Thursday, October 25, 2012

கமலஹாசனும், நாயகனும், கொஞ்சம் நரகலும்

சமீபத்தில் திரு. கமலஹாசனின் நாயகன் பற்றிய ஹிந்து நாளிதழில் வெளியான கடிதம், அதன் தொடர்ச்சியான நாயகன் பட தயாரிப்பாளர் திரு. முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அதனை தொடர்ந்த சர்ச்சை ஆகியவை பற்றியே எழுதுகிறேன்.

சாதாரண பதிவொன்றை எழுதி விட்டு அதை நால்வர் பாராட்டி விட்டாலே நமது உச்சி குளிர்ந்து போய் விடும். அப்படி இருக்கையில் டைம் பத்திரிக்கையினால் உலகின் தலை சிறந்த நூறு படங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட, மூன்று தேசிய விருதுகள் வாங்கிய, இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் சிலாகிக்கும் படம் ஒன்றை கொடுத்துவிட்டு அதன் நினைவுகளை 25 ஆண்டுகள் கழிந்த பின்னர் நினைவு கூறுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும்.

ஆனால் என்ன, அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது போதை அதிகமாகி நடு வீட்டில் வாந்தி எடுப்பது போல சிலவற்றை தனது கடிதத்தில் வாந்தி எடுத்துவிட்டார் நமது கலைஞானி.

கமல் எழுதிய கடிதத்தை படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டிக்கு சென்று கடிதத்தை முழுதும் படித்து விடுவது உத்தமம்.

Link : Of course Velu Nayakan doesn't dance

முதலில் கடிதத்தின் தொடக்கத்திலேயே தனது விக்ரம் படத்தை பற்றி சொல்லும் பொழுது கமல் மற்றும் சுஜாதாவின் அறிவு ஜீவித்தனம் கோடம்பாக்கத்தினால் அழிக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிடுகிறார், வசதியாக அப்படத்தின் திரைக்கதை தனது என்பதை நினைவு கூறாமல். மேலும் அப்படத்தை மணி இயக்கி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். இது அதனை இயக்கிய ராஜசேகருக்கு உச்சகட்ட அவமானம்.

சரி அடுத்ததாக நாயகன் பற்றி அவர் குறிப்பிடும் பொழுது கடிதம் நெடுக அறிவுஜீவிகளான மணியும் கமலும் தயாரிப்பாளர் முக்தாவினால் அடைந்த மன உளைச்சல்கள் தான் இருக்கின்றன. சரி இவ்வளவு கஷ்டப்பட்டு படத்தினை எடுத்ததன் பலன் தான் நாயகன் திரைப்படம் என்பதை நினைவு கூறும் முயற்சியாக அதனை எடுத்துக் கொள்ள இயலவில்லை. அந்த கடிதத்தில் சாதித்து விட்ட பூரிப்போ அல்லது பெருமுச்சோ தெரியவில்லை. மாறாக முக்தாவின் ஒத்துழைப்பு இல்லாததினால் படத்திற்கு ஏற்பட்ட இழப்பின் காரணமான எரிச்சலே தெரிகிறது. அதன் உச்ச கட்டமாக மணிக்கு ஹார்ட் அட்டேக் வந்ததன் காரணமே முக்தாவின் கெடுபிடிகள் தான் என்ற தோற்றம் தருகிறது இந்த கடிதம்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன் 10 ரூபாய் முதலீடு செய்து 20 ரூபாய் லாபம் சம்பாதிக்க நினைப்பது அவ்வளவு பெரிய குற்றமா? ஒரு தயாரிப்பாளர் எதற்கு கலை சேவை செய்ய வேண்டும்? நாடே போற்றும் ஒரு சிறந்த படத்தை தயாரிப்பதினால் அவருக்கு கிடைக்கும் நன்மை என்ன? அழகி, சேது, பிதாமகன் போன்ற படங்களை தயாரித்தவர்களின் நிலை என்ன? அப்படங்களில் நடித்தவர்களுக்கும் இயக்கியவர்களுக்கும் அடுத்தடுத்த படங்களில் சில பல கோடிகள் கிடைத்தன. ஆனால் தயாரித்தவர்களுக்கு.

ஏன்?, நாயகனையே எடுத்துக் கொள்வோம். அப்படத்தின் வெற்றியினால் அதிகம் நன்மை அடைந்தவர்கள் யார்? மணி மற்றும் கமல் தானே. நல்ல படத்தை தயாரித்த முக்தாவிற்கு என்ன கிடைத்தது? 25 ஆண்டுகளுக்கு பின்னர் வசை தானே கிடைத்தது.

எங்கே நான் கமலின் சில படங்களை குறிப்பிடுகிறேன், அவற்றின் தயாரிப்பாளர் யார் என்பதை படத்தின் DVD யின் உதவியோ அல்லது விக்கீபீடியாவின் உதவியோ இல்லாமல் உங்களால் கூற முடிகிறதா என்பதை பார்ப்போம். மூன்றாம் பிறை, மைக்கேல் மதன காம ராஜன், சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், மஹாநதி ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் யார் என்பது தெரியுமா? அவ்வளவு ஏன்? பலர் சிலாகிக்கும் இந்த நூற்றாண்டில் வெளி வந்த அன்பே சிவம் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது தெரியுமா? இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இப்படங்களினால் பெரிதும் லாபம் அடைந்தவர் கமல் தான். அவரின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுகள் அவருக்கு வந்தன. ஒரு வேளை அப்படங்களினால் அவருக்கு வந்த பாராட்டுகளை அவர் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களோடு பகிர்ந்து கொண்டிருந்தால் அவர் விரும்பிய படி பல தயாரிப்பாளர்கள் வந்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்யாத போது தயாரிப்பாளர்களை லாப நோக்குடன் இருப்பதாக குற்றம் கூறுவது மிகவும் கேவலமானது.

சரி இவர் வியந்து பாராட்டும் இயக்குனர் பாலசந்தர் ஏன் திருமலை, திருவண்னாமலை போன்ற குப்பைகளை தயாரிக்கிறார். சொந்த பணத்தில் பேரரசு டைப் படங்களை எடுத்துவிட்டு அடுத்தவர் பணத்தில் திரைக் காவியங்களை எடுக்கும் போலி திரை மேதைகளைவிட 5 லட்சம் லாபம் சம்பாதிக்கும் படத்தினை தயாரிக்க முயன்ற முக்தா போன்றவர்கள் ஒன்றும் குறைந்து போய்விட வில்லை.

