Tuesday, January 18, 2011

சொந்தக் கதை

அமெரிக்கா வந்து இன்றுடன் சரியாக ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த மாதம் எனது தந்தைக்கு எழுபதாவது பிறந்த தினம் வருகிறது. விமரிசையாக கொண்டாடுகிறோம். குடும்பத்துடன் செல்கிறேன். எனது இரு சகோதரர்களையும் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கப் போகிறேன்.

அமெரிக்கா வந்த பிறகு நான் இந்தியா செல்லும் முதல் பயணம். வரும் பொழுது இருவராக வந்தோம். இப்பொழுது மூவராக போகிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறது.

இருந்தாலும் பிரசவம், குழந்தை பேறு என்று கடந்த ஓராண்டுகளாக பல முறை விடுப்பெடுத்தாகி விட்டது. அதனால் இம்முறை பயணம் வெரும் 10 நாட்களே.

அதில் சென்னை, மும்பை, ஹீரடி, பெங்களூர், புட்டபர்த்தி, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் என்று பல இடங்களுக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. விமான நிலையத்திலேயே இம்முறை பொழுதை கழிப்போம் என்று நினைக்கிறேன். கை குழந்தையுடன் இவ்வளவு இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாம் என்றைக்கு பெரியவர்கள் சொல்லை கேட்டிருக்கிறோம். அதனால் விமான டிக்கெட் பதிவு செய்தாகி விட்டது. மூன்று நாட்களே திருச்சியில் இருப்பது போல வருகிறது.

அடுத்த முறையாவது நான்கு வாரங்களுக்கு குறையாமல் செல்ல வேண்டும். பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்ல வேண்டும். சென்னையிலும் பெங்களூரிலும் உள்ள அனைத்து நண்பர்களையும் பார்க்க வேண்டும். இம்முறை அதற்கு அவகாசம் கிடைக்காது.

Monty யை (இவனை பற்றி உங்களுக்கு தெரியாது. பின்னர் சொல்கிறேன்) பத்து நாட்கள் வெளியில் விட வேண்டும். அதுதான் கஷ்டமாக உள்ளது. அவனுக்கு இதுவே முதல் முறை. அழாமல் நன்றாக சாப்பிட வேண்டும். அவனது நலத்தை விசாரிப்பதற்கும், அவனுடன் பேசுவதற்கும் இன்டர்னேஷனல் ரோமிங் வசதியினை செய்திருக்கிறோம். பயணம் முடிந்து ஊர் திரும்பும் வரை Monty யின் நினைவாகவே இருக்கும்.

Friday, December 31, 2010

2010 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்


1. தமிழ் படம் (29-01-2010)

படத்தை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. முன்னரே சொன்னது தான். அவர் இவர் சுவர் என்று யாரை பற்றியும் கவலையில்லாமல் சகட்டு மேனிக்கு ஓட்டு ஒட்டு என்று ஓட்டி இருக்கிறார்கள். ஒரு முறை பார்க்கலாம். இது போன்ற முயற்சி தமிழில் இதுவே முதல் முறை. பாட்ஷா ரஜினி ரகுவரன் காட்சிக்கு மட்டுமே கொடுத்த காசு தீர்ந்து விட்டது. It’s a spoof with no goof.

2. விண்ணை தாண்டி வருவாயா? (26-02-2010)

சமீபத்தில் நான் பார்த்த மனதை நெருடும் காதல் கதை. கௌதம் மேணன் படங்களில் உள்ள காதல் காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மின்னலே போன்ற காதல் படத்தில் பட்டும் அல்ல, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற ஆக்க்ஷன் படங்களில் கூட காதல் காட்சிகள் அருமையாக இருக்கும். ரெஹ்மானின் அருமையான பாடல்கள், சிம்பு மற்றும் த்ரிஷாவின் நடிப்பு, அவர்களுக்கிடையே உள்ள கெமிஸ்ட்ரி, ஒளிப்பதிவு, வசனங்கள் அனைத்தும் அருமை. மொத்தத்தில் அருமையான ஒரு படம். Romance never lets you down.

