Friday, May 08, 2015

Disgusting - அருவருப்பின் உச்சம்

சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வந்தாலும் வந்தது மும்பையின் திரைத்துறையினருக்கு பித்தம் தலைக்கேறி விட்டது.

அதிலும் குறிப்பாக அபிஜித் பட்டாசார்யா என்ற ஒரு பாடகன் செய்த செயல் அருவருப்பின் உச்சமாக இருக்கிறது. இந்த பரதேசி நாய் தனது ட்விட்டரில் கீழ்கண்டவாறு சொல்லி இருக்கிறான்.

"மும்பையின் சாலைகளும், நடை பாதையும் தூங்கும் இடமா? அப்படி தூங்க வேண்டும் என்றால் எங்காவது கிராமத்திற்கு சென்று எங்கே எந்த வாகனங்களும் உங்களை கொல்ல முடியாதோ அங்கே தூங்க வேண்டியது தானே."

"திரை உலகத்தினருக்கு ஒரு வேண்டுகோள். சல்மானுக்கு ஆதரவு தெரிவியுங்கள். மும்பையின் சாலைகளும், நடை பாதையும் தூங்குவதற்கான இடங்கள் அல்ல. அங்கே தூங்கியது அவர்களின் தவறு. அந்த விபத்து சல்மானின் குற்றமும் அல்ல, மதுவின் குற்றமும் அல்ல."

"சாலைகள் வாகனங்கள் செல்வதற்கும், நாய்களுக்குமானவை. அதில் தூங்கும் மனிதர்களுக்கானவை அல்ல. சல்மான் மீது ஒரு தவறும் இல்லை."


இந்த அறிவு ஜீவியின் கருத்துப்படி அஜ்மல் கசாப் சும்மா சுடத்தான் செய்தான். அது தவறா? அவன் சுடும் போது அவனது குண்டுகளுக்கு முன்னால் மக்களை யார் சென்று நிற்க சொன்னார்கள்? தர்மபுரியில் அதிமுகவினர் சும்மா பேரூந்தைதான் எரித்தார்கள். அது தவறா? அப்படி அவர்கள் எரிக்கும் போது அந்த மாணவிகளை யார் அந்த பேரூந்துக்குள் இருக்க சொன்னார்கள்?

கீழே உள்ளது அந்த நாதாரியின் ட்விட்டர்.


போடாஆஆஆஆஆஆஆஆஆங்ங்ங்ங்ங்ங்க்க்க்க்க்க்க்க்க்................. வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. I think we must really mandate a license to procreate. Genes like Abhijeet’s should not be allowed to thrive or mutate.

நேற்று ஒருவர் ஒரு இணைய தளத்தில் கீழ்கண்ட பின்னூட்டத்தை இட்டிருந்தார். அதனுடன் நான் முழுதும் உடன்படுகிறேன். Those who stand by Salman, must stand in front of his SUV.

Wednesday, May 06, 2015

Avengers: Age of Ultron

கடந்த 2012 ஆம் ஆண்டு பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது The Avengers திரைப்படம். Avengers series என்பது ஆங்கில சூப்பர் ஹீரோ படங்களுக்கெல்லாம் சிகரம் போன்றது. அதை பற்றி தெரியாதவர்களுக்காக சில குறிப்பிட்ட மார்வெல் சூப்பர் ஹீரோக்களை பற்றிய குறிப்புகள் கீழே.

Peter Parker (Spider Man):

நியூயார்க் நகரில் தனது மாமாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பீட்டர் பார்க்கர் தனது பெற்றோர்களை இழந்தவர். அப்பாவியாகவும், நோஞ்சானாகவும் இருக்கும் அவரை ஒரு நாள் ஒரு சிலந்தி கடித்துவிடுகிறது. சிலந்தியின் DNAவும் அவரது DNAவும் ஒன்று சேர்வதால் அவர் ஒரு சூப்பர் ஹுமனாக மாறுகிறார். பல அபூர்வமான சக்திகள் அவருக்கு கிடைக்கின்றன. அப்போது ஒரு திருடனால் அவரது மாமன் இறந்துவிட, நியூயார்க் நகரில் நடக்கும் குற்றங்களை அழித்து குற்றவாளிகளை ஒடுக்க போராட்டத்தில் களம் இறங்குகிறார்.

