Tuesday, December 18, 2012

நீதானே என் பொன் வசந்தம் - பாடல் விமர்சனம்

சென்ற பதிவில் நீதானே படத்தின் மிகப் பெரிய லெட்டவுன் ராஜா தான் என்று சொல்லிவிட்டேன் என்று ஒரு நண்பர் என்னை மிகவும் கோபித்துக் கொண்டார். ஏனென்றால் நான் ராஜாவின் வெறியன். அவரும் கூடத்தான்.

அவரை சமாதானப் படுத்த அனைவரும் பட விமர்சனம் எழுதி முடித்த பின்னர் நான் நீதானே படத்தின் பாடல் விமர்சனத்தை எழுதுகிறேன்.

பொதுவாகவே நான் பாடல்களை படம் பார்த்த பிறகு தான் விமர்சிக்க தொடங்குவேன். ஏனென்றால் படம் பார்த்த பிறகு தான், பாடல்களின் களம், அதை பாடும் கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள், படமாக்கிய விதம், திரைக்கதையில் பாடலுக்கு முன்பு என்ன வருகிறது, பாடல் முடிந்த பின்னர் என்ன வருகிறது என்று அனைத்தும் புரியும். அதன் பின்னர் வைக்கப் படும் விமர்சனமே சிறந்த விமர்சனம் என்பது எனது கருத்து. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் மின்னலே படத்தின் ஆடியோ கேட்டுவிட்டு அனைவரும் வசீகராவின் பின்னால் ஓட, படம் பார்த்த பின்னர் அது அப்படியே வெண்மதியேவின் பின் திரும்பியது. அதே போலவே அலைபாயுதே பாடல்களின் பச்சை நிறமே அனைவருக்கும் முன்பு பிடித்திருந்தது. ஆனால் படம் பார்த்த பிறகு அனைவரையும் கவர்ந்தது சிநேகிதனே.

நீதானே பார்த்து விட்டு வந்த பிறகு எனது ஐபாடில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பது அப்படத்தின் பாடல்கள் தான். பாடல்களை முழுதும் உள்வாங்க இன்னும் எனக்கு குறைந்தது ஒரு வாரமாவது ஆகும்.

1. புடிக்கல மாமு (சூரஜ் ஜகன், கார்த்திக், நா. முத்துகுமார்):

அட்டகாசமான கிடார் ப்ரீலூடுடன் தொடங்குகிறது பாடல். பாடல் முழுதும் பேஸ் கிடார் அட்டகாசம். சூரஜ் ஜகன் சரியான தேர்வு. எப்படி பிடித்தார்கள் என்று தெரியவில்லை. அவரது குரலில் ஒரு ரக்கட்னெஸ் தெரிகிறது. இன்டர்லூடில் கிடாரையும் ட்ரம்ஸையும் சேர்த்து வைத்து கதகளி ஆடி இருக்கிறார் ராஜா. முதல் மூன்று நிமிடங்களுக்கு உச்சந்தலையின் மேல் ஏறி உள்ளே சென்று விட்டவர் பின்னர் 'மடார்' என்று அடிப்பார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, சட்டென்று நிசப்தம். அதை கலைப்பது கார்த்திக்கின் குரல்.

வெறும் பெர்குஷன் பேஸ். சரியான குத்து. அதிலும் இன்டர்லூடில் ட்ரம்பெட் உபயோகித்து இருக்கிறார். குத்து பாடல்களுக்கு அதிகம் ட்ரம்பெட் உபயோகித்து நான் கேட்டதில்லை.

ராஜா சார், நிச்சயம் நீங்க இறங்கி விளையாட இந்த உலகம் பத்தாது.

2. வானம் மெல்ல (இளையராஜா, பெலா ஷென்டே, நா. முத்துகுமார்):

வால்மிகி படத்தில் வரும் 'கூட வருவியா' பாடல் தான் இளையராஜா இசையில் நான் முதலில் கேட்ட பெலா ஷென்டே பாடிய பாடல். தபெலா, புல்லாங்குழல், பெலா ஷென்டேவின் குரல் மூன்றும் சேர்ந்து அப்படியே மனதை கசக்கிவிடும். வேறு பாடல்கள் பாடி இருக்கிறாரா என்று தெரியவில்லை.