3. சிங்கம் (28-05-2010)

பக்கா மசாலா வேட்டை. சூர்யா சரியான தேர்வு. முதலில் நடிப்பதாக சொன்ன விஜய் எவ்வளவு பொருந்தி இருப்பார் என்று தெரியவில்லை. A role that fit him to a 'T'. சாமியைவிட எனக்கு அதிகம் பிடித்திருந்தது. சன் பிக்சர்ஸிற்கும் சூர்யாவிற்கும் நல்ல பொருத்தம் என்று நினைக்கிறேன். அயன் போலவே இதுவும் மிகப் பெரிய வெற்றி.

4. நான் மஹான் அல்ல (20-08-2010)

எனக்கு மிகவும் பிடித்திருந்த மற்றொரு படம். கார்த்தியின் நடிப்பு நன்றாக இருந்தது. எனக்கு இதில் தான் அவர் பருத்திவீரனின் சாயலில் இருந்து சிறிது விலகியதாக தோன்றியது. வில்லன்களாக நடித்திருந்த அந்த நான்கு சிறுவர்களும் அபாரம். காஜல் அகர்வால் வழக்கம் போலவே கொள்ளை அழகு. சண்டை காட்சிகளை படமாக்கிய விதமும், இறுதிக் காட்சியும் அபாரம். He isn’t a saint or a sinner always. He is resilient.

5. பாஸ் என்கிற பாஸ்கரன் (10-09-2010)

சிவா மனசுல சக்தி பார்த்ததில் இருந்தே எனக்கு இயக்குனர் ராஜேஷ் அவர்களை மிகவும் பிடித்து போனது. காமெடி படம் எடுப்பது தான் மிகவும் கஷ்டமான வேலை. அதை எளிதாக செய்கிறார் இவர். அதிலும் குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சியையே சிறிதும் முகத்தில் காட்டாத ஆர்யாவினை கொண்டு இப்படி ஒரு படம் கொடுத்ததற்காக அவருக்கு நன்றிகள். படத்தின் முதுகெலும்பு சந்தானம் என்றால் மிகையில்லை. Everything’s right about this comic caper.

6. எந்திரன் (01-10-2010)

படத்தை பற்றி புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி என்று சொல்கிறார்கள். This is my obvious pick of the litter.

7. ரத்த சரித்திரம் - 1 (22-10-2010)

The master is back with a bang. ராம் கோபால் வர்மாவின் பெட்டகத்திலிருந்து வந்திருக்கும் ஒரு ஆக்க்ஷன் த்ரில்லர். மணிரத்ணம் போன்றவர்கள் இவரை பார்த்து உண்மை சம்பவங்களுக்கு எப்படி திரைக்கதை அமைப்பது என்று பாடம் படிக்கலாம். படம் பார்த்ததிலிருந்து புக்கா ரெட்டியாக நடித்த அபிமண்யூ சிங்கை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

8. ஈசன் (17-12-2010)

மிகவும் எதிர் பார்த்திருந்த சசிகுமார், சமுத்திரக்கனியின் கூட்டணியில் உருவான மூன்றாவது படம். வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அருமையான த்ரில்லர். தமிழக அரசியலில் அதிகாரிகளிடையே லாபியிங் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். A.L. அழகப்பனின் நடிப்பு மிகவும் அருமை. A bit disillusioned yet a good movie.

Sunday, November 21, 2010

பொடிமாஸ் - 11/21/2010

வர வர "டீலா? நோ டீலா?" நிகழ்ச்சி எரிச்சலை கிளப்புகிறது. ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் வந்து ஒப்பாரி வைக்கிறார். நிச்சயம் நிகழ்ச்சி நடத்துபவர்கள் அதனை ஊக்குவிக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. இம்மாதிரி நிகழ்ச்சிகளில் வந்து அழுது TRP யை உயர்த்தும் உத்தியை முதலில் தொடங்கியது சன் டிவியின் அரட்டை அரங்கம் தான் என்று நினைக்கிறேன். யாருக்கு தான் வாழ்க்கையில் கஷ்டம் இல்லை? ஆனால் அதனை முன் பின் தெரியாதவர்களிடம் கூறி ஒப்பாரி வைப்பது அநாகரீகத்தின் உச்ச கட்டம். அதுவும் தொலைக்காட்சியில் பலர் பார்க்க அதை செய்வது மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது. அதுவும் நிகழ்ச்சி நடத்தும் ரிஷி பங்கேற்பாளர்களை தொட்டு, தடவி பேசுவது அதை விட அதிகம் எரிச்சல் அடைய செய்கிறது. வெளிநாட்டு நிகழ்ச்சிகளின் கருவை காப்பி அடிக்கும் இவர்கள் அங்கு நிகழ்ச்சி நடத்தும் முறையையும், நடத்துபவர்களின் நடத்தையையும் சேர்த்து காப்பி அடித்தால் நன்றாக இருக்கும்.





