Wednesday, June 21, 2006


சாரு நிவேதிதாவிற்கு ஒரு கடிதம்

அன்பு சாருவிற்கு,

வணக்கம். முதலில் நான் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒரு கணிணிப்பொறியாளன். தங்களது பாஷையில் கூறுவதானால் 'லௌகீக வாழ்க்கையில் மூழ்கிய நவீன ஸாஃப்ட்வேர் குமாஸ்தா'. நான் தங்களது கோணல் பக்கங்களின் நீண்ட நாள் வாசகன். தங்களது எழுத்துக்களை பற்றிய எனது சிந்தனைகளை இங்கே எழுதியிருகின்றேன்.

ஓரு கலை வடிவம் அதை உணர்பவனுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புபவன். அந்த வகையில் உங்களது எழுத்துக்கள் பல சமயம் வெறுப்பையும், சில சமயம் கோபத்தையும், வெறொரு சில சமயம் சிரிப்பையும், எப்பொழுதாவது சந்தோஷத்தையும் கொடுக்கின்றன. குறிப்பாக நீங்கள் உங்களை நவீன இலக்கியவாதி என்றும், மற்றவர்களை பழமையில் ஊறிப்போனவர்கள் என்றும் கூறும் போது எனக்கு சிரிப்பே வருகிறது.

'ஸெக்ஸை' பற்றி எழுதுவதாலேயே நீங்கள் உங்களை நவீன இலக்கியவாதி என்று கருதினால் அதை போன்றதொரு நகைப்புக்குரிய எண்ணம் எதுவும் இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் எழுதாத காமத்தையா நீங்கள் எழுதி விட்டீர்கள்? 'இன்பம் கடல் மற்று காமம்' என்று அவர் கூறவில்லையா? 'வில்லொக்கும் நூதல் ; வேலொக்கும் விழிகள்; பல்லொக்கும் முத்து' என்று கம்பன் சீதையின் அழகை புகழ வில்லையா? 'எத்தனை பேர் தொட்ட முளை; எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்' என்றும் 'பிறந்த இடத்தை தேடுதே பேதை மட நெஞ்சம்; கறந்த இடத்தை நாடுதே கண்' என்றும் பட்டினத்தார் பாடவில்லையா? அவ்வளவு ஏன் 'ஓரூராயினும் சேரி வாரார்; சேரி வரினும் ஆரமுயங்கார்; ஏதிலார் சுடலை போல் கண்டும் காணா' என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பெண் பால் புலவர் தன் காமத்தையும் அதனால் எழுந்த ஏக்கத்தையும் பாட வில்லையா? அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் ஆழ்வார்கள் போன்றோரின் பேரின்ப பாசுரங்கள் கூட இறைவன் மீது கொண்ட காதலின் வெளிப்பாடாகத்தான் இருந்திருக்கின்றன.

அடுத்ததாக பணமும், புகழும், பதவியும் கொண்ட மனிதர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்பு. அது ரஜினியாக இருக்கட்டும், கருணாநிதியாக இருக்கட்டும் இல்லை சுஜாதாவாக இருக்கட்டும்.

இவர்களை விமர்சனம் செய்ய உங்களுக்கு முழூ தகுதியும் இருக்கிறது ஏனென்றால் இவர்கள் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள். ஆனால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இரண்டு புதல்வர்களையும், இந்தியாவில் இரண்டு கார்களையும் வைத்துக்கொண்டு குடி தண்ணீருக்காக அலையும் பக்கத்து வீட்டுக்காரரை விமர்சனம் செய்ய உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அவரது பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். உங்களை பாதிக்காத வரையில் அவர் செய்யும் எந்த செயலையும் விமர்சனம் செய்ய உங்களுக்கு உரிமை கிடையாது. மேலும் மாலினி குடும்பத்தை பற்றி கூறும் அவதூறு. அவர்கள் மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அவர்களுக்கு இருக்கும் செலவுகள் அவர்களுக்கே தெரியும். கார் EMI, வீடு EMI, மளிகை, Telephone, Electricity, Mobile, Petrol, Cable, Water, Sewage இப்படி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இதில் 500 ரூபாய் கொடுத்தார்களே என்பதற்காக அவர்கள் மீது விஷத்தை அள்ளி உமிழ்வது மிகவும் கேவலமான செயல்.

