Wednesday, June 18, 2008


தசாவதாரம் - கமலஹாசன் - ஒரு ரசிகனின் கடிதம்

மதிப்பிற்குறிய திரு. கமலஹாசன் அவர்களுக்கு,

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய இந்தப் பதிவை படித்தவர்கள் புறிந்து கொள்வார்கள் நான் உங்களின் தீவிர ரசிகன் என்று. "எதிலுமே 'தீவிரம்' என்பது இருக்கவே கூடாது." என்ற தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் நல்ல கலையை ரசிப்பதில் அது இருந்தால் தவறில்லை என்று நான் கருதுவதால் இந்த சொல்லாடலை பயன்படுத்துகிறேன். தங்களின் பல திரைப் படங்களை பார்த்து, ரசித்து, மகிழ்ந்திருக்கிறேன்.

திரைக்குள் உங்களின் அற்பணிப்பு, விடா முயற்சி, எதிலும் புதுமை செய்ய வேண்டும் என்ற தங்களின் அவா, நடிப்பை தாண்டிய தங்கள் திறமைகள் அனைத்தையும் பார்த்து வியந்ததை போலவே திரைக்கு வெளியே தங்களின் முகமூடி அணியாத நேர்மையையும் பார்த்து வியந்திருக்கிறேன்.

நேற்று தமிழ் சினிமாவின் "மைல் கல்" என்று தங்களால் கூறப்பட்ட தசாவதாரம் திரைப்படத்தை பார்த்து விட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். முதல் மாதிரிக் காட்சிக்கு பின்னர் (Preview Show) திரைத் துறை வித்தகர்கள் பலரும் இத்திரைப்படத்தை "திரைக் காவியம்" என்று தங்களிடம் கூறி இருப்பார்கள். அது அவர்கள் கருத்தாகவே இருந்து விட்டு போகட்டும். ஆனால் எனக்கு இது ஒரு சாதாரண திரைப் படமாகவே தோன்றியது. ஒரு வேளை எனக்கு ரசிப்புத்தன்மை குறைந்து விட்டதோ என்னவோ?

மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் போன்ற படங்களில் தங்களின் திரைக்கதை நேர்த்தியையும், ஹே ராம்! மற்றும் விருமாண்டியில் தங்களிடம் மறைந்து இருந்த மிக சிறந்த இயக்குனரையும், எத்தனையோ படங்களில் தங்கள் நடிப்பு திறமையையும், "யார் யார் சிவம்?" போன்ற எத்தனையோ பாடல்களில் தங்கள் வசீகரிக்கும் குரல் வளத்தையும் மற்றும் நடிகர்களுக்கு தேவையான நடனத்திறமை, உடலழகை பேணுதல் போன்ற பல வற்றையும் மீண்டும் மீண்டும் நிரூபித்து தாங்கள் ஒரு சகல கலா வல்லவர் என்பதை பறைசாற்றி இருக்கிறீர்கள்.

நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக தங்களை நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் கூட ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நடிகர் திலகமே தங்களின் ரசிகர் என்பது இன்னும் முத்தாய்ப்பு.

நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக உங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை போல தங்களின் கலையுலக வாரிசு இன்னும் உருவாக வில்லை என்பது கவலை அளிக்கும் ஒரு விஷயம். சூர்யா, விக்ரம் போன்றவர்களுக்கு நடிப்பு திறமை அதிகமாக இருக்கின்றது. எதிலும் புதுமை செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் நடனத்திறமை இல்லை. விஜய் அசத்தலாக நடனம் ஆடுகிறார். சுமாராக நடிக்கிறார். ஆனால் புதுமைகளை செய்ய அவர் விழைவதில்லை. அஜித் நடனம் மற்றும் வசன உச்சரிப்பு போன்ற எதிலும் சோபிக்கவில்லை. ஆனால் மக்களை கவரும் வசீகரம் அவரிடம் அதிகம் உள்ளது. ஆனால் இவர்கள் அனைவரிடத்திலும் இல்லாத ஒன்று நகைச்சுவை நடிப்பு. இரண்டரை மணிநேர முழு நீள நகைச்சுவை படம் ஒன்றை இவர்களால் கொடுத்து ஜெயிக்க முடியுமா? என்பதில் எனக்கு சந்தேகமே. மாறாக இவர்கள் அவ்வாறான முயற்சி மேற்கொண்டாலும் இவர்களுக்கு விவேக்/வடிவேலு/சந்தானம்/கருணாஸ் போன்றவர்கள் உதவி வேண்டும்.

