Monday, January 23, 2012

பொடிமாஸ் - 01/23/2012

குமுதம் இதழ் ஸ்ருதி ஹாசனிடம் அவரையும் தனுஷையும் பற்றிய தனது தவறான செய்திக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறது. சென்ற வாரம் நக்கீரன் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டது அனைவரும் அறிந்ததே. இது போலவே சில நாட்களுக்கு முன்னர் திருவாளர் விஜயகாந்த் கலைஞரை பற்றி ஏதோ உளறி பின்னர் வக்கீல் நோட்டீசுக்கு பயந்து மன்னிப்பும் கேட்டார். அதே போல ஒரு நீதிபதியை பற்றிய தவறான செய்தி வெளியிட்டதற்காக டைம்ஸ் நவ் பத்திரிக்கைக்கு உச்ச நீதி மன்றம் நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அசால்டாக ஏதோ ஒரு செய்தியை கொளுத்தி போட்டுவிட்டு குளிர் காயும் பத்திரிக்கைகளுக்கு இது ஒரு பாடமாக அமைந்தால் நல்லது.சல்மான் ருஷ்டியை ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு வர விடாமல் செய்ய நடக்கும் போராட்டங்கள் இயல்பானதே. எந்த ஒரு சாராரின் நம்பிக்கையை கொச்சை படுத்தும் செயலை செய்தாலும் இம்மாதிரியான விளைவுகளே ஏற்படும். ஆனால் எனது ஆச்சரியமே M.F.ஹுசைன் இந்தியாவை விட்டு கத்தார் சென்ற பொழுது கலைஞனின் சுதந்திரத்தை பற்றி வாய்கிழிய பாடம் நடத்திய அறிவுக் குஞ்சுகள் இப்பொழுது திடீரென்று காணாமல் போனது தான். அது சரி, இந்த குஞ்சுகளிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?இந்திய இராணுவ ஜெனரல் V.K.சிங் தனது பிறந்த தேதியை குறித்து நீதி மன்றதை நாடியது துரதிருஷ்டவசமானது என்றாலும் சரியான செயலாகவே படுகிறது. 1965 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 47 வருடங்களாக பலமுறை தனது பிறந்த தேதியை மாற்ற விண்ணப்பித்து விட்டு இறுதியில் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடியவே இம்மாதிரி செய்திருக்கிறார். வழக்கில் அவர் ஜெயிக்கிறாரோ இல்லையோ இனிமேலாவது வெள்ளைக்காரன் தனது வசதிக்காக கொண்டு வந்த முட்டாள்தனமான சிகப்பு நாடா சட்டங்களை மறு பரிசீலனை செய்து தொலைத்தால் நன்று.விஜய் டிவியில் ஒளிபரப்பான "என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்" நிகழ்ச்சி நன்றாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் தனது வளர்ச்சிக்கு உதவிய நண்பர்களை நினைத்து பார்த்தது நன்றாக இருந்தது. நடிகர் சத்யன் மிகவும் இயல்பாக இருந்தார். அவருக்கு நல்ல ஒரு எதிர் காலம் அமைய வாழ்த்துகிறேன். மொத்தத்தில் இது ஒரு ஃபீல் குட் படத்தை பற்றிய ஒரு ஃபீல் குட் கலந்துரையாடல்."நண்பன் படத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விஜய் வசந்த் படத்தில் ஒரு தலித் மாணவன்." - ஒரு சில புத்தி ஜீவிகளின் கண்டுபிடிப்பு. தஞ்சை கல்வெட்டுகளில் பொறிக்கப்பட வேண்டிய கண்டுபிடிப்பு. பின்னால் வரும் சந்ததியினர் பார்த்து, படித்து பின்னர் தெளிவு பெற வேண்டும் அல்லவா? மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோன்றும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை."It is better to keep your mouth shut and be thought a fool than to open it and remove all doubt" எங்கேயோ எப்பொழுதோ படித்தது. இன்று இணையத்தில் வெளிவரும் சூடான கட்டுரைகள் பலவற்றை படிக்கையில் எனக்கு இது தான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. இதை படித்த பிறகு உங்களுக்கு எந்த இணையக் குஞ்சு நினைவிற்கு வந்தாலும் நான் பொறுப்பல்ல.கீழே மாண்டியின் லேட்டஸ்ட் படங்கள் இரண்டு. நேற்று தான் குளிப்பாட்டிய பின்னர் எனது கைத்தொலைபேசியில் எடுத்தேன்.வழக்கம் போலவே காமெடியுடன் பதிவை முடிக்கலாம். அண்ணா ஹஸாரேவை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என்றும், அதை இந்தியர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் ஒரு மின்னஞ்சல் அங்கே இங்கே என்று சுற்றிவிட்டு கடைசியில் எனக்கு வந்தது. கொலைவெறி பாடலை ரசிக்கலாம், அதற்காக அதை தேசிய கீதமாக்க முடியுமா என்ன?

Sunday, January 15, 2012

நண்பன்


பொதுவாக ஒரு படத்தை ஒரு மொழியில் நாம் முதலில் பார்த்து விட்டால் அதை பிற மொழியில் மீண்டும் பார்க்கும் பொழுது அது எவ்வளவு நன்றாக இருந்தாலும் நமக்கு அவ்வளவாக பிடிக்காது. இது இயல்பு. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் தமிழில் அலைபாயுதே பார்த்து விட்டு ஹிந்தியில் சாத்தியா பார்த்த பொழுது தியேட்டரில் என்னால் உட்கார முடியவில்லை. இப்படி பல உதாரணங்களை சொல்லலாம். ஆனால் இதை முதலில் உடைத்தது யுவா என்கிற ஆயுத எழுத்து.