மூன்றாவதாக வேதங்களின் மீதான உங்கள் கருத்துக்கள். அதற்கு நான் பதில் கூறு முன் வேதத்தில் இருந்து சில ஸ்லோகங்களை பார்க்கலாம்.

VACHA VADMI MADHUMADA BHUYASAM MADHU SANDRISHAMA

I speak sweetly and softly so that I emerge as an epitome of sweetness. This sukta of Atharvaveda speak of MadhuVidya or the knowledge of sweetness. According to this we should perceive the world alike nectar which is sweet and pleasant.

In this way everyone should be devoid of hatred, harshness and filth. We should strain our feelings incessantly by constantly contemplating upon oneself.

Every person should become amicable so that he befriends one and all. The sweetness and pleasantness of personality should be evident in all our actions and thoughts. In this way we shall be successful in establishing global peace and happiness and help in ushering the feeling of brotherhood.

VISHWA HYAGNE DURITA TAR

O! Agni! Surmount all the evils and sins. We should abstain from violence, debauchary, evil deeds, sensual attachment, hatred, anger and ego. We should strive to become pure and chaste. By renouncing these evils and sins, one becomes prosperous and successful.

OM SARVE VAI SUKHINA SANTU SARVE SANTU NIRAMAYA
SARVE BHADRANI PASYANTU MA KASCID DUKHAM APNUYATOM
SANTI SANTI SANTI

O God! Let all be happy. May all be free from illnesses. May all see what is good and positive (in all things, beings and events). May no one be sorrowful. Let there be peace everywhere.

OM SAHANA VAVATU SAHANAU BHUNAKTU SAHA VEERYAM KARAVA VAHAI
TEJASVINAVA DHEETAMASTU MA VIDVISHA VAHAI OM SANTI SANTI SANTI

O God! Protect us together. Rule and nourish us together. Let us do something efficiently and usefully together. For this purpose let our intelligence and power of discrimination be bright. Let us not develop (unnecessary) feelings of difference and hatred.

LOGA SAMASTHA SUKINO BAVANTHU

மிகவும் பிரபலமான ஒரு வேத லிபிக்.

இப்படி எவ்வளவோ நல்ல விஷயங்கள் வேதத்தில் இருக்கும் போது உங்கள் கண்ணுக்கு தெரிவது அதில் உள்ள குறைகளே. 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்களே மாலினி மீதும் இன்னும் மாலினி போன்றோர் மீதும் வெறுப்பை விஷமாக உமிழும் போது, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் அவ்வாறு செய்ததில் தவறு ஒன்றுமே இல்லை. நீங்கள் எதை தேடினீர்களோ அது உங்களுக்கு கிடைத்தது. நல்லவற்றை தேடி இருந்தால் நல்லது கிடைத்திருக்கும்.

நான்காவதாக இந்தியா மீது உங்களுக்கு உள்ள வெறுப்பு. இந்த நாடு தரும் சுதந்திரத்தால் மட்டுமே உங்களால் இங்கே இருந்து கொண்டு இந்த தேசத்தையே கேவலமாக எழுத முடிகிறது. உங்களை போன்ற எழுத்தாளர்கள் மற்ற தேசங்களில் பட்ட சிறை தண்டனைகள் பற்றி நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். அதனால் அதை பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆக பலவகையில் பார்த்தாலும் வெறுப்பையே அதிகம் தரும் தங்கள் எழுத்துக்கள் என்னை விடாமல் துரத்தவும் செய்கின்றன. உங்கள் எழுத்துக்களில் உள்ள ஏதோ ஒன்று தான் அவ்வாறு என்னை இழுக்கிறது. அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. அதை அறிந்து கொள்வதற்காக இதோ உங்கள் கோணல் பக்கங்களை கணிணியில் மறுபடியும் புறட்டுகிறேன்.