மேலும் இவர்களில் விக்ரம் மற்றும் சூர்யா தவிர்த்து வேறு யாருமே தங்கள் நாற்காலிக்கு ஆசை படுவதாக தெரியவில்லை. இளைய தளபதி முதல் புரட்சித் தளபதி, சின்னத் தளபதி வரை அனைவரும் விரும்பும் இடம் "சூப்பர் ஸ்டார்" நாற்காலி மட்டுமே. நல்ல வேளை, யார் செய்த புண்ணியமோ? சூப்பர் ஸ்டார் அரசியலில் சோபிக்க வில்லை. ஒரு வேளை அவர் தமிழக முதல்வராக ஆகி இருந்தால் இவர்கள் "Little Chief Minister" என்றெல்லாம் தலைப்பு அட்டை (Title Card) போட்டு நம்மை சாகடித்திருப்பார்கள்.

ஆக இவர்களைப் போன்றவர்களுக்கு நடுவே, சுமார் கால் நூற்றாண்டு காலமாக தமிழ் திரையுலகை தங்களின் தோளில் சுமந்து கொண்டு இருந்து விட்டீர்கள்/இருக்கிறீர்கள். பல புதுமைகளை புகுத்தியுள்ளீர்கள். அதற்கெல்லாம் எத்தனையோ முறை எத்தனையோ பேர் தங்களை பாராட்டி இருப்பார்கள். என்னுடையதையும் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்.

இனி இக்கடிதத்தின் மைய கருத்திற்கு வருவோம்.

கலைஞானி அவர்களே!, தங்களின் எந்த ஒரு திறமையையும் யாருக்கும் நிரூபிக்க இனியும் அவசியமோ, தேவையோ இருப்பதாக நான் கருதவில்லை. அப்படி இருக்க எதற்கு இந்த தசாவதாரம்? இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இதன் மூலம் புதிதாக என்ன சாதித்ததாக நீங்கள் கருதுகிறீர்கள்?

சுமார் 100 கோடி பொருட்செலவில் இரண்டு ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய இந்த திரைப்படத்தை விட நல்ல பல திரைப் படங்களை தாங்கள் முன்னரே எங்களுக்கு தந்து இருக்கிறீர்கள். அப்படி இருக்க இந்த திரைபடத்திற்கான தேவை என்ன?

தங்களின் மிகப்பெரிய பலமே தங்களின் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென்று ஒரு பிம்பம் இல்லாமல் இருப்பது தான். நீங்கள் அமெரிக்காவில் இருந்து 200 கோடி ரூபாயுடன் வரும் 25 வயது திருமணம் ஆகாத இளைஞனாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அழகற்ற 60 வயது ஏழை பிச்சைக்காரனாக நடித்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள். 200 கிலோ எடையுள்ள மாமிச மலைகளை தூக்கி எறியும் வீரனாக நடிக்க தேவை இல்லை. பேரூந்தில் ஜேப்படி அடித்து விட்டு மக்களிடம் அடிவாங்கும் திருடனாக நடிக்கலாம். மக்களுக்கு நல்லது செய்யும் புனித பிம்பமாக நடிக்க தேவை இல்லை. கொடூரமான வில்லனாக நடிக்கலாம். மரத்தை சுற்றி டூயட் பாட வேண்டிய தேவை இல்லை. பாடல்களே இல்லாத படத்தில் நடிக்கலாம்.

இப்படி எந்த விதமான பிம்பமும் இல்லாமல் இருந்த தங்களின் மீது 'புதுமை' என்ற பிம்பத்தை பத்திரிக்கைக்காரர்கள்/சக திரையுலகினர்/ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்றி விட்டார்களோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதுமை புகுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

அவ்வாறு நீங்கள் வலிந்து சேர்க்கும் புதுமை கதையை தூக்கி விழுங்கி விடுகிறது. கதைக்காகத்தான் திரைப்படமே அல்லாது புதுமைக்காக அல்ல என்பதை நான் தங்களுக்கு கூற தேவை இல்லை.