முதலில் நான் பார்த்தது யுவா. யுவா பார்த்து விட்டு ஒரு வாரம் கழித்து தான் என்னால் ஆயுத எழுத்து பார்க்க முடிந்தது. ஆனால் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது ஆயுத எழுத்தின் அருகில் கூட வர முடியாது யுவாவினால் என்று.

ஆயுத எழுத்தில் நடித்த ஒவ்வொருவரும் தங்களது பாத்திரத்தை ஹிந்தியில் செய்தவரை விட நன்றாக செய்திருப்பார்கள். விவேக் - கரீனாவின் கெமிஸ்ட்ரியை விட சித்தார்த் - த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக இருக்கும். ஓம் பூரியின் வில்லத்தனத்தை விட பாரதி ராஜாவின் வில்லத்தனம் நன்றாக இருக்கும். மாதவன் அபிஷேக் பச்சனை தூக்கி சாப்பிட்டிருப்பார். ராணி முகர்ஜியை அடித்து துவைத்து காயப் போட்டிருப்பார் மீரா ஜாஸ்மின். உண்மையில் அந்த படத்தில் இரண்டு வெர்ஷன்களிலுமே சுமாராக நடித்திருந்தது ஈஷா டியோல், நன்றாக நடித்திருந்தது சூர்யா மற்றும் அஜய் தேவ்கன். இப்படி எல்லாமே நன்றாக இருந்ததினால் எனக்கு முதலில் பார்த்த யுவாவை விட பின்னர் பார்த்த ஆயுத எழுத்து மிகவும் பிடித்திருந்தது.

என்னடா இவன் நண்பன் விமர்சனம் என்று எதையோ கூறிக்கொண்டிருக்கிறானே என்று பார்க்கிறீர்களா? 2004 ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து தந்த அதே அனுபவத்தை 2012 ஆம் ஆண்டு ஷங்கரின் நண்பன் அளித்தது. ஆம், 3 இடியட்ஸை விட எனக்கு பல மடங்கு அதிகம் நண்பன் பிடித்திருந்தது.

காரணம் 3 இடியட்ஸில் அமீர் மற்றும் மாதவன் இருவரின் வயதும் நன்கு தெரியும். கல்லூரி மாணவர்களாக அவர்களை ஒப்புக்கொள்ள முடியாது. ஆனால் இங்கு மூவரும் நன்கு தங்களது பாத்திரங்களில் பொருந்தினார்கள். அருமையான காஸ்டிங். விஜய், ஜீவா, சத்யராஜ், ஸ்ரீ காந்த், இலியானா மற்றும் குறிப்பாக சத்யன் அனைவரும் நூல் பிடித்தது போல அருமையாக நடித்திருந்தார்கள். வேறு யாரையும் அந்த பாத்திரங்களில் நினைத்து கூட பார்க்க இயலவில்லை.

இவ்வளவு இளமையான விஜய்யை பார்த்து எவ்வளவு நாட்களாகின்றன. ஃப்ரெஷாக இருக்கிறார். இமேஜை பற்றிய கவலை இல்லாமல் சத்யராஜ், அனூயா, இலியானா, ஜீவா, ஸ்ரீ காந்த் என்று அனைவரிடமும் சகட்டு மேனிக்கு அடியும் உதையும் வாங்குகிறார். இலியானா இவரை பார்த்து நீ ஆண்மையற்றவனா? என்று கேட்கிறார். மாஸ் ஒபனிங் இல்லை, கேமராவை பார்த்து அறிவுரை கூறவில்லை, பஞ்ச் டயலாக் பேசவில்லை, நூறு குண்டர்களை ஒற்றைக் கையினால் தூக்கி வீசவில்லை, இவ்வளவு ஏன்? விஜய்யின் அக்மார்க் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் கூட இல்லை, ஆனாலும் படம் முழுதும் விஜய்யின் மாஸ் தெரிகிறது.

அடுத்தது ஜீவா. ஷர்மான் ஜோஷியை தூக்கி அடித்துவிட்டார். "நண்பன் போல யாரு மச்சான்" பாடலில் கண் கலங்கும் போது நம்மை நிமிர்ந்து உட்கார வைப்பவர், நண்பனை விட்டுக் கொடுக்க முடியாமல் தற்கொலைக்கு முயலும் போது விதிர்க்க வைக்கிறார், கடைசியில் உங்கள் வேலையை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் எனது ஆட்டிட்யூடை நான் வைத்துக் கொள்கிறேன் என்று கூறும் பொழுது பெருமூச்சு விட வைக்கிறார்.

ஸ்ரீ காந்துக்கு இது ஒரு முக்கியமான படம். அலட்டிக் கொல்லாமல் நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய படங்களில் எமோஷனல் காட்சிகளில் அவரது நடிப்பு படு மொக்கையாக இருக்கும். வசன உச்சரிப்பு அதை விட மொக்கை. ஆனால் இந்த படத்தில் அடித்து ஆடி இருக்கிறார்.

