Monday, June 16, 2008


ராமாயணம் - திருவிளையாடல்

சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் இந்த இரு தொடர்களும் வெளி வருகின்றன. முதல் தொடர் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது. பின்னது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகிறது.

ராமாயணம் தொடர் ஹிந்தியில் இருந்து தமிழில் மொழிமாற்றத்துடன் வெளிவருகின்றது. இவ்வாறு மொழி மாற்றம் செய்வதை முதலில் தொடங்கியது சென்னை தொலைக்காட்சிதான் என்று நினைவு. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கால கட்டங்களில் ஜுனூன், கானூன், இம்திஹான், அலிப் லைலா, சந்திரகாந்தா போன்ற பல தொடர்களை தமிழில் மொழி மாற்றத்துடன் ஒளிபரப்பினார்கள். தமிழ் மொழிமாற்றம் படு காமெடியாக இருக்கும். "ஜுனூன் தமிழ்" என்றே அதனை பலர் குறிப்பிடுவது உண்டு.

இந்த ராமாயணம் தொடரும் அதற்கு விதிவிலக்கல்ல. எனக்கு சிறு வயதில் இருந்தே ராமாயணம், மஹாபாரதம் இருகதைகளில் மஹாபாரதம் கதையே மிகவும் பிடித்த கதை. ராமாயணம் என்பது என்னை பொருத்த வரை பெரிய போர். ராமர், கிருஷ்ணர் இருவரில் எனக்கு பிடித்தவர் கிருஷ்ணரே. கவனிக்கவும், நான் இங்கு ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய இரு கதாபாத்திரங்களைத் தான் குறிப்பிடுகிறேன். மற்றபடி எனக்கு மச்ச, கூர்ம, வராஹ, வாமன, நரசிம்ம, பரசுராம, ராம, கிருஷ்ண, பலராம மற்றும் இனி வரப்போகும் கல்கி ஆகிய அனைத்து அவதாரங்களும் ஒன்றுதான்.

கிருஷ்ணர் என்னை பொருத்த வரை ஒரு "larger than life" கதாபாத்திரம். ஆனால் ராமர் அப்படி எதுவும் இல்லாமல் இருப்பதும் ராமாயணம் எனக்கு படு போராக தெரிவதற்கு காரணம். ராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது சுந்தர காண்டம் மட்டுமே. அதற்கு அனுமாரின் heroics ஒரு முக்கிய காரணம்.

இருந்தாலும் ராமாயணம், அலிப் லைலா, விக்ரம் ஔர் வேதாள் போன்ற வெற்றித் தொடர்களை தயாரித்த சாகர் நிறுவனத்தில் இருந்து வரும் புதிய ராமாயணம் என்பதால் 'என்னதான் புதியதாக செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போமே.' என்ற சிந்தனை என்னுள் தொடர் தொடங்குமுன் இருந்தது.

இது என்ன Don படத்தின் remake ஆ? கதையிலும் திரைக்கதையிலும் மாறுதல் செய்வதற்கு? நான் மாறுதல் என்று குறிப்பிட்டது Graphics மற்றும் பிரம்மாண்டம் இரண்டையும் தான். ஆனால் தொடர் தொடங்கி சில வாரங்களிலேயே படு மோசம் என்று தெரிந்து விட்டது. கதாபாத்திரங்களின் தேர்வும் படு மோசம்.

'ஞாயிறு காலை இந்த தொடரை பார்க்கலாமா? அல்லது தங்கமணியுடன் shopping செல்லலாமா?' என்று கேட்டால் எனது விடை இரண்டாவது தான். 'கல்யாணம் ஆகாதவர்கள் என்ன செய்யலாம்?' என்று கேட்டால் விரைவில் திருமணம் செய்துகொண்டு தங்கமணியுடன் shopping செல்லுங்கள் என்பேன்.

ஆனால் அதே நேரத்தில் சித்தி, செல்வி, அரசி என்று தொடர்ந்து மெகா போர்களை தயாரிக்கும் ராடான் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் திருவிளையாடல் தொடர் மீது எனது எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. திருவிளையாடல் புராணத்தினை முழுவதும் நான் படித்தது இல்லை. நடிகர் திலகத்தின் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர் போன்ற படங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகளே எனக்கு தெரிந்தவை.

