Thursday, April 26, 2012

திருச்சி - அரிய புகைப்படங்கள்

காவேரி பாலம்


மலைக் கோட்டை மேலிருந்து காவேரி ஆறு (1895)


திருச்சி மலைக் கோட்டை


திருச்சி மலைக் கோட்டை


திருச்சி மலைக் கோட்டை


திருச்சி மலைக் கோட்டை மற்றும் தெப்பக் குளம் (1860)



திருச்சியில் உள்ள ஏதோ ஒரு கோவில் (1860)


ஸ்ரீ ரங்கம் கோவில் கோபுரங்கள்; அதனை சுற்றியுள்ள வீடுகள்


ஸ்ரீ ரங்கம் கோவில் பழைய கோபுரம் (1909)


ஸ்ரீ ரங்கம் கோவில் மொட்டை கோபுரம் (1880)


ஸ்ரீ ரங்கம் கோவில் சிற்பங்கள் (1880)

Tuesday, April 24, 2012

S.Ve.சேகரின் கனவு நினைவானது - திருச்சிக்கு வந்தது புதிய பீச்

ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடகத்தில் S.Ve.சேகர் தினமுழக்கம் பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி கொடுப்பார். அதில் "நாட்டுக்கு புதுமையாக செய்வதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா?" என்று பேட்டி எடுப்பவர் கேட்பார். அதற்கு பதில் சொல்லும் சேகர் அடுத்த மாதம் மெரினா பீச்சை தஞ்சாவூருக்கு மாற்ற இருப்பதாக கூறுவார். பின்னர் அவரே தொடர்ந்து "பீச்சை எடுத்தால் அந்த இடம் காலியாகுமே என்று கவலையா? அந்த இடத்தில் திருச்சி மலைக் கோட்டை வருகிறது. அந்த இடம் காலியாகுமே என்று கவலையா? அந்த இடத்தில் தஞ்சை பெரிய கோவில் வரப் போகிறது. அந்த இடம் காலியாகுமே என்று கவலையா? அந்த இடத்தில் தில்லியில் உள்ள குதுப்மினார் வருகிறகு. அந்த இடம் காலியாகுமே என்று கவலையா? அது வடநாட்டவர் பிரச்சனை." என்று கூறி முடிப்பார்.

ஆனால் அப்படியெல்லாம் விபரீதமாக முடிவெடுக்காமல் திருச்சி மாநகர கமிஷனர் திரு.செல்வராஜ் அவர்கள் திருச்சி அம்மா மண்டப படித்துறையில் இருந்து காவிரி பாலம் வரை இருக்கும் பகுதியை பீச் போல வடிவமைத்திருக்கிறார். இது அமைச்சர் திரு.N.R.சிவபதி அவர்களின் திட்டம் என்று தெரிகிறது.

காவிரியில் நீர் முற்றிலும் வற்றி விட்டதாலும், இனி பாசனத்திற்காக ஆடி மாதம் மட்டுமே மேட்டூரிலிருந்து நீர் திறந்து விட்டப்படும் என்பதாலும் இந்த திட்டம் கை கூடி இருக்கிறது. பள்ளி விடுமுறை காலம் என்பதாலும், கோடை காலத்தில் வெய்யிலின் கொடுமையிலிருந்து திருச்சி மக்களை சில மணித்துளிகளாவது தப்புவிக்கும் நோக்கிலும் இது செயல் படுத்தப் பட்டுள்ளது.

இதற்கு பரவலாக திருச்சி மக்களிடையே வரவேற்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். இப்பொழுதே மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக வருகிறதாம். மேலும் மாலை நேரங்களில் எப்பொழுதும் மக்கள் கூடும் காவிரி பாலத்தில் இதனால் கூட்டம் குறைவாக உள்ளது என்றும், இதனால் விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் கூறுகிறார்கள்.

மக்கள் பொறுப்பாக நடந்து அந்த இடத்தை மாசு படுத்தாமல் இருந்தால் நல்லது. இந்த திட்டம் உறுவாக பாடுபட்ட திரு.செல்வராஜ் மற்றும் திரு.N.R.சிவபதி இருவருக்கும் திருச்சி மக்கள் சார்பில் எனது நன்றிகள்.

