Wednesday, February 29, 2012

நடிகர் விஜய்க்கு ஆப்படித்த தமிழக முதல்வர்

ஆமாம் மக்களே தமிழகமே இந்த நம்பிக்கை துரோகத்தை நினைத்து வெம்பிக் கொண்டிருக்கிறது. அம்மையாரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகு பார்த்த நமது தளபதிக்கு அவர் இழைத்த துரோகத்திற்கு பரிகாரமே கிடையாது. என்ன துரோகம் என்று அறிய மேலே படியுங்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாகவே SMS களில் அதிக கலாய்ப்புக்கு ஆளானவர் நனது இளைய தளபதி தான். இளைய தளபதியை கலாய்த்து SMS அனுப்பாத நாட்கள் எல்லாம் வீணாய் போன நாட்கள் என்று என்று ஒரு கூட்டமே ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஃபேஸ் புக்கிலும், ஆர்குட்டிலும், ட்விட்டரிலும், ஈமெயிலிலும் தீயாய் வேலை செய்தார்கள் அவர்கள். அப்படிப்பட்ட கூட்டத்தினால் முடி சூடா மன்னனாக விளங்கியவர் நமது இளைய தளபதி. இப்படி இருந்த நிலையில், யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடந்த ஓரிரு மாதங்களாக அவரது ஆளுமை குறைந்து அந்த இடத்தை தமிழக மின்சார வாரியம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு வார காலத்தில் எனது கண்ணில் பட்ட ஜோக்குகள் இவை.

ஈபி ரிப்போர்ட்:

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை.

2007 - 75
2008 - 15
2009 - 05
2010 - 00

ங்கொய்யால கரண்ட் இருந்தாதானேடா..........



ஏன் சார்? ஃப்யூஸ் புடுங்கி ஒரு வாரம் ஆச்சு. இன்னும் பில் பணம் கட்டாமல் இருக்கீங்க.

சாரி சார். கரண்ட் கட்டுன்னு சும்மா இருந்துட்டேன்.




நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி. விளையாட ஆர் யூ ரெடி?

எங்கள் வீட்டுக்கு எப்பொழுது மின்சாரம் வரும்?

1. எனக்கு தெரியாது
2. உனக்கு தெரியாது
3. ஈபிக்கு தெரியாது
4. யாருக்குமே தெரியாது



வரும், ஆனா வராது - இது என்ன?

கரண்ட் பில் வரும், ஆனா கரண்ட் வராது.



"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" இது பழமொழி. "கரண்ட் உள்ள போதே தூங்கிக்கொள்" இது புது மொழி.



சென்ற வாரம் நாஸா இரவு நேரத்தில் எடுத்த புகைப்படம்.



Monday, February 13, 2012

பொடிமாஸ் - 02/13/2012

"தமிழகத்தில் சென்னை நீங்கலாக மற்ற அனைத்து இடங்களிலும் இனி எட்டு மணி நேர மின்வெட்டு" தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு. அது என்ன சென்னை நீங்கலாக? சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா? பட்டுக் கோட்டையில் ஒரு லேத்துப் பட்டறை வைத்திருப்பவன், தஞ்சையில் ஒரு ப்ரௌஸிங் சென்டர் வைத்திருப்பவன், திருச்சியில் ஒரு வெல்டிங் கடை வைத்திருப்பவன் எல்லாம் என்ன செய்வது? கடையை மூடிவிட்டு தூக்கில் தொங்க வேண்டியது தானா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே கடும் பனிப்புயல் வீசியது. அதன் விளைவாக பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. அதை தொடர்ந்து தொலைக் காட்சியில் இங்கு மின்சாரம் வழங்கும் PEPCO நிறுவனத்தின் தலைவர் Thomas Graham உரையாற்றினார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில.

1.மொத்தம் எவ்வளவு வீடுகளுக்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது?
2.அதில் எவ்வளவு சரி செய்யப் பட்டுள்ளது?
3.மற்ற வீடுகளுக்கு ஏன் இன்னும் மின்வெட்டு சரி செய்யப் படவில்லை?
4.இரண்டு நாட்களாக இவ்வளவு பேர் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள், நீங்கள் ஏன் முன்னரே தற்காப்பு நடவடிக்கை எடுக்க வில்லை? பனிப்புயல் வரும் என்றுதான் உங்களுக்கு முன்னரே தெரியுமே?
5.எவ்வளவு பேர் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்? ஏன் இவ்வளவு குறைவு?
6.மின்சாரம் இல்லாதவர்கள் தொலைபேசி செய்தால் ஏன் ஒருவரும் தொலைபேசியை எடுக்க வில்லை?
7.நீங்கள் எவ்வளவு தொலைபேசி அழைப்புகளை எடுத்தீர்கள்? எடுத்து அவர்களுக்கு என்ன கூறினீர்கள்? எடுக்கவில்லை என்றால் உங்களுக்கு வேறு என்ன வேலை?