ஒரு தயாரிப்பாளர் லாபத்தை எதிர் பார்க்க கூடாது, கலை சேவை செய்ய வேண்டும், தன்னை வைத்து தான் எதிர் பார்த்தது போல படத்தினை எடுக்க வேண்டும், தான் எதிர்பார்த்த சம்பளமும் தனக்கு கொடுக்க வேண்டும், அதனால் நஷ்டம் வந்தால் சந்தோஷத்துடன் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் அந்த படம் சிலாகிக்கப் படும் பொழுது மட்டும் அப்படத்தில் நடித்த நடிகர் வந்து அந்த பாராட்டுகளை எடுத்துக் கொள்வார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அதனை தான் கமல் விரும்புகிறார்.

படம் எடுத்தாகி விட்டது, அது நன்றாக ஓடி பெரிய வெற்றி பெற்று விட்டது, பலர் அதனை பாராட்டுகிறார்கள், 25 ஆண்டுகளும் ஓடி விட்டது. இப்பொழுது வந்து படத்தின் தயாரிப்பாளர் வெஸ்ட்மோரை மேக் அப் செய்ய அனுமதிக்க வில்லை, ஜிம் ஆலனை சண்டை காட்சிகளை இயக்க அனுமதிக்க வில்லை, காஸ்ட்யூம் டிசைனுக்கு தனியாக ஆட்களை வைத்துக் கொள்ள அனுமதி தரவில்லை, கம்பி வைத்து உடைக்க காரை தரவில்லை என்றெல்லாம் கூறுவது வேடிக்கையாக மட்டும் இல்லை அசிங்கமாகவும் இருக்கிறது. அதன் உச்ச கட்டமாக படத்தின் காட்சிகளை எடுக்க பிலிம் ரோல்களை ரேஷன் செய்து கொடுத்தார் என்று சர்காஸத்துடன் கூறுவதாக நினைத்துக் கொண்டு கூறுவது பற்றி என்ன சொல்வது,

"Sorry Mr. Kamal Haasan. Not only your rationalism, this letter of yours is also nauseating."

பின்னர் சேர்த்தது:

திரு. முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் கமலின் கட்டுரைக்கு தனது பதிலை அளித்துள்ளார். அதனை கீழே உள்ள சுட்டிக்கு சென்று படியுங்கள்.

Link : Living in past glory

Friday, October 19, 2012

ஒரு பாம்புக் கடியும் சில அனுபவங்களும்

நான்கு வாரங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ஒரு சனிக்கிழமை காலை என்றைக்கும் இல்லாத திரு நாளாக தங்கமணி வீட்டை வாக்கூம் செய்து கொண்டிருந்தார். பொதுவாகவே இம்மாதிரி வேலைகள் எனது கஸ்டடியில் விடப்படும். அன்றைக்கு ஏதோ விதிவிலக்கு. ஆனால் பதிவு அதை பற்றியதல்ல.

அன்று மாலை நாங்கள் மாண்டியுடன் விளையாடும் பொழுது அவனது பின் கால் தொடை பகுதியில் தங்கமணி கை வைத்ததும் தனிச்சையாக கைகளை அவன் கடிக்க வந்தான். பின்னர் கைகளை முகர்ந்து பார்த்துவிட்டு சென்று விட்டான். நானும் அந்த இடத்தில் கை வைத்தேன். என்னையும் கடிக்க வந்தான். எங்களுக்கு ஒரே வியப்பு. பொதுவாகவே வீட்டு நாய்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களை கடிக்கவே கடிக்காது. அதிலும் மாண்டி பரம சாது. சில நேரங்களில் ப்ரணவ் அவனது வாலையும், காதுகளையும், முடியையும் பிடித்து இழுத்து விளையாடும் போது கூட வீல் என்று கத்திவிட்டு பரிதாபமாக எனது கால்களுக்கு நடுவிலோ அல்லது தங்கமணியின் கால்களுக்கு நடுவிலோ படுத்துக் கொள்வானே தவிர கடி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. செல்லக் கடிகள் கூட கிடையாது. அப்படி இருக்கும் பொழுது எங்களை கடிக்க வந்தது எங்களுக்கு மிகவும் கவலை அளித்தது. அப்பொழுது தான் தங்கமணி காலை வாக்கூம் செய்யும் பொழுது வக்கூம் க்ளீனர் இவனது தொடையில் மோதிவிட்டது என்று கூறினார். சரி அதனால் இவனது தொடையில் ஏதோ வலி என்று நினைத்து, விளையாடுவதை நிறுத்தி அவனது ப்ளே பென்னில் அவனை விட்டு விட்டு இரவு உறங்கி விட்டோம்.

அடுத்த நாள் ஞாயிறு அன்று கூட அவனை அதிகம் தொல்லை செய்யாமல் இருக்க வேண்டி காலை, மாலை, இரவு முன்று வேளையும் சிறிது தொலைவே வாக்கிங் சென்றோம். அன்று இரவு அவனை மடியில் வைத்துக் கொண்டு தொலைக்காட்சியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவனது பின்னங்கால் தொடையில் மொறு மொறுப்பாக ஏதோ கைகளில் அகப்பட்டது. முதலில் அது ஏதோ உணவு அவனது மேல் பட்டு காய்ந்து விட்டது என்று நினைத்தேன். சிறிது கவனித்து பார்த்த பின்னர் அது அவனது உறைந்த ரத்தம் என்பது தெரிந்தது. நன்றாக பெரிய ஒரு ரூபாய் அளவுக்கு இருந்தது.

உடனே தெரிந்து விட்டது அவனுக்கு ஏதோ காயம் ஏற்பட்டு இருகிறது என்று. ஆனால் எதனால் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. தங்கமணியோ வாக்கூம் க்ளீனர் இடித்தது லேசாக என்றும் அதனால் இவ்வளவு பெரிய காயம் எற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். நான் குழம்பி போனேன்.

அடுத்த நாள் திங்கள் என்று காலை முதல் வேலையாக 7 மணிக்கே டாக்டரிடம் கூட்டி சென்றேன். முன்னரே அப்பாயின்ட்மென்ட் எதுவும் வாங்கவில்லை. நல்ல வேளை டாக்டர் இவனை பரிசோதிக்க ஒப்புக் கொண்டார். முதலில் காயத்தை பரிசோதித்தார். நன்றாக முடிகளை ஷேவ் செய்து, உறைந்து இருந்த ரத்த திப்பிகளை நீக்கி பார்த்த போது இரண்டு பல் பட்ட ஆழமான காயம் ஒன்று இருந்தது. அதை பார்த்த உடனே எனக்கும் தெரிந்து விட்டது அந்த டாக்டருக்கும் தெரிந்து விட்டது இது பாம்புக் கடி என்று. எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும், எனது அறிவுக்கு இது விஷப் பாம்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. பின்னர் இவனது டெம்பரேச்சர், வெயிட், ஹார்ட் பீட், கண்கள் என்று அனைத்தையும் பரிசோதித்த பிறகு இவனுக்கு காய்ச்சலோ இல்லை வேறு ஏதானும் பாதிப்போ இல்லை என்பது உறுதியானது. ஆனால் கடித்த இடம் மட்டும் இல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கூட தடித்து இருந்தன. அது தான் டாக்டரை சிறிது கவலை கொள்ள செய்தது. விஷத்தினால் அந்த பகுதிகளில் உள்ள திசுக்கள் இறந்து அப்படி ஆகி இருக்க கூடும். அது மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால் எனக்கு மட்டும் அது அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்றே ஒரு நம்பிக்கை. ஒரு அடி நீளமும், அரை அடி உயரமும், 8 பவுண்டு எடையும் கொண்ட மாண்டியை விஷப் பாம்பு கடித்து இருந்தால் கடித்த சில நிமிடங்களிலேயே என்னவாகி இருக்கும் என்பது எனக்கு தெரிந்தே இருந்தது. கடித்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் அவன் நன்றாக விளையாடிக் கொண்டிருப்பதால் அது விஷப் பாம்பல்ல என்பதை நான் உறுதியாக நம்பினேன். அதே போல பாம்புக் கடியினால் அவனது உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிலை எனக்கு சிறிது ஆறுதல் அளித்தது.