அதன் பிறகு இப்போது நான் கேட்டது 'வானம் மெல்ல' பாடல். பிதாமகன் படத்தில் வரும் 'இளங்காத்து வீசுதே' பாடல் தரும் ஒரு விதமான ஸூதிங் சென்ஸை இந்த பாடலும் தருகிறது.

வோக்கல் ப்ரீலூடுடன் தொடங்குகிறது. அது அப்படியே ஆர்கெஸ்ட்ரேஷனாக மாறுகிறது. என்ன இன்ஸ்ட்ருமென்ட் என்பது எனக்கு தெரியவில்லை. அதிலிருந்து லீட் எடுக்கும் இளையராஜாவின் குரல்.... மனதை சொக்க வைக்கிறது என்றால் அது மிகை இல்லை.

பாடல் களத்துக்கு ஏற்ற வரிகள். 'பூக்கள் புக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி?' விடலை காதலை இதை விட அழகாக சொல்ல முடியாது.

3. சாய்ந்து சாய்ந்து (யுவன், ரம்யா NSK, நா. முத்துகுமார்):

படத்தில் அதிக ஹைப் கொடுக்கப்பட்ட பாடல். ஒரு மாதிரியான கிரக்கத்துடன் பாடப்படும் ஸ்லக்கிஷ் மாடர்ன் பாடல். மின்சார கனவு படத்தில் SPB பாடும் தங்கத் தாமரை போல. பாடலை தூக்கி நிறுத்தியதும் இல்லாமல் தேசிய விருதையும் வாங்கி இருப்பார் பாடும் நிலா. ஆனால் இங்கே அவ்வாறான முயற்சிகளில் எல்லாம் யுவன் ஈடுபடவில்லை. கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

கிடார், க்ளாரினெட் இரண்டையும் உபயோகப்படுத்திய விதம், யுவன் மற்றும் ரம்யாவின் குரல், மற்றும் சரணத்துக்கு முன்பு வரும் இன்டெர்லூட் மூன்றும் அருமை.

நைட் எஃபெக்ட், மழை, அழகான நாயகி, முதல் காதலின் வெளிப்பாடு என்று அருமையான களத்தினால் ஒரு வேளை பாடல் தப்பிக்கலாம்.

மற்றபடி இது ஒரு அபவ் ஆவெரேஜ் பாடல். அவ்வளவுதான். பல முறை கேட்டால் பிடிக்கும்.

4. சற்று முன்பு (ரம்யா NSK, நா. முத்துகுமார்):

ரொம்பவே மாடர்னான ஒரு காதல் தோல்வி பாடல். வரிகள் அருமை. இந்தப் பாடலை கேட்டதிலிருந்து ரம்யா எனது ஃபேவரிட் பாடகியாகி விட்டார். பாடல் வரிகள், ரம்யாவின் குரல், ஆர்கெஸ்ட்ரேஷன் இவை மூன்றுக்கும் கடும் போட்டியே நடக்கிறது எது அதிகமாக கேவலை வெளிப்படுத்துகிறது என்பதில்.

இவை மூன்றையுமே தனித்தனியாக பிரித்து நாம் கேட்டோமானால் கூட அதுவும் இந்த கூட்டு முயற்சியின் தாக்கத்தை தான் ஏற்படுத்தும்.

சாய்ந்து கொள்ள உன் தோள்கள் இல்லையே, தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா? தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே?...... அட்டகாசம்.

ராஜாவின் சந்தங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய ஆளுமை இதுதான், வரிகள் வந்து தானாகவே விழும். குறிலை நெடிலாக்குவது, நெடிலை குறிலாக்குவது போன்ற வேலைகளுக்கேல்லாம் ராஜாவிடம் இடம் இல்லை.

5. காற்றை கொஞ்சம் (கார்த்திக், நா. முத்துகுமார்):

இதுவும் வோக்கல் ப்ரீலூடுடன் தொடங்குகிறது. பின்னணியில் வயலின். 80 களுக்கு நம்மை கொண்டு செல்கிறது.

தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் எந்நாளும் தூக்கமில்லை ஏனென்று கேளடி, சாத்திவைத்த கதவில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா, மீதி வைத்த கனவை நாமும் பேசி தீர்க்கலாம்.... நெடு நாட்களுக்கு பின்னர் காதலியை பார்க்க நினைக்கும் காதலனின் மனநிலையை அழகாக வெளிப்படுத்தும் வரிகள். நா. மு. நீங்கள் ஒரு பொன் குடம்.

