பாரதியை கை விட்டதைப் போன்று இளையராஜாவை கை விடவில்லை என்றார். வாலி பேசும் போது இளையராஜாவின் இசை தாண்டிய திறமைகளை பட்டியலிட்டார்.

இளைய நிலா, ராஜ ராஜ சோழன், அந்தி மழை பொழிகிறது, பணிவிழும் மலர்வனம் பொன்ற பல பாடல்கள் இடம் பெறாவிட்டாலும் இது ஒரு அருமையான நிகழ்ச்சி. மொத்தத்தில் ஒரு விடுமுறையை அருமையான முறையில் கழித்தேன்.

பின்குறிப்பு : மாலை அலுவலகத்திலிருந்து வந்த எனது மனைவி கேட்ட துணி தோச்சியா? Tax return file செஞ்சாச்சா? வீட்டுக்கு phone செஞ்சியா? போன்ற கேள்விகளுக்கு நான் ஞே.. என்று முழித்ததால், "காலைலெ நான் போகும் போது எந்த எடத்தில் ஒக்காந்து கிட்டு இருந்தியோ அங்கியே இப்போ வரைக்கும் ஒக்காந்து கிட்டு இருக்கே. எப்போ பாத்தாலும் தமிழ்மணம் இல்லே ப்ளாக். மொதல்லே அது ரெண்டயும் fire wall போட்டு தூக்கனும். அப்போ தான் உருப்படுவே" என்பது போன்ற அர்ச்சனைகள் விழ ஆரம்பிக்கவே மக்களே நான் அப்பீட்டு..........

Tuesday, March 13, 2007

கலா'நிதி' மாறன்

கடந்த வாரம் Forbes Magazine உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் என்றும் இல்லாதபடி இந்தியர்கள் பெருமை கொள்ள பல விஷயங்கள் இருந்தன.


முதலாவதாக, முதல் 20 பணக்காரர்களில் அதிகபட்சமாக அமெரிக்கர்கள் ஐவர். அதற்கு அடுத்தபடியாக மூவர் இந்தியர்கள்.


ஆசியாவில் இதுவரை அதிகமாக இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஜப்பானியர்கள். ஆனால் இந்த ஆண்டு 24 ஜப்பானியர்கள், 20 சீனர்கள், 21 ஹாங்காங் தேசத்தவர்கள் ஆகிய அனைவரையும் பின்னுக்கு தள்ளி விட்டு 36 இந்தியர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.


இந்திய பங்கு சந்தையின் அபார வளர்ச்சியினால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் 14 புதியவர்கள் இணைந்து இருக்கிறார்கள்.


இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்களின் கூட்டு சொத்து மதிப்புத் தொகை 90 பில்லியன் டாலர்கள். அதாவது இன்றைய நிலவரப்படி 405000 கோடி ரூபாய்கள். இது இந்தியாவின் மொத்த கடன் தொகையில் 80 சதவிகிதம்.


இதை எல்லாம் விட தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்படும் வகையில், திரு. கலாநிதி மாறன் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சன் குழுமத்தின் 90 சதவிகித பங்குகளை வகிக்கும் இவரது சொத்து மதிப்பு 2.6 பில்லியன் டாலர்கள். அதிலும் பெரும்பாலும் வாரிசுகளாக இடம் பெற்றுள்ள அந்த பட்டியலில் "Self Made" ஆக இடம் பெற்றுள்ளார்.


இவரின் இந்த சாதனையை அரசியல் காரணங்களுக்காக பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இருட்டடிப்பு செய்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், சன் தொலைக்காட்சி கூட இதை அதிகமாக விளம்பரப்படுத்தவில்லை. எங்கே விளம்பரப்படுத்தினால் பிற ஊடகங்கள் ஊழல் சொத்து குவிப்பு என்று குற்றம் சாட்டிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஒருவர் நமக்கு பிடிக்காத ஒரு கட்சியில் இருக்கிறார் என்பதற்காக (அவர் தி.மு.க. வில் அடிப்படை உருப்பினரா? என்பது எனக்கு தெரியாது. ஒரு ஊகத்தில் குறிப்பிடுகிறேன்.) அவரது சாதனைகளை நாம் பாராட்டாமல் விட்டு விட முடியுமா?


அவரது சாதனைகளை மூடி மறைக்க சிலர் கூறு குற்றச்சாட்டுகள் இதோ.