ஒரு ரசிகனாக உங்களிடம் எதிர் பார்ப்பது ஒன்று தான். வாழ்வில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை வைத்து அதில் புதுமையான திரைக்கதை அமைத்து, அதில் எந்தவிதமான ஒப்பனை புதுமையோ இல்லை தொழில் நுட்ப புதுமையோ வலிந்து புகுத்தாமல் திரைப்படமாக எடுங்கள். Black, Cheeni Kum, Chak De India, Swades, Tare Zameen Par போன்ற படங்களை பார்க்கும் போது இதை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எனக்குள் எழுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவை எல்லாம் ஒப்பனையிலோ அல்லது தொழில் நுட்பத்திலோ எந்த வித புதுமைகளையும் வலிந்து புகுத்தாமல் கதையை நம்பி எடுத்து வெற்றி பெற்ற திரைப் படங்கள். இதனை போன்ற திரைப் படங்களை தான் நான் தங்களிடம் எதிர் பார்க்கிறேன். இதற்கு முன் எத்தனையோ நல்ல ஆங்கில படங்களை தழுவி நல்ல தமிழ் படங்களை கொடுத்த நீங்கள், இத்தகைய நல்ல ஹிந்தி படங்களை தழுவி ஏன் நல்ல படங்களை கொடுக்க முயற்சிக்க கூடாது?

தங்களின் மிகப் பெரிய வெற்றிப் படமாக வேட்டையாடு விளையாடு திரைப்படம் அமைய காரணம் என்ன தெரியுமா? எந்த விதமான கமலிஸமும் இல்லாமல் ஒரு இயக்குனரின் கதாநாயகனாக (Director's Hero) நீங்கள் அப்படித்தில் நடித்ததே.

முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ் திரையுலகில் இப்பொழுது பல அருமையான இயக்குனர்கள் ஜெயித்துக் கொண்டு இருக்கிறார்கள். கௌதம் மேனன், அமீர், பாலா, செல்வராகவன், ராதா மோகன், பாலாஜி சக்திவேல், வசந்த பாலன், விஷ்னு வர்தன், மிஷ்கின் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களின் திரைபடங்களில் நீங்கள் எந்த விதமான கமலிஸமும் இல்லாமல் நடித்தால் அருமையாக இருக்கும்.

மாறாக புதுமை செய்தே ஆக வேண்டும் என்றால் "செங்கிப்பட்டி" அல்லது "எச்சிகாமலபட்டி" என்று தலைப்பிட்டு பேரரசு டைப் படங்களில் நீங்கள் நடிக்கலாம். ரசிகர்களுக்கு உங்களை அத்தகைய திரைப்படங்களில் பார்ப்பதும் புதுமையாகத்தான் இருக்கும்.

இவன்,
சத்யப்ரியன்

பின்குறிப்பு : படத்தினை பார்த்துவிட்டு இப்படி ஒரு கடிதத்தைதான் எழுதுவேன் என்று நினைத்திருந்தேன் படத்தை பார்க்கும் வரை. பார்த்த பிறகு ஒன்றே ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது.

Hats-off Mr. Kamal Haasan!

25 Comments:

ஜோ / Joe said...

:))

மயிலாடுதுறை சிவா said...

சத்ய ப்ரியன்

உங்கள் கடிதம் நன்று இருந்தது.
ஆனால் நீங்கள் பில்லாவை பாராட்டு எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை.

தாசவதாரம் நிச்சயம் மோசமான படம் அல்ல...அதே சமயத்தில் உங்கள் மைய கருத்தோடு ஓத்து போகிறேன்...

மயிலாடுதுறை சிவா...

Thamizhmaangani said...

//Hats-off Mr. Kamal Haasan! //

ரீப்பீட்டு!!

//Black, Cheeni Kum, Chak De India, Swades, Tare Zameen Par போன்ற படங்களை பார்க்கும் போது இதை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்குமே//

உங்கள் ஆசை நிறைவேறட்டும்:))

Bleachingpowder said...

ஒட்டுமொத்த கமல் ரசிகர்களின் மனதை அப்பிடியே நகல் எடுத்தது போல் இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.