6. என்னோடு வா வா (கார்த்திக், நா. முத்துகுமார்):

பஸ் ஹாரன் சத்தம் போன்ற ஒரு ப்ரீலூட். கூடவே க்ளாரினெட் வேறு. என்ன எழவுடா என்று கேட்க தொடங்கும் போதே கார்த்திக்கின் குரல் நம்மை கட்டிப் போடுகிறது. மெதுவாக நம்மை உள் இழுத்து கொள்கிறது. இதுவும் 80 களுக்கு நம்மை கொண்டு செல்கிறது.

இன்டர்லூட் ஏனோ எனக்கு கண்ணுக்குள் நிலவு படத்தில் வரும் 'நிலவு பாட்டு' பாடலை நினைவு படுத்தியது. ஏனென்று தெரியவில்லை.

ஆனால் பாடலின் களம் படு சொதப்பல். படத்தின் முதல் பகுதியில் வந்திருக்க வேண்டிய பாடல். படத்தின் இறுதியில் அதிலும் காற்றை கொஞ்சம் பாடலுக்கு பின்பு வருவது படு மொக்கையான ப்ளேசிங். ராஜாவிடம் பாடல்களை வாங்கிய பிறகு எங்கே வைப்பது என்ற குழப்பத்தில் வைத்தது போல இருக்கிறது.

7. பெண்கள் என்றால் (யுவன், நா. முத்துகுமார்):

பாடலை முழுதுமாக ஒரு முறை கூட என்னால் கேட்க முடியவில்லை. படு மொக்கையான பாடல். மொத்த ஆல்பத்துக்கும் திருஷ்டி பொட்டு போல அமைந்து விட்டது.

8. முதல் முறை (சுனிதி சௌஹான், நா. முத்துகுமார்):

பியானோ, க்ளாரினெட், ட்ரம்ஸ் என்று கலந்து கட்டிய ப்ரீலூட். மீண்டும் ஒரு காதல் தோல்வி பாடல். மிகவும் டார்க்கான மாடர்ன் பாடலாக அமைந்து விட்டது.

வரிகள், ஆர்கெஸ்ட்ரேஷன் மற்றும் சுனிதியின் குரல் மூன்றுக்கும் இடையே இப்பாடலிலும் கடும் போட்டி. நீ தானே என் பொன் வசந்தம் வரிகளை உபயோகித்த விதம் அருமை. பாடலை கேட்க கேட்க அடி மனதில் யாரோ பீரங்கியை வைத்து வெடித்தது போல இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்டர்லூடில் வரும் வயலின் என்ன செய்கிறது என்று சொல்ல முடியாத அளவுக்கு மனதை ஏதோ செய்கிறது.

This is my pick of the litter.

80களுக்கு கொண்டு செல்லும் இரண்டு பாடல்கள், டார்க்கான மாடர்ன் பாடல்கள் இரண்டு, ஒரே பாடலில் ராக் மற்றும் குத்து, கிரக்கமான ஒரு பாடல், படு சொதப்பலாக ஒரு பாடல் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார் ராஜா.

மொத்தத்தில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்ட பிறகு "வெயிலா, மழையா, வலியா, சுகமா எது நீ? நீ தானே என் பொன் வசந்தம்...." என்று ராஜாவை பார்த்து நமக்கும் பாட தோன்றுகிறது.

Sunday, December 16, 2012

பொடிமாஸ் - 12/16/2012

அமெரிக்க துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து ஆளுக்காள் அமெரிக்க வாழ்க்கையின் பாதுகாப்பின்மை குறித்து கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள், வசதியாக நான்கு நாட்களுக்கு முன்னர் சென்னையில் நான்கு மாணவர்கள் பேரூந்து விபத்தில் இறந்ததை மறந்து விட்டு. இறந்த குழந்தைகளின் ஆசிரியைகள் இருவர் குழந்தைகளை பாதுகாக்க அவர்களை தனி அறையில் அடைத்துவிட்டு, குழந்தைகளுக்கும் கொலைகாரனுக்கும் நடுவில் நின்று, துப்பாக்கி குண்டுகளை தாங்கள் வாங்கிக் கொண்டு இறந்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்திருந்தால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி இருக்கலாம்.