Tony Stark (Iron Man):

ஸ்டார்க் இன்டஸ்ட்ரீஸ் ஒரு முன்னணி ஆயுத தயாரிப்பு நிறுவனம். அந்நிறுவனத்தின் தலைவர் டோனி ஸ்டார்க். அவர் ஒருமுறை போர்க்களத்தில் தனது நிறுவனம் தயாரித்த தளவாடங்களை ஆய்வு செய்யும் போது ஒரு விபத்தில் சிக்குகிறார். எதிரிகள் அவரை கடத்தி செல்கிறார்கள். அவரையும் இன்னொருவரையும் ஒரு குகையில் அடைத்து வைத்து அவர்களை ஆயுதம் தயாரிக்க சொல்கிறார்கள். ஆனால் இருவரும் ரகசியமாக ஆயுதம் தாங்கிய ஒரு இரும்பு கவசத்தை தயாரிக்கிறார்கள். உண்மையை அறிந்து கொண்ட எதிரிகள் அவர்களை அழிக்க முயல, அந்த போராட்டத்தில் அவருடன் குகையில் இருந்த மற்றொருவர் இறந்துவிட ஆத்திரம் கொண்ட ஸ்டார்க் எதிரிகளை அழித்துவிட்டு நியூயார்க் திரும்புகிறார். அந்த கவசத்தின் உதவி கொண்டு அமெரிக்காவின் எதிரிகளை அழிக்க உறுதி கொள்கிறார்.

Steve Rogers (Captain America):

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவில் மிகவும் நோஞ்சானாக இருக்கும் ஸ்டீவ் ரோஜர்ஸ், அமெரிக்க படையில் சேர்ந்து ஜெர்மானியர்களை எதிர்த்து போர் செய்ய ஆவல் கொள்கிறார். ஆனால் அவர் மிகவும் நோஞ்சானாக இருப்பதால் அவரது விண்ணப்பம் நிராகரிக்க படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ரகசிய மருந்தை கண்டுபிடிக்கிறார்கள். அது ஒருவரது உடலில் செலுத்தப்பட்டால் அவருக்கு என்றும் இளமையும், மித மிஞ்சிய பலமும் கிடைக்கும். அதன் சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறார் ஸ்டீவ் ரோஜர்ஸ்.

அந்த பரிசோதனை முயற்சி வெற்றி பெறுகிறது. ஆனாலும் அந்த மருந்தை கண்டு பிடித்த தலைமை விஞ்ஞானி இறந்துவிடுகிறார். அவரது குறிப்புகள் அழிந்து விடுகின்றன. அதனால் அந்த மருந்தை தொடர்ந்து தயாரிக்கவோ, வேறு யாருக்கும் அந்த மருந்தை செலுத்தவோ இயலாத நிலை ஏற்படுகிறது.

கேப்டன் அமெரிக்காவாக மாறும் ஸ்டீவ் ரோஜர்ஸ் ஜெர்மனி வீரர்களை எதிர்த்து போர் செய்து அமெரிக்காவையும் பிரிட்டனையும் காப்பாற்றுகிறார். அதன் பின்னர் உலகையும் அதற்கு வரும் ஆபத்துகளில் இருந்த காப்பாற்ற உறுதியளிக்கிறார்.

Dr. Bruce Banner (Hulk):

டாக்டர் ப்ரூஸ் பேனர் ஒரு அணு ஆராய்ச்சி விஞ்ஞானி. அவர் ஒருமுறை ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது காமா கதிர்களின் முழு வீச்சில் சிக்கிக்கொள்கிறார். அந்த கதிர் வீச்சின் பாதிப்பால் அவருக்கு எப்போதெல்லாம் அதிக கோபம், உயரிய அழுத்தம், ஆத்திரம் எல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மிகப் பெரிய பச்சை நிற ராட்ச்சஸ உருவமாக மாறி விடுவார். அந்த நிலையில் அவரை யாராலும் தடுக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் இவருக்கும் மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம், இவர் ஹல்க் நிலையில் இல்லாத போது மிகவும் வீக்காக இருப்பார். அடிக்கடி தனது நிலையால் மன அழுத்தத்துக்கு ஆளாகி விடுவார்.

