Thursday, June 19, 2008


Asterix & Obelix - Part 2

முதல் பகுதி இங்கே.

1961 - Asterix the Gaul: நான் முன்னரே குறிப்பிட்டது போல இதுதான் இந்த கதை வரிசையில் முதல் கதை. Gauls உடன் போரிட்டு தோல்வியடைந்த ரோமானியர்கள் தோல்விக்கான காரணங்களை அறிய முற்படுகின்றனர். அவர்களுக்கு Getafix ன் மந்திரக் கூழை பற்றிய செய்தி ஒற்றர்கள் மூலமாக கிடைக்கின்றது. உடனே அவரை கடத்துவது என்று முடிவு செய்கிறார்கள். கடத்தியும் விடுகிறார்கள். Asterix எப்படி அவரை மீட்கிறான் என்பது தான் கதை. எனக்கு தெரிந்தவரையில் Obelix இல்லாமல் Asterix மட்டும் இத்தகைய மீட்புப்பணிகளில் ஈடுபடுவது இந்தக் கதையில் மட்டும் தான் என்று நினைக்கிறேன். மற்றபடி Obelix இல்லாமல் போனாலும் நிறைய ரோமானியர்கள் இருப்பதினால் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை.

1962 - Asterix and the Golden Sickle: Getafix "Mistletoe" என்ற ஒரு வகை இலைகள் கொண்டே தனது மந்திரக் கூழை காய்ச்சுவார். அந்த இலைகளை கொய்வதற்கு தங்கத்தால் ஆன அருவாள் ஒன்றை பயன்படுத்துவார். அந்த அருவாள் உடைந்து போக புதிய அருவாள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் நமது கதாநாயகர்கள். அந்நேரம் அருவாள் சந்தையில் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படுகிறது. 'நமது நாயகர்கள் என்ன செய்தார்கள்?; ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது?' என்பது தான் கதை.

1963 - Asterix and the Goths: Goths என்பவர்கள் Gauls போலவே மற்றொரு பழங்குடியினர். அவர்கள் ரோமானியர்களை வெற்றி கொள்ள Getafix ஐ கடத்துகிறார்கள். நமது நாயகர்கள் எப்படி அவரை மீட்கிறார்கள் என்பது தான் கதை. கதையின் கரு முதற்கதையினை போலவே இருந்தாலும் நகைச்சுவை இதிலும் அதிகம். குறிப்பாக Getafix பேசுவதை Goths ன் தலைவருக்கு மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்த்து சொல்லும் காட்சிகள் மிகவும் அருமை.

1964 - Asterix, the Gladiator: இதன் கருவும் முந்தைய கருவினை ஒத்தது தான். ஜூலியஸ் ஸீஸர் அவர்களுக்கு ஒரு Gaul ஐ பரிசாக அளித்து பதவி உயர்வு பெற நினைக்கிறான் ஒரு சிப்பாய். இருப்பதிலேயே ஆபத்து அதிகம் இல்லாத Gaul யார் என்று பார்த்து Cocofonix என்ற இசை கலைஞனை தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறான். ஸீஸரோ இவனது கர்ண கொடூரமான பாடலை கேட்டு இவனை சிங்கத்திற்கு இரையாக அளிக்குமாறு உத்தரவு கொடுக்கிறார். அதற்கான நாளும் முடிவு செய்யப்படுகின்றது. நமது நாயகர்கள் தாங்களே Gladiator களாக முன்வந்து Cocofonix ஐ மட்டும் அல்லாது அவனுடன் சிறையில் இருக்கும் மற்றவர்களையும் எவ்வாறு விடுவிக்கிறார்கள் என்பது தான் கதை.

1967 - Asterix, the Legionary: உள்நாட்டுக் குழப்பங்களினால் பெரிதும் பாதிக்கபட்ட நிலையில் ஸீஸர் மீது படையெடுக்கிறார்கள் மற்றொரு பிரிவு ரோமானியர்கள். இதனால் ஸீஸர் தனது படையினை அதிகரிக்க நேரிடுகிறது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் படையில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கிறார். நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தில் உள்ள Panacea என்ற பெண்ணின் வருங்கால கணவனும் அதில் அடக்கம். அவனை மீட்க ரோமானியர்களின் படையில் சேருகிறார்கள் நமது நாயகர்கள்.

நமது நாயகர்கள் சேர்ந்த படையின் பிரிவில் பல நாட்டு/இன மக்களும் இருப்பதும், அவர்கள் பேசுவதையெல்லாம் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளன் முயலுவதும், இவர்கள் அனைவரையும் வைத்து சமாளிக்க முடியாமல் பிரிவின் தலைவன் அவஸ்தை படுவதும் உச்சகட்ட நகைச்சுவை.