சம்பளத்துக்காக வேலை செய்கிறோம் என்றாலும், தங்களது வேலையின் கடமையை உணர்ந்து கொண்டு வேலை செய்யும் இவர்களை போன்றவர்கள் நிச்சயம் கொலைகாரர்களை விட அதிக எண்ணிக்கையில் தான் எந்த ஒரு சமூகத்திலும் இருக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் இருக்கும் வரை எந்த சமூகமும் பாதுகாப்பான சமூகம் தான். இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள்.


வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியா குறித்து ஏதாவது கருத்து தெரிவித்தால் உடனே, "இந்தியாவை விட்டு ஓடிப் போனவர்களுக்கு இந்தியா குறித்து என்ன கவலை?" என்ற தேய்ந்த ரெக்கார்டையே தேய்ப்பது சிலருக்கு ஃபேஷனாக இருக்கிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு மாதா மாதம் பணம் அனுப்பலாம், இந்தியாவில் வீடு, விவசாய நிலம் போன்ற சொத்துக்களை வாங்கலாம், அவற்றை வாடகைக்கு/குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கலாம், ஏதாவது தொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கலாம், அப்படி சம்பாதிக்கும் பணத்திற்கு வருமான வரி கட்டலாம், இந்திய வங்கிகளில் கடன் வாங்கி மாதா மாதம் வட்டியுடன் அசலை சேர்த்து அடைக்கலாம், இந்திய ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாம் இப்படி இன்னும் பல செய்யலாம்கள் இருக்கும் போது ஒரு சிலர் பொத்தாம் பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களால் இந்தியாவிற்கு ஒரு நன்மையும் இல்லை என்ற ரீதியில் பேசுவது மிகவும் துரதிருஷ்டவசமானது.


விஸ்வரூப தொலைக்காட்சி வெளியீடு நிச்சயம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் தான் என்பேன். குறைந்த பட்ஜெட் படங்கள் தயாரித்தவர்களுக்கு அப்படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை வந்தால் இம்மாதிரி மாற்று வெளியீட்டு முயற்சி மிக்க பலன் தரும். ஆனால் அதே நேரத்தில் நூறு கோடி, நூற்றைம்பது கோடி என்ற பட்ஜெட்டில் படம் எடுத்தவர்களுக்கு இதனால் எந்த வகையில் நன்மை கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்து எவ்வளவு பேர் தொலைக்காட்சியில் படம் பார்ப்பார்கள்?, அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் பலர் தங்களது இல்லத்தில் HD ப்ரொஜெக்டர், HD ஸ்க்ரீன், சவுண்ட் சிஸ்டம் என்று அட்டகாசமான காட்ஜெட்டுகளை வைத்திருப்பார்கள். அதனால் தியேட்டரில் படம் பார்க்கும் எஃபெக்ட் ஓரளவுக்கு கிடைக்கும் ஆனால் இந்தியாவில் எவ்வளவு பேர் வீட்டில் அப்படி இருக்கும்? குறிப்பாக தமிழகத்தில் எவ்வளவு பேர் வீட்டில் அப்படி இருக்கும்? 50 ரூபாய் கொடுத்து DVD யில் படம் பார்க்கும் போது எனக்கு தியேட்டர் எஃபெக்ட் தேவை இல்லை என்று நான் கருதலாம் ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்து பார்க்கும் போது எப்படி நான் அது தேவை இல்லை என்று கருத முடியும்? SOC என்ற டெக்னாலஜியின் மூலம் ஒளிபரப்பாகும் படத்தை ரெக்கார்ட் செய்ய முடியாமல் தடை செய்ய இயலும், ஆனால் தியேட்டரில் செய்வது போல வீடியோ கேமரா கொண்டு படத்தை ரெக்கார்ட் செய்வதை யாரால் தடுக்க முடியும்? இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. விஸ்வரூபம் விரைவில் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லும் என்று நம்புவோம்.


