Wednesday, May 30, 2012

வாழ்த்துகள்


ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் ஆகி இருக்கிறார் ஆனந்த். 2000, 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆகிய வருடங்களில் இவர் பட்டத்தை வென்றிருக்கிறார். இதில் கடைசி நான்கும் தொடர்ந்து பெற்ற பட்டங்கள். 42 வயதில் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. அவருக்கு எனது வாழ்த்துகள்.

Wednesday, May 23, 2012

விடை சொல் விவேக்

"இரண்டாண்டுகளுக்கு முன்னர் க்ரீன் வேஸ் சாலையில் நடந்த விபத்து வழக்கிலிருந்து நடிகர் திலீப் விடுதலை. சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு."

ப்ளாஷ் நியூஸ் சன் செய்திகளில் ஓடிக் கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த விவேக் அவனையும் அறியாமல் ஒரு பெரு மூச்சு விட்டான். தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பது அவனுக்கு தெரியும். ஆனாலும் நீதி வென்று விடாதா என்று மனதிற்குள் ஒரு சிறு நப்பாசை. அப்படியே கண் மூடி பழைய நினைவுகளில் மூழ்கினான்.

சென்னை ஹயக்ரீவாஸ் திருமண மண்டபம். க்ளிக், க்ளிக். எங்கு பார்த்தாலும் கேமராவின் ப்ளாஷ்கள் மற்றும் க்ளிக்குகள். முன்னாள் உலக அழகியும், இந்நாள் கதா நாயகியுமான சங்கமித்ரா அங்கே பரபரப்பான பேட்டியை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

"மேடம்! உங்களுக்கும் சூப்பர் ஸ்டார் திலீப் வர்தனுக்கும் ரகசிய திருமணம் நடந்தது என்று கூறுகிறார்களே, உண்மையா?"

"நீங்களும் திலீப் வர்தனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரே வீட்டில் தான் வசித்து வந்துள்ளீர்கள் என்பது உண்மையா?"

"அவரது பெயரை உங்கள் கையில் பச்சை குத்தி இருக்கிறீர்களாமே?"

"உங்களுக்கு அவர் தானா படங்களில் நடிக்க சிபாரிசு செய்கிறார்?"

"மற்ற கதா நாயகர்களுடன் நீங்கள் காதல் காட்சிகளில் நெருங்கி நடிப்பது பற்றி அவர் என்ன நினைக்கிறார்?"

பத்திரிக்கைகளின் அசுர பசிக்கு அன்று பெரிய விருந்து கிடைக்கும் என்பது ஒவ்வொரு பத்திரிக்கையாளரின் எண்ணமாக இருந்தது. சங்கமித்ராவை பதில் சொல்லவே விடாமல் கேள்விகள் குவிந்தபடி இருந்தன.

இடையில் குறுக்கிட்டார் சங்கமித்ராவின் PRO ஷங்கர்.

"நண்பர்களே! சங்கமித்ரா எதையோ சொல்ல வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அழைத்துள்ளார். தயவு செய்து அவர் கூற விரும்புவதை சொல்ல விடுங்கள். அதன் பின்னர் உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் அவர் விடையளிப்பார்."

அதன் பின்னர் அரங்கம் சற்று அமைதியானது. சங்கமித்ரா பேசத் தொடங்கினாள்.

"நண்பர்களே! எனது அழைப்பை ஏற்று இங்கே வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நான் உலக அழகியாக தேர்ந்தடுக்கப் பட்டதில் இருந்து எனது வளர்ச்சியில் உங்கள் பங்கு அசாத்தியமானது. என்னை உங்கள் வீட்டு செல்லப் பெண் போல நினைத்து எனக்கு ஆதரவு அளித்துள்ளீர்கள். தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறேன்.

நான் இன்று உங்களை அழைத்ததன் காரணமே நான் எடுத்துள்ள முக்கியமான ஒரு முடிவை உங்களுக்கு அறிவிக்கத்தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காதல் பயணங்கள் படத்தில் நடித்த பொழுது எனக்கும் சூப்பர் ஸ்டார் திலீப் வர்தனுக்கும் நட்பு மலர்ந்தது. அது அப்பட முடிவில் காதலாக மாறியது. நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக ஒரு ஆண்டு வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்து மார்ச் மாதம் நாங்கள் பிரிந்து விட்டோம். அவருக்காக நான் பல இன்னல்களை அனுபவித்துள்ளேன். தொடர்ச்சியாக சந்தேக பார்வைகளையும், குத்தல் பேச்சுக்களையும், அலுவலில் தலையீடுகளையும் நான் தாங்கிக் கொண்டேன். பல நல்ல பட வாய்ப்புகளை முன்னர் இழந்துள்ளேன். ஒரு கட்டத்தில் அவரது குத்தல் பேச்சுக்கள் வன்முறையாக மாறின. பல முறை அவரிடம் அடிகளை வாங்கியுள்ளேன். இனி தாங்க முடியாது என்ற நிலையில் அவரிடம் இருந்து பிரிந்து விட்டேன்.

இனி அவருடன் சேர்ந்து படங்களில் பணியாற்ற மாட்டேன். எனக்கும் அவருக்கும் இனி தொடர்பேதும் இல்லை. இனி எனது முழூ கவனமும் நடிப்பதில் தான் இருக்கும்.

தயவு செய்து இனி அவரை பற்றி எந்த கேள்வியும் என்னிடம் கேட்காதீர்கள். பதில் சொல்லும் மன நிலையில் நான் இல்லை. நன்றி."

தொடர்ந்து பேசிய PRO ஷங்கர், "நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் மேல் தளத்தில் அறுசுவை உணவு தயாராக இருக்கிறது. தயவு செய்து உணவருந்தி விட்டு செல்லவும்." என்று கூறி பேட்டியை முடித்து வைத்தார்.