சத்யராஜுக்கு அவர் வயது நடிகர்கள் எல்லாம் பொறாமை படும் வேடம். தனது மகனின் தற்கொலைக்கு தனது பிடிவாதம் தான் காரணம் என்று இலியானா குற்றம் சாட்டும் காட்சியில் மனுஷன் கண் பார்வையிலேயே நம்மை கொல்லுகிறார். அற்புதமான நடிப்பு.

இலியானா இடுப்பாட்டுவதை தவிர்த்து இப்படத்தில் ஒன்றும் புதிதாக செய்யவில்லை. க்ளோஸ் அப் காட்சிகளில் முகத்தில் முதிர்ச்சியும், பருக்களும் தெரிகின்றன.

கடைசியாக சத்யன். "நிசப்தம் ப்ரான சங்கடம்". படத்தில் விஜய்க்கு நிகரான பாத்திரம். வசன உச்சரிப்பு, முக பாவம், பாடி லாங்குவேஜ், என்று அனைத்திலும் அசத்தி இருக்கிறார். சரியான தேர்வு. சத்யனின் கேரியரில் இது ஒரு முக்கியமான படம்.

இப்படி ஒரு ரீமேக் படத்திற்கு ஷங்கர் தேவையா? என்ற கேள்வி எனது மனதிற்குள் படம் பார்க்கும் முன்னர் இருந்தது. பார்த்த பிறகு தான் தெரிந்தது மூலப் படத்தின் கருவை உள்வாங்கி அதை தமிழ்படுத்துகிறேன் என்று சிதைக்காமல் கொடுக்க ஷங்கர் போன்ற இயக்குனர்கள் தான் வேண்டும் என்று. படத்தை காட்சிக்கு காட்சி காப்பி அடித்து எடுத்துவிட்டு திரைக்கதை என்று தங்களது பெயரை போடும் இயக்குனர்கள் மத்தியில் வெறும் இயக்கம் என்று தனது பெயரை போட்டு, இப்படம் வெற்றி பெற்றால் அதன் பெருமை ராஜ்குமார் ஹிரானியையே சேரும் என்று கூறிய ஷங்கர் எனது மனதில் உயர்ந்து நிற்கிறார்.

அடுத்தது மதன் கார்க்கி. பெரும்பாலான வசனங்கள் மூலப் படத்தின் பொழி பெயர்ப்பு என்றாலும், ஓரிரு வசனங்களில் நம்மை அசத்துகிறார். "திருக்குறள் சைஸில் ப்ளாஷ் பேக்" ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு. ஆசிரியர்கள் தினத்தில் சத்யன் பேசும் உரை அட்டகாசம். சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது.

அடுத்தது கேமரா. மனோஜ் பரமஹம்ஸா நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறார். ஒவ்வொரு காட்சியும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இசையை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. மனதை உறுத்தாமல் இருக்கிறது. நண்பன் போல மற்றும் அஸ்குலஸ்கா பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

மொத்தத்தில் இமேஜ் பார்க்காமல் ஒரு அருமையான படத்தில் நடித்ததற்கும், இமேஜ் பார்க்காமல் ஒரு அற்புதமான படத்தை இயக்கியதற்கும் விஜய்க்கும் ஷங்கருக்கும் எனது நன்றிகள்.

விஜய் ஒரு ஃப்ரீ அட்வைஸ். அடுத்தது திமிங்கிலம், சேட்டைக்காரன் என்று படங்களில் நடிக்காமல் இது போன்ற படங்கள் கொடுங்கள். ப்ளீஸ்.

Thursday, January 12, 2012

அமெரிக்கா அழிவின் பாதையில் செல்கிறதா? - பகுதி 2


சென்ற பகுதியில் அமெரிக்கா எப்படி இங்கிலாந்தை ஓரம் கட்டிவிட்டு உலகின் மிகப் பெரிய வல்லரசானது என்பதை பார்த்தோம். இந்தப் பகுதியில் அமெரிக்காவின் வீழ்ச்சியை அல்லது வீழ்ச்சியை போன்ற தோற்றத்தினை பார்ப்போம்.

தொட்டதெல்லாம் பொன்னாகும் நம்ம ஊர் சூப்பர் ஸ்டாருக்கு கூட அவ்வப்பொழுது ஒரு நாட்டுக்கொரு நல்லவனோ இல்லை பாபாவோ வந்து விடுகிறது. உலகின் சூப்பர் ஸ்டார் அமெரிக்கா மட்டும் என்ன விதி விலக்கா? அமெரிக்காவிற்கும் அது போலவே மூன்று ஆப்புகள் தொடர்ச்சியாக வந்தன.

2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் அமெரிக்காவை உலக நாடுகள் முன்னிலையில் தலை குனிய வைத்தது. இது அமெரிக்காவிற்கு கிடைத்த முதல் ஆப்பு. அமெரிக்கா தனது வல்லமையை உலக நாடுகளுக்கு நிரூபிக்க ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தது. அதனால் பெரும் பொருட் சேதமும் நேர்ந்தது.

அதே நேரத்தில் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தனது நாடு இனி எண்ணை வர்த்தகத்தில் ஈடுபடும் பொழுது யூரோவிலேயே வர்த்தகம் செய்யும் என்று அறிவித்தார். முதல் பதிவில் கூறியது போன்று அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தி வைக்க ஈராக்கின் இந்த முடிவை எதிர்த்தது அமெரிக்கா. ஆனால் அமெரிக்க டாலருக்கு மாற்றாக யூரோ வரும் என்று எதிர் பார்த்த ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக ஈராக்கின் இந்த முடிவை ஆதரித்தன. இது அமெரிக்காவிற்கு கிடைத்த இரண்டாவது ஆப்பு. இதிலிருந்து மீண்டு வர ஈராக் மீது போர் தொடுப்பது அமெரிக்காவிற்கு அவசியம் ஆனது.