Thor:

மற்ற சூப்பர் ஹீரோக்களை போல இவர் ஒரு பூமியை சேர்ந்த மனிதன் கிடையாது. இவர் பூமிக்கு அப்பால் உள்ள அஸ்கார்ட் என்ற கற்பனை நகரத்தின் இளவரசர். பல அபூர்வ சக்திகள் இருந்தாலும், இளவயதில் தனது சக்திகளை மறந்துவிடுகிறார். அதன் பின்னர் அவருக்கு ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த சுத்தி கிடைக்கிறது. அதை ஒரு பாறையில் அடித்தவுடன் அவருக்கு இடி மற்றும் மின்னல் சக்தி கிடைக்கிறது. அவர் மறந்த தனது பழைய சக்திகளும் அவரது நினைவுக்கு வருகின்றன.

இன்னும் Hawk Eye, Black Widow என்று பல Avengers. யோசித்து பாருங்கள். இவர்கள் எல்லாம் தனித் தனியாக பல எதிரிகளை வீழ்த்தியவர்கள். உலகை பல முறை காப்பாற்றியவர்கள். பல அபூர்வ சக்திகளை கொண்டவர்கள். இவர்கள் எல்லோரும் ஒரே திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? முதலில் Avengers அறிவிப்பு வந்த உடனே தெரிந்து விட்டது. ஒன்று இப்படம் சூப்பர் ஹிட், இல்லையென்றால் பப்படம். இம்மாதிரி படங்களுக்கெல்லாம் சுமாரான வெற்றி சுமாரான தோல்வி என்பதெல்லாம் கிடையாது.

இப்படத்தின் முதல் பாகத்தில் தோரின் வளர்ப்பு சகோதரன் லோகி, தெசராக்ட் என்ற ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த கல்லை அபகரிப்பதற்காக பூமிக்கு வருகிறான். அந்த கல்லை தனது செங்கோலின் உதவி கொண்டு அபகரித்தும் விடுகிறான். அவனை தடுத்து நிறுத்தும் Avengers இடமிருந்து அவனை காப்பாற்றுகிறான் தோர். லோகியின் மனதை மாற்றிவிட முடியும் என்று அவன் நம்புகிறான். ஆனால் லோகியோ அங்கிருந்து தப்புவது மட்டும் அல்லாமல், ஒரு பெரும் படை கொண்டு உலகை அழிக்க முயல்கிறான். Avengers அனைவரும் ஒன்று கூடி அவனை எப்படி அழித்தார்கள் என்பது தான் இப்படத்தின் முதல் பாகம்.

இப்படத்தின் இரண்டாம் பகுதி முதல் பகுதியின் முடிவில் இருந்து தொடங்குகிறது. லோகியுடன் நடந்த போராட்டத்தின் விளைவாக லோகியின் செங்கோல் பூமியில் விழுகிறது. அந்த செங்கோலை வைத்து சொகோவியா வில் உள்ள ஹைட்ரா தளத்தில் வூல்ஃப் கேங்கை சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சியில் ஒரு ஆண் பெண் இரட்டையர்களுக்கு அபூர்வ சக்தி கிடைக்கிறது. அந்த ஆணுக்கு மின்னல் வேகத்தில் நகரும் சக்தி கிடைகிறது. அதனால் அவன் Quick Silver ஆகிறான். அவனது சகோதரிக்கு தனது மனதின் சக்தியால் மற்றவர்களின் மனதை அறியவும், அதனை மாற்றவும், மற்றவர்களின் செயலை கட்டுப்படுத்தவும் தேவையான சக்தி கிடைக்கிறது. அவள் Scarlet Witch ஆகிறாள். இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோர்களை கொன்று தங்களது நகரத்தை அழித்தது ஸ்டார்க்கின் ஆயுதங்கள் தான் என்றும் அதனால் ஸ்டார்க்கை பழிவாங்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். வூல்ஃப் கேங்கை சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரையும் கொண்டு Avengers ஐ கொல்லவும், உலகை வெல்லவும் முயல்கிறார்கள். இதனை அறிந்து கொண்ட Avengers அங்கு வந்து அந்த தளத்தை அழித்து லோகியின் செங்கோலை கைப்பற்றுகிறார்கள்.