நீதானே என் பொன் வசந்தம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இறுதி அரை மணி நேரம் அட்டகாசம். கிளைமேக்ஸில் ஜீவா மற்றும் சமந்தாவின் நடிப்பு அருமை. இருவரையும் பிரித்து தொலைத்து விடாதே என்று மனதுக்குள் கத்திக் கொண்டே இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படத்தின் மிகப் பெரிய லெட் டவுன் ராஜாவின் இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசை படு சொதப்பல். எனக்கு இப்படம் எனது பள்ளி மற்றும் கல்லூரி கால வாழ்க்கையை, அனுஷா, தீபா, காயத்ரி மற்றும் பலரை நன்றாக நினைவுபடுத்தியது. என் வாழ்வில் நடந்த டியூஷன் காட்சிகள், கல்ச்சரல் காட்சிகள் என்று அனைத்தும் என் கண் முன்னே வந்து போனது. எனக்கு இது மீண்டும் ஒரு ஆட்டோகிராஃப். It was nostalgic.

நீதானே என் பொன் வசந்தம் என்று இல்லை, இந்த வருடத்தில் வெளிவந்த பல பலருக்கும் பிடிக்காத படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தாண்டவம், பில்லா 2 போன்ற படங்கள் உதாரணம். எனது ரசனை மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.


கிருஸ்துமஸ் விடுமுறையில் குடும்பத்துடன் ஆர்லான்டோ செல்கிறோம். ஐந்து நாட்கள். டிஸ்னி வோர்ல்ட், யுனிவர்சல் கிங்டம் என்று பல இடங்கள் இருக்கின்றன. LA சென்ற போது முன்னரே பார்த்திருந்தாலும் ஆர்லான்டோவில் இதுவே முதல் முறை. இந்த வருடம் எங்களுக்கு இது மூன்றாவது வெக்கேஷன். இந்த வருட தொடக்கத்தில் பஹாமாஸ் சென்றோம், பின்னர் இந்தியா, இப்போது ஆர்லான்டோ. புகைப்படங்களை வந்த பின்பு பகிர்ந்து கொள்கிறேன். வந்த பிறகு புத்தாண்டுக்கு மீண்டும் நான்கு நாட்கள் விடுமுறை. புத்தாண்டு விடுமுறைக்கு எங்கும் செல்வதாக திட்டம் இல்லை.


சென்ற வாரம் முழுவதும் இந்தியாவில் கால் பதிக்க வால்மார்ட் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் பாராளுமன்றம் ஸ்தம்பித்தது. இது பணிப்பாறையின் துளி மட்டும் தான். சில்லறை வியாபாரிகள் விவசாயிகளை சுரண்டுகிறார்கள் என்பவர்கள் சில்லறை வியாபாரிகளை விட குறைந்த விலைக்கு பொருளை ஒருவன் தர வேண்டும் என்றால் அவர்களை விட அதிகமாக விவசாயிகளை சுரண்டினால் தான் முடியும் என்பதை மறந்தது விந்தை தான்.


ரிக்கி பான்டிங் ஓய்வு பெற்றதை தொடர்ந்து மீண்டும் சச்சின் ஓய்வு கூச்சல் தொடங்கி இருக்கிறது. லாரா, டிராவிட், பான்டிங் வரிசையில் மீதி இருப்பது காலிஸ் மற்றும் சச்சின். காலிஸின் தற்போதைய ஃபார்மை பார்த்தால் அவர் இன்னும் மூன்று ஆண்டுகளுக்காவது தொடர்ந்து விளையாடுவார் என்று தோன்றுகிறது. எஞ்சி இருப்பது சச்சின் தான். சச்சின் போன்ற காலிபர் உள்ளவர்கள் வெளியேற வேண்டும், வெளியேற்றப்படக் கூடாது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.


இந்த வார இறுதியில் மாண்டிக்கு ஐந்து வேக்சீன்ஸ் கொடுக்க வேண்டி இருந்தது. மருத்துவரிடம் கொண்டு சென்றேன். அடுத்து ஓராண்டுக்கு கவலை இல்லை. இனி கொடுக்க வேண்டியவை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தான். அவனது பற்களில் மஞ்சள் சற்று அதிகமாகவே படிந்துள்ளது. டென்டிஸ்டிடம் ஜனவரி மாதம் கொண்டு செல்ல வேண்டும். அவனது பற்களை அவர்கள் சுத்தம் செய்து விடுவார்கள்.