ஒரு வழியாக 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் கடந்த மாதம் 14 ஆம் தேதியுடன் நன்கு நடந்து முடிந்தன. இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி மற்றும் 36 பவழ பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதே போன்ற ஒரு அணியை நாம் ஒலிம்பிக் போடிகளுக்கு தயார் செய்தால் குறைந்த பட்சம் 10 பதக்கங்களாவது வாங்குவது உறுதி.



வழக்கம் போலவே இதிலும் பல கோடி ரூபாய் ஊழலும் முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. வழக்கம் போலவே CBI விசாரனை மேற்கொள்ளும். வழக்கம் போலவே குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள். என்னை கேட்டால் விசாரனை விசாரனை என்று அதற்கு அநாவசியமாக அரசு பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக லஞ்சத்தையும், ஊழலையும் சட்டபூர்வமாக்கி விடலாம். முதலில் அரசுக்கு அதனால் அதிக வருமான வரி கிடைக்கும். இரண்டாவது பணம் வெளி நாடுகளுக்கு போகாமல் நம் நாட்டிலேயே இருக்கும். மூன்றாவது அப்பணம் இங்கே பயமின்றி செலவு செய்யப் படுவதினால் நாட்டின் பொருளாதாரமும் கூடும். லஞ்ச ஒழிப்பு சட்டம் இருப்பதனால் இப்பொழுது நாட்டில் பாலாறும் தேனாறுமா ஓடுகிறது? A little bit of sarcasm adds spice to the life. Won’t it add to the constitution?



சென்ற வாரம் இங்கே இருக்கும் ஒரு இந்திய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு பல இடங்களுக்கு சென்று கடைசியாக "100 கோடி மக்கள் இருக்கும் இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு தங்கத்திற்கு முக்குகிறது" என்ற அந்நியன் வசனத்தில் வந்து முடிந்தது. கடந்த ஒலிம்பிக்கில் எட்டு தங்க பதக்கங்களை வாங்கிய அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவின் கலோரிகள் எவ்வளவு தெரியுமா? சுமார் 12000 கலோரிகள். ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் உணவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஆறு சராசரி மனிதர்கள் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவினை இவர் ஒருவர் மட்டுமே சாப்பிடுகிறார். அவர் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவு கீழே உள்ளது பாருங்கள்.

காலை: முட்டை, சீஸ், லெட்டூஸ், தக்காளி, வெங்காயம், மேயோ சேர்த்த சான்ட்விச்கள் மூன்று. ஐந்து முட்டை ஆம்லெட் ஒன்று. சாக்லேட் சிப்கள் கலந்த பான்கேக் மூன்று. ஃபிரென்ச் டோஸ்ட் மூன்று. இரண்டு கப் காபி.

மதியம்: ஒரு பவுண்டு பாஸ்தா. ஹாம், சீஸ், மேயோ சேர்த்த பெரிய சான்ட்விச்கள் இரண்டு. சுமார் 1000 கலோரி எனர்ஜி ட்ரின்க்குகள்.

இரவு: ஒரு பவுண்டு பாஸ்தா. ஒரு பெரிய சைஸ் சீஸ் பீசா. சுமார் 1000 கலோரி எனர்ஜி ட்ரின்க்குகள்.

யோசித்து பாருங்கள். இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களில் எவ்வளவு மக்களால் இப்படி தினமும் சாப்பிட முடியும்?