அடுத்த நாள் இரவு பத்து மணி. அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலில் இருந்து தள்ளாடிய படி வெளியில் வந்தான் திலீப் வர்தன். அவனை பார்த்தால் மது குடித்திருப்பவன் போல தெரியவில்லை. மதுவில் குளித்திருப்பவன் போல தெரிந்தான். அவனை கை தாங்கலாக அவனது செக்யூரிட்டியும் முன்னாள் காவலருமான பெருமாள் அழைத்துக் கொண்டு அவனது காரின் அருகே சென்றார். வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்ந்த வகை கார் அது.

அவனை காரின் பின் இருக்கையில் அமர்த்திவிட்டு காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பினார். கார் திலீப் வர்தனின் வீட்டை நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது.

திலீப் வர்தனின் மனம் முழுக்க முதல் நாள் சங்கமித்ரா அளித்த பேட்டியை சுற்றியே இருந்தது. ஆக்ரோஷம் தலைக்கு ஏற மூளை நரம்புகள் எல்லாம் வெடிப்பது போல இருந்தது அவனுக்கு. தட்டு தடுமாறி பெருமாளின் தோளை தொட்டான்.

திரும்பிய பெருமாளிடம், "கலாபனுக்கு ஃபோன போடு. உடனே அவன கெஸ்ட் ஹவுஸுக்கு வர சொல்லு."

"தம்பி இந்த நிலையில்..." என்று இழுத்தார் பெருமாள்.

"..த்தா. ஃபோன போடுடா பாடு."

திலீப்புக்கு கோபம் முற்றினால் இப்படித்தான். அவனை அறிமுகம் செய்து வைத்த இயக்குனரையே பலர் பார்க்க அடித்தவன் அவன். பெருமாளுக்கு இதெல்லாம் பழகி விட்டது. முனுமுனுத்துக் கொண்டே கலாபனுக்கு ஃபோன் போட்டு வேண்டிய தகவல்களை அளித்தார். வண்டி கெஸ்ட் ஹவுஸ் பக்கம் திரும்பியது. மாமல்லபுர சாலையில் வழுக்கிக் கொண்டு சென்று சில மணித்துளிகளில் கெஸ்ட் ஹவுஸை அடைந்தது.

அங்கே கலாபன் தயாராக இருந்தான். அவனுக்கு தெரியும் அந்த வேளையில் திலீப்புக்கு என்ன வேண்டும் என்று. பெருமாளை வெளியிலேயே காவலுக்கு வைத்து விட்டு உள் அறைக்கு சென்றார்கள் இருவரும். உடைகளை கூட கழட்டாமல் அப்படியே அங்கிருந்த சோபாவில் சரிந்தான் திலீப். கலாபன் கையில் ஒரு தோல் பை. அதில் கை விட்டு அதை வெளியில் எடுத்தான். அது மண் புழுவை விட சற்றே பெரிதான ஒரு பாம்பு.

"பொறந்து ரெண்டே வாரம் தான் சார் ஆச்சு." என்று கூறிக் கொண்டே தனது வேலையை செய்ய தயாரானான். தள்ளாடிக் கொண்டே நாக்கை வெளியில் நீட்டினான் திலீப். அடுத்த பத்து வினாடிகளுக்குள் அந்த பாம்பு செல்லமாக திலீப்பின் நாவில் தனது பல்லினால் ஒரு முத்தம் கொடுத்தது. போதை சுரீர் என்று ஏற கண் மூடினான் திலீப்.

கலாபனுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு வீட்டின் வெளியில் வராந்தாவில் அமர்ந்து கொண்டு புகை பிடிக்க தொடங்கினார் பெருமாள். கிழே அன்று வெளிவந்த அனைத்து நாளிதழ்களிலும் சங்கமித்ராவும், திலீபனும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். கடிகார முட்கள் பன்னிரண்டை தொட போட்டி போட்டுக் கொண்டிருந்தன. அவரும் சிறிது கண் அயர்ந்தார்.

டப் டப் டப். காலடி சத்தம் கேட்டு கண் விழித்தார் பெருமாள். பின்னால் திலீப். எங்கோ வெளியில் சென்று கொண்டிருந்தான். தள்ளாடல் சற்றும் குறையவில்லை. மது போதையுடன், பாம்பின் விஷத்தின் போதையும் சேர்ந்து அவனது ரத்தத்தில் கதகளி ஆடிக் கொண்டிருந்தது. கார் கதவை திறந்தான் அவன்.

"தம்பி! எங்க போகனுமோ சொல்லுங்க. நான் கூட்டிக் கிட்டு போறேன். நீங்க வண்டி ஓட்ட வேண்டாம்."

அவர் சொல்வதை அவன் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. நடந்து சென்று முன் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பினான். அது ஒரு துள்ளலுடன் கிளம்பியது. காரின் பின் இருக்கையில் தொத்திக் கொண்டார் பெருமாள். கார் அசுர வேகம் அடுத்தது. அவருக்கு தெரியும் அது இப்பொழுது அடையாறில் உள்ள சங்கமித்ராவின் பங்களா நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று.

"தம்பி! தயவு செய்து மெதுவா போங்க. இல்லேன்னா என் கிட்ட வண்டிய கொடுங்க. நான் ஓட்டிகிட்டு போறேன்."

ம்கூம். அவனது செவியில் விழவே இல்லை. காரின் வேகம் கூடிக் கொண்டே போனது. சிக்னல்கள், பாதசாரிகள், வாகனங்கள் என்று எதுவும் அவனை தடை செய்ய முடியவில்லை.

ஒரு வேளை நாம் வண்டியில் ஏறியது தவறோ, என்று பெருமாள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, பசும்பொன் தேவர் சாலையில் இருந்து க்ரீன் வேஸ் சாலையில் திரும்புகையில், வண்டி கட்டுப்பாடை இழந்து.........