தொடர்புடைய செய்தி:

http://timesofindia.indiatimes.com/city/madurai/Cauvery-turns-Trichys-beach/articleshow/12846484.cms

Thursday, April 19, 2012

பொடிமாஸ் - 04/19/2012

IPL போட்டிகள் தொடங்கிவிட்டன. எனக்கு பெரிதாக ஈடுபாடு ஒன்றும் இல்லை. ஒரு விதமான சலிப்பே ஏற்படுகிறது. இம்முறை ராஜஸ்தான் ஜெயித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ட்ராவிட் கோப்பையை வென்றால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசையே காரணம். பெரிதாக வேறு ஒன்றும் இல்லை. சென்னையில் டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து இருபதாயிரம் ரூபாய் வரை போகிறது என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் கூட்டம் குறைவாகவே இருக்கிறது என்றும் TRP யும் சரிந்து விட்டது என்றும் கூறுகிறார்கள். IPL என்பது பொன் முட்டையிடும் வாத்தை போன்றது. BCCI தனது பேராசையினால் அதனை அறுக்காமல் இருக்க வேண்டும்.



ஷாருக் கான் அமெரிக்காவில் மீண்டும் சோதனை செய்யப்பட்டதில் இருந்து பலரும் உளறிக் கொட்டி வருகிறார்கள். லேட்டஸ்ட் உளறல் நம்மவர் கமல ஹாசனிடம் இருந்து. ஒரு நாட்டில் யாரை உள்ளே விட வேண்டும் விடக் கூடாது என்று முடிவு செய்வது அந்த நாட்டின் உரிமை. ஷாருக் இந்தியாவில் பெரிய சுண்டைக்காயாக இருக்கலாம். அமெரிக்காவில் அவரும் ஒரு சராசரி பயணி அவ்வளவுதான். ஒன்று பொத்திக் கொண்டு சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த நாட்டுக்கு வரக் கூடாது. அமெரிக்கா என்ன இந்தியாவா?, தீவிரவாதிகளை உள்ளே விட்டுவிட்டு அவர்கள் பல நூறு அப்பாவி இந்தியர்களை கொன்ற உடன் தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று உள்துறை அமைச்சர் பேட்டி மட்டும் கொடுப்பதற்கு.



மேற்கு வங்காளத்தில் மம்தாவை குறிவைத்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஏதோ ஒரு கார்ட்டூனை தனது ஃபேஸ் புக் தளத்தில் வெளியிட அதனால் வந்து வினை. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர்களை கேலி செய்தால் சிறை தண்டனை என்றால் கலைஞரை கேலி செய்ததற்காக சோ போன்றவர்கள் பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து தொலைக்க வேண்டி இருந்திருக்கும். நல்ல வேளை நாம் தமிழகத்தில் இருக்கிறோம். மம்தா அந்த கார்ட்டூன் உங்களை கேலி செய்யவில்லை, உங்கள் நடத்தை தான் உங்களை கேலி செய்கிறது.



இப்பொழுதெல்லாம் தமிழ் மணத்தை திறப்பதற்கே பயமாக இருக்கிறது. எந்த ஜாதியை சேர்ந்தவன் தமிழன், எந்த மதத்தை சேர்ந்தவன் தமிழன், எந்த இனத்தை சேர்ந்தவன் தமிழன், எந்த ஜாதியை சேர்ந்தவனுக்கு விருது கொடுக்க வேண்டும், எந்த ஜாதியை சேர்ந்தவனுக்கு வீடு கொடுக்க வேண்டும், எந்த ஜாதியை சேர்ந்தவனுக்கு இதையெல்லாம் கொடுக்க கூடாது..... இப்படி இன்னும் பல. அப்பப்பா கொடுமையடா. ஜாதியை பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு தேடி அலைகிறார்கள்.

அது சரி.

"சாதிக் கொடுமைகள் வேண்டாம்; அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்."


என்று பாடியவனையே ஜாதி வெறியன் என்று கூறும் உலகு தானே இது. வாழும் குறைந்த காலமான அறுபது எழுபது ஆண்டுகளில் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் அன்பு செலுத்தி வாழ்வது அவ்வளவு கஷ்டமா?



