Friday, January 25, 2008

சோழதேசம் திருச்சி


திருச்சி என் வாழ்வின் கால் நூற்றாண்டு கால நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் ஊர். மெயின் கார்டு கேட்டிலும், திருவரங்கத்திலும், தில்லை நகரிலும், பாலக்கரையிலும், உறையூரிலும், கண்டோன்மென்டிலும், கே. கே. நகரிலும் நான் சுற்றாத இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.இன்றும் முகம் தெரியாத மனிதர்கள் "நீங்க திருச்சியா?" என்று கேட்கும் பொழுது மனதிற்குள் ஏதோ ஒன்று மலர்வதை என்னால் தடுக்க முடியாது. பதிவெழுத தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்பும் ஏனோ திருச்சி பற்றிய பதிவு எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. வேறு யாரேனும் எழுதி இருக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை. ஆனாலும் இனிப்பு இனிப்பு தானே. எத்துனை முறை சுவைத்தால் என்ன? என் பங்கிற்கு நானும் கொஞ்சம் பரிமாறி விட்டு போகிறேன்.

முதல் முறை பொன்னியின் செல்வன் படித்த பொழுது (சுமார் 12 வயது இருக்கும்) சோழர்களின் வீரத்தை கண்டு திருச்சியில் பிறந்ததற்காக பெருமை அடைந்திருக்கிறேன். தமிழ் நாட்டின் மத்தியில் இருப்பதால், தஞ்சை/நாகை/மதுரை/நெல்லை என்று எங்கு நடக்கும் விழாக்களுக்கு உறவினர்கள் சென்னையிலிருந்து வந்தாலும் திருச்சியில் எங்கள் வீட்டில் ஒரு நாள் தங்காமல் போக மாட்டார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு முக்கொம்பு, கல்லணை, திருவாணைக்காவல், திருவரங்கம், மலைக் கோட்டை என்று ஊர் சுற்றிக் காண்பிக்கும் வேலை என் மீது விழுந்து விடும். இயல்பாகவே திருச்சி மீது அதீத காதல் கொண்டுள்ள எனக்கு அவர்கள் சென்னையில் "அது இல்லை; இது இல்லை; திருச்சி சொர்க்கம்" என்றெல்லாம் கூறுவதை கேட்கும் பொழுது பெருமை தாங்காது.

திருச்சியின் சிறப்பே அதன் தமிழ் தான். கொங்கு, மதுரை, நெல்லை, சென்னை போன்ற பல வகை தமிழ் உச்சரிப்புகளையும் கடந்து ஒருவிதமான Chaste தமிழை நீங்கள் இங்கு கேட்க முடியும்.

"கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்" என்று கூறுவார்கள். ஆனால் தற்காலத்தில் கோவிலை விட கல்விக் கூடங்களும், தொழிற்ச்சாலைகளும், மருத்துவமனைகளும், சுற்றுலாத் தளங்களும், திரையரங்குகளும், உணவகங்களும், போக்குவரத்து வசதிகளும், வனிகச் சந்தைகளும், இன்ன பிற அடிப்படை தேவைகளும் இருந்தால் மட்டுமே ஒரு ஊரில் மக்கள் வசிக்க முடியும். இனி திருச்சியில் இந்த வசதி வாய்ப்புகள் எல்லாம் எவ்வாறு இருக்கின்றன என்று பார்ப்போமா?

