Sunday, November 21, 2010

பொடிமாஸ் - 11/21/2010

வர வர "டீலா? நோ டீலா?" நிகழ்ச்சி எரிச்சலை கிளப்புகிறது. ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் வந்து ஒப்பாரி வைக்கிறார். நிச்சயம் நிகழ்ச்சி நடத்துபவர்கள் அதனை ஊக்குவிக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. இம்மாதிரி நிகழ்ச்சிகளில் வந்து அழுது TRP யை உயர்த்தும் உத்தியை முதலில் தொடங்கியது சன் டிவியின் அரட்டை அரங்கம் தான் என்று நினைக்கிறேன். யாருக்கு தான் வாழ்க்கையில் கஷ்டம் இல்லை? ஆனால் அதனை முன் பின் தெரியாதவர்களிடம் கூறி ஒப்பாரி வைப்பது அநாகரீகத்தின் உச்ச கட்டம். அதுவும் தொலைக்காட்சியில் பலர் பார்க்க அதை செய்வது மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது. அதுவும் நிகழ்ச்சி நடத்தும் ரிஷி பங்கேற்பாளர்களை தொட்டு, தடவி பேசுவது அதை விட அதிகம் எரிச்சல் அடைய செய்கிறது. வெளிநாட்டு நிகழ்ச்சிகளின் கருவை காப்பி அடிக்கும் இவர்கள் அங்கு நிகழ்ச்சி நடத்தும் முறையையும், நடத்துபவர்களின் நடத்தையையும் சேர்த்து காப்பி அடித்தால் நன்றாக இருக்கும்.





ஒரு வழியாக 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் கடந்த மாதம் 14 ஆம் தேதியுடன் நன்கு நடந்து முடிந்தன. இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி மற்றும் 36 பவழ பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதே போன்ற ஒரு அணியை நாம் ஒலிம்பிக் போடிகளுக்கு தயார் செய்தால் குறைந்த பட்சம் 10 பதக்கங்களாவது வாங்குவது உறுதி.



வழக்கம் போலவே இதிலும் பல கோடி ரூபாய் ஊழலும் முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. வழக்கம் போலவே CBI விசாரனை மேற்கொள்ளும். வழக்கம் போலவே குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள். என்னை கேட்டால் விசாரனை விசாரனை என்று அதற்கு அநாவசியமாக அரசு பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக லஞ்சத்தையும், ஊழலையும் சட்டபூர்வமாக்கி விடலாம். முதலில் அரசுக்கு அதனால் அதிக வருமான வரி கிடைக்கும். இரண்டாவது பணம் வெளி நாடுகளுக்கு போகாமல் நம் நாட்டிலேயே இருக்கும். மூன்றாவது அப்பணம் இங்கே பயமின்றி செலவு செய்யப் படுவதினால் நாட்டின் பொருளாதாரமும் கூடும். லஞ்ச ஒழிப்பு சட்டம் இருப்பதனால் இப்பொழுது நாட்டில் பாலாறும் தேனாறுமா ஓடுகிறது? A little bit of sarcasm adds spice to the life. Won’t it add to the constitution?



சென்ற வாரம் இங்கே இருக்கும் ஒரு இந்திய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு பல இடங்களுக்கு சென்று கடைசியாக "100 கோடி மக்கள் இருக்கும் இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு தங்கத்திற்கு முக்குகிறது" என்ற அந்நியன் வசனத்தில் வந்து முடிந்தது. கடந்த ஒலிம்பிக்கில் எட்டு தங்க பதக்கங்களை வாங்கிய அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவின் கலோரிகள் எவ்வளவு தெரியுமா? சுமார் 12000 கலோரிகள். ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் உணவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஆறு சராசரி மனிதர்கள் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவினை இவர் ஒருவர் மட்டுமே சாப்பிடுகிறார். அவர் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவு கீழே உள்ளது பாருங்கள்.