1. அவர் கலைஞரின் பேரன். அதனால் அவருக்கு இது இலகுவானது.


ஒருவர் இவ்வளவு சாதனைகள் படைப்பதற்கு கலைஞரின் பேரன் அல்லது ஒரு மூத்த அரசியல் வாதியின் பேரன் என்ற அந்தஸ்து போதுமானால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூத்த அரசியல் வாதியின் பேரன்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். இவ்வளவு ஏன்? கலைஞரின் மற்ற பேரர்கள் பேத்திகள் கூட இடம் பெறவில்லையே?


2. இவரது சொத்து மதிப்பாக சொல்லப்படும் பல ஆயிரம் கோடிகள் உண்மையில் கலைஞர் ஊழல் செய்து குவித்தது.


அடிப்படை அறிவு இருக்கும் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். சன் என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அதன் financial results என்பது பக்காவாக auditing செய்யப்பட்டு வெளியிடப்படும் ஒன்று. அதில் இவ்வாறு முறைகேடான சொத்துக்களை எல்லாம் revenue வாகவோ profit ஆகவோ காட்ட முடியாது. கலைஞர் தான் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துகளை ஓலையூர் பிச்சான்டி, மாயவரம் ராமசாமி, சேத்துப்பட்டு சிங்கமுத்து போன்ற யாராவது பினாமிகள் பெயரில் சேர்ப்பாரே தவிர தனது பேரனின் மீது சேர்த்து "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்று கூற மாட்டார்.

3. கலைஞர் ஆட்சியில் இருந்த காரணத்தினால் அவர் பல கடினமான காரியங்களை இலகுவாக சாதித்துக் கொண்டார்.


சன் தொலைக்காட்சி தொடங்கியதில் இருந்து (1992) இன்றுவரை இந்த 15 ஆண்டுகளில், 9 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி தான் தமிழகத்தில் இருந்திருக்கிறது. 6 ஆண்டுகள் தான் தி.மு.க ஆட்சி. அ.தி.மு.க ஆட்சி செய்த போதும் சன் பின்னடையவில்லை. ஒரு வாதத்திற்காக 1996 இல் இருந்து இன்று வரை தி.மு.க மத்தியில் ஆட்சியில் இருக்கிறது (அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி ஆட்சி செய்த காலத்தை தவிர்த்து) என்று வைத்துக் கொண்டாலும், மத்திய ஆட்சியில் செல்வாக்கு உள்ளவர்கள் எல்லாம் அந்த பட்டியலில் இடம் பெறலாம் என்றால் பா.ஜ.க ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும், இந்த காங்கிரஸ் ஆட்சியில் குவோட்ரோச்சியும் கூட இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டுமே.


ஆனாலும் ஆட்சியில் உள்ள செல்வாக்கை இவர் தனது சுயநலனுக்காக பயன்படுத்தவே இல்லை என்று நான் கூற வரவில்லை. ஆனால் அதை இவர் மட்டுமே செய்யவில்லை. அம்பானி போன்றவர்கள் பலமுறை இதை செய்திருக்கிறார்கள்.

4. தி.மு.க இல்லையென்றால் சன் இல்லை


இதை ஒரு வகையில் ஒப்புக் கொள்ளலாம். சன் வளர்ந்து வந்த காலகட்டங்களில் தி.மு.க. வும் அதன் தலைவர்களும் பெரிதும் உதவி இருக்க கூடும். ஆனால் இப்பொழுது சன் தி.மு.க. விற்கு பலமே அல்லாது தி.மு.க. சன்னிற்கு பலம் இல்லை. தேர்தல் நேரத்தில் பிரச்சார அறிவிப்பு, பிரச்சாரத்தை நேரடி ஒளிபரப்பு செய்தல், இலவச விளம்பரங்கள், ஆட்சியில் இருக்கும் போது சாதனைகளை பெரிதாக்கி காட்டுதல், ஆட்சியில் இல்லாதபோது எதிர் கட்சியினரின் செயல்பாட்டுக் குறைகளை பெரிதாக்கி காட்டுதல் போன்ற அனைத்தையும் இலவசமாக தி.மு.க. விற்கு சன் தருகிறது.