தொடர் தொடங்கு முன் திருமதி. ராதிகா சரத்குமாரின் பேட்டியை குங்குமத்தில் படித்தேன். அதில் 64 திருவிளையாடல்களையும் தொகுத்து படம் பிடித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டதால், 'அப்படி என்னதான் இருக்கிறது?' என்று அறிந்து கொள்வதற்காக அதிக எதிர்பார்ப்பில்லாமலேயே இந்தத் தொடரினை பார்க்க தொடங்கினேன்.

ஆனால் எனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் விஞ்சிவிட்டது இந்தத் தொடர். குறிப்பாக தொடரின் பிரம்மாண்டம் மற்றும் Grapics அருமையாக இருக்கின்றன.

கதாபாத்திரங்களின் தேர்வு மிகவும் அருமை. அதிலும் நடிகர் திலகத்தையும், நடிகையர் திலகத்தையும் பார்த்த கண்களுக்கு வேறு நடிகர்/நடிகைகளை அதே கதாபாத்திரங்களாக பார்ப்பதில் எந்த நெருடலும் இல்லை. அதுவே அந்த நடிகர்களின் சிறப்பை காட்டுகிறது. "ஆடல் திருவிளையாடல்" என்ற தொடக்கப் பாடலும் திருமதி. சுதா ரகுனாதன் மற்றும் திரு. மாணிக்க வினாயகம் இருவரின் குரலில் இனிமையாக இருக்கிறது.

வசனங்கள் மிகவும் அருமையாக உள்ளன. ஆனால் சில கதாபாத்திரங்கள் தூய தமிழை உச்சரிக்கும் விதம் நகைச்சுவையாக இருக்கிறது. உச்சரிப்பு சரி இல்லாதவர்களுக்கு டப்பிங் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக அமையும். குறிப்பாக நாரதராக வரும் 'நவரசவேள்' திரு. ராதா ரவி அவர்களின் வசன உச்சரிப்பு ஏனோ பாத்திரத்துடன் ஒட்டவில்லை. நாரதர் என்ற பாத்திரத்தின் குரல் ஏற்ற இறக்கங்களுடன் சிறிது நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத கட்டமைப்பு. சரஸ்வதி சபதம் திரைப் படத்தில் நாரதராக நடிகர் திலகம் சக்கை போடு போட்டிருப்பார். அதிலும் முப்பெரும் தேவியர்களிடம் அவர் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சி அருமையிலும் அருமை. அதே காட்சி இந்தத் தொடரில் ஒட்டவே இல்லை. மற்றபடி குறிப்பிட்டு சொல்லக் கூடிய குறைகள் வேறு எதுவும் இத்தொடரில் இல்லை.

மொத்தத்தில் தமிழகத்தில் பக்தியை காசாக்கும் விளையாட்டில் வெற்றிபெற்றது ராடான் நிறுவனத்தினர் மட்டுமே.

13 Comments:

அதிஷா said...

//மொத்தத்தில் தமிழகத்தில் பக்தியை காசாக்கும் விளையாட்டில் வெற்றிபெற்றது ராடான் நிறுவனத்தினர் மட்டுமே.
//

உண்மை.
நல்ல பதிவு ,

குமரன் (Kumaran) said...

நான் இரண்டு தொடர்களையும் பார்த்து வருகிறேன். திருவிளையாடல் தொடரில் முதலில் வந்த இந்திரன் கதை நன்றாக இருந்தது. இரண்டாவதாக வந்த 'சரஸ்வதி சபதம்' பாணி கதை கொஞ்சம் குளறுபடி என்று நினைக்கிறேன். கதைமாந்தர்களின் உச்சரிப்புகளும் கொடுமை. யாருக்கும் ளகரம் உச்சரிக்க வரவில்லை. அமைச்சராக வந்தரும் அரசியாக வந்தவரும் பரவாயில்லை. தளபதியும் புலவரும் கொடுமை செய்துவிட்டார்கள். இவர்கள் செந்தமிழில் பேச வேண்டியிருப்பதால் இந்தக் குறை நன்கு தெரிகிறது போலும்; இவர்களே மற்ற தொடர்களில் தமிங்கிலத்தில் பேசும் போது ளகரக் குறை தெரிவதில்லை. அடுத்த கதை தொடங்கியிருக்கிறது. தாக்ஷாயினியின் அந்தக் கதையை எப்படி கொண்டு போகிறார்கள் என்று பார்ப்போம்.

SathyaPriyan said...

//
அதிஷா said...
உண்மை.
நல்ல பதிவு
//
நன்றி அதிஷா.