இங்கே அமெரிக்காவில் க்ரேட்டர் வகை பாம்புகள் அதிகம். அவைகளுக்கு விஷம் கிடையாது. ஆனால் நான் வசிக்கும் பகுதியில் அவை அதிகம் கிடையாது. இவனை கடித்த பாம்பு ஏதாவது மழையினால் ஏற்பட்ட ஓடையில் வந்திருக்கக் கூடும். இரவில் ஏதாவது ஒரு புதற்றில் படுத்திருக்கும் பொழுது இவன் அருகில் சென்று சிறுநீர் கழிக்கும் பொழுது இவனை கடித்திருக்க வாய்ப்புகள் உண்டு. மனம் மெதுவாக புள்ளிகளை ஒன்று சேர்த்தது. எது எப்படியோ இனி இரவில் அவனை நெடுந்தொலைவு வாக்கிங் அழைத்து செல்லக் கூடாது என்று மட்டும் உறுதி செய்து கொண்டேன். ஆனால் தங்கமணிதான் பாம்புக் கடி என்றதும் மிகவும் பயந்து விட்டார்.

டாக்டர் என்னிடம் இன்ஃபெக்ஷன் வராமல் இருக்க 10 நாட்களுக்கு தேவையான ஆன்டிபயாடிக் மாத்திரைகளும், பெயின் கில்லர் மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினார். மேலும் மாண்டி புண்ணை நக்கியோ கடித்தோ இன்னும் பரவாமல் தடுக்க அவனது கழுத்தில் கோன் மாட்டப் பட்டது. 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அழைத்து வரும் படி கூறினார். என்னை தினமும் மூன்று வேளை புண்ணை ஹட்ரஜன் பெராக்ஸைட் கொண்டு சுத்தம் செய்யும் படியும், தேவை பட்டால் ஆன்டிபயாடிக் க்ரீம் ஏதாவது தடவும் படியும் சொல்லி விடை கொடுத்தார்.

அடுத்த 10 நாட்களும் நெடுந்தொலைவு வாக்கிங் செல்லாமலும், அதிகம் விளையாடாமலும், டாக்டர் சொன்னபடி தினமும் இரண்டு வேளை மாத்திரைகளை உட்கொண்டு, தினமும் மூன்று வேளை அவனது புண்ணை சுத்தம் செய்து இரண்டு வார காலத்தில் அவனது புண் முழுதாக குணமாகி விட்டது.


மேலே இருக்கும் புகைப்படம் நேற்று எடுத்தது. புண் குணமானாலும் தழும்பு இன்னும் அப்படியே இருக்கிறது. எனது நெஞ்சத்தில் எனது கவனக்குறைவினால் உண்டான தமும்பும் அப்படியே.

Wednesday, October 10, 2012

பொடிமாஸ் - 10/10/2012

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இப்பொழுது தான் நம்ம பதிவர் அண்ணன் மணிக் கூண்டு சிவாவுடன் அவர் சென்ற தேர்தலில் ஒபாமாவிற்கு பிரசாரம் செய்த பொழுது விவாதம் செய்தது போல இருக்கிறது. அதற்குள் நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. நேரம் விரைவாகத்தான் செல்கிறது. அவரிடம் நேரம் கிடைக்கும் பொழுது பேச வேண்டும். இப்பொழுதும் ஓபாமாவை தான் ஆதரிக்கிறாரா என்று கேட்க வேண்டும்.


இப்பொழுதெல்லாம் தமிழ் மண மத சண்டைகள் வயிற்றை குமட்டுகின்றன. மேலாண்மை பாடங்களில் ரூரல் மார்கெட்டிங் மற்றும் அர்பன் மார்கெட்டிங் டெக்னிக்ஸ் என்றொரு பாடம் இருக்கிறது. அதாவது நாம் எதை மார்கெட் செய்கிறோமோ அதை அந்த பொருளின் டார்கெட் ஆடியன்ஸ் முன்பு மட்டுமே மார்கெட் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு ஃபேர் அன்டு லவ்லி என்ற ஒரு ப்ராடெக்டை வெள்ளையர்கள் வசிக்கும் ஒரு நாட்டில் மார்கெட் செய்ய முடியாது. அதே போல டேனிங் ப்ராடக்ட்களை இந்தியாவில் மார்கெட் செய்ய முடியாது. இது மதத்தை மார்கெட் செய்பவர்களுக்கும் பொருந்தும். அந்த மதத்தை எதிர்த்து தொடர்ந்து பதிவெழுதுபவர்களுக்கும் பொருந்தும்.


மஹாராஷ்ட்ராவில் உத்தர பிரதேசத்தவர்களை உதைக்கிறார்கள். லக்னோவில் அஸ்ஸாம் மாநிலத்தவர்களை உதைக்கிறார்கள். பெங்களூரில் வட கிழக்கு மாநில மக்களை உதைக்கிறார்கள். காவிரியில் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுக்கிறது. முல்லை பெரியாரில் கேரளா தமிழகத்துடன் சண்டை போடுகிறது. வட நாட்டானுக்கு தென் நட்டானை கண்டால் ஆகாது. தென் நாட்டானுக்கு வட நாட்டானை கண்டால் ஆகாது. வேற்றுமையில் ஒற்றுமையாம் மண்ணாங்கட்டி. தேசியம் பேசுபவர்களை செருப்பால் அடித்தால் நன்றாக இருக்கும் என்று சில நேரங்களில் தோன்றுகிறது.


