Friday, June 30, 2006

85 என்ற தேன் கூடு

மிக்க மன பாரத்துடனேதான் இந்த பதிவை எழுதுகிறேன். சற்றே நீளமான பதிவு என்ற போதும், எழுதிய உடன் பாரம் குறைந்தது போன்ற ஒரு உணர்வு.


September 23, 2002 என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். சண்முகா பொறியியல் கல்லூரியில் B.E. (EEE) படித்து முடித்து விட்டு, Siemens நிறுவனத்தில் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த நான் Infosys நிறுவனத்தில் சேர்ந்த நாள். என்னை போன்ற மாப்பிள்ளை bench காரர்களுக்கு இது மிகை என்பதால், பெருமையும் , சந்தோஷமும் பீறிட்டுக்கொண்டு வந்தது. Infosys நிறுவனத்தில் Freshers என்று அழைக்கப்படும் புதிய கல்லூரி மாணவர்களையும், கணிணித்துறைக்கு புதியவர்களையும் சேர்த்துக்கொள்ளும் பொழுது, அவர்களுக்கு 4 மாதங்கள் பயிற்சி தருவார்கள். அத்தகைய பயிற்சி எனக்கு புவனேஷ்வரில் நடந்தது. பிறந்து 22 ஆண்டுகள் திருச்சியையும், சென்னையையும் தாண்டி அறியாதவனாகிய நான், முதல் முறையாக புவனேஷ்வருக்கு புறப்பட்டேன். ஆனால் எனக்கு அதை பற்றிய பயமோ கவலையோ ஒன்றும் இல்லை. போய் சேர்ந்த உடன் தான், "நான் வந்திருப்பது தென் இந்தியாவிற்கா?", என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால், அங்கு இருந்த 72 பேரில், 25 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், 20 பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள், 5 பேர் கேரளத்தை சேர்ந்தவர்கள்.

புவனேஷ்வருக்கு நான் செல்வதற்கு முன்னரே எனக்கு அறிமுகமானவன் ஜெய் என்றழைக்கப்படும் ஜெயராம் மோகன்ராம். இவன் எனது கல்லூரித்தோழன். ஒரே கல்லூரி என்றாலும் இவனது பெயர் மற்றும் department தவிர எனக்கு இவனை பற்றி எதுவும் தெரியாது. ஜெய்யைப்பற்றி கூற வேண்டும் என்றால், 'The most mis-understood' என்று கூறலாம். எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைப்பவன். அதனாலேயே தவறாக புரிந்து கொள்ளப்பட்டவன். மிகவும் நல்லவன்.

புவனேஷ்வரில் இறங்கிய உடன் எனக்கு அறிமுகமானவன் ஜினி என்ற ஜினேஷ் ஆப்ரகாம் குரியன். இவன் தான் நாங்கள் தங்கி இருந்த 'The Garden Inn' என்ற hotel அறையில் எனது room mate. கேரளாவை சேர்ந்த இவன் பேசும் மழலை தமிழுக்காகவே இவனை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். முகத்தை மிகவும் serious ஆக வைத்துக்கொண்டு நக்கல் அடிப்பதில் இவன் கில்லாடி. இவனது நக்கல்களை ஒரு தொகுப்பாக தனி வலைப்பூவே போடலாம்.

அடுத்து ஜெய் மூலமாக அறிமுகமானவன் TANK என்ற திருமலை ஈச்சம்பாடி அனந்த கிருஷ்னன். இவனுக்கும் எனக்கும் ஆழ்ந்த நட்பு ஏற்பட காரணம் என்ன என்பது எங்களுக்கும் எங்கள் நட்பு வட்டாரத்திற்குமே தெரிந்த ஒரு ரகசியம். அது ரகசியமாகவே இருந்து விட்டு போகட்டுமே. இவனை பற்றி T.R. பானியில் கூறுவதானால் "டேய்! பார்த்தா இவன் ஒரு சொம்பு; ஆனா உண்மையிலே இவன் ஒரு பிம்பு (Pimp)". என்ன மோசமாக அறிமுகப்படுத்தி விட்டேனா? ஆனால் உண்மையைத்தானே கூற முடியும். BITS, Pilani யில் படிப்பை முடித்த இவன் மூலமாக நான் அறிந்து கொண்ட BITSian களை பட்டியலிட்டால் ஒரு வலைப்பூ பத்தாது. இவனிடம் எனக்கு பிடித்ததே இவன் அடுத்தவர்களிடம் எடுத்துக்கொள்ளாத அதிகபட்ச உரிமை. எவ்வளவு எடுத்துக்கொள்ளலாமோ அவ்வளவு தான் எடுத்துக்கொள்வான். உதாரணத்திற்கு ஒரு சம்பவம். இது அவனுக்கே நினைவில் இருக்குமோ தெரியாது. ஒருமுறை நான், TANK மற்றும் பின்னால் நான் அறிமுகப்படுத்தப்போகும் TRIPLE என்ற சேரன்மாதேவி சங்கரன் சுந்தர் (ஆங்கிலத்தில் மூன்று 'S' இவனது பெயர் சுருக்கம் என்பதால் இவனுக்கு 'TRIPLE S' என்று பெயர்) மூவரும் 7 டிக்ரீ குளிரில் (அது 7 டிக்ரீ என்பது அடுத்த நாள் தான் தெரியும். பிறந்தது முதல் 30 - 40 டிக்ரீ வெய்யிலில் திருச்சியிலும், சென்னையிலும் இருந்த எனக்கு அது ஒரு உறைநிலை வெட்பமாக இருந்தது) நடந்து வந்து கொண்டிருந்தோம். TRIPLE வழக்கம் போல் யாருடனோ (யாருடன் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்) தொலைப்பேசியில் பேச சென்று விட்டான். கைத்தொலைப்பேசி வேகமாக பரவாத காலம் அது. ஆகையால் அவன் STD பூத்திற்கே சென்று பேச வேண்டிய கட்டாயம். அவ்வாறு அவன் போய் பேசத்தொடங்கிய உடன் தான் நினைவிற்கு வந்தது அவன் வீட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு போய் விட்டான் என்று. உடனே நான் TANKஇடம் 'டேய்! அவன்ட சாவி இருக்குடா.' என்று கூறி பூத்தை நோக்கி செல்ல தயாரானேன். அப்பொழுது TANK, 'பரவா இல்லடா wait பன்னலாம்.' என்று கூறி என்னை தடுத்து விட்டான். நானும் போக வில்லை. அவன் பேசி முடித்து விட்டு வருவதற்கு சுமார் 40 நிமிடங்கள் ஆனது. அவ்வளவு நேரம் அந்த உறைநிலை வெட்பத்தில் இருந்தோம். அதுதான் TANK. Decency என்றால் என்ன என்று அவனிடம் தான் நான் கற்றுக்கொண்டேன்.


அடுத்ததாக TRIPLE. இவன் TANK இன் கல்லூரித்தோழன். இவன் தன்னை பற்றியும், தன் தேவைகளை பற்றியும், அத்தேவைகளை பூர்த்தி செய்யும் வழி முறைகளையும் நன்கு அறிந்த சிலர்களுள் ஒருவன். இவன் செய்யும் ஒவ்வொறு செயலும் முழுமையாக இருக்கும். பாதி கிணறு தாண்டும் பழக்கம் துளியும் இல்லாதவன். இவனது பேசும் திறன், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றிர்காகவே பெண்களிடம் பிரபலமானவன். இவன் ஒரு 'Perfect Son' என்று கூறலாம். 24 வயதில் இவன் வாங்கிய ஒரு இரு சக்கர வாகனத்திற்கு, இந்த நிறம் தான் இருக்க வேண்டும், இந்த எண் தான் இருக்க வேண்டும், இந்த நாளில் தான் வாங்க வேண்டும் என்று அவன் பெற்றோர் கூற இவனும் அவ்வாறே வாங்கினான். ஜாதகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். தனது வாழ்க்கை வெற்றிகளுக்கெல்லாம் தனது ஜாதகப்பலன்களே காரணம் என்று நினைப்பவன். இது குறித்து எங்களுக்குள் பல சமயம் விவாதங்கள் எழுந்துள்ளன.

