Monday, September 21, 2009

New York, Munich, UPO

சமீபத்தில் நான் பார்த்த மூன்று படங்கள் தான் இவை. இம்மூன்று படங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. மூன்றுமே திவிரவாதத்தினால் பாதிக்கபட்ட கதாபாத்திரங்களினால் உருவாக்கப் பட்டவை.

நியூயார்க் :

தனது டாக்ஸியில் தனக்கே தெரியாமல் வைக்கப்பட்ட உயிர் கொல்லி ஆயுதங்களுடன் ஓமர் (Neil) FBI யால் கைது செய்யப்படுவதுடன் தொடங்குகிறது படம். FBI அதிகாரியான ரோஷன் (Irfan Khan) தனது விசாரணையில் இது வேண்டுமென்றே தங்களால் புனையப்பட்ட நாடகம் என்றும் ஓமரின் நண்பனான சமீர் ஷேக் (John Abraham) என்ற தீவிரவாதியை ஓமரை கொண்டு வேவு பார்க்கவே இந்த நாடகத்தை நடத்தியதாக கூற தனது நண்பனை இந்த அவப் பெயரிலிருந்து மீட்க ஓமர் FBI யின் under-cover agent ஆக செயல்பட ஒப்புக்கொள்கிறான்.

பின்னர் படம் பின்னோக்கி ஒமர், சமீர் மற்றும் மாயா (Katrina Kaif) ஆகியோரின் கல்லூரி காலத்திற்கு பயணிக்கிறது. அழகான கல்லூரி, அதனை விட அழகான பெண், அதனினும் அழகான ஒரு காதல், பின்னர் காதல் தோல்வி, பின்னர் பிரிவு என்ற வழக்கமான கதையினை அரை மணி நேரத்தில் அருமையாக சொல்லி இருக்கிறார்கள். தனது காதல் தோல்வியில் மனமுடைந்து அமெரிக்காவை விட்டு இந்தியா திரும்பும் ஓமர், பின்னர் மீண்டும் அமெரிக்கா வந்து டாக்ஸி ஓட்டுகிறான். 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு அவன் சமீரையும் மாயாவையும் பார்க்கவே இல்லை.

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு விருப்பமே இல்லாமல் மீண்டும் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு வருகிறது. அவனுக்கு ஒரு பொய்யான புதிய அலுவலகமும், பொய்யான புதிய வேலையும், பொய்யான ஒரு கதையும் FBI அதிகாரிகளால் அளிக்கப்படுகின்றன.

பின்னர் அவனுக்கு சமீர் உண்மையாகவே ஒரு தீவிரவாதி என்று தெரிய வரும் பொழுது அதிர்ச்சி அடைகிறான். 2001 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் சமீர் FBI அதிகாரிகளால் தவறாக கைது செய்யப் படுகிறான். சுமார் 10 மாதங்கள் சிறையில் சொல்ல முடியாத அளவுக்கு துண்பத்தை அனுபவிக்கும் அவனுக்கு வெளி வந்த பின்னர் FBI அதிகாரிகளை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது. அதன் முடிவு அவனது தீவிரவாத பாதை.

முடிவில் ஓமரின் துணை கொண்டு சமீர் மீண்டும் ஒரு பேரழிவை செய்யாமல் காக்கிறது FBI. சமீரும் மாயாவும் கொல்லப் படுகின்றனர். அவர்களது மகனை ஓமர் தத்தெடுத்து வளர்க்கிறான்.

முதல் படமான நியூயார்கை பொருத்தவரை அதன் செய்தி "Crisp & Clear". தீவிரவாதத்திற்கு எதிரான செயல் பாடு என்று வரும் பொழுது ஒரு சில அப்பாவிகள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். அதனை எல்லாம் Collateral Damage என்று எடுத்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான். அப்படி செய்யாமல் அப்பாவிகள் பாதிக்கப் படுகின்றார்களே என்று "குய்யோ முறையோ" என்று கத்தினால் ஆப்பு நமக்கு தான். இந்த விஷயத்தில் உலக நாடுகள் அனைத்துமே அமெரிக்காவை பின்பற்ற வேண்டும் என்று தான் சொல்வேன்.

Munich :

நீண்ட நாட்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த படம். பாலஸ்தீன தீவிரவாதிகளால் 1972 ம்யூனிக் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் போது கொல்லப்பட்ட 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்காக இஸ்ரேலின் பழிவாங்கும் பதில் நடவடிக்கை தான் படம். ம்யூனிக் மஸ்ஸகர், ஆபரேஷன் ஸ்ப்ரிங் ஆப் யூத், ஆபரேஷன் வ்ராத் ஆப் காட் இவற்றை கருவாக கொண்டு அட்டகாசமாக எடுக்கப்பட்ட படம்.

