Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Wednesday, November 28, 2012

சில்லறை வர்த்தகம் - ஜாக்கி சேகருக்கு பதில்

நம்ம பதிவுலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் சில்லறை வர்த்தகம் குறித்து பதிவொன்றை எழுதியுள்ளார். ஒரு வாடிக்கையாளரின் பார்வையில் இருக்கும் அதனுடன் வரிக்கு வரி உடன்படுகிறேன். ஆனால் அதே நேரத்தில், இம்மாதிரியான முதலீடுகள் வாடிக்கயாளரை மட்டும் பாதிப்பதில்லை. அதனால் பல தரப்பில் இருந்து இதை நாம் பார்க்க கடமைபட்டுள்ளோம்.

பதிவினை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு ஜாக்கி சேகரின் பதிவை படித்து விடுங்கள்.

சுட்டி: http://www.jackiesekar.com/2012/11/blog-post_28.html

இனி நாம் பதிவுக்கு போகலாம்.

அன்பின் ஜாக்கி சேகர் அவர்களே,

உங்கள் பதிவினை படித்த உடன் பின்னூட்டம் இடலாம் என்று தான் முதலில் நினைத்து தட்டச்ச தொடங்கினேன். பின்னூட்டம் பெரிதானதால் தனிப் பதிவாக போட்டு விடலாம் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு.

முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். வாடிக்கையாளருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து நீங்கள் சொன்னது நூறு சதவிகித உண்மை. அதனுடன் வரிக்கு வரி ஒத்து போகிறேன். ஆனால் அதே நேரத்தில் மளிகை கடை காரர்களுக்கு பாதிப்பு இல்லை என்று சொல்வது உங்களுக்கு விவரம் தெரியாது என்பதையே காட்டுகிறது. உங்களை குற்றம் சொல்ல அதில் எதுவும் இல்லை.

வால்மார்ட் போன்ற நிறுவனங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கீழே என்னால் முடிந்த வரையில் விரிவாக சொல்ல முயற்சிக்கிறேன்.

1. லோக்கல் கடைகளுக்கு உடனடி ஆப்பு:

இதை பற்றி விரிவாக சொல்ல ஒன்றும் இல்லை. நீங்களே சொல்லி விட்டீர்கள் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன என்று. வீட்டிற்கே வந்து பொருட்களை சப்ளை செய்வது, மிக குறைந்த விலையில் பொருட்களை கொடுப்பது, பரிசு பொருட்கள் கொடுப்பது என்று ஜிகினா வேலைகள் பல செய்து போட்டியாளர்களுக்கு ஆப்படிப்பார்கள்.

அவர்கள் கொடுக்கும் குறைந்த விலை பொருட்கள் உங்களை வாழவைக்க இல்லை, உங்கள் பக்கத்து வீட்டு கடைக்காரரை அழிக்க என்ற உண்மை உங்களுக்கு தெரிந்தால் மகிழ்ச்சி. லோக்கல் கடைக்காரர்கள் அனைவரும் அழிந்த பின்னரும் இவர்கள் குறைந்த விலைக்கே பொருட்களை கொடுப்பார்களா? இல்லை விலையேற்றம் செய்வார்களா? என்பதை நீங்களே உங்களுக்குள் கேட்டு விடை சொல்லுங்கள்.

2. வால்மார்ட்டின் சப்ளையர்களுக்கு சிறிது காலம் கடந்து ஆப்பு:

உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் 100 பொருட்கள் மட்டுமே தயாரிக்கும் திறன் கொண்ட உற்பத்தியாளருக்கு ஒரு லட்சம் பொருட்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப் படும். அவரும் கடன் வாங்கி தொழிற்சாலையை விரிவு படுத்தி, பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி ஒரு லட்சம் பொருட்களை தயாரித்து விடுவார். தயாரித்து முடிந்ததும் முதல் ஆண்டு சொன்ன விலைக்கு வாங்கப் படும். அடுத்த ஆண்டு மிகவும் குறைந்த விலைக்கே பொருட்களை கேட்பார்கள். உற்பத்தியாளரும் ஓரளவு சமாளித்து குறைந்த விலைக்கு பொருட்களை கொடுப்பார். அதற்கு அடுத்த ஆண்டு இன்னும் குறைந்த விலைக்கு கேட்பார்கள். இப்படியே தொடர்ந்து ஒரு கட்டத்தில் உற்பத்தியாளருக்கு நஷ்டம் என்ற நிலையில் வந்து முடியும்.