அடுத்து, மலை என்ற விமல் கிருஷ்ணமூர்த்தி. இவனை என்னால் வேறொரு மனிதனாக பார்க்கவே முடிய வில்லை. கண்ணாடியில் தெரியும் எனது பிம்பமாகவே இவன் எனக்கு தெரிவான். இவனுக்கும் எனக்கும் ஒற்றுமைகள் பல. இவன் திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் திருச்சியில் பிறந்து வளர்ந்தவன். இவன் படித்தது திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. நான் படித்தது திருச்சி இ. ரே. மேல்நிலைப்பள்ளி. இவன் மண்டல பொறியியல் கல்லூரியில் படித்தான், நான் சண்முகா பொறியியல் கல்லூரியில் படித்தேன். 'இதில் என்ன ஒற்றுமை?', என்கிறீர்களா. நாங்கள் இருவருமே வாழ்வின் பெரும் பகுதியை திருச்சியில் கழித்தவர்கள். நாங்கள் இருவருமே தமிழ் சினிமா வெறியர்கள். வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் பார்த்து விடுவோம். அதே போல் இருவருக்குமே 'Patriotic Sense' என்பது அதிகம். இந்தியா மீதான பற்றுதலை நான் கூறவில்லை. பிறந்து வளர்ந்த ஊர், படித்த பள்ளி, படித்த கல்லூரி, வேலை பார்க்கும் அலுவலகம் போன்ற எதையும் நாங்கள் இருவருமே விட்டுக்கொடுக்க மாட்டோம். இவனிடம் பல சமயம் நான் கேட்பதுண்டு, 'மலை! life லெ எதையாவது நீ பரபரப்பா செஞ்சு இருக்கியாடா?' என்று. ஏனென்றால், அவன் அப்படி ஒரு slow coach. எல்லாவற்றையும் நிதானமாகத்தான் செய்வான். 9 மணி வண்டிக்கு 8:30க்கு வீட்டிலிருந்து கிளம்புவான். வீட்டிற்கும் ரயில் நிலையத்திற்கும் உள்ள தொலைவு 12 Km. இவனது இந்த போக்கால் நாங்கள் வண்டியை miss செய்த சம்பவங்களும் நடந்தேறி உள்ளன.

கடைசியாக கபூர். இவன் பெயரை வைத்து வட இந்தியாவை சேர்ந்தவன் என்று கருதாதீர்கள். கன்னியாகுமரியை சேர்ந்தவன். பார்ப்பதற்கு தாவூத் இப்ராஹிம் போல் இருந்தாலும், உண்மையில் ஒரு வெகுளி. இவன் ஒரு complete box. நமது எந்த பிரச்சனைகளையும் இவனிடம் கொண்டு போகலாம். ஒரு அனுபவசாலி நமது இடத்திலிருந்து பார்த்து அந்த பிரச்சனைகளை ஆராய்ந்து பார்ப்பதை போன்று ஆராய்வான். உறுதியாக ஒரு நல்ல தீர்வை தருவான். மேலும் ஏன் அந்த தீர்வு என்றும் உங்களுக்கு விளக்கம் கொடுப்பான். இவனை முழுவதுமாக நம்பலாம். இவனிடம் உள்ள ஒரே தீய வழக்கம், அடுத்தவர்கள் பர்ஸை காலி ஆக்குவது. அதாவது இவனுடன் வெளியே சென்றீர்களென்றால், உங்களுக்கு சம்பந்தமே இல்லாத பொருளை மிகவும் அதிக விலை கொடுத்து வாங்க செய்து விடுவான். நான் அவ்வாறு முதலில் வாங்கியது 2500 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜாக்கெட். இரண்டாவது முறை வாங்கியது 5000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கைத்தொலைப்பேசி. அடுத்த முறை நான் விழிப்புடன் இருந்து கொண்டு விட்டேன். இவனுடன் வெளியே செல்லும் பொழுது பர்ஸை மறந்து(?) வீட்டிலேயே வைத்து விடுவேன். மற்றவர்கள் என் மூலம் பாடம் கற்றார்கள்.

இவ்வாறாக, நான், ஜினி, TANK, TRIPLE, மலை, கபூர் அறுவறும் ஒரு வீட்டில் தங்கினோம். தமிழ்நாடு மற்றும் கேரளத்தை சேர்ந்த 15 ஆண்களில், மற்ற 9 பேர் வேறு ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். ஜெய்யும் அதில் அடக்கம்.

'Training period is the honey moon period in Infosys' என்று பலர் என்னிடம் கூறினார்கள். அதிலும் கல்லூரியிலிருந்து பிரிந்து மீண்டும் அந்த வாழ்கைக்காக ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு, அது ஒரு வரமாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால், கல்லூரியை விடவும் நன்றாகவே இருந்தது. காரணம் அது ஒரு paid vacation அல்லவா? Training உம் கொடுத்து சம்பளமும் கொடுக்கிறார்களே. நாங்கள் அங்கே அடித்த கூத்து பல. கொல்கட்டா சென்றது, பூரி மற்றும் கொனார்க் சென்றது, சுந்தர்பன்ஸ் சென்றது என்று பட்டியலிடலாம். ஆனால் நான் கூறவந்தது அது அல்ல ஆகையால் அதை பின்னர் பார்ப்போம்.

ஒரு வழியாக training முடித்த எங்களுக்கு, posting வந்தது. நாங்கள் அறுவரில், ஜினி, கபூர் நீங்களாக மற்ற அனைவரும் பெங்களூருக்கே post ஆகி இருந்தோம். அவர்கள் இருவரும் சென்னைக்கு post ஆகி இருந்தனர். மற்றொரு வீட்டில் இருந்த அந்த 9 பேரில் ஜெய் உட்பட நால்வருக்கு பெங்களூர் மற்ற அனைவருக்கும் சென்னை என்று posting வந்தது. அந்த நால்வரில் குறிப்பிடத்தக்கவன் நெமி என்ற நெமிப்பிரபு நபிராஜ். அனைத்து நட்பு வட்டத்திலும் உள்ள ஒரு இளிச்சவாயனை போல் எங்களது வட்டத்தில் நெமி. எவ்வளவு நக்கல் அடித்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பான். கொஞ்சம் கூட கோபப்பட மாட்டான். "எப்படி ஒருவனால் இவ்வளவு sportive ஆக இருக்க முடிகிறது? இவன் உண்மையாகவே இளிச்சவாயனா?", என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. பெங்களூர் posting வாங்கிய நாங்கள் அனைவரும் ஒரு சுபயோக சுபதினத்தில் பெங்களூர் வந்து சேர்ந்தோம்.

பெங்களூர் வந்த உடன், நெமியின் அண்ணன் திருமணம் நடந்தது. அதற்கு பிறகு அவன் தன் அண்ணன் மற்றும் அண்ணியுடன் தங்கி இருந்தான். நான், மலை, ஜெய், TRIPLE, TANK ஐவரும் ஒரு வீட்டில் தங்கி இருந்தோம். அந்த வீட்டு எண் தான் 85. 85 என்பது எங்களுக்கு வெறும் முகவரியாக மட்டும் இல்லாமல் ஒரு அடையாளமாகவே ஆகி விட்டது. நெமி தங்கி இருந்த வீட்டிற்கும் எங்களது 85 வீட்டிற்கும் இரண்டு தெரு தான் தொலைவு. அதனால் அவனும் தனியாக இருப்பதாக எங்களுக்கு தோன்றவே இல்லை. ஏனென்றால் அடிக்கடி அவனது அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் சென்னைக்கு சென்று விட (பாவம்!, புதுசா கல்யாணம் ஆன அவங்க வீட்டுலே போய் இவன் தங்கி இம்சை பண்ணினா), இவன் தனியாக இருக்கும் நேரங்களில் 85 யில் தான் இருப்பான்.

இப்படியாக நான், TANK, TRIPLE, ஜெய், மலை ஐவரும் பெங்களூரில் 85 வீட்டில் தங்கியிருந்த போது, ஆறாவதாக வந்து சேர்ந்து கொண்டவன் சிக்கு என்ற ராம கிருஷ்ணன். இவன் TANK கின் கல்லூரித்தோழன். இவன் எங்களுடனேயே Infosys நிறுவனத்தில் சேர்ந்து, Pune யில் training முடித்து விட்டு பெங்களூர் வந்தவன். இவனைப்பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் இவன் ஒரு அறிவு ஜீவி. எனக்கு பொதுவாக அறிவு ஜீவிகளை கண்டாலே அலர்ஜி. அதுவும் இவன் தான் அறிவு ஜீவி என்பதை உணர்ந்தவன். மேலும் intellectual plane இல் நானும் இவனும் எதிர் எதிர் துருவங்கள். இதனாலோ என்னவொ இவன் மீது எனக்கு எந்த விதமான உள்ளன்புமிக்க நட்பு எற்ப்பட்டதில்லை. இத்தனைக்கும் இவனுடன் சேர்ந்து நான் ஒரே வீட்டில் வசித்தது 1 ஆண்டு.