இடையில் ஸ்கார்லெட் விட்ச், தனது சக்தியால் டோனி ஸ்டார்க்கின் எண்ணங்களை மாற்றி விடுகிறாள். அந்த செங்கோலை நியூயார்க் நகருக்கு எடுத்து வரும் ஸ்டார்க் அதில் ஒரு அபூர்வ element இருப்பதை அறிகிறார். அதற்கு artificial intelligence அளிக்கும் முயற்சியில் அவர் இறங்குகிறார். அதற்கு பேனரையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். தன்னிடம் முன்னரே உள்ள JARVIS (Just A Rather Very Intelligent System) என்ற ஸிஸ்டத்தின் உதவி கொண்டு அதனை செய்ய முயல்கிறார். அப்போது திடீரென்று சிந்தனை திறன் பெரும் அந்த தனிமம் Ultron ஆக மாறுகிறது. ஜார்விஸை அழிக்கிறது. பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் மனிதர்களை அழித்து இவ்வுலகில் மனித இயந்திரங்களை உலவ விடுவதுதான் என்று நம்புகிறது அல்ட்ரான். செங்கோலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்புகிறது.

மற்ற Avengers ஸ்டார்கின் இந்த செயலை கண்டு கடும் கோபம் கொள்கிறார்கள். மனிதர்களை அழிக்கும் மனித இயந்திரங்களை உருவாக்க அணுகுண்டு வெடித்தாலும் உருகாத வைப்ரேனியம் (கேப்டன் அமெரிக்காவின் கேடயம் இதனால் செய்யப்பட்டது தான்) என்ற உலோகத்தை அடைய ஆப்ரிக்கா செல்கிறது அல்ட்ரான். இதனை அறிந்து கொண்டு அங்கே வரும் Avengers இன் மனதை குழப்புகிறாள் ஸ்கார்லெட் விட்ச். அதன் காரணமாக ஹல்க் சீற்றம் கொண்டு பேரழிவை ஏற்படுத்துகிறது. மற்ற Avengers அனைவரும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். Avengers ஐ கண்டு மக்கள் பயப்பட தொடங்குகிறார்கள். ஹல்க் சம நிலைக்கு திரும்பி பேனராக மாறிய பின்னர், நடந்ததை எண்ணி வருந்துகிறார் பேனர். மேலும் குழப்பத்தை தவிர்க்க வேண்டி அங்கிருந்து சென்றுவிட விரும்புகிறார். அப்போது அங்கு வரும் ஃபூரி அல்ட்ரானை வெல்ல அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

அல்ட்ரான் வைப்ரேனியத்தால் ஆன எலும்புகளாலும், ஸிந்தெடிக் டிஷ்யூ கொண்டும் தனக்கு ஒரு உடம்பை தயாரிக்க முயல்கிறது. உடல் தயாரானதும் அந்த உடலில் அல்ட்ரான் தனது அறிவை புகுத்த முயலும் போது ஸ்கார்லெட் விட்ச் தனது சக்தியால் அல்ட்ரான் உலகை அழிக்க முயல்கிறது என்பதை அறிகிறாள். அவ்வுடலை அங்கிருந்து எடுத்து ஸ்டார்க்கிடம் வந்து ஒப்படைக்கிறாள். ஸ்டார்க் இந்த உடலில் அல்ட்ரானின் தாக்குதலில் இருந்து தப்பிய ஜார்விஸை செலுத்துகிறார். தோர் அதற்கு உயிரளிக்கிறார். விஷன் உறுவாகிறது. இதனால் கடும் கோபம் கொண்ட அல்ட்ரானின் இயந்திரப் படை உலகை தாக்க தொடங்குகிறது. பழைய Avengers உடன் புதிதாக விஷன், க்விக் ஸில்வர், ஸ்கார்லெட் விட்ச் ஆகியோர் ஒன்று சேர்ந்து எப்படி அல்ட்ரானை வீழ்த்துகிறார்கள், முடிவில் என்ன ஆகிறது என்பது தான் இந்த இரண்டாம் பாகம்.