நொடிப் பொழுதில் எல்லாம் முடிந்து விட்டது. வண்டியை விட்டு பெருமாள் இறங்க முயற்சி செய்து கதவை திறந்தார். கீழே அவர் பார்த்தது சுமார் இரண்டு டன் எடையுள்ள அந்த இயந்திர மிருகம் தனது ஒரு சக்கரத்தை சாலை ஓரத்தில் படுத்திருந்த ஒருவனின் தலையில் வைத்துக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தது.

உடனே நிலைமையின் விபரீதம் புரிந்தது பெருமாளுக்கு. சாலை வேலைகள் செய்துவிட்டு சாலை ஒரத்தில் படுத்துக் கொண்டிருந்த ஐவரின் மீது வண்டி ஏற்றி விட்டான் திலீப். ஒருவன் நிச்சயம் உயிருடன் இல்லை. மற்றவர்கள் புழு போல துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திலீபை பார்த்தார் பெருமாள். அவனுக்கு போதை முற்றிலும் இறங்கி வியர்த்துக் கொட்டியது. சினிமாவில் பல தடியர்களை சட்டை கழற்றிவிட்டு பந்தாடுபவன், நடுங்கிக் கொண்டிருந்தான். பின்னர் என்ன யோசித்தானோ தெரியவில்லை ஒரே ஓட்டமாக அங்கிருந்து பெருமாளிடம் கூட சொல்லாமல் ஓடி விட்டான். சினிமாவில் தனது உயிரை கூட பொருட்படுத்தாமல் நாட்டுக்கு உழைப்பவன், அடிபட்டவர்களை குறைந்த பட்சம் மருத்துவமனையில் சேர்க்கவோ அல்லது போலீஸுக்கு தகவல் அனுப்பவோ கூட மறுத்துவிட்டு ஓடியதை நினைத்தால் அந்த வேளையிலும் சிரிப்பு வந்தது அவருக்கு.

உடனே பெருமாளுக்குள் இருந்த காவலர் உயிர் பெற்றார். சட்டென்று மற்ற அனைவரும் உயிருடன் இருப்பதை உறுதி செய்து கொண்டு, வேகமாக தனது செல்பேசியில் ஆம்புலன்ஸை அழைத்தார். போலீஸுக்கும் தகவல் சொன்னார்.

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த இடமே பரபரப்பானது.

சம்பவம் நடந்த அடுத்த தினம் சென்னை மாநகர போலீஸ் திலீபை வலை வீசி தேடிக் கொண்டிருந்தது. பெருமாள் மற்றும் அடி பட்ட நால்வரின் சாட்சியம் திலீப் குற்றவாளி என்று போலீஸ் கருத போதுமானதாக இருந்தது. திலீப்பின் வீடுகள், அவனின் சகோதரரின் வீடுகள், நண்பர்கள் வீடுகள் என்று நடத்திய சோதனையில் அவன் எங்கிருக்கிறான் என்பது பிடிபடவில்லை. சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்கு பின் மதியம் இரண்டு மணிக்கு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சரணடைந்தான் திலீப். இரண்டே முக்கால் மணிக்கு எடுக்கப்பட்ட ரத்த சோதனையில் அவனது ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு ஆல்கஹால் இருப்பது தெரிய வந்தது. திலீப் கைது செய்யப்பட்டான்.

தமிழகம் பரபரப்பானது. திலீப் ரசிகர் மன்றத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசியல் காரணமாக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்றான் திலீப். திரையுலகினர் சிலர் அவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். சிலர் எதிராக கருத்து தெரிவித்தனர். சிலர் எதற்கு வம்பென்று மௌனமாக இருந்தனர். பத்திரிக்கைகள் பல லட்சம் பிரதிகள் அதிகமாக விற்றுத் தீர்ந்தன.

மூன்றே வாரத்தில் ஜாமீனில் வெளியில் வந்தான் திலீப். காய்களை மெதுவாக ஆனால் நிதானமாக நகர்த்தினான்.

சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கை புண்ணுக்கு கண்ணாடி கேட்டது நீதி மன்றம். போலீஸார் நாயாய் பேயாய் அலைந்து ஒப்படைத்த சாட்சியங்கள் எல்லாம் திலீபின் பணம் மற்றும் அவனது அசுர மூளை கொண்ட வழக்கறிஞர்கள் முன்னால் ஒவ்வொன்றாக உடைந்து போயின. காயமடைந்த நால்வரும் அடிபட்ட நிலையில் அவர்கள் பார்த்தது திலீப் தானா என்று சந்தேகமாக இருக்கிறது என்றார்கள். சம்பவம் நடந்த அன்று திலீப் வேறு ஒரு இடத்தில் இருந்ததாக அலிபி உருவாக்கப் பட்டது.

பெருமாளின் சாட்சியம் அவனுக்கு பெரும் தடையாக இருந்தது. அதையும் பணம் கொண்டு சமாளித்தான் திலீப். பெருமாளின் குடும்பத்தினருக்கு அவர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணத்தை கொட்டினான். அவர்களையே பெருமாளுக்கு மனநிலை சரியில்லை என்று சொல்ல வைத்தான். அவர்களே பெருமாளை வீட்டிலிருந்து ஒதுக்கியும் வைத்தார்கள். இதனால் மனமுடைந்த பெருமாள் நோய்வாய்பட்டு தெருவில் ஒரு நாள் இறந்து கிடந்தார்.

இறந்தவனின் குடும்பத்தினரையும் பணத்தால் சரிக்கட்டினான் திலீப். இபிகோவினை இடது காலினால் உதைத்து தள்ளிவிட்டு வழக்கிலிருந்து வெளியில் வந்தான்.