கல்விக்கூடங்கள்: நான் அறிந்த வரையில் சென்னைக்கு அடுத்து தமிழ் நாட்டில் சிறந்த கல்விக் கூடங்கள் இருப்பது திருச்சியில் தான். E. R., Bishop Heber, St. Joseph's, National, SVS, Holy Cross, திருவரங்கம் (ஆண்கள்), திருவரங்கம் (பெண்கள்) போன்ற State Board பள்ளிகளும்; RSK, Saranathan, காமகோடி, அகிலாண்டேஷ்வரி, மஹாத்மா காந்தி போன்ற CBSE பள்ளிகளும்; Campion, Vestry போன்ற Matriculation பள்ளிகளும்; Bishop Heber, St. Joseph's, National, SRC, Holy Cross, Cauveri, Indira Gandhi போன்ற கலை கல்லூரிகளும்; REC பொறியியல் கல்லூரியும்; இன்னும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளும்; கி.ஆ.பெ. விஸ்வனாதம் மருத்துவக் கல்லூரியும் பல சிறந்த மாணவ/மாணவிகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நான் மேற்கூறியவற்றுள் பல உயர் தரமான அரசு பள்ளிகள்/கல்லூரிகள் என்பதால் பல ஏழை மாணவர்களுக்கு அறிவுச் செல்வம் எளிதில் கிடைக்கின்றது. நோபல் பரிசு பெற்ற C.V ராமன் முதல் தற்கால விஞ்ஞானி அப்துல் கலாம் வரை பலரும் பயின்றது இக்கல்விக் கூடங்களில் தான்.

தொழிற்ச்சாலைகள்: துப்பாக்கி தொழிற்ச்சாலை, பாரதிய மிகு மின் நிறுவனம், Trichy Distilleries & Chemicals, டால்மியா சிமென்ட், FMC Sanmar போன்ற பல பெரிய நிறுவனங்கள் இங்கு உள்ளன. தற்பொழுது தகவல் தொழில் நுட்ப பூங்காவும் உருவாகவுள்ளதாக நான் கேள்விப் படுகிறேன்.

மருத்துவமனைகள்: திருச்சியில் உலகத் தரத்திற்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் உள்ளனர். இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் திரு. சென்னியப்பன், திரு. ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் ஒரு உதாரணம். மருத்துவமனைகளை பொருத்த வரையில் அரசு பொது மருத்துவமனை தவிர்த்து, CSI மிஷன் மருத்துவமனை, குழந்தை ஏசு மருத்துவமனை, Sea Horse மருத்துவமனை, St. Joseph's கண் மருத்துவமனை போன்ற பல சிறந்த மருத்துவமனைகள் உள்ளன.

சுற்றுலாத்தளங்கள்: ஆன்மீகப் பயணம் மேற்கொண்டவர்களுக்கு திருவாணைகாவல், திருவரங்கம், மலைக் கோட்டை, சமயபுரம் போன்ற கோவில்களும், மற்றவர்களுக்கு கல்லணை, முக்கொம்பு, துறையூர் அருகில் புளியஞ்சோலை, ஜெயங்கொண்டம் அருகில் கங்கை கொண்ட சோழபுரம், புதுக்கோட்டை அருகில் சித்தன்ன வாசல் போன்ற பல இடங்கள் உள்ளன. தமிழக வரலாற்றில் அதிகம் அய்வு செய்யப்பட்டவை சோழர்களின் வரலாறு என்பதால் வரலாறு பிடித்தவர்களுக்கு (அஜித் படம் இல்லை) பல புதிய செய்திகள் சேகரிக்க கிடைக்கும். இவை எல்லாமே எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படாத சுற்றுலாத் தளங்கள் என்பதால் ஏழை மக்கள் எளிதில் சென்று கண்டு மகிழலாம்.

திரையரங்குகள்: திருச்சியில் ஒரு காலத்தில் இந்தியாவிலேயே ஐந்து திரையரங்குகள் கொண்ட ஒரே வளாகம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட மாரீஸ் வளாகம் இன்று இரண்டே திரையரங்குகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதை தவிர்த்து மெயின்கார்டு கேட் அருகில் உள்ள ரம்பா, ஊர்வசி; பாலக்கரையில் உள்ள காவேரி ஆகிய மூன்றும் குறிப்பிடத்தக்கவை. ஏனென்றால் இவற்றில் தான் ரஜினி படங்கள் வெளியிடப்படும். இதை தவிர்த்து மத்திய பேரூந்து நிலையத்தில் உள்ள கலையரங்கம், சோனா, மீனா போன்றவையும்; ஆங்கிலப் படங்கள் மட்டுமே வெளியிடப்படும் சிப்பியும் முக்கியமான திரையரங்குகள். திருவாணைக்காவல் வினாயகாவும் இப்பொழுது சிறப்பாக இருப்பதாக கேள்விப்படுகிறேன். ஆனாலும் திருச்சியில் இன்று வரை மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்று கூட இல்லை. தகவல் தொழில் நுட்ப வேலைவாய்ப்புகள் பெருகினால் ஒரு வேளை வரலாம். மற்றபடி கல்வி/சுற்றுலா/மருத்துவத்தை போன்று பொழுது போக்கும் இன்று வரை திருச்சியில் ஏழை/நடுத்தர மக்களால் அடைய முடிந்த தொலைவிலேயே இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.