பெங்களூரில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வசிக்க தொடங்கி ஒரே மாதம் தான் சென்று இருக்கும், TANK கின் பெற்றோர்கள், சென்னையில் தனியாக வசிக்கும் காரணத்தினால், அவர்களையும் பெங்களூருக்கு கூட்டிக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தான். அவர்களும் பெங்களூர் வருவதற்கு ஆயத்தமானார்கள். ஆதலால், TANK கிற்கு பதிலாக வேறொருவனை தேடத்தொடங்கினோம். அப்பொழுது வந்து சேர்ந்தவன் தான் கொட்டை என்ற சத்ய நாராயணன். இவனும் ஒரு BITSian தான். கொட்டை எனக்கு நேர் எதிர். பல விஷயங்களில்.

1. நான் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை திருச்சி போவதையே பெரிய சுமையாக கருதுபவன். (பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை. சோம்பேறித்தனம் தான். அதற்கு சரியான தண்டனை நான் இப்போது அனுபவிக்கிறேன். பணி வசத்தால் அமெரிக்காவில் இருப்பதால், நினைத்தால் கூட என்னால் இப்போது அடிக்கடி திருச்சி செல்ல முடியாது.) அவனோ எல்லா வாரமும் சென்னை போய் வருபவன். கேட்டால் அக்கா, அம்மா, பாட்டி என்று ஏதாவது கதை சொல்லுவான். "பாட்டியை பார்க்க எவனாவது வாரா வாரம் சென்னை போவானா?", என்று உங்களது குறுக்கு புத்தி யோசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

2. நான் தினமும் மாலை 5 மணிக்கு முதலில் செல்லும் கம்பெனி பஸ்ஸில் முதல் ஆளாக ஒட்டுனருக்கு முன்னரே சென்று இடத்தை பிடித்துக்கொண்டு வருபவன். அவனோ இரவு 1 மணிக்கு முன்னர் வந்ததாக நினைவே இல்லை.


3. மூளை உள்ளவன். அதனாலேயே மூன்றே மாதத்தில் சென்னை Verizon னுக்கு வேலை மாற்றி சென்று விட்டான். எனக்கு......... ஹி ஹி ஹி.

அவன் வீட்டிற்கு வரும் போது கொண்டு வந்தது ஒரே ஒரு suit case. அதில் என்ன இருக்கும் என்று சத்தியமாக எனக்கு தெரியாது. அதையும் போகும் பொழுது அவன் கொண்டு சென்று விட்ட காரணத்தினால், அவனது நினைவாக வீட்டில் எதுவுமே இல்லை. அவனது ஜோக்குகளைத்தவிற. உதாரணத்திற்கு,
நான்:டேய் கொட்டை நாயே! எதுக்குடா காலங்கார்த்தால இம்சை பன்ட்ர?
அவன்:இதுக்கு தான்........

அதற்கு பிறகு ஒரு சிரிப்பு சிரிப்பானே பார்க்கனும். அது கூட பரவாயில்லை. அவனது ஜோக்கை அவனே பாராட்டி சிரித்து கொள்கிறான். ஆனால் அருகே இருக்கும் சக BITSian களும் சேர்ந்து கொண்டு சிரிப்பதை பார்க்க வேண்டுமே. சத்தியமாக அவர்களை கொன்று விடலாம் என்று தோன்றும்.
நான்:டேய் மனசுல கை வச்சு சொல்லுங்கடா, எப்படி டா உங்களாலே இந்த ஜோகுக்கெல்லாம் சிரிக்க முடியுது?
அவர்கள்:(கோரஸாக) இப்படித் தான்..........

(பிறகு முன்னதை விட பலமடங்கு பலமான ஒரு சிரிப்பு)

கொட்டை சென்னை சென்ற பல ஆண்டுகளுக்கு பிறகும் இத்தகைய உரையாடல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

கொட்டை எங்களுடன் இருக்கும் போதே, எனக்கு அறிமுகமானவன், முத்து என்ற முத்துகிருஷ்ணன் ராஜாராம். உங்கள் ஊகம் சரி. இவனும் BITSian யே. இவன் கூட ஒரு அறிவு ஜீவி என்றாலும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பனாகி விட்டவன். அதற்கு காரணம் தான் அறிவு ஜீவி என்பதை ஒரு நாளும் அவன் பரைசாற்றிக் கொண்டதில்லை. என்னிடம் பேசும் பொழுது, எனக்கு என்ன தெரியுமோ, என்ன விஷயம் பிடிக்குமோ அதை பற்றி மட்டுமே பேசுவான். இவன் எஙகள் வீட்டிற்கு அருகே குடி வந்தானாயினும், அதிக நேரம் 85 யிலேயே இருப்பான்.

கொட்டை சென்னை போவதற்கும், கபூர் சென்னையிலிருந்து மாற்றலாகி பெங்களூர் வருவதற்கும் சரியாக இருந்தது. பெங்களூர் வந்த கபூர் மறுபடியும் எனது house mate ஆனான். இம்முறை அவன் என்னை shares சில் invest செய்ய வைக்க பிரம்மப்பிரயர்த்தனம் செய்தான். ஆனால் என்னிடமா? நான் தான் சுதாசரித்துக்கொண்டு விட்டேனே. அதனால் என்னிடம் அவனது முயற்சி படுதோல்வி அடைந்தது.

அந்நாட்களில் கபூர் முலமாக அறிமுகமானவன் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி. இவனை போன்ற ஒரு குடிகாரனை நான் பார்த்ததே இல்லை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் tea break எடுப்பதை பார்த்து இருப்பீர்கள். மணிக்கு ஒரு முறை சென்று cutting போட்டு விட்டு வருபவனை பற்றி தெரியுமா?. அது இவன் தான். அப்படிப்பட்ட இவனும் சபரி மலைக்கு மாலை போட்டுக்கொண்டு தண்ணி அடிக்காமல் இருந்த நாட்கள் உண்டு. எங்களுக்கே ஆச்சரியமாக இருந்த விஷயம் அது. அதை பற்றி பின்னர். கிச்சா பெங்களூர், அல்சூரில் தங்கி இருந்த போதும், அவனது அலுவலகம் எங்களது வீட்டிற்கு பக்கத்தில் இருந்த காரணத்தினால் தினமும் காலையும், மாலையும் attendence குடுத்து விடுவான். சனி மற்றும் ஞாயிற்றிக்கிழமைகளிலோ அவனும் இங்கேயே தங்கி விடுவான். 6 பேர் வாடகைக்கு இருக்கும் வீட்டில் சில சமயம் 15 பேர் கூட தங்கி இருக்கிறோம். அத்தகைய தினங்கள் எங்களுக்கு கொண்டாட்டம் , பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு திண்டாட்டம்.

அப்பொழுது எங்களுக்கெல்லாம் திடீரென்று சமைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. யோசித்து பார்க்கும் பொழுது, எனக்கு அந்த ஆசை வரக் காரணம் hygiene, hygiene என்று சதா உயிரெடுத்துக் கொண்டு இருக்கும் மலை தான் என்று இப்பொழுது தெரிகிறது. மலையின் இம்சையால் சமைக்க ஆரம்பித்தோம் நாங்கள். (சமையல் என்றால் ஒன்றும் பெரிதாக இல்லை. வீட்டிலிருந்து பருப்பு, கொத்தமல்லி போன்ற பொடிகளையும், ready made புளியோதரை பொடி போன்றவற்றையும் வைத்துக் கொண்டு, தயிர் வெளியே வாங்கி விட வேண்டியது. பிறகு சாதம் மட்டும் வைத்து விட்டு பிசைந்து சாப்பிட வேண்டியது. கூடவே முட்டை வேக வைப்பது, omelette போடுவதும் உண்டு.) இந்த பிரமாதமான சமையலுக்கு நாங்கள் செய்யும் ஆர்பாட்டம் இருக்கிறதே அதற்கு ஒரு அளவே இல்லை. சில சமயம் திருச்சியில் இருக்கும் எனது பாட்டியை நினைத்துக் கொள்வேன். 100 பேர் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு அலட்டிக்கொள்ளாமல் சமைக்கும் அவரிடம் ஒரு முறை ஊருக்கு சென்ற பொழுது எனது சமையல் சாகஸங்களை கூறினேன். உடனே அவர் "பாவம் குழந்தை (???) சமைத்து கஷ்டப்படுகிறான். உடனே அவனுக்கு கல்யாணம் செய்து விடலாம்", என்ற அருமையான யோசனையை எனது தாயாரிடம் கூறினார். அவருக்கு தெரிந்து என்ன பயன். எனது பெற்றோர்களுகல்லவா தெரிய வேண்டும்.

