Tuesday, December 18, 2012

நீதானே என் பொன் வசந்தம் - பாடல் விமர்சனம்

சென்ற பதிவில் நீதானே படத்தின் மிகப் பெரிய லெட்டவுன் ராஜா தான் என்று சொல்லிவிட்டேன் என்று ஒரு நண்பர் என்னை மிகவும் கோபித்துக் கொண்டார். ஏனென்றால் நான் ராஜாவின் வெறியன். அவரும் கூடத்தான்.

அவரை சமாதானப் படுத்த அனைவரும் பட விமர்சனம் எழுதி முடித்த பின்னர் நான் நீதானே படத்தின் பாடல் விமர்சனத்தை எழுதுகிறேன்.

பொதுவாகவே நான் பாடல்களை படம் பார்த்த பிறகு தான் விமர்சிக்க தொடங்குவேன். ஏனென்றால் படம் பார்த்த பிறகு தான், பாடல்களின் களம், அதை பாடும் கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள், படமாக்கிய விதம், திரைக்கதையில் பாடலுக்கு முன்பு என்ன வருகிறது, பாடல் முடிந்த பின்னர் என்ன வருகிறது என்று அனைத்தும் புரியும். அதன் பின்னர் வைக்கப் படும் விமர்சனமே சிறந்த விமர்சனம் என்பது எனது கருத்து. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் மின்னலே படத்தின் ஆடியோ கேட்டுவிட்டு அனைவரும் வசீகராவின் பின்னால் ஓட, படம் பார்த்த பின்னர் அது அப்படியே வெண்மதியேவின் பின் திரும்பியது. அதே போலவே அலைபாயுதே பாடல்களின் பச்சை நிறமே அனைவருக்கும் முன்பு பிடித்திருந்தது. ஆனால் படம் பார்த்த பிறகு அனைவரையும் கவர்ந்தது சிநேகிதனே.

நீதானே பார்த்து விட்டு வந்த பிறகு எனது ஐபாடில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பது அப்படத்தின் பாடல்கள் தான். பாடல்களை முழுதும் உள்வாங்க இன்னும் எனக்கு குறைந்தது ஒரு வாரமாவது ஆகும்.

1. புடிக்கல மாமு (சூரஜ் ஜகன், கார்த்திக், நா. முத்துகுமார்):

அட்டகாசமான கிடார் ப்ரீலூடுடன் தொடங்குகிறது பாடல். பாடல் முழுதும் பேஸ் கிடார் அட்டகாசம். சூரஜ் ஜகன் சரியான தேர்வு. எப்படி பிடித்தார்கள் என்று தெரியவில்லை. அவரது குரலில் ஒரு ரக்கட்னெஸ் தெரிகிறது. இன்டர்லூடில் கிடாரையும் ட்ரம்ஸையும் சேர்த்து வைத்து கதகளி ஆடி இருக்கிறார் ராஜா. முதல் மூன்று நிமிடங்களுக்கு உச்சந்தலையின் மேல் ஏறி உள்ளே சென்று விட்டவர் பின்னர் 'மடார்' என்று அடிப்பார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, சட்டென்று நிசப்தம். அதை கலைப்பது கார்த்திக்கின் குரல்.

வெறும் பெர்குஷன் பேஸ். சரியான குத்து. அதிலும் இன்டர்லூடில் ட்ரம்பெட் உபயோகித்து இருக்கிறார். குத்து பாடல்களுக்கு அதிகம் ட்ரம்பெட் உபயோகித்து நான் கேட்டதில்லை.

ராஜா சார், நிச்சயம் நீங்க இறங்கி விளையாட இந்த உலகம் பத்தாது.

2. வானம் மெல்ல (இளையராஜா, பெலா ஷென்டே, நா. முத்துகுமார்):

வால்மிகி படத்தில் வரும் 'கூட வருவியா' பாடல் தான் இளையராஜா இசையில் நான் முதலில் கேட்ட பெலா ஷென்டே பாடிய பாடல். தபெலா, புல்லாங்குழல், பெலா ஷென்டேவின் குரல் மூன்றும் சேர்ந்து அப்படியே மனதை கசக்கிவிடும். வேறு பாடல்கள் பாடி இருக்கிறாரா என்று தெரியவில்லை.

அதன் பிறகு இப்போது நான் கேட்டது 'வானம் மெல்ல' பாடல். பிதாமகன் படத்தில் வரும் 'இளங்காத்து வீசுதே' பாடல் தரும் ஒரு விதமான ஸூதிங் சென்ஸை இந்த பாடலும் தருகிறது.

வோக்கல் ப்ரீலூடுடன் தொடங்குகிறது. அது அப்படியே ஆர்கெஸ்ட்ரேஷனாக மாறுகிறது. என்ன இன்ஸ்ட்ருமென்ட் என்பது எனக்கு தெரியவில்லை. அதிலிருந்து லீட் எடுக்கும் இளையராஜாவின் குரல்.... மனதை சொக்க வைக்கிறது என்றால் அது மிகை இல்லை.

பாடல் களத்துக்கு ஏற்ற வரிகள். 'பூக்கள் புக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி?' விடலை காதலை இதை விட அழகாக சொல்ல முடியாது.

3. சாய்ந்து சாய்ந்து (யுவன், ரம்யா NSK, நா. முத்துகுமார்):

படத்தில் அதிக ஹைப் கொடுக்கப்பட்ட பாடல். ஒரு மாதிரியான கிரக்கத்துடன் பாடப்படும் ஸ்லக்கிஷ் மாடர்ன் பாடல். மின்சார கனவு படத்தில் SPB பாடும் தங்கத் தாமரை போல. பாடலை தூக்கி நிறுத்தியதும் இல்லாமல் தேசிய விருதையும் வாங்கி இருப்பார் பாடும் நிலா. ஆனால் இங்கே அவ்வாறான முயற்சிகளில் எல்லாம் யுவன் ஈடுபடவில்லை. கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

கிடார், க்ளாரினெட் இரண்டையும் உபயோகப்படுத்திய விதம், யுவன் மற்றும் ரம்யாவின் குரல், மற்றும் சரணத்துக்கு முன்பு வரும் இன்டெர்லூட் மூன்றும் அருமை.

நைட் எஃபெக்ட், மழை, அழகான நாயகி, முதல் காதலின் வெளிப்பாடு என்று அருமையான களத்தினால் ஒரு வேளை பாடல் தப்பிக்கலாம்.

மற்றபடி இது ஒரு அபவ் ஆவெரேஜ் பாடல். அவ்வளவுதான். பல முறை கேட்டால் பிடிக்கும்.

4. சற்று முன்பு (ரம்யா NSK, நா. முத்துகுமார்):

ரொம்பவே மாடர்னான ஒரு காதல் தோல்வி பாடல். வரிகள் அருமை. இந்தப் பாடலை கேட்டதிலிருந்து ரம்யா எனது ஃபேவரிட் பாடகியாகி விட்டார். பாடல் வரிகள், ரம்யாவின் குரல், ஆர்கெஸ்ட்ரேஷன் இவை மூன்றுக்கும் கடும் போட்டியே நடக்கிறது எது அதிகமாக கேவலை வெளிப்படுத்துகிறது என்பதில்.

இவை மூன்றையுமே தனித்தனியாக பிரித்து நாம் கேட்டோமானால் கூட அதுவும் இந்த கூட்டு முயற்சியின் தாக்கத்தை தான் ஏற்படுத்தும்.

சாய்ந்து கொள்ள உன் தோள்கள் இல்லையே, தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா? தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே?...... அட்டகாசம்.

ராஜாவின் சந்தங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய ஆளுமை இதுதான், வரிகள் வந்து தானாகவே விழும். குறிலை நெடிலாக்குவது, நெடிலை குறிலாக்குவது போன்ற வேலைகளுக்கேல்லாம் ராஜாவிடம் இடம் இல்லை.

5. காற்றை கொஞ்சம் (கார்த்திக், நா. முத்துகுமார்):

இதுவும் வோக்கல் ப்ரீலூடுடன் தொடங்குகிறது. பின்னணியில் வயலின். 80 களுக்கு நம்மை கொண்டு செல்கிறது.

தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் எந்நாளும் தூக்கமில்லை ஏனென்று கேளடி, சாத்திவைத்த கதவில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா, மீதி வைத்த கனவை நாமும் பேசி தீர்க்கலாம்.... நெடு நாட்களுக்கு பின்னர் காதலியை பார்க்க நினைக்கும் காதலனின் மனநிலையை அழகாக வெளிப்படுத்தும் வரிகள். நா. மு. நீங்கள் ஒரு பொன் குடம்.

6. என்னோடு வா வா (கார்த்திக், நா. முத்துகுமார்):

பஸ் ஹாரன் சத்தம் போன்ற ஒரு ப்ரீலூட். கூடவே க்ளாரினெட் வேறு. என்ன எழவுடா என்று கேட்க தொடங்கும் போதே கார்த்திக்கின் குரல் நம்மை கட்டிப் போடுகிறது. மெதுவாக நம்மை உள் இழுத்து கொள்கிறது. இதுவும் 80 களுக்கு நம்மை கொண்டு செல்கிறது.

இன்டர்லூட் ஏனோ எனக்கு கண்ணுக்குள் நிலவு படத்தில் வரும் 'நிலவு பாட்டு' பாடலை நினைவு படுத்தியது. ஏனென்று தெரியவில்லை.

ஆனால் பாடலின் களம் படு சொதப்பல். படத்தின் முதல் பகுதியில் வந்திருக்க வேண்டிய பாடல். படத்தின் இறுதியில் அதிலும் காற்றை கொஞ்சம் பாடலுக்கு பின்பு வருவது படு மொக்கையான ப்ளேசிங். ராஜாவிடம் பாடல்களை வாங்கிய பிறகு எங்கே வைப்பது என்ற குழப்பத்தில் வைத்தது போல இருக்கிறது.

7. பெண்கள் என்றால் (யுவன், நா. முத்துகுமார்):

பாடலை முழுதுமாக ஒரு முறை கூட என்னால் கேட்க முடியவில்லை. படு மொக்கையான பாடல். மொத்த ஆல்பத்துக்கும் திருஷ்டி பொட்டு போல அமைந்து விட்டது.

8. முதல் முறை (சுனிதி சௌஹான், நா. முத்துகுமார்):

பியானோ, க்ளாரினெட், ட்ரம்ஸ் என்று கலந்து கட்டிய ப்ரீலூட். மீண்டும் ஒரு காதல் தோல்வி பாடல். மிகவும் டார்க்கான மாடர்ன் பாடலாக அமைந்து விட்டது.

வரிகள், ஆர்கெஸ்ட்ரேஷன் மற்றும் சுனிதியின் குரல் மூன்றுக்கும் இடையே இப்பாடலிலும் கடும் போட்டி. நீ தானே என் பொன் வசந்தம் வரிகளை உபயோகித்த விதம் அருமை. பாடலை கேட்க கேட்க அடி மனதில் யாரோ பீரங்கியை வைத்து வெடித்தது போல இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்டர்லூடில் வரும் வயலின் என்ன செய்கிறது என்று சொல்ல முடியாத அளவுக்கு மனதை ஏதோ செய்கிறது.

This is my pick of the litter.

80களுக்கு கொண்டு செல்லும் இரண்டு பாடல்கள், டார்க்கான மாடர்ன் பாடல்கள் இரண்டு, ஒரே பாடலில் ராக் மற்றும் குத்து, கிரக்கமான ஒரு பாடல், படு சொதப்பலாக ஒரு பாடல் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார் ராஜா.

மொத்தத்தில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்ட பிறகு "வெயிலா, மழையா, வலியா, சுகமா எது நீ? நீ தானே என் பொன் வசந்தம்...." என்று ராஜாவை பார்த்து நமக்கும் பாட தோன்றுகிறது.

Sunday, December 16, 2012

பொடிமாஸ் - 12/16/2012

அமெரிக்க துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து ஆளுக்காள் அமெரிக்க வாழ்க்கையின் பாதுகாப்பின்மை குறித்து கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள், வசதியாக நான்கு நாட்களுக்கு முன்னர் சென்னையில் நான்கு மாணவர்கள் பேரூந்து விபத்தில் இறந்ததை மறந்து விட்டு. இறந்த குழந்தைகளின் ஆசிரியைகள் இருவர் குழந்தைகளை பாதுகாக்க அவர்களை தனி அறையில் அடைத்துவிட்டு, குழந்தைகளுக்கும் கொலைகாரனுக்கும் நடுவில் நின்று, துப்பாக்கி குண்டுகளை தாங்கள் வாங்கிக் கொண்டு இறந்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்திருந்தால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி இருக்கலாம்.

சம்பளத்துக்காக வேலை செய்கிறோம் என்றாலும், தங்களது வேலையின் கடமையை உணர்ந்து கொண்டு வேலை செய்யும் இவர்களை போன்றவர்கள் நிச்சயம் கொலைகாரர்களை விட அதிக எண்ணிக்கையில் தான் எந்த ஒரு சமூகத்திலும் இருக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் இருக்கும் வரை எந்த சமூகமும் பாதுகாப்பான சமூகம் தான். இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள்.


வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியா குறித்து ஏதாவது கருத்து தெரிவித்தால் உடனே, "இந்தியாவை விட்டு ஓடிப் போனவர்களுக்கு இந்தியா குறித்து என்ன கவலை?" என்ற தேய்ந்த ரெக்கார்டையே தேய்ப்பது சிலருக்கு ஃபேஷனாக இருக்கிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு மாதா மாதம் பணம் அனுப்பலாம், இந்தியாவில் வீடு, விவசாய நிலம் போன்ற சொத்துக்களை வாங்கலாம், அவற்றை வாடகைக்கு/குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கலாம், ஏதாவது தொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கலாம், அப்படி சம்பாதிக்கும் பணத்திற்கு வருமான வரி கட்டலாம், இந்திய வங்கிகளில் கடன் வாங்கி மாதா மாதம் வட்டியுடன் அசலை சேர்த்து அடைக்கலாம், இந்திய ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாம் இப்படி இன்னும் பல செய்யலாம்கள் இருக்கும் போது ஒரு சிலர் பொத்தாம் பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களால் இந்தியாவிற்கு ஒரு நன்மையும் இல்லை என்ற ரீதியில் பேசுவது மிகவும் துரதிருஷ்டவசமானது.


விஸ்வரூப தொலைக்காட்சி வெளியீடு நிச்சயம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் தான் என்பேன். குறைந்த பட்ஜெட் படங்கள் தயாரித்தவர்களுக்கு அப்படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை வந்தால் இம்மாதிரி மாற்று வெளியீட்டு முயற்சி மிக்க பலன் தரும். ஆனால் அதே நேரத்தில் நூறு கோடி, நூற்றைம்பது கோடி என்ற பட்ஜெட்டில் படம் எடுத்தவர்களுக்கு இதனால் எந்த வகையில் நன்மை கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்து எவ்வளவு பேர் தொலைக்காட்சியில் படம் பார்ப்பார்கள்?, அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் பலர் தங்களது இல்லத்தில் HD ப்ரொஜெக்டர், HD ஸ்க்ரீன், சவுண்ட் சிஸ்டம் என்று அட்டகாசமான காட்ஜெட்டுகளை வைத்திருப்பார்கள். அதனால் தியேட்டரில் படம் பார்க்கும் எஃபெக்ட் ஓரளவுக்கு கிடைக்கும் ஆனால் இந்தியாவில் எவ்வளவு பேர் வீட்டில் அப்படி இருக்கும்? குறிப்பாக தமிழகத்தில் எவ்வளவு பேர் வீட்டில் அப்படி இருக்கும்? 50 ரூபாய் கொடுத்து DVD யில் படம் பார்க்கும் போது எனக்கு தியேட்டர் எஃபெக்ட் தேவை இல்லை என்று நான் கருதலாம் ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்து பார்க்கும் போது எப்படி நான் அது தேவை இல்லை என்று கருத முடியும்? SOC என்ற டெக்னாலஜியின் மூலம் ஒளிபரப்பாகும் படத்தை ரெக்கார்ட் செய்ய முடியாமல் தடை செய்ய இயலும், ஆனால் தியேட்டரில் செய்வது போல வீடியோ கேமரா கொண்டு படத்தை ரெக்கார்ட் செய்வதை யாரால் தடுக்க முடியும்? இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. விஸ்வரூபம் விரைவில் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லும் என்று நம்புவோம்.