மாண்டியை பற்றி பேசும் போது சென்ற வாரம் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு பின்னூட்டத்தில் பொதுவாக மற்றவர்களை 'நாய்' என்று சொல்லிவிட்டேன் என்று நினைத்து ஒரு பதிவர் வானுக்கும் பூமிக்குமாக குதி குதி என்று குதித்தார். அப்போது அதற்கு காரணம் எனக்கு புரியவில்லை. இப்போது தான் அது புரிகிறது.

சக மனிதர்களை நாய் போல் நடத்தும் சமூகத்தில் வாழ்பவர்களுக்கு 'நாய்' என்றால் கோபம் வரத்தான் செய்யும். நாயை மனிதர்கள் போல் நடத்தும் சமூகத்தில் வாழும் என் போன்றவர்களுக்கு அது புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்.

Tuesday, December 11, 2012

The Annoying Orange

டிஸ்கி: வீடியோக்களை பார்த்த பிறகு உங்களுக்கு எந்த பதிவர் நினைவுக்கு வந்தாலும் கம்பெனி பொறுப்பல்ல.

Tuesday, December 04, 2012

நார்வே சம்பவம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்

சமீபத்தில் நார்வே நாட்டில் இந்திய தம்பதியினர் தங்கள் குழந்தையை அடித்து கொடுமைபடுத்தியதை தொடர்ந்து கைது செய்யப் பட்டுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. பொதுவாகவே இந்திய குழந்தை வளர்ப்பு முறை என்பது வேறு, மேற்கு நாடுகளின் குழந்தை வளர்ப்பு முறை என்பது வேறு. வேளி நாடு வரும் இந்தியர்கள் முதலில் அந்நாட்டு சட்ட திட்டங்களை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். எப்படி வெளி நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கும் பல விஷயங்களை நம் நாட்டில் நினைத்து கூட பார்க்க முடியாதோ, அப்படியே நம் நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கும் பல விஷயங்களை வெளி நாட்டில் நினைத்து கூட பார்க்க முடியாது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் வன்முறைகள் வெளி நாடுகளில் மிகவும் கொடுமையானதாக கையாளப்படும்.

வெளி நாடுகளில் குழந்தைகள் முதன் முறை பள்ளிக்கு போகும் போது அவர்களுக்கு ஆபத்தான நேரங்களில் போலீஸ், ஆம்புலன்ஸ் மற்றும் ஃபயர் டிபார்ட்மென்ட் ஆகிய துறைகளை எப்படி அழைப்பது என்பது தான் முதன் முதலாக கற்றுக் கொடுக்கப் படுகிறது. குடும்ப வன்முறையை எப்படி தைரியமாக கையாள வேண்டும் என்பதும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப் படுகிறது. அதனால் வெளி நாட்டில் வளரும் குழந்தைகள் ஆபத்தான நேரத்தில் போலீஸை அழைக்க தயங்குவதில்லை.

அதனால் வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் முதலில் செய்ய வேண்டியது "அடியாத மாடு படியாது", "அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்" போன்ற கதைக்குதவாத பழமொழிகளை மூட்டை கட்டி வைத்து விட வேண்டியது தான். அடி என்பது ஒரு விதமான எஸ்கேப்பிஸம் என்பதை நமது பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தங்களது குழந்தைகளை பொறுமையாக கையாள தெரியாதவர்கள் தான் அவர்களை அடித்து வளர்ப்பார்கள். குழந்தைகளை அடிப்பது என்பது தற்காலிகமாக ஏதாவது நிவாரணம் கொடுக்கலாம். ஆனால் நிச்சயமாக அது நிரந்தர தீர்வை அளிக்காது.

சரி அடிக்காமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று கேட்கிறீர்களா? எனக்கு தெரிந்த வளர்ப்பு முறையை சொல்கிறேன்.

முதலில் குழந்தைகளின் படுத்தலுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

1. பசி
2. தூக்கம்
3. உடல் உபாதை

வெளியில் எங்கே செல்வதாக இருந்தாலும் முதலில் குழந்தைக்கு நன்றாக உணவளித்து விடுங்கள், அதே போல சரியான நேரத்திற்கு குழந்தையை தூங்க வைத்து விடுங்கள். வெளி உணவு/நீர் இவற்றை எவ்வளவு தூரம் தவிர்க்க இயலுமோ தவிர்த்து விடுங்கள். இது அனைத்தையும் செய்தாலே முதல் மூன்று காரணங்களால் குழந்தைகள் அழுவதை பெருமளவில் தவிர்த்து விடலாம்.