இவ்வாறு வாழ்க்கை போய்க்கொண்டு இருந்த போது இரண்டு விஷயங்கள் நடந்தன.

1. எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது (சத்தியமா என் பாட்டி காரணம் இல்லீங்கோ.),

2. கபூருக்கு மீண்டும் சென்னைக்கே மாற்றல் ஆனது.

எனக்கு பதிலாக கிச்சா வீட்டிற்கு வர ஏற்ப்பாடானது. கபூருக்கு பதில் நெமியின் நண்பன் கர்த்திக்கும், பிறகு அவன் கொரியா சென்றதால் , ஜெய்யின் நண்பன் முகுந்தும் பிறகு அவனும் சென்னை சென்றதால், TANK கின் நண்பனான வேறொரு கார்த்திக்கும் வந்தார்கள். நெமியின் நண்பன் கார்த்திக் மற்றும் ஜெய்யின் நண்பன் முகுந்த் இவர்களை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாததால் அவர்களை விட்டு விடுவோம். நடுவே நெமியும் வேறு வேலை கிடைத்ததால் சென்னைக்கு சென்று விட்டான். இந்நிலையில் ஜெய் US சென்றதால், மலையின் cousin தீபு என்கிற தீபக்கும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

கார்த்திக் 6 அடிக்கு சற்றே அதிகமான உயரம். எங்கள் செட்டிலேயே அவன் தான் மிகவும் உயரமானவன். சென்னையில் MCA முடித்து விட்டு, பெங்களூர் Sapient டில் வேலை செய்து கொண்டிருப்பவன். இவனது சாகஸங்கள் பல. ஆனால் உதாரணம் கூற முடியாத வகையில் அனைத்துமே censor செய்யப்பட்டு விட்டது. ஆகையால் மன்னிக்கவும்.

தீபு விவேகின் popular dialogue ஆன "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!" என்பதற்கு சரியான உதாரணம். டில்லியில் பள்ளிப்படிப்பையும், பெங்களூரில் கல்லூரிப்படிப்பையும் முடித்த ஒரு "Yo! bugger". நாங்களோ டூரிங் டாக்கீஸில் மணலை குமித்து வைத்துக் கொண்டு படம் பார்க்கும் லோக்கல் பார்டிகள். 85க்கு வருவதற்கு முன்பு தீபு, தமிழ் படங்களே அவ்வளவாக பார்த்ததில்லை. தமிழ் படப்பாடல்களை அவ்வளவாக கேட்டதில்லை. Guitar வாசிப்பவன், மேல் நாட்டு இசைக்கலைஞர்களின் பாடல்களை கேட்பவன். வந்த ஆறே மாதங்களில் Sun Music ஹேமாவின் ரசிகனாகி, Sun Music கிற்கு phone செய்து பாடல் கேட்கும் அளவிற்கு மாறி விட்டான். எங்களுக்கே கூட கொஞ்சம் வருத்தம் தான். ஒரு நல்லவனை சீரழித்து விட்டொமே என்று. ஆனால் என்ன செய்ய முடியும்? நாங்களெல்லாம் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் ரசிகர்கள். கடமையை செய்யும் பொழுது sentiments க்கு இடம் கொடுக்க மாட்டோம்.

நான் என் மனைவியுடன் வசித்த வாடகை வீடும் இவர்களது வீட்டிற்கு அருகில் என்பதாலும், நானும் மலையும் ஒரே office, ஒரே department, அருகருகே உட்கார்ந்து கொண்டு இருப்பதாலும், 85யில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு தெரிந்து கொண்டிருந்தன. நானும் அடிக்கடி அங்கே செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். "கொஞ்சம் time கிடச்சா போதுமே, எப்போ பாத்தாலும் friends வீடு தான்", இது என் மனைவி அடிக்கடி சொல்லும் வாக்கியம்.

இவ்வாறாக தீபு சீரழிந்து கொண்டிருந்த வேளையில், எனது மனைவி US செல்ல ஒரு வாய்ப்பு வந்தது. அவள் சென்ற பிறகு நானும் தனியாக இருப்பது இம்சையாக இருந்ததால், எனது ஜாகையை, 85க்கு மாற்றிக்கொண்டேன். அதாவது, காலை எழுந்து குளித்து முடித்து விட்டு, அலுவலகம் கிளம்பும் போது எனது வண்டியை அவர்களது வீட்டில் வைத்து விட வேண்டியது, மாலை நேராக அவர்கள் வீட்டிற்கு வந்து, இரவு 12 மணிக்கு மேல் கிளம்பி தூங்க செல்ல வேண்டியது. சனி மற்றும் ஞாயிறுகளில் அவர்களது வீட்டிலேயே குடி இருக்க வேண்டியது. திருமணத்திற்கு பிறகு வந்த இந்த இரண்டாம் bachelor life முன்னதை விட நன்றாக இருந்தது. சுமார் 7 மாதங்கள் அவ்வாறு சென்ற போது நடந்த நிகழ்வுகள் பல. கிச்சா மாலை போட்ட சம்பவமும் இப்பொழுது தான் நடந்தது.

பொதுவாகவே சனி மற்றும் ஞாயிறுகளில் 85 இல்லம் ஒரு மாநாட்டுத்திடல் போல் இருக்கும். காரணம், எங்களுடைய அலுவலக நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், cousins என்று யாராவது வீட்டிற்கு வந்து விடுவார்கள். நங்களே பெரிய கும்பல். இதில் அவர்களும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்? நாங்கள் திரைப்படத்திற்கு போகாத வெள்ளி மற்றும் சனி இரவுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். திரைப்படத்திற்கு போகாத வேளையில், Brigade Road, M.G. Road, Forum Mall, Bangalore Central Mall, NASA/TGIF/Purple Haze/Legends Of Rock போன்ற pub கள் என்று எங்காவது சுற்றித்திரிந்து கொண்டிருப்போம். அலுவலக நாட்களிலோ வீட்டிலேயே கணிணியில் படம் பார்ப்பது, விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது, cards விளையாடுவது என்று ஏதாவது நடந்து கொண்டே இருக்கும். மாலை நேரங்களில் அலுவலகத்திலிருந்து அரைமணி நேர இடை வெளியில் ஒவ்வொருவராக வர ஆரம்பிப்பார்கள். முதலில், 5:45 மணிக்கு நான் வருவேன். வரும் போதே வீட்டிற்கு அருகே உள்ள tea கடையில் tea குடித்து விட்டு கிளம்புவேன் (tea என்றால் tea யுடன் தம்மும் என்று பொருள் கொள்க). அதற்கு பிறகு ஒவ்வொருவர் வரும் போதும் அவர்கள் tea குடிப்பதற்காக நானும் போய் tea குடிப்பேன். இவ்வாறு ஒரு 5 அல்லது 6 tea குடித்த பிறகு இரவு உணவை முடித்து விட்டு சீட்டு கச்சேரிக்கு உட்காருவோம். இரவு 12 மணி வரை நடக்கும் இந்த கச்சேரி முடிந்து நான் இரவு வீட்டிற்கு சென்று , வீட்டிலிருந்த படி எனது மனைவியுடன் சிறிது நேரம் உரையாடி விட்டு 1:30 மணிக்கு மேல் தான் படுக்க செல்வேன். சில வெள்ளி மற்றும் சனி இரவுகளில், முழு இரவும் வெட்டிக்கதை பேசிக்கொண்டு இருக்கும் சம்பவமும் நடக்கும். Sun Music ல் அட்டு figure ஹேமாவா இல்லை சந்தியாவா? போன்ற அதி முக்கியமான விஷயங்களை விவாதிக்கும் நாங்கள் சமயத்தில் சில நல்ல கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வோம். அவற்றுள் TRIPLE சொல்லும் mythological கதைகள், TANK மூன்று முறை ஜெர்மனி சென்றவன் ஆகையால், அவன் கூறும் ஜெர்மனியின் வாழ்க்கை முறை. குறிப்பாக நானும் முத்துவும் தனியே இருக்கும் பொழுது (என் மனைவி ஊருக்கு சென்ற தினத்திலிருந்து இவன் எனது வீட்டிலேயே தங்கி இருந்தான்) எங்களுக்குள் நடக்கும் உரையாடல் பொருளுடையதாகவே இருக்கும்.