அமெரிக்காவிற்கு மூன்றாவது ஆப்பு சப் ப்ரைம் க்ரைஸிஸ் என்ற பெயரில் வந்தது. அதை பற்றி விரிவாகவே எனது முந்தைய பதிவான அமெரிக்காவை தொடர்ந்து அடுத்தது இந்தியாவா? என்ற பதிவில் விளக்கியுள்ளேன். சப் ப்ரைம் க்ரைஸிஸ் பற்றி தெரியாதவர்கள் அதனையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ச்சியான இந்த மூன்று ஆப்புகளாலும் அமெரிக்காவிற்கு பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. அமெரிக்காவின் மத்திய தர மக்கள் சொல்ல இயலா துயரடைந்தனர். பலர் வேலை வாய்ப்பையும் அதனால் மருத்துவ காப்பீட்டையும் இழந்தனர். பலர் தங்களது ஓய்வூதியத்தை இழந்தனர். பலர் தங்களது இல்லத்தை இழந்தனர்.

மேலோட்டமாக பார்த்தால் மீளவே முடியாத பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா இருப்பதை போலவே இது தோன்றும். ஆனால் உண்மையில் அவ்வளவு பாதிப்புகள் இல்லை. நம்ப முடியாவிட்டாலும் அது தான் நிஜம்.

முன் பதிவில் சொன்னதை போன்று அமெரிக்கா நீங்கலாக உலகின் மற்ற அனைத்து நாடுகளின் அன்னியச் செலாவணியில் பெரும் பகுதி அமெரிக்க டாலர்களிலேயே இருக்கிறது. அமெரிக்கா வீழ்ந்து அதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தால் பெரும் ஆப்பு அந்த நாடுகளுக்கு தான். அதனால் அமெரிக்காவே நினைத்தாலும் பிற நாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்க அனுமதிக்காது. பல ட்ரில்லியன் டாலர்கள் கொடுத்து அமெரிக்க பாண்டுகளை சீனா வாங்கியதும் அதனால் தான்.

அதே போல ஜெர்மன் கார்களாகட்டும், ஜப்பானிய டிவிக்களாகட்டும், இந்திய சாஃப்ட்வேர்களாகட்டும் அவற்றினை பெரிதும் உபயோகிப்பவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்கா அழிந்தால் இந்த பொருட்களின் நுகர்வோர் பெருமளவில் அழிந்ததாக பொருள். குறிப்பாக எவ்வளவு சுரண்டல்கள் நடந்தாலும் தென் அமெரிக்க நாடுகள் பெரிதும் நம்பி இருப்பது அமெரிக்காவை தான்.

மேலும் ஈராக்கினை போர் தொடுத்து ஒரேயடியாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் மற்ற OPEC நாடுகளுக்கு ஒரு வலுவான செய்தியை அமெரிக்கா அளித்துவிட்டது. டாலரில் எண்ணை விற்காமல் வேறு ஒரு பணத்தில் எண்ணை விற்றால் விளைவது என்ன என்று அந்த நாடுகள் அறிந்து கொண்டுவிட்டன. பரவலாக எண்ணை வாங்கும் மற்ற நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து டாலரை புறக்கணித்தால் ஒரு வேளை அந்த நாடுகளுக்கு சிறிது துணிச்சல் வரலாம்.

அனால் அப்படி ஒரு துணிச்சல் வருவதற்கு வேறொரு வலுவான பணம் வேண்டும். பொருளாதாரம் நன்றாக இருந்த போது நன்றாக உயர்ந்து வந்த யூரோ இப்பொழுது முக்கு முக்கு என்று முக்குகிறது. மேலும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஜெர்மனி போன்ற நாடுகள் யூரோவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. ஆனால் க்ரீஸ், இத்தாலி போன்ற நாடுகள் யூரோவை கீழே தள்ளுகின்றன. யூரோவின் வருங்காலம் இந்த நாடுகளில் எவை ஜெயிக்கும் என்பதை பொருத்தே அமையும். அது எப்படி இருந்தாலும் யூரோ டாலரின் இடத்தை பிடிக்கும் என்று சொல்வது வரிசையாக இரண்டு மூன்று சூப்பர் ஹிட்களை கொடுத்த ஒரு இளம் நடிகர் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பார் என்று சொல்வதை போன்று இருக்கிறது. அது நடக்கலாம் நடக்காமல் போகலாம், ஆனால் அப்படி நடப்பதற்கு ஐரோப்பிய குழுமத்தின் ஒற்றுமையும், கடுமையான உழைப்பும், தொலை நோக்கு பார்வையும், வலுவான ஒரு தலைமையும் வேண்டும். இன்றைய நிலையில் பார்க்கும் பொழுது இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு டாலரை அசைத்துக் கொள்ள முடியாது என்பதே உண்மை.