முடித்தால் அந்த பின்குறிப்பை எடுத்துவிடுங்களேன். பதிவின் நோக்கத்திற்கு சிறிதும் ஒட்டாமல் இருக்கிறது. உன்மையான கமல் ரசிகன் எந்த ஒரு சமரசத்தையும் செய்ய கூடாது அப்படித்தனே சத்யா ?

Bleachingpowder said...

ஒட்டுமொத்த கமல் ரசிகர்களின் மனதை அப்பிடியே நகல் எடுத்தது போல் இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.

முடித்தால் அந்த பின்குறிப்பை எடுத்துவிடுங்களேன். பதிவின் நோக்கத்திற்கு சிறிதும் ஒட்டாமல் இருக்கிறது. உன்மையான கமல் ரசிகன் எந்த ஒரு சமரசத்தையும் செய்ய கூடாது அப்படித்தனே சத்யா ?

நாஞ்சில் பிரதாப் said...

கொன்னுட்டீங்க....அருமையான கடிதம்...சிறுவயதிலிருந்தே கமலின் தீவிர ரசிகன் நான். என் மனதில் உள்ளதை கூட எழுதிவிட்டீர்கள்.

SathyaPriyan said...

//
ஜோ / Joe said...
:))
//
வாங்க ஜோ. கலைஞாணி பற்றிய பதிவில் தாங்கள் இல்லாமல் எப்படி? தசாவதாரம் பார்த்து விட்டீர்களா?

//
மயிலாடுதுறை சிவா said...
உங்கள் கடிதம் நன்று இருந்தது.

தாசவதாரம் நிச்சயம் மோசமான படம் அல்ல...அதே சமயத்தில் உங்கள் மைய கருத்தோடு ஓத்து போகிறேன்...
//
நன்றி சிவா.

//
ஆனால் நீங்கள் பில்லாவை பாராட்டு எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை.
//
நான் பில்லாவில் என்ன எதிர் பார்த்து போனேனோ அது இருந்தது :-)

//
Thamizhmaangani said...
உங்கள் ஆசை நிறைவேறட்டும்:))
//
நிறைவேறினால் பலர் மகிழ்ச்சி அடைவார்கள். நன்றி.

//
Bleachingpowder said...
ஒட்டுமொத்த கமல் ரசிகர்களின் மனதை அப்பிடியே நகல் எடுத்தது போல் இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.
//
நன்றி Bleachingpowder.

//
முடித்தால் அந்த பின்குறிப்பை எடுத்துவிடுங்களேன். பதிவின் நோக்கத்திற்கு சிறிதும் ஒட்டாமல் இருக்கிறது. உன்மையான கமல் ரசிகன் எந்த ஒரு சமரசத்தையும் செய்ய கூடாது அப்படித்தனே சத்யா ?
//
நிச்சயமாக எந்த வித சமரசமும் இல்லை என்று உறுதியாக கூறுவேன். யாரையும் திருப்தி படுத்தவோ இல்லை சில விமர்சனங்களை தடுக்கவோ அதனை நான் எழுத வில்லை.

கமலின் இரண்டாண்டு கால உழைப்பை என்னால் அவ்வளவு எளிதாக விமர்சிக்க முடியவில்லை. படத்தில் பெரும் பாலான காட்சிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கமல்கள் இருந்தும் graphics என்பது தெரியவே இல்லை.

அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டையில் மூன்று கமல்கள் இருப்பது போலவா இருந்தது. அந்த ஒரு சண்டையை படமாக்க எவ்வளவு உழைப்பு வேண்டும் என்பது எனக்கு புறிகிறது.

ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தகுந்தபடி தனது குரலையும், உடல் மொழியையும் மாற்றி அவர் நடித்த விதம் அருமை.

10 கதா பாத்திரங்களை வைத்து, சுமாரான கதையினை வைத்து, அபாரமான திரைக்கதையினால் மூன்று மணிநேரம் நம்மை கட்டிப்போட்ட கமல் நிச்சயம் பாராட்டுக்குறியவர்.