இவன்,
சத்யப்ரியன்

12 Comments:

பாலசந்தர் கணேசன். said...

எதோ ஒன்று தான் அவ்வாறு என்னை இழுக்கிறது.

சத்யன் அவர்களே,
இதை தான் சாரு நிவேதிதா எதிர்பார்க்கிறார். குறைபாடுகள் இல்லாத கனவு தேசம் என்றோ அல்லது கன்வு சமூகம் என்றோ எதுவுமில்லை என்பது உங்களை என்னையும் விட நிறைய புத்தகங்களை படித்திருக்கிற(அல்லாது அவ்வாறு நினைத்து கொண்டிருக்கிற) சாரு நிவேதிதாவிற்கு நன்றாகவே தெரியும்.

வாழ்வை சார்ந்தது தான் இலக்கியம், கவிதை எல்லாம். ஒரு மனிதன் தன் தேவைகளை எவ்வாறு ஒர் சமூகத்தில் நிறைவேற்றி கொள்கிறான் என்பதை வைத்து தான் இலக்கியம் இயங்கும், இயங்குகிறது. சாரு நிவேதிதா சொல்வது போல ஒர் சமூகமாக நாம் எண்ண அளவில் உயர்ந்தோ தாழ்ந்தோ இல்லை. எல்லா சமூகத்திலும் அந்த சமூகத்தின் அழுக்குகளை, குறைகளை எதிர்த்து குரல் எழும்பத்தான் செய்யும். அது நம் சமூகத்திலும் நடைபெறுவது நல்லதே. ஆனால் சாரு செய்வது குறைபாடுகள் இருப்பதை பயன்படுத்தி கொண்டு விளம்பரம் தேடும் ஒர் வலிமையில்லாத , வணிகத்துவம் தேடும் ஒர் நேர்மையற்ற குரல். சாரு நிவேதிதாவுக்கு தேவை கவனம். அதை அவர் ஏற்கனவே பெற்றும் விட்டார். அதை தக்க வைத்து கொள்ளவும் அவருக்கு தெரியும்.

சிறு பத்திரிக்கை உலகம் ஒர் தனி உலகம். சமூகத்தின் அனைத்து அழுக்குகளும் அங்கே காணலாம். அவர்களுக்கிடயே நடக்கும் சண்டையில் குறைந்த பட்ச மனித நாகரிகம் கூட இல்லாத வார்த்தைகளும் கைகலப்பும் கூட நிகழும். இதில் சாருவுக்கும் பங்கு இருக்கிறது. சிறுபத்திரிக்கையாளர்கள் பலர் மற்றவற்ற அருவருக்கதக்க வகையில் குறை கூறி மன மகிழும் குணம் கொண்டவர்கள். இவர்களுடைய வாழ்க்கையும் எழுத்தும் மற்றவற்றை விட மிகவும் போலியானது.


Please remove word verification.

SathyaPriyan said...

கருத்து தெரிவித்ததற்கு நன்றி பாலசந்தர் கணேசன். சாருவை பொருத்த வரை அவரது பெரும்பாலான எழுத்துக்கள் ஸெக்ஸை சுற்றியோ அல்லது அவர் அன்றாடம் செய்யும் செயல்களை சுற்றியோ அமைகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், "என்னை போன்ற இலக்கியவாதிகளை கவனிக்காமல் இந்த சமூகம் ரஜினியை கொண்டாடுகிறதே. இந்த சமூகம் உறுப்படுமா?", என்று அவர் சபிப்பதுதான். இதில் ஒரு பொறாமை கலந்த ஆதங்கம் தெரிகிறதே அன்றி சமூக அக்கரை கொஞ்சமும் இல்லை.

சிறில் அலெக்ஸ் said...