"என்ன பாஸ் அந்த திருட்டு பய திலீப் கேஸ பத்தி யோசிச்சுகிட்டு இருக்கீங்களா?"

விஷ்ணுவின் குரலில் மீண்டும் நிகழ் காலத்திற்கு வந்தான் விவேக். திரையில் அவனது ரசிகர்கள் பால் காவடி எடுத்தும் தலையில் தேங்காய் உடைத்தும் அவனது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். நீதி ஜெயித்துவிட்டது என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் திலீப்.

அவனது பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

"வழக்கு தீர்ப்பிற்கு பின்னர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கிறேன் என்று கூறினீர்களே?"

"இப்பொழுது அதை பற்றி ஒன்றும் கேட்காதீர்கள். நான் இரண்டு வாரங்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ளப் போகிறேன். அதன் பிறகு தான் மற்றவற்றை பற்றி யோசிக்க முடியும்."

"ஓய்வுக்கு எங்கே செல்கிறீர்கள்? வெளி நாட்டுக்கா?"

"அது எனக்கு மட்டுமே தெரியும். பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு யாருக்கும் அதை தெரியப் படுத்தவில்லை."

"இந்த வழக்கிலிருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள்?"

"இனி அனைவரும் காரில் செல்வதை விட்டு விட்டு கைக்கிளில் தான் செல்ல வேண்டும்."

தொடர்ந்து பார்க்க பிடிக்காமல் தொலைக்காட்சியை அனைத்தான் விவேக்.

"என்ன திமிறா பேசறான் பாத்தியா விஷ்ணு. நாம இவ்வளவு கஷ்டப் பட்டும் இவ்வளவு க்ளியரான கேஸ் இப்படி ஆயிடுச்சே."

"விடுங்க பாஸ். செத்தவன் குடும்பமே காசுக்கு விலை போகும் போது நாம என்ன செய்ய முடியும். இது கலி காலம்."

"அப்படி விட்டுட முடியாது விஷ்ணு. லீகலா க்ளியர் செய்ய முடியாத கேஸ நம்ம வேற மாதிரி தான் க்ளியர் செய்யனும்."

"அப்படீன்னா பாஸ்?"

"அத நாளைக்கு சொல்றேன். ரெண்டு வருஷமா போராடி கேஸ்லேர்ந்து வெளில வந்துருக்கான். நிச்சயம் இன்னிக்கு பார்ட்டி கொடுப்பான். மொதல்ல நீ போய் இன்னிக்கு நைட்டு அவன் பார்ட்டி எந்த ஹோட்டல்ல குடுக்கறான் அப்படீன்னு விசாரிச்சுட்டு வா."

அரை மணி நேரத்தில் விஷ்ணுவிடமிருந்து ஃபோன் வந்தது.

"விசாரிச்சுட்டேன் பாஸ். ஹையத்ல பார்ட்டி கொடுக்கறான். எல்லா பெரும் புள்ளிகளுக்கும் இன்வைட் போயிருக்கு."

"கூல். பார்ட்டியில் எல்லா வஸ்துவும் இருக்கும். பார்ட்டி தொடங்கி ஒரு மூனு மணி நேரம் கழிச்சு நாம அங்கே போனா ஒருத்தருக்கும் அடையாளம் தெரியாது. நம்ம வண்டி வேணாம். ரூபலாவோட கார்ல அங்கே போயிடலாம்."

"சரி பாஸ். இப்போ என்ன செய்யட்டும்?"

"இங்க வந்துடு. டாக்டர் பரமேஸ்வரனை போய் பார்த்துட்டு வரலாம்."

"பாஸ். ஏதோ புரியற மாதிரி இருக்கு. ஆனா ஒன்னும் புரியல."

"இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாமே புரிஞ்சுடும்."

இரவு மணி பன்னிரண்டரை. ரூபலாவின் காரில் ஹையத் ஹோட்டலுக்கு இரு நூறு அடிகள் முன்னாலேயே இறங்கிக் கொண்டார்கள் விவேக்கும் விஷ்ணுவும்.

"காரியம் முடிஞ்சதும் போன் வரும். உடனே வந்து எங்கள பிக் அப் செஞ்சுக்கோ."

ரூபலாவிடம் சொல்லிவிட்டு மெதுவாக ஹோட்டல் உள்ளே நுழைந்து பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கே "ப்ரைவேட் பார்ட்டி" என்ற பெரிய பெயர் பலகையும் அதன் அருகே இரண்டு தடியர்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை தொந்திரவு செய்யாமல் ஹாலை சுற்றி பின்னால் இருக்கும் சிறிய போர்டிகோவை சென்றடைந்தார்கள். அங்கிருந்து பார்த்தால் பார்ட்டியின் நிகழ்வுகள் சுமாராக தெரிந்தன. திலீப் எங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை. போர்டிகோவின் பின் உள்ள தோட்டத்தை கடந்து பார்ட்டி ஹாலுக்கு அருகே இருக்கும் ஸ்விம்மிங் பூலை அடைந்தார்கள். அவர்கள் உடுத்தி இருந்த ஹையத் ஹோட்டலின் சிப்பந்திகளுக்கான உடை அவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்க உதவியது. ஸ்விம்மிங் பூலில் அந்த நடிகை அரை நிர்வானமாக போதையில் இருந்தாள்.

"விஷ்ணு! வந்த வேலையை பார். ஜொள்ளு விடாதே."

"சாரி பாஸ். பழக்க தோஷம்."