இந்த லட்சணத்தில் நாளை முதல் தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேறு நடக்க இருக்கிறது. எடுத்து என்ன புடுங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முன்னரே இருக்கும் ஆயிரம் பிரிவினைகளை லட்சமாக்காமல் விட மாட்டார்கள் போல் இருக்கிறது. "வேற்றுமையில் ஒற்றுமை" என்று படிப்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மையில் ஒற்றுமை எங்கே இருக்கிறது. வேற்றுமை மட்டுமே மிஞ்சி இருக்கிறது.



நேற்று முதல்வர் அறிவித்துள்ள அறிக்கையின் படி திருச்சி தஞ்சை வழித்தடத்தில் உள்ள செங்கிப்பட்டியில் புதிய அரசு பொறியியல் கல்லூரி ஒன்று திறக்கப்படும் என்று தெரிகிறது. திருச்சியில் முன்னரே உள்ள IIM, NIT, BIM, KAPVGMC போன்ற உயர் கல்லூரிகளுக்கு மத்தியில் இதுவும் வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு கல்லூரி என்பதால் கட்டணம் அதிகம் இருக்காது. பல ஏழை குழந்தைகள் படித்து பயன் பெற எனது வாழ்த்துக்களை இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்.



"ஒரு கல் ஒரு கண்ணாடி" இன்னும் இங்கே வெளியிடப்படவில்லை. DVD வரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது நான் பெரிதும் எதிர் பார்ப்பது ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மென்ட். அமிதாப், சஞ்சய் தத், ரணா தக்குபத்தி, அபிமன்யூ சிங் என்று ஒரு பட்டாளமே நடிக்கிறது. ட்ரைலரின் தொடக்கத்தில் அமிதாப் "மேன் இல்லீகலீ லீகல் காம் கர்தா ஹூன், லீகலி இல்லீகல் காம் நஹீ." என்று கூறுவது அசத்தல். டிப்பிகல் RGV படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். RGV படங்களில் என்ன பிரச்சனை என்றால் ஒன்று படம் அட்டகாசமாக இருக்கும், இல்லை படம் படு கேவலமாக இருக்கும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்பதே கிடையாது.



அதே படத்தில் நடாலியா கவுர் என்ற ஒரு ப்ரேஸில் நாட்டு அழகியை ஒரு பாடலுக்கு ஆட விட்டிருக்கிறார். கம்பெனி படத்தில் கல்லாஸ் பாடலில் இஷா கோபிகரை அட்டகாசமாக இவர் காட்டியதை நாம் மறந்திருக்க முடியாது. இந்த பாடலின் கூடுதல் சிறப்பு இது தலைவரின் ஆசை நூறு வகை பாடலின் தழுவல். அதையும் பார்த்து ரசியுங்கள்.



Sunday, April 15, 2012

நிழல் வீரனின் கடைசி நிமிடங்கள்

அங்கிருந்து தப்பித்து செல்வது இயலாத செயல். அந்த அறை மிகவும் சிறியது. எட்டு அடி நீளம், பத்து அடி அகலம். மண் சுவற்றினால் ஆனது. அந்த அறையில் பூட்டிய கதவை தவிர்த்து ஒரே ஒரு கம்பி வைத்த ஜன்னல் மட்டுமே இருந்தது. அந்த ஜன்னல் மட்டுமே வெளிச்சம் மற்றும் காற்றுக்கான மூலம். அந்த அறையை சுற்றி பொலிவியா நாட்டு போர் வீரர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு ஒன்று மட்டுமே தேவையாக இருந்தது. அவர்களுக்கு சிறைக்கைதிகள் தேவை இல்லை. அவர்களுக்கு பிணங்கள் மட்டுமே தேவை. கொரில்லாக்கள் அனைவரும் செத்தொழிய வேண்டும். நான் கதவை திறந்து கொண்டு அந்த அறைக்கு சென்றேன். கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கிடந்தான் அவன்.

அந்த அறைக்கு பின்னால் இருந்த அதே போன்றதொரு அறையில் ஆண்டோனியோவும், அர்ட்யூரோவும் இறந்து கிடந்தனர். இது அவனுக்கு தெரியும். பக்கத்து அறையில் ஆனிஸெக்டோ இறப்பதற்கு தயார் நிலையில் இருந்தான். இதுவும் அவனுக்கு தெரியும்.