ஒருவேளை மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக செக் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி ஏதாவது நடந்தாலும் அமெரிக்காவை ஒன்றும் புடுங்க முடியாது. அமெரிக்கா தனது எண்ணை தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளை நம்பி இருக்கிறது என்பது ஒரு பெரிய மாயை. பார்க்க US Energy Information Administration Report. முதல் 15 நாடுகளில் மூன்றே மூன்று மத்திய கிழக்கு நாடுகள் தான் உள்ளன. அவற்றில் சவுதி தவிர்த்து பிற நாடுகள் ஏற்றுமதி செய்வது துச்சமான அளவு. முதல் நாடான கனடா ஏற்றுமதி செய்யும் எண்ணையை விட சவுதி ஏற்றுமதி செய்வது பாதி அளவே. இதை தவிர்த்து உலக நாடுகள் அனைத்திற்கும் நூறு ஆண்டுகளுக்கு தேவையான எண்ணை வளம் அமெரிக்காவின் கொலராடோ மற்றும் அலாஸ்கா மாநிலங்களில் உள்ளன. வழக்கம் போலவே மற்ற உலக நாடுகளின் எண்ணை முழுதும் உறிஞ்சி எடுக்கப்படும் வரை அதை வெளியில் விடாது அமெரிக்கா. விக்கிலீக்ஸ் கோப்புகளில் அதனை பற்றிய தகவல்கள் தெளிவாக உள்ளன.

அதனால் சொல்கிறேன் நண்பர்களே! அமெரிக்கா தற்பொழுது சந்திக்கும் இந்த பின்னடைவு தற்காலிகமானது. ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயரே எழுந்து பறந்து வரும் அமெரிக்கா. அதுவே உலகத்திற்கு நன்மையும் கூட.

In God We Trust.

Wednesday, January 11, 2012

அமெரிக்கா அழிவின் பாதையில் செல்கிறதா? - பகுதி 1


சமீப காலமாக வலையுலகில் மட்டும் இல்லாமல் பிற ஊடகங்களிலும் அமெரிக்காவின் ஆளுமை குறைந்து கொண்டிருக்கிறது என்றும் விரைவில் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு என்ற நிலையில் இருந்து கீழே இறங்கி விடும் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதார வீழ்ச்சியை பார்க்கும் பொழுது ஒரு வேளை இப்படி நடந்தாலும் நடக்கலாம் என்பதே பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா உலகின் நாட்டாமையாக பல செயல்களை செய்து வருவதால் பலருக்கும் அமெரிக்கா மீதிருந்த அதிருப்தி இப்படி வெளிவருகிறது. உண்மையில் இப்படி நடக்காவிட்டாலும் நடந்து தொலைத்தால் என்ன என்ற நப்பாசை பலருக்கு இருக்கிறது.

முதலில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் வல்லரசாக இருந்த பிரிட்டன் நாட்டை முந்தி எப்படி அமெரிக்கா இந்த நிலைக்கு வந்தது என்று பார்ப்போம். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஐரோப்பிய, ஆசிய, ஆப்ரிக்க நாடுகள் அனைத்தும் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்தன. மீளவே முடியாத நிலையில் தான் பல நாடுகளும் இருந்தன. பல ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் தேவையான உள்கட்டமைப்பு இல்லை. ஐரோப்பிய நாடுகளிலோ அவற்றை பாதுகாக்க போதுமான பொருளாதார வசதிகள் இல்லை.

இரண்டாம் உலகப் போர் நடக்கும் பொழுதே அமெரிக்கா புத்திசாலித்தனமாக ஒரு சகுனி வேலையை செய்தது. போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு யுத்த தளவாடங்கள், மருத்துகள், உணவுப் பொருட்கள் போன்றவை தேவைப் பட்டன. அதற்கு அமெரிக்காவின் உதவியை நாடின அவை. அமெரிக்காவும் அந்த நாடுகளுக்கு தான் உதவுவதாகவும், ஆனால் உதவிக்கு பணம் டாலரிலேயே செலுத்தப்படவேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஐரோப்பிய நாடுகள் வசமோ போதுமான டாலர்கள் இல்லை. அதனால் அமெரிக்காவே ஒரு வழியையும் கூறியது. அதாவது முதலில் அதிகப்படியான தங்கத்தினை ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் கொடுத்து விட வேண்டும். அமெரிக்காவும் அதன் மதிப்பில் உள்ள டாலரினை ஐரோப்பிய நாடுகளுக்கு கொடுத்து விடும். பின்னர் ஐரோப்பிய நாடுகள் தங்களது தேவையை பொருத்து டாலரினை கொடுத்து வேண்டிய உதவிகளை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். பின்னர் போர் முடிந்த உடன் மிஞ்சிய டாலர்களை கொடுத்து தங்கத்தினை மிண்டும் பெற்றுக் கொள்ளலாம். இப்படியாக பெருமளவில் தங்கமும், டாலரும் கை மாறின. டாலர் உலகப் பொதுப்பணமாக வித்திட்டது இந்த நிகழ்வுதான்.

இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்த நிலையில், அமெரிக்க இராணுவ பலத்தின் மீது கொண்ட அச்சத்தால் சில ஐரோப்பிய நாடுகளும், உயர்ந்து கொண்டே இருக்கும் டாலரின் மதிப்பினால் இன்னும் சில காலம் பொறுத்திருந்தால் அதிக தங்கம் கிடைக்கும் என்ற பேராசையினால் சில ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவிடம் தங்கத்தை மீண்டும் ஒப்படைக்க சொல்லி நிர்பந்திக்க வில்லை. அதனால் அமெரிக்கா அந்த தங்கத்தினை கொண்டு பல தொழிற்சாலைகளை தனது நாட்டில் உறுவாக்கிக் கொண்டது. அந்த காலத்தில் சுமாராக உலகின் 80 சதவிகித தங்கம் அமெரிக்காவின் வசம் இருந்ததாகவும், 40 சதவிகித தொழிற்சாலைகள் அமெரிக்காவின் வசம் இருந்ததாகவும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் பேராசிரியர்களுமான சோகன் ஷர்மா மற்றும் சூ ட்ரேசி இருவரும் குறிப்பிடுகிறார்கள்.

