Tuesday, June 19, 2007

முதலாம் ஆண்டு நிறைவு

சென்ற 2006 ஆம் ஆண்டு ஜனவரியில், நான் அமெரிக்கா வந்த உடன் ஏற்பட்ட ஒரு விதமான தனிமையால், என்ன செய்வது?; தமிழுடன், தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் விட்டுப் போன தொடர்பை மீண்டும் எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது? என்று அஞ்சிய பொழுது எனக்கு அறிமுகமானது தமிழ்மணம். அதற்கு முன்பு எனக்கு தமிழில் வலை பதிவுகள் இருப்பதே தெரியாது. ஒரு ஆறு மாத காலம் பிறர் பதிவுகளை படித்து மேய்ந்து கொண்டிருந்துவிட்டு, நாமும் ஏன் பதிய கூடாது? என்ற கேள்வி என்னுள் எழ பிறந்ததுதான் எனது வலைப்பூ. [டேய்! பரதேசி! அந்த கேள்விக்கு நான் வேண்டாம், வேண்டாம்னு கத்தினேனேடா!]

இதோ வலைப்பூ தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற்றது. பதிவுகளின் எண்ணிக்கை என்று பார்த்தால் 31 பதிவுகளை தான் பதிந்துள்ளேன் (இது 32 ஆவது பதிவு). சராசரியாக மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள். ஆனால் பதிவுகளின் எண்ணிக்கையோ அல்லது பின்னூட்டங்களின் எண்ணிக்கையோ என்னை மகிழ்விப்பதில்லை. நான் எழுதிய "கமல் ஒரு சகாப்தம்" என்ற பதிவு அதிகபட்சமாக 38 பின்னூட்டங்களை பெற்றது. ஆனால் நான் மிகவும் மனம் நொந்து பம்பாய் இரயில் குண்டு வெடிப்பிற்கு பின்னர் எழுதிய "ஒரு மகன், ஒரு கணவன், ஒரு சகோதரன் - ஒரு மரணப்போராட்டம்" என்ற பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை. "கமல் ஒரு சகாப்தம்" பதிவை திரட்டிய பூங்கா இதழ் எனது "குருதியை தாருங்கள்; சுதந்திரம் அளிக்கிறேன்!" என்ற நேதாஜியைப் பற்றிய பதிவையோ அல்லது இந்தியப் போர்களைப் பற்றிய தொடர் பதிவுகளையோ ஒன்றை கூட திரட்டவில்லை. அதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் கூடத்தான். [அடங்குடா! நல்லா இருந்தா திரட்டி இருப்பாங்க. அதுக்காக கமல் பதிவு நல்லா இருக்குன்னு நினைச்சுக்காதே. பூங்காலே யாரோ ரஜினி ஃபேன் இருக்காங்க. கமல கேவலப்படுத்த வேற வழி இல்லாம உன்னோடத யூஸ் பண்ணி இருக்காங்க.]

இதற்கிடையில் தமிழ்மண நட்சத்திரமாக என்னை தேர்வு செய்து என்னை கை தூக்கி விட என் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் தமிழ்மண நிர்வாகத்தினர் எனது ஒப்புதலை கோரினர். ஆனால் நான் அன்புடன் மறுத்து விட்டேன். [இதெல்லாம் ஒவர் டா! அவங்க பாவம் என்னடா பன்னுவாங்க. இருக்கறது 100 பேர். வாரா வாரம் ஒருத்தர்னா உனக்கு ஒரு சான்ஸ் வந்து தானேடா ஆகனும். ஆனா ஒன்னுடா, வேணாம்னு சொன்னே பாரு, அதான் சூப்பர். ஏன் சொல்றேன்னா? நட்சத்திர பதிவர்னா முகப்புலேயே ஃபோட்டோலாம் தெரியுமாம். உன்னோட ஃபோட்டோலாம் போட்டா உருப்புட்ட மாதிரி தான்.] ஒரே வாரத்தில் ஏழு பதிவுகள் எழுத நேரம் ஒதுக்க முடியாததே காரணம். அதே பொழுதில் வாய்ப்பு கிடைத்து விட்டதே என்பதற்காக ஏனோ தானோ என்று பதிவுகள் பதிந்து கிடைத்த வாய்ப்பையும் அவர்களது நம்பிக்கையையும் வீணடிக்க நான் விரும்ப வில்லை. இதுவும் ஒரு காரணம். [சோம்பேறித் தனத்த எவ்வளோ பெருமையா சொல்றான் பாரு நாதாரி.]

