கேம்பஸ் இன்டர்வியூ வேலை நியமன கடிதத்தை கொடுக்க மறுப்பு மாணவன் விஷம் குடித்து பலி
கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வான மாணவனுக்கு அனுப்பப்பட்ட வேலை நியமன கடிதத்தை ஆசிரியர் கொடுக்க மறுத்ததால், மனமுடைந்த மாணவன் விஷம் குடித்து இறந்தார். இதனால், பாலிடெக்னிக், அரசு மருத்துவமனை பொருட்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக, மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாம்பூரைச் சேர்ந்தவர் கண்ணன்(22). இவரது தந்தை ராஜேந்திரன் இரு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கண்ணனின் குடும்பத்தினர், பரமக்குடி நேரு நகரில் வசித்து வருகின்றனர். கண்ணன், பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் "எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ்" இன்ஜினியரிங் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கண்ணன் நேற்று பாலிடெக்னிக் வளாகத்தில் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.விரக்தி அடைந்த பாலிடெக்னிக் மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த கம்ப்யூட்டர்கள், மேஜைகள், நாற்காலிகள், வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில், கல்லூரி தலைவர் பாண்டியன் மற்றும் துணைத் தலைவர் பாலுச்சாமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. பரமக்குடி அரசு மருத்துவமனை வந்த மாணவர்கள், மருத்துவமனை மீது கல் வீசி தாக்கி சேதப்படுத்தினர். பொருட்களையும் சூறையாடினர். சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அங்கு அமர்ந்து கோஷம் எழுப்பினர். போலீஸ் அதிகாரிகள் மாணவர்கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின், மாணவர்கள் கலைந்து சென்றனர். ராமநாதபுரம் எஸ்.பி., திருஞானம் விசாரணை நடத்தினார்.தொடர்ந்து துறைத் தலைவர் தங்கபாரதி, கல்லூரி முதல்வர் கமலநாதன், ஆசிரியர் பிரபு ஆகியோரை எமனேஸ்வரம் போலீசார் கைது செய்தனர்.
தற்கொலைக்கு காரணம் என்ன? கல்லூரி தலைவருக்கு மாணவன் உருக்க கடிதம்:
கடித்ததை படிக்கும் போது உயிருடன் இருக்கமாட்டேன் என பரமக்குடி முத்தாலம்மன் கல்லூரி தலைவர் பாண்டியனுக்கு இறந்த மாணவன் கண்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் தங்களது கல்லூரியில் 3ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ராணிக்ஸ் இன்ஜி., பிரிவில் பயில்கிறேன். இதற்கு முன்னர் அரசு ஐ.டி.ஐ.,யில் வயர்மென் பிரிவில் 86 சதவீதம் மார்க் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று கமுதக்குடி என்.டி.சி.,மில்லில் தொழிற்பழகுனராகவும் , அதே மில்லில் எட்டு மாதம் மின் பணியாளராகவும் வேலை செய்தேன். நான் இன்ஜினியராக வேண்டும் என்ற என் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற தங்களது கல்லூரியில் சேர்ந்தேன். மூன்று, நான்கு, ஐந்தாம் பருவத்தேர்வுகளில் முதல் மார்க் பெற்றேன். நான்காம் பருவத்தேர்வில் கல்லூரி முதல் மாணவனாக தேர்ச்சி அடைந்தேன். ஐந்தாம் பருவத்தேர்வில் செய்முறை தேர்வில் முன்னர் எடுத்ததை விட அதிக மார்க் எடுத்தும் என்னால் மீண்டும் கல்லூரி முதல் மாணவனாக வர முடியவில்லை. எனது லேப் மார்க்கை துறைத்தலைவர் குறைத்துவிட்டார். 