1944 ஆம் ஆண்டு நடந்த ப்ரெட்டன் வுட்ஸ் மாநாட்டில் உலக வங்கி மற்றும் IMF இரண்டும் அமெரிக்காவில் தொடங்கப்பட்டன. இது அமெரிக்காவின் ஆளுமையை உலகுக்கு உணர்த்தியது. அதன் பின்னர் அமெரிக்காவிற்கு ஏறுமுகம் தான். அப்பொழுது அமெரிக்காவின் வசம் இருந்த தங்கத்தினை மதிப்பு செய்து (சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதன் அடிப்படையில் அமெரிக்க டாலர் மதிப்பை முடிவு செய்தனர்.

எல்லாம் ஒழுங்காக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அமெரிக்காவிற்கு வியட்னாம் போர் என்ற பெயரில் வந்தது சனி. சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை குடித்து ஏப்பம் விட்டது அந்த போர். போர் முடிந்த நிலையில் அமெரிக்கா வசம் வெறும் 10 பில்லியன் டாலர்கள் தங்கமே இருந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு பெருமளவில் குறைந்தது.

அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த நிக்ஸன் தங்கத்தின் அடிப்படையில் இருந்த டாலரின் மதிப்பினை மாற்றம் செய்து டாலருக்கு பொய்யான ஒரு மதிப்பினை அளித்தார். இதை உலக நாடுகள் எதிர்பார்க்கவே இல்லை. இதை நிக்ஸன் ஷாக் என்றே அனைவரும் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் அமெரிக்காவின் டாலர் மதிப்பினை உயர்த்தியே வைக்க நியூயார்க் மெர்கன்டைல் மூலமாகவே எண்ணை வர்த்தகம் நடக்குமாறு சட்டங்கள் எழுப்பப்பட்டன. வல்லரசான அமெரிக்காவின் இந்த செயலுக்கு எதிராக செயல்பட ஒருவருக்கும் துணிவில்லை. அதாவது இந்தியா சவுதியிடம் இருந்து எண்ணை வாங்க வேண்டும் என்றால் இந்திய ரூபாயிலோ அல்லது சவுதி ரியாலிலோ வாங்க முடியாது. அமெரிக்க டாலர் வேண்டும். ஆக எண்ணை வளம் இல்லாத அனைத்து உலக நாடுகளும் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க தொடங்கினர். அனைத்து நாடுகளின் அன்னியச் செலாவணியில் பெரும் பகுதி அமெரிக்க டாலர்களிலேயே இருந்தது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்தே இருந்தது.

இதன் மூலம் மட்டுமே டாலர் மதிப்பை உயர்த்த முடியாது என்று எண்ணி அமெரிக்கா உற்பத்தியையும், ஏற்றுமதியையும் குறைத்து இறக்குமதியை அதிகரித்தது. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது அமெரிக்கா. மற்ற நாடுகளுக்கு டாலர்களை ஏற்றுமதி செய்தது போலவும் ஆயிற்று, மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவின் மீதுள்ள சார்பை உறுதி செய்தது போலவும் ஆயிற்று.

மற்ற நாடுகளும் டாலரும், வேலை வாய்ப்பும் கிடைக்கிறதே என்று இதை விரும்பி ஏற்றுக் கொண்டன. இப்படி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கும், கார்கள் தயாரிப்பு ஜெர்மனி மற்றும் ஜப்பானிற்கும், இயற்கை வளங்களை அழித்து தயாரிக்கும் மரம், காகிதம், மணல் போன்ற பொருட்கள் தயாரிப்பு தென் அமெரிக்க நாடுகளுக்கும், மற்ற பொருட்களின் தயாரிப்பு சீனாவிற்கும், சாஃப்ட்வேர் தயாரிப்பு இந்தியாவிற்கும் ஓரளவிற்கு முழுமையாகவே அமெரிக்காவை விட்டு நீங்கி சென்றது. இப்படி இருபதாம் நூற்றாண்டின் முடிவில் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய நுகர்வு நாடாக உருவானது. உலகின் எந்த நாட்டில் எந்த பொருள் தயாரானாலும் அதை அமெரிக்க சந்தையில் விற்றால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற நிலை உருவானது.