ராணி முகர்ஜியின் ஐயா படம் தமிழர்களை கொச்சை படுத்துகிறது என்று ஆளாளுக்கு பொங்கி எழுகிறார்கள். நம்மாட்களுக்கு தமிழுணர்வு ரொம்பவே பொங்கி வழிகிறது. இங்கே இல்லாத சர்தார்ஜி ஜோக்குகளா? இதையெல்லாம் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மாட்களுக்கு தேவை கொஞ்சம் நகைச்சுவை உணர்வு தான். கருப்பன் தான் பிடிக்கும் என்று ராணி முகர்ஜி சொல்வது நமக்கு கேவலமாக தெரிந்தால் கருப்பு நிறத்தை கேவலப் படுத்துவது நாமும் தான் என்பது நமது அறிவுக்கு என்றைக்கு தான் எட்டுமோ? கருப்பை கேவலமாக நாம் பார்ப்பதை முதலில் நிறுத்துவோம். பின்னர் மற்றவர்களை நிறுத்த சொல்வோம்.


சென்ற வாரம் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தேன். ஸ்ரீ தேவியின் கம் பேக் என்பதுடன் சீனி கம் மற்றும் பா படங்களை இயக்கிய பால்கியின் மனைவி இயக்கும் படம் என்ற எதிர் பார்ப்பும் சேர்ந்து கொள்ள ஒரு வித பதட்டத்துடனேயே படம் பார்த்தேன். ஞாயிறு இரவு காட்சி தான் பார்க்க முடிந்தது. அப்பொழுதும் கூட நல்ல கூட்டம். ஸ்ரீ தேவி வரும் முதல் காட்சியில் பலத்த கைதட்டல். முடிவில் ஸ்டான்டிங் ஓவேஷன். படம் எனது எதிர்பார்ப்பை நன்றாக பூர்த்தி செய்தது. என்ன படத்தின் ஒரே குறை அந்த ராமமூர்த்தி பாத்திரம் தான். பெரிதாக ஒட்டவில்லை. நம்மவர்களுக்கு ஹிந்தி தான் பிரச்சினை. இங்கிலீஷ் என்றால் பூந்து விளையாடுவார்கள்.


நாளை மறுநாள் இங்கே மாற்றான் வெளியாகிறது. கே. வி. ஆனந்த் படங்கள் எனக்கு ஒரு மாதிரியாக பிடிக்கும். அதாவது அவரின் படங்களை ஒரு முறை பார்க்க முடியும். அவ்வளவு தான். அவரது படங்களில் கனா கண்டேன் எனக்கு மிகவும் பிடிக்கும். அயன் சுமாராக பிடிக்கும். கோ பிடிக்கவே இல்லை. ஆனால் மக்களின் ரசனை வேறு மாதிரி இருந்தது. சூர்யாவிற்காக இந்த படத்தை பார்க்கிறேன். நன்றாக இருக்க வேண்டும். விஷ்வரூபம், அலெக்ஸ் பாண்டியன், நீ தானே என் பொன் வசந்தம் இந்த மூன்று படங்கள் கூட மாற்றானுடன் வெளி வரும் என்று செய்திகள் வந்தன. ஆனால் வர வில்லை. அனைத்து படங்களும் ஒரே நாளில் வெளி வந்திருந்தால் நான் இந்த வரிசையில் தான் படங்களை பார்த்திருப்பேன்.

நீ தானே என் பொன் வசந்தம் -> விஷ்வரூபம் -> மாற்றான். அலெக்ஸ் பாண்டியன் சத்தியமாக பார்த்திருக்க மாட்டேன். பின்னே, சுராஜ் படங்களை எல்லாம் திரையில் பார்க்க முடியுமா என்ன?


இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு நாளை 70 ஆவது பிறந்த நாள். அவரை பற்றி புதிதாக கூற என்ன இருக்கிறது. அவரது சுப்கே சுப்கே, நமக் ஹராம், ஜஞ்சீர், டான், தீவார், அக்னீ பத், ஷோலே, கபி கபி போன்ற பெரும் வெற்றி பெற்ற படங்கள் மட்டும் இல்லை தோ அவுர் தோ பான்ச், மர்த் போன்ற மொக்கை படங்களை கூட வியந்து பார்த்திருக்கிறேன். திரையில் அவரது ஆளுமையை பற்றி நான் கூறுவதை விட சமீபத்தில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஐந்து நிமிட கௌரவ தோற்றத்தில் அமிதாப்பை பாருங்கள். குறிப்பாக அமெரிக்க இமிக்ரேஷன் ஆபீசரிடம் அவர் பேசுவதையும் தல அஜித் பேசுவதையும் ஒப்பிட்டு பாருங்கள். அவரது ஆளுமை தெரியும். தலையை குறைத்து மதிப்பிட இதை சொல்லவில்லை. தலையின் ரசிகர்கள் என் மீது கொலைவெறி கொண்டு பாய வேண்டாம். அந்த இரு காட்சிகளையும் ஒப்பிடும் பொழுது அமிதாப் பல மடங்கு அதிகம் தலையை விட ஸ்கோர் செய்கிறார் என்பது தான் உண்மை. இந்திய திரை ரசிகர்களை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தனது திறமையினால் ஆட்கொண்டிருக்கும் மஹா கலைஞனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.


தங்கமணி ஆப்பிள் ஐஃபோன் 5 வாங்கி இருக்கிறார். முதல் நாளே ப்ரீ ஆர்டர் செய்து சென்ற வாரம் வந்து சேர்ந்தது. ஃபோன் அட்டகாசமாக இருக்கிறது. என்ன ஆப்பிளின் புதிய OS தான் ஆப்படிக்கிறது. அதிலும் ஆப்பிள் மேப்ஸ் படு மொக்கை. அப்பிள் ஸ்டோரில் இருக்கும் போதே நான் எங்கே இருக்கிறேன் என்பதை சொல்ல மறுக்கிறது. அதே போல எந்த இடத்திற்கும் முழூ விலாசத்தை எதிர் பார்க்கிறது. கூகுள் போல பெயரை வைத்தே விலாசத்தை கண்டுபிடிக்க பாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. பார்ப்போம் அடுத்த வெர்ஷனில் சரி செய்கிறார்களா என்று.


சமீபத்தில் தான் தடையற தாக்க படத்தை பார்த்தேன். அட்டகாசமான க்ரைம் த்ரில்லர். இயக்குனர் மகிழ் திருமேனிக்கு எனது பாராட்டுக்கள். அருண் விஜய் நல்ல ஒரு ரவுண்டு வருவார் என்று நம்புவோம்.

Tuesday, October 02, 2012

நான் கோட்ஸே பேசுகிறேன்


அந்த மேடையில் இருள் சூழ்ந்திருக்கிறது. மேடையின் நடுவில் சிறு ஒளி. அதில் நாதூராம் நின்று கொண்டிருக்கிறார். தனது பார்வையை பார்வையாளர்களின் மீது மேயவிடுகிறார். பின்னர் முகத்தை இட வலமாக ஆட்டுகிறார். ஒரு வித ஏமாற்றம் அவரது கண்களில் தெரிகிறது. பின்னர் அவர் பேச தொடங்குகிறார்.

