Friday, July 28, 2006

பார்பன வந்தேறிகளும்; இஸ்லாமிய தீவிரவாதமும்விடாது கருப்பு அவர்களின் "இஸ்லாமும் தீவிரவாதமும்" என்ற பதிவிற்கு வந்த பாராட்டு பின்னூட்டங்களை பார்த்தே, இந்த பதிவை நான் எழுதுகிறேன். கருப்பு அவர்கள் நடு நிலையாளர் என்றும், துணிச்சல் மிக்கவர் என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர். பாராட்டியவர்களில் ஒரு சிலர் பிராமணர்கள். அதுதான் என்னை இது எழுத தூண்டியது. அதாவது இவர்களின் கூற்றுப்படி பிராமணனை பாப்பான் என்று சொல்பவர், இஸ்லாமியனை துலுக்கன் என்று சொன்னால் அவர் நடு நிலையாளர். என்னய்யா நியாயம் இது?

பிராமணர்களை பாப்பான் என்றும், வந்தேறிகள் என்றும் குறிப்பிட்டது அவர்களுக்கு எத்துனை வேதனை அளித்திருக்குமோ அதே போன்ற வேதனை தானே இதை படிக்கும் ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் ஏற்படும்?உலக மக்கள் தொகையில் இருபத்தி மூன்றரை சதவிகிதம்** இருக்கும் இஸ்லாமியர்களில் ஒரு சிலர் தீவிரவாதத்திற்கு துணை சென்றதால் அனைவரையும் தீவிரவாதி என்று பட்டம் கட்டுவது எந்த வகையில் நியாயம்?

பிராமணர்களை ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்கள் என்றும், தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும், தமிழை வெறுப்பவர்கள் என்றும் கருப்பு கூறுவதற்கு மாற்றாக பாரதி முதல் வாஞ்சிநாதன் வரை ("ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று கூறியவனை ஒரு பிராமணனாக அடையாளம் காட்ட எனக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆனாலும் வேறு வழி இல்லை ஆதலால் குறிப்பிடுகிறேன்!) எத்தனை பிராமணர்களை அடையாளம் காட்ட முடியுமோ, அதே போன்று இஸ்லாமியர்களை தீவிரவாதத்திற்கு துணை போகிறவர்கள் என்ற அவரது கருத்திற்கும் மாற்றாக காயிதே மில்லத் முதல் அப்துல் கலாம் வரை நம் நாட்டுக்காகவும் நம் நாட்டு மக்களுக்காகவும் பாடுபட்ட எத்தனையோ இஸ்லாமியர்களையும் அடையாளம் காட்ட முடியும்.


பிராமணர்களையாவது அவர் வந்தேறிகள் என்று தான் குறிப்பிட்டார். ஆனால் இஸ்லாமியர்களையோ, தீவிரவாதத்திற்கு துணை போகிறவர்கள் என்றார். அதுவும் எத்தகைய சூழ்நிலையில்? உலகமே தீவிரவாத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில். இது எத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டு! இவரைப் போன்றவர்களின் கருத்துக்களால், இன்று உலகமே இஸ்லாத்தை ஏதோ அறுவருக்கத்தக்க ஒரு சித்தாந்தமாக நோக்குகின்றது.

மேலும் கருப்பு அவர்கள் தொடர்வது என்னவென்றால், "இஸ்லாமின் மீதுள்ள தீவிரவாதம் என்ற சொல் அழிக்கப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் ஐந்துவேளைக் கடமையுடன் ஆறாவதாக தங்களையும், இஸ்லாமையும் அசிங்கப்படுத்தும் தீவிரவாதிகளை பிடித்துக் கொடுப்பதை ஆறாவது கடமையாக செய்யவேண்டும்." இது மிகவும் சரி. ஆனாலும் இந்த கடமை இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல, ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த கடமை உண்டு.

"இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்." என்று திரு.ப.ஜீவானந்தம் அவர்கள் குறிப்பிட்டதையே இப்பொழுது நானும் குறிப்பிடுகிறேன் [நன்றி : தங்களது ஒரு பழைய பதிவில் பின்னூட்டம் இட்ட ஒரு அனானி]. இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்கள் அல்ல என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒரு சமுதாயத்தையே குற்றம் சாட்டுவது பல ஆண்டுகளாகவே நடந்து வரும் ஒரு விஷயம் தான். அதற்கு சரித்திரத்தின் உதவி கொண்டு நாம் சிறிது பின்னோக்கி சென்றோமானால்,


1. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமது வாழ்க்கை முறையாக மனு தர்மத்தை ஏற்றுக்கொண்ட பிராமணர்கள் இன்றும் ஜாதி வெறியர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள்.


