Sunday, April 26, 2015

பொடிமாஸ் - 04/26/2015

நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் பீதியை ஏற்படுத்துகிறது. மலை பிரதேசம் என்பதால் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. சுமார் 3000 உயிர்களை இதுவரை பலி வாங்கியுள்ளது. இறந்தவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் அனைவரும் இதிலிருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.


கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் பரிந்துரைத்த திருநங்கைகளுக்கான தனி உரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இதில் குறிப்பிட வேண்டியது இது ஒரு தனிநபர் மசோதா என்பது தான். சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேறிய ஒரு தனி நபர் மசோதா இது தான்.

இந்தியாவில் திருநங்கைகளின் வாழ்வு மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கிறது. திருநங்கைகளின் முன்னேற்றத் திட்டங்களுக்கு தேசிய அளவிலான கொள்கை உருவாக்கவும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்கவும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

திருச்சி சிவா திருச்சியை சேர்ந்தவர் மட்டும் அல்ல, நான் படித்த ஈ. ரெ. மேல்நிலை பள்ளியில் படித்தவர். சென்ற ஆண்டு தான் அவரது துணைவியார் தனது இன்னுயிரை நீத்தார். அந்த நிலையிலும் பொது வாழ்க்கையில் இருந்து விலகாமல் தொடர்ந்து அவர் உழைப்பது எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

சக திருச்சிக்காரனாக மட்டும் அல்ல, சக பள்ளி மாணவனாகவும் அவரது சாதனைக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.


கடந்த முறை இந்தியா சென்ற பொழுது பல நாவல்களை வாங்கி வந்தேன். அவற்றில் ஆறு சுஜாதா நாவல்களும் அடக்கம். அவை அனைத்தும் முன்னரே படித்தது தான் என்றாலும் படித்து நெடு நாட்கள் (இன்னும் சொல்ல போனால் பல வருடங்கள்) ஆகி விட்டதால் வாங்கினேன். அவற்றை படிக்க இப்போதுதான் நேரம் கிடைத்தது. அவரது கொலையுதிர் காலம் அப்போது படிக்கும் போது எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது மிகவும் தட்டையாக இருப்பது போல தோன்றியது. சுத்தமாக பிடிக்கவில்லை. அதே நேரத்தில் வாய்மையே சில சமயம் வெல்லும் அப்போது படிக்கும் போது ஏற்படுத்திய அதே உணர்வுகளை இப்போதும் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். சுஜாதா எப்போதுமே ஒரு புதிர் தான். இன்னும் இரண்டாவது காதல் கதை, பிரிவோம் சந்திப்போம் (2 பாகங்கள்), ஸ்ரீரங்கத்து தேவதைகள் எல்லாம் இருக்கின்றன. விரைவில் படித்துவிட வேண்டும்.


தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வரும் என்பது உறுதியாகி விட்டது. தளபதியா அல்லது கேப்டனா என்பது தான் கேள்வி. கேப்டன் காய் நகர்த்த தொடங்கிவிட்டார். ஒரே நாளில் நேற்று கலைஞர், ஸ்டாலின், இளங்கோவன், வைகோ, வாசன், தமிழிசை சௌந்தர்ராஜன் என்று பல தலைவர்களை சந்தித்து பேசி இருக்கிறார். மேகதாது அணை தொடர்பாகவும், ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பாகவும் பிரதமர் மோதியை சந்திக்க தலைமையேற்று இருக்கிறார். தளபதி முதல்வர் போட்டியில் இருந்தாலும் தமிழக நன்மையை ஒட்டி கனிமொழி மற்றும் திருச்சி சிவா இருவரும் கேப்டன் தலைமையில் செல்வார்கள் என்று உறுதியளித்துள்ளார். இது ஆரோக்கியமான செயலாக தெரிகிறது. நமக்குள் பல கருத்து வேறுபாடு இருந்தாலும் பொது நன்மை என்று வரும் போது நாம் ஒன்று கூடுவது அவசியம். தமிழக அரசியலில் இந்த மாற்றம் மகிழ்ச்சியை தருகிறது.