நீதானே என் பொன் வசந்தம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இறுதி அரை மணி நேரம் அட்டகாசம். கிளைமேக்ஸில் ஜீவா மற்றும் சமந்தாவின் நடிப்பு அருமை. இருவரையும் பிரித்து தொலைத்து விடாதே என்று மனதுக்குள் கத்திக் கொண்டே இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படத்தின் மிகப் பெரிய லெட் டவுன் ராஜாவின் இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசை படு சொதப்பல். எனக்கு இப்படம் எனது பள்ளி மற்றும் கல்லூரி கால வாழ்க்கையை, அனுஷா, தீபா, காயத்ரி மற்றும் பலரை நன்றாக நினைவுபடுத்தியது. என் வாழ்வில் நடந்த டியூஷன் காட்சிகள், கல்ச்சரல் காட்சிகள் என்று அனைத்தும் என் கண் முன்னே வந்து போனது. எனக்கு இது மீண்டும் ஒரு ஆட்டோகிராஃப். It was nostalgic.

நீதானே என் பொன் வசந்தம் என்று இல்லை, இந்த வருடத்தில் வெளிவந்த பல பலருக்கும் பிடிக்காத படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தாண்டவம், பில்லா 2 போன்ற படங்கள் உதாரணம். எனது ரசனை மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.


கிருஸ்துமஸ் விடுமுறையில் குடும்பத்துடன் ஆர்லான்டோ செல்கிறோம். ஐந்து நாட்கள். டிஸ்னி வோர்ல்ட், யுனிவர்சல் கிங்டம் என்று பல இடங்கள் இருக்கின்றன. LA சென்ற போது முன்னரே பார்த்திருந்தாலும் ஆர்லான்டோவில் இதுவே முதல் முறை. இந்த வருடம் எங்களுக்கு இது மூன்றாவது வெக்கேஷன். இந்த வருட தொடக்கத்தில் பஹாமாஸ் சென்றோம், பின்னர் இந்தியா, இப்போது ஆர்லான்டோ. புகைப்படங்களை வந்த பின்பு பகிர்ந்து கொள்கிறேன். வந்த பிறகு புத்தாண்டுக்கு மீண்டும் நான்கு நாட்கள் விடுமுறை. புத்தாண்டு விடுமுறைக்கு எங்கும் செல்வதாக திட்டம் இல்லை.


சென்ற வாரம் முழுவதும் இந்தியாவில் கால் பதிக்க வால்மார்ட் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் பாராளுமன்றம் ஸ்தம்பித்தது. இது பணிப்பாறையின் துளி மட்டும் தான். சில்லறை வியாபாரிகள் விவசாயிகளை சுரண்டுகிறார்கள் என்பவர்கள் சில்லறை வியாபாரிகளை விட குறைந்த விலைக்கு பொருளை ஒருவன் தர வேண்டும் என்றால் அவர்களை விட அதிகமாக விவசாயிகளை சுரண்டினால் தான் முடியும் என்பதை மறந்தது விந்தை தான்.


ரிக்கி பான்டிங் ஓய்வு பெற்றதை தொடர்ந்து மீண்டும் சச்சின் ஓய்வு கூச்சல் தொடங்கி இருக்கிறது. லாரா, டிராவிட், பான்டிங் வரிசையில் மீதி இருப்பது காலிஸ் மற்றும் சச்சின். காலிஸின் தற்போதைய ஃபார்மை பார்த்தால் அவர் இன்னும் மூன்று ஆண்டுகளுக்காவது தொடர்ந்து விளையாடுவார் என்று தோன்றுகிறது. எஞ்சி இருப்பது சச்சின் தான். சச்சின் போன்ற காலிபர் உள்ளவர்கள் வெளியேற வேண்டும், வெளியேற்றப்படக் கூடாது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.


இந்த வார இறுதியில் மாண்டிக்கு ஐந்து வேக்சீன்ஸ் கொடுக்க வேண்டி இருந்தது. மருத்துவரிடம் கொண்டு சென்றேன். அடுத்து ஓராண்டுக்கு கவலை இல்லை. இனி கொடுக்க வேண்டியவை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தான். அவனது பற்களில் மஞ்சள் சற்று அதிகமாகவே படிந்துள்ளது. டென்டிஸ்டிடம் ஜனவரி மாதம் கொண்டு செல்ல வேண்டும். அவனது பற்களை அவர்கள் சுத்தம் செய்து விடுவார்கள்.


மாண்டியை பற்றி பேசும் போது சென்ற வாரம் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு பின்னூட்டத்தில் பொதுவாக மற்றவர்களை 'நாய்' என்று சொல்லிவிட்டேன் என்று நினைத்து ஒரு பதிவர் வானுக்கும் பூமிக்குமாக குதி குதி என்று குதித்தார். அப்போது அதற்கு காரணம் எனக்கு புரியவில்லை. இப்போது தான் அது புரிகிறது.

சக மனிதர்களை நாய் போல் நடத்தும் சமூகத்தில் வாழ்பவர்களுக்கு 'நாய்' என்றால் கோபம் வரத்தான் செய்யும். நாயை மனிதர்கள் போல் நடத்தும் சமூகத்தில் வாழும் என் போன்றவர்களுக்கு அது புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்.

Tuesday, December 11, 2012

The Annoying Orange













டிஸ்கி: வீடியோக்களை பார்த்த பிறகு உங்களுக்கு எந்த பதிவர் நினைவுக்கு வந்தாலும் கம்பெனி பொறுப்பல்ல.

Tuesday, December 04, 2012

நார்வே சம்பவம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்

சமீபத்தில் நார்வே நாட்டில் இந்திய தம்பதியினர் தங்கள் குழந்தையை அடித்து கொடுமைபடுத்தியதை தொடர்ந்து கைது செய்யப் பட்டுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. பொதுவாகவே இந்திய குழந்தை வளர்ப்பு முறை என்பது வேறு, மேற்கு நாடுகளின் குழந்தை வளர்ப்பு முறை என்பது வேறு. வேளி நாடு வரும் இந்தியர்கள் முதலில் அந்நாட்டு சட்ட திட்டங்களை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். எப்படி வெளி நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கும் பல விஷயங்களை நம் நாட்டில் நினைத்து கூட பார்க்க முடியாதோ, அப்படியே நம் நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கும் பல விஷயங்களை வெளி நாட்டில் நினைத்து கூட பார்க்க முடியாது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் வன்முறைகள் வெளி நாடுகளில் மிகவும் கொடுமையானதாக கையாளப்படும்.

வெளி நாடுகளில் குழந்தைகள் முதன் முறை பள்ளிக்கு போகும் போது அவர்களுக்கு ஆபத்தான நேரங்களில் போலீஸ், ஆம்புலன்ஸ் மற்றும் ஃபயர் டிபார்ட்மென்ட் ஆகிய துறைகளை எப்படி அழைப்பது என்பது தான் முதன் முதலாக கற்றுக் கொடுக்கப் படுகிறது. குடும்ப வன்முறையை எப்படி தைரியமாக கையாள வேண்டும் என்பதும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப் படுகிறது. அதனால் வெளி நாட்டில் வளரும் குழந்தைகள் ஆபத்தான நேரத்தில் போலீஸை அழைக்க தயங்குவதில்லை.

அதனால் வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் முதலில் செய்ய வேண்டியது "அடியாத மாடு படியாது", "அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்" போன்ற கதைக்குதவாத பழமொழிகளை மூட்டை கட்டி வைத்து விட வேண்டியது தான். அடி என்பது ஒரு விதமான எஸ்கேப்பிஸம் என்பதை நமது பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தங்களது குழந்தைகளை பொறுமையாக கையாள தெரியாதவர்கள் தான் அவர்களை அடித்து வளர்ப்பார்கள். குழந்தைகளை அடிப்பது என்பது தற்காலிகமாக ஏதாவது நிவாரணம் கொடுக்கலாம். ஆனால் நிச்சயமாக அது நிரந்தர தீர்வை அளிக்காது.

சரி அடிக்காமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று கேட்கிறீர்களா? எனக்கு தெரிந்த வளர்ப்பு முறையை சொல்கிறேன்.

முதலில் குழந்தைகளின் படுத்தலுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

1. பசி
2. தூக்கம்
3. உடல் உபாதை

வெளியில் எங்கே செல்வதாக இருந்தாலும் முதலில் குழந்தைக்கு நன்றாக உணவளித்து விடுங்கள், அதே போல சரியான நேரத்திற்கு குழந்தையை தூங்க வைத்து விடுங்கள். வெளி உணவு/நீர் இவற்றை எவ்வளவு தூரம் தவிர்க்க இயலுமோ தவிர்த்து விடுங்கள். இது அனைத்தையும் செய்தாலே முதல் மூன்று காரணங்களால் குழந்தைகள் அழுவதை பெருமளவில் தவிர்த்து விடலாம்.

குழந்தைகள் செய்யும் மற்ற பிடிவாதங்களுக்கு நாம் என்ன செய்வது?

குழந்தைகள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் இருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் குப்பையை குப்பை தொட்டியில் போட்டால் அவர்களும் போடுவார்கள். நீங்கள் உங்கள் மனைவியை அடித்தால், அவர்களும் அடிப்பார்கள். அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அப்படி நடந்து கொள்வதே முதல் வழி.

அடுத்தது, அவர்கள் 24 மணி நேரமும் ஜான்ஸன் & ஜான்ஸன் விளம்பரத்தில் வரும் குழந்தைகள் போல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நீக்குங்கள். நம்மை போலவே அவர்கள் பல நேரங்களில் சமத்து குழந்தையாகவும், சில நேரங்களில் மந்திகளாகவும் நடந்து கொள்வார்கள். அது இயல்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளும் போது, அவர்களின் பிடிவாதத்திற்கு இடம் அளிக்காதீர்கள். உதாரணத்திற்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட பொம்மை வேண்டும் என்று கடையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால், கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். அசையாமல் நின்று அவர்களின் கண்ணையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருங்கள். சில நிமிடங்களில் அவர்களே அழுகையை விட்டு விட்டு நார்மல் ஆகி விடுவார்கள். ஒரு முறை அவர்களின் அழுகைக்கு பயந்து வாங்கிக் கொடுத்தால் அதுவே அவர்களுக்கு அழுதால் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் என்ற செய்தி அளித்து விடும்.

அடுத்தது கன்ஸிஸ்டன்ஸி. உங்கள் குழந்தைக்கு 50 ரூபாய் பொம்மைக்கும், பத்தாயிரம் ரூபாய் க்ரிஸ்டல் பௌலுக்கும் வித்தியாசம் தெரியாது. முதல் பொருளை உடைக்கும் பொழுது சாதாரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டு அடுத்த பொருளை உடைக்கும் போது அவர்களை நீங்கள் அடித்தால் அவர்கள் குழம்பி போவார்கள்.

ஆபத்தான பொருட்கள், கத்தி, துப்பாக்கி, ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றை குழந்தை எடுக்க முடியாத இடத்தில் வைத்து விடுங்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு முறை உங்கள் குழந்தை ஏதாவது தவறோ அல்லது ஆபத்தான காரியமோ செய்யும் போதும் அதற்கு முதல் காரணம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நீங்கள் தான். குழந்தை மீது மட்டும் கோபிப்பதில் ஒரு பயனும் கிடையாது.

அதே போல வீட்டில் உள்ள ஒருவர் குழந்தையை கண்டிக்கும் போது வீட்டில் உள்ள மற்றவர்கள் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்.

அடுத்து அடிக்காமல் எப்படி குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்பிப்பது?

குழந்தைகள் அவர்கள் செய்த தவறை பொறுத்து ஒரு வார காலத்திற்கோ அல்லது இரண்டு நாட்களோ கீழே உள்ள ஏதேனும் ஒன்றை தண்டனையாக கொடுக்கலாம்.

1. அவர்களிடம் பேசாமல் இருப்பது
2. அவர்கள் டிவி பார்ப்பதை தடுப்பது
3. அவர்கள் கேம்ஸ் விளையாடுவதை தடுப்பது
4. அவர்களின் சேமிப்பில் இருந்து குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூலிப்பது
5. குடும்பத்தினருடன் உணவு சாப்பிடாமல் தனியாக சாப்பிட வைப்பது
6. வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலைகள் செய்வது ஆகிய வேலைகளை கொடுத்தல்

மேலே உள்ள சில தன்டனைகள் அடியை காட்டிலும் மிகவும் ஆழமானது. நிலையான மாற்றத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தக் கூடியவை. நார்வே தம்பதியினருக்கு நடந்ததை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம். குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்போம். நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்.

Wednesday, November 28, 2012

சில்லறை வர்த்தகம் - ஜாக்கி சேகருக்கு பதில்

நம்ம பதிவுலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் சில்லறை வர்த்தகம் குறித்து பதிவொன்றை எழுதியுள்ளார். ஒரு வாடிக்கையாளரின் பார்வையில் இருக்கும் அதனுடன் வரிக்கு வரி உடன்படுகிறேன். ஆனால் அதே நேரத்தில், இம்மாதிரியான முதலீடுகள் வாடிக்கயாளரை மட்டும் பாதிப்பதில்லை. அதனால் பல தரப்பில் இருந்து இதை நாம் பார்க்க கடமைபட்டுள்ளோம்.

பதிவினை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு ஜாக்கி சேகரின் பதிவை படித்து விடுங்கள்.

சுட்டி: http://www.jackiesekar.com/2012/11/blog-post_28.html

இனி நாம் பதிவுக்கு போகலாம்.

அன்பின் ஜாக்கி சேகர் அவர்களே,

உங்கள் பதிவினை படித்த உடன் பின்னூட்டம் இடலாம் என்று தான் முதலில் நினைத்து தட்டச்ச தொடங்கினேன். பின்னூட்டம் பெரிதானதால் தனிப் பதிவாக போட்டு விடலாம் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு.

முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். வாடிக்கையாளருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து நீங்கள் சொன்னது நூறு சதவிகித உண்மை. அதனுடன் வரிக்கு வரி ஒத்து போகிறேன். ஆனால் அதே நேரத்தில் மளிகை கடை காரர்களுக்கு பாதிப்பு இல்லை என்று சொல்வது உங்களுக்கு விவரம் தெரியாது என்பதையே காட்டுகிறது. உங்களை குற்றம் சொல்ல அதில் எதுவும் இல்லை.

வால்மார்ட் போன்ற நிறுவனங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கீழே என்னால் முடிந்த வரையில் விரிவாக சொல்ல முயற்சிக்கிறேன்.

1. லோக்கல் கடைகளுக்கு உடனடி ஆப்பு:

இதை பற்றி விரிவாக சொல்ல ஒன்றும் இல்லை. நீங்களே சொல்லி விட்டீர்கள் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன என்று. வீட்டிற்கே வந்து பொருட்களை சப்ளை செய்வது, மிக குறைந்த விலையில் பொருட்களை கொடுப்பது, பரிசு பொருட்கள் கொடுப்பது என்று ஜிகினா வேலைகள் பல செய்து போட்டியாளர்களுக்கு ஆப்படிப்பார்கள்.

அவர்கள் கொடுக்கும் குறைந்த விலை பொருட்கள் உங்களை வாழவைக்க இல்லை, உங்கள் பக்கத்து வீட்டு கடைக்காரரை அழிக்க என்ற உண்மை உங்களுக்கு தெரிந்தால் மகிழ்ச்சி. லோக்கல் கடைக்காரர்கள் அனைவரும் அழிந்த பின்னரும் இவர்கள் குறைந்த விலைக்கே பொருட்களை கொடுப்பார்களா? இல்லை விலையேற்றம் செய்வார்களா? என்பதை நீங்களே உங்களுக்குள் கேட்டு விடை சொல்லுங்கள்.

2. வால்மார்ட்டின் சப்ளையர்களுக்கு சிறிது காலம் கடந்து ஆப்பு:

உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் 100 பொருட்கள் மட்டுமே தயாரிக்கும் திறன் கொண்ட உற்பத்தியாளருக்கு ஒரு லட்சம் பொருட்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப் படும். அவரும் கடன் வாங்கி தொழிற்சாலையை விரிவு படுத்தி, பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி ஒரு லட்சம் பொருட்களை தயாரித்து விடுவார். தயாரித்து முடிந்ததும் முதல் ஆண்டு சொன்ன விலைக்கு வாங்கப் படும். அடுத்த ஆண்டு மிகவும் குறைந்த விலைக்கே பொருட்களை கேட்பார்கள். உற்பத்தியாளரும் ஓரளவு சமாளித்து குறைந்த விலைக்கு பொருட்களை கொடுப்பார். அதற்கு அடுத்த ஆண்டு இன்னும் குறைந்த விலைக்கு கேட்பார்கள். இப்படியே தொடர்ந்து ஒரு கட்டத்தில் உற்பத்தியாளருக்கு நஷ்டம் என்ற நிலையில் வந்து முடியும்.