பதில் நடவடிக்கை மொசாத் ஏஜன்டான ஆவ்னரிடம் (Eric Bana) ஒப்படைக்கப் படுகிறது. அவனுக்கு நான்கு பேர் கொண்ட ஒரு டீமும் தரப்படுகிறது. ஒவ்வொரு தீவிரவாதியாக கண்டு பிடித்து எப்படி அவர்கள் கோல்லுகிறார்கள் என்பது தான் கதை. படம் அருமையாக எடுக்கப்பட்டு இருந்தது.

உன்னை போல் ஒருவன் :

நேற்று முன் தினம் தான் இந்த படம் பார்த்தேன்.

"Black, Cheeni Kum, Chak De India, Swades, Tare Zameen Par போன்ற படங்களை பார்க்கும் போது இதை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எனக்குள் எழுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனை போன்ற திரைப் படங்களை தான் நான் தங்களிடம் எதிர் பார்க்கிறேன்."

இது எனது தசாவதார விமர்சனத்தில் நான் எழுதியது. எனது ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக உன்னை போல் ஒருவன் அறிவிப்பு வந்த உடனே மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். படத்தினை ஆவலுடன் எதிர் பார்த்தேன். படம் அந்த ஆவலை ஓரளவிற்கு நன்றாகவே பூர்த்தி செய்திருக்கிறது.

படத்தின் தொடக்கத்தில் அனுபம் கேரால் "Bastard" என்று அறிமுகப்படுத்தப்படும் நஸ்ருதீன் ஷாவை, மோஹன் லாலால் "Tsunami" என்று அறிமுகப்படுத்தப்படும் கமலாக மாற்றியதிலேயே எவ்வளவு அழகாக தமிழ் படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிந்து விடுகிறது. மற்றபடி படம் 99 சதவிகிதம் காட்சிக்கு காட்சி, வசனத்திற்கு வசனம் ஒரிஜினல் படத்தின் கார்பன் காப்பி. மீதம் உள்ள ஒரு சதவிகிதம் கமலின் அரசியல் :-) மற்றும் இறுதிக் காட்சி வசனங்கள்.

எனக்கு இரண்டுமே பிடிக்கவில்லை. "இடம் வலம் பேதம் இல்லை", "ராம, கிருஷ்ண, லால் கிருஷ்ண" போன்ற ஒரு சிலவற்றை ரசித்தாலும், கமல் முடிவில் தீவிரவாதிகளை கொன்றாலும், தீவிரவாதத்திற்கு பதில் தீவிரவாதமே என்று உரைத்தாலும், ஏனோ படத்தில் கமல் தீவிரவாதம் பிறப்பதற்கு காரணம் மதக் கலவரங்களே என்று கூறுவது போலவே எனக்கு தோன்றுகிறது. அது உண்மை என்றால் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு என்ன காரணம்?

உண்மையில் தீவிரவாதம் பிறப்பதற்கு நாம் காரணம் தேடுவதில் பொருளே இல்லை. மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பெற்ற கூலி சுமார் 2000 அமெரிக்க டாலர்கள். அவ்வளவுதான் தீவிரவாதத்தின் விலை.

இறுதிக் காட்சி வசனங்களை பொருத்த வரை நிச்சயமாக ஒரிஜினல் இன்னும் அருமையாக இருக்கும். அது தீவிர வாதத்திற்கு ஒரு புண்ணாக்கு காரணமும் கற்பிக்காது. மேலும் நஸ்ருதீன் ஷாவின் கதாபாத்திரம் ஒரு விதமான சர்காசத்துடனேயே படம் முழுதும் வெளிப்படும். அதுவும் இதில் இல்லை. ஒரு பக்கா வில்லன் செய்திருக்க வேண்டிய பாத்திரம் இது. கமல் செய்ய வேண்டிய பாத்திரமே இது அல்ல.

மற்றபடி படத்தின் நிறை என்று பார்த்தால் மோஹன் லால், அனுஜா ஐயர், லக்ஷ்மி, மற்ற இரு போலீஸ் கதா பாத்திரங்கள் அன்று அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். எடிட்டிங், இசை மற்றும் ஒளிப்பதிவு அருமை. மொத்தத்தில் நீங்கள் ஒரிஜினல் பார்க்கவில்லை என்றால் இது ஒரு அருமையான அனுபவம் தரும் படமாக அமையும்.