இதை எல்லாம் எனது நினைவில் இருந்து எழுதுகிறேன். பாருங்கள் இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை என்றால் அமெரிக்காவில் எப்படி விளைவுகள் வருகிறது என்று.

இந்தியா அமெரிக்காவின் 51 ஆவது மாநிலம் அல்ல. அது அமெரிக்கா போல மாறவும் வேண்டாம். இந்தியாவாகவே இருந்தாலே போதும். ஆனால் மக்களின் அடிப்படை வசதிகளை கவனிக்கும் விஷயத்தில் மட்டும் வளர்ந்த நாடுகளை பின்பற்றினால் நல்லது.



சென்னை அணிக்கும் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் போட்டிக்கும் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. எல்லா போட்டிகளிலும் அபாரமாக விளையாடுகிறோம். அது IPL ஆக இருந்தாலும் சரி. CCL ஆக இருந்தாலும் சரி. சென்ற ஆண்டு IPL போட்டிகள் நடக்கும் பொழுது ஒரு நண்பர் சொன்னார், "IPL is a tournament in which eight to ten teams compete among each other to play the finals against Chennai Super Kings and lose." கிட்டத்தட்ட இது CCL க்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நாம் நிஜமாகவே நன்றாகவே ஆடினோம். குறிப்பாக ஸெமி ஃபைனல்ஸிலும் ஃபைனல்ஸிலும் நமது ஆட்டம் அபாரம்.

பொதுவாக பங்கேற்ற அனைத்து அணிகளுமே நல்ல தோழமையுடன் பங்கு பெற்றார்கள். ஆனால் கடைசி போட்டியில் கர்நாடகா தனது கேவலமான நடத்தையினால் கருப்பு புள்ளி ஒன்று அதற்கு வைத்து விட்டது. குண்டப்பா விஷ்வநாத்தின் கிரிக்கெட் ட்ரைனிங் அகாடமியில் நன்றாக விளையாடும் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து, அவர்களை வைத்து ஒரே வாரத்தில் ஒரு திரைப்படம் எடுத்து, அவர்களை நடிகர்களாக சங்கத்தில் பதிவு செய்து, அவர்களை கொண்டு விளையாடிய கேவலத்தை செய்த அணிக்கு ரோஷம் ஒரு கேடா?

கடைசி ஓவரில் விக்ராந்த் செய்ததில் ஒரு தவறும் இல்லை. அதனால் ரோஷம் பொத்துக் கொண்டு பரிசளிப்பு விழாவில் பங்கு பெறாமல் அதை புறக்கணித்த கர்நாடகா அணியினரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவர்கள் அடுத்தடுத்து நடக்கப் போகும் CCL போட்டிகளில் தொடர்ந்து தோற்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை இங்கே பதிவு செய்கிறேன்.



நேற்று Dhoni திரைப்படம் பார்த்தேன். படத்தினை பற்றி தனியாக விமர்சனம் எழுத தோன்றவில்லை. ஒரு சில உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. Dhoni யும் அப்படி ஒரு உணர்வு. அவசியம் படத்தை பாருங்கள். அரங்கில் எங்களையும் சேர்த்து ஆறு அல்லது ஏழு பேர் மட்டுமே இருந்தார்கள். அதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஏழாம் அறிவுக்கும், வேலாயுதத்திற்கும் 20 டாலர் கூட கொடுக்க தயராக இருக்கும் கூட்டம் இம்மாதிரி படங்களுக்கு 10 டாலர் கூட கொடுக்காமல் ஓசியில் நொங்கு சாப்பிடவே விரும்புகிறது. ஆனால் அந்த கூட்டத்திடமிருந்து நல்ல படங்கள் தமிழில் வருவதில்லை என்ற விமர்சனம் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தமிழகத்திலாவது கூட்டம் கூடும் என்று எதிர் பார்ப்போம்.



எஸ்.ரா. விழாவில் ரஜின் பங்கேற்றதை பார்த்து சாருவுக்கு பொச்செரிச்சல். கொலைவெறி மற்றும் சச்சின் பாடல்களினால் தனுஷ் பெற்ற புகழை பார்த்து சிம்புவிற்கு பொச்செரிச்சல். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இது தான். ஒருவருக்கு திறமையினாலோ அல்லது அதிர்ஷ்டத்தினாலோ புகழ் கிடைக்கிறது. மற்றவருக்கு பொச்செரிச்சல் படுவதால் புகழ் கிடைக்கிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு சூப்புவதற்கு குச்சி ஐஸ் கூட கிடைப்பதில்லை. Moral of the story, பொச்சு இருப்பவர்கள் எல்லாம் பொச்செரிச்சல் படுங்கள்.