உற்பத்தியாளர்களுக்கு வந்தது ஆப்பு. உற்பத்தியை அதிகரிக்க பல இன்வெஸ்ட்மென்டுகளை செய்திருப்பாளர்கள் அவர்கள். அதனால் தரத்தில் கை வைக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு வந்து விடும்.

3. வால்மார்ட்டில் வேலை செய்பவர்களுக்கு நிரந்தர ஆப்பு:

குறைந்த சம்பளத்தில் அதிக நேர வேலை, இன்ஸியூரன்ஸ் போன்ற பெனிஃபிட்ஸ் ஒன்றும் கிடையாது, 20 பேர் வேலை செய்ய வெண்டிய கடையில் 10 பேர் கூட வேலைக்கு இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நிரந்தர வேலையும் கிடையாது. பகுதி நேர வேலை மட்டுமே கிடைக்கும். வேலை செய்யும் போது ஏதெனும் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் நஷ்ட ஈடு ஒன்றும் கிடையாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

4. வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு நன்மை

வாடிகையாளர்களுக்கு நன்மை என்பது பணத்தில் மட்டுமே. வால்மார்ட் பொருட்களின் தரம் குறித்த மாற்று பார்வை இங்கே உண்டு. வால்மார்டுக்கென்றே தனியாக பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கூட இங்கே உண்டு. ஒரே பிரான்ட் பொருள் குறைந்த தரத்தில் வால்மார்ட்டுக்கும் நல்ல தரத்தில் மற்ற இடத்துக்கும் கொடுப்பார்கள். ஏனென்றால் வால்மார்ட் கொடுக்கும் குறைந்த விலைக்கு அப்படி தயாரித்து கொடுப்பதினால் மட்டுமே லாபம் சம்பாதிக்க இயலும் என்பதால்.

யோசித்து பாருங்கள் வேலை செய்பவர்களுக்கும், கஸ்டமர்களுக்கு உச்ச கட்ட பாதுகாப்பு இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இவ்வளவு கொடுமைகளை செய்யும் வால்மார்ட் இந்தியா போன்ற தேசத்துக்கு வந்தால் என்னென்ன செய்வார்கள்.

வால்மார்ட்டின் வேர்களை நம் மண்ணில் பதியவிட்டால் அது நமது நாட்டின் வாழ்வாதாரங்களை அசுர வேகத்தில் குடித்து முடித்து அழித்து விடும்.

யார் எக்கேடு கெட்டு போனால் என்ன, எனக்கு குறைந்த செலவில் பொருட்கள் கிடைத்தால் போதும் என்பவர்களுக்காக இதை நான் சொல்லவில்லை. 18 மணி நேர மின்வெட்டில் கூட கூடாங்குளம் வேண்டாம் என்று கூறி போராடிய மக்கள் போன்றவர்களுக்காக இதை சொல்கிறேன்.

ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டாலும், அரசு கூடாங்குள போராட்டத்தில் என்ன நிலை எடுத்ததோ, அதே நிலையை இதிலும் எடுக்கும். அரசுக்கு தேவையான சட்டங்கள் நிச்சயம் நாட்டில் வந்துவிடும். ஆனால் அதற்கு எதிரான நமது கருத்துக்களை பதிய வைத்தோமானால் நமது மனசாட்சிக்கு மட்டுமாவது நாம் உண்மையுள்ளவனாக இருக்க முடியும்.

பதிவினை தொடரந்து படித்தமைக்கு நன்றி. மாற்றுக் கருத்து இருப்பின் பின்னூட்டம் மூலம் தெரியப் படுத்துங்கள். தொடர்ந்து விவாதிப்போம்.

இவன்,
சத்யப்ரியன்

Tuesday, November 20, 2012

அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்

2008 நவம்பர் மாதம் 26 அன்று விதைத்த பலனை நான்கு ஆண்டுகள் கழித்து 2012 நவம்பர் 21 அன்று அறுவடை செய்தான் அஜ்மல் கசாப். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவனது தூக்கை உறுதி செய்ததை ஒட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7:30 மணிக்கு அவன் தூக்கிலிடப்பட்டான்.


மிகுந்த மன மகிழ்ச்சியுடன் இதை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், இனி இவ்வாறு மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க துர்சம்பவம் செய்தவனோடு மட்டும் இல்லாமல் அதற்கு உதவிய துரோகிகளுக்கும் இதே போல தண்டனை கிடைக்கும் என்று நம்புவோம்.

Wishing you many more happy returns of today.

Sunday, November 18, 2012

பொடிமாஸ் - 11/18/2012

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளை தவிர வேறு யாருக்கும் ஜாதியத்தை எதிர்க்கும் வக்கு கிடையாது என்பதை சமீபத்தில் நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. பிராமணாள் ஹோட்டலையும், ஸ்ப்ளென்டர் ஐயரையும், பாரதி ராஜா பிராமணர்களும் தமிழர்கள் தான் என்று கூறியதையும் எதிர்க்கும் வீரியம் உள்ள திராவிடக் கட்சிகளுக்கு தேவர் குரு பூஜை சம்பவத்தையும், தர்மபுரி சம்பவத்தையும் எதிர்க்க வீரியம் கிடையாது. பிராமணர்களை எதிர்த்து பக்கம் பக்கமாக பதிவுகளை எழுதுபவர்கள் இதை கண்டித்து ஒரு வரி கூட எழுதவில்லை. பிராமணர்களை பார்த்தாலே அவர்கள் யார் என்று தெரிந்துவிடும் என்பதால் அவர்களில் ஜாதியம் போற்றுபவர்களை கூட ஒரு வகையில் எளிதாக எதிர்கொண்டு விடலாம், ஆனால் ஜாதியம் போற்றும் இடைநிலை ஜாதி வெறியர்கள் தான் உண்மையில் ஆபத்தானவர்கள் என்பதை தலித்துகள் உணர வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் உத்தபுரத்தில் பிள்ளை சமூகத்தினர் தலித்துகள் மீது வன்கொடுமை செய்த போதும் இப்படித்தான் திராவிட கட்சிகள் கள்ள மௌனம் காத்தனர். பதிவுலக போராளிகளும் அப்படியே. அப்பொழுதும் அதை கண்டித்தது கம்யூனிஸ்ட்களே.

வலையுலக போராளிகளின் பச்சோந்தித் தனத்தை தோலுரித்த இச்சம்பவங்களுக்கு நன்றி.


கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக ட்விட்டினாலே பாய்ந்து வந்து கைது செய்து கடமையாற்றும் காவல் துறை, தனது அராஜக பேச்சால் பலரை தூண்டி, வன்முறை ஏற்படுத்தி, பல தலித்துகளின் வீடுகளை பொசுக்கி, அவர்களது உடைமைகளை திருட காரணமாக இருந்த காடுவெட்டி குரு போன்ற அரசியல் ரவுடிகள் அருகில் கூட செல்ல முடியாத நிலை கேவலமாக இருக்கிறது. ஜாதி வெறிபிடித்த காடுவெட்டிகள் காடுகளில் வாழும் மிருகங்களை விட கொடியவர்கள். இவர்களை போன்றவர்கள் அரசியல் தலைவர்களாக இருப்பது நமது துரதிருஷ்டம். திருமா போன்ற தலைவர்கள் கூட அரசியல் காரணங்களுக்காக இந்த வெறியாட்டங்களுக்கு பாமக மற்றும் வன்னிய சங்கம் காரணம் இல்லை என்று கூறுவது வருத்தமான விஷயம். நல்லவேளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் காரணம் என்று சொல்லாமல் விட்டார்களே, அதுவரை மகிழ்ச்சி.


பால் தாக்ரே இந்த வாரம் இறந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவருக்கு எனது அஞ்சலிகள். மற்றபடி அவரை தேசியவாதியாக சித்தரிப்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. He is anything but a nationalist. அவர் தென்மாநில மற்றும் வடமாநில மக்கள் மீது வெறுப்புகளையே அதிகம் மஹாராஷ்ட்டிர மாநில மக்கள் மனதில் விதைத்துள்ளார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. இம்மாதிரி அரசியல்கள் ஆபத்தானது. மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு போன்ற பிரச்சனைகள் உருவாக இம்மாதிரி அரசியல்வாதிகளே காரணம். இம்மாதிரி தலைவர்கள் எல்லாம் தலை தூக்கும் போதே நாம் நிராகரிக்க வேண்டும்.


ஆனால் அதே நேரத்தில் புதுவை ராம்ஜி என்பவர் எம். எஃப். ஹூஸைன் என்ற சிறந்த ஓவியர் இந்தியாவிலிருந்து விரட்டப்பட்டதற்கு பால் தாக்ரே தான் காரணம் என்று தனது பதிவில் கூறியுள்ளார். உண்மையில் அத்தகைய போராட்டத்தை எம். எஃப். ஹூஸைனுக்கு எதிராக நடத்தியதற்காக சிவ சேனைக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் வாழ தகுதி இல்லாதவர் எம். எஃப். ஹூஸைன் என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது.

கிழே உள்ளவை எம். எஃப். ஹுஸைன் படைத்த சர்ச்சையை கிளப்பிய சில ஓவியங்களின் தலைப்புகள்.

1. நிர்வாணமாக பார்வதி
2. நிர்வாணமாக துர்கை சிங்கத்துடன் கலவியில் ஈடுபடுவது
3. நிர்வாணமாக சரஸ்வதி
4. நிர்வாணமாக லக்ஷ்மி விநாயகருடன் கலவியில் ஈடுபடுவது
5. நிர்வாணமாக சீதை ராவணனுடன் கலவியில் ஈடுபடுவது

இதையெல்லாம் மேலோட்டமாக கலையுரிமை என்று எடுத்துக் கொள்ள முடியாது. நூறு கோடி மக்கள் உள்ள நாட்டில் சிறுபான்மையினரை அனுசரித்து செல்வது எப்படி பெரும்பான்மையினரின் கடமையோ அப்படித்தான் பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது சிறுபான்மையினரின் கடமை. சல்மான் ருஷ்டிக்கு ஃபத்வா விதித்ததை சரி என்று கூறியவர்கள் எல்லாம் எம். எஃப். ஹுஸைனுக்கு ஜால்ரா தட்டுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவும் ஒரு வகை பச்சோந்தித் தனமே.


துப்பாக்கி படம் நேற்று தான் பார்க்க முடிந்தது. இங்கே ஒரு தியேட்டரில் தான் இந்திய படங்கள் திரையிடுவார்கள். ஜப் தக் ஹைன் ஜான், மற்றும் சன் ஆஃப் சர்தார் இரண்டும் வெளிவந்த காரணத்தால் துப்பாக்கி வார இறுதியில் மட்டுமே திரையிட்டார்கள். அதனால் ஒரு வார காலம் எந்த விமர்சனத்தையுமே படிக்க வில்லை. விமர்சனம் எழுதுகிறேன் என்ற பெயரில் பலரும் படத்தின் முக்கிய காட்சிகளை எல்லாம் சொல்லி விடுகிறார்கள்.

படம் அட்டகாசமாக இருக்கிறது. கதை, திரைக்கதை, சண்டை காட்சிகள், வசனம், கேமரா, விஜய்யின் நடிப்பு என்று அனைத்தும் அட்டகாசம். விஜய்யின் படங்கள் தொடர்ச்சியாக நான்கு படங்கள் எனக்கு மிகவும் பிடித்தது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். படத்தை பற்றிய மற்றொரு முக்கிய செய்தி, நான் பார்த்த காட்சி ஹவுஸ்ஃபுல். அமெரிக்கா வந்ததிலிருந்து கடந்த ஏழு ஆண்டுகளில் சிவாஜி, எந்திரன், தசாவதாரம் தவிர்த்து மற்ற படங்கள் ஹவுஸ்ஃபுல் ஆனதை நான் பார்த்ததே இல்லை. இது மனதிற்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது.துப்பாக்கி நிச்சயம் இளைய தளபதியின் உச்சம்.

என்ன, நல்ல படத்திற்கு திருஷ்டி பொட்டு போல சில சர்ச்சைகள் தொடங்கி விட்டன. ஆனால் எனக்கு இந்த படத்திற்கு வந்த எதிர்ப்புகள் நியாயமானவையாகவே தெரிகின்றன. படத்தில் வில்லனின் அடியாட்களை வெளி நாட்டு தீவிரவாதிகள் என்று காட்டி இருந்தால் கூட இவ்வளவு எதிர்ப்புகள் வந்திருக்காது. உள் நாட்டு ஸ்லீப்பர் செல்கள் என்று காட்டியதால் தான் இவ்வளவு எதிர்ப்பு. அதுவும் ஒரு வகையில் நல்லது தான். பார்ப்போம் இனியாவது திரையுலகினரிடம் மாற்றம் வருகிறதா என்று.


இந்த தேங்க்ஸ் கிவிங் வார இறுதியில் நாங்கள் நான்கு நண்பர்கள் சந்திக்க இருக்கிறோம். நாங்கள் நான்கு பேரும் ஒரே நாள் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தோம். நாங்கள் நால்வருமே இப்பொழுது அந்த நிறுவனத்தில் இல்லை என்றாலும் எங்கள் நட்பு தொடர்கிறது. பத்து ஆண்டுகள் ஆன நிலையில் நாங்கள் மீண்டும் சந்திப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் ஒருவனை பார்த்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த வார இறுதியை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


அஹமதாபாத் டெஸ்ட் போட்டி எதிர்பார்த்தபடியே சென்று கொண்டிருக்கிறது. நான்கு நாட்கள் ஆன நிலையில், இன்னும் ஐந்து விக்கெட்டுகளை நாளை லன்சுக்கு முன்பு வீழ்த்தி விட்டால் நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம். அம்பெயரிங் எர்ரர்ஸ் அதிகம் இருந்தது தெளிவாக தெரிந்தது. DRS ஒப்புக் கொள்ளாதது BCCI யின் பிடிவாதத்தையே காட்டுகிறது. ஆனால் க்யூரேட்டர்ஸ் மீதான குற்றச்சாட்டு எதுவும் என்னிடம் இல்லை. நாம் இங்கிலாந்து சென்ற பொழுது நல்ல ப்ளாட் ட்ராக்குகளை ப்ராக்டீஸ் மேட்சுக்கு கொடுத்துவிட்டு க்ரீன் டாப் விக்கெட்டுகளை டெஸ்ட் மேட்சுகளுக்கு கொடுத்தனர். அப்பொழுது உலகின் முதல் ரேங்க் டீம் என்றால் எல்லாவித விக்கெட்டுகளிலும் விளையாட வேண்டும் என்று நக்கல் செய்தனர் அந்நாட்டு பத்திரிக்கைகள். என்னை கேட்டால் இன்னும் பிட்சை கொஞ்சம் உழுதுவிட்டு மேட்சை நடத்தலாம். Everything is fair in love and war.


தமிழக அரசியலில் மாற்றம் வருவதற்கான காட்சிகள் தோன்ற தொடங்கி இருக்கின்றன. மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே தேவை என்ற பொழுதும் அது திமுகவிற்கு சற்று அதிகமாகவே தேவை எனலாம். தளபதி மிகுந்த எழுச்சியுடன் செயல் படுவதாகவே தெரிகிறது. கலைஞர் செய்திகளில் தொடர்ந்து அவர் நடத்தும், தலைமை தாங்கும் போராட்டங்கள், மாநாடுகள், சந்திப்புகள் போன்றவற்றை பற்றிய செய்திகளை ஒளிபரப்புகிறார்கள். ஆனால் தேமுதிகவுடன் கூட்டணி ஏற்படலாம் என்ற செய்தி எனக்கு எரிச்சலாக இருக்கிறது. பாமகவை இரண்டு கட்சிகளும் மாறி மாறி கூட்டணி வைத்து வளர்த்துவிட்டது போல தேமுதிகவையும் வளர்த்துவிட முயல்கிறார்கள். திமுகவிற்கு மாற்று அதிமுக, அதிமுகவிற்கு மாற்று திமுக, இரண்டையும் விரும்பாதவர்களுக்கு கூட்டணிகளை பொருத்து காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்டுகள் என்ற நிலை தான் தமிழகத்திற்கு நல்லது.


நடிகர் கார்த்திக் அவர்களின் பரம ரசிகன் நான். நவரச நாயகன் என்ற பட்டத்திற்கு மிகவும் ஏற்புடையவர் அவர். அவர் நடித்த படங்களில் கோகுலத்தில் சீதை படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படத்தில் இருந்து ஒரு காட்சி கீழே பார்த்து மகிழுங்கள். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ரசித்து ரசித்து நடித்திருப்பார் கார்த்திக். மற்றொரு காட்சியில் சுவலக்ஷ்மி இவரை புகழ்ந்து ஒரு நிமிடத்திற்கு வசனங்கள் பேச அதை கேட்டு இவர் மௌனமாக கண்களால் பரவசப்படுவார் பாருங்கள், அட்டகாசம்.