உற்பத்தியாளர்களுக்கு வந்தது ஆப்பு. உற்பத்தியை அதிகரிக்க பல இன்வெஸ்ட்மென்டுகளை செய்திருப்பாளர்கள் அவர்கள். அதனால் தரத்தில் கை வைக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு வந்து விடும்.

3. வால்மார்ட்டில் வேலை செய்பவர்களுக்கு நிரந்தர ஆப்பு:

குறைந்த சம்பளத்தில் அதிக நேர வேலை, இன்ஸியூரன்ஸ் போன்ற பெனிஃபிட்ஸ் ஒன்றும் கிடையாது, 20 பேர் வேலை செய்ய வெண்டிய கடையில் 10 பேர் கூட வேலைக்கு இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நிரந்தர வேலையும் கிடையாது. பகுதி நேர வேலை மட்டுமே கிடைக்கும். வேலை செய்யும் போது ஏதெனும் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் நஷ்ட ஈடு ஒன்றும் கிடையாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

4. வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு நன்மை

வாடிகையாளர்களுக்கு நன்மை என்பது பணத்தில் மட்டுமே. வால்மார்ட் பொருட்களின் தரம் குறித்த மாற்று பார்வை இங்கே உண்டு. வால்மார்டுக்கென்றே தனியாக பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கூட இங்கே உண்டு. ஒரே பிரான்ட் பொருள் குறைந்த தரத்தில் வால்மார்ட்டுக்கும் நல்ல தரத்தில் மற்ற இடத்துக்கும் கொடுப்பார்கள். ஏனென்றால் வால்மார்ட் கொடுக்கும் குறைந்த விலைக்கு அப்படி தயாரித்து கொடுப்பதினால் மட்டுமே லாபம் சம்பாதிக்க இயலும் என்பதால்.

யோசித்து பாருங்கள் வேலை செய்பவர்களுக்கும், கஸ்டமர்களுக்கு உச்ச கட்ட பாதுகாப்பு இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இவ்வளவு கொடுமைகளை செய்யும் வால்மார்ட் இந்தியா போன்ற தேசத்துக்கு வந்தால் என்னென்ன செய்வார்கள்.

வால்மார்ட்டின் வேர்களை நம் மண்ணில் பதியவிட்டால் அது நமது நாட்டின் வாழ்வாதாரங்களை அசுர வேகத்தில் குடித்து முடித்து அழித்து விடும்.

யார் எக்கேடு கெட்டு போனால் என்ன, எனக்கு குறைந்த செலவில் பொருட்கள் கிடைத்தால் போதும் என்பவர்களுக்காக இதை நான் சொல்லவில்லை. 18 மணி நேர மின்வெட்டில் கூட கூடாங்குளம் வேண்டாம் என்று கூறி போராடிய மக்கள் போன்றவர்களுக்காக இதை சொல்கிறேன்.

ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டாலும், அரசு கூடாங்குள போராட்டத்தில் என்ன நிலை எடுத்ததோ, அதே நிலையை இதிலும் எடுக்கும். அரசுக்கு தேவையான சட்டங்கள் நிச்சயம் நாட்டில் வந்துவிடும். ஆனால் அதற்கு எதிரான நமது கருத்துக்களை பதிய வைத்தோமானால் நமது மனசாட்சிக்கு மட்டுமாவது நாம் உண்மையுள்ளவனாக இருக்க முடியும்.

பதிவினை தொடரந்து படித்தமைக்கு நன்றி. மாற்றுக் கருத்து இருப்பின் பின்னூட்டம் மூலம் தெரியப் படுத்துங்கள். தொடர்ந்து விவாதிப்போம்.

இவன்,
சத்யப்ரியன்

Friday, December 16, 2011

ஜீமெயில் சொதப்புகிறது ஜாக்கிரதை



பதிவினை படிப்பவர்கள் அவசியம் பின்னூட்டங்களையும் படியுங்கள். அதில் பந்து, மதுவதணன் மற்றும் டாக்டர் புரூணோ மூவரும் இச்செயல்பாட்டை விளக்கி இருக்கிறார்கள். இது ஜீமெயிலின் குறைபாடு அல்ல என்றும் அது ஒரு வசதி என்றும் தெரிகிறது.