5. தமிழ் சினிமாவில் சன் தொலைக்காட்சியின் அராஜகப் பிடி


இதிலும் உண்மை இல்லாமல் இல்லை. தென்னாடுடைய சிவன் நரியை பரியாக்கி, பரியை நரியாக்கியதை போல சில நல்ல படங்களை தோல்வி அடைய செய்து, சில திராபை படங்களை வெற்றியடைய செய்த பெருமை (???) சன் தொலைக்காட்சியையே சேரும். ஆனாலும் தமிழ் சினிமாவிற்கு சன் தொலைக்காட்சியினால் ஆதாயம் ஒன்றும் இல்லை என்பதில் சிறிதளவும் உண்மை இல்லை. பல படங்களுக்கு சன் நல்ல விலை கொடுத்து வாங்கி விடும் என்ற நம்பிக்கையில் தான் பூஜையே போடுகிறார்கள்.


6. சுமங்கலி கேபிள் விஷன் மூலம் பிற சிறு கேபிள் துறையினரை மிரட்டுதல்.


வன்மையாக கண்டிக்கபட வேண்டியது. மாற்று கருத்திற்கு இடம் இல்லை.

7. தி.மு.க. ஆட்சியில் அரசு விளம்பரங்கள் அனைத்தும் சன்னிற்கே அளிக்கப்படுகின்றன


இது உண்மையா? இல்லையா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். இது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதில் தவறென்ன இருக்கின்றது? சன் தொலைக்காட்சி மற்ற அனைத்து தொலைக்காட்சிகளையும் விட அதிக நேயர்களை கொண்டிருகிறது என்பது உண்மையல்லவா? அதிக நேயர்களைக் கொண்டிருக்கும் ஒரு தொலைக்காட்சிக்கு முன்னுரிமை அளிப்பது தவறா?

8. Lack of Business Ethics


இதற்கு சமீபத்திய உதாரணம் அசத்தபோவது யாரு? நிகழ்ச்சி. மேலோட்டமாக பார்கும் பொழுது இது சன் நிறுவனத்தினரின் கேவலமான நடத்தை போல தோன்றும். இதற்கு ஒப்பீடாக சொல்லக் கூடிய ஒரு உதாரணம் பார்ப்போம். ஒரு மாணவர் கேம்பஸ் தேர்வில் இன்போஸிஸ் நிறுவனத்தில் தேர்ச்சி பெருகிறார். அவருக்கு நல்ல பயிற்சி அளித்து, அவரது தகுதியை அந்த நிறுவனம் வளர்கிறது. ஒரு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் அங்கே பணி செய்த பிறகு அவர் வேறு நிறுவனத்திற்கு (உதாரணம் : விப்ரோ) சென்று விடுகிறார். உடனே விப்ரோ நிறுவனத்திற்கு Business Ethics இல்லை என்று தாம் தூம் என்று குதித்தால் எப்படி? There is no ethics in business. Only success or failure. அப்படியே ethics பற்றி பேச வேண்டும் என்றால், தங்களை வளர்த்து விட்ட நிறுவனத்தை விட்டு செல்பவர்களுக்கு தான் இல்லை என்று சொல்லலாம். மாறாக சன்னை குற்றம் சொல்வது தவறான ஒன்று.

இன்னும் பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் பதில் அளிப்பது இயலாத செயல். நான் அவரது PRO வும் கிடையாது.


ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்து, தொழிற்துறையில் எந்தவித முன்னனுபவமும் இல்லாமல், கல்வியை மட்டுமே மூலதனமாக கொண்டு, Petrochemicals, Automobile, Steel, Cement போன்ற உற்பத்தி தொழிற்துறையில் இல்லாமல், தகவல் தொழில்நுட்ப துறையிலும் இல்லாமல், Media & Entertainment துறையில் கால் பதித்து, இந்தியாவில் அந்த துறையில் உள்ள ஜாம்பவான்களான Zee, Star போன்றவற்றின் தலைவர்களால் கூட எட்ட முடியாத உச்சத்தை எட்டி இருக்கிறார் என்றால் அதை சக இந்தியனாக, தமிழனாக பாராட்ட வேண்டியது எனது கடமை.


Hats Off Mr.Maran!


பின்குறிப்பு: எனக்கு எந்த கட்சி சார்பும் கிடையாது. மாறனின் வளர்ச்சி பற்றி பலர் பல கருத்துக்களை கொண்டிருக்கலாம். நான் மேற் கூறியவை எனது கருத்து மட்டுமே. பதிவின் சாரம் கருதி பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். வருகைக்கு நன்றி மட்டுமே கூறுவேன்.