Friday, November 02, 2012

பொடிமாஸ் - 11/02/2012

வட கிழக்கு அமெரிக்காவை சாண்டி புயலும், தமிழகத்தை நீலம் புயலும் தாக்கி ஓய்ந்து விட்டன. தமிழகத்திற்கு பெரிதாக பாதிப்பு இல்லை என்று தெரிகிறது. இங்கும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. புயல் எங்கே கரையை கடக்கும் என்பது சரியாக தெரியாததாலும், ஒரு வேளை வாஷிங்டன் டிசி பகுதிகளில் புயல் கரையை கடந்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என்பதாலும் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருந்தது. மின் இணைப்பு இல்லாவிட்டால் தண்ணீர் வராது, கேஸ் அடுப்பு எரியாது, ஹீட்டர் மற்றும் ஏசி வேலை செய்யாது, பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் கிடைக்காது, ATM வேலை செய்யாது, க்ரெடிட் கார்டுகள் வேலை செய்யாது, இன்னும் பல பாதிப்புகள்.

இதற்காக ஒரு வாரத்திற்கு தேவையான குடி நீர் வாங்கி, ஒரு வாரத்திற்கு தேவையான பால், பிரட், தயிர் ஆகியவற்றை வாங்கி, எல்லா பாத்டப் களிலும் தண்ணீர் பிடித்து, கார்களில் பெட்ரோல் போட்டு, தேவையான பணம் எடுத்துக் கொண்டு, டார்ச் விளக்குகள் ஏற்பாடு செய்து என்று இரண்டு நாட்கள் பரபரப்பாக இருந்தது. நல்ல வேளை பெரிதாக பாதிப்பு ஒன்றும் இல்லை. புயலினால் உயிரிழந்த மக்களுக்கு எனது அஞ்சலிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


சென்ற வாரம் முழுதும் அமெரிக்காவில் பரபரப்பாக இருந்தது சான்வி வென்னா கொலை வழக்கு. திருமணம் ஆகி வென்னா தம்பதிகளுக்கு பத்து ஆண்டுகளுக்கு பின் பிறந்த அழகு தேவதை சான்வி. ரகுநந்தன் என்ற பரதேசியின் பணத்தாசையால் அழிக்கப்பட்டு விட்டாள். அவனுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்கக்கூடும். குறைந்த பட்சம் பரோலில் வெளியில் வரமுடியாத 45 ஆண்டுகளாவது கிடைக்கும். அவனது மனைவியும் கருவுற்றிருக்கிறார். அவரது நிலையும் பரிதாபமாக இருக்கிறது. எப்படியோ இரண்டு குடும்பங்களின் மகிழ்ச்சி, நிம்மதி அனைத்தும் ஒரே நாளில் அழிந்து விட்டது.


சென்ற வாரம் இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப் பட்டது இரண்டு விஷயங்கள். அதில் ஒன்று சின்மயீ விவகாரம். இணையத்தில் பொதுவாகவே சிவிக் சென்ஸ் சற்று குறைவாகவே இருக்கிறது. நேரில் சொல்ல முடியாத பல கருத்துக்களை இணையத்தில் சொல்ல முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் சுயக்கட்டுப்பாடு என்று ஒன்று அவசியம். பேராசிரியர்கள் கூட சுயக்கட்டுப்பாட்டை இழப்பது மிகவும் வேதனையான ஒன்று.

நான் முன்னரே சொல்லி இருக்கிறேன், இணையத்தில் போலி பெயரும், முகமூடியும் கிடைக்கின்றன என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான். கருத்து சுதந்திரம், கத்திரிக்காய், கொத்தமல்லி எல்லாமே வரையரைக்குட்பட்டது. எந்த கருத்தை சொல்வதற்கு முன்பும் ஒரு கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த கருத்தை எனது சொந்தப் பெயரில், நானே நேரிடையாக சென்று, எனது குடும்பத்தினர் முன்பு, எனது வாயால், அடுத்தவரிடம் சொல்ல முடியுமா? என்பது தான் அது. முடியும் என்பது உங்கள் விடையானால் அதை இணையத்தில் சொல்லுங்கள். முடியாது என்றால் விட்டு விடுங்கள்.

You are responsible for your life and actions.


சென்ற வாரம் இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப் பட்ட மற்றொரு விஷயம் கமல் - முக்தா விவகாரம். கமல் ரசிகர்கள் பலர் இணையத்தில் பொங்கி இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே யாரும் நாயகன் மட்டமான படம் என்றோ, கமல் மட்டமான நடிகர் என்றோ, அவர் நாயகனுக்காக ஒரு கஷ்டமும் படவில்லை என்றோ சொல்லவில்லை. கமலும், மணியும் அப்படத்திற்காக கஷ்டப் பட்டார்கள், அவர்களே அப்படத்தின் வெற்றியின் பலனை அனுபவித்தார்கள். அவர்களுக்கு பணம், பெயர், புகழ் எல்லாம் கிடைத்தது. முக்தா கஷ்டப் படவில்லை. அவருக்கு அவ்வெற்றியில் பெரிய பங்கு ஒன்றும் கிடைக்க வில்லை. உண்மை இவ்வாறு இருக்க 25 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் தயாரிப்பாளரை பொதுவில் அசிங்கப் படுத்தி இருக்க வேண்டாம் என்று தான் குறிப்பிடுகிறோம். ஒரு வேளை முக்தா ஒரு கஷ்டமும் படாமலேயே இப்படத்தின் வெற்றியில் பெரிய பலன் அடைந்திருந்து கமலுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய் இருந்தால் கமலின் ஆதங்கத்தில் ஒரு அர்த்தம் உண்டு என்று சொல்லலாம். கமலின் கடிதம் துவேஷத்தின் வெளிப்பாடு. அவர் படைத்த குணா பாத்திரம் பேசும் "அசிங்கம், அசிங்கம்.." வசனத்தின் ஒட்டு மொத்த எடுத்துக் காட்டு.

அதற்கு சரியான பதில் சொல்வதை விட்டு விட்டு, கமல் செய்தது சரிதான் என்று நிரூபிக்கும் முயற்சியில் உகாண்டாவில் வெளியான நாயகன் விமர்சனத்தை வெளியிடுவதோ அல்லது முக்தா ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எனக்கு அளித்த பேட்டியில் கமலை புகழ்ந்தார் இப்பொழுது இகழ்கிறார் என்றெல்லாம் கூறுவதோ சிறு பிள்ளை தனமாக இருக்கிறது. நாயகனை நல்ல படம் என்று கூற உகாண்டாவிற்கெல்லாம் போக தேவை இல்லை, நம்ம கேபிள் சங்கரிடம் சொன்னால் அதை விட நல்ல விமர்சனத்தை அவர் எழுதித் தருவார். அதே போல ஒரு நூற்றாண்டுக்கு முன்பு முக்தா கமலை பாராட்டி பேசினார் என்பது அவரது சபை நாகரீகத்தை காட்டுகிறது. ஒரு குழுவில் பணியாற்றும் பொழுது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். அதை ஒன்று மறந்து விட வேண்டும், அப்படி முடியாவிட்டால் மனதிற்குள் அதனை வைத்துக் கொள்ள வேண்டும். முக்தா அவரது மனக் கசப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டு கமலை பாராட்டி இருக்கிறார். இப்பொழுது கமல் தரப்பில் இருந்து அருமையாக பதில் மரியாதை கிடைத்ததால் எதிர்வினையாற்றி இருக்கிறார்.

பொதுவெளியில் மனக் கசப்புகளை அதுவும் 25 ஆண்டுகள் கழித்து வெளியிடுவது நடு வீட்டில் மலம் கழிப்பது போன்றது. நான் அப்படித்தான் நடு வீட்டில் மலம் கழிப்பேன், நீ பொத்திக் கொண்டு அருகில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவது எந்த வகை நியாயமோ தெரியவில்லை.

தன்னை புத்திசாலி என்றும் மற்றவர்களை அடி முட்டாள்கள் என்றும் நினைத்துக் கொண்டு மற்றவர்களை தன்னை விட ஒரு படி கீழே வைத்து நோக்குவது கூட ஒரு வகை ஜாதீயம் தான். இந்த உண்மை கமலுக்கு ஒரு வேளை புரிந்தாலும் புரிந்து விடும், ஆனால் அவருக்கு ஜால்ரா தட்டும் உலக சினிமா ரசிகர்களுக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்.

உலக சினிமா ரசிகர்களே, பூவை பூவுன்னும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம், நீங்கள் சொல்வது போலவும் சொல்லலாம்.


சன் டிவி குழுமத்தினர் சென்ற வாரம் ஹைதராபாத் IPL டீமை வாங்கி விட்டார்கள். வாங்கி விட்டார்கள் என்று சொல்வதை விட ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்று சொல்வது தான் சரி. சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, ரேடியோ, அச்சு ஊடகம், சினிமா, விமான சேவை என்று பல துறைகளில் ஈடுபடும் நிறுவனம் இப்பொழுது விளையாட்டிலும் கால் பதித்துள்ளது. இதிலும் அவர்கள் வெற்றி வாகை சூடுவார்கள் என்று நம்புவோம். எனது வாழ்த்துகளை இந்த பதிவின் மூலம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் ஆஜீத் வென்றதற்கு அவருக்கு எனது வாழ்த்துகள். ப்ரகதி ஆஜீத்தை விட நன்றாக பாடினாலும் மக்கள் சொல்லே மஹேசன் சொல் அல்லவா? நான் இதையும் முன்பே சொல்லி இருக்கிறேன். வைல்டு கார்ட் சுற்றில் மக்கள் வாக்கை பெற்று முதலில் வருபவருக்கு ஒரு unfair advantage கிடைக்கும். பல லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவருக்கே மக்கள் மீண்டும் சைக்கலாஜிகலாக வாக்களிக்க விரும்புவார்கள். போன போட்டியில் சாய்சரன் ஜெயித்ததற்கும் அது தான் காரணம். இந்த போட்டியில் ஆஜீத் ஜெயித்ததற்கும் அது தான் காரணம். ப்ரகதி பாலாவின் பரதேசி படத்தில் ஒரு பாடல் பாடியதாக தெரிகிறது. அவருக்கும் எனது வாழ்த்துகள்.


அம்மாவுக்கும் கேப்டனுக்கும் இடையில் நடக்கும் அரசியல் கேவலமாக இருக்கிறது. சென்ற ஆட்சியில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட கலைஞர் இம்மாதிரி செயல்களில் ஈடுபட்டதாக தெரியவில்லை. நாட்டில் விலைவாசி உயர்வு, மின் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை என்று பல முக்கியமான விஷயங்கள் இருக்கையில் இம்மாதிரி செயல்களில் ஈடுபடுவது ஒரு மாநில முதல்வருக்கு அழகல்ல. ஆட்சி இது போலவே அமைந்தால் அடுத்த தேர்தலில் தளபதியா, கேப்டனா இல்லை அம்மாவா என்ற கேள்விக்கு மக்கள் தயங்காமல் தளபதி என்று பதில் கூறுவார்கள். தளபதி நிச்சயமாக நல்ல ஆட்சி தருவார் என்று தான் நான் நம்புகிறேன்.

Thursday, October 25, 2012

கமலஹாசனும், நாயகனும், கொஞ்சம் நரகலும்

சமீபத்தில் திரு. கமலஹாசனின் நாயகன் பற்றிய ஹிந்து நாளிதழில் வெளியான கடிதம், அதன் தொடர்ச்சியான நாயகன் பட தயாரிப்பாளர் திரு. முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அதனை தொடர்ந்த சர்ச்சை ஆகியவை பற்றியே எழுதுகிறேன்.

சாதாரண பதிவொன்றை எழுதி விட்டு அதை நால்வர் பாராட்டி விட்டாலே நமது உச்சி குளிர்ந்து போய் விடும். அப்படி இருக்கையில் டைம் பத்திரிக்கையினால் உலகின் தலை சிறந்த நூறு படங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட, மூன்று தேசிய விருதுகள் வாங்கிய, இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் சிலாகிக்கும் படம் ஒன்றை கொடுத்துவிட்டு அதன் நினைவுகளை 25 ஆண்டுகள் கழிந்த பின்னர் நினைவு கூறுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும்.

ஆனால் என்ன, அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது போதை அதிகமாகி நடு வீட்டில் வாந்தி எடுப்பது போல சிலவற்றை தனது கடிதத்தில் வாந்தி எடுத்துவிட்டார் நமது கலைஞானி.

கமல் எழுதிய கடிதத்தை படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டிக்கு சென்று கடிதத்தை முழுதும் படித்து விடுவது உத்தமம்.

Link : Of course Velu Nayakan doesn't dance

முதலில் கடிதத்தின் தொடக்கத்திலேயே தனது விக்ரம் படத்தை பற்றி சொல்லும் பொழுது கமல் மற்றும் சுஜாதாவின் அறிவு ஜீவித்தனம் கோடம்பாக்கத்தினால் அழிக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிடுகிறார், வசதியாக அப்படத்தின் திரைக்கதை தனது என்பதை நினைவு கூறாமல். மேலும் அப்படத்தை மணி இயக்கி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். இது அதனை இயக்கிய ராஜசேகருக்கு உச்சகட்ட அவமானம்.

சரி அடுத்ததாக நாயகன் பற்றி அவர் குறிப்பிடும் பொழுது கடிதம் நெடுக அறிவுஜீவிகளான மணியும் கமலும் தயாரிப்பாளர் முக்தாவினால் அடைந்த மன உளைச்சல்கள் தான் இருக்கின்றன. சரி இவ்வளவு கஷ்டப்பட்டு படத்தினை எடுத்ததன் பலன் தான் நாயகன் திரைப்படம் என்பதை நினைவு கூறும் முயற்சியாக அதனை எடுத்துக் கொள்ள இயலவில்லை. அந்த கடிதத்தில் சாதித்து விட்ட பூரிப்போ அல்லது பெருமுச்சோ தெரியவில்லை. மாறாக முக்தாவின் ஒத்துழைப்பு இல்லாததினால் படத்திற்கு ஏற்பட்ட இழப்பின் காரணமான எரிச்சலே தெரிகிறது. அதன் உச்ச கட்டமாக மணிக்கு ஹார்ட் அட்டேக் வந்ததன் காரணமே முக்தாவின் கெடுபிடிகள் தான் என்ற தோற்றம் தருகிறது இந்த கடிதம்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன் 10 ரூபாய் முதலீடு செய்து 20 ரூபாய் லாபம் சம்பாதிக்க நினைப்பது அவ்வளவு பெரிய குற்றமா? ஒரு தயாரிப்பாளர் எதற்கு கலை சேவை செய்ய வேண்டும்? நாடே போற்றும் ஒரு சிறந்த படத்தை தயாரிப்பதினால் அவருக்கு கிடைக்கும் நன்மை என்ன? அழகி, சேது, பிதாமகன் போன்ற படங்களை தயாரித்தவர்களின் நிலை என்ன? அப்படங்களில் நடித்தவர்களுக்கும் இயக்கியவர்களுக்கும் அடுத்தடுத்த படங்களில் சில பல கோடிகள் கிடைத்தன. ஆனால் தயாரித்தவர்களுக்கு.

ஏன்?, நாயகனையே எடுத்துக் கொள்வோம். அப்படத்தின் வெற்றியினால் அதிகம் நன்மை அடைந்தவர்கள் யார்? மணி மற்றும் கமல் தானே. நல்ல படத்தை தயாரித்த முக்தாவிற்கு என்ன கிடைத்தது? 25 ஆண்டுகளுக்கு பின்னர் வசை தானே கிடைத்தது.

எங்கே நான் கமலின் சில படங்களை குறிப்பிடுகிறேன், அவற்றின் தயாரிப்பாளர் யார் என்பதை படத்தின் DVD யின் உதவியோ அல்லது விக்கீபீடியாவின் உதவியோ இல்லாமல் உங்களால் கூற முடிகிறதா என்பதை பார்ப்போம். மூன்றாம் பிறை, மைக்கேல் மதன காம ராஜன், சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், மஹாநதி ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் யார் என்பது தெரியுமா? அவ்வளவு ஏன்? பலர் சிலாகிக்கும் இந்த நூற்றாண்டில் வெளி வந்த அன்பே சிவம் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது தெரியுமா? இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இப்படங்களினால் பெரிதும் லாபம் அடைந்தவர் கமல் தான். அவரின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுகள் அவருக்கு வந்தன. ஒரு வேளை அப்படங்களினால் அவருக்கு வந்த பாராட்டுகளை அவர் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களோடு பகிர்ந்து கொண்டிருந்தால் அவர் விரும்பிய படி பல தயாரிப்பாளர்கள் வந்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்யாத போது தயாரிப்பாளர்களை லாப நோக்குடன் இருப்பதாக குற்றம் கூறுவது மிகவும் கேவலமானது.