உங்களில் ஒருவரின் முகம் கூட எனக்கு தெரியவில்லை. இல்லை. தெரியவில்லை என்பது தவறான வார்த்தை பிரயோகம். உங்கள் அனைவரின் முகங்களும் எனக்கு புதிதாக இருக்கின்றன. அந்த சம்பவம் நடந்த பொழுது உங்களில் இளைஞர்கள் யாரும் பிறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் என்னை பற்றி நிச்சயம் படித்திருப்பீர்கள். நான் ஒரு ஹிந்துத்வ வெறியன் என்று உங்களிடம் சொல்லி இருப்பார்கள். இங்கே இருக்கும் நடுத்தர வயதுள்ளோர் என்னை பற்றி வானொலியிலும் செய்தித்தாள்களிலும் அறிந்திருப்பீர்கள். உங்களது வீடுகள் பற்றி எரிந்த பொழுது "இந்த நாதூராம் யார்? இவனால் நமது வீடு ஏன் பற்றி எரிகிறது?" என்று உங்கள் வீட்டின் பெரியவர்களை கேட்டிருப்பீர்கள். ஆனால் இங்கே இருக்கும் முதியவர்களுக்கு நிச்சயம் என்னை பற்றி தெரிந்திருக்கும். உங்களில் ஒரு சிலர் நான் நடத்திய அக்ரானி பத்திரிக்கையை படித்திருப்பீர்கள். எனது கூட்டங்களுக்கு வந்திருப்பீர்கள். எனது சொற்பொழிவினை கேட்டிருப்பீர்கள். ஆனால் என்னை பற்றி தெரியும் என்பதை யாருக்கும் சொல்லி இருக்க மாட்டீர்கள்.

என்ன வியப்பாக இருக்கிறதா? எனது வயது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? 102 வயது எனக்கு. என்ன, நான் இளமையாக இருக்கிறேனா? அதற்கும் காரணம் உண்டு. எனது இளமைக்கு காரணம் எனது மரணம். நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட எனது மரணம்.

ஆம் நான் பிறந்தது 1910 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி. எனது தந்தையின் பெயர் வினாயக் ராவ். தாயார் பெயர் லக்ஷ்மி. அவருக்கு எனக்கு முன்பே மூன்று குழந்தைகள் பிறந்து மூன்றுமே உயிரிழந்து விட்டன. நான் நான்காவது.

நான் உயிருடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டாத கடவுள் இல்லை. அவர்கள் வேண்டுதல் பலித்தது. நான் உயிர் பிழைத்தேன். நான் உயிருடன் இருக்க வேண்டும் என்பது விதி. என்னுடைய 39 ஆம் வயதில் என்னை இழந்து அவர்கள் வாட வேண்டும் என்பதும் விதி. என்னால் காந்தி கொல்லப் பட வேண்டும் என்பதும் விதி.

எனது சிறு வயது அமைதியாகவே இருந்தது. நான் எனது சிறு வயதில் திருடியதில்லை. அதனால் எனது தந்தையிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இருந்தது இல்லை. நான் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட பின்னர் பிரம்மச்சர்யத்தை பின் பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை, ஏனென்றால் நான் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் அகதிகள் முகாமில் ஏழைகளுக்கும் அகதிகளுக்கும் உணவும், உடைகளும் கொடுத்திருக்கிறேன். என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு உடையில்லை என்பதற்காக நான் அரை நிர்வாணமாக அலைந்ததில்லை. எனது ஆடைகளை நானே நூற்றதில்லை. எனது கழிப்பிடத்தை நானே சுத்தம் செய்ததில்லை. இப்படி எனக்கும் காந்திக்கும் ஒற்றுமை ஒன்றும் இல்லை. ஆனால் ஒன்றை தவிர.

நாங்கள் இருவருமே ஒருவர் மரணத்திற்கு மற்றவர் காரணமானோம். அவர் அவரது கொள்கைக்காக வாழ்ந்தார். நான் எனது கொள்கைக்காக இறந்தேன்.

நான் 39 ஆண்டுகள் வாழ்ந்தேன் என்று கூறினேன் அல்லவா. அதில் உண்மை இல்லை. நான் 655 நாட்களே வாழ்ந்தேன். January 30, 1948 இல் இருந்து November 15, 1949 வரை. சரியாக 655 நாட்கள். January 30, 1948 இல் நான் பிறப்பதற்காக வித்து January 13, 1948 அன்று இடப்பட்டது. அந்தக் கதையை கூறுகிறேன் கேளுங்கள்.