சென்ற முறை போல் இல்லாமல் இம்முறை CSK அட்டகாசமாக விளையாடி வருகிறது. இப்போது இருக்கும் ஃபார்மில் ப்ளே ஆஃபுக்கு நாம் தகுதி பெறுவது நிச்சயம் என்றே நம்புகிறேன். முரளி விஜய் இல்லாதது சற்று வருத்தம் அளித்தாலும், மெக்கல்லமும், ஸ்மித்தும் அட்டாகாசமாக விளையாடுகிறார்கள். தோனிக்கு வயசாகி விட்டது நன்றாக தெரிகிறது. முன்பு விளையாடியது போல ஷார்ட் பால்களை விளையாட அவரால் முடியவில்லை. ஆனாலும் அவரது விக்கெட் கீப்பிங்கும், தலைமையும் அட்டகாசம். லெக் ஸ்லிப், லெக் கல்லி, ஸில்லி மிட் ஆன் போன்ற இடங்களில் எல்லாம் இப்போது டெஸ்ட் போட்டிகளிலேயே ஆட்களை வைப்பது இல்லை. இவரோ T20 யில் ஆட்களை வைத்து பேட்ஸ்மேனை அவுட் ஆக்குகிறார். பேட்ஸ்மேனின் உடலசைவை வைத்தே அவரது நோக்கத்தை அறியும் இவரது திறமை அட்டகாசம்.

MS is undoubtedly the best captain in today's contemporary cricket.


சமீபத்தில் பார்த்த படங்களிலேயே மிகவும் பிடித்திருந்தது Furious 7. பால் வால்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஜேசன் ஸ்டேதமை கொல்லாமல் விட்டு விட்டதால் அடுத்த பகுதியிலும் அவர்தான் வில்லன் என்பது உறுதியாகி விட்டது. நான்கு வாரங்களில் உலகலவில் $1.32 பில்லியன் டாலர்கள் (சுமார் எட்டாயிரம் கோடி) கலெக்க்ஷன் செய்திருக்கிறது. தற்பொழுது உலகலவில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் மூன்றாம் இடத்துக்கு சென்றுவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த படம் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.


சமீபத்தில் பார்த்ததில் என்னை மிகவும் கவர்ந்த வீடியோ. நீங்களும் நிச்சயம் இதனை ரசிப்பீர்கள். பார்த்து ரசியுங்கள்.



Saturday, April 18, 2015

Attendance

நண்பர்களே,

நலமா? உங்களை எல்லாம் பார்த்து நெடு நாட்கள் ஆகிவிட்டன. சரியாக இரண்டு வருடங்கள். நண்பர்கள் சிலர் பின்னூட்டத்திலும் மின்னஞ்சலிலும் ஏன் எழுதவில்லை என்று தொடர்ந்து விசாரிக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. வேறு ஒன்றும் விஷயம் இல்லை. 2013 ஆம் ஆண்டு இங்கே ஒரு பல்கலைகழகத்தில் MBA படிக்க தொடங்கி இருந்தேன். அந்த பல்கலைகழகம் அமெரிக்காவில் முதல் 10 இடங்களுக்குள் தொடர்ந்து வரும் பல்கலைகழகம். ஐவி லீக் (Ivy League) என்பார்கள், அந்த ஐவி லீக் பல்கலைகழகங்களில் இதுவும் ஒன்று. அதனால் வேலை பளு சற்று அல்ல மிகவும் அதிகமாக இருந்தது.

படிப்பு தொடங்கி இரண்டு வருடங்கள் முடிய போகின்றன. 25 பாடங்கள். 60 Credits என்பார்கள் அமெரிக்காவில். ஒரு நாளைக்கு சுமார் 4 மணி நேர தூக்கம் தான் கிடைத்தது. ஒரு வாரத்தில் அசைன்மென்ட், ப்ராஜெக்ட் ரிப்போர்ட், ப்ரெசன்டேஷன், எக்சாம் என்று எதாவது வந்து கொண்டே இருந்தன. பல வாரங்களில் இவை கலவையாகவும் வந்தன. இதில் எங்கே பதிவெழுதுவது.

சரி எனது புலம்பல் கதையை பின்னர் வைத்துக் கொள்வோம். அதிகம் பதிவு எழுதாமல் இருப்பதற்கு காரணம் இதுதான். வேறு ஒன்றும் இல்லை. படிப்பை நல்லபடியாக முடித்து விட்டேன். 3.8+ GPA வுடன் வகுப்பில் முதலிடத்திலும் (Top 5%) இருக்கிறேன். இந்த மே மாதம் இறுதியில் பட்டம் வாங்குகிறேன்.

