Friday, December 31, 2010

2010 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்


1. தமிழ் படம் (29-01-2010)

படத்தை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. முன்னரே சொன்னது தான். அவர் இவர் சுவர் என்று யாரை பற்றியும் கவலையில்லாமல் சகட்டு மேனிக்கு ஓட்டு ஒட்டு என்று ஓட்டி இருக்கிறார்கள். ஒரு முறை பார்க்கலாம். இது போன்ற முயற்சி தமிழில் இதுவே முதல் முறை. பாட்ஷா ரஜினி ரகுவரன் காட்சிக்கு மட்டுமே கொடுத்த காசு தீர்ந்து விட்டது. It’s a spoof with no goof.

2. விண்ணை தாண்டி வருவாயா? (26-02-2010)

சமீபத்தில் நான் பார்த்த மனதை நெருடும் காதல் கதை. கௌதம் மேணன் படங்களில் உள்ள காதல் காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மின்னலே போன்ற காதல் படத்தில் பட்டும் அல்ல, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற ஆக்க்ஷன் படங்களில் கூட காதல் காட்சிகள் அருமையாக இருக்கும். ரெஹ்மானின் அருமையான பாடல்கள், சிம்பு மற்றும் த்ரிஷாவின் நடிப்பு, அவர்களுக்கிடையே உள்ள கெமிஸ்ட்ரி, ஒளிப்பதிவு, வசனங்கள் அனைத்தும் அருமை. மொத்தத்தில் அருமையான ஒரு படம். Romance never lets you down.

3. சிங்கம் (28-05-2010)

பக்கா மசாலா வேட்டை. சூர்யா சரியான தேர்வு. முதலில் நடிப்பதாக சொன்ன விஜய் எவ்வளவு பொருந்தி இருப்பார் என்று தெரியவில்லை. A role that fit him to a 'T'. சாமியைவிட எனக்கு அதிகம் பிடித்திருந்தது. சன் பிக்சர்ஸிற்கும் சூர்யாவிற்கும் நல்ல பொருத்தம் என்று நினைக்கிறேன். அயன் போலவே இதுவும் மிகப் பெரிய வெற்றி.

4. நான் மஹான் அல்ல (20-08-2010)

எனக்கு மிகவும் பிடித்திருந்த மற்றொரு படம். கார்த்தியின் நடிப்பு நன்றாக இருந்தது. எனக்கு இதில் தான் அவர் பருத்திவீரனின் சாயலில் இருந்து சிறிது விலகியதாக தோன்றியது. வில்லன்களாக நடித்திருந்த அந்த நான்கு சிறுவர்களும் அபாரம். காஜல் அகர்வால் வழக்கம் போலவே கொள்ளை அழகு. சண்டை காட்சிகளை படமாக்கிய விதமும், இறுதிக் காட்சியும் அபாரம். He isn’t a saint or a sinner always. He is resilient.

5. பாஸ் என்கிற பாஸ்கரன் (10-09-2010)

சிவா மனசுல சக்தி பார்த்ததில் இருந்தே எனக்கு இயக்குனர் ராஜேஷ் அவர்களை மிகவும் பிடித்து போனது. காமெடி படம் எடுப்பது தான் மிகவும் கஷ்டமான வேலை. அதை எளிதாக செய்கிறார் இவர். அதிலும் குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சியையே சிறிதும் முகத்தில் காட்டாத ஆர்யாவினை கொண்டு இப்படி ஒரு படம் கொடுத்ததற்காக அவருக்கு நன்றிகள். படத்தின் முதுகெலும்பு சந்தானம் என்றால் மிகையில்லை. Everything’s right about this comic caper.

6. எந்திரன் (01-10-2010)

படத்தை பற்றி புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி என்று சொல்கிறார்கள். This is my obvious pick of the litter.

7. ரத்த சரித்திரம் - 1 (22-10-2010)

The master is back with a bang. ராம் கோபால் வர்மாவின் பெட்டகத்திலிருந்து வந்திருக்கும் ஒரு ஆக்க்ஷன் த்ரில்லர். மணிரத்ணம் போன்றவர்கள் இவரை பார்த்து உண்மை சம்பவங்களுக்கு எப்படி திரைக்கதை அமைப்பது என்று பாடம் படிக்கலாம். படம் பார்த்ததிலிருந்து புக்கா ரெட்டியாக நடித்த அபிமண்யூ சிங்கை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

8. ஈசன் (17-12-2010)

மிகவும் எதிர் பார்த்திருந்த சசிகுமார், சமுத்திரக்கனியின் கூட்டணியில் உருவான மூன்றாவது படம். வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அருமையான த்ரில்லர். தமிழக அரசியலில் அதிகாரிகளிடையே லாபியிங் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். A.L. அழகப்பனின் நடிப்பு மிகவும் அருமை. A bit disillusioned yet a good movie.

