Tuesday, May 20, 2008

தேவை எச்சரிக்கை!

பதிவுலக நண்பர்களே!

Orkut இணையதளத்தில் சோனியா காந்திக்கு எதிரான ஒரு கருத்துக் களத்தில் கிருஷ்ணகுமார் என்ற 22 வயது இளைஞர் அவரை பற்றி தவறான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் குர்கானில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி செய்பவர்.

அதனை கண்ட பூனா காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் அவரது IP கண்டுபிடிக்கப்பட்டு அவர் இன்று கைது செய்யப்பட்டார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் 5 ஆண்டுகள் வரை சிறைவாசம் இருக்க நேரிடும்.

அவர் சோனியா காந்தியினை பற்றி என்ன எழுதினார் என்பது தெரியாத நிலையில் அவரது கைது சரியா அல்லது தவறா என்று கூற இயலவில்லை. ஆனாலும் இணையம் தரும் கட்டற்ற சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இதனை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேறு இல்லை.

வலைப்பதிவு என்பது தனியொரு மனிதனின் நாட்குறிப்பு என்று இருந்த காலம் மாறிவிட்டது. அச்சு ஊடகங்கள் வலைப்பதிவுகளை கூர்ந்து கவனிக்க தொடங்கிவிட்டன. இவ்வாறு அச்சு ஊடகத்திற்கு மாற்றாக இணைய ஊடகம் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் வலைபதிவாளர்கள் பலரும் பல செய்திகளுக்கு எதிர்வினை ஆற்றுகிறோம். Orkut தளத்திலும் பல குழுமத்தில் இருக்கிறோம். நமது கருத்துக்களையும் பல இடங்களில் பதிவு செய்கிறோம். இந்த நிலையில் இணையத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவதே நல்லது.

ஆகவே நண்பர்களே இணையத்தில் எழுதும் பொழுது இன்னும் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுவோம்.

மேலும் தகவல்களுக்கு இங்கே செல்லுங்கள்.

Thursday, May 08, 2008

அன்னையர் தினத்தில் தந்தையின் நினைவு    "அப்பொழுது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேரூந்தில் பயணம் செய்ய இலவச கடவுச்சீட்டு அளித்தது. அதனை பெறுவதற்கு நான் விண்ணப்பத்தில் எனது தந்தையின் கையொப்பத்தை பெற முயன்றேன். அதற்கு எனது தந்தை 'அது ஏழை மாணவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகை. பேரூந்து பயணத்திற்கு பணம் செலவு செய்ய முடியாத நிலையில் நாம் இல்லை. நமக்கு அது வேண்டாம்.' என்று கூறி விட்டார். அதனால் தொடர்ந்து தனியார் பேரூந்திலேயே பயணிக்க தொடங்கினேன்."


இது கடந்த ஆண்டு எனது பேரூந்துப் பயணங்களின் சில நினைவுகள் பதிவில் நான் எழுதியது. படித்துவிட்டு பின்னூட்டமிட்ட சீமாச்சு அவர் சிறந்த தந்தை என்று குறிப்பிட்டார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த பின்னூட்டங்களில் அது முதன்மையானது.

இந்த நேரத்தில் அவரை பற்றிய ஒரு சிறு முன்னுரை அவசியம் என்று கருதுகிறேன். எனது தந்தை சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். சிறு வயது என்றால் பிறந்த 40 நாட்களில். அந்த இளம் வயதில் தனது கணவனை இழந்த எனது பாட்டி, தனது கைப்பிள்ளையை (எனது தந்தையை) தனது சகோதரியின் வீட்டில் விட்டு விட்டு தான் தொடராமல் விட்ட கல்வியினை தொடர சென்று படித்து முடித்து திருச்சியில் முதன்மை கல்வி நிறுவனங்களுள் ஒன்றான E.R. தொடக்க பள்ளியில் (இப்பொழுது அந்த பள்ளி இல்லை. மேல்நிலை பள்ளி மட்டுமே இருக்கிறது.) ஆசிரியையாக சேர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஓய்வு பெற்றவர். ஆனால் அவர் தனது கல்வியை முடிக்கும் வரை எனது தந்தை, தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல் வேறொருவர் வீட்டில் வேலைக்காரனை போல வளர்ந்து வந்தார். நல்ல உணவு கிடையாது, உடைகள் கிடையாது. உணவும் அந்த வீட்டில் அனைவரும் உண்ட உடன் மீதம் உள்ளதே உண்ண வேண்டும். அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் குதிரை வண்டியில் பள்ளிக்கு செல்ல இவர் சுமார் மூன்று நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே செல்வார். ஒரு முறை இவர் நடந்து வருவதை பார்த்து பொறுக்க முடியாமல் இவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்த ஜட்கா வண்டிக்காரருக்கு கிடைத்தது பணி நீக்கம்.