பூலை கடந்து பார்ட்டி ஹாலுக்குள் பின் புறமாக நுழைந்தார்கள். அதிக நேர தேடலுக்கு இடம் கொடுக்காமல் அவர்கள் முன் தென்பட்டான் திலீப். பயங்கர போதையில் இருந்தான் என்பது பார்த்த உடனே அவர்களுக்கு தெரிந்தது. இவனை எப்படி இங்கிருந்து வெளியில் அழைத்து செல்வது என்று விவேக் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக திலீப் தனது அறை சாவியை தொலைத்து விட்டு போதையில் தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனை அனுகிய விவேக், தன்னிடம் மாஸ்டர் கீ உள்ளது என்றும் தான் அவனை அவனது அறைக்கு அழைத்து செல்வதாகவும் கூறினான். திலீபும் மெதுவாக தள்ளாடிய படியே அவர்களுடன் சென்றான்.

மறு நாள் காலை செங்கல்பட்டில் இருக்கும் டாக்டர் பரமேஸ்வரனின் ப்ரைவேட் க்ளினிக்கில் மயக்க நிலையில் இருந்தான் திலீப்.

"டாக்டர் ஒன்னும் பிரச்சனை இல்லையே?"

"ஒன்னும் இல்லை விவேக். இவனது ப்ளட் க்ரூப் வகை ரத்தம் போதுமான அளவிற்கு ஸ்டாக் இருக்கிறது. இவனது ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைந்த உடன் நமது வேலையை தொடங்கி விடலாம்."

"சர்ஜரி எவ்வளவு நேரம் ஆகும் டாக்டர்?"

"மூன்று நர்ஸ்கள், ஒரு அனெஸ்தீஷியாலஜிஸ்ட், ஒரு ஹிமடாலஜிஸ்ட், ஒரு யூராலஜிஸ்ட் மற்றும் ஒரு ஜெனெரல் சர்ஜன் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு செயலை நான் மட்டும் செய்வது மிகவும் கஷ்டம். அதனால் மூன்று மணி நேரம் கூட ஆகலாம். உதிரப் போக்கு அதிகம் நேர்ந்தால் அது உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும்."

"அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது டாக்டர். நாம் நல்லதையே நினைப்போம். நானும் விஷ்ணுவும் உங்கள் உதவிக்கு இருக்கிறோம். வேண்டுமென்றால் ரூபலாவையும் அழைத்துக் கொள்ளலாம். எங்களை நர்ஸ்களை போல பயன்படுத்திக் கொள்ளுங்கள்."

"இவனது ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைய எவ்வளவு நேரம் ஆகும் டாக்டர்."

"நாளை காலை தான் இவன் மீது நாம் கை வைக்க முடியும்."

"அதுவரையில்...."

"இவன் மயக்கத்தில் தான் இருப்பான்."

அடுத்த நாள் காலை திலீபின் உடல் நிலை சர்ஜரிக்கு தயாரானது. டாக்டர் பரமேஸ்வரன், விவேக், ரூபலா மற்றும் விஷ்ணு மூவரும் அவனது உடலில் இயங்கத் தொடங்கினர். டாக்டர் மூன்று மணி நேரம் என்று கூறினாலும் ஒன்னேகால் மணி நேரத்திலேயே எல்லாம் முடிந்தது.

"இவன் ரெகவரி ஆக எவ்வளவு நாள் ஆகும் டாக்டர்?"

"மூன்று நாட்கள் இவன் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும். இவனை நானே பெர்ஸனலாக பார்த்துக் கொள்கிறேன். அதன் பின்னர் குறைந்தது பத்து நாட்களாவது அதிகம் நடமாடாமல் இருக்க வேண்டும். அந்த பத்து நாட்களும் நீங்கள் தான் பர்த்துக் கொள்ள வேண்டும்."

"தையல் பிரிப்பது டாக்டர்?"

"தேவை இல்லை. கரையும் ஸூசர்ஸ் போடப்பட்டு இருக்கிறது. பத்து நாட்களில் தானாகவே கரைந்து விடும். இந்த இரண்டு வாரங்களும் இவனுக்கு ஆன்டிபயடிக்ஸ் மற்றும் மார்வின் பெயின் கில்லர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்போம். மார்வின் காரணமாக இவன் மயக்க நிலையிலேயே இருப்பான்."

"எனக்கு ஒரு டவுட் பாஸ்."

"என்ன விஷ்ணு?"

"இவன் ரெண்டு வாரம் இங்கே இருப்பது யாருக்கும் தெரியாது. ஒரு வேளை இவனை காணவில்லைன்னு யாராவது போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டா?"

"இவ்வளவு யோசிச்சவன் அதை யோசிக்காமல் இருப்பேனா? இவனோட செல்லில் இருந்து இவனோட PRO வுக்கு ரெண்டு வாரம் கோவா போறேன்னு மெஸ்ஸேஜ் அனுப்பியாச்சு. இவனோட எல்லா அப்பாயின்ட்மென்டும் கேன்ஸல் ஆயிடுச்சு. நானே ஃபோன் போட்டு ஒரு அப்பாயின்ட்மென்ட் கேட்டேன். ரெண்டு வாரத்துக்கு இல்லைன்னு என் கிட்டயே சொல்றான் இவன் PRO."

"உங்க மூளையே மூளை பாஸ்."

சரியாக பதினைந்து நாட்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக சிய நினைவுக்கு வந்தான் திலீப். கஷ்டப்பட்டு கண் விழித்த அவனுக்கு எதிரே முகமூடி அணிந்த இரண்டு உருவங்கள். திலீப் எழுந்திருக்க முயன்றான். முடியவில்லை. கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் இருந்தான். அவனது உதடுகள் உலர்ந்து காய்ந்து இருந்தன. கண்களின் கீழே கருவளையம். சட்டென்று பார்த்தால் இவனது தீவிர ரசிகனுக்கு கூட இவனை அடையாளம் தெரியாது. அப்படி ஒரு தோற்றம்.

"யார் நீங்கள்? என்னை ஏன் இங்கே கடத்தி வைத்திருக்கிறீர்கள்? எவ்வளவு நாட்களாக நான் இங்கே இருக்கிறேன்? உங்களுக்கு என்ன வேண்டும்?"