Friday, March 02, 2007

அமெரிக்கா பிடிச்சுருக்கா?

நான் அமெரிக்கா வந்ததிலிருந்து இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படாத உரையாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சக இந்தியர்களிடம், அமெரிக்கர்களிடம், உறவினர்களிடம், நண்பர்களிடம் யாரிடம் பேசும் போதும் இந்த கேள்வி இடம் பெற்று விடும். அதற்கு நானும் "ம்...", "Yeah, Good", "Ofcourse", "Kind Of", "Okie", "ரொம்பவே" போன்ற பதில்களை எனது மனநிலைக்கு ஏற்ற வாரு அளிப்பேன். இதே கேள்வியை நான் இந்தியாவில் இருந்த போது அமெரிக்கா சென்ற/சென்று திரும்பிய பலரிடம் கேட்டிருக்கிறேன். இது ஒரு வழக்கமான கேள்வி என்பதையும் தாண்டி ஒவ்வொரு முறை இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படும் போதும் என்னுள் எதையோ தொலைத்த ஒரு உணர்வு ஏற்படும். அதிலும் சமீபத்தில் ப்ரியாவின் "அப்பா" என்ற பதிவை படித்த உடன் அந்த உணர்வு அதிகரிக்க தொடங்கியது.

நான் பார்த்த வரை அமெரிக்கா வரும் இந்தியர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். ஒன்று இந்தியாவில் கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு, அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க வருபவர்கள். இவர்கள் தங்களது மேல் படிப்பிற்கு அதிகம் செலவு செய்து விட்டதால் அமெரிக்காவிலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். அமெரிக்காவிற்கு இளம் வயதிலேயே (21) வந்து விடுவதாலும், அமெரிக்க வாழ்க்கை முறை பழகி விட்டதினாலும், இந்தியாவின் முன்னேற்றதை அறியாததாலும் அவர்களுக்கு இந்தியா செல்வது என்றால் வேப்பங்காயாக இருக்கிறது. 10 ஆண்டுகளாக இங்கே இருக்கும் ஒருவர் இந்தியாவில் Flexi Timings, Working From Home, Calling by Name இதெல்லாம் இருக்கிறது என்பதை நம்ப கூட மறுத்து விட்டார். அவர் என்னிடம் கூறியது, "I know people call their managers by names in India. But do they call them by name?"

அவரை சொல்லி குற்றமில்லை. அவரைப் போன்ற பலரை நான் பார்த்திருக்கிறேன். இந்தியாவின் வளர்ச்சியை மாற்றத்தை அறியாதவர்கள் அவர்கள். அவர்களை பொருத்தவரை மேல் படிப்பு படிக்கும் போது அவர்களின் லட்சியம் ஒரு வேலையும் H1B ஸ்பான்ஸரும். வேலை கிடைத்த உடன் அவர்களின் லட்சியம் GC. அதன் பிறகு அமெரிக்க குடியுரிமை. அடித்து பிடித்து இதை பெருவதற்கு 10 - 15 ஆண்டுகள் ஆகிவிடும். அவரை போன்றவர்களிடம் சென்று கேட்டால் யோசிக்காமல் சொல்வார்கள் "அமெரிக்கா தான் பிடிக்கும்; அமெரிக்கா மட்டும் தான் பிடிக்கும்" என்று.

அடுத்தது இங்கே Onsite Deputee யாக வரும் நம் நாட்டவர்கள். ஒரு நிலையிலிருந்து பார்த்தால் இவர்கள் பரிதாபமானவர்கள். இவர்கள் வந்த உடன் இவர்களுக்கு இங்கே அத்தியாவசிய தேவையான கார், ஒட்டுநர் உரிமம், கைத் தொலைபேசி, கடன் அட்டை, மடிக் கணிணி போன்றவற்றுள் பல இருக்காது. மேலும் இவர்களுக்கு கடன் வரலாறு (Credit History க்கு தமிழில் என்ன?) கூட இருக்காது. யாராவது தெரிந்தவர்கள் அதே ஊரில் கார் வைத்திருந்தால் தப்பித்தார்கள். இல்லையென்றால் அவர்கள் பாடு திண்டாட்டம் தான். இவ்வளவு ஏன்? ஒரு சிலருக்கு பேசுவதற்கு கூட ஆள் இருக்காது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பல நண்பர்களுடன் இருந்து விட்டு இங்கே வந்து நாலு சுவருக்குள் இருக்கும் அவர்களின் நிலை பரிதாபமானது.