"இளைய நிலா" ராஜாவின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சில நேரங்களில் எனது ஐபாடில் ஷஃப்புலாகி பாடல்கள் வரும் பொழுது அந்தி மழையையும், பணி விழும் மலர்வனத்தையும் ஸ்கிப் செய்திருக்கிறேன். ஆனால் என் நினைவில் இளைய நிலாவை ஸ்கிப் செய்ததே கிடையாது. பாடல் வந்து விட்டால் முழு பாடலையும் கேட்டு விட்டுத்தான் அடுத்த வேலை. அதிலும் இடையே வரும் அந்த ஃப்ளூட் இன்ட்ரலூட் அட்டகாசம். கேட்கும் பொழுதே மனம் சொக்கும். ராஜாவால் மட்டுமே அப்படி ஒரு இசையை தர முடியும். கோல்டன் க்ளோப்களுக்கும், ஆஸ்கார்களுக்கும், க்ராமிக்களுக்கும் பின்னரும் கூட நான் ராஜா ராஜா என்று தொண்டை கிழிய கத்துவது இது போன்ற இசைகளுக்காகத்தான்.

கீழே அதன் வீடியோ இருக்கிறது. நான் சொன்ன ஃப்ளூட் இன்ட்ரலூட் 1:12 இல் தொடங்கி இருந்து 1:22 வரை இந்த வீடியோவில் வருகிறது. பார்த்து, கேட்டு மகிழுங்கள்.


Saturday, November 20, 2010

என்னை கவர்ந்த அனிமேஷன் படங்கள்

1. Spongebob Squarepants Movie

Spongebob வசிக்கும் பிகினி பாட்டத்தில், King Neptune னின் கிரீடம் காணாமல் போய்விடுகிறது. பழி Spongebob ன் முதலாளி Mr. Krabs மீது விழுகிறது. இதை திட்டமிட்டு செயல் படுத்தியது Mr. Krabs ன் எதிரி Plankton. தொலைந்த கிரீடத்தை கண்டு பிடித்து Mr. Krabs ஐ மரண தண்டனையிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு நமது நாயகனுக்கு வருகிறது. அதுவும் அதை ஆறு நாட்களுக்குள் செய்ய வேண்டும். நமது நாயகன் அதை செய்து முடித்தானா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

2. Monsters, Inc.

Monstropolis என்ற நகரத்தில் முழுதும் மான்ஸ்டர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இருப்பது மான்ஸ்டர்களுக்கான உலகத்தில். அவர்களுக்கான மின்சாரத்தை வழங்குவது Monsters, Inc. என்ற நிறுவனம். கதவுகளின் வழியாக மனிதர்கள் வாழும் உலகுக்கு வந்து குழந்தைகளின் அறைக்குள் நுழைந்து அவர்களை பயமுறுத்தி அதிலிருந்து மின்சாரம் எடுக்கிறார்கள் அவர்கள். ஆனால் அவர்களுக்கு மனிதர்கள் என்றால் பயம். அதனால் மனிதர்களையோ, மனிதர்கள் உபயோகிக்கும் பொருட்களையோ தொடவே மாட்டார்கள். அந்த நிறுவனத்தில் வேலை செய்பவன் நமது நாயகன் Sulley. அந்த நிறுவனத்தில் வேலை செய்பவன் நமது நாயகன் Randall. Sulley யை அழிக்கும் நேரத்திற்காக காத்திருப்பவன்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் Sulley மனித உலகுக்கு வந்து திரும்பும் பொழுது அவனுடன் ஒரு பெண் குழந்தையும் மான்ஸ்டர்களின் உலகுக்கு வந்து விடுகிறது. இதை முதலில் அறிந்து Sulley பயப்படுகிறான். பின்னர் அக்குழந்தையிடம் அன்பு கொண்டு அதனை காப்பாற்றுவதற்காக பாதுகாத்து மீண்டும் மனித உலகுக்கு அனுப்ப முயல்கிறான். அவனது முயற்சிகள் தோல்வி அடைகிறது. இடையில் Randall அதனை அறிந்து இதை வைத்தே Sulley ஐ அழிக்க முயல முடிவு என்ன? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

3. Finding Nemo

Marlin மற்றும் அவனது மனைவி Coral இருவரும் தங்களின் வாரிசுகள் பிறப்பதற்காக தங்களின் புது இல்லத்தில் காத்திருக்கிறார்கள். அப்பொழுது ஒரு பெரிய சுறா வந்து Coral மற்றும் அவர்களது நூற்றுக்கணக்கான முட்டைகள் அனைத்தையும் சாப்பிட்டு விடுகிறது. மிஞ்சியது Marlin மற்றும் ஒரே ஒரு முட்டை. அந்த முட்டையில் பிறந்த தனது மகனுக்கு Nemo என்று பெயரிடுகிறான் Marlin. தனக்கு முன் ஏற்பட்ட அனுபவத்தால் Nemo வை படு ஜாக்கிரதையாக வளர்க்கிறான் Marlin. இது Nemo விற்கு பிடிக்க வில்லை.