"நாங்கள் யார் என்பது உனக்கு தேவை இல்லை திலீப். எங்களுக்கு வேண்டியதை நாங்கள் எடுத்துக் கொண்டு விட்டோம். இரண்டு வாரங்களுக்கு மேல் நீ இங்கே இருக்கிறாய். இனி நீ எங்களுக்கு தேவை இல்லை. அடுத்த முறை நீ கண் விழிக்கும் பொழுது ஹையத் ஹொட்டல் ஸ்விம்மிங் பூலில் இருப்பாய்."

"என்னை என்ன செய்தீர்கள்? எனக்கு ஏன் அடி வயிற்றில் வலி இருக்கிறது?"

"உனக்கு பைலெட்டரல் ஆர்கியக்டமி மற்றும் பெனக்டமி செய்யப்பட்டுள்ளது."

"அப்படி என்றால்?"

"அது விரைவில் உனக்கே தெரியும். பணத்தை கொண்டு பல காரியங்களை சாதித்த நீ, இப்பொழுது நீ இழந்ததையும் பணத்தை கொண்டே மீட்டுக்கொள்ள முயற்சித்துப்பார்."

முகமூடி அணித்த உருவம் பேசிக் கொண்டே போக, அதே நேரத்தில் மார்வின் தனது வேலையை காட்ட மெதுவாக கண் மூடி மயங்கினான் திலீப்.


"எறுமை மாடே! எழுந்து தொலை. ராத்திரி முழுக்க டிவி பாக்க வேண்டியது. காலங்கார்த்தால இழுத்து போத்திகிட்டு தூங்க வேண்டியது. இதுல விவேக்கு, ரூபலான்னு தூக்கத்துல பொலம்பல் வேற. பரதேசி."

குரல் கேட்டு எழுந்தான் செந்தில். "அட சே!. எல்லாம் கனவு." அவனுக்குள் சொல்லிக் கொண்டான். இரவு கலைஞர் டிவியில் விசாரணை பார்த்ததன் விளைவு என்பது அவனுக்கு புரிந்தது.

வேகமாக சென்று தனது ஐஃபோனை எடுத்துக் கொண்டு கழிவறை சென்றான். அன்று வந்த மின்னஞ்சல்களை எல்லாம் மேய்ந்து விட்டு ரெடிஃப் தளத்திற்கு சென்றான். அந்த தளத்தில் இருந்த அந்த முதல் செய்தி இவன் கண்ணுக்கு தெரிந்தது.

"சல்மான் கான் நடித்து சமீபத்தில் வெளி வந்த ஏக் தா டைகர் படம் வசூலில் 200 கோடியை தொட்டு சாதனை. ரசிகர்கள் உற்சாகம்."



Thursday, May 17, 2012

அற்புதத்தீவு பஹாமாஸ் - பகுதி 2


















கடைசி இரண்டு படங்கள் மட்டும் நான் எடுத்தது. மற்ற அனைத்து படங்களும் எனது சகலை கௌதம் எடுத்தது.

Wednesday, May 16, 2012

இது தான் உண்மையான இந்தியா



தலைப்பை பார்த்து விட்டு வேறு எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் லேபிளை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள்.

Sunday, May 06, 2012

பொடிமாஸ் - 05/06/2012

திருச்சியில், புதுக்கோட்டையில், தஞ்சையில் கடந்த பத்து தினங்களாக மின்வெட்டு இல்லை என்று தெரிகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இது தான் நிலை என்று நினைக்கிறேன். மின்வெட்டு நடக்கும் பொழுது ஆட்சியை குறை கூறி குத்து பரோட்டா மொத்து பரோட்டா எல்லாம் போட்ட உடன் பிறப்புகள் இப்பொழுது ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்று தேடி பார்த்தேன். பூஜ்ஜியம்.

ஒன்று நிச்சயம் தெரிகிறது. இவர்களின் எண்ணம் மின்வெட்டு நீங்க வேண்டும் என்பது இல்லை. மின்வெட்டு தொடர்ந்து ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து மீண்டும் ஆட்சிக்கு திமுக வர வேண்டும் என்பது தான். என்ன அதனை அரசியல் என்ற பெயரில் செய்து தொலைக்காமல் வேறு ஏதேதோ பெயரில் செய்து தொலைப்பதுதான் எரிச்சலை தருகிறது.

பதிவர் வவ்வால் இதனை பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளார். அவசியம் படியுங்கள். பதிவின் சுட்டி கீழே.

http://vovalpaarvai.blogspot.in/2012/04/blog-post_25.html


முல்லை பெரியார் அணை குறித்த உச்ச நீதி மன்றத்தின் ஐவர் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை கேரள அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அணை குறித்த கேரளாவின் பொய்களை உடைத்ததோடு புதிய அணை கட்டினாலும் தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உறுதிப்படுத்தி விட்டது. குழுவில் இருந்த ஐவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


நம்ம கோவி. கண்ணன் அவர்கள் பெர்ஸ்பெக்டிவ் குறித்த அருமையான பதிவு ஒன்றை இட்டுள்ளார். பல நேரங்களில் அடுத்தவர் நிலையிலிருந்து நாம் யோசித்து பார்த்தால் பல முரண்பாடுகளை தவிர்க்கலாம். குறிப்பாக கணவன் மனைவிக்குள் இந்த நிலை பெரிதும் கை கொடுக்கும். இப்பொழுது தமிழ்மணத்தில் நடக்கும் சண்டைகளுக்கு கூட இது பொருந்தும்.