காலை: முட்டை, சீஸ், லெட்டூஸ், தக்காளி, வெங்காயம், மேயோ சேர்த்த சான்ட்விச்கள் மூன்று. ஐந்து முட்டை ஆம்லெட் ஒன்று. சாக்லேட் சிப்கள் கலந்த பான்கேக் மூன்று. ஃபிரென்ச் டோஸ்ட் மூன்று. இரண்டு கப் காபி.

மதியம்: ஒரு பவுண்டு பாஸ்தா. ஹாம், சீஸ், மேயோ சேர்த்த பெரிய சான்ட்விச்கள் இரண்டு. சுமார் 1000 கலோரி எனர்ஜி ட்ரின்க்குகள்.

இரவு: ஒரு பவுண்டு பாஸ்தா. ஒரு பெரிய சைஸ் சீஸ் பீசா. சுமார் 1000 கலோரி எனர்ஜி ட்ரின்க்குகள்.

யோசித்து பாருங்கள். இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களில் எவ்வளவு மக்களால் இப்படி தினமும் சாப்பிட முடியும்?



"இளைய நிலா" ராஜாவின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சில நேரங்களில் எனது ஐபாடில் ஷஃப்புலாகி பாடல்கள் வரும் பொழுது அந்தி மழையையும், பணி விழும் மலர்வனத்தையும் ஸ்கிப் செய்திருக்கிறேன். ஆனால் என் நினைவில் இளைய நிலாவை ஸ்கிப் செய்ததே கிடையாது. பாடல் வந்து விட்டால் முழு பாடலையும் கேட்டு விட்டுத்தான் அடுத்த வேலை. அதிலும் இடையே வரும் அந்த ஃப்ளூட் இன்ட்ரலூட் அட்டகாசம். கேட்கும் பொழுதே மனம் சொக்கும். ராஜாவால் மட்டுமே அப்படி ஒரு இசையை தர முடியும். கோல்டன் க்ளோப்களுக்கும், ஆஸ்கார்களுக்கும், க்ராமிக்களுக்கும் பின்னரும் கூட நான் ராஜா ராஜா என்று தொண்டை கிழிய கத்துவது இது போன்ற இசைகளுக்காகத்தான்.

கீழே அதன் வீடியோ இருக்கிறது. நான் சொன்ன ஃப்ளூட் இன்ட்ரலூட் 1:12 இல் தொடங்கி இருந்து 1:22 வரை இந்த வீடியோவில் வருகிறது. பார்த்து, கேட்டு மகிழுங்கள்.


Saturday, November 20, 2010

என்னை கவர்ந்த அனிமேஷன் படங்கள்

1. Spongebob Squarepants Movie

Spongebob வசிக்கும் பிகினி பாட்டத்தில், King Neptune னின் கிரீடம் காணாமல் போய்விடுகிறது. பழி Spongebob ன் முதலாளி Mr. Krabs மீது விழுகிறது. இதை திட்டமிட்டு செயல் படுத்தியது Mr. Krabs ன் எதிரி Plankton. தொலைந்த கிரீடத்தை கண்டு பிடித்து Mr. Krabs ஐ மரண தண்டனையிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு நமது நாயகனுக்கு வருகிறது. அதுவும் அதை ஆறு நாட்களுக்குள் செய்ய வேண்டும். நமது நாயகன் அதை செய்து முடித்தானா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