நண்பர்களே,

நீங்கள் ஜீமெயில் உபயோகிக்கிறீர்களா? உங்களது முகவரியில் புள்ளி (Dot) இருக்கிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஜீமெயில் முகவரியில் உள்ள புள்ளியை அங்கீகரிப்பதில்லை.

உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், எனது மின்னஞ்சல் முகவரி sathya.priyan@gmail.com என்று வைத்துக் கொள்வோம். வேறு யாரோ ஒருவரின் முகவரி sathyapriyan@gmail.com என்று வைத்துக் கொள்வோம், எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களும் sathyapriyan@gmail.com முகவரிக்கும் அனுப்பப்படும். புள்ளி மின்னஞ்சலில் எங்கு எவ்வளவு இருந்தாலும் இதே செயல்பாடுதான். sath.ya.pri.yan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களும் sathyapriyan@gmail.com முகவரிக்கும் அனுப்பப்படும்.

ஆனால் இதை கூகுள் அதிகாரப் பூர்வமாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதனை கூகுள் அங்கீகரித்து சரி செய்யும் வரை உங்கள் மின்னஞ்சலில் உள்ள புள்ளியை நீக்கி விடுங்கள். அது இயலாதென்றால் முக்கியமான வங்கி கோப்புகள், டீமேட் வர்த்தகங்கள் போன்றவற்றை யாஹூ, லைவ், ஹாட்மெயில் போன்ற வேறு வழங்கிகளுக்கு மாற்றி விடுங்கள்.

கூகுளை போன்ற நிறுவனம் இது போன்றதொரு அடிப்படை விஷயத்தில் சொதப்புவது கேவலமாக இருக்கிறது.

இவன்,
சத்யப்ரியன்

Saturday, August 06, 2011

An Appeal

நண்பர்களே! எனக்கு உதவும் கரங்கள் திரு. வித்யாகர் அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உதவ விருப்பம் உள்ளவர்கள் தயவுசெய்து உதவுங்கள்.

Dear Sathya,

Anaga is all of sixteen with dreams of becoming a nurse and would like to discover a painless way of giving injections. Each time she goes for blood transfusion, she cringes when she sees the needle. Her mind keeps repeating will the smile of the nurse, reduce her pain, will the size of the needle reduce her pain, the pain is unbearable but she knows that her life depends on these transfusions. After all she has undergone Blood transfusion 278 times.

Anaga is suffering from Thalassemia. She has been undergoing blood transfusion regularly every 21 days. At present she is suffering from Hepatitis C and it may potentially damage the liver. The treatment will cost Rs.2, 00,000/. Little drops of water make the mighty ocean. Please help Anga what ever way you can. She has never let Thalassemia affect her zeal for life. She enjoys talking to her friends, playing shuttle with them. She likes to watch her favorite heroine, Tamannah on screen. She dreams of going to a nursing college. She wants to be the best and kindest nurse. She knows that a kind heart and a smiling face can lessen every pain. We want you to lend a helping hand in achieving her dreams.

You can contribute online thru our website http://www.udavumkarangal.org, which gives all details about our activities.

For contributing by Credit card or Net transfer click on the button “DONATE TO OUR INDIA OFFICE” under the menu “DONATE” and its link address is https://www.myhelpinghands.org/Donate_india.aspx

New users have to click on “New Sign-up” button on this page and register for the first time and then login using your email id as the login name and the password is what you have given while registering.

Also you can visit this page for answers to basic questions. http://www.udavumkarangal.org/faq.htm. If you have any specific questions kindly mail us.

Wishing you and your family a healthy and peaceful life.

Thanks & Regards
Vidyaakar

Wednesday, July 29, 2009

வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன்.

வணக்கம் நண்பர்களே!,

நலமா? உங்களை எல்லாம் சந்தித்து பல மாதங்களாகிறது. பெரிதாக ஒன்றும் காரணம் இல்லை. ஒரு விதமான சோம்பல். அதனால் ஒரு சிறிய இடைவெளி. அவ்வளவே.