படத்தினை ஹாலிவுட் திரைப்படங்களுடன் ஒப்பிடுபவர்கள் எளிதாக ஒன்றை மறந்து விடுகிறார்கள். அங்கே Tom Cruise போன்ற நடிகர்களின் சம்பளம் எளிதாக 20 - 25 மில்லியன் டாலர்கள் இருக்கும். அதாவது சுமார் 100 கோடி. Titanic படத்தின் தயாரிப்பு செலவு சுமார் 1000 கோடி.

அவ்வளவு பணத்தை நம்ம்மவர்களிடம் கொடுத்தால் அவர்களின் தொழில்நுட்ப தரத்தினை விட மேலான தொழில்நுட்ப தரத்தில் தமிழ் படங்கள் வரும் என்பது உறுதி.

//
நாஞ்சில் பிரதாப் said...
கொன்னுட்டீங்க....அருமையான கடிதம்...சிறுவயதிலிருந்தே கமலின் தீவிர ரசிகன் நான். என் மனதில் உள்ளதை கூட எழுதிவிட்டீர்கள்.
//
நன்றி நாஞ்சில் பிரதாப்.

விஜய் said...

விட்டுத்தள்ளுங்க சத்யப்ரியன். எப்போதும் டெண்டுல்கர் நூறு எடுக்கணும்னு எதிர்பார்க்க முடியுமா? அந்த மாதிரி தான் இதுவும். ஆனாலும் பயங்கரமான பில்ட்-அப் கொடுக்கும் போது, நம்ம எதிர்பார்ப்பும் கூடுகிறது. வேட்டையாடு விளையாடு ஒண்ணும் பெரிய ஆஹா ஓஹோ கதையில்லை. இருந்தாலும், அது ஏன் ஒரு பெரிய வெற்றிப்படமானது. இவ்வளவு பெரிய பில்ட் அப் கொடுக்கவில்லை. ஆஸ்கர் ரவிசந்திரன் இவ்வளவு ஆட்டம் போட்டதுக்கு, ஆளவந்தான் மாதிரி ஆகாட்டாலும், ஏதோ பொட்டி போணியாகும்'ல அதை நினைச்சு மனசை தேத்திக்க வேண்டியது தான்.

தாரா said...

சத்யப்ரியன்,

அருமையான கடிதம்! ஒரு உண்மையான கமல் ரசிகனின் ஆதங்கம் உங்கள் கடிதத்தில் தெளிவாக வெளிப்படுகிறது. நான் நேற்று தசாவதாரம் பார்த்தேன். நீங்கள் சொல்வதைப் போல் கதையில் பெரிதாகக் கோட்டை விட்டுவிட்டார். எனக்கு இந்தப் படம் மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அந்த தெலுங்கு அதிகாரி பாத்திரத்தில் என்னமாய் மனிதர் பின்னியெடுத்துவிட்டார்! அந்த அதிகாரி வரும் காட்சியில் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சில பாத்திரங்களுக்கு ஒப்பனை மிகவும் கோரமாக இருந்தது. கமலின் 'ராஜ பார்வை', 'சலங்கை ஒலி' போன்ற படங்களெல்லாம் நான் குறைந்தது 10 முறை பார்த்திருப்பேன். தசாவதாரம் 'fast forward' செய்யாமல் ஒரு முறை பார்ப்பதே சற்று கடினம் தான்.

நன்றி,
தாரா.

ஆ.ஞானசேகரன் said...

சத்யப்ரியன்,..
உங்களின் கடிதம் நன்றாக உள்ளது. நான் நினைத்து பார்த்தது உங்கள் கடிதத்தில் பார்த்ததும் மகிழ்ச்சிக்கு அளவெயிலலை.. படம் மொசம்மில்லை எதிர்பார்ப்பை நீக்கிவிட்டு பார்த்தால், நலல படமாக தொன்றும்.... ஆனால் கமலின் உண்மை நிலையில்லை. அன்பே சிவத்திற்க்கு பிறகு இன்னும் இதயத்தை தொடவில்லை.

கோபிநாத் said...

தல

கடிதம் - சூப்பர் ;)

ஆனால் முழுமையாக உடன்பட முடியவில்லை. நாம்முடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் கலைஞானி எப்படி பூர்த்திசெய்ய முடியும்! ?

நம் எதிர்பார்ப்புகளின் மீதும் தவறு இருக்கிறது தல ;)

SathyaPriyan said...