1969 – Asterix and the Cauldron: கடும் பணப்பஞ்சத்தால் பீடிக்கப்படும் ரோமானியர்கள் தங்கள் ஆட்சியில் உள்ள Gauls அனைவரிடமும் அதிக வட்டி வசூலிக்க, அதிலிருந்து தப்பிக்க நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தில் தனது பணத்தை பாதுகாப்பாக வைக்க முயலுகிறார் மற்றொரு கிராமத்தலைவர். பணத்தை பாதுகாக்கும் பொறுப்பு Asterix இடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனாலும் கடுமையான காவலின் இடையில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

நமது நாயகனுக்கு பணத்தையும் இழந்த நம்பிக்கையையும் மீட்கும் பொறுப்பு வந்தடைகிறது.

1971 – The Mansions of the Gods: நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தை வெற்றிகொள்ள அங்கிருந்து மக்கள் அனைவரையும் ரோமபுரிக்கு இடம் பெயர்ப்பதே சரியான தீர்வு என்று நினைக்கிறார் ஸீஸர். அதன் படி அவர்களை நாகரீகத்தின் ஆசை வலையில் விழவைக்க அவர்கள் கிராமத்தினை சுற்றி அழகிய குடியிருப்பு ஒன்று கட்டப்படுகிறது. அதில் சில ரோமானியர்களும் குடி வைக்கப்படுகின்றனர். ஸீஸர் எதிர்பார்த்த படியே சில குழப்பங்களும் நேர்கின்றன. அதனை நமது நாயகர்கள் எவ்வாறு தீர்க்கிறார்கள் என்பது தான் கதை.

இதன் பின்னர் வருபவை அனைத்தும் Uderzo எழுதிய கதைகள்.

1980 – Asterix and the Great Divide: நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தின் நட்பு கிராமத்தின் தலைவர் இறக்க அடுத்த தலைவர் யார் என்பதில் குழப்பம் நேரிடுகிறது. தலைவராக இருவர் போட்டியிட கிராமம் இரண்டாக பிரிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இருவரையும் விரட்டிவிட்டு கிராமத்தின் ஒரே தலைவனாக ஒருவன் ரோமானியர்களுடன் சேர்ந்து திட்டமிட நமது நாயகர்கள் உதவிக்கு அழைக்கப்படுகிறார்கள். அட்டகாசமான நகைச்சுவை. நமது நாயகர்களிடம் மாட்டிக் கொண்டு ரோமானியர்கள் படும் பாடு வயிற்றை பதம் பார்க்கும்.

1981 – Asterix and the Black Gold: Getafix தனது மந்திரக் கூழுக்கு பயன்படுத்தும் Rock Oil என்ற ஒரு வகை Petrol தீர்ந்து போய்விட நமது நாயகர்களின் கிராமத்திற்கு அபத்து வருகிறது. ஒரு குடுவை மந்திரக் கூழ் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், Mesopotamia வில் மட்டுமே கிடைக்கும் அந்த Rock Oil ஐ தேடி புறப்படுகிறார்கள் நமது நாயகர்கள்.

1983 – Asterix and Son: ஒரு அமைதியான அதி காலையில் Asterix இருக்கும் குடிசைக்கு வெளியில் இருக்கிறது ஒரு கை குழந்தை. குழந்தையின் தந்தை யாரென்று தெரியாமல் போக வேறு வழியின்றி அதனை வளர்க்கும் பொறுப்பு அவனிடமே வருகிறது. அதே நேரத்தில் ப்ரூடஸ் தலைமையில் ஒரு ரோமானியர்களின் படை நாடெங்கும் அந்தக் குழந்தையை தேடுகின்றது. குழந்தை நமது நாயகனிடம் வளர்வதை அறிந்து குழந்தையை கடத்த முயலுகிறார்கள்.

இந்தக் கதையும் அட்டகாசமான நகைச்சுவை கொண்டது. குறிப்பாக மாறுவேடத்தில் வரும் கடத்தல் காரர்களை குழந்தை மந்திரக் கூழை பாலென்று நினைத்து குடித்து விட்டு பந்தாடுவது உச்ச கட்ட நகைச்சுவை.

1987 – Asterix and the Magic Carpet: நமது கிராமத்தில் வசிக்கும் இசைக் கலைஞன் Cocofonix தனது இசைக் கருவியில் ஒரு புதிய தந்தியை சேர்க்க அதன் பலனாக அவன் பாடும் போதெல்லாம் மழை வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் கடுமையான பஞ்சம் வர; அதனை போக்க வேண்டுமென்றால் அரச குமாரியை பலியிட வேண்டும் என்று வஞ்சகமான ராஜகுரு கூற; வேறு வழி இல்லாமல் அதற்கான நாளும் முடிவு செய்யப்படுகின்றது.