இந்த இடைவெளியில் வாழ்க்கையில் ஒன்றும் பெரிதாக மாறுதல் ஏற்படவில்லை. முன்போலவே சுவையானதாக இருக்கின்றது. சில புதிய நண்பர்களை பெற்றேன். ஆன்மீகத்தில் சிறிது நம்பிக்கை கூடியது. வியாழன் தோறும் ஷீரடி சாயி பாபா கோவிலுக்கு சென்று பஜனையில் கலந்து கொள்கிறேன்.

நீண்ட நாள் இடைவெளி விட்டு சந்திக்கும் பொழுது வெறும் கையுடன் சந்திக்க வேண்டாம் என்பதற்காக நான் சென்ற ஆண்டு நியூசிலாந்து சுற்றுப் பயணம் செய்த பொழுது எடுத்த சில படங்களை இணையத்தில் சேர்த்துள்ளேன்.

கிழே உள்ள சுட்டியில் அவற்றினை நீங்கள் பார்க்கலாம்.

நியூசிலாந்து படங்கள்

இன்னும் ஓரிரு வாரங்களில் எனது நியூசிலாந்து பயணத்தினை பற்றிய ஒரு சிறு பதிவினை எழுதுகிறேன்.

இவன்,
சத்யப்ரியன்

Wednesday, June 18, 2008

தசாவதாரம் - கமலஹாசன் - ஒரு ரசிகனின் கடிதம்

மதிப்பிற்குறிய திரு. கமலஹாசன் அவர்களுக்கு,

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய இந்தப் பதிவை படித்தவர்கள் புறிந்து கொள்வார்கள் நான் உங்களின் தீவிர ரசிகன் என்று. "எதிலுமே 'தீவிரம்' என்பது இருக்கவே கூடாது." என்ற தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் நல்ல கலையை ரசிப்பதில் அது இருந்தால் தவறில்லை என்று நான் கருதுவதால் இந்த சொல்லாடலை பயன்படுத்துகிறேன். தங்களின் பல திரைப் படங்களை பார்த்து, ரசித்து, மகிழ்ந்திருக்கிறேன்.

திரைக்குள் உங்களின் அற்பணிப்பு, விடா முயற்சி, எதிலும் புதுமை செய்ய வேண்டும் என்ற தங்களின் அவா, நடிப்பை தாண்டிய தங்கள் திறமைகள் அனைத்தையும் பார்த்து வியந்ததை போலவே திரைக்கு வெளியே தங்களின் முகமூடி அணியாத நேர்மையையும் பார்த்து வியந்திருக்கிறேன்.

நேற்று தமிழ் சினிமாவின் "மைல் கல்" என்று தங்களால் கூறப்பட்ட தசாவதாரம் திரைப்படத்தை பார்த்து விட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். முதல் மாதிரிக் காட்சிக்கு பின்னர் (Preview Show) திரைத் துறை வித்தகர்கள் பலரும் இத்திரைப்படத்தை "திரைக் காவியம்" என்று தங்களிடம் கூறி இருப்பார்கள். அது அவர்கள் கருத்தாகவே இருந்து விட்டு போகட்டும். ஆனால் எனக்கு இது ஒரு சாதாரண திரைப் படமாகவே தோன்றியது. ஒரு வேளை எனக்கு ரசிப்புத்தன்மை குறைந்து விட்டதோ என்னவோ?

மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் போன்ற படங்களில் தங்களின் திரைக்கதை நேர்த்தியையும், ஹே ராம்! மற்றும் விருமாண்டியில் தங்களிடம் மறைந்து இருந்த மிக சிறந்த இயக்குனரையும், எத்தனையோ படங்களில் தங்கள் நடிப்பு திறமையையும், "யார் யார் சிவம்?" போன்ற எத்தனையோ பாடல்களில் தங்கள் வசீகரிக்கும் குரல் வளத்தையும் மற்றும் நடிகர்களுக்கு தேவையான நடனத்திறமை, உடலழகை பேணுதல் போன்ற பல வற்றையும் மீண்டும் மீண்டும் நிரூபித்து தாங்கள் ஒரு சகல கலா வல்லவர் என்பதை பறைசாற்றி இருக்கிறீர்கள்.

நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக தங்களை நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் கூட ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நடிகர் திலகமே தங்களின் ரசிகர் என்பது இன்னும் முத்தாய்ப்பு.

நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக உங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை போல தங்களின் கலையுலக வாரிசு இன்னும் உருவாக வில்லை என்பது கவலை அளிக்கும் ஒரு விஷயம். சூர்யா, விக்ரம் போன்றவர்களுக்கு நடிப்பு திறமை அதிகமாக இருக்கின்றது. எதிலும் புதுமை செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் நடனத்திறமை இல்லை. விஜய் அசத்தலாக நடனம் ஆடுகிறார். சுமாராக நடிக்கிறார். ஆனால் புதுமைகளை செய்ய அவர் விழைவதில்லை. அஜித் நடனம் மற்றும் வசன உச்சரிப்பு போன்ற எதிலும் சோபிக்கவில்லை. ஆனால் மக்களை கவரும் வசீகரம் அவரிடம் அதிகம் உள்ளது. ஆனால் இவர்கள் அனைவரிடத்திலும் இல்லாத ஒன்று நகைச்சுவை நடிப்பு. இரண்டரை மணிநேர முழு நீள நகைச்சுவை படம் ஒன்றை இவர்களால் கொடுத்து ஜெயிக்க முடியுமா? என்பதில் எனக்கு சந்தேகமே. மாறாக இவர்கள் அவ்வாறான முயற்சி மேற்கொண்டாலும் இவர்களுக்கு விவேக்/வடிவேலு/சந்தானம்/கருணாஸ் போன்றவர்கள் உதவி வேண்டும்.

மேலும் இவர்களில் விக்ரம் மற்றும் சூர்யா தவிர்த்து வேறு யாருமே தங்கள் நாற்காலிக்கு ஆசை படுவதாக தெரியவில்லை. இளைய தளபதி முதல் புரட்சித் தளபதி, சின்னத் தளபதி வரை அனைவரும் விரும்பும் இடம் "சூப்பர் ஸ்டார்" நாற்காலி மட்டுமே. நல்ல வேளை, யார் செய்த புண்ணியமோ? சூப்பர் ஸ்டார் அரசியலில் சோபிக்க வில்லை. ஒரு வேளை அவர் தமிழக முதல்வராக ஆகி இருந்தால் இவர்கள் "Little Chief Minister" என்றெல்லாம் தலைப்பு அட்டை (Title Card) போட்டு நம்மை சாகடித்திருப்பார்கள்.

ஆக இவர்களைப் போன்றவர்களுக்கு நடுவே, சுமார் கால் நூற்றாண்டு காலமாக தமிழ் திரையுலகை தங்களின் தோளில் சுமந்து கொண்டு இருந்து விட்டீர்கள்/இருக்கிறீர்கள். பல புதுமைகளை புகுத்தியுள்ளீர்கள். அதற்கெல்லாம் எத்தனையோ முறை எத்தனையோ பேர் தங்களை பாராட்டி இருப்பார்கள். என்னுடையதையும் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்.

இனி இக்கடிதத்தின் மைய கருத்திற்கு வருவோம்.

கலைஞானி அவர்களே!, தங்களின் எந்த ஒரு திறமையையும் யாருக்கும் நிரூபிக்க இனியும் அவசியமோ, தேவையோ இருப்பதாக நான் கருதவில்லை. அப்படி இருக்க எதற்கு இந்த தசாவதாரம்? இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இதன் மூலம் புதிதாக என்ன சாதித்ததாக நீங்கள் கருதுகிறீர்கள்?

சுமார் 100 கோடி பொருட்செலவில் இரண்டு ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய இந்த திரைப்படத்தை விட நல்ல பல திரைப் படங்களை தாங்கள் முன்னரே எங்களுக்கு தந்து இருக்கிறீர்கள். அப்படி இருக்க இந்த திரைபடத்திற்கான தேவை என்ன?