என்ன திரைப்படத்தில் பார்ப்பது போல இருக்கிறதா? அது தான் உண்மை.

சிறு வயதில் பாசத்திற்காக அவர் ஏங்கியதினாலோ என்னவோ எங்களை அவர் எதற்கும் ஏங்க வைத்ததே இல்லை. போதும் போதும் என்ற அளவிற்கு அன்பையும் பாசத்தையும் பொழிந்து வளர்த்தார். ஆனால் நான் எனக்குள் இருக்கும் எனது தந்தை பாசத்தை உணர்ந்தது கல்லூரியில் படிக்கும் பொழுது மட்டுமே. அதுவரை நான் ஒரு "அம்மா செல்லம்" தான். எனக்கு எது வேண்டும் என்றாலும் அது என் அம்மாவின் மூலமே அப்பாவிற்கு கோரிக்கையாக வைக்கப்படும்.

என்னை சிறு வயதில் "Primary Complex" எனப்படும் ஒரு வித நோய் தாக்கியது. சிறிது அழுதாலும் கூட எனக்கு சளி, இருமல், ஜுரம் என்று தொடர்ச்சியாக பாதிப்பு வந்து விடும். பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும். அதனாலேயே கண்டிப்பிற்கு பெயர் போன எனது தந்தை என்னை அடித்ததோ கடிந்து கொண்டதோ மிகவும் குறைவு. மற்றபடி எனது அண்ணன்கள் அவரிடம் வாங்கிய அடிகளை நான் பதிவிட்டால் அவரை "குழந்தைகள் வதை சட்டத்தில்" கைது செய்து விடுவார்கள். அவ்வளவு கண்டிப்பானவர்.

அதனாலேயே அந்த வயதில் எனக்கு எனது தந்தையை விட எனது தாயாரிடமே ஒட்டுதல் அதிகம் இருந்தது. சிறிது வளர்ந்து உலக விஷயங்கள் புறியத்தொடங்கிய கால கட்டங்களில் தான் அவரது கண்டிப்புகள், திட்டுகள், அடிகள் அனைத்தும் "தேன் தடவப்பட்ட மாத்திரைகள்" என்று புறிந்தது.

அது நான் எட்டாம் வகுப்பிலோ அல்லது ஒன்பதாம் வகுப்பிலோ படித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு முறை எனது பாடப் புத்தகங்களுக்கு நடுவில் "சரோஜா தேவி" கதை புத்தகம் ஒன்றை அவர் பார்த்து விட்டார். பார்த்து விட்டு என்னை கடிந்து கொள்ளவில்லை, திட்டவில்லை. புத்தகத்தை கூட இருந்த இடத்திலேயே வைத்து விட்டார்.

மறுநாள் எனது தாயார் என்னிடம் வந்து படிக்கும் வயதில் மனதை அலையவிடாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு மட்டும் அறிவுரை கூறினார். அதன் பிறகு நான் தனி அறைகளில் இருக்கும் நேரங்களில் கதவினை தட்டி விட்டே உள்ளே நுழையும் பழக்கத்தை மேற்கொண்டார். அதன் பிறகும் அவர் என்னிடம் பழகுவதில் எந்த மாற்றமும் காட்டியதில்லை என்றாலும் சிறிது நாட்களுக்கு நான் அவரை பார்க்கவே கூசினேன்.

வங்கியில் வேலை காரணமாக ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் வரும் இட மாற்றத்தை அவர் எங்கள் மீது சுமத்தியதே இல்லை. எங்கள் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர் மட்டுமே செல்வார். வார இறுதிகளில் மட்டுமே வருவார். சிறிது காலம் தொடர்ந்த இது பின்னர் அவருக்கு திருச்சிக்கு இடமாற்றம் கிடைத்த உடன் முடிவிற்கு வந்தது.

அவரிடம் என்னை மிகவும் கவர்ந்தது அவரது நேரம் தவறாமை. எனது மாமா விளையாட்டாக இவ்வாறு கூறுவார், "உங்க அப்பா போய் தான்டா ரயில ஷெட்டிலிருந்து ப்ளாட்பார்ம்க்கு கூட்டிக்கிட்டு வரனும்." என்று. மேலும் உறவினர் வீட்டு விழாக்களுக்கு முதலில் செல்வது நாங்களாகத்தான் இருக்கும். ஒரு வேளை எங்களால் செல்ல முடியவில்லை என்றால் முதலில் அவர்களுக்கு கிடைப்பது எங்களின் வாழ்த்து அட்டையாகத்தான் இருக்கும்.