2. Monsters, Inc.

Monstropolis என்ற நகரத்தில் முழுதும் மான்ஸ்டர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இருப்பது மான்ஸ்டர்களுக்கான உலகத்தில். அவர்களுக்கான மின்சாரத்தை வழங்குவது Monsters, Inc. என்ற நிறுவனம். கதவுகளின் வழியாக மனிதர்கள் வாழும் உலகுக்கு வந்து குழந்தைகளின் அறைக்குள் நுழைந்து அவர்களை பயமுறுத்தி அதிலிருந்து மின்சாரம் எடுக்கிறார்கள் அவர்கள். ஆனால் அவர்களுக்கு மனிதர்கள் என்றால் பயம். அதனால் மனிதர்களையோ, மனிதர்கள் உபயோகிக்கும் பொருட்களையோ தொடவே மாட்டார்கள். அந்த நிறுவனத்தில் வேலை செய்பவன் நமது நாயகன் Sulley. அந்த நிறுவனத்தில் வேலை செய்பவன் நமது நாயகன் Randall. Sulley யை அழிக்கும் நேரத்திற்காக காத்திருப்பவன்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் Sulley மனித உலகுக்கு வந்து திரும்பும் பொழுது அவனுடன் ஒரு பெண் குழந்தையும் மான்ஸ்டர்களின் உலகுக்கு வந்து விடுகிறது. இதை முதலில் அறிந்து Sulley பயப்படுகிறான். பின்னர் அக்குழந்தையிடம் அன்பு கொண்டு அதனை காப்பாற்றுவதற்காக பாதுகாத்து மீண்டும் மனித உலகுக்கு அனுப்ப முயல்கிறான். அவனது முயற்சிகள் தோல்வி அடைகிறது. இடையில் Randall அதனை அறிந்து இதை வைத்தே Sulley ஐ அழிக்க முயல முடிவு என்ன? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

3. Finding Nemo

Marlin மற்றும் அவனது மனைவி Coral இருவரும் தங்களின் வாரிசுகள் பிறப்பதற்காக தங்களின் புது இல்லத்தில் காத்திருக்கிறார்கள். அப்பொழுது ஒரு பெரிய சுறா வந்து Coral மற்றும் அவர்களது நூற்றுக்கணக்கான முட்டைகள் அனைத்தையும் சாப்பிட்டு விடுகிறது. மிஞ்சியது Marlin மற்றும் ஒரே ஒரு முட்டை. அந்த முட்டையில் பிறந்த தனது மகனுக்கு Nemo என்று பெயரிடுகிறான் Marlin. தனக்கு முன் ஏற்பட்ட அனுபவத்தால் Nemo வை படு ஜாக்கிரதையாக வளர்க்கிறான் Marlin. இது Nemo விற்கு பிடிக்க வில்லை.

ஒரு நாள் தனது தந்தையின் பேச்சை மீறி கடலின் மேற்தளத்திற்கு செல்ல முயலும் Nemo வலையில் சிக்கிக் கொள்கிறான். Marlin னுக்கு ஒரே ஒரு துப்பு தான் கிடைகிறது. அது Nemo சென்றது Sydney என்பது தான். உடனே Nemo வை தேடி Sydney செல்கிறான் Marlin. அவன் Nemo வை கண்டு பிடித்தானா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

4. Madagaskar

நியூ யார்க் விலங்கியல் பூங்காவில் இருந்து நாஙு விலங்குகள் தப்பி செல்கின்றன. அவை Marty (வரிக் குதிரை), Alex (சிங்கம்), Malman (ஒட்டகச் சிவிங்கி) மற்றும் Gloria (நீர் யானை). இவைகளுடன் சில பெங்குயின்களும் தப்பி செல்கின்றன.வழியில் கப்பலில் ஏற்படும் சண்டையினால் நமது நாயகர்கள் நால்வரும் மடகாஸ்கரில் கரை ஒதுங்குகிறார்கள்.