இடையே கிச்சாவின் அலுவலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு அம்மாவை 85க்கும் சமைக்க ஏற்பாடு செய்தார்கள். அவர்களை பற்றி கூறியே ஆக வேண்டும். அவர்களுக்கு 3 பெண்கள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இதை வைத்துக் கொண்டு அவர்களது வயதை நீங்கள் ஊகித்து கொள்ளலாம். நாங்களோ அவர்களது வயதில் பாதி கூட நிறம்பாதவர்கள். ஆனால் கிச்சா அவர்களது அலுவலகத்தில் வேலை செய்யும் பாவத்திற்காக எங்கள் எல்லோரையும் அவர்கள், "வாங்க sir, போங்க sir" என்றே அழைப்பார்கள். அவர்கள் எங்களிடம் மாட்டிக் கொண்டு பட்ட பாடு இருக்கிறதே..... நாங்கள் ஒரு மாதத்திற்கு என்று வாங்கி வைத்த அரிசி, பருப்பு மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் ஒரே வாரத்தில் தீர்ந்து விடும். இதற்கு எங்களது பகாசுர பசி மட்டுமே காரணம் அல்ல. நான் முன்னரே கூறியது போல, 6 பேருக்கு வாங்கிய பொருளைக் கொண்டு 10 பேருக்கு சமைத்தால்?. அவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே வாங்கி வைக்கும் படி சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நாங்கள் வழக்கம் போல் மறந்து விடுவோம். அவர்களும் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் போட்டு (செருப்பு, துணி மணி நீங்கலாக) எப்படியோ சமாளித்து ஒரு வாரத்தை ஓட்டி விடுவார்கள். கடைசியில் பொறுமை இழந்து அவர்களே போய் வாங்கி வந்து விடுவார்கள். இதில் என்ன அதிசயம் என்றால், 3 ஆண்டுகளாக அங்கே வசிக்கும் எங்களுக்கு 5 ரூபாய் கூட கடனாக கொடுக்காத பக்கத்து கடைக்காரர், அவர்களுக்கு காசே வாங்காமல் நூறு, இருநூறு என்று கடனாக பொருட்கள் கொடுப்பார். பல சமயம் எங்கள் வீட்டில், அறுவருக்கு சமைத்த உணவை, 10 பேர் சாப்பிடுவதால், எதுவுமே மீந்து போகாது. ஆனால் 10 பேர் சாப்பிடுகிறார்கள் என்று அந்த அம்மாவிற்கு தெரியாது. இதனால் எங்களது சாப்பிடும் திரணை தவறாக புரிந்து கொண்டவர், நிறைய உணவு தயாரிக்க ஆரம்பித்தர். அப்பொழுது சில சமயம் சாப்பாடு மீந்து விடும். அந்நாட்களில் சீக்கிரம் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருபவர்கள் (நான் மட்டுமே வேறு யார்?) தொலைந்தார்கள்.


அவர்கள்:ஏன் sir சாப்பாடு அப்படியே இருக்கு? நல்லா இல்லையா?
நான்:அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. ரொம்ப நல்லா இருந்துது. எங்களுக்கு தான் வயிரு fullஆ இருந்துது. அதான் சாப்பிடலே.
அவர்கள்:நல்லா இல்லேன்னா சொல்லுங்க sir, right பன்னிக்கலாம். ஒங்களுக்கு புடிச்ச மாதிரி சமைக்கலாம். சொல்லுங்க sir
நான்:ஐயோ, அதெல்லாம் சத்தியமா நல்லா இருக்குங்க. நேத்திக்கு நிறைய பேர் வெளில சாப்பிட்டாங்க அதான் சாப்பிடலே. எங்க வீட்டு சமையல் மாதிரி இருக்குங்க. (அம்மா என்னை மன்னித்து விடு.)
அவர்கள்:என்ன sir, விலை வாசி விக்கர விலையில, நீங்க இப்படி சப்பாட waste செய்றீங்க. waste செய்யாதீங்க sir.

இது தினமும் நடக்கும் ஒரு உரையாடல். யாராவது லேசாக அவர் முன் இருமினாலே போதும், MBBS டாக்டர் போல் வரிசையாக வைத்தியம் செய்ய தொடங்கி விடுவார். அன்று அனைவருக்கும் சுக்கு கஷாயமும், வேப்பிலை ரசமும் தான். இருமியவன் வெளியே சாப்பிட போய் விட, இரவு 11 மணிக்கு எல்லா கடைகளும் மூடிய உடன் (பெங்களூரில் இது ஒரு இம்சை. இரவு 11 மணிக்கு மேல் கொலை நடந்தாலும் ஏன் என்று கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்) அலுவலகத்திலிருந்து களைப்புடன் வருபவர்கள், சுக்கு கஷாயத்தையும், வேப்பிலை ரசத்தையும் பார்த்தால் எப்படி இருக்கும் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

இவ்வாறு எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்த போது புதிதாக 85 வீட்டிற்கு குடி வந்தவன் விஸ்வநாதன். மலையின் நண்பன். எல்லா அயோகியத் தனங்களையும் செய்து விட்டு, சாமியார் வேடம் போட்டு ஊரை ஏமாற்றுபவன். தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சனைகளிடையே, தானே சம்பாதித்து MBA படித்தவன். இப்பொழுது CA படித்துக் கொண்டு இருப்பவன். இவனது துர்போதனையால் தான் கிச்சா மாலை போட்டுக் கொண்டு உத்தமனாக மாறினான். அந்த 45 நாட்களில், wine கடைக்காரன் நஷ்டம் தாங்காமல் தூக்கு போட்டுக் கொண்டு விட்டதாக செய்தி வருகிறதா என்று நான் தினமும் நாளிதழில் பார்த்துக் கொண்டிருப்பேன்.

யாரைப் பற்றி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் எங்கள் house owner ஐ பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவர் பெயர் திரு.பிரஹல்லாதன். தஞ்சையை சேர்ந்த அவர் பெங்களூரில் settle ஆகி பல ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு இரண்டு புதல்வர்கள். ஒரு முறை கூட அவர் எங்களை அதிர்ந்து பேசியதே இல்லை. எங்கள் வீட்டு மின்சார மற்றும் குடிநீர் பில்லை அவரே கட்டி விடுவார். வீட்டில் எந்த பிரச்சனை என்றாலும் உடனே வந்து கவனித்து விடுவார். எங்கள் சத்தங்கள், இம்சைகள் எதையும் அவர் பொருட்படுத்தியதே இல்லை (அல்லது பொருட்படுத்தாதது போல் இருந்தாரோ. எனக்கு தெரியாது.). நாங்கள் அங்கே நால்வர் two wheeler வைத்திருந்தோம். எங்களது வண்டிகளை வைக்கவே அங்கே இடம் சரியாக இருக்கும். அதனால் அவர்களது வண்டிகளை road டிலேயே வைத்து விடுவார்கள். வீட்டை நாங்கள் குப்பை மேடாக வைத்திருப்போம். ஆனாலும் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார். இதை எல்லாவற்றையும் விடக்கொடுமை என்னவென்றால் முதன் முதலில் வந்த அந்த அறுவரே இன்னமும் அந்த வீட்டில் இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டு இருப்பது தான்.

இந்நிலையில், நானும் வேறு வேலை கிடைத்து அமெரிக்கா வர வேண்டியதாகி விட்டது. கல்லூரியை விட்டு பிரியும் போது இருந்த அதே மன நிலையுடன் தான் 85யை விட்டு நான் பிரிந்தேன். நான் சென்ற 3 மாதங்களுக்குள், மலை சென்னைக்கு MBA படிக்க சென்று விட்டான். இதோ TRIPLE லுக்கு இன்று திருமணம். அவனும் வேறு வீட்டிற்கு சென்று விடுவான். கார்த்தி அடுத்த மாதம் சென்னையில் வேறொரு அலுவலகத்தில் சேர இருக்கிறான். தீபுவும் சென்னையில் வேறொரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறான். கிச்சா பதிவு செய்திருந்த சொந்த வீட்டை இந்த ஆண்டு இறுதியில் கட்டி முடித்து விடுவார்கள் ஆகையால், அவனும் சென்று விடுவான்.