5ம் பருவத்தேர்வுக்கு முன் நடைபெற்ற யூனிட்தேர்வு பேப்பரை துறைத்தலைவர் திருத்தாமல் மாணவர்களையே திருத்த கூறி பேப்பரை விநியோகம் செய்தார். இதில் ஒரு பேப்பரை என் நண்பனிடம் இருந்து வாங்கும்போது எதிர்பாராதவிதமாக கிழிந்து விட்டது. இதனை துறைத்தலைவரிடம் தெரிவித்தால் பிரச்னை ஆகிவிடும் என பயந்து அந்த பேப்பரை மறைத்துவிட்டேன். பின்னர் துறைத்தலைவருக்கு விஷயம் தெரியவே நான் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் என்னை வகுப்பறையில் அனுமதிக்கவில்லை. எனது தாயார் மற்றும் அண்ணன் துறைத்தலைவரிடம் பேசியதால் என்னை வகுப்பறையில் அனுமதித்தார். வரும் 5ம் பருவத்தேர்வில் நீ முதல் மார்க் பெற முடியாது, மேலும் லேப் மார்க்கை குறைப்பேன் என்றார். அதுபோலவே லேப் மார்க்கை குறைக்கவும் செய்தார். ஆனால் அவர் நினைத்தது போல நடக்கவில்லை. நான் 5ம் பருவத்தேர்விலும் முதல் மார்க் பெற்றேன். இதனால் அவர் மிகவும் ஆத்திரம் அடைந்தார். 28.1.2007 அன்று மதுரை டி.என்.பி., கல்லூரியில் எச். சி. எல்., இன்போசிஸ் கம்ப்யூட்டர் நிறுவனம் சார்பில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்க கல்லூரியில் இருந்து நான் உட்பட 20 மாணவர்கள் சென்றோம். அதில் நானும், எனது நண்பர் இருவரும் தேர்ச்சி பெற்றோம். அதற்கான அறிவிப்பு கடிதம் 3.2.07 அன்று கல்லூரிக்கு வந்ததை அறிந்தேன். அந்த விபரம் அறிய கல்லூரி அலுவலரை அணுகினேன். அவர் முதல்வரை சந்திக்குமாறு கூறினார். அதன்படி நாங்கள் இருவரும் முதல்வரை சந்தித்தோம். அவர் எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதற்கான கடிதம் துறைத்தலைவரிடம் இருப்பதாக கூறினார். துறைத்தலைவரிடம் கடிதத்தை கேட்டோம். தராமல் என்னை கடிந்து பேசினார். பெரும் ஏமாற்றம் அடைந்தேன். இவரால் நான் மட்டும் அல்ல பல மாணவர்கள் துயரத்துக்கு உட்படுகின்றனர். தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன். கடிதத்தை நீங்கள் படிக்கும் பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். இப்படிக்கு மாணவன் ஆர்.கண்ணன் என கையொப்பமிட்டுள்ளார். [நன்றி : தினமலர்]
தினமும் எவ்வளவோ தற்கொலைகள். ஆனாலும் இந்த செய்தியை படித்தவுடன் என்னால் சாதாரனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
தந்தையை இழந்த ஒரு மகன். அவரது ஆசையை நிறைவேற்ற இஞ்சினியர் ஆனவர். தேர்வுகளில் முதல் மாணவனாக தேரியவர். ஒரு மில்லில் எட்டு மாதம் பணியாற்றியவர். கேம்பஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்லதொரு நிறுவனத்தில் பணி வாய்ப்பையும் பெற்றவர். இவ்வளவு இருந்தும் உலக அறிவு துளியும் இல்லாதவர்.
ஒரு நிறுவனம் கேம்பஸ் தேர்வு நடத்தி ஒரு மாணவனை தேர்வு செய்யும் பொழுது அந்த மாணவனின் வேலை வாய்ப்புக் கடிதத்தை கல்லூரிக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் இவருக்கு ஏற்பட்டதை போன்றதொரு அனுபவம் ஏற்பட்டு ஆசிரியரோ அல்லது வேறு ஒருவரோ கடிதத்தை கொடுக்க மறுத்தால் அந்த மாணவன் நேரடியாக அந்த நிறுவனத்தின் HR Dept. ஐ அனுகினால் வேறு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்படும். ஆசிரியரின் அத்தகைய நடவடிக்கைகளைப் பற்றி புகார் தெரிவித்தால் அவர் பணி இழக்க வாய்ப்புள்ளது. மேலும் இதை பற்றி அவர் தனது நன்பர்களிடம் கூறி இருந்தாலும் கூட இதற்கு தீர்வு கண்டிருக்கலாம்.
இதை அறியாமல் தனது விலைமதிப்பில்லாத உயிரை தனது அறியாமைக்கு விலையாக கொடுத்துவிட்டார். இதன் மூலம் நமது பாடத்திட்டம் மாணவர்களை உலக அறிவு அற்ற ஒரு புத்தக புழுவாகவே வளர்க்கிறது என்பது தெளிவாகிறது.