//
விஜய் said...
எப்போதும் டெண்டுல்கர் நூறு எடுக்கணும்னு எதிர்பார்க்க முடியுமா? அந்த மாதிரி தான் இதுவும். ஆனாலும் பயங்கரமான பில்ட்-அப் கொடுக்கும் போது, நம்ம எதிர்பார்ப்பும் கூடுகிறது.
//
நன்றி விஜய்.

கீழே உள்ள திரு. ஞானசேகரன் அவர்களின் பின்னூட்டம் பாருங்கள். படம் நிச்சயம் மோசம் இல்லை. எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டு சென்று பார்த்தால் நல்ல பொழுது போக்கு நிச்சயம்.

//
தாரா said...
அருமையான கடிதம்! ஒரு உண்மையான கமல் ரசிகனின் ஆதங்கம் உங்கள் கடிதத்தில் தெளிவாக வெளிப்படுகிறது.
//
நன்றி தாரா.

//
நான் நேற்று தசாவதாரம் பார்த்தேன்.
//
நானும் நேற்று தான் பார்த்தேன். இரவு 8 மணிக்காட்சி.

//
அந்த தெலுங்கு அதிகாரி பாத்திரத்தில் என்னமாய் மனிதர் பின்னியெடுத்துவிட்டார்! அந்த அதிகாரி வரும் காட்சியில் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
//
அது அவரின் சிறந்த கதா பாத்திரங்களுள் ஒன்றாக அமையும் என்று நினைக்கிறேன். அட்டகாசமான நடிப்பு.

//
ஆ.ஞானசேகரன் said...
உங்களின் கடிதம் நன்றாக உள்ளது. நான் நினைத்து பார்த்தது உங்கள் கடிதத்தில் பார்த்ததும் மகிழ்ச்சிக்கு அளவெயிலலை.. படம் மொசம்மில்லை எதிர்பார்ப்பை நீக்கிவிட்டு பார்த்தால், நலல படமாக தொன்றும்.... ஆனால் கமலின் உண்மை நிலையில்லை. அன்பே சிவத்திற்க்கு பிறகு இன்னும் இதயத்தை தொடவில்லை.
//
நன்றி ஞானசேகரன். தங்கள் கருத்துக்களுடன் முழுதும் உடன்படுகிறேன்.

SathyaPriyan said...

எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி Sadish.

இரவு 8 மணிக்காட்சி முடிந்து வந்து நடு இரவு 12:30 மணிக்கு பதிவேற்றியது. அதனால் சிறிது அதிகம் இருக்கலாம். பிழைகளை பொருத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

//
கோபிநாத் said...
தல

கடிதம் - சூப்பர் ;)
//
நன்றி தலைவா.

//
ஆனால் முழுமையாக உடன்பட முடியவில்லை. நாம்முடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் கலைஞானி எப்படி பூர்த்திசெய்ய முடியும்! ?

நம் எதிர்பார்ப்புகளின் மீதும் தவறு இருக்கிறது தல ;)
//
உண்மை தான். ஆனால் நமது எதிர் பார்ப்புகளை ஏற்றி விட்டதே அவரும் அவரது முந்தைய படைப்புகளும் தானே.

மேலும் அவரிடம் எதிர் பார்க்காமல் வேறு யாரிடம் எதிர் பார்க்க முடியும்? :-)

கிரி said...

உண்மையான கமல் ரசிகனாக நாகரிகமாக உங்கள் எண்ணத்தை கூறி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Thekkikattan|தெகா said...

Hats-off Mr. Kamal Haasan!//

எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியா இப்படி ஒரு வரியை அடிச்சி, முன்னே சொன்ன அத்தனை பாராவுக்கும் தனி பொருளை கொடுத்திட்டீங்களே :-)).

எனக்கு எந்த ஏமாற்றமுமில்லைங்க. மூணு மணி நேரமும் போனதே தெரியலை, என்னான்னமோ கவனிக்க இந்தப் படத்திலா இருக்கும் பொழுது இரண்டு வருட படத்தை 3 மணி நேரத்துக்குள்ள அடக்க முடியுமா?

வந்தியத்தேவன் said...