ஒரு நாள் தனது தந்தையின் பேச்சை மீறி கடலின் மேற்தளத்திற்கு செல்ல முயலும் Nemo வலையில் சிக்கிக் கொள்கிறான். Marlin னுக்கு ஒரே ஒரு துப்பு தான் கிடைகிறது. அது Nemo சென்றது Sydney என்பது தான். உடனே Nemo வை தேடி Sydney செல்கிறான் Marlin. அவன் Nemo வை கண்டு பிடித்தானா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

4. Madagaskar

நியூ யார்க் விலங்கியல் பூங்காவில் இருந்து நாஙு விலங்குகள் தப்பி செல்கின்றன. அவை Marty (வரிக் குதிரை), Alex (சிங்கம்), Malman (ஒட்டகச் சிவிங்கி) மற்றும் Gloria (நீர் யானை). இவைகளுடன் சில பெங்குயின்களும் தப்பி செல்கின்றன.வழியில் கப்பலில் ஏற்படும் சண்டையினால் நமது நாயகர்கள் நால்வரும் மடகாஸ்கரில் கரை ஒதுங்குகிறார்கள்.

அங்கு வந்த ஓரிரு நட்களில் Alex பசியினாலும் தனது இயற்கை குணத்தினாலும், Marty யை கொன்று சாப்பிட முயற்சிக்க, மற்ற விலங்குகள் எல்லாம் சேர்ந்து Alex ஐ ஒதுக்குகிறார்கள். Alex உம் தனது குறை அறிந்து காட்டின் வேறு பகுதிக்கு ஒதுங்கி செல்கிறான். அப்பொழுது Fossa என்ற ஒரு வகை விலங்கு கூட்டங்களால் நமது நாயகர்களுக்கு ஆபத்து வர, Alex வந்தானா?, அவர்களை காப்பாற்றினானா?, நமது நாயகர்கள் மீண்டும் நியூ யார்க் சென்றார்களா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

6. Robots

Rodney ஒரு இளம் ரோபோ. அவனது தந்தை Herb. தாயார் Lydia. தான் ஒரு பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற கனவுடன் ரோபோ நகரத்திற்கு வருகிறான். அவன் தனது வழிகாட்டியாக நினைப்பது Bigweld என்ற பெரிய விஞ்ஞானியை. வந்த பிறகு தான் தெரிகிறது BigWeld அவர்களது நிறுவனத்தை Rachet மற்றும் அவனது தாய் Gasket இருவரும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அவர்களுக்கு பணம் சம்பாதிப்பதே குறிக்கோள். பழைய ரோபோக்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிப்பதோ இல்லை அவைகளை பழுது பார்ப்பதோ பணம் சம்பாதிக்க தடையாக இருப்பதால் அதனை நிறுத்தி விடுகிறார்கள் அவர்கள். தட்டி கேட்பவர்களை கொன்று விடுகிறார்கள்.

Rodney Bigweld ஐ சந்திக்க பெரு முயற்சி செய்து முடியாமல் போகவே அவனே பழைய ரோபோக்களை பழுது பார்க்க தொடங்குகிறான். இதனால் கோபம் கொண்ட Gasket அவனை கொல்ல முயற்சி செய்கிறாள். இடையே Herb உடல் நிலை சரியில்லாமல் போகவே அவருக்கு உதிரி பாகங்கள் தேவை படுகிறது. அதை Bigweld ஆல் மட்டுமே தயார் செய்ய முடியும்.

Roodney Bigweld ஐ சந்தித்தானா?, Rachet மற்றும் Gasket தண்டிக்கப்பட்டார்களா?, Herb காப்பாற்றப்பட்டாரா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

6. Toy Story

1995 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் அனிமேஷன் படங்களுக்கெல்லாம் தந்தை. முதன் முதலில் CGI டெக்னாலஜியினால் உருவாக்கப்பட்ட முழு நீள திரைப்படம் இதுவே.