நானா:நாதூராம் எங்கே?
விசு:அவர் இங்கு இல்லை.
நானா:தலைப்பு செய்தியை முடித்து விட்டாயா? இல்லையென்றால் அதனை உடனே நிறுத்து. முக்கிய செய்தி ஒன்று வந்துள்ளது.
விசு:அப்படி என்ன முக்கிய செய்தி? இப்பொழுது தலைப்பு செய்தியை மாற்றுவதென்றால் நாளை பத்திரிக்கை வெளிவருவது இயலாத காரியம்.
நானா:நாளை தாமதமாக வெளி வந்தாலும் பாதகம் இல்லை.
விசு:ஆனால்......
நானா:நாதூராம் எங்கே?
நாதூராம்:இங்கே இருக்கிறேன்.
நானா:தலைப்பு செய்தியை மாற்ற வேண்டும்.
நாதூராம்:அவசியம் இல்லை. நானே மாற்றி விட்டேன்.
நானா:மாற்றி விட்டீர்களா? இப்பொழுது தானே செய்தியை வானொலியில் கேட்டேன்.
நாதூராம்:அதை பற்றித்தான் எனது தலைப்பும் இருக்கிறது. (விசுவை பார்த்து) விசு! எங்கள் இருவருக்கும் காபி கொண்டு வா. (விசு செல்கிறார்.)
நானா:நான் எதை பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?
நாதூராம்:தெரியும். பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க மத்திய சர்கார் சம்மதித்து விட்டது. காந்தி தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டுவிட்டார்.
நானா:அதை பற்றி எழுதி இருக்கிறீர்களா? என்ன எழுதி இருக்கிறீர்கள்?
நாதூராம்:ஆம். நாளை சங்கராந்தி. ஜனவரி 14. சங்கராந்தியை கொண்டாடாதீர்கள். இனிப்புகளை சாப்பிடாதீர்கள். இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்காதீர்கள். துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வழங்குங்கள். இது போராட வேண்டிய நேரம். தெருவில் இறங்கி போராடுங்கள். எதிரிகளை கொல்லுங்கள். வெறும் பேச்சு மட்டும் நமக்கு தீர்வு வழங்காது. போராட வேண்டும். நாளை தசராவை கொண்டாடுங்கள். அது உங்களுக்கு போர்குணம் கிட்ட வழிவகுக்கும். சங்கராந்தி வேண்டாம்.
நானா:ஐயா, இதனால் மக்கள் போராட துணிவார்களா?
நாதூராம்:மக்கள் என்பவர்கள் யார்? நமது பத்திரிக்கையை படிப்பவர்களும், நமது கூட்டங்களுக்கு வருபவர்களும் மட்டும் தான் மக்களா? நீயும் நானும் தான் மக்கள். மக்கள் போராட வேண்டும் என்பதன் பொருள் நீயும் நானும் போராட வேண்டும் என்பது மட்டுமே.
நானா:இதனால் நாம் கைது செய்யப் படுவோம்.
நாதூராம்:எனக்கு அப்படி தோன்றவில்லை. ஹிந்துக்கள் கொல்லப்படும் பொழுதும், அவர்கள் வீட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்படும் பொழுதும், ஹிந்து பெண்கள் கற்பழிக்கப்படும் பொழுதும் இந்த அரசாங்கம் வேடிக்கை தான் பார்த்தது. இந்த அரசாங்கத்திற்கு ஹிந்துக்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அப்படி இருக்கும் பொழுது ஹிந்துத்வம் எப்படி பொருட்டாகும்? அரசாங்கம் பொருட்படுத்தாத ஒன்றை பற்றி எழுதுவது அப்படி அவர்கள் கவனத்திற்கு செல்லும்? ஆனால் இதை பற்றியெல்லாம் அரசாங்கத்தின் கவனதிற்கு கொண்டு சேர்ப்பேன். வழக்கு விசாரணை நடக்கும் பொழுது உலகமே திரும்பி பார்க்கும்.
நானா:என்ன வழக்கு?
நாதூராம்:IPC 302, காந்தி கொலை வழக்கு.
நானா:ஐயா!, என்ன சொல்கிறீர்கள்?
நாதூராம்:ஏன் என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?
நானா:என் மீது நான் வைத்திருக்கும் நமிக்கையை விட உங்கள் மீது அதிகம் வைத்திருக்கிறேன். ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை பயனற்றது.
நாதூராம்:காந்தி தடுத்து நிறுத்தப்பட வேண்டியவர். அவரை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரது கொலை.
நானா:அதில் நான் உடன் படுகிறேன். ஆனால் நீங்கள் அவசரப் படுகிறீர்களோ என்று தோன்றுகிறது.
நாதூராம்:காந்தியை போன்ற மாபெரும் தலைவர்களின் கொலை அவசரத்தினால் வருவதில்லை நானா. அவசியத்தினால் வருவது.
நானா:நீங்கள் முடிவு செய்து விட்டீர்களா?
நாதூராம்:ஆமாம். இதை நான் செய்ய தவறினால் நமது இந்திய தேசம் அழித்தொழிக்கப்படும். கேள் நானா!, நான் காந்தி ஒரு சகாப்தம் என்பதை மறுக்கவில்லை. அவர் ஒரு மஹான். அவரது அஹிம்சை கொள்கையை நான் போற்றுகிறேன். ஆனால் அதை அவர் அவருடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதை அவர் மற்றவர் மீது திணிப்பதை நான் வெறுக்கிறேன். தன்னையே அழித்துக் கொண்டு அஹிம்சையை கடை பிடிப்பதும் ஒருவகை ஹிம்சை தான். அதனை மற்றவர் மீது திணிப்பது படு பாதகமான செயல். அதை தான் காந்தி செய்கிறார்.
நானா:ஆனால் அவரை கொல்லத்தான் வேண்டுமா? இதனை பற்றி நாம் விரிவாக எழுதலாமே?
நாதூராம்:இவ்வளவு காலமும் எழுதிக் கொண்டுதானே இருந்தோம். ஏதாவது பலன் கிட்டியதா? இன்னும் கேள், இந்திய தேசப் பிரிவினை தேவை இல்லாதது. மௌலானா ஆசாத் பக்கம் காந்தி நிற்காமல் ஜின்னா பக்கம் நின்றதால் வந்த தீங்கு. எந்த ஒரு தனி மனிதரும் தேசத்தை விட உயர்ந்தவர் இல்லை. ஆனால் காந்தி தன்னை தேசத்தை விட உயர்ந்தவராக கருதத் தொடங்கி விட்டார்.
நானா:ஆனால் ஜின்னா பிரதமராக விரும்பினாரே?
நாதூராம்:அதனால் என்ன? பெரும்பான்மை ஹிந்துக்கள் உள்ள நாட்டில் இஸ்லாமியர் ஒருவர் பிரதமராக முடியாதா? ஜனநாயகத்தில் அது சாத்தியம் தானே. அதற்காக நாட்டை துண்டாடலாமா?
நானா:காந்தி ஒருவர் மட்டும் அதற்கு காரணம் இல்லையே. மத்திய அரசாங்கம் தானே காரணம்.
நாதூராம்:ஆம். ஆனால் மத்திய அரசாங்கத்தை மிரட்டியது காந்தி. உண்ணா விரதம் இருந்தார். தனது அஹிம்சையால் தன்னை ஹிம்சித்துக் கொண்டு மற்றவர்களையும் ஹிம்சிக்கிறார். நல்ல அஹிம்சை கொள்கை. பிரிவினையின் போது சுஹ்ராவார்தியின் தொண்டர்கள் வங்காளத்தில் செய்த நாச வேலைகள் உனக்கு தெரியாதா?

அன்று ஒரு ஏழை ஹிந்து காந்தியிடம் சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. 'மஹாத்மா!, உங்கள் பேச்சை கேட்டு நான் எனது ஆயுதத்தை கீழே போடுகிறேன். ஏனென்றால் நீங்கள் உண்ணா விரதத்தில் மடிவதை நான் விரும்பவில்லை.' என்றான். அன்று இரவு அவன் இல்லத்திற்கு நான் சென்றேன். வீடே அலங்கோலமாக இருந்தது. அவனது எட்டு வயது மகன் இஸ்லாமியர்களால் கொல்லப் பட்டான். அவனது மகனின் சடலத்தை எனது மடியில் வீசி என்னிடம் அவன் சொன்னது, 'உங்கள் மஹாத்மா விடம் இவனது சடலத்தை எடுத்து செல்லுங்கள். இவனது குருதியை குடித்து அவர் தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொள்ளட்டும்' அதை கேட்டு வெறியுடன் நான் காந்தியிடம் திரும்பி வந்தேன். ஆனால் நான் வரும் முன்பே அவர் தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார். ஆனால் அவரிடம் சொல்லியும் பயன் ஒன்றும் இல்லை. அவர் கொலைகாரனுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்வார். வேறு ஒன்றும் செய்ய மாட்டார்.