குழந்தைகள் செய்யும் மற்ற பிடிவாதங்களுக்கு நாம் என்ன செய்வது?

குழந்தைகள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் இருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் குப்பையை குப்பை தொட்டியில் போட்டால் அவர்களும் போடுவார்கள். நீங்கள் உங்கள் மனைவியை அடித்தால், அவர்களும் அடிப்பார்கள். அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அப்படி நடந்து கொள்வதே முதல் வழி.

அடுத்தது, அவர்கள் 24 மணி நேரமும் ஜான்ஸன் & ஜான்ஸன் விளம்பரத்தில் வரும் குழந்தைகள் போல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நீக்குங்கள். நம்மை போலவே அவர்கள் பல நேரங்களில் சமத்து குழந்தையாகவும், சில நேரங்களில் மந்திகளாகவும் நடந்து கொள்வார்கள். அது இயல்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளும் போது, அவர்களின் பிடிவாதத்திற்கு இடம் அளிக்காதீர்கள். உதாரணத்திற்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட பொம்மை வேண்டும் என்று கடையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால், கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். அசையாமல் நின்று அவர்களின் கண்ணையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருங்கள். சில நிமிடங்களில் அவர்களே அழுகையை விட்டு விட்டு நார்மல் ஆகி விடுவார்கள். ஒரு முறை அவர்களின் அழுகைக்கு பயந்து வாங்கிக் கொடுத்தால் அதுவே அவர்களுக்கு அழுதால் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் என்ற செய்தி அளித்து விடும்.

அடுத்தது கன்ஸிஸ்டன்ஸி. உங்கள் குழந்தைக்கு 50 ரூபாய் பொம்மைக்கும், பத்தாயிரம் ரூபாய் க்ரிஸ்டல் பௌலுக்கும் வித்தியாசம் தெரியாது. முதல் பொருளை உடைக்கும் பொழுது சாதாரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டு அடுத்த பொருளை உடைக்கும் போது அவர்களை நீங்கள் அடித்தால் அவர்கள் குழம்பி போவார்கள்.

ஆபத்தான பொருட்கள், கத்தி, துப்பாக்கி, ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றை குழந்தை எடுக்க முடியாத இடத்தில் வைத்து விடுங்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு முறை உங்கள் குழந்தை ஏதாவது தவறோ அல்லது ஆபத்தான காரியமோ செய்யும் போதும் அதற்கு முதல் காரணம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நீங்கள் தான். குழந்தை மீது மட்டும் கோபிப்பதில் ஒரு பயனும் கிடையாது.

அதே போல வீட்டில் உள்ள ஒருவர் குழந்தையை கண்டிக்கும் போது வீட்டில் உள்ள மற்றவர்கள் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்.

அடுத்து அடிக்காமல் எப்படி குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்பிப்பது?

குழந்தைகள் அவர்கள் செய்த தவறை பொறுத்து ஒரு வார காலத்திற்கோ அல்லது இரண்டு நாட்களோ கீழே உள்ள ஏதேனும் ஒன்றை தண்டனையாக கொடுக்கலாம்.

1. அவர்களிடம் பேசாமல் இருப்பது
2. அவர்கள் டிவி பார்ப்பதை தடுப்பது
3. அவர்கள் கேம்ஸ் விளையாடுவதை தடுப்பது
4. அவர்களின் சேமிப்பில் இருந்து குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூலிப்பது
5. குடும்பத்தினருடன் உணவு சாப்பிடாமல் தனியாக சாப்பிட வைப்பது
6. வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலைகள் செய்வது ஆகிய வேலைகளை கொடுத்தல்

மேலே உள்ள சில தன்டனைகள் அடியை காட்டிலும் மிகவும் ஆழமானது. நிலையான மாற்றத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தக் கூடியவை. நார்வே தம்பதியினருக்கு நடந்ததை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம். குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்போம். நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்.