Sunday, November 21, 2010

பொடிமாஸ் - 11/21/2010

வர வர "டீலா? நோ டீலா?" நிகழ்ச்சி எரிச்சலை கிளப்புகிறது. ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் வந்து ஒப்பாரி வைக்கிறார். நிச்சயம் நிகழ்ச்சி நடத்துபவர்கள் அதனை ஊக்குவிக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. இம்மாதிரி நிகழ்ச்சிகளில் வந்து அழுது TRP யை உயர்த்தும் உத்தியை முதலில் தொடங்கியது சன் டிவியின் அரட்டை அரங்கம் தான் என்று நினைக்கிறேன். யாருக்கு தான் வாழ்க்கையில் கஷ்டம் இல்லை? ஆனால் அதனை முன் பின் தெரியாதவர்களிடம் கூறி ஒப்பாரி வைப்பது அநாகரீகத்தின் உச்ச கட்டம். அதுவும் தொலைக்காட்சியில் பலர் பார்க்க அதை செய்வது மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது. அதுவும் நிகழ்ச்சி நடத்தும் ரிஷி பங்கேற்பாளர்களை தொட்டு, தடவி பேசுவது அதை விட அதிகம் எரிச்சல் அடைய செய்கிறது. வெளிநாட்டு நிகழ்ச்சிகளின் கருவை காப்பி அடிக்கும் இவர்கள் அங்கு நிகழ்ச்சி நடத்தும் முறையையும், நடத்துபவர்களின் நடத்தையையும் சேர்த்து காப்பி அடித்தால் நன்றாக இருக்கும்.

ஒரு வழியாக 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் கடந்த மாதம் 14 ஆம் தேதியுடன் நன்கு நடந்து முடிந்தன. இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி மற்றும் 36 பவழ பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதே போன்ற ஒரு அணியை நாம் ஒலிம்பிக் போடிகளுக்கு தயார் செய்தால் குறைந்த பட்சம் 10 பதக்கங்களாவது வாங்குவது உறுதி.வழக்கம் போலவே இதிலும் பல கோடி ரூபாய் ஊழலும் முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. வழக்கம் போலவே CBI விசாரனை மேற்கொள்ளும். வழக்கம் போலவே குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள். என்னை கேட்டால் விசாரனை விசாரனை என்று அதற்கு அநாவசியமாக அரசு பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக லஞ்சத்தையும், ஊழலையும் சட்டபூர்வமாக்கி விடலாம். முதலில் அரசுக்கு அதனால் அதிக வருமான வரி கிடைக்கும். இரண்டாவது பணம் வெளி நாடுகளுக்கு போகாமல் நம் நாட்டிலேயே இருக்கும். மூன்றாவது அப்பணம் இங்கே பயமின்றி செலவு செய்யப் படுவதினால் நாட்டின் பொருளாதாரமும் கூடும். லஞ்ச ஒழிப்பு சட்டம் இருப்பதனால் இப்பொழுது நாட்டில் பாலாறும் தேனாறுமா ஓடுகிறது? A little bit of sarcasm adds spice to the life. Won’t it add to the constitution?சென்ற வாரம் இங்கே இருக்கும் ஒரு இந்திய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு பல இடங்களுக்கு சென்று கடைசியாக "100 கோடி மக்கள் இருக்கும் இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு தங்கத்திற்கு முக்குகிறது" என்ற அந்நியன் வசனத்தில் வந்து முடிந்தது. கடந்த ஒலிம்பிக்கில் எட்டு தங்க பதக்கங்களை வாங்கிய அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவின் கலோரிகள் எவ்வளவு தெரியுமா? சுமார் 12000 கலோரிகள். ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் உணவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஆறு சராசரி மனிதர்கள் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவினை இவர் ஒருவர் மட்டுமே சாப்பிடுகிறார். அவர் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவு கீழே உள்ளது பாருங்கள்.

காலை: முட்டை, சீஸ், லெட்டூஸ், தக்காளி, வெங்காயம், மேயோ சேர்த்த சான்ட்விச்கள் மூன்று. ஐந்து முட்டை ஆம்லெட் ஒன்று. சாக்லேட் சிப்கள் கலந்த பான்கேக் மூன்று. ஃபிரென்ச் டோஸ்ட் மூன்று. இரண்டு கப் காபி.

மதியம்: ஒரு பவுண்டு பாஸ்தா. ஹாம், சீஸ், மேயோ சேர்த்த பெரிய சான்ட்விச்கள் இரண்டு. சுமார் 1000 கலோரி எனர்ஜி ட்ரின்க்குகள்.

இரவு: ஒரு பவுண்டு பாஸ்தா. ஒரு பெரிய சைஸ் சீஸ் பீசா. சுமார் 1000 கலோரி எனர்ஜி ட்ரின்க்குகள்.