இப்போது இந்த பதிவை நான் எழுதுவதற்கு எனது நிலை விளக்குவது மட்டும் காரணம் இல்லை. உலகளவில் சிறந்த கல்லூரிகளில் MBA படிக்க விரும்புபவர்களுக்கு உதவவே இதை எழுதுகிறேன். ஏனென்றால் நான் இந்த கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து எனது நண்பர்கள் பலரும் இது குறித்து பல கேள்விகளை கேட்டபடியே இருக்கிறார்கள். MBA படிப்பு என்பது டிரைவிங் லைசன்ஸ் போன்றது கிடையாது. உங்களிடம் டிகிரி இருக்கிறதா என்று மட்டும் நிறுவனங்கள் பார்ப்பதில்லை, அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும் பார்ப்பார்கள். அதை வைத்தே அந்த படிப்பின் தரம், பேராசிரியர்களின் தரம், உடன் படிக்கும் சக மாணவர்களின் தரம் போன்றவை முடிவு செய்யப்படும். அதனால் இயன்றவரை நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது அவசியம்.

நல்ல தரமான நிறுவனங்கள் GMAT தேர்வினை (இந்தியாவில் CAT போன்றது) கட்டாயமாக்கி விட்டன. அதனால் அந்த தேர்வை நீங்கள் மிகவும் கவனமாக எழுத வேண்டியது அவசியம். ஆனால் ஒரு வேளை நீங்கள் அதில் விரும்பிய மதிப்பெண்கள் பெறவிலை என்றாலும் பாதகம் இல்லை. நல்ல நிறுவனங்கள் அதன் ஒரு அடிப்படையில் மட்டும் மாணவர்களை தேர்வு செய்வதில்லை.

GMAT தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து நீங்கள் செல்ல விரும்பும் இலக்காக ஒரு ஐந்து அல்லது ஆறு கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு ரியலிஸ்டிக் லிஸ்டாக இருப்பது அவசியம். MBA படிக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட் போன்ற பல்கலைகழகங்கள் தான் முதல் தேர்வாக இருக்கும். ஆனால் அது நம்மால் இயலுமா? என்ற கேள்வியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இயலும் என்பது உங்கள் பதிலானால் நிச்சயம் அந்த கல்லூரிகளை உங்கள் லிஸ்டில் சேர்க்கலாம். அப்படி இல்லை என்றால் எது உங்களால் முடியுமோ அந்த கல்லூரிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அந்த ஒவ்வொரு நிறுவனத்தை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குங்கள். உதாரணத்திற்கு ஹார்வேர்ட் பிஸினெஸ் ஸ்கூலில் கற்றுக் கொடுக்கப்படுவது அனைத்தும் (100 சதவிகிதம்) கேஸ் ஸ்டடி முறையில் இருக்கும். அது மேனேஜ்மென்ட் கன்சல்டிங் துறைக்கு செல்பவர்களுக்கு பெரிதும் உதவும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் உதவாது. அதே போல் ஃபைனான்ஸ் என்று எடுத்துக் கொண்டால் வார்ட்டெனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அதே போல டெக்னாலஜிகல் மேனேஜ்மென்ட் என்றால் ஸ்டான்ஃபோர்ட் மற்றும் MIT ஸ்லோன் இரண்டுமே முந்தி இருப்பன. ஆக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நீங்கள் உங்களது இயல்பு, தேவை ஆகியவற்றுக்கு தகுந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது அவசியம்.

அதன் பின்னர் அந்த லிஸ்டில் உள்ள கல்லூரிகள் ஒவ்வொன்றுக்கும் சென்று விண்ணப்பம் செய்யுங்கள். ஒவ்வொரு கல்லூரியும் பல கட்டுரைகளை உங்களை எழுத சொல்லும். இயன்றவரை உண்மையாக அதை எழுதுங்கள். உதாரணத்துக்கு உங்கள் சாதனைகளை பற்றி எழுத வேண்டும் என்றால் இல்லாத ஒன்றை எழுதாதீர்கள். நீங்கள் உண்மையிலேயே செய்த சாதனை ஒன்றை எடுத்து கூறுங்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி. அதே போல நேர்முக தேர்விலும் இயன்ற வரை உண்மையாக இருங்கள்.