படத்தில் சிறப்பு திரைக்கதை. இவ்வளவு பாத்திரங்கள் இருந்தாலும் ஒரு நேர் கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை. சண்டை காட்சிகளில் அட்டகாசமாக இருக்கிறது ஒளி மற்றும் ஒலிப்பதிவு. குறிப்பாக க்விக் சில்வர் காட்சிகள் அட்டகாசம். சிறிய சிறிய காட்சிகள் அழகாக அமைத்திருக்கிறார்கள். உதாரணமாக படம் நெடுகிலும் வரும் "Watch your language." காமெடி, தோரின் சுத்தியை தூக்க மற்றவர்கள் முயலும் காட்சி, அதையே ஒரு சண்டை காட்சியில் தோர் தூக்கி வீச, அதிலிருந்து தப்பிக்கும் க்விக் ஸில்வர், அதை பிடிக்க முயன்று அதை தூக்க முடியாமல் அதனுடன் சேர்த்து தூக்கி வீசப்படும் காட்சி, க்ளைமாக்ஸில் விஷன் ஒரே கையால் அதனை தூக்கி தோரிடம் கொடுக்கும் காட்சி, ப்ளாக் விடோ "Big guy!" என்று ஹல்கை கூப்பிடும் காட்சிகள், அவர்களுக்கிடையே இருக்கும் மெல்லிய காதல், என்று பல இடங்களில் சுவாரசியதை சேர்த்திருக்கிறார்கள். போரை அடிப்படையாக கொண்ட படம் என்பதாலும், முதலிலேயே நாம் எல்லோரும் திரும்ப மாட்டோம் என்று டோனி ஸ்டார்க் குறிப்பிட்டு விட்டதாலும் அவசியம் யாராவது ஒருவர் இறப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் யார் அது என்பது தெரியாததால் சுவாரசியமாக இருந்தது. ஒரு நகரமே வானத்தில் மிதப்பது அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.

பெரிய குறை என்று பார்த்தால் சுவாரசியமே இல்லாத கடைசி 30 நிமிடங்கள். விஷனும், ஸ்கார்லெட் விட்சும், க்விக் ஸில்வரும் Avengers டீமில் சேர்ந்த பிறகு ஒரு சுவாரசியமும் இல்லை. சூப்பர் ஸ்டார் படத்தில் பவர் ஸ்டார் வில்லனாக இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது. அல்ட்ரானும் கூட பெரிதாக எதுவும் செய்யவில்லை. உலகில் உள்ள அனைத்து கணினிகளையும் இயக்கும் சக்தி வாய்ந்த ஒன்று இவ்வளவு மொக்கையாக உலகை அழிக்க முயல்வது சிரிப்பாக இருந்தது. மற்றபடி Marvel Comics ரசிகர்களுக்கு இப்படம் சரியான பொழுதுபோக்கு. படத்தின் இறுதியில் ஸ்டார்க் மற்றும் பேனர் இருவருக்கும் விடை கொடுத்து அனுப்பி விட்டார்கள். தோர் மீண்டும் வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால் அதனால் பாதகமில்லை. அடுத்த பகுதியில் ஸ்பைடர் மேன் வருகிறார். ஆன்ட் மேன் அதற்கடுத்த பகுதியில் வரக்கூடும் என்று எதிர் பார்க்கிறார்கள். அதனால் ரசிகர்களுக்கு நல்ல வேட்டை இருக்கிறது.

Saturday, May 02, 2015

உத்தம வில்லன் - மரணத்தை வென்றவன்

தமிழ் திரைத்துறையில் முடி சூடா மன்னனாக விளங்கும் நாயகன் மனோரஞ்சன். அவனுக்கு ஒரே நாளில் அவனது வாழ்வை திசை திருப்பும் இரண்டு செய்திகள் வந்தடைகின்றன. ஒன்று, அவன் இன்னும் சில நாட்களில் மூளையில் இருக்கும் ஒரு கட்டியினால் இறப்பான் என்பது. மற்றொன்று, அவனது இளவயது காதலின் காரணமாக அவனுக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பது.