நான் அவன் அருகில் சென்று பார்த்தேன். அந்த அறையில் இருந்த மரப்பலகையின் விளிம்பை பிடித்துக் கொண்டிருந்தான். அவனது உடம்பில் பல காயங்கள் இருந்தன. அவனது உடை பல இடங்களில் கிழிந்து இருந்தது. அவனது சிகையும் தாடியும் சேறும் சிகதியுமாக இருந்தது. அவனது கால்களில் ஷூக்கள் இல்லை. தோல் பை ஒன்றை கால்களை சுற்றி அதன் மீது கயிற்றினால் கட்டி இருந்தான்.

ஒரு டாக்டர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாட்டின் அமைச்சராக இருந்தவன். இன்று எனது காலடியில் கிடப்பது எனக்கு வியப்பாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பே ஆஃப் பிக்ஸ் சண்டையில் எனது நண்பன் பிணோ இவனது காலடியில் இப்படித்தான் நாய் போல கிடந்தான்.

பிணோவை உயிருடன் பிடித்த காஸ்ட்ரோவின் வீரர்கள் அவனை அடித்தே கொல்ல முடிவு செய்தனர். அவன் மீது தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த அடிகள் திடீரென்று நிறுத்தப் பட்டன. காரணம் அறிய கண்களை திறந்த பிணோவிற்கு அருகில் நன்கு பாலீஷ் செய்யப்பட்ட பூட்ஸ்கள் அணிந்த இரு கால்கள். அது இவனுடையது. பிணோவின் காதுகளில் இவன் சொன்னது, "உங்கள் அனைவரையும் நாங்கள் கொல்லப் போகிறோம்."

ஆனால் இன்று நிலைமை அனைத்தும் முற்றிலும் மாறி விட்டது. இவன் எனது காலடியில் நாய் போல கிடக்கிறான். இவனை நான் இப்பொழுது என்ன செய்தாலும் ஏன் என்று கேட்பதற்கு நாதியே கிடையாது. அவனது இன்றைய நிலையை அவனுக்கு உணர்த்த விரும்பி அவனிடம் சிறிது உரையாடலாம் என்று அவனிடம் பேசத் தொடங்கினேன்.

"ஏய்!, நான் உன்னிடம் சிறிது பேச வேண்டும்."

அவ்வளவு நேரம் அங்கே சுருண்டு கிடந்த அவனுள் இருந்த போர் வீரன் விழித்துக் கொண்டான்.

"என்னை கேள்வி கேட்கும் ஆண்மகன் இன்னும் பூமியில் பிறக்கவில்லை."

அவன் எனக்கு பதிலளித்ததே எனக்கு வியப்பாக இருந்தது.

"நான் உன்னிடம் கேள்வி கேட்க விரும்பவில்லை. நம் இருவரின் நம்பிக்கைகளும், சித்தாந்தங்களும் வேறு வேறு. ஆனாலும் நான் உன்னை கண்டு வியக்கிறேன். உனது வீரத்தை கண்டு, உனது கொள்கையில் நீ காட்டிய உறுதியை கண்டு, அதற்காக நீ செய்த தியாகத்தை கண்டு, இப்பொழுது உனது மரணத்தை கண்டு. உன்னிடம் நான் உரையாடவே விரும்புகிறேன்."

"எதை பற்றி?"

"ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நீ க்யூபா நாட்டு அமைச்சர், ஒரு மருத்துவர். ஆனால் இப்பொழுது? உனது நிலையை பார்த்தாயா? உனது கொள்கைகளே உன்னை இங்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றன."

அவன் அதற்கு பதில் சொல்லாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"இந்த பெஞ்சில் அமர்ந்து கொள்ளட்டுமா?"

நான் உடனே ஒரு போர் வீரனை கூப்பிட்டு அவனது கட்டுக்களை அவிழ்க்க செய்து அவனை பெஞ்சில் அமர்த்தினேன். அவன் புகை பிடிப்பதற்காக சுருட்டை அளித்தேன்.

பின்னர் இருவரும் சுருட்டு பிடித்துக் கொண்டே உரையாட தொடங்கினோம். அவனது போர் திட்டங்களை பற்றி, கொரில்லா படையினரின் திட்டங்களை பற்றி அவன் ஒன்றும் சொல்ல மாட்டான் என்பது எனக்கு தெரியும். நேரத்தை வீணாக்காமல் பொதுவான விஷயங்களை பற்றி கேட்கத் தொடங்கினேன்.