எனது மன அமைதிக்காகவே பதிவு எழுதத் தொடங்கினேன். ஆனால் தமிழ் வலையுலகமோ அதனினும் அதிகமாக, மன அமைதியுடன் பல நல்ல நண்பர்களையும் சேர்த்துக் கொடுத்தது. வலையுலகின் மூலம் எனக்கு அறிமுகமான Syam, Priya, Arun Kumar, Adiya, மு.கா., வெட்டிப்பயல், CVR, Radha Sriram, மணி ப்ரகாஷ், மாயவரம் சிவா, ஷைலஜா போன்றவர்களின் நட்பை சம்பாதித்ததில் தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களில் Syam, Priya தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளில் நான் அதிகம் பின்னூட்டியதில்லை. ஆனாலும் அவர்கள் எனது பதிவை படித்து பின்னூட்ட தவறியதில்லை. [டேய் பேரிக்கா மண்டையா! Syam மும், Priya வும் இன்னும் கமென்ட் மாடரேஷன் பன்னலேடா. அதுனாலே தான் உன்னோட கமென்ட் எல்லாம் அவங்க பதிவுலே தெரியுது. மத்தவங்க எல்லாம் உன்னோட பேர பாத்தோன்னயே Spam க்கு அனுப்பி, Shift+Delete பன்னி, குப்ப தொட்டி, கக்கூஸ் வழியா ஸெப்டிக் டாங்குக்கு அனுப்பிடறாங்க.]

மேலும் இன்னொரு காரணத்திற்காகவும் நான் வலையுலகிற்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். இட ஒதுக்கீடு, ஆரிய - திராவிட சிந்தனைகள், பார்ப்பணீயம், இந்துத்வா, இஸ்லாம், ஈழ சகோதரர்களின் நிலை, இந்திய மற்றும் தமிழக அரசியல், கம்யூனிஸம் போன்ற பலவற்றை பற்றிய எனது கருத்துக்களை மாற்றியது வலையுலகு. நான் மேலே கூறியவைகளில் பலவற்றில் நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையில் இப்பொழுது இல்லை. இவை அனைத்திலும் இரு தரப்பு வாதங்களையும் கூர்ந்து கவனித்து, உள் வாங்கிக் கொள்கிறேன். அதை மனதினில் அசை போட்டு தெளிவு பெறுகிறேன். [வேணாம்; வேணாம்; ஆட்டோ வருது சொல்லிட்டேன்.]

பள்ளி முடித்த பிறகு எனக்கு தமிழ் எழுதுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் தமிழ் தட்டச்சு செய்து பழக்கம் இல்லை. அதனால் எனது தமிழில் பல எழுத்து பிழைகள், சில இலக்கண பிழைகள் வந்த போது அதை அன்புடன் சுட்டிக் காட்டிய வலையுலகினர் அனைவருக்கும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். அது வரை ஏனோ தானோ என்று பதிந்து கொண்டிருந்த நான், அவர்கள் சுட்டிக் காட்டிய பிறகு சிறிது கவனமாக பதிய தொடங்கினேன். இதனால் எனது தமிழ் மேம்பட்டது. [மவனே! இருடி உன்னோட "மேம்பட்ட தமிழ்" லட்சனத்த பாக்கறேன். இந்த பதிவுலேயே ஆயிரம் தப்பு கண்டு பிடிச்சு செருப்பால அடிக்க போறாங்க.]


இதுவரை நான் எழுதியவை யார் மனதையும் புண் படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். அவ்வாறு புண்பட்டு இருப்பின் தங்களது மன்னிப்பை கோருகிறேன். வரும் ஆண்டில், நேதாஜியின் சொற்பொழிவுகளை தொகுப்பாக பதிய வேண்டும் என்று ஆசை. அப்படியே பாரதி பற்றியும், விவேகானந்தரை பற்றியும் எழுத வேண்டும் என்றும் ஆசை. Greek Mythology பற்றியும் எழுத வேண்டும். கன்னி முயற்சியாக ஒரு கதை எழுதலாம் என்றும் நினைக்கிறேன். [கதையா? யூ மீன் லைக் "பாப்பா போட்ட தாப்பா","மல்கோவா மாமி" etc. ஐ லைக் இட் யா.]

ஒரு வருட காலமாக தொட்டிலில் கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு இருந்த நான், இரண்டாம் ஆண்டில் மெல்ல தவழ தொடங்கி இருக்கிறேன் உங்கள் வாழ்த்துக்களுடன். [நல்ல வேள. தொட்டில்ல மூச்சா போனது, கக்கா போனது இதெல்லாம் சொல்லாம விட்டான்.]

நன்றி. [அடேய் கீ போர்டுவாயா! பெரிய திண்டுக்கல் பூட்டா வாங்கி உன்னோட ப்ளாகுக்கு போடுடா. அவங்க எல்லாரும் "நன்றி!" உனக்கு சொல்லுவாங்க.]