இப்படி 50, 60 ஆண்டுகளாக ஏறுமுகத்திலேயே சென்று கொண்டிருந்த அமெரிக்கா இறங்குமுகத்தில் எப்படி சென்றது? உண்மையில் இறங்குமுகத்தில் செல்கிறதா? இல்லை அது ஒரு மாயத் தோற்றமா? அப்படி உண்மையில் சென்றால் அதற்கான காரணம் என்ன? ஒருவேளை அமெரிக்கா அழிவின் பாதையில் சென்றால் மற்ற உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் நிலை என்ன? இதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

Sunday, January 08, 2012

மாமி, மாமா மற்றும் மாட்டிறைச்சி

நவம்பர் 4, 2008 ஆம் ஆண்டு. இரவு சுமார் 10 மணி. அரிசோனா மாநிலத்தின் செனட்டர் திரு. ஜான் மெக்கேன் அங்கு திரண்டிருந்த மக்களுக்கிடையே உரையாற்ற தொடங்குகிறார். அதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் திரு. ஒபாமா திரு. மெக்கேனை தோற்கடித்து விட்டார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு திரண்டிருந்த மக்களுக்கிடையே கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டாம் என்பதால் அந்த முடிவுகள் அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. மெக்கேன் அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்று அங்கே இருந்த ஒவ்வொருவரும் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக மெக்கேன் அவர்கள் மேடையில் தோன்றி தனது தோல்வியையும், ஒபாமா அவர்களின் வெற்றியையும் அறிவித்தார். குழுமி இருந்த மக்கள் இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் "பூ" செய்தனர்.

உடனே இடை மறித்த மெக்கேன், "அவர் இப்பொழுது அதிபர் வேட்பாளர் இல்லை, உங்களுக்கும், எனக்கும், அனைத்து அமெரிக்கர்களுக்கும் இனி நான்கு ஆண்டுகளுக்கு அதிபர் அவர் தான். அவருக்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் மரியாதை அளிக்க வேண்டும்." என்று சற்று கடுமையாகவே கருத்து தெரிவித்தார்.

அதே நேரத்தில் இலினாய் மாநிலத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா தனக்கு முதல் வாழ்த்து மெக்கேனிடம் இருந்த வந்ததாகவும், மெக்கேன் அமெரிக்காவிற்கு செய்துள்ள சேவையை தன்னால் நினைத்து கூட பார்க்க இயலாதென்றும், அவருடன் ஒன்று சேர்ந்து இனி பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நாம் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, ஆங்கிலப் பாடல்களை, ஹாலிவுட் திரைப்படங்களை வெட்கமே இல்லாமல் காப்பி அடிக்கிறோம். நமது அரசியல் வாதிகளும் அமெரிக்க அரசியல் வாதிகளை காப்பி அடித்து தொலைத்தால் என்ன? என்று கேட்க தொன்றுகிறது.

ஜெயலலிதா கருணாநிதியை "திருக்குவளை தீய சக்தி" என்று கூறுவதும், கருணாநிதியின் அல்லக்கைகள் ஜெயலலிதாவின் ஜாதியின் மீதுள்ள துவேஷத்தால் வெறுப்பை கக்குவதும் கேவலமாக இருக்கிறது. ஒரு அறிக்கை விடுவதுடன் தலைவர்களான இவர்கள் வேலை முடிந்து விடும். இவர்கள் மீதுள்ள அபிமானத்தால் தொண்டர்கள் மீண்டும் ஒரு தர்மபுரி சம்பவத்தையோ இல்லை மதுரை சம்பவத்தையோ நிகழ்த்தினால் காலத்திற்கும் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்கள் தான்.

உடன்பிறப்புகளே! ரத்தத்தின் ரத்தங்களே! உங்களின் தலைமை மீது உங்களுக்கு உண்மையிலேயே அபிமானம் இருந்தால் அடுத்த முறை அமெரிக்காவில் இருந்து யாராவது தமிழகம் வரும் பொழுது மெக்கேன் மற்றும் ஒபாமாவின் மூ****தை ஒரு லிட்டர் கொண்டு வரச்சொல்லி உங்கள் தலைமைக்கு கொடுங்கள். அப்பொழுதாவது புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.

தொடர்புடைய செய்தி: நக்கீரன் இதழில் வெளிவந்த "'மாடு திங்கும் மாமி நான்', என்கிறார் ஜெயலலிதா" என்ற செய்தியினை ஒட்டி ஏற்பட்ட கலவரத்தில் இரண்டாம் நாளாக தொடர்ந்து நக்கீரன் அலுவலகங்கள் மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

Saturday, January 07, 2012

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டுநன்றி பதிவர் அவைநாயகன். மேலும் விபரங்களுக்கு பார்க்க வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Wednesday, January 04, 2012