அங்கு வந்த ஓரிரு நட்களில் Alex பசியினாலும் தனது இயற்கை குணத்தினாலும், Marty யை கொன்று சாப்பிட முயற்சிக்க, மற்ற விலங்குகள் எல்லாம் சேர்ந்து Alex ஐ ஒதுக்குகிறார்கள். Alex உம் தனது குறை அறிந்து காட்டின் வேறு பகுதிக்கு ஒதுங்கி செல்கிறான். அப்பொழுது Fossa என்ற ஒரு வகை விலங்கு கூட்டங்களால் நமது நாயகர்களுக்கு ஆபத்து வர, Alex வந்தானா?, அவர்களை காப்பாற்றினானா?, நமது நாயகர்கள் மீண்டும் நியூ யார்க் சென்றார்களா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

6. Robots

Rodney ஒரு இளம் ரோபோ. அவனது தந்தை Herb. தாயார் Lydia. தான் ஒரு பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற கனவுடன் ரோபோ நகரத்திற்கு வருகிறான். அவன் தனது வழிகாட்டியாக நினைப்பது Bigweld என்ற பெரிய விஞ்ஞானியை. வந்த பிறகு தான் தெரிகிறது BigWeld அவர்களது நிறுவனத்தை Rachet மற்றும் அவனது தாய் Gasket இருவரும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அவர்களுக்கு பணம் சம்பாதிப்பதே குறிக்கோள். பழைய ரோபோக்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிப்பதோ இல்லை அவைகளை பழுது பார்ப்பதோ பணம் சம்பாதிக்க தடையாக இருப்பதால் அதனை நிறுத்தி விடுகிறார்கள் அவர்கள். தட்டி கேட்பவர்களை கொன்று விடுகிறார்கள்.

Rodney Bigweld ஐ சந்திக்க பெரு முயற்சி செய்து முடியாமல் போகவே அவனே பழைய ரோபோக்களை பழுது பார்க்க தொடங்குகிறான். இதனால் கோபம் கொண்ட Gasket அவனை கொல்ல முயற்சி செய்கிறாள். இடையே Herb உடல் நிலை சரியில்லாமல் போகவே அவருக்கு உதிரி பாகங்கள் தேவை படுகிறது. அதை Bigweld ஆல் மட்டுமே தயார் செய்ய முடியும்.

Roodney Bigweld ஐ சந்தித்தானா?, Rachet மற்றும் Gasket தண்டிக்கப்பட்டார்களா?, Herb காப்பாற்றப்பட்டாரா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

6. Toy Story

1995 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் அனிமேஷன் படங்களுக்கெல்லாம் தந்தை. முதன் முதலில் CGI டெக்னாலஜியினால் உருவாக்கப்பட்ட முழு நீள திரைப்படம் இதுவே.

Woody ஒரு கௌபாய் பொம்மை. அதை வைத்திருப்பவன் Davis. அந்த வருடம் பிறந்த நாளில் Davis க்கு Buzz என்ற ஒரு பொம்மை பரிசாக கிடைக்கிறது. அது Davis க்கு மிகவும் பிடித்து போகிறது. அது வரை Davisக்கு பிடித்தமான பொம்மையாக இருந்த Woody இதை கண்டு கோபம் கொள்கிறான். ஒரு நாள் அவர்கள் வெளியே செல்லும் பொழுது Woody யும், Buzz உம் சண்டை போட்டுக் கொண்டு காரிலிருந்து விழுந்து விடுகிறார்கள். அவர்களை Philips என்ற சிறுவன் எடுத்துக் கொள்கிறான். அவனுக்கு பொம்மைகளை உடைத்து, கொல்வது என்றால் மிகவும் பிடிக்கும். நமது நாயகர்கள் இருவரையும் கூட கொல்வதற்கு முயற்சி செய்கிறான்.

அதே நேரத்தில் Davis தனது பெற்றோர்களுடன் வேறு ஒரு ஊருக்கு செல்ல தயாராகிறான். தான் மிகவும் நேசித்த இரு பொம்மைகளையும் காணாமல் வருத்தத்தில் இருக்கிறான் அவன்.

நமது நாயகர்கள் Philips இடம் இருந்து தப்பித்தார்களா?, Davis ஊருக்கு செல்வதற்கு முன்னர் அவனிடம் வந்து சேர்ந்தார்களா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.