பதிவின் சுட்டி கீழே. அவசியம் படியுங்கள்.

http://govikannan.blogspot.com/2012/05/blog-post_06.html


தமிழ்மண சண்டைகள் என்றதும் சமீபத்தில் தமிழ்மண நிர்வாகத்தினர் வெளியிட்டிருக்கும் அறிக்கை நியாபகம் வருகிறது. மதம் சம்பந்தப்பட்ட அவதூறு பதிவுகளை நீக்குவதென்று தமிழ்மண நிர்வாகத்தினர் முடிவு செய்திருப்பது நல்ல முடிவு. மத பிரசாரங்களை தவிர்த்தாலே அவதூறுகளை தவிர்த்து விடலாம். அதனால் மத பிரசார பதிவுகளையும் நீக்குவார்கள் என்று நம்புவோம். மத பிரசார பதிவுகளை இடுவோர் ஒன்றை கவனிக்க வேண்டும். "என் மனைவி பத்தினி" அன்று கூறுவதற்கும் "என் மனைவி மட்டுமே பத்தினி" என்று கூறுவதற்கும் வேறுபாடு உண்டு. உங்கள் மதத்தை உங்கள் வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்.


என்னை பொறுத்தவரையில் நித்தியானந்தா மதுரை ஆதீனமானது நல்ல விஷயம் தான். நித்தியை பற்றி மக்களுக்கு தெரிந்துவிட்டது. ஆதீனங்களை பற்றியும் தெரிய வேண்டாமா? அதற்கு இம்மாதிரி செயல்கள் ஒரு வாய்ப்பு. மக்கள் இம்மாதிரி நிறுவனங்களிடம் பணத்தை கொட்டுவதற்கு பதில் உதவும் கரங்கள் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு பணம் செலுத்தினால் உண்மையிலேயே புண்ணியம் கிட்டும்.


நாகர்கோவிலில் அரசு மருத்துவர்களின் கவனக்குறைவினால் ருக்மிணி என்ற 34 வயது பெண், இரு குழந்தைகளின் தாய், இறந்து விட்டார். சென்ற வருடம் மார்ச் மாதம் குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்ய ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்த ருக்மிணிக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதற்கு பதிலாக விஷ வாயுவான நைட்ரஸ் ஆக்ஸைடு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் ஒராண்டுக்கு மேலாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனில்லாமல் இந்த வாரம் இறந்து விட்டார். இன்னும் எத்தனை ருக்மிணிகள்?


நேற்று தான் வித்யா பாலனின் கஹானி படம் பார்த்தோம். என்ன படம் சார்? இப்படி ஒரு படம் பார்த்து நெடு நாட்களாகி விட்டன. படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள். அடுத்து வழக்கு எண் 18/9 பார்க்க வேண்டும். DVD வருவதற்கு எப்படியும் குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும். வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல் என்று ஓடாமல் இம்மாதிரி படங்களையும் வரவேற்றால் இம்மாதிரி படங்களும் வெளி நாட்டில் வெளியிடப்படும்.


கலைஞர் டிவியில் திருக்குறள் கதைகள் என்று அனிமேஷன் கார்ட்டூன்களை ஒளிபரப்புகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குறள். அதனை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு கதை. மிகவும் நன்றாக இருக்கிறது. குழந்தைகள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இதனை பரிந்துரைக்கிறேன். இது சனிக்கிழமை ஒளிபரப்பபடுகிறது.


பஹாமாஸ் பயணக் கட்டுரையை படித்த வலையுலக நண்பர்கள் பின்னூட்டத்திலும், மின்னஞ்சலிலும், தனி மடலிலும் புகைப் படங்களை எப்பொழுது பதிவேற்றுவேன் என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு நன்றிகள். விரைவில் வலையேற்றுகிறேன்.

Wednesday, May 02, 2012

அற்புதத்தீவு பஹாமாஸ் - பகுதி 1

இந்த வார இறுதியில் பஹாமாஸ் தீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்தோம். நல்ல அனுபவமாக அமைந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக அமெரிக்கா வந்ததிலிருந்தே பஹாமாஸ் போக வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. எல்லா நல்லவைகளுக்கு தகுந்த வேளை வர வேண்டும் என்பதை போல இதற்கும் நல்ல வேளைக்காக காத்திருந்தோம் என்று நினைக்கிறேன்.

விடுமுறைக்கு பஹாமாஸ் போகலாம் என்பதே திடீரென்று முடிவான ஒன்று. புது வருட பிறப்பன்று தான் முடிவு செய்தோம்.

முதல் கேள்வி நாங்கள் வசிக்கும் வாஷிங்டன் டிசி யிலிருந்து ஃப்ளோரிடாவில் உள்ள மையாமி சென்று அங்கிருந்து கப்பலில் பஹாமாஸ் செல்லலாமா? இல்லை இங்கிருந்தே விமானத்தில் நேரடியாக பஹாமாஸ் செல்லலாமா? என்பது தான். சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்த பிறகு இங்கிருந்து நேரடியாக செல்வதே சிறந்தது என்று முடிவு செய்தோம்.

அதற்கான காரணங்கள்;

  1. a) கப்பலில் மூன்று நாட்கள் கழிக்க வேண்டும் என்பதால் எனது மகனுக்கு கடல் பயணம் ஒத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் இருந்தது.
  2. b) பஹாமாஸின் முக்கிய தீவான நஸாவ் என்ற தீவில் கப்பல் ஒரு நாள் மட்டுமே இருக்கும். ஆனால் எங்களுக்கு அங்கே குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது இருக்க வேண்டும் என்ற ஆவல்.
  3. c) குறைந்த கால அவகாசத்தில் பயணம் முடிவு செய்த காரணத்தால் கப்பலில் நல்ல அறைகள் கிடைக்க வில்லை.