பொடிமாஸ் - 01/04/2012

புத்தாண்டு பிறப்பு நன்றாக சென்றது. எனது மைத்துனருக்கு சிறிது உடல் நிலை சரியில்லை. அதனால் தீர்த்த பார்ட்டிகள் இல்லை. புத்தாண்டன்று சத்திய நாராயண விரத பூஜை செய்தோம். மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஆண்டு அனைவருக்கும் அருமையான ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.ஆஸ்திரேலியாவில் வழக்கம் போலவே நம்மவர்கள் சொதப்புகிறார்கள். பாண்டிங்கை ஃபார்முக்கு கொண்டு வந்தாகி விட்டது. இந்த டூர் நாம் போகாமல் இருந்திருந்தால் அடுத்த ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையே நடக்கவிருக்கும் போட்டிகளில் அவரை நிச்சயம் பொங்கல் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி இருப்பார்கள். பாண்டிங் இருக்கும் வரை சச்சினின் டெஸ்ட் சாதனைகளுக்கு சோதனை தான். சச்சினும் அடி வயிற்றில் அணுகுண்டு வைத்தது போலவே இருப்பார். சென்னையில் இருப்பவர்கள் விரைவில் பாண்டிங் ரிட்டயர் ஆக 'கிரிக்கெட்' பிள்ளையாருக்கு தினமும் பன்னிரெண்டு தோப்புக்கரணம் போடுங்கள். எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் உங்கள் தொப்பை குறையும்.திருச்சியில் கடந்த மாதம் புதிதாக அஞ்சப்பர் ஹோட்டல் தொடங்கி இருக்குறார்கள். படுபாவிகளா நான் அங்கே இருக்கும் பொழுது தொடங்கி இருக்க கூடாதா? நாவில் எச்சில் ஊறுகிறது. இந்தியா செல்லும் பொழுது வகை தொகை இல்லாமல் சாப்பிட வேண்டும். நம்மாட்களின் பிரச்சினையே இதுதான். இந்தியாவிற்கு சென்றால் மினரல் வாட்டர், பீசா, பர்கர் கேட்பது. அமெரிக்கா வந்தால் பரோட்டா, சால்ணா கேட்பது. திருந்தவே மாட்டோம். நான் மட்டும் என்ன விதிவிலக்கா?இந்த வெள்ளிகிழமை ப்ளேயர்ஸ் படம் வெளியாகிறது. இடாலியன் ஜாபின் தழுவல். அப்பாஸ் மஸ்தான் படங்கள் எனக்கு பிடிக்கும். சுவாரசியமாகவே இருக்கும். இதில் எனக்கு பிடித்த அபிஷேக் பச்சனும் இருக்கிறார். இந்த வார இறுதியில் பார்க்க வேண்டும். ஆனால் என்ன, படத்தை இந்திய சூழலுக்கு ஏற்றவாரு மாற்றியதில் ஒரு முக்கோண காதலையும் சேர்த்து தொலைத்ததாக சமீப பேட்டி ஒன்றில் படித்தேன். சொதப்பாமல் இருந்தால் சரி. அடுத்த வாரம் இருக்கவே இருக்கிறது நண்பன். வேட்டை பார்ப்பேனா என்று தெரியவில்லை. பார்க்க மாட்டேன் என்று தான் நினைக்கிறேன்.வாஷிங்டன் டிசியில் வெட்பம் உறைநிலைக்கும் கீழே உள்ளது. இன்று காலை -10oC வெட்பம் பதிவானது. குழந்தையை எங்கும் வெளியில் அழைத்து செல்ல இயலவில்லை. நான்கு சுவருகளுக்குள்ளேயே அவன் இருக்கிறான். மாண்டியையும் வெளியில் அழைத்து செல்வது கடினமாக இருக்கிறது. நல்ல வேளை இன்னும் பணிப்பொழிவு தொடங்க வில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கே சுமார் இரண்டு அடி பணிப்பொழிவு இருந்தது. இன்னும் இரண்டு மாதங்கள் பல்லை கடித்துக் கொண்டு ஓட்டி விட்டால் அதன் பிறகு அடுத்த பத்து மாதங்களுக்கு கவலை இல்லை. இங்கேயே இப்படி என்றால் கனடா போன்ற தேசங்களில் இருப்பவர்களின் நிலையை நினைத்தாலே வயிற்றை கலக்குகிறது.இந்த மாத இறுதியில் எனது நண்பர் தனது குடும்பத்துடன் இந்தியா நிரந்தரமாக செல்கிறார். சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இம்மாதிரி மூன்று பேர் இந்தியா சென்று விட்டார்கள். நான் வந்து ஆறு ஆண்டுகள் ஆகிறது. விரைவில் இந்தியா செல்ல வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது. பார்ப்போம், கடவுள் விட்ட வழி.சென்னையில் வீடு வாங்க வேண்டும் என்றால் ஏதாவது வங்கியை கொள்ளை அடிக்க வேண்டும் போல் உள்ளது. அவ்வளவு விலை சொல்கிறார்கள். உண்மையிலேயே அவ்வளவு விலையா இல்லை ஸ்பெகுலேஷன்களினால் விலை ஏறுகிறதா என்று தெரியவில்லை. எஸ். வீ. சேகரின் பாலவாக்கத்தில் திருடர்கள் நாடகத்தில் வீட்டு மனை வாங்க கீழ்கண்டவாரு விளம்பரம் இருக்கும்.

"சென்னைக்கு அருகில் உள்ள அடையார், அடையாருக்கு அருகில் உள்ள திருவான்மயூர், திருவான்மயூருக்கு அருகில் உள்ள பெசன்ட் நகர், பெசன்ட் நகருக்கு அருகில் உள்ள பாலவாக்கம்" என்று நகைச்சுவையாக சொல்வார்கள்.

இன்று அதெல்லாம் கடந்து மாமல்லபுரத்திலேயே கோடி கணக்கில் சொல்கிறார்கள். திருச்சியில் ஸ்ரீ ரங்கத்தில் நாற்பது லட்சம் ஐம்பது லட்சம் என்கிறார்கள்.

இந்தியாவில் நிறைய ஏழைகளுக்கு நடுவே நிறைய பணக்காரர்களும் இருக்கிறார்கள்.புத்தாண்டு என்றாலே இந்த பாடல் தான் எல்லோர் நினைவிற்கும் வரும். இந்த பாடலை திருச்சி REC யில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஃபெஸ்டம்பரில் பாடியே முதல் பரிசை தட்டி செல்லும் எங்கள் கல்லூரி. நான் படித்த பொழுது கார்த்திக் ஸ்ரீனிவாஸ் என்ற மாணவன் SPB போலவே பாடுவான். தொடர்ந்து 15 ஆண்டுகளாக எங்கள் கல்லூரியே அதை வென்று வருகிறது என்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.