அதுவரை ஈகோ பிடித்தவனாக இருக்கும் நாயகன் அதன் பின்னர் தனது வாழ்வை அசை போடுகிறான். தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்தினருக்கு அவன் செய்ய மறுத்தவைகளை செய்ய முயல்கிறான். திரையுலகில் தன்னை அறிமுகம் செய்த தனது குருநாதரின் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடிக்க ஆசைப் படுகிறான்.

இது இரண்டையும் எவ்வாறு செய்து முடிக்கிறான் அல்லது முடிக்காமல் போகிறான் என்பது தான் கதை. இப்படத்தின் திரைக்கதை இரண்டு பாதைகளில் பயணிக்கிறது. ஒன்று அவன் நடிக்கும் படம். இது கடந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சாகாவரம் பெற்றுவிட்டதாக நம்பப்படும் உத்தமன் என்பவனின் நகைச்சுவை கதை.

மற்றொன்று சமகாலத்தில் அவன் எதிர் கொள்ளும் உறவுச்சிக்கல்கள். இது பல பரிமாணங்களில் சொல்லப்படுகிறது. மனோரஞ்சனுக்கும் அவனது மகளுக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது மகனுக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது மனைவிக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது காதலிக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது குருநாதருக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது மாமனாருக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல் என்று பல திசைகளில் பயணிக்கிறது.

படிக்கும் பொழுது சிறிது ஆயாசமாக இருந்தாலும், திரைக்கதை நம்மை பார்க்கும் போது கட்டிப்போட்டு விடுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் இதில் எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு சொல்லும் முயற்சியில் ஈடுபடாமல் வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறித்தியதை தான்.

நடிகர்களில் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் முதலில் MS பாஸ்கர். என்னா நடிப்பு சார்? குறிப்பாக கமலிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியாகட்டும், அவர் தன்னிடம் தனது நிலையை சொல்லாமல் இருந்துவிட்டாரே என்று ஆதங்கப்படும் காட்சியாகட்டும், மனிதர் அமர்களப்படுத்தி விட்டார்.

அடுத்ததாக ஆன்ட்ரியா. கமலின் மீதுள்ள காதலையும், அதனை வெளி உலகுக்கு சொல்ல இயலாத தனது நிலையையும், அவரது உடல் நிலை கண்டு மறுகுவதும், அட்டகாசம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கமலிடம் ஊர்வசி அவரது கடந்த கால காதலை பற்றி கேட்கும் போது அவர் கொடுக்கும் expressions, simply out of the world.

அடுத்தது கமலின் மகன். யார் அது என்று தெரியவில்லை. முதலில் கமல் மீது அவன் காட்டும் வெறுப்பும், பின்னர் கமல் தனது உடல்நிலையை பற்றி அவனிடம் கூறும் அந்த கட்டத்தில் அவர் வெளிக்காடும் பாசமும், கமலின் பழைய உறவின் தொடர்ச்சியாக வரும் பார்வதியை சகோதரியாக கட்டித்தழுவும் நேசமும் மிகவும் அருமை.

அடுத்தது பார்வதி மேனன். கமலின் மகளாக வருகிறார். பார்வதியின் நடிப்புக்கு பூ மற்றும் மரியான் இரண்டுமே சாட்சி. இதிலும் அட்டகாசப் படுத்தி இருக்கிறார். மற்ற நடிகர்கள் ஊர்வசி, K. விஷ்வநாத், பாலசந்தர், ஜெயராம், நாசர் அனைவரும் அவர்களுக்கான திரையிடத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இறுதியாக கமல். கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்பதெல்லாம் சொல்ல தேவையில்லாத ஒன்று. அவர் சரியாக நடிக்காவிட்டால் தான் அதை சொல்ல வேண்டும். தனது குழந்தைகளிடம் உரையாடும் போது குற்ற உணர்ச்சியில் தத்தளிக்கும் தந்தையாகவும், ஆண்ட்ரியாவுடன் உரையாடும் போது காதலனாகவும், ஊர்வசியுடன் உரையாடும் போது காதலே இல்லாத ஆனால் தனது மகனின் தாயை நேசிக்கும் கணவனாகவும், இப்படி ஒவ்வொரு காட்சியிலும் மொழியால், உடலசைவால், பார்வையால் வேறுபாடு காட்டி அசத்திவிட்டார். என்னை போன்ற அக்மார்க் கமல் ரசிகர்களுக்கு இது ஒரு ஃபுல் மீல்ஸ்.