Thalaivar is back. இன்று ஈராஸ் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் இது. சிங்கம் சிங்கிளாக வந்தாலே தாங்காது. இம்முறையும் ரெஹ்மான், ரவிகுமார், தீபிகா என்று வலுவான கூட்டணியுடன் வருகிறது. இந்த கூட்டணியில் சவுந்தர்யா உப்புக்கு சப்பாணியா? இல்லை கில்லியா? என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் கமல், ஷங்கர், ஆஸ்கார் ரவிசந்திரன், ரெஹ்மான் என்ற ஒரு புதிய கூட்டணி உருவாக கூடும் என்றும் செய்தி வருகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதுவும் ஒரு மெகா கூட்டணி தான். பார்ப்போம் நடக்கிறதா என்று.





சட்ட சபையில் பிட்டு படம் பார்த்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா - செய்தி. "பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்" கதையை தவறாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். வாழ்க பாரதம், வளர்க ஜனநாயகம்.



பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் காதலர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

Thursday, February 02, 2012

பொடிமாஸ் - 02/02/2012

2G விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகச்சரியான ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. விதிகளுக்கு மீறி வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டதுடன், அவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு பெரிதாக அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக உரிமம் வழங்க ஏல முறையை பரிந்துரை செய்திருக்கிறது. 2G விவகாரத்தில் அரசுக்கு நஷ்டமே ஏற்படவில்லை என்று முழு பூசணியை சோற்றில் மறைக்கப் பார்த்த கபில் சிபில் போன்றோர் தங்களது முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. என்ன விதிகளுக்கு மீறி உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஏலத்தில் பங்கு பெற முடியாது என்றும் ஒரு தீர்ப்பை சேர்த்திருக்கலாம். இது என்னுடைய கருத்து. மற்றபடி தீர்ப்பளித்த நீதிபதிக்கும் வழக்கு தொடர்ந்த சுப்ரமணியம் சுவாமிக்கும் எனது நன்றிகள்.



இரண்டு நாட்களாக தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் நடந்த குடுமிப்பிடி சண்டையை பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. இணையத்தில் வெளிவந்த வீடியோ காட்சிகளை பார்த்தால் தவறு பெரிதாக விஜயகாந்தின் மீது இல்லை என்றே தெரிகிறது. ஆனால் என்ன நாக்கை மடித்து, கையை சுழற்றி பேசுவதெல்லாம் அவர் திரைப்படத்தில் செய்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். சட்டசபைக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அதை காப்பாற்றுவது முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களது கடமை. ஆனால் இதில் உச்சகட்ட காமெடியே சட்டசபையில் எதிர் கட்சியினருக்கு தரும் மரியாதையை பற்றி கருணாநிதி விமர்சித்தது தான். 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் நடந்த சம்பவங்களுக்கு ஈடான சம்பவங்கள் வேறு எந்த சட்டசபையிலும் நடந்திருக்க முடியாது. என்ன நமது மக்களின் மறதியின் மீதான அவரது நம்பிக்கை அவரை அவ்வாறு பேச தூண்டி இருக்க கூடும். 1992 முதல் 1996 வரை நடந்த அதிமுக ஆட்சியையே மறந்து வாக்களித்தவர்கள், 1989 ஆம் ஆண்டு நடந்ததையா நினைவில் வைத்துக் கொள்ள போகிறார்கள்.

அதே நேரத்தில் ஜெயலலிதா ஆத்திரத்தில் நிதானம் இழந்து பேசியது கேவலமாக இருக்கிறது. அதிமுகவினருக்கு மட்டும் அல்ல, விஜயகாந்திற்கும், கருணாநிதிக்கும் கூட அவர்தான் முதல்வர். அதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். கருணாநிதி ஆட்சியில் தொடங்கி செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு திட்டங்களாக பார்த்து செயலிழக்க செய்வது, திமுகவினர் மீது வழக்குகளை தொடுப்பது, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அமைச்சர்களை மாற்றுவது அல்லது அவர்களது இலாக்காக்களை மாற்றுவது என்று துக்ளக் தர்பார் நடத்திக் கொண்டிருக்காமல் 2016 இல் மீண்டும் ஒரு தேர்தல் வரும் என்பதை நினைவில் கொண்டு ஒழுங்கான ஆட்சி தந்தால் அவருக்கும் நல்லது தமிழக மக்களுக்கும் நல்லது.