சாருவின் எழுத்தைப் படித்து எனக்கு எழுந்த பல உணர்வுகளும் உங்களுக்கும் வந்துள்ளன. ஏதோ ஒன்று அவரின் எழுத்தை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது என்பது உண்மை. வலைப்பதிவு ஆரம்பிப்பதற்கு முன் கோணல் பக்கங்களை தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். ஒருவகையில் அந்த வாசிப்புத்தான் என்னை எழுத வைத்தது என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயாமப் படுகிறது இப்போது.

சாருவின் நடை நல்லதாயுள்ளது. நமக்குள் இருக்கும் ஆதிக்க எதிர்ப்பை எளிதில் வெளிக்கொண்டுவருகிறார். திடீரென அவர் நம்மைப் போலுள்ளவரைத் தாக்கும்போது வெறுப்பு வருகிறது.

சரி, இந்தக் கடிதத்தை அவருக்கு அனுப்பினீர்களா?

தமிழன் said...

அண்மையில் குமுதத்தில் சாரு தான் சந்தித்த மூன்று பெண்களைப் பற்றியும் பப் வாழ்க்கை பற்றியும் வர்ணித்து எழுதியதை பார்த்தால் இந்தியா அமெரிக்காபோல் மாறுகின்றதோ என்ற சந்தேகம் வந்தது இவர் ஒரு முறை இளையராஜாவுக்கு இசை தெரியாது எனவும் விகடனில் எழுதியிருந்தார்.

koothaadi said...

சாரு எழுத்தை நான் தொடர்ந்து படித்து வந்துள்ளேன் ,அவரின் எல்லா எழுத்துக்களிலும் கருத்துக்களிலும் ஒரு எள்ளல் நடை இருக்கும் அது என்க்குப் பிடிக்கும் ..சில பல நேரங்களில் அவர் பிரபலன்ங்களை குறை கூறுவார் ,அதில் அறம் இருக்கும் எனச் சொல்ல முடியாது ..
அவர் எல்லோரையும் விமர்சிப்பதாய் சொல்லுவார் ..ஆனால் தினமலர் மணி போன்ற தனக்கு வேண்டியவர்கள் புகழ் மட்டும் தான் ...

சமீபத்தில் அவரின் இணையப் பக்கத்தில் கனிமொழியை விமர்சித்து அவர் வெறும் பிரிட்டானியா மேரி பிஸ்கெட் மட்டுமே வாங்கி வந்துப் பார்த்ததாக குறை சொல்லி எழுதியிர்ருந்தார் ..எழுதிவிட்டு ஒரே நாளில் இணையத்தில் இருந்து காணாமல்ப் போய் விட்டது அவரின் அறச் சீற்றத்திற்கான உதாரணம் ..

அதே சமயம் அவரின் பலக் கட்டுரைகள் விசய ஞானம் உள்ளதாகத் தான் உள்ளது ..பல லத்தீன் அமெரிக்க எழுத்துக்களையும் அரபி இலக்கியங்களையும் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார் ..பிரேம்-ரமேஷ் வழியில் வந்தவர் என்று அவரைச் சொல்லுவார்கள் ..ஆனால் இவர் திட்டமிட்டு கட்டுரை எழுதுவத விட அடிக்கடி எதாவது சொல்லி பிர்பலாம்யி விட்டார் ..

செக்ஸ் பற்றி மட்டுமே எழுதிருக்கிறார் என்பது சரியான குற்றச் சாட்டு அல்ல ..

வேதம் பற்றி உங்களின் ஆதங்கம் சரியானதே ஆனால் அவர் சொன்ன விசயங்களும் வேதத்தில் இருக்கிறது ..வேதத்தில் உள்ள ஒவ்வாத எத்தனையோ விசயங்களைப் பற்றி எத்தனைப் பேர் எழுதுகிறார்கள் ..வேதம் புனிதமானது என்று கட்டமைக்க முனைபவர்களே அதிகம் ..எதைப் பற்றியும் மாற்றுப் பார்வை குறித்த ஒரு தீவிரமானப் பார்வை வேண்டும் ..சாருவின் எழ்த்தப் பற்றிய விமர்சனம் அவர் விமர்சிப்பதுப் போல் தான் இருக்கிறது ..