மேலே குறிப்பிட்ட மூன்று திரைப்படங்களுக்கும் சற்றும் தொடர்பில்லாத ஒரு செய்தி.

அறிஞர் அண்ணாவின் 101ஆவது பிறந்த நாள் மற்றும் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா இவற்றை ஒட்டி கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஒன்பது அல் உம்மா தீவிரவாதிகள் தங்களது தண்டனை காலம் முடியும் முன்னரே சிறையிலிருந்து விடுதலை.

Monday, September 07, 2009

வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்!

நேற்று இரவு வெளியிடப்பட்ட தேசிய விருது பட்டியலில் காஞ்சிவரம் படத்தில் நடித்ததற்காக மூன்றாவது முறையாக தேசிய விருதை பெற்றிருக்கிறார் திரு. பிரகாஷ்ராஜ். இதற்கு முன்னரே இருவர், அந்தப்புரம் ஆகிய படங்களுக்காக இரு முறை இந்த விருதை இவர் பெற்றிருக்கிறார். மூன்றாவது முறையாக இதனை பெற்றதன் மூலம் மூன்று முறை தேசிய விருது வாங்கிய மம்முட்டி, மோஹன்லால், நஸ்ருதீன் ஷா போன்றவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இவர் கூடிய விரைவில் நான்காம் முறையாக விருதினை வாங்கி நம்மவர் கமலஹாசனுக்கு பிறகு அதனை நான்காம் முறை பெற்ற ஒரே நடிகர் என்ற பட்டியலிலும் சேர வாழ்த்துகிறேன்.

Friday, September 04, 2009

Status Update

இந்த மே மாதம் கடைசி வாரத்தில் திருச்சியிலிருந்து அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். அக்டோபர் கடைசியில் திரும்பி செல்கிறார்கள். அவர்களுக்கு இதுவே முதல் அமெரிக்க பயணமானதால் பல இடங்களையும் சுற்றி காமித்து வருகிறோம். நியூயார்க், அட்லாண்டிக் சிடி, வாஷிங்டன் டிசி, நயாகரா, பிட்ஸ்பர்க் என்று வார இறுதிகளில் ஊர் பயணங்களாகவே இருக்கின்றது.

சென்ற ஆண்டு மாமனாரும் மாமியாரும் வந்திருந்தார்கள். அப்பொழுதும் இது போலவே ஊர் பயணமாகவே இருந்தது. வார நாட்களில் அலுவலகத்தில் ஓய்வு, வார இறுதியில் கார் ஓட்டும் வேலை என்று நானும் தங்கமணியும் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். வார இறுதியில் கார் ஓட்ட வேண்டும் என்று நினைத்தாலே கடுப்பாக இருந்தாலும் பெற்றோர் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சிக்காகவே அதனை பொருட்படுத்த முடியவில்லை. அதிலும் குறிப்பாக நயாகரா சென்ற பொழுது அங்கு எனது அப்பா அம்மாவிடம், "இதை எல்லாம் நான் பள்ளியில் பாடத்தில் படித்தது. இங்கு வருவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை." என்று கூறிய பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சென்று வரும் ஒவ்வொரு இடத்தினை பற்றியும் அவர் குறிப்பெடுத்துக் கொள்கிறார். தேதி வாரியாக ஊரின் பெயர், போகும் வழி, அந்த ஊரின் பெருமை என்று அந்த பட்டியல் பெரிதாக இருக்கிறது.

பெற்றோர்கள் வந்திருக்கும் செய்தி கேட்ட உடனே அனைவரும் கேட்பது ஏதேனும் விசேஷமா? என்பது தான். "ஏன் ஐயா! பெற்றோர்களை அழைத்தாலே அது ஆயா வேலை செய்வதற்காகத் தான் இருக்க வேண்டுமா? ஊர் சுற்றி பார்க்க, நம்முடன் சில நாட்கள் தங்க அவர்களை அழைக்க கூடாதா?" என்று கேட்க தோன்றுகிறது. என்ன செய்வது அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்களை போலவே மற்றவர்களையும் நினைக்கிறார்கள்.

அவர்கள் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கின்றது. நல்லபடியாக நோய் நொடி இல்லாமல் பத்திரமாக அவர்கள் இந்தியா சென்று சேரும் வரை எனக்கு மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது போலவே இருக்கும்.