பெண்கள் திருமணத்திற்கு பிறகு பெற்றோர்கள், நண்பர்கள் , சொந்த பந்தங்கள் அனைவரையும் இழக்கிறார்கள், ஆனால் ஆண்கள் வாழ்க்கையில் ஒன்றுமே இழப்பதில்லை என்று பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளே!, யார் சொன்னார்கள் ஆண்கள் ஒன்றையும் இழப்பதில்லை என்று? காவிரிக்கரை, கொள்ளிட நீச்சல், பின் மாலை நேர மலைக்கோட்டை, இரவு நேர காவிரிப்பாலம், காயத்ரீ's (சத்தியமா இது பொண்ணு இல்லீங்க. திருச்சிலெ இருக்கும் ஒரு tea கடை.), சிதம்பர விலாஸ் பேரூந்துப் பயனம், 85 வீட்டு வாழ்க்கை, நண்பர்களுடன் PVR சினிமா ........ வாழ்க்கை போராட்டத்தில் நான் இழந்த பலவற்றுள் சில. இவற்றில் எதெல்லாம் எனக்கு திரும்பக்கிடைக்கும், எதெல்லாம் கிடைக்காது என்பதை காலம் தான் கூற வேண்டும். வாழ்க்கை அதற்கே உரிய சுவாரசியங்களுடன் போய்க்கொண்டு இருக்கின்றது. ஆனால் ஒன்று. இனி நான் இந்தியா திரும்பும் பொழுது 85 வீட்டிற்கு செல்ல முடியாது. 85யில் தங்கி பழைய நினைவுகளை அசை போடலாம் என்ற எனது எண்ணம் நிறைவேறப் போவதும் இல்லை. 85 என்ற தேன் கூடு என் கண் முன் கலைவதை கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

பின்குறிப்பு : இந்த பதிவில், என்னுடன் 85 இல்லத்தில் வசித்தவர்கள் அல்லது 85 இல்லத்திற்கு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்கள், இவர்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். அது சரி, 85க்கு துளியும் சம்பந்தமே இல்லாத ஜினியை பற்றி ஏன் குறிப்பிட்டேன்? ஜினியைத் தவிர்த்து புவனேஷ்வர் வாழ்க்கையை நினைக்க முடியாத எனது இயல்பும் ஒரு காரணமோ என்னவோ!!!

Saturday, June 24, 2006

தாதாக்கள் பிடியில் தமிழ் சினிமா

ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்று கூறுவார்கள். அதில் ஒன்றான நாடகக்கலையின் பரிணாம வளர்ச்சியான சினிமாவிற்கு ஒரு தனி இடம் உண்டு. சிற்பம், சித்திரம், நடனம், இசை, கவிதை, நாடகம் போன்ற பல கலைகள் ஒன்று சேர்ந்த பெட்டகமே சினிமா எனலாம். அதிலும் குறிப்பாக இந்தியாவில், சினிமா என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி என்றே குறிப்பிடலாம். நான் பல சமயம் யோசிப்பதுண்டு, "ஏன் இந்தியாவில் மட்டும் இப்படி சினிமா நடிகர்கள் மீது ஒரு மோகம்?" என்று. பிறகு தான் அதன் காரணம் புரிந்தது. நமது சமுதாயத்தில், சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். இந்த பிரச்சனைகளில் இருந்து 3 மணி நேரம் தங்களை மறக்க செய்யும் சாதனமாகவே சினிமாவை மக்கள் பார்க்கிறார்கள். அதனால் தான் இதன் மேல் இப்படி ஒரு மோகம். அதில் தவறும் ஒன்றும் இல்லை.

இந்திய சினிமாவின் வளர்ச்சியை பார்த்தோமானால், அது பல்வேறு காலகட்டங்களை கடந்து இன்று ஒரு மிகப்பெரிய தொழிற்துறையாக உள்ளது.

இந்திய சினிமாவை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. வங்காள, மலையாள, மராத்தி திரைப்படங்கள்
2. இந்தி திரைப்படங்கள்
3. தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்கள்

இவற்றில், முதலாவதானது ஒன்றுக்கும் உதவாத கலைப்படைப்புக்களை தருவது. ஜெர்மணியிலும், உகாண்டாவிலும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பப்படுவதற்காகவே தயாராகும் படைப்புகள். மற்ற இரண்டும் தான் பொன் முட்டையிடும் வாத்துக்கள். இதில் இரண்டாவதான இந்தி திரைப்பட உலகம் தாதாக்களின் இரும்பு பிடியில் சிக்கி பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரு படத்திற்கு தேவையான பணம் தருவதில் இருந்து, நடிகர், நடிகையரை மிரட்டி கால்ஷீட் வாங்குவது, அவர்களை குறைந்த சம்பளத்தில் நடிக்க வைப்பது, படத்தை இந்த விலைக்கு தான் வாங்க வேண்டும் என்று வினியோகஸ்தர்களை மிரட்டுவது, பிறகு திரையரங்குகள் வரை இவர்களது இரும்பு பிடி நீண்டு கொண்டே போகிறது. அதனால் தான் ரஜினிக்கு 20 கோடி ரூபாயும், சிரஞ்சீவிக்கு 10 கோடி ரூபாயும், கமலஹாசனுக்கு 6 கோடி ரூபாயும், விஜய்க்கு 4 கோடி ரூபாயும் சம்பளம் தர தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள், இவர்களை விட பல மடங்கு அதிகம் வியாபாரம் செய்ய முடிந்த (தகுதியின் அடிப்படையில் நான் கூறவில்லை. நாடு முழுவதும் அவர்களது திரைப்படத்தை பார்க்கும் மக்கள் உள்ளதால் அவர்களது சந்தை பெரிது) அமீர்கானுக்கு 6 கோடியும் , ஷாருக்கானுக்கு 4 கோடியும், அமிதாப்பச்சனுக்கு 3 கோடியும் கொடுக்கிறார்கள். இங்கே இவர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்வது இவர்களது ரசிகர்களோ, தயாரிப்பாளர்களோ, இவர்கள் பெற்றுத்தரும் வெற்றியோ இல்லை. மாறாக நிழல் உலக தாதாக்களே இவர்களது சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள். இந்த வாத்து இடும் பொன் முட்டைகளை எல்லாம் எடுத்து அனுபவிப்பவர்கள் அடி உலக தாதாக்கள். அதற்கு பிரதிபலனாக நடிகர் நடிகையருக்கு தாதாக்கள் சில உதவிகள் செய்வதும் உண்டு. உதாரணத்திற்கு ஒன்று இதோ. 2003ம் ஆண்டு நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை மீது குற்ற புலனாய்வு போலீசார் ஒரு குற்றச்சாட்டினை பதிவு செய்தனர். நடிகை ஷில்பா ஷெட்டி ப்ரஃபுல் என்ற சேலை நிறுவனத்திற்கு விளம்பர மாடலிங் செய்வதற்கு அந்நிறுவனத்தார் ரூபாய் 80 லகரம் தருவதாக வாக்களித்ததாகவும், ஆனால் அவ்வாறு பணம் தராமல் மோசம் செய்ததாகவும், அதனால் அவரின் தந்தை தாதாக்களை வைத்து மிரட்டி அந்த பணத்தை வசூலித்ததாகவும் அக்குற்றச்சாட்டின் முதல் தகவல் அறிக்கை கூறுகின்றது. இந்நேரம் அது, நம் நாட்டில் நீதிமன்றங்களில் கிடப்பில் போடப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகளில் ஒன்றாகி இருக்கும். இவ்வாறு ஒரு சில உதவிகள் செய்வது சின்ன மீனை போட்டு பெரிய மீனை எடுக்கும் உத்தி என்பதை அனைவரும் அறிவார்கள். ஹிந்தித்திரைப்பட உலகை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு இவர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். இவர்கள் கையில் உள்ள பணம் கண்டிப்பாக தீவிரவாத / தேச விரோத செயல்களில் ஈடுபட உதவும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.