எனக்கும் அவர் மேல் தீவிரமான விமர்சனங்கள் உண்டு ..ஆனால் அவர் வெறும் செக்ஸ் எழுத்தாளர் என்பது அவதூறு என்பது தான் என் கருத்து ..

எலிவால்ராஜா said...

சாரு

சிலசமயத்தில் அவருடைய மன கழிவுகள் அவர்க்கு தெரியாமல் வெளிவந்துவிடும். நல்ல எழுத்தாளர் சமயங்களில் வழுக்கிவிழுந்து விடுவார்கள்.

ஒரு முறை இவர், இளையராஜாவையும், திருமா வையும் அவர்களை பற்றி சொன்ன கருத்து சாரு மனதில் அடக்கிவைத்திருந்த சாதி வெறி வெளிவந்ததாக கருதுகிறேன்.

இவர் சொன்ன கருத்து இதுதான்..
இளையராஜாவும், திருமா வும் தலிதுகள் இவர்கள் ஏன் சைவமாக மாறிவிட்டர்கள். தலிதுகளின் அடையாளமே மாமிச பட்சினியா இருப்பதுதான் என பொருள் பட தினமலரில் கூறியிருந்தார். தலிதுகள், மாறகூடாது என கூறியிருந்தார்....

பாருங்கள், தலிதுகளின் அடையாளங்கள், மாமிச உண்பதுமட்டுமில்லை, அவர்கல் செருப்பு போடகூடாது, அடிமைகளாக இருப்பது தான்....

இப்போழுதுதான், தலித்துகள் ஏதோ கொஞ்சம் மாறிவருகிறார்கள், அதுவும் இவருக்கு கேலியாக படுகிறது.
இந்த கருத்துக்குபின் இவர் எழுதுவதை படிப்பதைவிட்டுவிட்டேன்.
நல்ல எழுத்தாளர்... என்ன செய்வது சிலசமயம் இது போல நடந்துவிடும்.....

அறிவழகனையும், அவரது குடும்பத்தையும் இறைவன் நல்ல படியாகவைக்க வேண்டும்.....

Johan-Paris said...