தங்களின் மிகப்பெரிய பலமே தங்களின் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென்று ஒரு பிம்பம் இல்லாமல் இருப்பது தான். நீங்கள் அமெரிக்காவில் இருந்து 200 கோடி ரூபாயுடன் வரும் 25 வயது திருமணம் ஆகாத இளைஞனாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அழகற்ற 60 வயது ஏழை பிச்சைக்காரனாக நடித்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள். 200 கிலோ எடையுள்ள மாமிச மலைகளை தூக்கி எறியும் வீரனாக நடிக்க தேவை இல்லை. பேரூந்தில் ஜேப்படி அடித்து விட்டு மக்களிடம் அடிவாங்கும் திருடனாக நடிக்கலாம். மக்களுக்கு நல்லது செய்யும் புனித பிம்பமாக நடிக்க தேவை இல்லை. கொடூரமான வில்லனாக நடிக்கலாம். மரத்தை சுற்றி டூயட் பாட வேண்டிய தேவை இல்லை. பாடல்களே இல்லாத படத்தில் நடிக்கலாம்.

இப்படி எந்த விதமான பிம்பமும் இல்லாமல் இருந்த தங்களின் மீது 'புதுமை' என்ற பிம்பத்தை பத்திரிக்கைக்காரர்கள்/சக திரையுலகினர்/ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்றி விட்டார்களோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதுமை புகுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

அவ்வாறு நீங்கள் வலிந்து சேர்க்கும் புதுமை கதையை தூக்கி விழுங்கி விடுகிறது. கதைக்காகத்தான் திரைப்படமே அல்லாது புதுமைக்காக அல்ல என்பதை நான் தங்களுக்கு கூற தேவை இல்லை.

ஒரு ரசிகனாக உங்களிடம் எதிர் பார்ப்பது ஒன்று தான். வாழ்வில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை வைத்து அதில் புதுமையான திரைக்கதை அமைத்து, அதில் எந்தவிதமான ஒப்பனை புதுமையோ இல்லை தொழில் நுட்ப புதுமையோ வலிந்து புகுத்தாமல் திரைப்படமாக எடுங்கள். Black, Cheeni Kum, Chak De India, Swades, Tare Zameen Par போன்ற படங்களை பார்க்கும் போது இதை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எனக்குள் எழுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவை எல்லாம் ஒப்பனையிலோ அல்லது தொழில் நுட்பத்திலோ எந்த வித புதுமைகளையும் வலிந்து புகுத்தாமல் கதையை நம்பி எடுத்து வெற்றி பெற்ற திரைப் படங்கள். இதனை போன்ற திரைப் படங்களை தான் நான் தங்களிடம் எதிர் பார்க்கிறேன். இதற்கு முன் எத்தனையோ நல்ல ஆங்கில படங்களை தழுவி நல்ல தமிழ் படங்களை கொடுத்த நீங்கள், இத்தகைய நல்ல ஹிந்தி படங்களை தழுவி ஏன் நல்ல படங்களை கொடுக்க முயற்சிக்க கூடாது?

தங்களின் மிகப் பெரிய வெற்றிப் படமாக வேட்டையாடு விளையாடு திரைப்படம் அமைய காரணம் என்ன தெரியுமா? எந்த விதமான கமலிஸமும் இல்லாமல் ஒரு இயக்குனரின் கதாநாயகனாக (Director's Hero) நீங்கள் அப்படித்தில் நடித்ததே.

முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ் திரையுலகில் இப்பொழுது பல அருமையான இயக்குனர்கள் ஜெயித்துக் கொண்டு இருக்கிறார்கள். கௌதம் மேனன், அமீர், பாலா, செல்வராகவன், ராதா மோகன், பாலாஜி சக்திவேல், வசந்த பாலன், விஷ்னு வர்தன், மிஷ்கின் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களின் திரைபடங்களில் நீங்கள் எந்த விதமான கமலிஸமும் இல்லாமல் நடித்தால் அருமையாக இருக்கும்.

மாறாக புதுமை செய்தே ஆக வேண்டும் என்றால் "செங்கிப்பட்டி" அல்லது "எச்சிகாமலபட்டி" என்று தலைப்பிட்டு பேரரசு டைப் படங்களில் நீங்கள் நடிக்கலாம். ரசிகர்களுக்கு உங்களை அத்தகைய திரைப்படங்களில் பார்ப்பதும் புதுமையாகத்தான் இருக்கும்.