இந்த வகையில் பார்த்தோமானால் தமிழ் சினிமாவின் நிலைமை சற்றே ஆரோக்கியமானதாகவே இருக்கிறது. 90களின் இறுதி வரை இங்கே தாதாக்களின் ஆதிக்கம் இல்லை என்றே கூறலாம். ஆனால் சமீப காலமாக தமிழ் திரை உலகிலும் தாதாக்களின் பிடி வந்து விட்டது என தோன்றுகிறது. ஜெமினி பிலிம்ஸ், வாசன் க்ரூப், மாடெர்ன் தியேடர்ஸ், விஜய வாகினி போன்ற பல நிறுவனங்களும் வேறு தொழிலுக்கு சென்று விட, இப்பொழுது உள்ள தயாரிப்பாளர்கள் குறைந்த பணத்தை வைத்துக்கொண்டு படத்தை ஆரம்பித்து விட்டு பின்னர் அதை முடிக்க முடியாமல், இத்தகைய தாதாக்களிடம் பணம் பெற்று முடிக்கிறார்கள். அதற்கு இவர்களுக்கு தறப்படுவதோ பல மடங்கு வட்டி. வட்டி கட்ட தவறினாலோ சொத்து அனைத்தும் போய், உயிரே போய் விடும் நிலை. இத்தகைய தாதாக்களின் ஆட்சி பெருகியதை தொடர்ந்து தான், தயாரிப்பாளர் G.V. அவர்களின் தற்கொலை, தயாரிப்பாளர் காஜா மொஹிதீன் அவர்களின் தற்கொலை முயற்சி, நடிகர் அஜித் மிரட்டப்பட்ட விவகாரம்.

ஏதோ ஒரு மூலையில் ஒரு நடிகர் மிரட்டபட்டார் என்பதற்காக இதை நான் எழுதவில்லை. கோடிக்கணக்கான மக்களை மகிழ்விக்கும் கலைத்துறையில் உள்ளவர்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் தங்களது படைப்பை உருவாக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்தும், ரௌடீயிஸமும் இதில் குறுக்கிட கூடாது.

இந்த நிலையை சற்றே 'Extrapolate' செய்து பார்போம். இன்று கோடிகணக்கான ரூபாய் புழங்கும் சினிமா துறையை தங்கள் கையில் வைத்து ஆட்டிப்படைபவர்கள் நாளைக்கு வேறொரு துறைக்கு வர மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? உதாரணத்திற்கு, வங்கிகள் தனியார் மய மானதால், இவர்கள் வங்கிகளின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வங்கி இன்னாருக்கு தான் கடன் கொடுக்க வேண்டும் என்றும், இன்னாருக்கு இத்தனை வட்டி வீதம் டெபாசிட் தொகையில் பணம் தர வேண்டும் என்றும், வங்கி ஊழியர்களுக்கு இவ்வளவுதான் மாதம் சம்பளம் என்றெல்லாம் இவர்கள் நிர்ணயித்தால் எப்படி இருக்கும்? இன்று அந்த துறையை சேர்ந்தவர்கள் மட்டும் பாதிக்க படுவதால், பக்கத்து வீட்டுக்காரன் தானே கஷ்டப்படுகிறான் என்று நாம் பேசாமல் இருந்தால், நாளைக்கு நமக்கும் பாதிப்பு வரும். அப்பொழுது உதவிக்கு எவரும் வர மாட்டார்கள்.

அரசு இதை பல்வேறு சட்டங்களின் மூலம் நிறைவேற்றலாம். குறிப்பாக, ஒரு திரைப்படம் தயாராகும் போதே, தயாரிப்பாளர், படத்தின் பட்ஜெட், தனது சொத்து விவகாரம், படம் எடுக்க பணம் தந்தவர்கள் பட்டியல், வட்டி விகிதம் போன்றவற்றை அரசிடம் ஒப்படைக்க செய்யலாம். எந்த ஒரு தனி மனிதரும், இவ்வளவு தொகைக்கு மேல் பணம் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்ற சட்டம் ஏற்ப்படுத்தலாம். கந்து வட்டி தடையை முழுவதுமாக அமுலுக்கு கொண்டு வரலாம். இவற்றை எல்லாம் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இல்லாமலில்லை. ஆனால் அரசு தொலை நோக்கு பார்வையுடன் பார்த்து இவற்றை முழுவதுமாக ஒழிக்க ஆவன செய்ய வேண்டும்.

பின்குறிப்பு : சினிமா என்ற ஆங்கில சொல்லின் பொருள் திரையரங்கம் என்பதே ஆகும். ஆனாலும் சினிமா என்பது திரைப்படங்களின் மாற்றுப் பெயராக வழக்கில் வந்துவிட்டதால் அதையே நான் கையாண்டிருக்கிறேன்.

Thursday, June 22, 2006

பெரியாரை பற்றி ஜீவா


1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியாரை பற்றி தலைவர் ப.ஜீவானந்தம் அவர்கள் பேசியது:

தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான 'ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ' என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன்.

பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக்குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய 'அறப்போர் ' முறைகள் இந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டன.

இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.

ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்.ஜாதியமுறையை விரும்பாத, ஜாதியமுறையை எதிர்க்கிற, தம்மைப் பொறுத்த முறையில் ஜாதியமுறையை ஒழித்துவிட்ட எல்லாப்பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்தப் பெரும்பணியை ஆற்றுவதற்கு ஜனநாயக ரீதியான சமாதானமான மனமாற்றும் முறைகள் மிகச்சிறந்த முறை என்பதையும் பலாத்காரமுறை தகுந்தமுறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதிய தீய பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக்கட்டி விடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி இந்தச் சிலரின் பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்.

இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா 'காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'இந்துமதம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும் ' என்றும் போகப்போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்.

(சிரிப்பு)

நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், சீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்காக காரணம் சொன்னார்.

(சிரிப்பு)

இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்.கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதியவெறியும் ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.

அன்பர்களே! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈவேரா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.இனி இன்று அவர் நடத்தும் போராட்ட முறைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.

காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவேராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது. சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா?

(ஒரே சிரிப்பு)

காவிரி ஆற்றுவெள்ளம் ஒரு தனிமனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா?

(சிரிப்பு)

நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம்?

(சிரிப்பு)

குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா?

(சிரிப்பு)

ஓட்டல்களில் உள்ள ட்யூப்லைட்களை உடைத்து நொறுக்கினால் சாதிமுறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா?

(சிரிப்பு)

பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும், உச்சிக்குடுமிகளையும் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா? அல்லது தாக்குதலுக்கு பயந்து ஓடுவார்களா? எதிர்த்துத் தற்காப்பிற்குத் துணியமாட்டார்களா? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது பக்கத்தில் இருப்போர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் எந்தச் சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டிருப்பார்களா?

எந்த வகையாலும் இந்தகைய அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக் கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்தப் பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரிகச் செயல்கள் அல்ல, அநாகரிகச் செயல்கள் என்கிறோம். நிதானமான செயல்கள் அல்ல, வெறித்தனமான செயல்கள் என்கிறோம்.

எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம். இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால் .. என்று வைத்துக் கொள்வோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும்.

(சிரிப்பு)

இதிலிருந்து வெட்டுப்பழி, குத்துப்பழிக்கு வழிபிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு - இந்த அநாகரிகப் போக்கு அனுமதிக்கப்படத் தக்கதுதானா? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

குறிப்பிட்ட ஒரு ஜாதியை தனிமைப்படுத்தி, அநாகரிகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது.இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை.

ஆகவே ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும் - இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரங்கெட்ட செயலாகும்.

(நூல்: மேடையில் ஜீவா)

Wednesday, June 21, 2006

சாரு நிவேதிதாவிற்கு ஒரு கடிதம்

அன்பு சாருவிற்கு,

வணக்கம். முதலில் நான் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒரு கணிணிப்பொறியாளன். தங்களது பாஷையில் கூறுவதானால் 'லௌகீக வாழ்க்கையில் மூழ்கிய நவீன ஸாஃப்ட்வேர் குமாஸ்தா'. நான் தங்களது கோணல் பக்கங்களின் நீண்ட நாள் வாசகன். தங்களது எழுத்துக்களை பற்றிய எனது சிந்தனைகளை இங்கே எழுதியிருகின்றேன்.

ஓரு கலை வடிவம் அதை உணர்பவனுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புபவன். அந்த வகையில் உங்களது எழுத்துக்கள் பல சமயம் வெறுப்பையும், சில சமயம் கோபத்தையும், வெறொரு சில சமயம் சிரிப்பையும், எப்பொழுதாவது சந்தோஷத்தையும் கொடுக்கின்றன. குறிப்பாக நீங்கள் உங்களை நவீன இலக்கியவாதி என்றும், மற்றவர்களை பழமையில் ஊறிப்போனவர்கள் என்றும் கூறும் போது எனக்கு சிரிப்பே வருகிறது.