//
குமரன் (Kumaran) said...
நான் இரண்டு தொடர்களையும் பார்த்து வருகிறேன். திருவிளையாடல் தொடரில் முதலில் வந்த இந்திரன் கதை நன்றாக இருந்தது.
//
ஆமாம். அது எனக்கு புதியதாகவும் சுவையாகவும் இருந்தது.

//
கதைமாந்தர்களின் உச்சரிப்புகளும் கொடுமை. யாருக்கும் ளகரம் உச்சரிக்க வரவில்லை.

தளபதியும் புலவரும் கொடுமை செய்துவிட்டார்கள். இவர்கள் செந்தமிழில் பேச வேண்டியிருப்பதால் இந்தக் குறை நன்கு தெரிகிறது போலும்; இவர்களே மற்ற தொடர்களில் தமிங்கிலத்தில் பேசும் போது ளகரக் குறை தெரிவதில்லை.
//
உண்மை. ஆனால் ஒரு சில கதா பாத்திரங்களின் குரல் கம்பீரமாக அழகாக இருக்கின்றது. டப்பிங் உபயத்திலா என்று தெரியவில்லை.

//
அடுத்த கதை தொடங்கியிருக்கிறது. தாக்ஷாயினியின் அந்தக் கதையை எப்படி கொண்டு போகிறார்கள் என்று பார்ப்போம்.
//
நானும் ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

கோபிநாத் said...

ஆகா...நீங்க சொன்ன தொடரை நோட் பண்ணிக்கிட்டேன். ;)

ambi said...

சத்யா, முதலில் வாழ்த்துக்கள்.

இந்த வாரத்தில் ஏதேனும் சிறப்பு போர்கள் வலம் வருமா? :p

ராதாரவி வசன உச்சரிப்பில் காமடி பண்ணூகிறார்.//இரண்டாவதாக வந்த 'சரஸ்வதி சபதம்' பாணி கதை கொஞ்சம் குளறுபடி என்று நினைக்கிறேன். //

correctly said.

nellainews said...

ராதிகாவின் நிறுவனத்திற்கு இந்த சூடு மட்டும் போதாது. கார்ப்ரேட் நிறுவனம் என்ற போர்வையில் ஹீரோக்களின் மார்க்கெட் ரேட்டை உயர்த்தும் வேலையில் இறங்கும் ராடானுக்கு யார் வைக்கப்போகிறார்கள் ஆப்பு?

SathyaPriyan said...

//
கோபிநாத் said...
ஆகா...நீங்க சொன்ன தொடரை நோட் பண்ணிக்கிட்டேன். ;)
//
ஏன் தல கீழே உள்ளதை நோட் பண்ணிக்கலயா?

/
'ஞாயிறு காலை இந்த தொடரை பார்க்கலாமா? அல்லது தங்கமணியுடன் shopping செல்லலாமா?' என்று கேட்டால் எனது விடை இரண்டாவது தான். 'கல்யாணம் ஆகாதவர்கள் என்ன செய்யலாம்?' என்று கேட்டால் விரைவில் திருமணம் செய்துகொண்டு தங்கமணியுடன் shopping செல்லுங்கள் என்பேன்.
/

//
ambi said...
சத்யா, முதலில் வாழ்த்துக்கள்.
//
நன்றி ambi.

இப்பொழுது தான் உங்கள் பதிவை பார்த்தேன். ஜூனியர் அம்பி நலமா? உங்களுக்கும் தங்கமணிக்கும் எனது வாழ்துக்கள்.

//
இந்த வாரத்தில் ஏதேனும் சிறப்பு போர்கள் வலம் வருமா? :p
//
இந்த வாரம் முழுதும் ஒரே போர் தான் (Bore) :-)

//
ராதாரவி வசன உச்சரிப்பில் காமடி பண்ணூகிறார்.
//
உண்மை.

//
nellainews said...
ராதிகாவின் நிறுவனத்திற்கு இந்த சூடு மட்டும் போதாது. கார்ப்ரேட் நிறுவனம் என்ற போர்வையில் ஹீரோக்களின் மார்க்கெட் ரேட்டை உயர்த்தும் வேலையில் இறங்கும் ராடானுக்கு யார் வைக்கப்போகிறார்கள் ஆப்பு?
//
வருகைக்கு நன்றி nellainews. அவர்களுக்கு பணம் வருகிறது செய்கிறார்கள். பார்க்கும் நமக்கு எங்கே போச்சு புத்தி. தவறு நம் மீதே அதிகம் :-)

மங்களூர் சிவா said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள். இரண்டு தொடரும் பார்ப்பதில்லை. சீக்கிரம் கல்யாணம் செய்துகொண்டு தங்கமணியுடன் ஷாப்பிங் செல்லுங்கள் என நீங்கள் சொன்ன ஐடியா - சூப்பர்.