ராஜகுருவின் சூழ்ச்சியை அறிந்து கொண்ட மற்றொரு குரு தனது மந்திர சக்தியால் பறக்கும் பாயில் நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்திற்கு அவர்கள் உதவி வேண்டி வருகிறார்.

நான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு அனைவருக்கும் பரிந்துரைப்பேன் என்ற பொழுதும் புத்தகத்தின் விலை காரணமாக நண்பர்களை ஒன்றோ இரண்டோ நூலகத்திற்கு சென்று படித்து விட்டு வாங்க அறிவுரை கூறுகிறேன்.

10 Comments:

மங்களூர் சிவா said...

/
நான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு அனைவருக்கும் பரிந்துரைப்பேன் என்ற பொழுதும் புத்தகத்தின் விலை காரணமாக நண்பர்களை ஒன்றோ இரண்டோ நூலகத்திற்கு சென்று படித்து விட்டு வாங்க அறிவுரை கூறுகிறேன்.
/

ஒரு புத்தகம் 600 ரூபாயா? பொறுமையா ஆன்லைன்ல ஓசிலயே படிச்சிக்கலாம். ஒன்னும் அவசரம் இல்லை.

:)))))

தாரா said...

Asterix, The Legionary கதையில், Panacea வின் மேல் Oblexi காதல் வயப்படுவதும், பின்னர் அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்று தெரிந்ததும் மனம் உடைவதும், அப்போதெல்லாம் சாதாரணமாக இருக்கும் Asterix, கடைசி காட்சியில் அந்த வழக்கமான கிராமத்து விருந்து நடக்கையில் ஒரு ஓரமாக அந்தப் பெண்ணை நினைத்து மனம் உடைந்து போய் நின்றுகொண்டிருப்பான். இதெல்லாம் அருமையான உணர்வுகளின் சித்தரிப்பு.

தாரா.

SathyaPriyan said...

//
மங்களூர் சிவா said...
ஒரு புத்தகம் 600 ரூபாயா? பொறுமையா ஆன்லைன்ல ஓசிலயே படிச்சிக்கலாம். ஒன்னும் அவசரம் இல்லை.
//
ஆமாங்க. விலை மிகவும் அதிகம் தான். :-)

ஆனால் இங்கு ஒன்றை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வெளி நாடுகளில் சினிமா மற்றும் விளையாட்டை போன்றே புத்தகங்களுக்கும் அதிக விலை கொடுக்க மக்கள் தயங்க மாட்டார்கள்.

ஆனால் நம் நாட்டில் 500 ரூபாய் கொடுத்து தசாவதாரமும், சிவாஜியும், 1000 ரூபாய் கொடுத்து IPL கிரிக்கெட்டும் பார்க்கும் நாம் 200 ரூபாய் கொடுத்து புத்தகங்கள் வாங்க யோசிக்கிறோம்.

விளைவு J. K. Rowling உலக பில்லியனர்கள் பட்டியலில் இருக்க நம் தமிழக எழுத்தாளர்கள் சில ஆயிரங்களுக்காக சினிமாவில் கதை வசனம் எழுதுகிறார்கள்.

இன்னும் சில பேர் சில ஆயிரம் ரூபாய்களுக்காக தனது குழந்தைகளுக்கு வேறொருவரின் இனிஷியலை போட சம்மதிக்கிறார்கள். (ஒரு எழுத்தாளனுக்கு அவனது படைப்பும் அவனது குழந்தை போலவே அல்லவா.)

//
தாரா said...
Asterix, The Legionary கதையில், Panacea வின் மேல் Oblexi காதல் வயப்படுவதும், பின்னர் அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்று தெரிந்ததும் மனம் உடைவதும், அப்போதெல்லாம் சாதாரணமாக இருக்கும் Asterix, கடைசி காட்சியில் அந்த வழக்கமான கிராமத்து விருந்து நடக்கையில் ஒரு ஓரமாக அந்தப் பெண்ணை நினைத்து மனம் உடைந்து போய் நின்றுகொண்டிருப்பான். இதெல்லாம் அருமையான உணர்வுகளின் சித்தரிப்பு.

தாரா.
//
உண்மை தாரா. நான் இந்த பதிவினை எழுத்த உங்கள் புத்தக உலகம் தொடரே உந்துதலாக அமைந்தது.

உங்களுக்கு பதிவிலேயே சிறப்பு நன்றிகளை தெரிவித்திருக்க வேண்டும். விடுபட்டு விட்டது.