சத்யப்ரியன்
நீங்களும் என்னைப்போல் ஒரு உண்மையான கமல் ரசிகன் தான். உங்கள் ஆதங்கம் எனக்கும் புரிகின்றது. சில விடயங்களை கொஞ்சம் வெளியே வைத்துவிட்டுப்பாருங்கள் நிச்சயம் தசாவதாரமும் ஒரு நல்ல ஜனரஞ்சகப்படம் தான். வசூல்ராஜா, பஞ்சதந்திரம் போல் நகைச்சுவை இல்லாவிட்டாலும் கமல் என்ற உலக நாயகன் திரைமுழுவதும் காட்சிதருவதும் புதிய கரு ஒன்றை தொட்டிருப்பதும்(தமிழுக்கு புதிது)(பயோ வார்) புதுமைதான். இறுதியில் நீங்கள் ஹாட்ஸ் ஆவ் சொன்னதில் எந்த தவறும் இல்லை. ஒரு மனிதனின் உழைப்புக்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும்.

சினிமா என்பது மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு விடயமாக மட்டுமே பாருங்கள் காசு கொடுத்து தன் கவலைகளை மறக்கவரும் சராசரி ரசிகனை நிச்சயம் தசாவதாரம் கவர்ந்திருக்கிறது. ஒரு விருமாண்டியும், ஹேராமும் சாதாரண ரசிகனைச் சென்றடையவில்லை. இன்னும் சில நாளில் நிச்சயம் உலக நாயகன் ஏதாவது ஒரு கலைப்படம் கொடுப்பார்.

தசாவதாரத்தில் கமல் செய்த அல்லது தயாரிப்பாளர் செய்த மிகப்பெரிய தவறு இசைதான். நம்ம ஊர் இசைஞானியிடமும் இசைப்புயலிடமும் இல்லாததா வடனாட்டின் ஹிமேசிடம் இருந்தது. ஹிந்திக்காரார்களே ரகுமானிடம் மயங்கியபோது இவர்கள் ஏன் அவரைக் கொண்டுவ்ந்தார்கள் என்பதுதான் கேள்விக்குறி?

மற்றும்படி தசாவதாரம் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவரின் வெற்றிப்படிகளில் ஒன்றுதான்.

மங்களூர் சிவா said...

பதிவு அருமை. நட்சத்திர வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

நல்லா இருக்கு ரசிகனின் கடிதம்!

பட்...! எவ்ளோ எக்ஸ்பெக்டேஷனோட படிச்சு வந்து கடைசியில புஷ்ன்னு ஆகிப்போச்சு!

எல்லோருக்குமே இப்படித்தான் போல:)))

SathyaPriyan said...

//
கிரி said...
உண்மையான கமல் ரசிகனாக நாகரிகமாக உங்கள் எண்ணத்தை கூறி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
//
நன்றி கிரி.

//
Thekkikattan|தெகா said...
எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியா இப்படி ஒரு வரியை அடிச்சி, முன்னே சொன்ன அத்தனை பாராவுக்கும் தனி பொருளை கொடுத்திட்டீங்களே :-))
//

//
எனக்கு எந்த ஏமாற்றமுமில்லைங்க. மூணு மணி நேரமும் போனதே தெரியலை, என்னான்னமோ கவனிக்க இந்தப் படத்திலா இருக்கும் பொழுது இரண்டு வருட படத்தை 3 மணி நேரத்துக்குள்ள அடக்க முடியுமா?
//
அதே தான் நான் சொல்ல வந்ததும். படத்தில் நான் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ள மற்றும் குறிப்பிட மறந்த குறைகள் பல இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் கமல் என்ற கலைஞனின் உழைப்பின் முன் எடுபடவில்லை.

கடைசி உலகநாயகனே பாடல் பார்த்த பிறகு அந்த குறைகளை கூற மனம் வரவில்லை.

தெளிவாக புறிந்து கொண்டமைக்கு நன்றிகள் பல.

SathyaPriyan said...

//
வந்தியத்தேவன் said...
இறுதியில் நீங்கள் ஹாட்ஸ் ஆவ் சொன்னதில் எந்த தவறும் இல்லை. ஒரு மனிதனின் உழைப்புக்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும்.
//
மிக்க நன்றி வந்தியத்தேவன்.