Woody ஒரு கௌபாய் பொம்மை. அதை வைத்திருப்பவன் Davis. அந்த வருடம் பிறந்த நாளில் Davis க்கு Buzz என்ற ஒரு பொம்மை பரிசாக கிடைக்கிறது. அது Davis க்கு மிகவும் பிடித்து போகிறது. அது வரை Davisக்கு பிடித்தமான பொம்மையாக இருந்த Woody இதை கண்டு கோபம் கொள்கிறான். ஒரு நாள் அவர்கள் வெளியே செல்லும் பொழுது Woody யும், Buzz உம் சண்டை போட்டுக் கொண்டு காரிலிருந்து விழுந்து விடுகிறார்கள். அவர்களை Philips என்ற சிறுவன் எடுத்துக் கொள்கிறான். அவனுக்கு பொம்மைகளை உடைத்து, கொல்வது என்றால் மிகவும் பிடிக்கும். நமது நாயகர்கள் இருவரையும் கூட கொல்வதற்கு முயற்சி செய்கிறான்.

அதே நேரத்தில் Davis தனது பெற்றோர்களுடன் வேறு ஒரு ஊருக்கு செல்ல தயாராகிறான். தான் மிகவும் நேசித்த இரு பொம்மைகளையும் காணாமல் வருத்தத்தில் இருக்கிறான் அவன்.

நமது நாயகர்கள் Philips இடம் இருந்து தப்பித்தார்களா?, Davis ஊருக்கு செல்வதற்கு முன்னர் அவனிடம் வந்து சேர்ந்தார்களா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Sunday, October 10, 2010

எந்திரன் (Robo)



சூப்பர் ஸ்டாரின் படம் வெளிவரும் நாள் எல்லாம் நமக்கு தீபாவளி தான். அவரின் ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு புதுமையான அனுபவம். அமெரிக்கா வந்து முதலில் நான் பார்த்த அவரின் படம் சிவாஜி. பெரும் ஜனக் கூட்டம். அவ்வளவு கூட்டத்தை அமெரிக்காவில் நான் பார்த்ததே கிடையாது. பல பேர் சிவாஜி படம் போட்ட டி-ஷர்டுடன் வந்திருந்தார்கள். தமிழர்கள் என்றில்லை, தெலுங்கு தேசத்தவர்களுக்கும் தலைவரின் படம் வந்தால் பெரு மகிழ்ச்சி. அவர்களும் விருப்பத்துடன் சென்று பார்ப்பார்கள்.

இப்பொழுது எந்திரனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நெடு நாட்கள் காத்திருந்து படம் வெளி வந்த உடன் பார்க்க முடியாமல் நேற்று தான் பார்க்க முடிந்தது. அட்டகாசமான படம். படம் நெடுக ரஜினியின் விஸ்வரூபம் தான்.

படத்தின் கதை என்று பார்த்தால் ஒன்றும் பெரிதாக இல்லை. வசீகரன் ஒரு பெரிய விஞ்ஞானி. அவர் பல நாட்கள் உழைப்பில் சிட்டி என்றொரு எந்திர மனிதனை உருவாக்குகிறார். அதனை இந்திய இராணுவத்திற்கு பரிசளிக்க விரும்புகிறார். அவரின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட AIRD தலைவர் போரா சிட்டியை சோதனை செய்யும் பொழுது அதனிடம் வசீகரனை கத்தியால் குத்தும் படி கட்டளையிடுகிறார். அதனை சிட்டி செயல் படுத்தும் முன்னர் தடுத்தும் விடுகிறார். பின்னர் இதையே காரணம் காட்டி வசீகரனின் கண்டுபிடிப்பை நிராகரிக்கிறார்.

பின்னர் வசீகரன் சிட்டிக்கு மனித உணர்ச்சிகளை ஊட்டுகிறார். ஒரு கட்டத்தில் சிட்டி வசிகரனின் காதலியான சனா மீது காதல் வயப்படுகிறது. இதனை அறிந்த வசீகரன் சிட்டியை கண்டிக்கிறார். சனாவும் இது நடக்காத காரியம் என்று கூறுகிறாள். இதனால் மனமுடைந்த சிட்டி, இராணுவத்தின் தேர்வில் தோல்வி அடைய, கோபம் கொண்ட வசீகரன் சிட்டியை துண்டு துண்டாக்கி குப்பையில் வீசுகிறார்.