நீங்கள் அந்த தொடரினை பாதியிலேயே விட்டது எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

நேரம் கிடைக்கும் போது நீங்கள் அவசியம் அந்த தொடரினை முழுதும் எழுத வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்.

Unknown said...

அண்ணன் ஒபிலிக்ஸ் வாழ்க, வாழ்க.

ஹிஹி, இந்த கதையெல்லாம் இப்படி எழுத்து வடிவில் குறுக்கி படிச்சா, எத்தினி இன்ஸ்பிரேஷனா இருக்குது தெரியுமா? நம்மூரு திரைக்கதாசிரியர்கள் படிக்காம போயிட்டாங்களே:-) அப்படியே, இதுல "கறுப்புத்தங்கம்" நடிச்சா எப்படி இருக்கும்? (idea!) நான் ப்ளாக் கோல்டு கதை பத்திச் சொல்லிட்டிருந்தேனாக்கும்...

அண்ணன் ஒபிலிக்ஸ் தான் நகைச்சுவையின் ஊற்று என்று சொன்னதால், மென்ஹிர் ட்ரக் கான்சல். நன்றி:-)

தாராவின் புத்தக உலகம் பத்தி சொன்னதுக்கும் நன்றி.

SathyaPriyan said...

//
கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
அண்ணன் ஒபிலிக்ஸ் தான் நகைச்சுவையின் ஊற்று என்று சொன்னதால், மென்ஹிர் ட்ரக் கான்சல். நன்றி:-)
//
ஏங்க உங்க தல மேல கை வச்சி சத்தியமா சொல்லுங்க, நம்ம நாடாளும் மக்கள் கட்சி தலைவர விடவா ஒபிலிக்ஸ் பெரிய காமெடியன்?

//
தாராவின் புத்தக உலகம் பத்தி சொன்னதுக்கும் நன்றி.
//
அவசியம் படியுங்கள். அவரது வலைப்பூ தவறவிடக் கூடாத ஒன்று.

Unknown said...

//ஏங்க உங்க தல மேல கை வச்சி சத்தியமா சொல்லுங்க, நம்ம நாடாளும் மக்கள் கட்சி தலைவர விடவா ஒபிலிக்ஸ் பெரிய காமெடியன்?//அய்யா, என் த‌லையும் கையும் இருக்க‌ற‌து பிடிக்க‌லையா? நான் இந்த‌ விளையாட்டுக்கு வ‌ர‌லை.

ஒபிலிக்ஸை ப‌த்தி தான் நினைச்சு சிரிக்கிறேன்னு தைரிய‌மா சொல்ல‌லாம் என்ப‌தால், அண்ண‌ன் ஒபிலிக்ஸ் தான் பெரிய‌ காமெடிய‌ன்:-)

கல்யாண்குமார் said...

hi good letter to kamal. pls visit my site: kalyanje.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

நாங்கள் வாங்கும் போது இவ்வளவு விலை இல்லைப்பா. ஆண்டுக்கு ஒரு புத்தகமென்றுதான் அப்பவும் வாங்கினேன்:)
ஏனெனில் வருமானம் அவ்வளவுதான். 108ரூபாய் என்று ஞாபகம்.

இப்பவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

Mani - மணிமொழியன் said...

Asterix and Obleix சின்ன வயசுல, நூலகத்தில தேடி தேடி படிச்சது. அதனுடைய appeal தனிதான் !

SathyaPriyan said...

//
கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ஒபிலிக்ஸை ப‌த்தி தான் நினைச்சு சிரிக்கிறேன்னு தைரிய‌மா சொல்ல‌லாம் என்ப‌தால், அண்ண‌ன் ஒபிலிக்ஸ் தான் பெரிய‌ காமெடிய‌ன்:-)
//
நாட்டாமை தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டது.

//
kalyan kumar said...
hi good letter to kamal. pls visit my site: kalyanje.blogspot.com
//
Thank you. தவறாக இந்தப் பதிவில் பின்னூட்டி விட்டீர்கள் :-)

//
வல்லிசிம்ஹன் said...
நாங்கள் வாங்கும் போது இவ்வளவு விலை இல்லைப்பா. ஆண்டுக்கு ஒரு புத்தகமென்றுதான் அப்பவும் வாங்கினேன்:)
ஏனெனில் வருமானம் அவ்வளவுதான். 108ரூபாய் என்று ஞாபகம்.
//
அப்பொழுது அதுவே பெரிய தொகை இல்லையா மேடம்.

//
மணிமொழியன் said...
Asterix and Obleix சின்ன வயசுல, நூலகத்தில தேடி தேடி படிச்சது. அதனுடைய appeal தனிதான் !
//
நன்றி மணிமொழியன்.