சத்தியப்பிரியனுக்கு!
தங்கள்;சாரு பற்றிய ஆதங்கம்; பார்த்தேன். உங்களைப் போல் ;நானும் அவருக்கு எழுதியுள்ளேன்.அவர் முற்றாக தமிழையும்; தமிழ் சார்ந்ததையும் இகழ்வது; எரிச்சலைத் தரும்; ஒரு தடவை இளையராஜாவை க் கேலி செய்திருந்தார். அது கேலி என்பதை விட இயலாமை தந்த பொறமை எனத் தான் எனக்குப் பட்டது.அதே வேளை ரஜனியின் 2000 ஆண்டுச் வயதுடைய சாமியுடன் பேசினேன். என்ற பினாத்தலைக் கிழித்து நாறப் போட்டது. சாருதான்!!!!!
இந்தியாவின் அத்தனை புத்திசீவிகளும் ( சோ உட்பட); அதைப் பற்றிக் கேட்க நாதியற்றவர்களாகத்தான் இருந்தார்கள். மருத்துவர் ராமதாசும் கருத்துப் பின் கூறினார்.
இதே வேளை சைபர்க் காதலில் மாட்டிப் புலம்புவது; மதுவை,புகைப்பிடித்தலை, அளவுக்கு மீறிய பாலியல் இச்சைகள ஞாயப் படுத்துவது.புரிந்து கொள்ள முடியாத மனிதனாகவே! அவர் எழுதுவதும்; வாழ்வதும்;தன்னை உலகம் தூக்கித் தலையில் வைக்க வேண்டுமெனும் எதிர்பார்ப்புடன் ; புலம்புவது ; அவர் மேல் பஞ்சாதாபத்தையும்; ஏற்ப்படுத்தி தன் வாழ்வைச் சீராக்க முடியாத இவர்;என்ன??,அடுத்தவருக்குப் புத்தி சொல்கிறார். எனும் ஏளனமே வருகிறது.
வேதத்தைப் பற்றி அவர் எழுதியதைப் படித்தேன். ஒன்று இந்தியாவில் வேதம் பற்றிய கருத்து; இருவகை ஏன்???,பிராமணர் யாவருமே வேதம் உத்தமம் என்பவர்களாக இருக்கிறார்கள். ஏனைய சாதியினர் மாறுபட்ட கருத்துடையோராகவே! பெரும்பான்மையினர் இருக்கிறார்கள். ஏன்?????
சோவின் துக்ளக்கில் அவர் தரும்; வேதம் சம்பந்தமான விளக்கங்களுக்கு ,வரும் பாராட்டுக் கடிதத்தில் 99./.,அக்ரகாரங்களில் இருந்து வரும் கடிதங்களாக இருப்பது கண்கூடு.
இங்கே ,சாருவுக்கு எப்படி வேதத்தின் நல்ல பகுதிகள் தெரியவில்லை. என்பது போல் பெரியாரோ! இங்கர்சாலோ சொன்னதில் கூட ;தமது வாதத்துக்கு ஏற்புடையதை வெட்டி ஒட்டுதல்; யாவரும் செய்கிறார்கள். சோ உட்பட.........சங்கராச்சாரி விவகாரத்தில் சோ,எஸ்.கிருஸ்ணமூர்த்தி;வெங்கட்ராமன்;சேசன் போன்றோர்; தங்கள் முழு வாதத் திறமை நேரம்,பணம் எல்லாம் செலவு செய்தார்களே!! ஏன்?????; ஆனால் ஏதோ நடந்திருக்கிறது; என்பது தெளிவாக உள்ளது."நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா- சொல்லுங்கள்" எனும் நிலையிலேயே எல்லோரும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். இரத்தம் நீரிலும் தடிப்பானது தெளிவாகிறது. சாருவை இந்த விடயத்தில் குறை கூற முடியாது.
எப்படிப் பல தடவை "சோ" வின் எழுத்தில்; பக்கச்சார்பு இருப்பது தெரிந்தும்; 35 வருடமாக தொடர்ந்து படிக்கிறேன்!!. அப்படி ஒரு போதை!!! அதே ஆர்வத்துடன் இன்று வரை சாருவைப் படிக்கிறேன்; இப்போதும் தியாகராஜ பாகவதர் பற்றிய கட்டுரையில்; அவரின் கடைசிகாலத் தோல்விக்கு; சாரு கூறியுள்ள காரணங்களே பொருத்தமானவை.அந்த அளவு கணிப்புகளைச் செய்தும்; பல தடவை வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.
சாரு தொடர்ந்தெழுத வேண்டுமென்பதே! என் அவா!; நானும் உங்களைப் போல் அவர் சில பக்கங்களை வெகுவாக ரசிக்கிறேன்.
சாரு ஓர் செக்ஸ் எழுத்தாளன் என முத்திரை குத்துவது;வன்மையாகக் கண்டிப்புக்குரியது.அதற்கப்பாலும் அவர் வீச்சு காத்திரமானது.
யோகன் பாரிஸ்

Avitam said...

இந்தப்பதிவை பற்றிய பின்ணூட்டம்
http://casuallly.blogspot.com/

மன்னிக்கவும் புதிதாக தேன்கூடிலே, தமிழ்மணத்திலே சேர்வதற்க்கு குறைந்தபட்சம் மூன்று பதிவுகள் வேண்டியிருக்கிறதே..
சரி இதையும் பதிவாக்கிவிடலாம் என்றுதான்


இந்த பதியவனையும் ஆதரித்து, ஆளக்குவீர்கள் என்ன நம்புகிறேன்

SathyaPriyan said...

//
சிறில் அலெக்ஸ் said...