2. ஹிட்லர் என்ற ஒரு ஃபாஸிஸ வெறியன் அரை நூற்றாண்டுக்கு முன்னர் செய்த செயலுக்காக இன்றும் ஜெர்மானியர் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.


3. ஜீவகாருண்யத்தை தங்களது வாழ்வியல் முறையாக கொண்ட புத்த பிக்குகள் கால் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் செய்த தவறுகளால் இன்றும் தவறாக பார்க்கப் படுகிறார்கள்.


இத்தகைய நிலை இஸ்லாமியர்களுக்கு அதி விரைவில் வரக்கூடும். நமக்கு பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் வரும் தலைமுறைகள் அவர்களை ஒரு கொடுங்கோளர்களாக பார்க்கக் கூடும். நாம் தூவிய இந்த விதை வளர்ந்து ஒரு விழ விருட்சமாக மாறப்போவதை அறியாமல் நாம் தொடர்ந்து விதைகளை தூவிக் கொண்டே இருக்கிறோம்.

** 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 6313.78 மில்லியன். அதில் இஸ்லாமியர்கள் 1565.28 மில்லியன்.

Tuesday, July 25, 2006

அழகு


பால காண்டம் --> மிதிலைக் காட்சிப் படலம் --> கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேர் எழில்

பாடல் 23

பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள்.

பொருள்:
பொன்னின் ஒளியும், மலர்களின் நறுமனமும் சேர்ந்து பொலிவதை போன்றும்; தேனீக்கள் விரும்பி உண்ணும் தேன் போன்றும்; அழகான சொற்களால் ஆன கவிதையின் இனிமை போன்றும்; களிப்பு மிகுந்த பெண் அன்னங்களுடன் அரச அன்னம் அமர்ந்து இருப்பதை போன்றும்; கன்னி மாடத்தின் மீது சீதை தன் தோழியருடன் அமர்ந்திருந்தாள்.

பாடல் 28

அனையாள் மேனி கண்டபின், அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேற் கண்
இனையோர், உள்ளத்து இன்னலினோர்; தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே?

பொருள்:
சீதையின் திருமேனி கண்டபின் தேவலோகத்தில் அரசு புரியும் தேவர்கள் வியந்து போற்றும் மேனகையின் வேல் போன்ற விழிகள் இவளின் அழகுக்கு நாம் ஈடாக மாட்டோம் என்ற வருத்தத்தை காட்டும். அவளது முகமோ பகற்பொழுதில் மங்கி காணப்படும் நிலவைப் போன்று ஒளிகுன்றி காணப்படும்.

ஆரணிய காண்டம் --> சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் --> சீதையின் அழகை சூர்ப்பணகை விரித்துரைத்தல்

பாடல் 74

வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!பொருள்:
சீதை, வில் போன்ற வளைந்த நெற்றியை உடையவள் என்றாலும்; வேல் போன்ற விழிகளை உடையவள் என்றாலும்; முத்துக்களை போன்ற வெண்மையான பற்களை உடையவள் என்றாலும்; பவழத்தை போன்ற சிவந்த இதழ்களை உடையவள் என்றாலும்; சொல் அழகாக இருக்குமே அல்லாது அதில் பொருள் இல்லை. "நெற்கதிரானது புற்களை போன்று இருக்கும்", என்று சொல்வதற்கு ஒப்பானதாகும் அத்தகைய உவமை.

பாடல் 75

இந்திரன் சசியைப் பெற்றான்; இரு-மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்கணானும்
செந் திருமகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும்;
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே; ஐயா!

பொருள்:
இந்திரன் சசியையும்; ஆறுமுகன் தந்தையாகிய சிவன் உமையையும்; தாமரை மேல் வீற்றிருக்கும் பெருமாள் பாற்கடல் தந்த திருமகளையும் பெற்றது போல் நீயும் சீதையை உன் துனைவியாக பெற்றால் பெருமை அவளுகல்ல ஐயா! உனக்கே தான்.

மேற் கூறிய செய்யுட்களில் தெரிவது சீதையின் அழகா?,

இல்லை தான் பார்த்தே இராத சீதையின் அழகை தனது புலமையால் வெளிக்கொணர்ந்த கம்பனின் புலமையின் அழகா?,

இல்லை கம்பன் விளையாட களம் கொடுத்த தமிழின் அழகா?

............ தெரியவில்லை.