சரி இவர் வியந்து பாராட்டும் இயக்குனர் பாலசந்தர் ஏன் திருமலை, திருவண்னாமலை போன்ற குப்பைகளை தயாரிக்கிறார். சொந்த பணத்தில் பேரரசு டைப் படங்களை எடுத்துவிட்டு அடுத்தவர் பணத்தில் திரைக் காவியங்களை எடுக்கும் போலி திரை மேதைகளைவிட 5 லட்சம் லாபம் சம்பாதிக்கும் படத்தினை தயாரிக்க முயன்ற முக்தா போன்றவர்கள் ஒன்றும் குறைந்து போய்விட வில்லை.

ஒரு தயாரிப்பாளர் லாபத்தை எதிர் பார்க்க கூடாது, கலை சேவை செய்ய வேண்டும், தன்னை வைத்து தான் எதிர் பார்த்தது போல படத்தினை எடுக்க வேண்டும், தான் எதிர்பார்த்த சம்பளமும் தனக்கு கொடுக்க வேண்டும், அதனால் நஷ்டம் வந்தால் சந்தோஷத்துடன் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் அந்த படம் சிலாகிக்கப் படும் பொழுது மட்டும் அப்படத்தில் நடித்த நடிகர் வந்து அந்த பாராட்டுகளை எடுத்துக் கொள்வார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அதனை தான் கமல் விரும்புகிறார்.

படம் எடுத்தாகி விட்டது, அது நன்றாக ஓடி பெரிய வெற்றி பெற்று விட்டது, பலர் அதனை பாராட்டுகிறார்கள், 25 ஆண்டுகளும் ஓடி விட்டது. இப்பொழுது வந்து படத்தின் தயாரிப்பாளர் வெஸ்ட்மோரை மேக் அப் செய்ய அனுமதிக்க வில்லை, ஜிம் ஆலனை சண்டை காட்சிகளை இயக்க அனுமதிக்க வில்லை, காஸ்ட்யூம் டிசைனுக்கு தனியாக ஆட்களை வைத்துக் கொள்ள அனுமதி தரவில்லை, கம்பி வைத்து உடைக்க காரை தரவில்லை என்றெல்லாம் கூறுவது வேடிக்கையாக மட்டும் இல்லை அசிங்கமாகவும் இருக்கிறது. அதன் உச்ச கட்டமாக படத்தின் காட்சிகளை எடுக்க பிலிம் ரோல்களை ரேஷன் செய்து கொடுத்தார் என்று சர்காஸத்துடன் கூறுவதாக நினைத்துக் கொண்டு கூறுவது பற்றி என்ன சொல்வது,

"Sorry Mr. Kamal Haasan. Not only your rationalism, this letter of yours is also nauseating."

பின்னர் சேர்த்தது:

திரு. முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் கமலின் கட்டுரைக்கு தனது பதிலை அளித்துள்ளார். அதனை கீழே உள்ள சுட்டிக்கு சென்று படியுங்கள்.

Link : Living in past glory

Friday, October 19, 2012

ஒரு பாம்புக் கடியும் சில அனுபவங்களும்

நான்கு வாரங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ஒரு சனிக்கிழமை காலை என்றைக்கும் இல்லாத திரு நாளாக தங்கமணி வீட்டை வாக்கூம் செய்து கொண்டிருந்தார். பொதுவாகவே இம்மாதிரி வேலைகள் எனது கஸ்டடியில் விடப்படும். அன்றைக்கு ஏதோ விதிவிலக்கு. ஆனால் பதிவு அதை பற்றியதல்ல.

அன்று மாலை நாங்கள் மாண்டியுடன் விளையாடும் பொழுது அவனது பின் கால் தொடை பகுதியில் தங்கமணி கை வைத்ததும் தனிச்சையாக கைகளை அவன் கடிக்க வந்தான். பின்னர் கைகளை முகர்ந்து பார்த்துவிட்டு சென்று விட்டான். நானும் அந்த இடத்தில் கை வைத்தேன். என்னையும் கடிக்க வந்தான். எங்களுக்கு ஒரே வியப்பு. பொதுவாகவே வீட்டு நாய்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களை கடிக்கவே கடிக்காது. அதிலும் மாண்டி பரம சாது. சில நேரங்களில் ப்ரணவ் அவனது வாலையும், காதுகளையும், முடியையும் பிடித்து இழுத்து விளையாடும் போது கூட வீல் என்று கத்திவிட்டு பரிதாபமாக எனது கால்களுக்கு நடுவிலோ அல்லது தங்கமணியின் கால்களுக்கு நடுவிலோ படுத்துக் கொள்வானே தவிர கடி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. செல்லக் கடிகள் கூட கிடையாது. அப்படி இருக்கும் பொழுது எங்களை கடிக்க வந்தது எங்களுக்கு மிகவும் கவலை அளித்தது. அப்பொழுது தான் தங்கமணி காலை வாக்கூம் செய்யும் பொழுது வக்கூம் க்ளீனர் இவனது தொடையில் மோதிவிட்டது என்று கூறினார். சரி அதனால் இவனது தொடையில் ஏதோ வலி என்று நினைத்து, விளையாடுவதை நிறுத்தி அவனது ப்ளே பென்னில் அவனை விட்டு விட்டு இரவு உறங்கி விட்டோம்.

அடுத்த நாள் ஞாயிறு அன்று கூட அவனை அதிகம் தொல்லை செய்யாமல் இருக்க வேண்டி காலை, மாலை, இரவு முன்று வேளையும் சிறிது தொலைவே வாக்கிங் சென்றோம். அன்று இரவு அவனை மடியில் வைத்துக் கொண்டு தொலைக்காட்சியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவனது பின்னங்கால் தொடையில் மொறு மொறுப்பாக ஏதோ கைகளில் அகப்பட்டது. முதலில் அது ஏதோ உணவு அவனது மேல் பட்டு காய்ந்து விட்டது என்று நினைத்தேன். சிறிது கவனித்து பார்த்த பின்னர் அது அவனது உறைந்த ரத்தம் என்பது தெரிந்தது. நன்றாக பெரிய ஒரு ரூபாய் அளவுக்கு இருந்தது.

உடனே தெரிந்து விட்டது அவனுக்கு ஏதோ காயம் ஏற்பட்டு இருகிறது என்று. ஆனால் எதனால் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. தங்கமணியோ வாக்கூம் க்ளீனர் இடித்தது லேசாக என்றும் அதனால் இவ்வளவு பெரிய காயம் எற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். நான் குழம்பி போனேன்.

அடுத்த நாள் திங்கள் என்று காலை முதல் வேலையாக 7 மணிக்கே டாக்டரிடம் கூட்டி சென்றேன். முன்னரே அப்பாயின்ட்மென்ட் எதுவும் வாங்கவில்லை. நல்ல வேளை டாக்டர் இவனை பரிசோதிக்க ஒப்புக் கொண்டார். முதலில் காயத்தை பரிசோதித்தார். நன்றாக முடிகளை ஷேவ் செய்து, உறைந்து இருந்த ரத்த திப்பிகளை நீக்கி பார்த்த போது இரண்டு பல் பட்ட ஆழமான காயம் ஒன்று இருந்தது. அதை பார்த்த உடனே எனக்கும் தெரிந்து விட்டது அந்த டாக்டருக்கும் தெரிந்து விட்டது இது பாம்புக் கடி என்று. எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும், எனது அறிவுக்கு இது விஷப் பாம்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. பின்னர் இவனது டெம்பரேச்சர், வெயிட், ஹார்ட் பீட், கண்கள் என்று அனைத்தையும் பரிசோதித்த பிறகு இவனுக்கு காய்ச்சலோ இல்லை வேறு ஏதானும் பாதிப்போ இல்லை என்பது உறுதியானது. ஆனால் கடித்த இடம் மட்டும் இல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கூட தடித்து இருந்தன. அது தான் டாக்டரை சிறிது கவலை கொள்ள செய்தது. விஷத்தினால் அந்த பகுதிகளில் உள்ள திசுக்கள் இறந்து அப்படி ஆகி இருக்க கூடும். அது மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால் எனக்கு மட்டும் அது அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்றே ஒரு நம்பிக்கை. ஒரு அடி நீளமும், அரை அடி உயரமும், 8 பவுண்டு எடையும் கொண்ட மாண்டியை விஷப் பாம்பு கடித்து இருந்தால் கடித்த சில நிமிடங்களிலேயே என்னவாகி இருக்கும் என்பது எனக்கு தெரிந்தே இருந்தது. கடித்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் அவன் நன்றாக விளையாடிக் கொண்டிருப்பதால் அது விஷப் பாம்பல்ல என்பதை நான் உறுதியாக நம்பினேன். அதே போல பாம்புக் கடியினால் அவனது உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிலை எனக்கு சிறிது ஆறுதல் அளித்தது.

இங்கே அமெரிக்காவில் க்ரேட்டர் வகை பாம்புகள் அதிகம். அவைகளுக்கு விஷம் கிடையாது. ஆனால் நான் வசிக்கும் பகுதியில் அவை அதிகம் கிடையாது. இவனை கடித்த பாம்பு ஏதாவது மழையினால் ஏற்பட்ட ஓடையில் வந்திருக்கக் கூடும். இரவில் ஏதாவது ஒரு புதற்றில் படுத்திருக்கும் பொழுது இவன் அருகில் சென்று சிறுநீர் கழிக்கும் பொழுது இவனை கடித்திருக்க வாய்ப்புகள் உண்டு. மனம் மெதுவாக புள்ளிகளை ஒன்று சேர்த்தது. எது எப்படியோ இனி இரவில் அவனை நெடுந்தொலைவு வாக்கிங் அழைத்து செல்லக் கூடாது என்று மட்டும் உறுதி செய்து கொண்டேன். ஆனால் தங்கமணிதான் பாம்புக் கடி என்றதும் மிகவும் பயந்து விட்டார்.

டாக்டர் என்னிடம் இன்ஃபெக்ஷன் வராமல் இருக்க 10 நாட்களுக்கு தேவையான ஆன்டிபயாடிக் மாத்திரைகளும், பெயின் கில்லர் மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினார். மேலும் மாண்டி புண்ணை நக்கியோ கடித்தோ இன்னும் பரவாமல் தடுக்க அவனது கழுத்தில் கோன் மாட்டப் பட்டது. 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அழைத்து வரும் படி கூறினார். என்னை தினமும் மூன்று வேளை புண்ணை ஹட்ரஜன் பெராக்ஸைட் கொண்டு சுத்தம் செய்யும் படியும், தேவை பட்டால் ஆன்டிபயாடிக் க்ரீம் ஏதாவது தடவும் படியும் சொல்லி விடை கொடுத்தார்.

அடுத்த 10 நாட்களும் நெடுந்தொலைவு வாக்கிங் செல்லாமலும், அதிகம் விளையாடாமலும், டாக்டர் சொன்னபடி தினமும் இரண்டு வேளை மாத்திரைகளை உட்கொண்டு, தினமும் மூன்று வேளை அவனது புண்ணை சுத்தம் செய்து இரண்டு வார காலத்தில் அவனது புண் முழுதாக குணமாகி விட்டது.


மேலே இருக்கும் புகைப்படம் நேற்று எடுத்தது. புண் குணமானாலும் தழும்பு இன்னும் அப்படியே இருக்கிறது. எனது நெஞ்சத்தில் எனது கவனக்குறைவினால் உண்டான தமும்பும் அப்படியே.

Wednesday, October 10, 2012

பொடிமாஸ் - 10/10/2012

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இப்பொழுது தான் நம்ம பதிவர் அண்ணன் மணிக் கூண்டு சிவாவுடன் அவர் சென்ற தேர்தலில் ஒபாமாவிற்கு பிரசாரம் செய்த பொழுது விவாதம் செய்தது போல இருக்கிறது. அதற்குள் நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. நேரம் விரைவாகத்தான் செல்கிறது. அவரிடம் நேரம் கிடைக்கும் பொழுது பேச வேண்டும். இப்பொழுதும் ஓபாமாவை தான் ஆதரிக்கிறாரா என்று கேட்க வேண்டும்.


இப்பொழுதெல்லாம் தமிழ் மண மத சண்டைகள் வயிற்றை குமட்டுகின்றன. மேலாண்மை பாடங்களில் ரூரல் மார்கெட்டிங் மற்றும் அர்பன் மார்கெட்டிங் டெக்னிக்ஸ் என்றொரு பாடம் இருக்கிறது. அதாவது நாம் எதை மார்கெட் செய்கிறோமோ அதை அந்த பொருளின் டார்கெட் ஆடியன்ஸ் முன்பு மட்டுமே மார்கெட் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு ஃபேர் அன்டு லவ்லி என்ற ஒரு ப்ராடெக்டை வெள்ளையர்கள் வசிக்கும் ஒரு நாட்டில் மார்கெட் செய்ய முடியாது. அதே போல டேனிங் ப்ராடக்ட்களை இந்தியாவில் மார்கெட் செய்ய முடியாது. இது மதத்தை மார்கெட் செய்பவர்களுக்கும் பொருந்தும். அந்த மதத்தை எதிர்த்து தொடர்ந்து பதிவெழுதுபவர்களுக்கும் பொருந்தும்.


மஹாராஷ்ட்ராவில் உத்தர பிரதேசத்தவர்களை உதைக்கிறார்கள். லக்னோவில் அஸ்ஸாம் மாநிலத்தவர்களை உதைக்கிறார்கள். பெங்களூரில் வட கிழக்கு மாநில மக்களை உதைக்கிறார்கள். காவிரியில் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுக்கிறது. முல்லை பெரியாரில் கேரளா தமிழகத்துடன் சண்டை போடுகிறது. வட நாட்டானுக்கு தென் நட்டானை கண்டால் ஆகாது. தென் நாட்டானுக்கு வட நாட்டானை கண்டால் ஆகாது. வேற்றுமையில் ஒற்றுமையாம் மண்ணாங்கட்டி. தேசியம் பேசுபவர்களை செருப்பால் அடித்தால் நன்றாக இருக்கும் என்று சில நேரங்களில் தோன்றுகிறது.


ராணி முகர்ஜியின் ஐயா படம் தமிழர்களை கொச்சை படுத்துகிறது என்று ஆளாளுக்கு பொங்கி எழுகிறார்கள். நம்மாட்களுக்கு தமிழுணர்வு ரொம்பவே பொங்கி வழிகிறது. இங்கே இல்லாத சர்தார்ஜி ஜோக்குகளா? இதையெல்லாம் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மாட்களுக்கு தேவை கொஞ்சம் நகைச்சுவை உணர்வு தான். கருப்பன் தான் பிடிக்கும் என்று ராணி முகர்ஜி சொல்வது நமக்கு கேவலமாக தெரிந்தால் கருப்பு நிறத்தை கேவலப் படுத்துவது நாமும் தான் என்பது நமது அறிவுக்கு என்றைக்கு தான் எட்டுமோ? கருப்பை கேவலமாக நாம் பார்ப்பதை முதலில் நிறுத்துவோம். பின்னர் மற்றவர்களை நிறுத்த சொல்வோம்.


சென்ற வாரம் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தேன். ஸ்ரீ தேவியின் கம் பேக் என்பதுடன் சீனி கம் மற்றும் பா படங்களை இயக்கிய பால்கியின் மனைவி இயக்கும் படம் என்ற எதிர் பார்ப்பும் சேர்ந்து கொள்ள ஒரு வித பதட்டத்துடனேயே படம் பார்த்தேன். ஞாயிறு இரவு காட்சி தான் பார்க்க முடிந்தது. அப்பொழுதும் கூட நல்ல கூட்டம். ஸ்ரீ தேவி வரும் முதல் காட்சியில் பலத்த கைதட்டல். முடிவில் ஸ்டான்டிங் ஓவேஷன். படம் எனது எதிர்பார்ப்பை நன்றாக பூர்த்தி செய்தது. என்ன படத்தின் ஒரே குறை அந்த ராமமூர்த்தி பாத்திரம் தான். பெரிதாக ஒட்டவில்லை. நம்மவர்களுக்கு ஹிந்தி தான் பிரச்சினை. இங்கிலீஷ் என்றால் பூந்து விளையாடுவார்கள்.