துக்ளக் தர்பார் என்றதும் இரு வாரங்களுக்கு முன்னர் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் சோ பேசியது நினைவிற்கு வருகிறது. ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆனால் யாருக்கு வேலை இருக்கிறதோ இல்லையோ இந்திய அதிபருக்கு தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டி வரும்.



எதிர்பார்த்தது போலவே நமது இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து விட்டது. வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே அது ஆச்சரியம். ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று அவர்களை மண்ணை கவ்வச் செய்திருக்கிறது. மூன்றாவதிலும் பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துகள்.



திரையுலகினர் பங்கேற்கும் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் அருமையாக இருக்கிறது. தெலுங்கு அணி அட்டகாசமாக விளையாடுகிறது. நாம் ஓரளவிற்கு நன்றாக விளையாடுகிறோம். நமது அடுத்த போட்டி தெலுங்கு அணியினருடன். இதில் நாம் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம். இந்த வார இறுதியில் தெரிந்து விடும்.



இந்த மாதத்தில் மூன்று படங்களை நான் பெரிதும் எதிர் பார்க்கிறேன். முதல் படம் பிரகாஷ்ராஜின் தோணி. அருமையான கதைக் களம், நமது ராஜாவின் பின்னணி இசை, பிரகாஷ்ராஜின் முதல் இயக்கம் தமிழில் என்று ஆவலை தூண்டுகிறது இப்படம். அடுத்தது பசங்க பாண்டிராஜின் மெரினா. டிரைலர் நன்றாக வந்திருக்கிறது. சிவ கார்த்திகேயனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கட்டாயம் பார்த்துவிட வேண்டும். மூன்றாவது காதலில் சொதப்புவது எப்படி. இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகனின் குறும் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவரது மிட்டாய் வீடு மற்றும் காதலில் சொதப்புவது எப்படி இரண்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் எனக்கு பிடித்த நடிகர் சித்தார்த்தும் இருக்கிறார். நிரவ் ஷா கேமரா. முதல் இரண்டு படங்களும் இங்கே அமெரிக்காவில் வெளிவருமா என்று தெரியவில்லை. அப்படியே வெளி வந்தாலும் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நியூ ஜெர்ஸி, சான் ஃப்ரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களில் மட்டுமே வெளி வர சாத்தியங்கள் அதிகம். ஆனால் இங்கே சித்தார்த்துக்கு ஒரு சிறிய மார்க்கெட் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தினர் பலர் அவரது ரசிகர்கள். அதனால் ஒரு வேளை அவரது படம் வெளி வந்தாலும் வரலாம். இந்த மூன்று படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.



சமீபத்தில் தான் திருக்குறள் மேலாண்மை என்ற தளத்தினை பற்றி எனக்கு தெரிந்தது. வேறு எதையோ தேடும் பொழுது இது கிடைத்தது. திருக்குறளில் உள்ள நிர்வாக மேலாண்மை கருத்துக்களை தெளிவாக விளக்குகிறார் இவர். நீங்களும் சென்று பாருங்களேன். அருமையாக இருக்கிறது.

http://kuralmanagement.wordpress.com

Wednesday, February 01, 2012

Anniversary

சரியாக இன்றுடன் அது நடந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. அது எது என்று கேட்கிறீர்களா? பொதுவாக ஆண்களுக்கு வெளியாட்கள் ஆப்படிக்க தேவையே இல்லை. நாமே சென்று ஆப்புகள் எங்கே இருக்கிறது என்று தேடித் தேடி அமர்ந்து கொள்வோம். அப்படி நானே தேடி நமக்கு நாமே திட்டத்தில் வைத்துக் கொண்ட ஆப்பு தான் அது. உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும், வேறு என்ன? திருமணம் தான் அது.

எட்டு ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை. பல இனிமையான பொழுதுகள். சில மறக்க நினைக்கும் நிகழ்வுகள். இன்றைய தினமும் அப்படி ஒரு இனிமையான பொழுதாக அமைந்தது. என்றைக்கும் இல்லாத திருநாளாக இன்று தங்கமணி சமையலறையில் நுழைந்து தடால் புடால் என்று ஏதேதோ செய்தார். தங்கமணி சுத்த சைவ பட்சிணி ஆனதால் நிற்பது, நடப்பது, தாவுவது, ஓடுவது, பறப்பது, மிதப்பது ஒன்றும் இல்லை. ஆனாலும் நெடு நாட்களுக்கு பிறகு அருமையான மாலைப் பொழுதில் கிடைத்த அருமையான ஒரு உணவு.

இதோ கீழே உங்கள் பார்வைக்கு.


ஃப்ரூட் கேக்




கோபி மன்ச்சூரியன்




ஃப்ரைட் ரைஸ்




பன்னீர் பட்டர் மசாலா




தயிர் சாதம்




ரசமலாய்