உணவகங்கள்: இவ்வளவும் சிறப்பாக உள்ள திருச்சியில் நல்ல உணவகங்களுக்கு பஞ்சமா, என்ன? சத்திரம் பேரூந்து நிலையத்திற்கு அருகில் Banana Leaf, Maya's, Ragunath, Vasantha Bhavan போன்ற உணவகங்களும், மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகில் TAB, Gajapriya, Pukari, SMV (Sri Muniyandi Vilas), Raja போன்ற உணவகங்களும், Sangam, Femina, Jenny's போன்ற நட்சத்திர உணவகங்களும் திருச்சி மக்களுக்கு அறுசுவை உணவளிக்க்ன்றன. அசைவப் பிரியனான எனக்கு Pukari, SMV, Banana Leaf போன்ற உணவகங்களின் உணவுகளில் உள்ள சுவை வேறெங்கும் சுவைக்க முடிந்ததில்லை. இதை தவிர்த்து மதுபானம் உட்கொள்பவர்களுக்கு Dynasity, Madhupriya, Wildwest போன்ற குளிரூட்டப்பட்ட பார்களும் உள்ளன. இந்த பார்களில் உள்ள சிறப்பு என்னவென்றால் கடலை, சுண்டல், மிக்ஸர் போன்ற சைடு டிஷ்கள் இலவசமாக அளிக்கப்படும். வெள்ளி மற்றும் வார இறுதிகளில் வேக வைத்த முட்டை, ஆம்லெட்டுகள் கூட இலவசமாக அளிக்கப்படும். சென்னையில் எப்படி என்று தெரியவில்லை. பெங்களூரில் தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்க வேண்டும்.

"சரி! வயிறு முட்ட தின்றாகி விட்டது. திருச்சி வெயிலுக்கு ஐஸ் கிரீம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?", இருக்கிறது ஒரு கடை.

Vanila - இரண்டு ரூபாய்
Fruit Salad - மூன்று ரூபாய்

இப்படி இருக்கும் அந்த கடையின் மெனு கார்டு. மைக்கேல்ஸ் என்ற அந்த கடை திருச்சியில் மிகவும் பிரபலம். 10 பேர் சென்று வயிறு முட்ட சாப்பிட்டாலும் 150 ரூபாய்க்கு மேல் பில் வராது.

இதை தவிர்த்து கேக்குகளுக்கென்றே பிரபலமான Bread Basket; ஒரு கரண்டி ஐஸ் கிரீம் குடுத்து பர்ஸை பிடுங்கும் Baskin & Robin; ஐந்து ரூபாய்க்கு ஐஸ்கிரீம் தரும் Rainbow's போன்ற கடைகளும் உண்டு.

போக்குவரத்து வசதிகள்: திருச்சியை பொருத்த வரை அரசுப் பேரூந்துகளுக்கு இணையாக தனியார் பேரூந்துகளும் கோலோச்சுகின்றன. சிறிய ஊர் என்பதால் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு நீங்கள் விரைவாக சென்று விட முடியும். ஊரின் அனைத்து பகுதிகளும் திருவரங்கம்/தில்லை நகர்/பாலக்கரை/உறையூர்/மத்திய பேரூந்து நிலையம்/சத்திரம் பேரூந்து நிலையம் போன்ற முக்கியமான இடங்களுடன் நன்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன.