//
காசு கொடுத்து தன் கவலைகளை மறக்கவரும் சராசரி ரசிகனை நிச்சயம் தசாவதாரம் கவர்ந்திருக்கிறது. ஒரு விருமாண்டியும், ஹேராமும் சாதாரண ரசிகனைச் சென்றடையவில்லை.
//
அதுவே நான் வேண்டுவதும்.

//
தசாவதாரத்தில் கமல் செய்த அல்லது தயாரிப்பாளர் செய்த மிகப்பெரிய தவறு இசைதான்.
//
BGM மிகவும் நன்றாக இருந்தது. ஒவ்வொரு கதா பாத்திரத்திற்கும் தக்க வகையில் அருமையாக இசையமைத்திருந்தார் Devi Sri Prasad.

பாடல் இசையை பொருத்த வரை "கல்லை மட்டும் கண்டால்" பாடலும் "முகுந்தா முகுந்தா" பாடலும் நன்றாகவே இருந்தன. மற்ற பாடல்கள் மோசம்.

//
மங்களூர் சிவா said...
பதிவு அருமை. நட்சத்திர வாழ்த்துக்கள்.
//
நன்றி சிவா.

//
ஆயில்யன் said...
நல்லா இருக்கு ரசிகனின் கடிதம்!
//
நன்றி ஆயில்யன்.

//
பட்...! எவ்ளோ எக்ஸ்பெக்டேஷனோட படிச்சு வந்து கடைசியில புஷ்ன்னு ஆகிப்போச்சு!

எல்லோருக்குமே இப்படித்தான் போல:)))
//
மேலே தேகாவிற்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும் ஆயில்யன் :-)

Ramya Ramani said...

அற்புதம், அபாரம்! உங்கள் மனஒட்டத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

// Black, Cheeni Kum, Chak De India, Swades, Tare Zameen Par போன்ற படங்களை பார்க்கும் போது இதை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எனக்குள் எழுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.//

நன்றாக சொன்னீர்கள்!கமல் நடித்தால் அற்புதமாக இருக்கும்

Vijay said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

SathyaPriyan said...

//
Ramya Ramani said...
அற்புதம், அபாரம்! உங்கள் மனஒட்டத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
//
மிக்க நன்றி Ramya.

//
நன்றாக சொன்னீர்கள்!கமல் நடித்தால் அற்புதமாக இருக்கும்
//
இது நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

//
Vijay said...
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
//
இதெல்லாம் ரொம்பவே ஓவர் Vijay. பந்தகால பார்த்தாலே பந்திக்கு போறவங்க நாங்க. எங்கள போய் வெத்தல பாக்கு வச்சு கூப்புடறீங்க.

Vetrimagal said...

வழக்கம் போலவே மிக ஆழகாக எழுதி இருக்கிறீர்கள். இந்த படத்தின் விமர்சனங்களை படித்த பிறகு , படம் பார்க்க தயக்கமாக இருந்தது. உங்கள் கருத்தைப் படித்த பிறகு மனம் மாறி விட்டது ;-)

கமல் அவர்கள் இன்னும் 'நாயகனை ' கடக்கவில்லை என நான் கருதுகிறேன். மணிரத்னம் அவர்களும் ஒரு முறை கமலுடன் படம் எடுத்தால் ..... still hopeful..

SathyaPriyan said...

//
Vetrimagal said...
வழக்கம் போலவே மிக ஆழகாக எழுதி இருக்கிறீர்கள்.
//
மிக்க நன்றி Vetrimagal.

//
இந்த படத்தின் விமர்சனங்களை படித்த பிறகு , படம் பார்க்க தயக்கமாக இருந்தது. உங்கள் கருத்தைப் படித்த பிறகு மனம் மாறி விட்டது ;-)
//
அவசியம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பாருங்கள். Complete entertainment guaranteed.

//
கமல் அவர்கள் இன்னும் 'நாயகனை ' கடக்கவில்லை என நான் கருதுகிறேன்.
//
குணா, தேவர் மகன், மஹாநதி, அன்பே சிவம் எல்லாம் நாயகனுக்கு பிறகு வந்த திரைப்படங்களே.

//
மணிரத்னம் அவர்களும் ஒரு முறை கமலுடன் படம் எடுத்தால் ..... still hopeful..
//
பார்ப்போம் நடக்கிறதா என்று.