'ஸெக்ஸை' பற்றி எழுதுவதாலேயே நீங்கள் உங்களை நவீன இலக்கியவாதி என்று கருதினால் அதை போன்றதொரு நகைப்புக்குரிய எண்ணம் எதுவும் இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் எழுதாத காமத்தையா நீங்கள் எழுதி விட்டீர்கள்? 'இன்பம் கடல் மற்று காமம்' என்று அவர் கூறவில்லையா? 'வில்லொக்கும் நூதல் ; வேலொக்கும் விழிகள்; பல்லொக்கும் முத்து' என்று கம்பன் சீதையின் அழகை புகழ வில்லையா? 'எத்தனை பேர் தொட்ட முளை; எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்' என்றும் 'பிறந்த இடத்தை தேடுதே பேதை மட நெஞ்சம்; கறந்த இடத்தை நாடுதே கண்' என்றும் பட்டினத்தார் பாடவில்லையா? அவ்வளவு ஏன் 'ஓரூராயினும் சேரி வாரார்; சேரி வரினும் ஆரமுயங்கார்; ஏதிலார் சுடலை போல் கண்டும் காணா' என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பெண் பால் புலவர் தன் காமத்தையும் அதனால் எழுந்த ஏக்கத்தையும் பாட வில்லையா? அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் ஆழ்வார்கள் போன்றோரின் பேரின்ப பாசுரங்கள் கூட இறைவன் மீது கொண்ட காதலின் வெளிப்பாடாகத்தான் இருந்திருக்கின்றன.

அடுத்ததாக பணமும், புகழும், பதவியும் கொண்ட மனிதர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்பு. அது ரஜினியாக இருக்கட்டும், கருணாநிதியாக இருக்கட்டும் இல்லை சுஜாதாவாக இருக்கட்டும்.

இவர்களை விமர்சனம் செய்ய உங்களுக்கு முழூ தகுதியும் இருக்கிறது ஏனென்றால் இவர்கள் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள். ஆனால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இரண்டு புதல்வர்களையும், இந்தியாவில் இரண்டு கார்களையும் வைத்துக்கொண்டு குடி தண்ணீருக்காக அலையும் பக்கத்து வீட்டுக்காரரை விமர்சனம் செய்ய உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அவரது பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். உங்களை பாதிக்காத வரையில் அவர் செய்யும் எந்த செயலையும் விமர்சனம் செய்ய உங்களுக்கு உரிமை கிடையாது. மேலும் மாலினி குடும்பத்தை பற்றி கூறும் அவதூறு. அவர்கள் மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அவர்களுக்கு இருக்கும் செலவுகள் அவர்களுக்கே தெரியும். கார் EMI, வீடு EMI, மளிகை, Telephone, Electricity, Mobile, Petrol, Cable, Water, Sewage இப்படி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இதில் 500 ரூபாய் கொடுத்தார்களே என்பதற்காக அவர்கள் மீது விஷத்தை அள்ளி உமிழ்வது மிகவும் கேவலமான செயல்.

மூன்றாவதாக வேதங்களின் மீதான உங்கள் கருத்துக்கள். அதற்கு நான் பதில் கூறு முன் வேதத்தில் இருந்து சில ஸ்லோகங்களை பார்க்கலாம்.

VACHA VADMI MADHUMADA BHUYASAM MADHU SANDRISHAMA

I speak sweetly and softly so that I emerge as an epitome of sweetness. This sukta of Atharvaveda speak of MadhuVidya or the knowledge of sweetness. According to this we should perceive the world alike nectar which is sweet and pleasant.

In this way everyone should be devoid of hatred, harshness and filth. We should strain our feelings incessantly by constantly contemplating upon oneself.

Every person should become amicable so that he befriends one and all. The sweetness and pleasantness of personality should be evident in all our actions and thoughts. In this way we shall be successful in establishing global peace and happiness and help in ushering the feeling of brotherhood.

VISHWA HYAGNE DURITA TAR

O! Agni! Surmount all the evils and sins. We should abstain from violence, debauchary, evil deeds, sensual attachment, hatred, anger and ego. We should strive to become pure and chaste. By renouncing these evils and sins, one becomes prosperous and successful.

OM SARVE VAI SUKHINA SANTU SARVE SANTU NIRAMAYA
SARVE BHADRANI PASYANTU MA KASCID DUKHAM APNUYATOM
SANTI SANTI SANTI

O God! Let all be happy. May all be free from illnesses. May all see what is good and positive (in all things, beings and events). May no one be sorrowful. Let there be peace everywhere.

OM SAHANA VAVATU SAHANAU BHUNAKTU SAHA VEERYAM KARAVA VAHAI
TEJASVINAVA DHEETAMASTU MA VIDVISHA VAHAI OM SANTI SANTI SANTI

O God! Protect us together. Rule and nourish us together. Let us do something efficiently and usefully together. For this purpose let our intelligence and power of discrimination be bright. Let us not develop (unnecessary) feelings of difference and hatred.

LOGA SAMASTHA SUKINO BAVANTHU

மிகவும் பிரபலமான ஒரு வேத லிபிக்.

இப்படி எவ்வளவோ நல்ல விஷயங்கள் வேதத்தில் இருக்கும் போது உங்கள் கண்ணுக்கு தெரிவது அதில் உள்ள குறைகளே. 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்களே மாலினி மீதும் இன்னும் மாலினி போன்றோர் மீதும் வெறுப்பை விஷமாக உமிழும் போது, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் அவ்வாறு செய்ததில் தவறு ஒன்றுமே இல்லை. நீங்கள் எதை தேடினீர்களோ அது உங்களுக்கு கிடைத்தது. நல்லவற்றை தேடி இருந்தால் நல்லது கிடைத்திருக்கும்.

நான்காவதாக இந்தியா மீது உங்களுக்கு உள்ள வெறுப்பு. இந்த நாடு தரும் சுதந்திரத்தால் மட்டுமே உங்களால் இங்கே இருந்து கொண்டு இந்த தேசத்தையே கேவலமாக எழுத முடிகிறது. உங்களை போன்ற எழுத்தாளர்கள் மற்ற தேசங்களில் பட்ட சிறை தண்டனைகள் பற்றி நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். அதனால் அதை பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆக பலவகையில் பார்த்தாலும் வெறுப்பையே அதிகம் தரும் தங்கள் எழுத்துக்கள் என்னை விடாமல் துரத்தவும் செய்கின்றன. உங்கள் எழுத்துக்களில் உள்ள ஏதோ ஒன்று தான் அவ்வாறு என்னை இழுக்கிறது. அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. அதை அறிந்து கொள்வதற்காக இதோ உங்கள் கோணல் பக்கங்களை கணிணியில் மறுபடியும் புறட்டுகிறேன்.

இவன்,
சத்யப்ரியன்

Tuesday, June 20, 2006

About Me!


I was born and brought up in Trichy a beautiful town in Tamil Nadu, India. Having born as a third son of a typical south Indian middle class parents, I was always required to focus on my studies rather any other extra curricular activities. Though I did not have much inclination towards anything in life other than studies, I did have a very good apetite for reading books.

When I was 12, I read 'Ponniyin Selvan' for the first time. I could appreciate the writing skills of Kalki at that age. Then on I would have read that novel for a cool 100 times (trust me...... no joke). After that I started reading Kalki's novels like 'Sivakamiyin Sapatham', 'Parthiban Kanavu', 'Mogini Theevu' , 'Magudapathy', 'Alai Osai' etc. Not only Kalki intruded into my childhood days, but also Jegachirpian, Ra. Ki. Rengarajan, Jayakanthan, Cho, Sujatha, Balakumaran took some of my childhood days.

I also grew up watching Tamil movies and listening to Tamil movie songs. Ilayaraja's Anthimazhai or Panivizhum Malarvanam in SPB's voice replenishes me more than a cup of caffeine on early mornings. My perfect day has always been, raising from bed listening to Ilayaraja's song, watching a very good Tamil movie on a DVD, spend an hour or two in a coffee shop with friends and end my day with a classic Tamil novel.

I did my schooling in E. R. Hr. Sec. School, Trichy and graduated from Shanmugha College of Engineering, Tanjore. I beleive both these institutions are great in their own ways. I am grateful to my teachers, lecturers and professors, whom I believe were institutional in shaping me up. But for them I would not be what I am today.

After graduation, I worked for Siemens Automotive Systems Ltd., Chennai and then for Infosys Technologies Ltd., Bangalore before finally coming to Ashburn. Now I am employed with SRI Systems Inc., NJ.