வனிகச்சந்தைகள்: சரி திருச்சியில் வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி நன்றாக ஊர் சுற்றி பார்த்தாகி விட்டது. திரும்பி செல்லும் பொழுது ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கவலையை விடுங்கள். வாருங்கள் திருச்சியின் ரங்கனாதன் தெருவான NSB (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்) ரோட்டிற்கு. காது குத்து முதல் திருமணம் வரை உள்ள அனைத்து விழாக்களுக்கும் இந்த ஒரே தெருவில் பொருட்கள் வாங்க முடியும். துணி வாங்க வேண்டுமா? இருக்கிறது சாரதாஸ், ஆனந்தாஸ், சென்னை சில்க்ஸ் (நகரும் படிக்கட்டினை பார்ப்பதற்காகவே பலரும் இங்கு வருகிறார்கள் என்று கேள்வி.); பாத்திரம் வாங்க வேண்டுமா? இருக்கிறது மங்கள் & மங்கள், RMKV; புத்தகங்கள் வாங்க வேண்டுமா இருக்கிறது ஹிக்கின்போதம்ஸ், ராசி, சுமதி, ஆர்த்தி, சரவனாஸ் போன்ற கடைகள்; கலை பொருட்கள் வாங்க வேண்டுமா இருக்கிறது காதி கிராஃப்ட்; நகைகள் வாங்க வேண்டுமா இருக்கிறது ஒன்றிற்கு பத்தாக நகைக் கடைகள்; கவரிங் நகைகளுக்கு கல்யாணி கவரிங் கடையும் உண்டு; What else? You name it; you may get it :-)

திருச்சியில் மல்டிபிளக்ஸ் களும், மேரி பிரவுன்களும், பீசா கார்னர்களும், காஃபி டேகளும் இல்லாமல் போகலாம். ஒரு சராசரி மேல் தர/உயர் நடுத்தர சென்னை இளைஞனுக்கு திருச்சி பிடிக்காமல் போகலாம். ஆனாலும் அதே காரணத்திற்காகவே என்னால் அடித்து கூற முடியும் ஏழை/நடுத்தர மக்களின் சொர்க்கம் திருச்சி என்று.

பின்னர் சேர்த்தது: நம்ம பழூர் கார்த்தி திருச்சியை பற்றி மூன்று பாகமாக அருமையாக எழுதியுள்ளார். நேரம் கிடைத்தால் அங்கும் செல்லுங்களேன்.

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

தகவல் நன்றி: Radha Sriram

Monday, January 14, 2008

வாழ்த்துக்கள் - அனில் 'ஜம்போ' கும்ளேஇந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் விடா முயற்சிக்கு ஒரு உதாரணம் கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் "அனில் கும்ளே" என்று தான் இருக்கும். 2002 ஆம் ஆண்டு ஆன்டிகுவா டெஸ்ட் போட்டியில் தாடையில் அடிபட்டு, எலும்பு முறிவுடன் சற்றும் மனம் தளராமல் பந்து வீசி தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான லாராவை ஆட்டமிழக்க செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

ஹீரோ கப்பின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 12 ரன்களே கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவ்வெற்றிகளுக்கான பங்களித்தவர்களின் பட்டியலில் எளிதாக முதல் இடத்தில் இருப்பவர் என்று இவரை குறிப்பிடலாம். பெங்களூரில் இருந்த நான்காண்டுகளில் அனில் கும்ளே சர்க்கிளை ஒவ்வொரு முறை கடக்கும் பொழுதும் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக பெரோஷா கோட்லா மைதானத்தில் ஒரே இன்னிங்ஸில் எடுத்த 10 விக்கெட்டுகள் என் நினைவிற்கு வரும்.