சரி, இந்தக் கடிதத்தை அவருக்கு அனுப்பினீர்களா?
//

அனுப்பினேன் சிறில் அலெக்ஸ் அவர்களே. பதில் வரவில்லை. வந்தால் பின்னூட்டமாகவோ தனி பதிவாகவோ அவசியம் பதிகிறேன்.

//
Thamilan said...

இவர் ஒரு முறை இளையராஜாவுக்கு இசை தெரியாது எனவும் விகடனில் எழுதியிருந்தார்.
//

இளையராஜாவுக்கு இசை தெரியாது என்று ஒருவர் கூறியதால் மட்டுமே அவரது எழுத்துக்களை நாம் புறக்கனிக்க முடியாது Thamilan அவர்களே. அது அவரது கருத்து. அதை கூறுவதற்கு அவருக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் அதே போன்றதொரு கருத்தை அவரது எழுத்தின் மீதும் மற்றவருக்கு சொல்ல உரிமை உண்டு என்பதை அவர் புறிந்து கொண்டதாக தெரியவில்லை. அவ்வாறு அவரை விமர்சிப்பவர்கள் அவரது திட்டுகளில் இருந்து தப்ப முடியாது.

//
koothaadi said...

செக்ஸ் பற்றி மட்டுமே எழுதிருக்கிறார் என்பது சரியான குற்றச் சாட்டு அல்ல.

வேதம் பற்றி உங்களின் ஆதங்கம் சரியானதே ஆனால் அவர் சொன்ன விசயங்களும் வேதத்தில் இருக்கிறது ..வேதத்தில் உள்ள ஒவ்வாத எத்தனையோ விசயங்களைப் பற்றி எத்தனைப் பேர் எழுதுகிறார்கள் ..வேதம் புனிதமானது என்று கட்டமைக்க முனைபவர்களே அதிகம்
//

சாரு செக்ஸ் பற்றி மட்டுமே எழுதுவதாக நான் கூறவில்லை. ஆனால் அவரின் பெரும்பாலான எழுத்துக்கள் செக்ஸை சுற்றியே இருகின்றன. அதையும் நான் ஒரு குற்றச்சாட்டாக கூறவில்லை. அவ்வாறு குற்றம் சாட்டினால், வள்ளுவரையும், கம்பரையும், பட்டினத்தாரையும் மற்றும் அக நானூறு பாடிய புலவர்களையும் நான் குற்றம் சாட்டியதாக ஆகும். ஆகையால் செக்ஸ் பற்றி எழுதுவதற்கு நான் எதிர்ப்பாளன் அல்ல.

அதே சமயம் தான் செக்ஸ் பற்றி எழுதுவதால் மட்டுமே தன்னை மிகச்சிறந்த இலக்கியவாதி என்று அவர் கருதுவதினால் அதை பற்றிய எனது மாற்றுக் கருத்தை தெரிவித்தேன்.

வேதத்தை பற்றி மக்களிடையே பல மாற்றுக் கருத்துக்கள் உண்டு. வேதம் மிகவும் புனிதமானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் மிகவும் சரி என்றும் ஒரு சாரார் கூறுவர். அந்த ஒரு சாரார் வேதத்தை கண்மூடித் தனமாக போற்றுவதாலேயே வேறொரு சாரார் அதை கண்மூடித் தனமாக எதிர்கிறார்கள். என்னை பொருத்தவரை இரண்டுமே தவறு. 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்று தமிழ்மறை கூறுவது போல நாம் அதில் உள்ள நல்லவற்றை நாம் எடுத்துக் கொள்ளலாமே.

//
எலிவால்ராஜா said...

தலிதுகளின் அடையாளமே மாமிச பட்சினியா இருப்பதுதான் என பொருள் பட தினமலரில் கூறியிருந்தார். தலிதுகள், மாறகூடாது என கூறியிருந்தார்
//

தலித்துகளை அடையாளம் காட்ட இவர் யார்? புலால் மறுத்தலை தமிழ்மறை போற்றுகிறதே. அதற்கு அவர் என்ன கூறுவார்.