எனது மனைவி பல தளங்களுக்கு சென்று நாங்கள் பயணிக்க வேண்டிய வீசா, விமான டிக்கெட், நாங்கள் தங்கிய அட்லான்டிஸ் ஹோட்டலில் அறை, பயணத்திற்கு தேவையான ஷாப்பிங் என்று அனைத்தையும் ஏற்பாடு செய்தார். மாண்டியை நான்கு நாட்கள் வெளியில் விட்டு செல்வது தான் சிறிது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் அவனை அழைத்து செல்வது இயலாத செயல். அதனால் அவனை எப்பொழுதும் பார்த்துக் கொள்ளும் கிம் என்ற பெண்ணிடம் அவனை ஒப்படைத்து விட்டு சென்றோம்.

முதல் நாள் சனிக்கிழமை பஹாமாஸ் தீவில் உள்ள அட்லான்டிஸ் பீச்சிற்கு சென்றோம். வெள்ளை மணல் திட்டு அதில் பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் நீர். மேலே நீல வானம். அருமையான காட்சி. நெடு நேரம் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்துவிட்டு அறைக்கு திரும்பினோம். அன்று மாலை அட்லாண்டிஸ் தீவில் நடந்து சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தோம். இந்த தீவில் இளநீருடன் ரம் கலந்து தருகிறார்கள். எனக்கு மாமன் மகள் படம் நினைவிற்கு வந்தது. பின்னர் அந்த தீவில் உள்ள அக்வாரியம் சென்று ரசித்தோம். சுமார் 50,000 கடல் வாழ் உயிரினங்கள் உள்ள இடம் அது.

ஞாயிற்றுக் கிழமை ஒரே மழை. அதனால் நான் அங்கேயே இருந்த வாட்டர் பார்க்கிற்கும் எனது மனைவி காஸினோவிற்கும் சென்றார். மாயன் டெம்பிள் என்ற ரைடில் சுமார் 75 அடி செங்குத்தான சறுக்கம். நல்ல அனுபவமாக இருந்தது. அடுத்த நாள் திங்கட் கிழமை நாங்கள் செல்ல வேண்டும் என்று நினைத்த பல தீவுகள் மூடி விட்டனர் மழை காரணமாக. அதனால் பாராஸைலிங் போன்றவற்றை செய்ய இயலவில்லை. அந்த ஊரின் சந்தைக்கு சென்றோம். சந்தையில் எங்கு பார்த்தாலும் பாப் மார்லியின் படம் வைத்த டீ ஷர்டுகள். ஆடைகள் எல்லாம் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் பேரம் பேசி வாங்க வேண்டும். அன்று இரவு காஸினோவிற்கு சென்று இரவு 1 மணிவரை விளையாடிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் செவ்வாய் கிழமை காலை பாரடைஸ் தீவை சுற்றி பல இடங்களில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வாஷிங்டன் டிசி வந்து சேர்ந்தோம்.


பஹாமாஸ் தீவில் தேங்காய் ரம் தான் ஃபேமஸாக இருக்கிறது. பைனாப்பிள் ஜூசுடன் கலந்து அடிக்கிறார்கள். அருமையாக இருக்கிறது. நாங்கள் தங்கிய மூன்று இரவிலும் அதுதான் உள்ளே சென்றது தொடர்ச்சியாக. அமெரிக்காவில் அது எங்கே கிடைக்கும் என்று பார்க்க வேண்டும். நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் சுருட்டு விற்க்கும் கடை ஒன்று இருந்தது. சரி சுருட்டு ஒன்று வாங்கலாம் என்று கருதி அங்கே சென்றோம். அங்கே ஒரு சுருட்டு எட்டு டாலர் என்ற விலையில் தொடங்கி ஒரு சுருட்டு சுமார் 500 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கிறது. குறைந்த விலை சுருட்டுகள் நான்கை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.

பஹாமாஸ் தீவில் டாக்ஸி படு சீப்பாக கிடைக்கிறது. ஆனால் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் விலை அனைத்தும் பல மடங்கு அதிகம். ஒரு சிறிய வாட்டர் பாட்டில் ஐந்து டாலர்கள். ஒரு வாழை பழம் மூன்றரை டாலர்கள். காலை மற்றும் மதிய உணவை நாங்கள் அங்கேயே முடித்துக் கொண்டோம். இரவு உணவிற்கு ஒரு நாள் க்ளே அவன் என்ற இந்திய உணவகத்திற்கும், மறு நாள் ட்வின் ப்ரோஸ் என்ற கரீபியன் உணவகத்திற்கும் சென்றோம். மீன் அட்டகாசமாக இருந்தது.

அடுத்த வாரம் பஹாமாஸ் தீவில் தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால் ஊர் முழுவதும் போஸ்டர்களும், ஊர்வலங்களும், பிரச்சாரங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சியான FNM (Free National Movement) மற்றும் எதிர் கட்சியான PLP (Progressive Liberal Party) ஆகியவை முக்கியமான கட்சிகள். டாக்ஸி ட்ரைவர்களிடம் பேசியதில் பணக்காரர்கள், வெளியூர் ஆட்கள் வந்து தங்கும் பகுதிகளில் தான் வளர்ச்சி இருப்பதாகவும் மற்ற இடங்களில் ஒன்றும் இல்லை என்றும் குறிப்பிட்டார்கள். ஊரை சுற்றி பார்த்ததில் அது உண்மை என்றே தெரிகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் 24 மணி நேர குடிநீர், மின்சாரம் போன்றவை இடம் பெறுகின்றன. குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் அங்கும் உள்ளது.

மொத்தத்தில் நான்கு நாட்கள் பஹாமாஸ் தீவில் காஸினோ, பீச், வாட்டர் பார்க் என்று மகிழ்ந்தனுபவித்தோம். பஹாமாஸ் நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பயணத்தில் எடுத்த புகைப்படங்களை விரைவில் வலையேற்றுகிறேன்.