அதே போன்று அவரது ஒழுக்கமும் குறிப்பிட்டு சொல்லக் கூடியது. எந்த பொருளும் வைத்த இடத்தில் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார். 1974 இல் அவர் கட்டிய வீட்டு வரி ரசீது இப்பொழுதும் அவரிடம் இருக்கும். அவர் அப்படி இருப்பது போலவே நாங்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எவ்வளவு விளையாடினாலும், எங்கு சென்றாலும் மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இல்லையென்றால் இரவு உணவு கிடையாது.

அதே போன்று அவர் அடிக்கடி சொல்லும் கருத்து ஒன்று, "நமது பணம் எவ்வளவு வேண்டுமானாலும் அடுத்தவரிடம் இருக்கலாம். ஆனால் அடுத்தவர் பணம் ஒரு ரூபாய் கூட நம்மிடம் இருக்க கூடாது." என்பது. ஒரு முறை கல்லூரித் தேர்வுக் கட்டணம் (சுமார் 500 ரூபாய் என்று நினைவு) கட்ட ஏதோ நல்ல நாள் என்று பேராசிரியர் ஒருவர் என்னை கட்டாயப்படுத்தி அவரே பணம் கொடுத்து ரசீதும் பெற்றுக் கொடுத்தார். அதனை அறிந்த எனது தந்தை அன்று இரவே அவரது வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி அளிக்கும் படி என்னை அனுப்பிவைத்தார். ஒரு ரூபாய் கூட தேவை இல்லாமல் கடன் வாங்குவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.

மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர். தினமும் தவறாமல் வழிபாடு செய்பவர். அவரை திருநீறு, சந்தனம், குங்குமம் இல்லாமல் பார்க்கவே முடியாது. மாலையில் அலுவல் முடிந்து வரும் பொழுதும் அவை அவர் நெற்றியில் அழியாமல் இருக்கும். ஆனாலும் எங்கள் மீது அவர் இறை நம்பிக்கையை திணித்ததே இல்லை.

படிப்பை பொருத்த வரை எனது அண்ணன்கள் இருவரும் படு சுட்டி. எனது பெரிய அண்ணன் பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான். ஆனால் நானோ பன்னிரண்டாம் வகுப்பில் ஊர் சுற்றி குறைந்த மதிப்பெண்களே பெற்றேன். அந்த நேரத்தில் சில உறவினர்களும் நண்பர்களும் என்னை எனது சகோதரர்களுடன் ஒப்பிட்டு என்னை வருத்தப்படுத்திய போதும் அவர் ஒரு நாளும் என்னை யாரிடமும் விட்டுக் கொடுத்ததே இல்லை. "அவன் கடுமையாக உழைத்தான். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் மதிப்பெண்களாக கிடைக்கவில்லையென்றால் வேறு விதத்தில் கிடைக்கும்." என்று தான் அவர்களிடம் அவர் கூறுவார்.

இப்பொழுதும் இந்த வயதிலும் எனக்கு ஏதாவது வேண்டும் என்று கூறினால் ஓடிப் போய் செய்கிறார். ஆனால் அவருக்கு நான் ஒன்றுமே செய்தது கிடையாது. அவரை நான் பார்த்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நேற்று கணிணியில் பழைய புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது எனது தந்தையின் புகைப்படத்தையும் பார்க்க நேர்ந்தது. அது சென்ற ஆண்டு எனது மனைவி இந்தியா சென்ற பொழுது எடுத்தது.

நான் முன்னர் பார்த்ததை விட இப்பொழுது தலையில் நரை கூடி இருக்கிறது. முகத்தில் சுருக்கங்களும் அப்படியே. வயதாகி விட்டது. இந்த ஓராண்டு காலத்தில் அவை இன்னும் அதிகமாகியிருக்கக் கூடும். அவரது மடியில் தலை சாய்த்து படுக்க மனம் விழைகிறது.

பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் ஜெயராம் கூறுவது மனதில் எதிரொலிக்கிறது, "எந்த விதமான வலுவான காரணிகளும் இல்லாமல் உறவுகளை எதற்கு உடைக்க வேண்டும்?" இந்தக் கேள்வி என்னை பலவாறு சிந்திக்க வைக்கிறது. "எனது வசதி; எனது வாழ்க்கை." என்ற சுயநல சிந்தனையிலிருந்து நான் என்று வெளி வருவேன் என்பது தெரியவில்லை.

"அப்பா! எங்கிருந்து வந்தது எனக்கு இந்த சுயநலம்? உங்களிடமிருந்தோ இல்லை அம்மாவிடமிருந்தோ வந்திருக்க வாய்ப்பில்லையே. யார் கொடுத்த சீதனம் இது?"

கேள்வி மட்டுமே மிஞ்சி இருக்கிறது. பதில் இல்லை.