SathyaPriyan said...

//
மங்களூர் சிவா said...
சீக்கிரம் கல்யாணம் செய்துகொண்டு தங்கமணியுடன் ஷாப்பிங் செல்லுங்கள் என நீங்கள் சொன்ன ஐடியா - சூப்பர்.
//
தொடரின் கொடுமையை விவரிக்க என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லையே, என்ன செய்வது? :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கிருஷ்ணர் என்னை பொருத்த வரை ஒரு "larger than life" கதாபாத்திரம். ஆனால் ராமர் அப்படி எதுவும் இல்லாமல் இருப்பதும் ராமாயணம் எனக்கு படு போராக தெரிவதற்கு காரணம்//

ஹிஹி!
எனக்கும் அப்படி தான்! :-)

ராமர் எப்பமே பெண்களுக்குத் தான் (கல்யாணமான பெண்கள்-ன்னு சொல்லனுமோ?) ஹீரோ!
ஆண்களுக்கு அவரு எப்பமே போர் தான்!

"போர்" கூட ரொம்ப ஒன்னும் செய்யலை! சிம்பிளா முடிச்சிட்டாரு!
ஆனா நம்ம ஆளு கண்ணன், சண்டையே போடாம, சண்டையில பட்டைய கெளப்பிட்டாரு-ல்ல? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//'கல்யாணம் ஆகாதவர்கள் என்ன செய்யலாம்?' என்று கேட்டால் விரைவில் திருமணம் செய்துகொண்டு தங்கமணியுடன் shopping செல்லுங்கள் என்பேன்//

உஷ்!
உரக்கச் சொல்லாதீங்க! எங்க காதில் மட்டும் கேக்குறா மாதிரி சொல்லுங்க! :-)

அப்பறம் ராடான் நிறுவனத்தினர் சத்யா மூலமாகப் பல திருமணங்கள் நடக்க வழி வகுத்ததாகச் சொல்லி, திருமண நிகழ்ச்சியாக்கி, அதையும் காசாக்கிருவாங்க! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ராதாரவி-நாரதர்

நவரசவேள் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கலாம்!
பழைய வீடியோக்களை வாங்கிப் பார்த்தாலே போதும்!

நடிகர் திலக நாரதர் சான்சே இல்ல!
நம்ம சீர்காழியே நாரதர் வேடத்தில் நகைச்சுவையில் கொஞ்சம் கலக்குவார்! - தசாவதாரம் படத்துல! (அட கமல் படம், காதண்டி)

எம்.ஆர்.ராதா அவர்களே, நாரதரா வேசங் கட்டி கலக்கி இருப்பாரே! அவர் டிபிகல் குரலையும் மீறி, நகைச்சுவையோடும் குறும்போடும் கலக்கி இருப்பாரு!
அதையே ராதாரவி பார்க்கலாம்!

நாரதர்-ன்னா கண்ணுலுயே குறும்பு வேணும் அண்ணாச்சி! (சத்யா, ஏன் என் கண்ணைப் பாக்குறீங்க? :-)

SathyaPriyan said...

//
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ராமர் எப்பமே பெண்களுக்குத் தான் (கல்யாணமான பெண்கள்-ன்னு சொல்லனுமோ?) ஹீரோ!
ஆண்களுக்கு அவரு எப்பமே போர் தான்!
//
சரியா சொன்னீங்க.

ஆனா இந்த காலத்துல கிருஷ்ணர விட ராமர் தான் வட இந்தியால பலருக்கு சோறு போட்டுகிட்டு இருக்காரு :-)

//
ராடான் நிறுவனத்தினர் சத்யா மூலமாகப் பல திருமணங்கள் நடக்க வழி வகுத்ததாகச் சொல்லி, திருமண நிகழ்ச்சியாக்கி, அதையும் காசாக்கிருவாங்க! :-)
//
நமக்கும் காசு கொடுத்தா சரி தான்.

//
நவரசவேள் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கலாம்!
//
கொஞ்சம் இல்லீங்க. ரொம்பவே :-)

//
நாரதர்-ன்னா கண்ணுலுயே குறும்பு வேணும் அண்ணாச்சி! (சத்யா, ஏன் என் கண்ணைப் பாக்குறீங்க? :-)
//
க--ர--ச
நா--ர--த
ரைமிங்கா இல்லை?