"இவ்வளவு தென் அமெரிக்க நாடுகள் இருக்கையில், நீ ஏன் க்யூபாவின் வெற்றியினை தொடர்ந்து பொலிவியாவை தேர்ந்தெடுத்தாய்?"

"அதற்கு முன்று காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் வெனிஸூலா போன்ற நாடுகளை நாங்கள் கைப்பற்ற முனைந்தால் அமெரிக்கர்களால் அழித்தொழிக்கப் படுவோம். அதற்காக அமெரிக்காவிற்கு தொலைவாக இருக்கும் நாடுகளை கைப்பற்ற நினைத்தோம்.

இரண்டாவது காரணம், பொலிவியா ஏழை நாடு. அரசு அதிகாரிகளும், இராணுவ ஜெனரல்களும், அமைச்சர்களும் சொகுஸு கார்களின் வலம் வரும் போது பொலிவியா நாட்டு மக்கள் மூன்று வேளை உணவுக்கே கஷ்டப் படுகிறார்கள்.

முன்றாவது காரணம், பொலிவியாவின் பூகோள அமைப்பு. பொலிவியாவை நாங்கள் கைப்பற்றினால் அதன் சுற்றியுள்ள நாடுகளான பெரு, அர்ஜென்டினா, ப்ரேஸில், பராகுவேய், சிலி போன்ற நாடுகளுக்கு செல்ல எங்களுக்கு எளிதாக இருக்கும்."

"க்யூபாவில் பெற்ற வெற்றியினை ஏன் உன்னால் பொலிவியாவில் பெற முடியவில்லை?"

"பொலிவியாவில் எங்களது போராட்டத்திற்கு அவ்வளவாக ஆதரவில்லை. அவர்களுக்கு க்யூபா நாட்டவனான எனது தலைமையின் கீழ் போராட விருப்பம் இல்லை."

அதன் பிறகு நாங்கள் க்யூபா நாட்டின் நிலைமை பற்றிய பேச்சை தொடங்கினோம்.

"அமெரிக்கா க்யூபாவின் மீது பொருளாதார தடைகளை விதித்த உடன் க்யூபாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டதே? ரஷ்யாவின் உதவியும் க்யூபாவிற்கு பெரிய அளவில் உதவ வில்லையே?"

அவன் அதற்கு ஒப்புக் கொள்வது போல தலையசைத்தான்.

"உன்னை க்யூபாவின் நிதியமைச்சராக்கிய பொழுது நீ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லையா? நீ ஒரு மருத்துவன். உனக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்?"

அதற்கும் பதிலில்லை. அதன் பிறகு காஸ்ட்ரோவை பற்றிய எனது கேள்விகள் ஒன்றுக்கு கூட அவனிடமிருந்து பதில் இல்லை. காஸ்ட்ரோவை பற்றிய எந்த தவறான கருத்தையும் அவனது வாயால் அவன் கூற அவன் விரும்பவில்லை என்பது மட்டும் எனக்கு தெரிந்தது.

"உனக்கு என்னை பற்றியும் க்யூபாவை பற்றியும் நிறைய தெரிந்திருக்கிறதே. நீ பேசுவதை கேட்கும் பொழுது நீ ஒரு பொலிவியனா என்று சந்தேகம் வருகிறது."

"நீ கூறுவது உண்மை தான். நான் யாராக இருக்கும் என்று யூகிக்க முடிகிறதா?"

"நீ ஒரு க்யூபனாக இருக்கக் கூடும். அமெரிக்க உளவுத்துறையில் வேலை செய்பவனாக இருக்கலாம்."

"சரியாக சொன்னாய். பே ஆஃப் பிக்ஸ் சண்டையில் உங்களுக்கு எதிராக இருந்தவன்."

"உனது பெயர் என்ன?"

"ஃபெலிக்ஸ்."

"முழூ பெயர்?"

"ஃபெலிக்ஸ்." சற்று அழுத்தமாக சொன்னேன்.