அட எல்லாம் கிடைத்து விட்டது. போய் ஒரு நல்ல TV, கார் வாங்கலாம் என்றால், எவ்வளவு நாட்கள் எங்கே இருக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. இருக்கும் குறைந்த நாட்களில் பணம் சேமிக்க தான் அவர்கள் விரும்புவார்கள்.

மற்றொரு நிலையிலிருந்து பார்த்தால் இவர்கள் குடுத்து வைத்தவர்கள். ஏனென்றால் அவர்களுக்கு அமெரிக்கா மீது ஒரு பிடிப்பு ஏற்படுவதில்லை. எந்த நிலையிலும் அவர்கள் இந்தியா செல்ல தயாராகவே இருக்கிறார்கள்.

அவர்களை அமெரிக்காவில் பிடித்து வைதிருப்பது பணம், பணம், பணம் மட்டுமே. அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்பு தாம்புக் கயிற்றினால் கட்டப்பட்ட அந்த பிடிப்பு, நாளாக நாளாக வெறும் நூலினால் கட்டப்பட்ட பிடிப்பாகிறது. 3 மாதங்கள் அமெரிக்காவில் இருந்தவர் ஒருவரிடம் கேட்டால், "ம்... சூப்பரா இருக்கு" என்று பதில் வரும். அதுவே ஒரு வருடம் ஆனவரிடம் கேட்டால், "பரவாயில்லை" என்று பதில் வரும். இரண்டு வருடத்திற்கு பிறகோ, "எப்போடா இந்தியா போலாம்? என்று இருக்கு" என்பது பதிலாக இருக்கும்.

நாளாக நாளாக முதல் வகையினருக்கு பிடித்து போகும் அமெரிக்கா, ஏன் இவர்களுக்கு கசக்கிறது? என்று கேட்டால், இவர்கள் நான் முன்னரே கூறியது போல அமெரிக்காவில் வாழ அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது இல்லை.

அடுத்தது என்னை போன்ற ரெண்டுங் கெட்டான்கள். இந்தியாவில் ஒரு சில ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு இங்கே வந்தவர்கள். இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் வாழ்க்கை தரத்தை தவிர வேறு வேறுபாடு எதுவும் இல்லை என்பதை உணர்ந்தவர்கள். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பதை போல இந்திய வாழ்க்கையும் பிடித்து, அமெரிக்க வாழ்க்கையையும் விட முடியாமல் இருப்பவர்கள்.

எங்களைப் போன்றோரிடம் இந்த கேள்வி கேட்கப்படும் போது, குறிப்பாக என்னிடம் கேட்கப்படும் போது, என்னால் எந்த ஒரு பதிலையும் தர முடியவில்லை. இந்தியாவா இல்லை அமெரிக்காவா என்ற கேள்விக்கு, அமெரிக்கா என்பது எனது பதிலானால், நல்ல சம்பளம், இரு சக்கர வாகனம், கைத் தொலைபேசி, நல்ல நண்பர்கள், ஒவ்வொரு வெள்ளி இரவும் திரைப் படம், மாதத்திற்கு ஒருமுறை ஏன் சில சமயம் மாதத்திற்கு இரு முறை கூட ஊர்ப் பயணம், அத்தகைய பயணங்களில் சந்திக்கும் பழைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்களின் திருமணங்கள் போன்ற அனைத்தையும் தந்தது இந்தியா அல்லவா? மாறாக இந்தியா என்பது எனது பதிலானால், வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம், இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு பொருளாதார உதவிகளை செய்யக் கூடிய நிலை, அதிக மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை போன்றவற்றை தந்தது அமெரிக்கா அல்லவா? இதில் எதை கூற? எதை விட? பல முறை யோசித்தும் எது சிறந்தது என்பதை என்னால் கூற முடியவில்லை.

இன்றோ நாளையோ என் தந்தை என்னிடம் மறுபடியும் கேட்கும் இந்த கேள்விக்கு நான் கூறப்போகும் பதில், "I love it". புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்றால், பொய்மையும் வாய்மையாகத் தானே கருதப் படும்.