//
Johan-Paris said...

சைபர்க் காதலில் மாட்டிப் புலம்புவது; மதுவை,புகைப்பிடித்தலை, அளவுக்கு மீறிய பாலியல் இச்சைகள ஞாயப் படுத்துவது.புரிந்து கொள்ள முடியாத மனிதனாகவே! அவர் எழுதுவதும்; வாழ்வதும்;தன்னை உலகம் தூக்கித் தலையில் வைக்க வேண்டுமெனும் எதிர்பார்ப்புடன் ; புலம்புவது ; அவர் மேல் பஞ்சாதாபத்தையும்; ஏற்ப்படுத்தி தன் வாழ்வைச் சீராக்க முடியாத இவர்;என்ன??,அடுத்தவருக்குப் புத்தி சொல்கிறார். எனும் ஏளனமே வருகிறது.
//

இதைத்தான் நானும் கூறுகிறேன். ஒரு எழுத்தாளனுக்கு சமூக அக்கரை இருக்க வேண்டாமா? விபச்சாரிகளிடம் செல்வதை நியாயப்படுத்துவதை எவ்வாறு நாம் பொருத்துக் கொள்ள முடியும்? மது, மாமிசம் உட்கொள்ளாமல் இருப்பதையும், பிறன் இல் விழையாமல் இருப்பதையும் தமிழ்மறை போற்றுகிறது.ஆனால் இவரோ அதை எல்லாம் எள்ளி நகையாடுகிறார்.

//
Avitam said...

இந்தப்பதிவை பற்றிய பின்ணூட்டம்
http://casuallly.blogspot.com/
//

படித்தேன். சாருவின் முரண்பாடுகளை அழகாக கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Kusumban said...

சத்யப்பிரியன்,

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். முடிந்தால் எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயலவும். இலக்கண சுத்தமாய் எழுதச் சொல்லவில்லை. அது எனக்கும் வராது.

நீங்கள் என்னை மாதிரி குசும்பு செய்பவர் இல்லை. இருப்பினும் தட்டச்சு செய்வதில் அவசரம்தான் பிழைக்கு காரணமென்றால் கொஞ்சம் பொறுமையாய் தட்டச்சு செய்யலாமே?

சாருவை விட்டு விட்டுப் படித்தாலும் கோணல்பக்கங்களை முழுதும் படிப்பது என் வாடிக்கை. சாரு ஒரு புதிர். அவரைப் பற்றி எழுத நிறைய உள்ளது.

ஒரு கணம் அவரது எழுத்திலுள்ள நியாயத்தை நினைத்து கொதிக்கும் போதே அடுத்த பதிவில் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி அணைத்து விடுவார். அது எனது அபிப்பிராயம். ஆனால் அவரை தொடர்ந்து வாசிப்பேன். புரிந்துகொள்ள முடியும் வரை.

இன்ஷா அல்லா.

SathyaPriyan said...

//
Kusumban said...

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். முடிந்தால் எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயலவும். இலக்கண சுத்தமாய் எழுதச் சொல்லவில்லை. அது எனக்கும் வராது.

நீங்கள் என்னை மாதிரி குசும்பு செய்பவர் இல்லை. இருப்பினும் தட்டச்சு செய்வதில் அவசரம்தான் பிழைக்கு காரணமென்றால் கொஞ்சம் பொறுமையாய் தட்டச்சு செய்யலாமே?
//
இதில் தவறாக எடுத்துக் கொள்ள ஒன்றுமே இல்லை Kusumban அவர்களே. எழுத்துப் பிழைகளை தவிர்க்க அவசியம் முயற்சிக்கிறேன்.

இதே கருத்தை கூறிய திரு. துளசி கோபால் அவர்களுக்கும் நன்றி.

SHIVA said...

நீங்க இன்னும் நிறைய படைக்கணும்ன்னு வாழ்த்தறோம் by shiva