நாளை மறுநாள் இங்கே மாற்றான் வெளியாகிறது. கே. வி. ஆனந்த் படங்கள் எனக்கு ஒரு மாதிரியாக பிடிக்கும். அதாவது அவரின் படங்களை ஒரு முறை பார்க்க முடியும். அவ்வளவு தான். அவரது படங்களில் கனா கண்டேன் எனக்கு மிகவும் பிடிக்கும். அயன் சுமாராக பிடிக்கும். கோ பிடிக்கவே இல்லை. ஆனால் மக்களின் ரசனை வேறு மாதிரி இருந்தது. சூர்யாவிற்காக இந்த படத்தை பார்க்கிறேன். நன்றாக இருக்க வேண்டும். விஷ்வரூபம், அலெக்ஸ் பாண்டியன், நீ தானே என் பொன் வசந்தம் இந்த மூன்று படங்கள் கூட மாற்றானுடன் வெளி வரும் என்று செய்திகள் வந்தன. ஆனால் வர வில்லை. அனைத்து படங்களும் ஒரே நாளில் வெளி வந்திருந்தால் நான் இந்த வரிசையில் தான் படங்களை பார்த்திருப்பேன்.

நீ தானே என் பொன் வசந்தம் -> விஷ்வரூபம் -> மாற்றான். அலெக்ஸ் பாண்டியன் சத்தியமாக பார்த்திருக்க மாட்டேன். பின்னே, சுராஜ் படங்களை எல்லாம் திரையில் பார்க்க முடியுமா என்ன?


இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு நாளை 70 ஆவது பிறந்த நாள். அவரை பற்றி புதிதாக கூற என்ன இருக்கிறது. அவரது சுப்கே சுப்கே, நமக் ஹராம், ஜஞ்சீர், டான், தீவார், அக்னீ பத், ஷோலே, கபி கபி போன்ற பெரும் வெற்றி பெற்ற படங்கள் மட்டும் இல்லை தோ அவுர் தோ பான்ச், மர்த் போன்ற மொக்கை படங்களை கூட வியந்து பார்த்திருக்கிறேன். திரையில் அவரது ஆளுமையை பற்றி நான் கூறுவதை விட சமீபத்தில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஐந்து நிமிட கௌரவ தோற்றத்தில் அமிதாப்பை பாருங்கள். குறிப்பாக அமெரிக்க இமிக்ரேஷன் ஆபீசரிடம் அவர் பேசுவதையும் தல அஜித் பேசுவதையும் ஒப்பிட்டு பாருங்கள். அவரது ஆளுமை தெரியும். தலையை குறைத்து மதிப்பிட இதை சொல்லவில்லை. தலையின் ரசிகர்கள் என் மீது கொலைவெறி கொண்டு பாய வேண்டாம். அந்த இரு காட்சிகளையும் ஒப்பிடும் பொழுது அமிதாப் பல மடங்கு அதிகம் தலையை விட ஸ்கோர் செய்கிறார் என்பது தான் உண்மை. இந்திய திரை ரசிகர்களை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தனது திறமையினால் ஆட்கொண்டிருக்கும் மஹா கலைஞனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.


தங்கமணி ஆப்பிள் ஐஃபோன் 5 வாங்கி இருக்கிறார். முதல் நாளே ப்ரீ ஆர்டர் செய்து சென்ற வாரம் வந்து சேர்ந்தது. ஃபோன் அட்டகாசமாக இருக்கிறது. என்ன ஆப்பிளின் புதிய OS தான் ஆப்படிக்கிறது. அதிலும் ஆப்பிள் மேப்ஸ் படு மொக்கை. அப்பிள் ஸ்டோரில் இருக்கும் போதே நான் எங்கே இருக்கிறேன் என்பதை சொல்ல மறுக்கிறது. அதே போல எந்த இடத்திற்கும் முழூ விலாசத்தை எதிர் பார்க்கிறது. கூகுள் போல பெயரை வைத்தே விலாசத்தை கண்டுபிடிக்க பாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. பார்ப்போம் அடுத்த வெர்ஷனில் சரி செய்கிறார்களா என்று.


சமீபத்தில் தான் தடையற தாக்க படத்தை பார்த்தேன். அட்டகாசமான க்ரைம் த்ரில்லர். இயக்குனர் மகிழ் திருமேனிக்கு எனது பாராட்டுக்கள். அருண் விஜய் நல்ல ஒரு ரவுண்டு வருவார் என்று நம்புவோம்.

Tuesday, October 02, 2012

நான் கோட்ஸே பேசுகிறேன்


அந்த மேடையில் இருள் சூழ்ந்திருக்கிறது. மேடையின் நடுவில் சிறு ஒளி. அதில் நாதூராம் நின்று கொண்டிருக்கிறார். தனது பார்வையை பார்வையாளர்களின் மீது மேயவிடுகிறார். பின்னர் முகத்தை இட வலமாக ஆட்டுகிறார். ஒரு வித ஏமாற்றம் அவரது கண்களில் தெரிகிறது. பின்னர் அவர் பேச தொடங்குகிறார்.

உங்களில் ஒருவரின் முகம் கூட எனக்கு தெரியவில்லை. இல்லை. தெரியவில்லை என்பது தவறான வார்த்தை பிரயோகம். உங்கள் அனைவரின் முகங்களும் எனக்கு புதிதாக இருக்கின்றன. அந்த சம்பவம் நடந்த பொழுது உங்களில் இளைஞர்கள் யாரும் பிறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் என்னை பற்றி நிச்சயம் படித்திருப்பீர்கள். நான் ஒரு ஹிந்துத்வ வெறியன் என்று உங்களிடம் சொல்லி இருப்பார்கள். இங்கே இருக்கும் நடுத்தர வயதுள்ளோர் என்னை பற்றி வானொலியிலும் செய்தித்தாள்களிலும் அறிந்திருப்பீர்கள். உங்களது வீடுகள் பற்றி எரிந்த பொழுது "இந்த நாதூராம் யார்? இவனால் நமது வீடு ஏன் பற்றி எரிகிறது?" என்று உங்கள் வீட்டின் பெரியவர்களை கேட்டிருப்பீர்கள். ஆனால் இங்கே இருக்கும் முதியவர்களுக்கு நிச்சயம் என்னை பற்றி தெரிந்திருக்கும். உங்களில் ஒரு சிலர் நான் நடத்திய அக்ரானி பத்திரிக்கையை படித்திருப்பீர்கள். எனது கூட்டங்களுக்கு வந்திருப்பீர்கள். எனது சொற்பொழிவினை கேட்டிருப்பீர்கள். ஆனால் என்னை பற்றி தெரியும் என்பதை யாருக்கும் சொல்லி இருக்க மாட்டீர்கள்.

என்ன வியப்பாக இருக்கிறதா? எனது வயது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? 102 வயது எனக்கு. என்ன, நான் இளமையாக இருக்கிறேனா? அதற்கும் காரணம் உண்டு. எனது இளமைக்கு காரணம் எனது மரணம். நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட எனது மரணம்.

ஆம் நான் பிறந்தது 1910 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி. எனது தந்தையின் பெயர் வினாயக் ராவ். தாயார் பெயர் லக்ஷ்மி. அவருக்கு எனக்கு முன்பே மூன்று குழந்தைகள் பிறந்து மூன்றுமே உயிரிழந்து விட்டன. நான் நான்காவது.

நான் உயிருடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டாத கடவுள் இல்லை. அவர்கள் வேண்டுதல் பலித்தது. நான் உயிர் பிழைத்தேன். நான் உயிருடன் இருக்க வேண்டும் என்பது விதி. என்னுடைய 39 ஆம் வயதில் என்னை இழந்து அவர்கள் வாட வேண்டும் என்பதும் விதி. என்னால் காந்தி கொல்லப் பட வேண்டும் என்பதும் விதி.

எனது சிறு வயது அமைதியாகவே இருந்தது. நான் எனது சிறு வயதில் திருடியதில்லை. அதனால் எனது தந்தையிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இருந்தது இல்லை. நான் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட பின்னர் பிரம்மச்சர்யத்தை பின் பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை, ஏனென்றால் நான் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் அகதிகள் முகாமில் ஏழைகளுக்கும் அகதிகளுக்கும் உணவும், உடைகளும் கொடுத்திருக்கிறேன். என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு உடையில்லை என்பதற்காக நான் அரை நிர்வாணமாக அலைந்ததில்லை. எனது ஆடைகளை நானே நூற்றதில்லை. எனது கழிப்பிடத்தை நானே சுத்தம் செய்ததில்லை. இப்படி எனக்கும் காந்திக்கும் ஒற்றுமை ஒன்றும் இல்லை. ஆனால் ஒன்றை தவிர.

நாங்கள் இருவருமே ஒருவர் மரணத்திற்கு மற்றவர் காரணமானோம். அவர் அவரது கொள்கைக்காக வாழ்ந்தார். நான் எனது கொள்கைக்காக இறந்தேன்.

நான் 39 ஆண்டுகள் வாழ்ந்தேன் என்று கூறினேன் அல்லவா. அதில் உண்மை இல்லை. நான் 655 நாட்களே வாழ்ந்தேன். January 30, 1948 இல் இருந்து November 15, 1949 வரை. சரியாக 655 நாட்கள். January 30, 1948 இல் நான் பிறப்பதற்காக வித்து January 13, 1948 அன்று இடப்பட்டது. அந்தக் கதையை கூறுகிறேன் கேளுங்கள்.

நானா:நாதூராம் எங்கே?
விசு:அவர் இங்கு இல்லை.
நானா:தலைப்பு செய்தியை முடித்து விட்டாயா? இல்லையென்றால் அதனை உடனே நிறுத்து. முக்கிய செய்தி ஒன்று வந்துள்ளது.
விசு:அப்படி என்ன முக்கிய செய்தி? இப்பொழுது தலைப்பு செய்தியை மாற்றுவதென்றால் நாளை பத்திரிக்கை வெளிவருவது இயலாத காரியம்.
நானா:நாளை தாமதமாக வெளி வந்தாலும் பாதகம் இல்லை.
விசு:ஆனால்......
நானா:நாதூராம் எங்கே?
நாதூராம்:இங்கே இருக்கிறேன்.
நானா:தலைப்பு செய்தியை மாற்ற வேண்டும்.
நாதூராம்:அவசியம் இல்லை. நானே மாற்றி விட்டேன்.
நானா:மாற்றி விட்டீர்களா? இப்பொழுது தானே செய்தியை வானொலியில் கேட்டேன்.
நாதூராம்:அதை பற்றித்தான் எனது தலைப்பும் இருக்கிறது. (விசுவை பார்த்து) விசு! எங்கள் இருவருக்கும் காபி கொண்டு வா. (விசு செல்கிறார்.)
நானா:நான் எதை பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?
நாதூராம்:தெரியும். பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க மத்திய சர்கார் சம்மதித்து விட்டது. காந்தி தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டுவிட்டார்.
நானா:அதை பற்றி எழுதி இருக்கிறீர்களா? என்ன எழுதி இருக்கிறீர்கள்?
நாதூராம்:ஆம். நாளை சங்கராந்தி. ஜனவரி 14. சங்கராந்தியை கொண்டாடாதீர்கள். இனிப்புகளை சாப்பிடாதீர்கள். இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்காதீர்கள். துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வழங்குங்கள். இது போராட வேண்டிய நேரம். தெருவில் இறங்கி போராடுங்கள். எதிரிகளை கொல்லுங்கள். வெறும் பேச்சு மட்டும் நமக்கு தீர்வு வழங்காது. போராட வேண்டும். நாளை தசராவை கொண்டாடுங்கள். அது உங்களுக்கு போர்குணம் கிட்ட வழிவகுக்கும். சங்கராந்தி வேண்டாம்.
நானா:ஐயா, இதனால் மக்கள் போராட துணிவார்களா?
நாதூராம்:மக்கள் என்பவர்கள் யார்? நமது பத்திரிக்கையை படிப்பவர்களும், நமது கூட்டங்களுக்கு வருபவர்களும் மட்டும் தான் மக்களா? நீயும் நானும் தான் மக்கள். மக்கள் போராட வேண்டும் என்பதன் பொருள் நீயும் நானும் போராட வேண்டும் என்பது மட்டுமே.
நானா:இதனால் நாம் கைது செய்யப் படுவோம்.
நாதூராம்:எனக்கு அப்படி தோன்றவில்லை. ஹிந்துக்கள் கொல்லப்படும் பொழுதும், அவர்கள் வீட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்படும் பொழுதும், ஹிந்து பெண்கள் கற்பழிக்கப்படும் பொழுதும் இந்த அரசாங்கம் வேடிக்கை தான் பார்த்தது. இந்த அரசாங்கத்திற்கு ஹிந்துக்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அப்படி இருக்கும் பொழுது ஹிந்துத்வம் எப்படி பொருட்டாகும்? அரசாங்கம் பொருட்படுத்தாத ஒன்றை பற்றி எழுதுவது அப்படி அவர்கள் கவனத்திற்கு செல்லும்? ஆனால் இதை பற்றியெல்லாம் அரசாங்கத்தின் கவனதிற்கு கொண்டு சேர்ப்பேன். வழக்கு விசாரணை நடக்கும் பொழுது உலகமே திரும்பி பார்க்கும்.
நானா:என்ன வழக்கு?
நாதூராம்:IPC 302, காந்தி கொலை வழக்கு.
நானா:ஐயா!, என்ன சொல்கிறீர்கள்?
நாதூராம்:ஏன் என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?
நானா:என் மீது நான் வைத்திருக்கும் நமிக்கையை விட உங்கள் மீது அதிகம் வைத்திருக்கிறேன். ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை பயனற்றது.
நாதூராம்:காந்தி தடுத்து நிறுத்தப்பட வேண்டியவர். அவரை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரது கொலை.
நானா:அதில் நான் உடன் படுகிறேன். ஆனால் நீங்கள் அவசரப் படுகிறீர்களோ என்று தோன்றுகிறது.
நாதூராம்:காந்தியை போன்ற மாபெரும் தலைவர்களின் கொலை அவசரத்தினால் வருவதில்லை நானா. அவசியத்தினால் வருவது.
நானா:நீங்கள் முடிவு செய்து விட்டீர்களா?
நாதூராம்:ஆமாம். இதை நான் செய்ய தவறினால் நமது இந்திய தேசம் அழித்தொழிக்கப்படும். கேள் நானா!, நான் காந்தி ஒரு சகாப்தம் என்பதை மறுக்கவில்லை. அவர் ஒரு மஹான். அவரது அஹிம்சை கொள்கையை நான் போற்றுகிறேன். ஆனால் அதை அவர் அவருடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதை அவர் மற்றவர் மீது திணிப்பதை நான் வெறுக்கிறேன். தன்னையே அழித்துக் கொண்டு அஹிம்சையை கடை பிடிப்பதும் ஒருவகை ஹிம்சை தான். அதனை மற்றவர் மீது திணிப்பது படு பாதகமான செயல். அதை தான் காந்தி செய்கிறார்.
நானா:ஆனால் அவரை கொல்லத்தான் வேண்டுமா? இதனை பற்றி நாம் விரிவாக எழுதலாமே?
நாதூராம்:இவ்வளவு காலமும் எழுதிக் கொண்டுதானே இருந்தோம். ஏதாவது பலன் கிட்டியதா? இன்னும் கேள், இந்திய தேசப் பிரிவினை தேவை இல்லாதது. மௌலானா ஆசாத் பக்கம் காந்தி நிற்காமல் ஜின்னா பக்கம் நின்றதால் வந்த தீங்கு. எந்த ஒரு தனி மனிதரும் தேசத்தை விட உயர்ந்தவர் இல்லை. ஆனால் காந்தி தன்னை தேசத்தை விட உயர்ந்தவராக கருதத் தொடங்கி விட்டார்.
நானா:ஆனால் ஜின்னா பிரதமராக விரும்பினாரே?
நாதூராம்:அதனால் என்ன? பெரும்பான்மை ஹிந்துக்கள் உள்ள நாட்டில் இஸ்லாமியர் ஒருவர் பிரதமராக முடியாதா? ஜனநாயகத்தில் அது சாத்தியம் தானே. அதற்காக நாட்டை துண்டாடலாமா?
நானா:காந்தி ஒருவர் மட்டும் அதற்கு காரணம் இல்லையே. மத்திய அரசாங்கம் தானே காரணம்.
நாதூராம்:ஆம். ஆனால் மத்திய அரசாங்கத்தை மிரட்டியது காந்தி. உண்ணா விரதம் இருந்தார். தனது அஹிம்சையால் தன்னை ஹிம்சித்துக் கொண்டு மற்றவர்களையும் ஹிம்சிக்கிறார். நல்ல அஹிம்சை கொள்கை. பிரிவினையின் போது சுஹ்ராவார்தியின் தொண்டர்கள் வங்காளத்தில் செய்த நாச வேலைகள் உனக்கு தெரியாதா?