இவன்,
சத்யப்ரியன்

பின்குறிப்பு : படத்தினை பார்த்துவிட்டு இப்படி ஒரு கடிதத்தைதான் எழுதுவேன் என்று நினைத்திருந்தேன் படத்தை பார்க்கும் வரை. பார்த்த பிறகு ஒன்றே ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது.

Hats-off Mr. Kamal Haasan!

Wednesday, June 21, 2006

சாரு நிவேதிதாவிற்கு ஒரு கடிதம்

அன்பு சாருவிற்கு,

வணக்கம். முதலில் நான் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒரு கணிணிப்பொறியாளன். தங்களது பாஷையில் கூறுவதானால் 'லௌகீக வாழ்க்கையில் மூழ்கிய நவீன ஸாஃப்ட்வேர் குமாஸ்தா'. நான் தங்களது கோணல் பக்கங்களின் நீண்ட நாள் வாசகன். தங்களது எழுத்துக்களை பற்றிய எனது சிந்தனைகளை இங்கே எழுதியிருகின்றேன்.

ஓரு கலை வடிவம் அதை உணர்பவனுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புபவன். அந்த வகையில் உங்களது எழுத்துக்கள் பல சமயம் வெறுப்பையும், சில சமயம் கோபத்தையும், வெறொரு சில சமயம் சிரிப்பையும், எப்பொழுதாவது சந்தோஷத்தையும் கொடுக்கின்றன. குறிப்பாக நீங்கள் உங்களை நவீன இலக்கியவாதி என்றும், மற்றவர்களை பழமையில் ஊறிப்போனவர்கள் என்றும் கூறும் போது எனக்கு சிரிப்பே வருகிறது.

'ஸெக்ஸை' பற்றி எழுதுவதாலேயே நீங்கள் உங்களை நவீன இலக்கியவாதி என்று கருதினால் அதை போன்றதொரு நகைப்புக்குரிய எண்ணம் எதுவும் இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் எழுதாத காமத்தையா நீங்கள் எழுதி விட்டீர்கள்? 'இன்பம் கடல் மற்று காமம்' என்று அவர் கூறவில்லையா? 'வில்லொக்கும் நூதல் ; வேலொக்கும் விழிகள்; பல்லொக்கும் முத்து' என்று கம்பன் சீதையின் அழகை புகழ வில்லையா? 'எத்தனை பேர் தொட்ட முளை; எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்' என்றும் 'பிறந்த இடத்தை தேடுதே பேதை மட நெஞ்சம்; கறந்த இடத்தை நாடுதே கண்' என்றும் பட்டினத்தார் பாடவில்லையா? அவ்வளவு ஏன் 'ஓரூராயினும் சேரி வாரார்; சேரி வரினும் ஆரமுயங்கார்; ஏதிலார் சுடலை போல் கண்டும் காணா' என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பெண் பால் புலவர் தன் காமத்தையும் அதனால் எழுந்த ஏக்கத்தையும் பாட வில்லையா? அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் ஆழ்வார்கள் போன்றோரின் பேரின்ப பாசுரங்கள் கூட இறைவன் மீது கொண்ட காதலின் வெளிப்பாடாகத்தான் இருந்திருக்கின்றன.

அடுத்ததாக பணமும், புகழும், பதவியும் கொண்ட மனிதர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்பு. அது ரஜினியாக இருக்கட்டும், கருணாநிதியாக இருக்கட்டும் இல்லை சுஜாதாவாக இருக்கட்டும்.

இவர்களை விமர்சனம் செய்ய உங்களுக்கு முழூ தகுதியும் இருக்கிறது ஏனென்றால் இவர்கள் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள். ஆனால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இரண்டு புதல்வர்களையும், இந்தியாவில் இரண்டு கார்களையும் வைத்துக்கொண்டு குடி தண்ணீருக்காக அலையும் பக்கத்து வீட்டுக்காரரை விமர்சனம் செய்ய உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அவரது பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். உங்களை பாதிக்காத வரையில் அவர் செய்யும் எந்த செயலையும் விமர்சனம் செய்ய உங்களுக்கு உரிமை கிடையாது. மேலும் மாலினி குடும்பத்தை பற்றி கூறும் அவதூறு. அவர்கள் மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அவர்களுக்கு இருக்கும் செலவுகள் அவர்களுக்கே தெரியும். கார் EMI, வீடு EMI, மளிகை, Telephone, Electricity, Mobile, Petrol, Cable, Water, Sewage இப்படி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இதில் 500 ரூபாய் கொடுத்தார்களே என்பதற்காக அவர்கள் மீது விஷத்தை அள்ளி உமிழ்வது மிகவும் கேவலமான செயல்.