இப்பொழுது சொல் நானா. எனது முடிவு தவறா?
நானா:உங்களிடம் பேசி ஜெயிக்க முடியாது. தத்யாவிடம் ஒரு வார்த்தை...
நாதூராம்:தேவை இல்லை. அவர் வேண்டாம் என்று சொன்னாலும் நான் இதனை செய்ய முடிவெடுத்துவிட்டேன். எனக்கு நீ இரண்டு வாக்குறுதிகளை தர வேண்டும்.
நானா:தந்து விட்டேன்.
நாதூராம்:அவை என்ன என்று நீ கேட்கவே இல்லையே?
நானா:தேவை இல்லை. உடல் எங்கே செல்கிறது, எதற்காக செல்கிறது என்ற கேள்வி நிழலுக்கு அநாவசியம். அதன் கடமை உடலை தொடர்வது மட்டுமே.
நாதூராம்:நல்லது. ஆனால் இம்முறை நான் மட்டுமே தனித்து இயங்க விரும்புகிறேன். அதாவது உடல் மட்டுமே. நிழல் தேவை இல்லை.
நானா:நீங்கள் என்னை மடக்கி விட்டீர்கள்.
நாதூராம்:நான் கொலை செய்த பிறகு தப்பிக்க போவதில்லை நானா. தூக்கு மேடையை நோக்கி செல்லவே விரும்புகிறேன். ஒரு கொலை ஒரு தூக்கு.
நானா:இரண்டாவது வாக்குறுதி?
நாதூராம்:நான் இரண்டு கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். ஒன்றை நாளைக்கும், மற்றொன்றை காந்தி இறந்த மறுநாளும் நீ பதிப்பிக்க வேண்டும்.
நானா:நல்லது. அப்படியே ஆகட்டும்.

மேடையில் இருள் சூழ்கிறது.

ஒரு தேசத்தின் தந்தை தனது மக்களை எல்லாம் ஒரே முறையில் நடத்த வேண்டும். தனது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால் காந்தி அதை செய்ய தவறி விட்டார். அதனால் இந்த மண்ணின் மைந்தனாக எனது கடமையை செய்ய நான் தயாராகி விட்டேன்.

ஜனவரி 30, மதியம் 12 மணி. பிர்லா பவன். காந்தி வெளியில் கட்டிலில் அமர்ந்து இருக்கிறார். அவரது அருகில் கீழே சர்தார் வல்லபாய் பட்டேலின் பேத்தி அமர்ந்து இருக்கிறார். என்னிடம் அப்பொழுது துப்பாக்கி இருந்தது. அக்கம் பக்கம் யாரும் இல்லை. அப்பொழுது என்னால் அவரை எளிதாக சுட்டுக் கொன்றிருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்வதை விரும்பவில்லை. தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பலரது மத்தியில் காந்தி கொல்லப்படவே நான் விரும்பினேன். மாலை வழிபாட்டுக் கூட்டம் நடக்கும் பொழுது அவரை கொல்வதுதான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.

ஜனவரி 30, மாலை 4:45 மணி. பிர்லா பவன். வாசலை கடந்து உள்ள செல்ல முயன்றேன். பாதுகாவலுக்கு இருந்த காவலன் அனைவரையும் பரிசோதித்துக் கொண்டிருந்தான். எனக்கு சிறிது கவலை வந்தது. அப்பொழுது பெரிய கூட்டம் ஒன்று வாசலை கடந்து உள்ளே சென்றது. அவர்களுடன் நானும் உள்ளே சென்றேன். காந்தியின் வரவுக்காக காத்திருந்தேன்.

ஜனவரி 30, மாலை 5 மணி. பிர்லா பவன். போலீஸ் அதிகாரி அர்ஜுன் தாஸ் காந்தியை பார்க்க வருகிறார்.