அன்று ஒரு ஏழை ஹிந்து காந்தியிடம் சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. 'மஹாத்மா!, உங்கள் பேச்சை கேட்டு நான் எனது ஆயுதத்தை கீழே போடுகிறேன். ஏனென்றால் நீங்கள் உண்ணா விரதத்தில் மடிவதை நான் விரும்பவில்லை.' என்றான். அன்று இரவு அவன் இல்லத்திற்கு நான் சென்றேன். வீடே அலங்கோலமாக இருந்தது. அவனது எட்டு வயது மகன் இஸ்லாமியர்களால் கொல்லப் பட்டான். அவனது மகனின் சடலத்தை எனது மடியில் வீசி என்னிடம் அவன் சொன்னது, 'உங்கள் மஹாத்மா விடம் இவனது சடலத்தை எடுத்து செல்லுங்கள். இவனது குருதியை குடித்து அவர் தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொள்ளட்டும்' அதை கேட்டு வெறியுடன் நான் காந்தியிடம் திரும்பி வந்தேன். ஆனால் நான் வரும் முன்பே அவர் தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார். ஆனால் அவரிடம் சொல்லியும் பயன் ஒன்றும் இல்லை. அவர் கொலைகாரனுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்வார். வேறு ஒன்றும் செய்ய மாட்டார்.

இப்பொழுது சொல் நானா. எனது முடிவு தவறா?
நானா:உங்களிடம் பேசி ஜெயிக்க முடியாது. தத்யாவிடம் ஒரு வார்த்தை...
நாதூராம்:தேவை இல்லை. அவர் வேண்டாம் என்று சொன்னாலும் நான் இதனை செய்ய முடிவெடுத்துவிட்டேன். எனக்கு நீ இரண்டு வாக்குறுதிகளை தர வேண்டும்.
நானா:தந்து விட்டேன்.
நாதூராம்:அவை என்ன என்று நீ கேட்கவே இல்லையே?
நானா:தேவை இல்லை. உடல் எங்கே செல்கிறது, எதற்காக செல்கிறது என்ற கேள்வி நிழலுக்கு அநாவசியம். அதன் கடமை உடலை தொடர்வது மட்டுமே.
நாதூராம்:நல்லது. ஆனால் இம்முறை நான் மட்டுமே தனித்து இயங்க விரும்புகிறேன். அதாவது உடல் மட்டுமே. நிழல் தேவை இல்லை.
நானா:நீங்கள் என்னை மடக்கி விட்டீர்கள்.
நாதூராம்:நான் கொலை செய்த பிறகு தப்பிக்க போவதில்லை நானா. தூக்கு மேடையை நோக்கி செல்லவே விரும்புகிறேன். ஒரு கொலை ஒரு தூக்கு.
நானா:இரண்டாவது வாக்குறுதி?
நாதூராம்:நான் இரண்டு கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். ஒன்றை நாளைக்கும், மற்றொன்றை காந்தி இறந்த மறுநாளும் நீ பதிப்பிக்க வேண்டும்.
நானா:நல்லது. அப்படியே ஆகட்டும்.

மேடையில் இருள் சூழ்கிறது.

ஒரு தேசத்தின் தந்தை தனது மக்களை எல்லாம் ஒரே முறையில் நடத்த வேண்டும். தனது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால் காந்தி அதை செய்ய தவறி விட்டார். அதனால் இந்த மண்ணின் மைந்தனாக எனது கடமையை செய்ய நான் தயாராகி விட்டேன்.

ஜனவரி 30, மதியம் 12 மணி. பிர்லா பவன். காந்தி வெளியில் கட்டிலில் அமர்ந்து இருக்கிறார். அவரது அருகில் கீழே சர்தார் வல்லபாய் பட்டேலின் பேத்தி அமர்ந்து இருக்கிறார். என்னிடம் அப்பொழுது துப்பாக்கி இருந்தது. அக்கம் பக்கம் யாரும் இல்லை. அப்பொழுது என்னால் அவரை எளிதாக சுட்டுக் கொன்றிருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்வதை விரும்பவில்லை. தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பலரது மத்தியில் காந்தி கொல்லப்படவே நான் விரும்பினேன். மாலை வழிபாட்டுக் கூட்டம் நடக்கும் பொழுது அவரை கொல்வதுதான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.

ஜனவரி 30, மாலை 4:45 மணி. பிர்லா பவன். வாசலை கடந்து உள்ள செல்ல முயன்றேன். பாதுகாவலுக்கு இருந்த காவலன் அனைவரையும் பரிசோதித்துக் கொண்டிருந்தான். எனக்கு சிறிது கவலை வந்தது. அப்பொழுது பெரிய கூட்டம் ஒன்று வாசலை கடந்து உள்ளே சென்றது. அவர்களுடன் நானும் உள்ளே சென்றேன். காந்தியின் வரவுக்காக காத்திருந்தேன்.

ஜனவரி 30, மாலை 5 மணி. பிர்லா பவன். போலீஸ் அதிகாரி அர்ஜுன் தாஸ் காந்தியை பார்க்க வருகிறார்.

அர்ஜுன்:நான் ஒரு முக்கியமான காரியதிற்காக பாபுஜியை பார்க்க வேண்டும்.
மஹதேவ்:இப்பொழுது யாரும் அவரை பார்க்க முடியாது. மாலை வழிபட்டு நேரம் நெருங்குகிறது.
அர்ஜுன்:எனக்கு தெரியும். ஆனால் இது மிகவும் முக்கியம்.
காந்தி:மஹதேவ்! யார் அது?
மஹதேவ்:யாரோ உங்களை பார்க்க வந்திருக்கிறார்.
காந்தி:யார் நீ?
அர்ஜுன்:DCP அர்ஜுன் தாஸ், பாபுஜி.
காந்தி:உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன்.... ஆம் ஜவஹருடன் ஹைதராபாத் வந்திருந்தாய் அல்லவா?
அர்ஜுன்:ஆம் பாபுஜி. உங்கள் நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது. அப்பொழுது உங்கள் உடல் நிலை சரியில்லை.
காந்தி:உடலுக்கும் மனதிற்கும் சம்பந்தம் இல்லை அர்ஜுன். இப்பொழுது இங்கே எதற்கு வந்தாய்? வழிபாட்டுக்கா?
அர்ஜுன்:ஆம் பாபுஜி. உங்களுடன் வழிபாட்டுக்கு வர விரும்புகிறேன்.
காந்தி:தாராளமாக வரலாம். ஆனால் இந்த உடையில் இல்லை. துப்பாக்கியுடன் இல்லை.
அர்ஜுன்:ஆனால் பாபுஜி, உங்கள் பாதுகாப்பு....
காந்தி:யாராவது என்னை கொல்ல வந்தால் நீ அவர்களை கொன்று விடுவாயா? அதுவும் வழிபாடு நடக்கும் நேரத்தில்.
அர்ஜுன்:அப்படி ஏதேனும் நடந்து விட்டால்?
காந்தி:நடக்கட்டுமே. எனது நாட்டு மக்கள் என்னை கொல்ல விரும்பினால் கொன்று விட்டு போகட்டுமே. நீ யார் அதை தடுப்பதற்கு?
அர்ஜுன்:ஆனால் என்னை பிரதமர் அனுப்பி இருக்கிறார். நான் அவரது பாதுகாவலன்.
காந்தி:அப்படியென்றால் அங்கே போ. இங்கே உனக்கு வேலை இல்லை.
அர்ஜுன்:பிரதமரும் பட்டேலும் உங்கள் பாதுகாப்பு மீது மிகுந்த கவலை கொண்டுள்ளனர். 10 நாட்களுக்கு முன்பு கூட உங்களை கொல்ல இங்கே குண்டு வைத்தனர். உளவுத்துறையும் உங்களை பாதுகாக்க சொல்லி இருக்கிறார்கள்.
காந்தி:இதற்கெல்லாம் நான் பயப்படுவேன் என்று நினைக்கிறாயா?
அர்ஜுன்:பாபுஜி, உங்களுக்கு நான் எப்படி புரியவைப்பது? இங்கே உள்ள கூட்டத்தினை பார்த்தீர்களா? அதில் உள்ள ஒருவன் கொலை காரனாக இருக்கலாம். வழிபாட்டுக்கு வரும் எல்லோரும் பக்தர்கள் கிடையாது.
காந்தி:கொலைகாரர்கள் வழிபாட்டுக்கு வர மாட்டார்கள். இங்குள்ள அனைவரும் பக்தர்களே.
அர்ஜுன்:10 நாட்களுக்கு முன்பு இங்கே குண்டு வைத்தவர்களும் பக்தர்களா? அவர்கள் ஹிந்து மஹாசபையை சேர்ந்தவர்கள்.
காந்தி:ஹிந்து மஹாசபைக்கும் முஸ்லீம் லீகுக்கும் என்னை பொருத்தவரை வேறுபாடு கிடையாது. எனக்கு இருவரும் இரண்டு கண்கள். நான் உண்ணா விரதத்தை மேற்கொண்ட போது என் மீது கொண்ட அன்பினால் இருவருமே ஆயுதங்களை கீழே போட்டார்கள்.
அர்ஜுன்:ஆனால் துப்பாக்கியின் குண்டுகளுக்கு அது தெரியுமா?
காந்தி:துப்பாக்கியை இயக்குபவனுக்கு தெரியும்.
அர்ஜுன்:உங்களுக்கு இதில் உள்ள ஆபத்து தெரியவில்லை. பிரிவினைக்கு நீங்கள் தான் காரணம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் இஸ்லாமியர்களின் பக்கம் நிற்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். உங்களை கொல்ல முயல்கிறார்கள்.
காந்தி:என்ன கூறுகிறாய்? எனது உயிருக்கு பயந்து வழிபாட்டை முடித்துக் கொள்ள சொல்கிறாயா? கஸ்தூரி பாய் இறந்த பொழுது வழிபாட்டை முடித்துக் கொண்டே அவளது இறப்புக்கு அழுதேன். இப்பொழுது எனது உயிர் என்பதால் வழிபாடு நிறுத்தப்படலாமா?
அர்ஜுன்:ஆனால் உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம். அதனை பாதுகாப்பது எங்கள் கடமை. கொலைகாரன்....
காந்தி:யார் கொலைகாரன்? சரி வந்திருப்பவர்களில் ஒருவன் கொலைகாரன் என்றே வைத்துக் கொள். மற்றவர்கள் எல்லோரும்? ஒரு கொலைகாரனுக்காக மற்ற அனைவரையும் காக்க வைக்கலாமா?
அர்ஜுன்:ஆனால் பாபுஜி....
காந்தி:கேள் அர்ஜுன், ஜவஹர் ஒரு குழந்தை. நீயும் கூட. உனக்கு உன்னிடம் உள்ள துப்பாக்கியில் நம்பிக்கை இருக்கிறது. அந்த கொலைகாரனுக்கு அவனது துப்பாக்கியில். ஆனால் எனக்கு இருக்கும் நம்பிக்கை அஹிம்சையில். துப்பாக்கியில் நம்பிக்கை எனக்கு கிடையாது. நான் தென் ஆப்ரிக்காவில் இருந்த போது என்னிடம் துப்பாக்கி இல்லை. நீயும் ஜவஹரும் என்னுடன் இல்லை. என்னிடம் இருந்தது நம்பிக்கையும் அஹிம்சையும் தான். என்னிடம் இருந்த அந்த ஆயுதங்களால் நான் வெற்றி அடைந்தேன். எனக்கு ராமும், ரஹீமும், கிருஷ்ணனும், கரீமும் ஒன்றுதான். ஹிந்துவாக பிறந்ததற்காக நான் பெருமை படவில்லை. இஸ்லாமியனாக இல்லாததற்காக நான் வருத்தப் படவில்லை. இதுவரையில் நான் எனது மனசாட்சிக்கு விரோதமாக எதுவும் செய்ததில்லை. இனியும் செய்ய போவதில்லை. என்னை கொல்ல அங்கே கொலைகாரன் காத்திருந்தால், வரட்டும், வந்து என்னை கொல்லட்டும். அவனால் காந்தியை தான் கொல்ல முடியும். காந்தியிஸத்தை அல்ல. நீ என்னுடன் வருவதாக இருந்தால் துப்பாக்கியை இங்கேயே வைத்து விட்டு வா.

ஜனவரி 30, மாலை 5:10 மணி.

காந்தி அவரது அறையிலிருந்து வெளியே வந்தார். அவரை பிடித்துக் கொண்டு இரண்டு பெண்கள் அவருடன் வந்தார்கள். அனது பையில் துப்பாக்கி வெடிக்க தயாராக இருந்தது. காந்தி என் அருகே வந்தார். அவரை சுற்றி பலர் இருந்தனர். எனக்கும் காந்திக்கும் இடையில் ஒருவரும் இல்லாத நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். அவரை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன். முதலில் இந்த நாட்டுக்கு அவர் செய்த சேவைகளுக்காக அவரை தலை தாழ்த்தி வணங்கினேன். அவரை நோக்கி இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தேன். அவரது அருகில் இருந்த பெண்ணை எனது ஒரு கையினால் தள்ளினேன். பின்னர் எனக்கு ஒரு நொடி தான் தேவை பட்டது. எனது துப்பாக்கியை இயக்கினேன். காந்தி மிகவும் பலவீனமாக இருந்தார். 'ஆ' என்ற லேசான சத்தத்துடன் அவரது உயிர் அவரை விட்டு பிரிந்தது. அடுத்த முப்பது நொடிகளுக்கு யாருமே என் அருகில் வரவில்லை. அருகில் இருந்த போலீஸ் ஒருவரிடம் என்னை கைது செய்யும்படி தலையாட்டினேன். அவன் வந்து எனது கையை பிடித்துக் கொண்டான். இந்திய நாட்டுக்காக எனது கடமையை செய்த கர்வத்துடன் அவனுடன் நடந்து சென்றேன்.

எங்கும் இருள் சூழ்கிறது.

"Friends and comrades, the light has gone out of our lives, and there is darkness everywhere, and I do not quite know what to tell you or how to say it. Our beloved leader, Bapu as we called him, the father of the nation, is no more. Perhaps I am wrong to say that; nevertheless, we will not see him again, as we have seen him for these many years, we will not run to him for advice or seek solace from him, and that is a terrible blow, not only for me, but for millions and millions in this country" - Jawaharlal Nehru

ப்ரதீப் தால்வி எழுதிய மே நாதுராம் கோட்ஸே போல்தா ஹூன் என்ற மராத்தி நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.

Friday, September 14, 2012

காலம் மாறி போச்சு

NFS, Need for Speed என்ற இந்த விளையாட்டு என்னால் மறக்க முடியாதது. கல்லூரி காலங்களில் எங்களது நண்பர்கள் அனைவரும் வெறித்தனமாக விளையாடுவோம். இதை ஒரு சாதாரண ரேஸிங் விளையாட்டு என்று கருத முடியாத அளவுக்கு அவ்வளவு மெஸ்மரைஸிங்காக இருக்கும்.

இதில் டோர்னமென்ட் உண்டு. 14 கார்கள் பங்கெடுக்கும் இதில் 13 சுற்றுக்கள். ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வரும் கார் அடுத்த சுற்றுக்கு தேர்ச்சி பெறாது. தொடர்ந்து விளையாடி நீங்கள் அதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு பரிசாக ஃபெர்ராரியின் FZR 2000 என்ற கார் கிடைக்கும். மணிக்கு சுமார் 200 மைல் வேகத்தில் செல்லக் கூடிய கார் அது. அது தான் மிகவும் வேகமாக செல்லக் கூடிய கார்.


அது இல்லாமல் மெக்லாரன், ஜாகுவார், BMW போன்ற கார்களும் உண்டு. சாதாரண ரேஸில் கலந்து கொள்ள உங்கள் காரினை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். ஆனால் டோர்னமென்டில் அப்படி முடியாது. உங்களின் திறமையை வைத்து ஸிஸ்டமே உங்களது காரினை தேர்ந்தெடுக்கும். அதனால் வெளியில் இருந்து பார்ப்பதற்கு டோர்னமென்டில் ஜெயிக்க ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வராமல் இருந்தாலே போதும் என்பது போல தோற்றம் இருக்கும். ஆனால் அப்படி நீங்கள் வந்தால் உங்களுக்கு டொச்சு கார்களே கிடைக்கும். முதல் இரண்டு மூன்று சுற்றில் வேண்டுமானால் நீங்கள் டொச்சு கார்களை வைத்துக் கொண்டு ஜெயிக்கலாம். ஆனால் போகப் போக நல்ல கார்கள் கிடைத்தால் மட்டுமே உங்களால் அதில் ஜெயிக்க முடியும்.

நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் FZR 2000 உங்களிடம் இருப்பது உங்களுக்கான ஸ்டேட்டஸ் ஸிம்பல். தம், தண்ணி, பெண்களை போலவே இவ்வகை விளையாட்டுகளும் ஒரு வித போதை. போதை தலைகேறி வார இறுதிகளில் 10 - 12 மணி நேரங்கள் எல்லாம் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறோம். இப்பொழுது நினைத்து பார்த்தால் எங்களுக்கே சிரிப்பாக இருக்கிறது.

FZR கிடைக்காத கால கட்டத்தில் டோர்னமென்டில் விளையாடி கிட்டத்தட்ட 11 சுற்றுக்கள் வந்து பின்னர் கோட்டை வீட்டு சோகம் தாங்காமல் டைனாஸிட்டி பாருக்கு சென்று வயிறு முட்டக் குடித்த நாட்கள் பல. FZR கிடைத்த பின்னர் சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக அதே பாருக்கு சென்று வாந்தியெடுத்த நாட்களும் பல.

ஐந்தாவது செமஸ்டரில் கண்ட்ரோல் ஸிஸ்டம்ஸ் பரீட்சை எழுதிய பிறகு அவசர அவசரமாக வெளியில் வந்து எனது நண்பன் சதீஷ் என்னிடம் FZR கிடைத்து விட்டதாக சொல்லி குதிக்க அதே நேரத்தில் அங்கு வந்த பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அதை பார்த்துவிட்டு நாங்கள் இருவரும் உருப்படவே மாட்டோம் என்று சாபம் கொடுத்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

ஒரு முறை சரவணன் இறுதி சுற்றுக்கு வந்துவிட்டு ஏதோ வேலையாக வெளியில் செல்ல அந்த நேரத்தில் உள்ளே வந்த யுவா கடைசி சுற்றை விளையாடி தோற்றுவிட்டு யாருக்கும் சொல்லாமல் அமைதியாக நின்று சரவணனை ஒரு வார காலம் புலம்ப வைத்த நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

சென்ற வார இறுதியில் வீட்டுக்கு வந்த அபிஷேக் கம்ப்யூட்டரில் NFS விளையாடிக் கொண்டிருந்தான். அது சட்டென்று எனது கல்லூரி கால NFS நினைவுகளை தட்டி எழுப்பியது. புதிய NFS பல புதிய க்ராபிக்ஸ்களை கொண்டுள்ளது. பல புதிய வேகமான கார்கள் இருக்கின்றன. அவனுக்கு எனது நினைவுகள் சிலவற்றை கூறி நானும் விளையாடிப் பார்த்தேன். மனம் ஒத்துழைத்த அளவுக்கு கண்ணும், விரல்களும் ஒத்துழைக்க வில்லை. வண்டி சாலையின் இரு பக்கங்களிலும் இடித்துக் கொண்டே சென்றது.

அவனிடம் மீண்டும் விளையாட கீ போர்டை கொடுத்துவிட்டு அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேர விளையாட்டுக்கு பின்னர் ஜெயித்துவிட்டு குதித்தான். என் மனக் கண் முன்னே அவன் எனது பிம்பமாக தெரிந்தான். 12 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு கிடைத்த அதே விதமான மகிழ்ச்சிதான் என்ற பொழுதும் அன்று எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள என்னுடன் ஃப்ரெடி, கமலி, குமார், சதீஷ், யுவா, சரவணன், ஆனந்த் போன்ற பலர் இருந்தனர். இன்று இவனுக்கு அருகில் நான் மட்டுமே. அதுவும் சக தோழனாக அல்ல, ஒரு பார்வையாளனாக.

இன்று அபிஷேக் போன்ற குழந்தைகளிடம் இருக்கும் ஐபேட், ஐஃபோன், வீ, ப்ளே ஸ்டேஷன், டீஎஸ் போன்றவற்றை பார்க்கும் பொழுது எனக்கு வரும் பெருமூச்சு பொறாமையினால் அல்ல, பரிதாபத்தினால். We are blessed.

Wednesday, August 29, 2012

பொடிமாஸ் - 08/29/2012

பதிவர் சந்திப்பு நன்றாக நடந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது. இனி வரும் காலங்களின் இது மாதிரியான சர்ச்சைகள் ஏற்படாமல் பதிவர் சந்திப்புகள் நடக்கும் என்று நம்புவோம். இந்த சந்திப்பினை மிகவும் நன்றாக நடத்தி முடித்த பதிவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.


சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. கொலராடோவில் தொடங்கியது, விஸ்கான்ஸின் சீக்கிய படுகொலை, நியூயார்க் எம்பயர் ஸ்டேட் பில்டிங் படுகொலை, பால்டிமோர் துப்பாக்கி சூடு என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புவோம். ஆனால் இவை அனைத்திலுமே காவல் துறையினர் தங்கள் உயிரை பெரிதாக நினைக்காமல் போராடி துப்பாக்கி சூடி நடத்தியவர்களை கொன்றிருக்கிறார்கள் இல்லை உயிருடன் பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.


அமெரிக்காவில் பிரபலமான சிபோட்லே மெக்ஸிகன் உணவகத்தில் பில்லை ரவுண்ட் ஆஃப் செய்யும் பொழுது அதிக தொகைக்கு செய்கிறார்கள் என்று புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது நீங்கள் செலுத்த வேண்டிய தொகை $9.24 என்றால் உங்கள் பில் $9.25 என்று காட்டும். இதை பலரும் ஆட்சேபிக்கிறார்கள். நம்ம கேபிள் சங்கர் உணவகத்தில் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக சண்டையிடும் பொழுது அவரை பற்றி கேவலமாக பதிவுகளில் திட்டியவர்கள் இனி அமெரிக்கர்களும் அதனை செய்வதால் இதை ஒரு ஸ்டேட்டஸ் ஸிம்பலாக கருத தொடங்குவார்களோ? எனது நிலை இதில் இது தான், "நமது காசு, ஒரு பைசாவோ கோடி ரூபாயோ, நாமாக விரும்பி கொடுக்காமல் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ அவர்களாகவே எடுத்தால் அது திருட்டு தான்."


சமீபத்தில் நான் அதிகம் கேட்பது முகமூடி படத்தின் "வாய மூடி சும்மா இருடா" பாடல் தான். மதன் கார்க்கி யின் வரிகள் ஆலாப் ராஜுவின் குரலில் காதில் தேனாக பாய்கிறது.

கீழே உள்ள வரிகள் ஒரு உதாரணம்.

கன்னம் சுருங்கிட நீயும்;
மீசை நரைத்திட நானும்;
வாழ்வின் கரைகளைக் காணும்;
காலம் அருகினில் தானோ?
கண் மூடிடும் அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

நாளை மறுநாள் இங்கே படம் வெளியாகிறது. வார இறுதியில் கட்டாயம் பார்த்து விடுவேன். படம் மொக்கையாக இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும்.


டான்ஸ் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டதற்காக தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானில் 17 பேரின் தலையை வெட்டி கொன்றிருக்கிறார்கள். டான்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்வது இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானதாம். அதனால் இஸ்லாமிய முறையில் தண்டனை அளித்திருக்கிறார்களாம்.

இம்மாதிரியான நடவடிக்கைகள் தான் சராசரி மனிதர்களை இஸ்லாத்தின் மீது வெறுப்படைய செய்கிறது. இணையத்தில் மார்கத்தை பரப்பும் தோழர்கள் இதை பற்றியெல்லாம் ஒன்றும் பேசியதாக தெரியவில்லை. Choosing to ignore problems is rarely a good way to solve them. தயவுசெய்து இதை பற்றியெல்லாம் பேசுங்கள். அதை செய்வதை விட்டு விட்டு "சினிமாவில் இஸ்லாமியர்களை தவறாக காட்டுகிறார்கள்; இணையத்தில் எங்களை ஒதுக்குகிறார்கள்;" என்றெல்லாம் கூறுவது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.


சென்ற வாரம் வீட்டில் ஸ்மார்ட் ஹோம் ஸிஸ்டம் இன்ஸ்டால் செய்தோம். இனி கைதொலைபேசியின் உதவி கொண்டு வீட்டில் உள்ள ஹீட்டர் மற்றும் ஏசி ஆகியவற்றை கட்டுப் படுத்த முடியும். வீட்டில் உள்ள வீடியோ கேமராவில் படமாவதை பார்த்துக் கொள்ள முடியும். விட்டின் தாழ்பாளை கை தொலை பேசியினை கொண்டு திறக்க/மூட முடியும். வீட்டில் உள்ள விளக்குகளை கட்டுப் படுத்த முடியும். வீட்டில் உள்ள ஸ்மோக், ஃப்ளட் மற்றும் பர்க்ளர் அலார்ம்களை கட்டுப் படுத்த முடியும். டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்.


இங்கிலாந்து அணிக்கு ஆப்படித்து சென்ற வாரம் தென் ஆப்ரிக்கா அணி டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்திற்கு சென்றுவிட்டது. T20 போட்டிகளின் வரிசையில் அது முன்னரே முதல் இடத்தில் தான் இருந்தது. நேற்று நடை பெற்ற ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தை மீண்டும் வெற்றி கொண்டு ஒரு நாள் போட்டிகளின் தர வரிசையிலும் முதல் இடத்திற்கு சென்று விட்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று தர வரிசையிலும் முதல் இடத்தை பெற்ற அணி என்ற பெருமையை தென் ஆப்ரிக்கா அணி பெற்று விட்டது. அவர்களின் மகுடத்தில் உலக கோப்பை வெற்றி மட்டும் தான் இல்லை. அடுத்த முறை அதையும் வெல்வார்கள் என்று நம்புவோம். வாழ்த்துக்கள் ஸ்மித் மற்றும் டீ வில்லர்ஸ்.



இந்தியா நியூஸியை வென்றதை வைத்து எல்லாரும் இந்திய அணியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். இப்பொழுது தான் தொடர்ந்து எட்டு டெஸ்ட் போட்டிகளின் தோற்றுவிட்டு வந்தோம். அது மறந்து விட்டது என்று நினைக்கிறேன். நியூஸி அணி ஒரு புள்ள பூச்சி. அதை அடித்துவிட்டு "நானும் ரவுடி தான்" என்று கூவுவது கேவலமாக இருக்கிறது. பார்ப்போம் இங்கிலாந்துக்கு எதிராக என்ன நடக்கிறது என்று.


நண்பர்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த திருநாள் உங்களுக்கு மன மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் கொடுக்கட்டும்.

Wednesday, August 22, 2012

விகடன் வலையோசையில் என் பதிவு

நண்பர்களே,

ஆனந்த விகடன் - என் விகடனின் திருச்சி பதிப்பில் என்னை பற்றிய ஒரு சிறு குறிப்புடன் எனது பதிவுகள் மூன்றை தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

பதிவெழுதத் தொடங்கி ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தமிழகத்தின் முதன்மை வார இதழ் ஒன்றில் எனது படைப்புகளை பார்ப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.



இந்த அங்கீகாரம் இப்படியே நின்று விடாமல் படிப்படியாக பத்திரிக்கை, சினிமா, அரசியல், MLA, MP என்று உயர்ந்து எனது வாழ்வை சுபிட்சமாக்கி மக்கள் தொண்டு செய்ய உங்கள் வாழ்த்துக்களை வேண்டி விடை பெறுகிறேன்.

நன்றி,
வணக்கம்.

Sunday, August 12, 2012

கொஞ்சம் சிரிங்க




Tuesday, August 07, 2012

செருப்பால் அடிக்கப்பட்ட தருணங்கள்

வாழ்க்கையில் சில நேரங்களில் சில விஷயங்களை ஏன் செய்தோம்?, எதற்காக செய்தோம்? என்று பின்னர் யோசிப்போம் இல்லையா? அப்படி ஒரு செயலை தான் நேற்று நான் செய்தேன்.

நேற்று எனது மகனை கடுமையாக திட்டி விட்டேன். பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை. அவன் சரியாக சாப்பிடவில்லை. இந்த "சரியாக சாப்பிடவில்லை" என்பதே ஒரு ரிலேடிவ் டெர்ம் தான். அவன் சிறு வயதில் இருந்தே சாப்பாட்டு விஷயத்தில் சிறிது மந்தம் தான். அன்டர் வெயிட் குழந்தை.

இரண்டு வயதாகியும், ஆறு மாத உடைகள் இன்னும் பத்துகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாடும் சாப்பிடுவதில்லை, பாலும் குடிப்பதில்லை, இப்படி இருந்தால் ஒரு தகப்பனின் மன நிலை எப்படி இருக்கும். எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாத மாதிரியான நிலை.

இந்நிலையில் நேற்று அவன் சாப்பிடும் துளி சப்பாட்டை கூட சாப்பிடாமல் ஒரே அடம். ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி கோபத்தின் உச்சியில் அவனை கடுமையாக திட்டி விட்டேன். அலுவல் டென்ஷனும் உடன் சேர்ந்து கொண்டது. கோபத்தில் திட்டுகிறேன் என்பது அவனுக்கு தெரிகிறது. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. அவனது அழுகை அதிகமானது.

சாப்பாடு கொடுப்பதை நிறுத்திய உடன் அழுகை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. சிரித்துக் கொண்டே என் அருகில் வந்து என்னை கட்டிப் பிடித்துக் கொள்கிறான். எவ்வளவு திட்டினாலும் உடனே அதை மறந்து அருகில் வந்து என்னை கொஞ்சுவது மாண்டியும் இவனும் தான். அந்த வரையில் நான் அதிர்ஷ்டசாலியே. இந்த உறவுகள் கூட இல்லாமல் எவ்வளவோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் பல நேரங்களில் இம்மாதிரியான மன நிலை பெரியவர்களுக்கு இருந்தால் வாழ்க்கை எவ்வளவு இன்பமயமாக இருக்கும் என்று நினைத்து பார்ப்பதுண்டு.

அடுத்த மாதத்தில் இருந்து இங்கே இருக்கும் ஒரு டே கேருக்கு போகப் போகிறான். இங்கே குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி எல்லாம் விட மாட்டார்கள். குழந்தைகளே எடுத்து சாப்பிட்டால் தான் உண்டு. இனி இவனது நிலை கொலை பட்டினி தான். ஆனால் டே கேரில் உள்ளவர்களோ மற்ற குழந்தைகளை பார்த்து எளிதாக தானே சாப்பிட கற்றுக் கொண்டு விடுவான் கவலை இல்லை என்கிறார்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதுவரை வாழ்க்கையை பற்றிய பயம் எனக்கு இருந்ததே இல்லை. திருமணத்தை கூட எந்த வித நெர்வெஸ்னஸும் இல்லாமல் எடுத்துக் கொண்டேன். முதல் நாள் பள்ளி, முதல் நாள் கல்லூரி, முதல் நாள் வேலை என்று எதுவும் எனக்கு பெரிதாக நினைவில்லை. ஆனால் எனது மகனின் முதல் நாள் டே கேர் எனக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. மனதிற்குள் சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகம்.

இப்பொழுது வாழ்க்கையை பற்றி முதல் முறையாக பயப்படுகிறேன். ஒரு தகப்பனாக நான் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, என் தந்தையிடம் நான் மிகவும் நேசித்தது, அவரிடம் எனக்கு பிடிக்காதது என்று மனது பெரிய பட்டியலே போடுகிறது. நட்பு வட்டத்தில் தந்தையிடம் மிகவும் பாசத்துடன் இருக்கும் குழந்தைகளை பார்க்கும் பொழுது அவர்களது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கிறேன். அவர்களை போலவே நடந்து கொள்ள முயல்கிறேன். தம்மையும் தண்ணியையும் விட்டு விடலாம் என்று யோசிக்கிறேன்.

"Let's cross the bridge when we get there" என்ற மன நிலையிலேயே இவ்வளவு நாட்கள் இருந்து விட்ட பிறகு அதிலிருந்து சட்டென்று விலகுவது சிறிது கஷ்டமாக இருக்கிறது. எனக்குள் நானே அல்லாமல் ஒரு புதிய நான் வந்து விட்டதை போல உணர்கிறேன்.

எதையோ எழுத நினைத்து எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் ஒரு சம்பந்தம் கூட இல்லாமல் பதிவு பெரிதாகிக் கொண்டே வருகிறது. வேறு ஒன்றும் எழுதுவதற்கு இல்லை என்பதால் என்னை போன்றே இரண்டுங்கெட்டான் மன நிலையில் இருந்த, இருந்து கொண்டிருக்கும் தகப்பன்களுக்கு இந்த பதிவினை சமர்பித்து இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன். நன்றி.

Friday, August 03, 2012

கோவா புகைப்படங்கள்

Goa (Varca Beach)

Goa (varca Beach)

Goa (varca Beach)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)