இது போன்ற MBA படிப்பு என்பது திருமணம் செய்வது போன்றது. பல ஆண்டு பந்தம் தொடர இது ஒரு தொடக்க புள்ளி. நீங்கள் எப்படி இந்த கல்லூரி உங்களுக்கு பொருத்தமானது என்று நினைக்கிறீர்களோ அதுபோலவே அவர்களும் உங்களை பொருத்தமானவரா என்று பார்ப்பார்கள். நீங்கள் உங்கள் உண்மை முகத்தை மறைத்தால் ஒரு வேளை உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதன் பின்னர் உங்களால் அங்கு இயல்பாக படிக்க இயலாது. ஏமாற்றி திருமணம் செய்வது போன்றது அது. தேவை இல்லாத மனக்கசப்பையே ஏற்படுத்தும். நேர்முக தேர்வில் என்னை அவர்கள் கேட்ட கேள்விகள் சிலவற்றை கீழே தந்துள்ளேன். எனது நினைவில் இருந்து எழுதுவதால் இன்னும் சில விடுபட்டு இருக்கலாம்.

1. ஏன் MBA படிக்க விரும்புகிறீர்கள்?

2. இப்போது ஏன்?

3. ஏன் எங்கள் கல்லூரியை தேர்ந்தெடுத்தீர்கள்?

4. இந்த கல்லூரியை தவிர வேறு எந்த கல்லூரிகளுக்கெல்லாம் விண்ணப்பித்து இருக்கிறீர்கள்?

5. அவை அனைத்திலும் இடம் கிடைத்தால் எதை தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

6. உங்கள் ரெஸ்யூமே பற்றி சிறிது விளக்கவும்.

7. உங்கள் கேரியர் இலக்குகள் சிலவற்றை குறிப்பிடவும். ஏன் அவற்றை தேர்ந்தெடுத்தீர்கள் என்பதையும் குறிப்பிடவும்.

8. உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன?

9. அலுவலகத்தில் நீங்கள் சந்தித்த ஒரு சவாலான விஷயம் பற்றி குறிப்பிடவும். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள், அதை எப்படி சமாளித்தீர்கள்?

10. நீங்கள் எப்போதாவது பெரிய தவறு ஒன்றை அலுவலகத்தில் செய்திருக்கிறீர்களா? அதை எப்படி சரி செய்தீர்கள்?

11. நீங்கள் தெளிவின்மையை (ambiguity) எப்படி கையாள்வீர்கள்?

12. உங்கள் மேலாளரிடம் எப்போதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா? அதனை விளக்கவும்.

இயன்ற வரை இது போன்ற கேள்விகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். நேர்முக தேர்வுக்கு குறித்த நேரத்தில் செல்லுங்கள். நன்றாக உடையணித்து கொள்ளுங்கள். தேர்வுக்கு செல்லும் போது விண்ணப்பத்தில் நீங்கள் எழுதிய கட்டுரைகள், உங்களது ரெஸ்யூமே, பள்ளி கல்லூரி மதிப்பெண் பட்டியல் போன்ற அனைத்தையும் இரண்டு மூன்று காப்பிகள் எடுத்து செல்லவும். நேர்முக தேர்வு நடத்துவது ஒரு குழுவாக இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காப்பி கொடுக்க இயலும். தேர்வு முடிந்த பிறகு அவர்களிடம் படிப்பு மற்றும் கல்லூரி குறித்த உங்கள் கேள்விகளை தவறாமல் கேளுங்கள். அதே போல அவர்களின் பெயர், ஃபோன் நம்பர் மற்றும் தொழில் ஆகியவற்றை தவறாமல் குறித்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் உங்களுக்கு இடம் கிடைத்தால் ரேங்கிங் அடிப்படையில் கண்ணை மூடிக் கொண்டு எது முதலில் இருக்கிறதோ அதில் சேர்ந்து விடாதீர்கள். இரண்டு கல்லூரிகளிலும் நடக்கும் வகுப்புகளுக்கு செல்லுங்கள். ஓரிரு நாட்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள். அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் பேசுங்கள். உங்களது தேவையை கூறி அது இந்த கல்லூரியினால் கை கூடுமா என்பதை கேட்டறியுங்கள். அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வாருங்கள்.

இறுதியாக ஒன்று. முயற்சி செய்வது தான் நம் கையில் இருக்கிறது. முடிவு பல நேரங்களில் நமது கையில் இல்லை. அதனால் ஒரு வேளை உங்களுக்கு படிக்க இடம் கிடைக்காவிட்டால் சோர்ந்து விடாதீர்கள். இதை விட வாழ்வில் முக்கியமானவை பல இருக்கின்றன. All the best.

இவன்,
சத்யப்ரியன்