படத்தில் அடுத்தபடியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டியது வசனம். "இது தான் கதையா?" என்று ஏளனமாக கேட்கும் பாலசந்தரிடம் "இது கதை இல்லை சார், இது தான் காரணம்." என்பதாகட்டும், "என் சொத்தை விட நான் அதிகமா நேசிப்பது எனது டிரைவர், அவரையே தருகிறேன்." என்பதாகட்டும், "என்னோட காதலால் என்னோட கவுரவத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது" என்று ஆன்ட்ரியா கமலிடம் சொல்லும் காட்சியாகட்டும், "ஒரு அருமையான ஸ்க்ரீன்ப்ளே எழுதி எங்கப்பா யாருன்னு இந்த கோடம்பக்கத்துக்கு காட்டனும்" என்று கமலின் மகன் கூறும் வசனமாகட்டும், கமலும் அவரது காதலியும் ஒருவருக்கொருவர் எழுதிக்கொள்ளும் கடிதங்களாகட்டும், அனைத்தும் உணர்ச்சிக் குவியல்கள்.

கிப்ரானின் பாடல்களை விட என்னை அதிகம் கவர்ந்தது அவரது பின்னணி இசை. உத்தமனின் வாழ்க்கையை சொல்லும் பகுதிகளில் வேறு மாதிரியும், மனோரஞ்சனின் வாழ்க்கையை சொல்லும் பகுதிகளில் வேறு மாதிரியும் இசையமைத்திருக்கிறார். குறிப்பாக பல இடங்களில் கமலின் நடிப்பின் மீதுள்ள நம்பிக்கையில் அமைதியாக இருக்கிறது அவரது இசை. அடுத்ததாக நடனம். முதல் பாடலில் கெட்ட ஆட்டம் போடும் கமலுக்கு 60 வயது என்றால் எவன் நம்புவான்.

படத்தில் குறைகளே இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறது. மனோரஞ்சனின் வாழ்க்கை ஒரு உணர்ச்சிக் குவியலாக இருப்பதால், உத்தமனின் வாழ்க்கையில் இருக்கும் ப்ளாக் ஹியூமர் சரியாக எடுபடவில்லை. அதே போல உத்தமனின் வாழ்க்கை பகுதிகளை சிறிது குறைத்திருக்கலாம். க்ராஃபிக்ஸ் புலி படு சொதப்பல். பட்ஜெட் காரணமா என்று தெரியவில்லை. மனோரஞ்சனின் வாழ்க்கை பகுதியில் அட்டகாசமாக இருக்கிறது ஒளிப்பதிவு. ஆனால் உத்தமனின் வாழ்க்கை பகுதியில் சில இடங்களில் டல்லாகவும், சில இடங்களில் பளிச் என்றும் இருக்கிறது லைட்டிங். ஒருவேளை எனக்கு தான் அப்படி தெரிந்ததோ என்னவோ.

இறுதியாக, இப்படம் சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். படம் பார்க்கும் அனைவரையும் "எவ்வாறு மரணத்தை வெல்வது?" என்று இது சிந்திக்க வைக்கும். ஒரு கலைஞன் தனது கலை படைப்புகளால் மரணத்தை வெல்லலாம். ஒரு தலைவன் தனது தொண்டுகளினால் மரணத்தை வெல்லலாம். ஆனால் நம் போன்ற சாமானியர்கள் என்ன செய்ய முடியும்? நாம் மரணித்த பிறகு நமது உறவுகளிடம் நாம் விட்டு செல்வது நம்மை பற்றிய நினைவுகளையே. அந்த நினைவுகளை செம்மைப்படுத்தினாலே நம்மால் எளிதில் மரணத்தை வெல்ல முடியும் என்பதையே இப்படம் நமக்கு உணர்த்துகிறது.

Thank you Kamal for another wonderful experience.