Wednesday, July 12, 2006

ஒரு மகன், ஒரு கணவன், ஒரு சகோதரன் - ஒரு மரணப்போராட்டம்


நாள்:புதன்கிழமை, ஜூலை 12, 2006
நேரம்:மாலை 5:51
இடம்:அவசர சிகிச்சை பிரிவு, கருணா மருத்துவமனை, மும்பை

காட்சி 1 :

தேற்றவே முடியாத சோகத்தில் இருக்கும் ஒரு தாய் கைகளில் மலர்கொத்துடன் இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறார். விக்ராந்த் கன்வில்க்கர் அவர்களது ஒரே மகன். 18 வயதே ஆன, மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் மைக்ரோ பையாலஜி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவன். மும்பையில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பினால் படுகாயமுற்று அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கிறான். அதிகாலை இரண்டு மணியிலிருந்து தனது கணவர் சதீஷுடன் அங்கேயே அமர்ந்து கொண்டு தியானம் செய்து வருகிறார். அவரது கணவர் சதீஷ் ஒரு மராத்தி பத்திரிக்கையில் ஆசிரியராக வேலை பார்ப்பவர். குண்டு வெடிப்பை பற்றிய செய்தி கேட்டவுடன் தனது மகனை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஏனெனில் விக்ராந்த் மாலை அவ்வேளையில் தான் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் விக்ராந்தை கண்டு பிடிக்க முடியவில்லை ஆகையால் அவர்களது கவலை அதிகமாயிற்று. இரவு அவர்களுக்கு வந்த இரண்டு செய்திகள் அவர்களை பீதி கொள்ள செய்தன.

1. அவர்களது இல்ல வளாகத்தில் யாரோ ஒருவர் மரணமடைந்து விட்டார். யாரென்று அடையாளம் தெரியவில்லை.

2. விக்ராந்தை குண்டு வெடித்த வண்டிகளில் ஒன்றில் பார்த்ததாக அவனது நண்பன் கூறிய செய்தி.

பீதியுடனும், கவலையுடனும் மேலும் அவர்கள் விக்ராந்தை தேடி, கடைசியில் பாக்வதி மருத்துவமனையில் அவனை கண்டு கொண்டனர். பலமான காயத்துடன், உருத்தெரியாமல் மாறி இருந்த அவனை கருணா மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளித்துக் கொண்டிருகின்றனர். அவன் முகம் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், அவனது தாயாரை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. மகனின் முகத்தை பார்த்த அவனது தந்தையோ, பித்து பிடித்த நிலையில் யாருடனும் ஒன்றுமே பேசாமல் இருக்கிறார்.

காட்சி 2 :

அவசர சிகிச்சைப் பிரிவின் வெளியே தனது கணவனின் நிலைமையை நினைத்து அழுகையுடன் அமர்ந்து இருக்கிறார் திருமதி. இந்திரா தாக்ரே. மாலை 5 மணிக்கு வண்டி ஏறுவதற்கு முன் கணவருடன் பேசியவர் இனிமேல் அவருடன் பேசவே முடியாமல் போய் விடுமோ? என்ற அச்சத்துடன் காணப்படுகிறார். அவரது கணவர் மும்பை போலீஸ் இலாகாவில் பணிபுரிபவர்.


காட்சி 3 :

கைத்தொலைப்பேசியில் பதற்றத்துடன் யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் ரமேஷின் சகோதரர் தினேஷ், குண்டு வெடிப்பில் ஒரு கையை இழந்து அவசர சிகிச்சைப் பிறிவில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். வெளியூருக்கு சென்றிருந்த தினேஷ் அதற்கு முன்தினம் தான் மும்பைக்கு வந்திருக்கிறார். தினமும் வீட்டிற்கு இரவு நேரம் கழித்து வருபவர், அன்று சீக்கிரமாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு விட்டார். கிளம்பியவர் வீட்டை சென்றடைவதற்கு முன்னரே விதியானது மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பி விட்டது.

மும்பையில் நேற்று நடந்த விதியின் கோர தாண்டவத்தில் மாட்டி சீறழிந்தவர்களில், மூன்றே மூன்று குடும்பங்களின் நிலை தான் மேலே நான் குறிப்பிட்டுள்ளது. [நன்றி : Rediff.com]

இதைப்போல் ஆயிரக்கணக்கானோர் உடல் ஊனமடைந்து, உயிரிழந்து, சொந்த, பந்தங்களை இழந்து தவிக்கிறார்கள். இதற்கு காரணம் உலகெங்கிலும் ஊடுறுவி உள்ள தீவிரவாதமே. மொழி, இனம், மதம், நாடு என்ற எதன் அடிப்படையில் தீவிரவாதம் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. ஆனால் தீவிரவாதிகளை கண்டிக்கும் நிலையில் இப்பொழுது நான் இல்லை. "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் நியாபகத்திற்கு வருவதால், அவர்களிடம் நான் வேண்டிக்கொள்வது,

"எங்களை விட்டு விடுங்கள். உங்களது கோபத்திற்கு நாங்கள் அருகதை அற்றவர்கள். உங்களது கோபத்தை சந்திக்கும் வளு எங்களது மனதிலும், உடலிலும் இல்லை."