அர்ஜுன்:நான் ஒரு முக்கியமான காரியதிற்காக பாபுஜியை பார்க்க வேண்டும்.
மஹதேவ்:இப்பொழுது யாரும் அவரை பார்க்க முடியாது. மாலை வழிபட்டு நேரம் நெருங்குகிறது.
அர்ஜுன்:எனக்கு தெரியும். ஆனால் இது மிகவும் முக்கியம்.
காந்தி:மஹதேவ்! யார் அது?
மஹதேவ்:யாரோ உங்களை பார்க்க வந்திருக்கிறார்.
காந்தி:யார் நீ?
அர்ஜுன்:DCP அர்ஜுன் தாஸ், பாபுஜி.
காந்தி:உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன்.... ஆம் ஜவஹருடன் ஹைதராபாத் வந்திருந்தாய் அல்லவா?
அர்ஜுன்:ஆம் பாபுஜி. உங்கள் நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது. அப்பொழுது உங்கள் உடல் நிலை சரியில்லை.
காந்தி:உடலுக்கும் மனதிற்கும் சம்பந்தம் இல்லை அர்ஜுன். இப்பொழுது இங்கே எதற்கு வந்தாய்? வழிபாட்டுக்கா?
அர்ஜுன்:ஆம் பாபுஜி. உங்களுடன் வழிபாட்டுக்கு வர விரும்புகிறேன்.
காந்தி:தாராளமாக வரலாம். ஆனால் இந்த உடையில் இல்லை. துப்பாக்கியுடன் இல்லை.
அர்ஜுன்:ஆனால் பாபுஜி, உங்கள் பாதுகாப்பு....
காந்தி:யாராவது என்னை கொல்ல வந்தால் நீ அவர்களை கொன்று விடுவாயா? அதுவும் வழிபாடு நடக்கும் நேரத்தில்.
அர்ஜுன்:அப்படி ஏதேனும் நடந்து விட்டால்?
காந்தி:நடக்கட்டுமே. எனது நாட்டு மக்கள் என்னை கொல்ல விரும்பினால் கொன்று விட்டு போகட்டுமே. நீ யார் அதை தடுப்பதற்கு?
அர்ஜுன்:ஆனால் என்னை பிரதமர் அனுப்பி இருக்கிறார். நான் அவரது பாதுகாவலன்.
காந்தி:அப்படியென்றால் அங்கே போ. இங்கே உனக்கு வேலை இல்லை.
அர்ஜுன்:பிரதமரும் பட்டேலும் உங்கள் பாதுகாப்பு மீது மிகுந்த கவலை கொண்டுள்ளனர். 10 நாட்களுக்கு முன்பு கூட உங்களை கொல்ல இங்கே குண்டு வைத்தனர். உளவுத்துறையும் உங்களை பாதுகாக்க சொல்லி இருக்கிறார்கள்.
காந்தி:இதற்கெல்லாம் நான் பயப்படுவேன் என்று நினைக்கிறாயா?
அர்ஜுன்:பாபுஜி, உங்களுக்கு நான் எப்படி புரியவைப்பது? இங்கே உள்ள கூட்டத்தினை பார்த்தீர்களா? அதில் உள்ள ஒருவன் கொலை காரனாக இருக்கலாம். வழிபாட்டுக்கு வரும் எல்லோரும் பக்தர்கள் கிடையாது.
காந்தி:கொலைகாரர்கள் வழிபாட்டுக்கு வர மாட்டார்கள். இங்குள்ள அனைவரும் பக்தர்களே.
அர்ஜுன்:10 நாட்களுக்கு முன்பு இங்கே குண்டு வைத்தவர்களும் பக்தர்களா? அவர்கள் ஹிந்து மஹாசபையை சேர்ந்தவர்கள்.
காந்தி:ஹிந்து மஹாசபைக்கும் முஸ்லீம் லீகுக்கும் என்னை பொருத்தவரை வேறுபாடு கிடையாது. எனக்கு இருவரும் இரண்டு கண்கள். நான் உண்ணா விரதத்தை மேற்கொண்ட போது என் மீது கொண்ட அன்பினால் இருவருமே ஆயுதங்களை கீழே போட்டார்கள்.
அர்ஜுன்:ஆனால் துப்பாக்கியின் குண்டுகளுக்கு அது தெரியுமா?
காந்தி:துப்பாக்கியை இயக்குபவனுக்கு தெரியும்.
அர்ஜுன்:உங்களுக்கு இதில் உள்ள ஆபத்து தெரியவில்லை. பிரிவினைக்கு நீங்கள் தான் காரணம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் இஸ்லாமியர்களின் பக்கம் நிற்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். உங்களை கொல்ல முயல்கிறார்கள்.
காந்தி:என்ன கூறுகிறாய்? எனது உயிருக்கு பயந்து வழிபாட்டை முடித்துக் கொள்ள சொல்கிறாயா? கஸ்தூரி பாய் இறந்த பொழுது வழிபாட்டை முடித்துக் கொண்டே அவளது இறப்புக்கு அழுதேன். இப்பொழுது எனது உயிர் என்பதால் வழிபாடு நிறுத்தப்படலாமா?
அர்ஜுன்:ஆனால் உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம். அதனை பாதுகாப்பது எங்கள் கடமை. கொலைகாரன்....
காந்தி:யார் கொலைகாரன்? சரி வந்திருப்பவர்களில் ஒருவன் கொலைகாரன் என்றே வைத்துக் கொள். மற்றவர்கள் எல்லோரும்? ஒரு கொலைகாரனுக்காக மற்ற அனைவரையும் காக்க வைக்கலாமா?
அர்ஜுன்:ஆனால் பாபுஜி....
காந்தி:கேள் அர்ஜுன், ஜவஹர் ஒரு குழந்தை. நீயும் கூட. உனக்கு உன்னிடம் உள்ள துப்பாக்கியில் நம்பிக்கை இருக்கிறது. அந்த கொலைகாரனுக்கு அவனது துப்பாக்கியில். ஆனால் எனக்கு இருக்கும் நம்பிக்கை அஹிம்சையில். துப்பாக்கியில் நம்பிக்கை எனக்கு கிடையாது. நான் தென் ஆப்ரிக்காவில் இருந்த போது என்னிடம் துப்பாக்கி இல்லை. நீயும் ஜவஹரும் என்னுடன் இல்லை. என்னிடம் இருந்தது நம்பிக்கையும் அஹிம்சையும் தான். என்னிடம் இருந்த அந்த ஆயுதங்களால் நான் வெற்றி அடைந்தேன். எனக்கு ராமும், ரஹீமும், கிருஷ்ணனும், கரீமும் ஒன்றுதான். ஹிந்துவாக பிறந்ததற்காக நான் பெருமை படவில்லை. இஸ்லாமியனாக இல்லாததற்காக நான் வருத்தப் படவில்லை. இதுவரையில் நான் எனது மனசாட்சிக்கு விரோதமாக எதுவும் செய்ததில்லை. இனியும் செய்ய போவதில்லை. என்னை கொல்ல அங்கே கொலைகாரன் காத்திருந்தால், வரட்டும், வந்து என்னை கொல்லட்டும். அவனால் காந்தியை தான் கொல்ல முடியும். காந்தியிஸத்தை அல்ல. நீ என்னுடன் வருவதாக இருந்தால் துப்பாக்கியை இங்கேயே வைத்து விட்டு வா.

ஜனவரி 30, மாலை 5:10 மணி.

காந்தி அவரது அறையிலிருந்து வெளியே வந்தார். அவரை பிடித்துக் கொண்டு இரண்டு பெண்கள் அவருடன் வந்தார்கள். அனது பையில் துப்பாக்கி வெடிக்க தயாராக இருந்தது. காந்தி என் அருகே வந்தார். அவரை சுற்றி பலர் இருந்தனர். எனக்கும் காந்திக்கும் இடையில் ஒருவரும் இல்லாத நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். அவரை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன். முதலில் இந்த நாட்டுக்கு அவர் செய்த சேவைகளுக்காக அவரை தலை தாழ்த்தி வணங்கினேன். அவரை நோக்கி இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தேன். அவரது அருகில் இருந்த பெண்ணை எனது ஒரு கையினால் தள்ளினேன். பின்னர் எனக்கு ஒரு நொடி தான் தேவை பட்டது. எனது துப்பாக்கியை இயக்கினேன். காந்தி மிகவும் பலவீனமாக இருந்தார். 'ஆ' என்ற லேசான சத்தத்துடன் அவரது உயிர் அவரை விட்டு பிரிந்தது. அடுத்த முப்பது நொடிகளுக்கு யாருமே என் அருகில் வரவில்லை. அருகில் இருந்த போலீஸ் ஒருவரிடம் என்னை கைது செய்யும்படி தலையாட்டினேன். அவன் வந்து எனது கையை பிடித்துக் கொண்டான். இந்திய நாட்டுக்காக எனது கடமையை செய்த கர்வத்துடன் அவனுடன் நடந்து சென்றேன்.

எங்கும் இருள் சூழ்கிறது.

"Friends and comrades, the light has gone out of our lives, and there is darkness everywhere, and I do not quite know what to tell you or how to say it. Our beloved leader, Bapu as we called him, the father of the nation, is no more. Perhaps I am wrong to say that; nevertheless, we will not see him again, as we have seen him for these many years, we will not run to him for advice or seek solace from him, and that is a terrible blow, not only for me, but for millions and millions in this country" - Jawaharlal Nehru

ப்ரதீப் தால்வி எழுதிய மே நாதுராம் கோட்ஸே போல்தா ஹூன் என்ற மராத்தி நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.