வேகப் பந்து வீச்சாளர்களால் ஆளப்பட்ட டெஸ்ட் போட்டிகளை சுழர் பந்து வீச்சாளர்களின் கையில் கொண்டு வந்த மும்மூர்த்திகளுள் (முரளீதரன், வார்னே மற்றும் கும்ளே) ஒருவர். தங்கள் சுழர் பந்து வீச்சினால் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பேட்ஸ்மேன்களை திக்கு முக்காட செய்தவர்கள். முரளீதரனை பொருத்த வரையில் அவரது பந்து வீசும் முறை மீது சில விமர்சனங்கள் உண்டு. வார்னேவிற்கு மற்ற இருவர்களுக்கும் இல்லாத இரண்டு ஆதாயங்கள் உண்டு. ஒன்று அவர் தற்காலத்தின் சிறந்த பேட்டிங் வரிசைக்கு எதிராக பந்து வீச அவசியம் இல்லை. இரண்டு அவரது அணி பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர் அணியினரை விட அதிக ஓட்டங்கள் எடுத்து விடுவதால் அவர் தோள்கள் மீது தேவையற்ற அழுத்தம் (Pressure?) இல்லை. இந்த இரண்டு காரணிகளையும் வைத்து பார்க்கும் பொழுது கும்ளே மற்ற இருவர்களையும் விட சுமார் 100 விக்கெட்டுகளுக்கும் மேல் குறைத்து பெற்றிருந்தாலும் அவர்களுடன் எளிதில் ஒப்பிடக்கூடியவர்.

இந்திய டெஸ்ட் போட்டிகளில் விளையாட தொடங்கி சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் அணியின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஏற்றவுடன் நடை பெற்ற முதல் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது அவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

அவரது பந்து வீச்சை போன்று அவரது அணித்தலைமை அவ்வளவு சிறப்பாக பிரகாசிக்கவில்லை என்ற போதும் தற்கால இந்திய கிரிக்கெட் சூழலையும், தலைமை பொறுப்பை ஏற்க டிராவிட், கங்குளி, சச்சின் போன்ற அணியின் மூத்தவர்கள் தயங்கி பின் வாங்கியதையும் மனதில் வைத்து பார்த்தால் அவரது செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளன.

நாளை மறுநாள் பெர்த்தில் நடை பெறவுள்ள தனது 124 ஆம் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட தொடங்கும் பொழுது அவர் டெஸ்ட் போட்டியில் 600 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படும். ஆனால் கும்ளேவின் போராட்ட குணத்தை அறிந்த அவரது ரசிகர்களுக்கு தெரியும் நாளை மறுநாள் களத்தில் இறங்கும் பொழுது அவரது நோக்கம் அதுவாக இருக்காது, மாறாக போட்டியில் இந்திய அணி ஜெயித்து தொடரை தக்க வைத்துக் கொள்வதே அவரது நோக்கமாக இருக்கும் என்று. நாமும் அதையே வேண்டுவோம்.


பி.கு.1: கும்ளேவின் சாதனைகளை பட்டியலிட்டு தரும்படியான எனது வேண்டுகோளை ஏற்று ஒரே நாளில் பதிவேற்றிய எனது நண்பன் விஜய கிருஷ்ணாவின் பதிவையும் முடிந்தால் பாருங்கள்.

பி.கு.2: அவன் தமிழன் இல்லை என்பதால் அவனது பதிவை சிறிது மாறுதல்களுடன் தமிழ் படுத்தி இருக்கிறேன். இல்லையென்றால் அவனையே எழுத சொல்லி இருப்பேன்.

கும்ளேவின் சாதனைகளை அறிய இங்கே சொடுக்கவும்

Thursday, January 10, 2008

டாடாவின் புதிய கார்என்றும் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் டாடா நிறுவனம் பல சாதனைகள் புறிந்து வருகிறது. கோரஸ் நிறுவனத்தை பல ஆயிரம் கோடிகளுக்கு வாங்கியதை தொடர்ந்து உலகின் முன்னனி ஸ்டீல் நிறுவனங்களில் ஒன்றானது. பல ஹோட்டல்களையும் வாங்கியது. இதன் மூலம் தாஜ் ஹோட்டல் நிறுவனம் உலகின் முதல் 10 பெரிய ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றானது. இப்பொழுது போர்டு நிறுவனத்தில் இருந்து ஜாகூவார் மற்றும் லான்ட்ரோவர் போன்ற கார்களின் தயாரிப்பையும் வாங்க முயற்சி மேற்கொண்டு இருக்கிறது. இதன் வரிசையில் தற்போதைய சாதனை ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள காரை வெளியிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு அவர்கள் இதற்கான முயற்சியை அறிவித்த போது எள்ளி நகையாடியவர்கள் பலர். சுசுகி நிறுவனத்தின் தலைவர் ஒசாமா சுசுகி போன்றவர்கள் அதில் அடக்கம். ஆனால் திரு. ரத்தன் டாடா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது முயற்சியில் பின் வாங்காமல் தனது இலக்கை அடைந்து விட்டார்.