மூன்றாவதாக வேதங்களின் மீதான உங்கள் கருத்துக்கள். அதற்கு நான் பதில் கூறு முன் வேதத்தில் இருந்து சில ஸ்லோகங்களை பார்க்கலாம்.

VACHA VADMI MADHUMADA BHUYASAM MADHU SANDRISHAMA

I speak sweetly and softly so that I emerge as an epitome of sweetness. This sukta of Atharvaveda speak of MadhuVidya or the knowledge of sweetness. According to this we should perceive the world alike nectar which is sweet and pleasant.

In this way everyone should be devoid of hatred, harshness and filth. We should strain our feelings incessantly by constantly contemplating upon oneself.

Every person should become amicable so that he befriends one and all. The sweetness and pleasantness of personality should be evident in all our actions and thoughts. In this way we shall be successful in establishing global peace and happiness and help in ushering the feeling of brotherhood.

VISHWA HYAGNE DURITA TAR

O! Agni! Surmount all the evils and sins. We should abstain from violence, debauchary, evil deeds, sensual attachment, hatred, anger and ego. We should strive to become pure and chaste. By renouncing these evils and sins, one becomes prosperous and successful.

OM SARVE VAI SUKHINA SANTU SARVE SANTU NIRAMAYA
SARVE BHADRANI PASYANTU MA KASCID DUKHAM APNUYATOM
SANTI SANTI SANTI

O God! Let all be happy. May all be free from illnesses. May all see what is good and positive (in all things, beings and events). May no one be sorrowful. Let there be peace everywhere.

OM SAHANA VAVATU SAHANAU BHUNAKTU SAHA VEERYAM KARAVA VAHAI
TEJASVINAVA DHEETAMASTU MA VIDVISHA VAHAI OM SANTI SANTI SANTI

O God! Protect us together. Rule and nourish us together. Let us do something efficiently and usefully together. For this purpose let our intelligence and power of discrimination be bright. Let us not develop (unnecessary) feelings of difference and hatred.

LOGA SAMASTHA SUKINO BAVANTHU

மிகவும் பிரபலமான ஒரு வேத லிபிக்.

இப்படி எவ்வளவோ நல்ல விஷயங்கள் வேதத்தில் இருக்கும் போது உங்கள் கண்ணுக்கு தெரிவது அதில் உள்ள குறைகளே. 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்களே மாலினி மீதும் இன்னும் மாலினி போன்றோர் மீதும் வெறுப்பை விஷமாக உமிழும் போது, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் அவ்வாறு செய்ததில் தவறு ஒன்றுமே இல்லை. நீங்கள் எதை தேடினீர்களோ அது உங்களுக்கு கிடைத்தது. நல்லவற்றை தேடி இருந்தால் நல்லது கிடைத்திருக்கும்.

நான்காவதாக இந்தியா மீது உங்களுக்கு உள்ள வெறுப்பு. இந்த நாடு தரும் சுதந்திரத்தால் மட்டுமே உங்களால் இங்கே இருந்து கொண்டு இந்த தேசத்தையே கேவலமாக எழுத முடிகிறது. உங்களை போன்ற எழுத்தாளர்கள் மற்ற தேசங்களில் பட்ட சிறை தண்டனைகள் பற்றி நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். அதனால் அதை பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆக பலவகையில் பார்த்தாலும் வெறுப்பையே அதிகம் தரும் தங்கள் எழுத்துக்கள் என்னை விடாமல் துரத்தவும் செய்கின்றன. உங்கள் எழுத்துக்களில் உள்ள ஏதோ ஒன்று தான் அவ்வாறு என்னை இழுக்கிறது. அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. அதை அறிந்து கொள்வதற்காக இதோ உங்கள் கோணல் பக்கங்களை கணிணியில் மறுபடியும் புறட்டுகிறேன்.

இவன்,
சத்யப்ரியன்