அப்பொழுது அங்கு வரும் போரா, சிட்டியின் துண்டுகளை எடுத்து அதற்கு உயிரளிக்கிறார். அதற்கு எதிர்மறை சக்தியையும் கொடுக்கிறார். அந்த சக்தியை வைத்துக் கொண்டு சிட்டி சனா வை கடத்துகிறது. போராவை கொல்கிறது. தன்னை போலவே பல இயந்திர மனிதர்களை உருவாக்குகிறது. நகரத்தையே அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. பின்னர் வசீகரன் எப்படி சிட்டியை வென்று நகர மக்களையும் சனாவையும் காப்பற்றுகிறார் என்பது தான் கதை.

படத்தில் முதல் பாராட்டு தயாரிப்பாளர் திரு. கலாநிதி மாறன் அவர்களுக்கு தான். பணத்தை தண்ணீராய் செலவு செய்திருக்கிறார். இதற்கு முன்னர் ப்ளூ என்றொரு படம் ஹிந்தியில் எடுத்தார்கள். அதற்கும் நிறைய செலவு செய்யப்பட்டது. ஆனால் படம் படு குப்பை. ஆனால் எந்திரனிலோ சரியாக திட்டமிட்டு செலவு செய்திருக்கிறார்கள். இதனை பார்க்கும் பொழுது ஒருவேளை கமலின் மருதநாயகமும், மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனும் இவரால் நிஜமாகக் கூடுமோ என்ற நம்பிக்கை கூடுகிறது.

அடுத்தது தலைவர். வசீகரனாகவும், சிட்டியாகவும் தலைவர் இரு வேடங்களில் அதகளப்படுத்தி இருக்கிறார். முன்னரே சொன்னது போல படம் முழுதும் அவரின் விஸ்வரூபம் தான். குறிப்பாக படத்தின் பிற்பகுதியில் வரும் வில்லன் ரஜினி. அட்டகாசம். "மே! மே!" என்று அவர் ஆடு போல கத்தும் பொழுது நமக்கு மயிர் சிலிர்க்கிறது. மூன்று முடிச்சு காலத்தில் இருந்து எந்திரன் காலம் வரை தமிழில் வில்லன் என்றால் தலைவர் தான்.

மூன்றாவது இயக்குனர். படம் முழுதும் ஷங்கரின் உழைப்பு தெரிகிறது. டெக்னிகலாக இப்படம் இந்திய சினிமாவின் மைல்கல். கடைசி 15 நிமிடங்கள் ஆங்கிலப் படம் பார்ப்பது போல இருந்தது. படத்தின் எந்தப் பகுதி எந்த ஆங்கிலப் படத்தில் இருந்து சுட்டது என்ற ஆராய்ச்சியெல்லாம் எனக்கு தேவை இல்லாதது. இன்னும் 10 ஆண்டுகளில் கூட தமிழில் இப்படி ஒரு படம் வருமா என்பது சந்தேகமே.

மற்றபடி ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், மேக் அப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சண்டை பயிற்சி, பிண்ணனி இசை என்று ஒவ்வொன்றாக பாராட்டிக் கொண்டிருந்தால் பதிவு பெரிதாகி விடும். அதனால் ஒட்டு மொத்த எந்திரன் குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

குறைகள் என்று பெரிதாக கூறுவதற்கு எதுவும் இல்லை. பாடல்கள் எனக்கு சிவாஜி அளவிற்கு பிடிக்கவில்லை. இன்னும் சில முறை கேட்டால் பிடிக்குமோ என்னவோ. ஐஷ்வர்யாவை கல்லூரி மாணவியாக பார்க்க முடியவில்லை. சந்தானம் மற்றும் கருணாஸ் இருவரும் இப்படத்திற்கு தேவையே இல்லை. மேலும் இந்தியாவே வியக்கும் இயந்திர மனிதனை உருவாக்கும் விஞ்ஞானி இவர்களை போன்ற டம்மி பீஸ்களை தன்னுடன் வைத்துக் கொள்வாரா என்ற கேள்வி வருகிறது. வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.

இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும் தலைவர் தலைவர் தான். அவரால் மட்டுமே இப்படி ஒரு படத்தை அளிக்க முடியும். மொத்தத்தில் தளபதியை போலவே, பாட்ஷாவை போலவே, படையப்பாவை போலவே, சந்திரமுகியை போலவே, சிவாஜியை போலவே எந்திரனும் ஒரு மறக்க முடியாத அனுபவம்.