ஆனால் டாடா நிறுவனத்தின் மூலத்தை அறிந்தவர்களுக்கு இதில் ஒன்றும் ஆச்சரியம் இருக்க போவதில்லை. 1907 ஆம் ஆண்டு திரு. ஜாம்ஷெட்ஜி டாடா ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட இந்திய ரயில்வே துறைக்கு தண்டவாளங்கள் உற்பத்திசெய்து தர முன்வந்த போது ஸர் ப்ரெடரிக் அப்காட் எள்ளி நகையாடியதும் அல்லாமல் அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்கள் தயாரிக்கும் தண்டவாளங்களை விழுங்குவதாகவும் கூறினார்.

When Jamsetji Tata, the company’s founder, proposed making steel for the British run Indian railways in 1907, Sir Frederick Upcott, a colonial administrator scoffed. "Do you mean to say that Tatas propose to make steel rails to British specifications?" he asked. "I will undertake to eat every pound of steel rail they succeed in making."

இதனை போன்ற பல எள்ளி நகையாடுதல்களையும் கடந்தே டாடாவின் சாம்ராஜ்யம் நிறுவப்பெற்றுள்ளது.

இவர்கள் தயாரித்த இந்த மலிவு விலை கார்கள் இந்தியாவில் உள்ள மத்திய தர குடும்பத்தினருக்கு பெரும் வரமாக அமையும். இரண்டு பல்ஸர் பைக்குகள் வாங்கும் செலவில் ஒரு கார் வாங்கி விடலாம். இனி சில ஆண்டுகளில் குடும்பத்தலைவர்/தலைவி/இரண்டு குழந்தைகள் அனைவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சியை காண முடியாமல் போகலாம். நகரங்களில் இருசக்கர வாகனங்களினால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறையலாம்.

குறிப்பாக இந்த கார் ஆட்டோவிற்கு நல்லதொரு மாற்றாக அமையலாம். ஒரு லிட்டருக்கு சுமார் 25 கிலோமீட்டர்கள் அளிக்கும் இந்த காரினால் பல ஆட்டோ ஒட்டுனர்கள் இதனை வாடகைக்கு ஓட்ட முற்படலாம். ஓட்டுனர் தவிர நான்கு பேர் அமர முடியும் என்பதால் மக்களும் ஆட்டோவிற்கு பதில் இதில் பயனம் செய்ய முற்படலாம். ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் சிறிது பணம் அதிகம் கிடைக்கும்.

குறிப்பாக பள்ளி சிறுவர்களை/சிறுமிகளை ஆட்டோவிற்குள் புளி மூட்டை போல அடைத்து செல்லும் அவல நிலை மாறலாம்.

ஆனாலும் இதனால் ஒரு சில பாதகங்களும் இல்லாமல் இல்லை. பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு பெரிய அளவிற்கு இல்லை என்பதால் நகரத்திற்குள் பயனிக்க மிகுந்த யோசனை தேவை இல்லை என்பது எனது கருத்து. ஆனாலும் வெளியூர்களுக்கு செல்ல இதனை பயன்படுத்துவதற்கு முன் சிறிது யோசனை தேவை. மேலும் நகரத்திற்குள் சாலைகளில் நெரிசல்கள் பல மடங்கு உயரும். பெங்களூரில் இதை நினைத்து பார்க்கவே எனக்கு பயமாக இருக்கிறது. மேலும் இதன் மூலம் சுற்று சூழல் அதிகம் மாசுபடலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தால், இந்த கார் இரு சக்கர வாகனங்களுக்கு மாற்றாக இருப்பதை விட ஆட்டோவிற்கு மாற்றாக இருப்பதே மேல் என்று எனக்கு தோன்றுகிறது.