வேறு எதுவும் என்னை பற்றி நான் அவனிடம் கூறவில்லை. ஒருவேளை அவன் இந்த சிறையிலிருந்து தப்பித்து சென்றால் என்னை பற்றிய வேறு எந்த தகவலும் அவனுடன் வெளியேறுவதை நான் விரும்பவில்லை.

அப்பொழுது பக்கத்து அறையிலிருந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. ஆனிஸெக்டோ கொல்லப்பட்டான் என்பது அவனுக்கு தெரிந்தது. இட வலமாக தலையை பல முறை ஆட்டினான். அவனது எண்ண ஓட்டங்களை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

அப்பொழுது எனது ரேடியோ ஒலித்தது. இராணுவ தலைமையிடமிருந்து அழைப்பு. எடுத்து பேசினேன்.

"கேப்டன்! அவன் இறந்து விட்டானா?"

"அவனை தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான்."

"அவனை எப்பொழுது கொல்லப் போகிறீர்கள்?"

"எதற்கு கேட்கிறீர்கள்?"

"அவன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகளை வெளியிட்டு விட்டோம். சீக்கிரம் முடித்து விடுங்கள்."

மீண்டும் அவனிடம் சென்றேன்.

"என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டேன். என்னை மன்னித்து விடு."

"அவசியம் இல்லை கேப்டன். நான் போரில் செத்துவிட்டதாக மக்கள் நம்புவதையே விரும்புகிறேன். அதற்காக பொலிவிய இராணுவத்திற்கு நன்றி. ஒரு ஆண்மகனை கொல்லப் போகிறீர்கள். மகிழ்வுடன் இருங்கள்."

அப்பொழுது நானே வியக்கும் படி ஒரு செயலை செய்தேன். அவனை கட்டித் தழுவிக் கொண்டேன். அதற்கு சில மணித்துளிகள் முன்பாக யாராவது நான் அவனை கட்டித் தழுவுவேன் என்று கூறியிருந்தால் சிரித்திருப்பேன். ஆனால் அப்பொழுது நான் இருந்த நிலை வேறு. இப்பொழுது நான் இருக்கும் நிலை வேறு.

நேற்று வரை நான் கொல்ல வேண்டும் என்று தேடி அலைந்தவனை இன்று கொல்லும் முன்பு எனது இதயம் லேசாக வலிக்கிறது. மரணத்தை இப்படி எதிர் கொண்டவனை இதற்கு முன்னர் நான் பார்த்தது இல்லை.

நான் அறையிலிருந்து வெளிவந்தேன். கடிகாரம் மணி மதியம் 1 என்று காட்டியது. வெளியில் எனது ஆணைக்காக இராணுவ வீரன் ஒருவன் காத்திருந்தான். அவனிடம் தலையசைத்தேன். பின்னர் அவனது காதில் அவனை கழுத்துக்கு கீழே சுடும் படியும் முகத்தில் சுட வேண்டாமென்றும் கட்டளையிட்டேன். மாபெரும் வீரனுக்கு என்னால் முடிந்த மரியாதை.

எனது அறைக்கு திரும்பிய பின்னர் நான் எனது அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்காக குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தேன். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. மணி மதியம் 1:10 என்று காட்டியது.

எனது கை எழுதிக் கொண்டிருந்தது, "சே குவாரா இறந்து விட்டான்."

"மரணம் எப்பொழுது எங்கே நம்மை நெருங்கினாலும் இருகரம் கொண்டு அதனை தழுவுங்கள். ஆனால் அதற்கு முன்பு நமது குரலை அதிகாரத்தில் உள்ளவர்களின் காதுகளிலும், நமது ஆயுதங்களை நமக்கு பின்னர் இப்போராட்டத்தை எடுத்து செல்லும் கைகளிடமும் சேர்த்து விடுங்கள்." - சே குவாரா




ஃபெலிக்ஸ் ரொட்ரீக்வெஸ் எழுதிய ஷேடோ வாரியர் (நிழல் வீரன்) புத்தகத்திலிருந்து.

ஃபெலிக்ஸ் ரொட்ரீக்வெஸ் முந்நாள் CIA உளவாளி. இவரிடம் சே குவாரா இறக்கும் பொழுது கட்டி இருந்த ரோலெக்ஸ் கடிகாரம் இன்னும் இருக்கிறது.