யோசித்து பாருங்கள். இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களில் எவ்வளவு மக்களால் இப்படி தினமும் சாப்பிட முடியும்?"இளைய நிலா" ராஜாவின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சில நேரங்களில் எனது ஐபாடில் ஷஃப்புலாகி பாடல்கள் வரும் பொழுது அந்தி மழையையும், பணி விழும் மலர்வனத்தையும் ஸ்கிப் செய்திருக்கிறேன். ஆனால் என் நினைவில் இளைய நிலாவை ஸ்கிப் செய்ததே கிடையாது. பாடல் வந்து விட்டால் முழு பாடலையும் கேட்டு விட்டுத்தான் அடுத்த வேலை. அதிலும் இடையே வரும் அந்த ஃப்ளூட் இன்ட்ரலூட் அட்டகாசம். கேட்கும் பொழுதே மனம் சொக்கும். ராஜாவால் மட்டுமே அப்படி ஒரு இசையை தர முடியும். கோல்டன் க்ளோப்களுக்கும், ஆஸ்கார்களுக்கும், க்ராமிக்களுக்கும் பின்னரும் கூட நான் ராஜா ராஜா என்று தொண்டை கிழிய கத்துவது இது போன்ற இசைகளுக்காகத்தான்.

கீழே அதன் வீடியோ இருக்கிறது. நான் சொன்ன ஃப்ளூட் இன்ட்ரலூட் 1:12 இல் தொடங்கி இருந்து 1:22 வரை இந்த வீடியோவில் வருகிறது. பார்த்து, கேட்டு மகிழுங்கள்.


Saturday, November 20, 2010

என்னை கவர்ந்த அனிமேஷன் படங்கள்

1. Spongebob Squarepants Movie

Spongebob வசிக்கும் பிகினி பாட்டத்தில், King Neptune னின் கிரீடம் காணாமல் போய்விடுகிறது. பழி Spongebob ன் முதலாளி Mr. Krabs மீது விழுகிறது. இதை திட்டமிட்டு செயல் படுத்தியது Mr. Krabs ன் எதிரி Plankton. தொலைந்த கிரீடத்தை கண்டு பிடித்து Mr. Krabs ஐ மரண தண்டனையிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு நமது நாயகனுக்கு வருகிறது. அதுவும் அதை ஆறு நாட்களுக்குள் செய்ய வேண்டும். நமது நாயகன் அதை செய்து முடித்தானா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

2. Monsters, Inc.

Monstropolis என்ற நகரத்தில் முழுதும் மான்ஸ்டர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இருப்பது மான்ஸ்டர்களுக்கான உலகத்தில். அவர்களுக்கான மின்சாரத்தை வழங்குவது Monsters, Inc. என்ற நிறுவனம். கதவுகளின் வழியாக மனிதர்கள் வாழும் உலகுக்கு வந்து குழந்தைகளின் அறைக்குள் நுழைந்து அவர்களை பயமுறுத்தி அதிலிருந்து மின்சாரம் எடுக்கிறார்கள் அவர்கள். ஆனால் அவர்களுக்கு மனிதர்கள் என்றால் பயம். அதனால் மனிதர்களையோ, மனிதர்கள் உபயோகிக்கும் பொருட்களையோ தொடவே மாட்டார்கள். அந்த நிறுவனத்தில் வேலை செய்பவன் நமது நாயகன் Sulley. அந்த நிறுவனத்தில் வேலை செய்பவன் நமது நாயகன் Randall. Sulley யை அழிக்கும் நேரத்திற்காக காத்திருப்பவன்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் Sulley மனித உலகுக்கு வந்து திரும்பும் பொழுது அவனுடன் ஒரு பெண் குழந்தையும் மான்ஸ்டர்களின் உலகுக்கு வந்து விடுகிறது. இதை முதலில் அறிந்து Sulley பயப்படுகிறான். பின்னர் அக்குழந்தையிடம் அன்பு கொண்டு அதனை காப்பாற்றுவதற்காக பாதுகாத்து மீண்டும் மனித உலகுக்கு அனுப்ப முயல்கிறான். அவனது முயற்சிகள் தோல்வி அடைகிறது. இடையில் Randall அதனை அறிந்து இதை வைத்தே Sulley ஐ அழிக்க முயல முடிவு என்ன? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

3. Finding Nemo

Marlin மற்றும் அவனது மனைவி Coral இருவரும் தங்களின் வாரிசுகள் பிறப்பதற்காக தங்களின் புது இல்லத்தில் காத்திருக்கிறார்கள். அப்பொழுது ஒரு பெரிய சுறா வந்து Coral மற்றும் அவர்களது நூற்றுக்கணக்கான முட்டைகள் அனைத்தையும் சாப்பிட்டு விடுகிறது. மிஞ்சியது Marlin மற்றும் ஒரே ஒரு முட்டை. அந்த முட்டையில் பிறந்த தனது மகனுக்கு Nemo என்று பெயரிடுகிறான் Marlin. தனக்கு முன் ஏற்பட்ட அனுபவத்தால் Nemo வை படு ஜாக்கிரதையாக வளர்க்கிறான் Marlin. இது Nemo விற்கு பிடிக்க வில்லை.

ஒரு நாள் தனது தந்தையின் பேச்சை மீறி கடலின் மேற்தளத்திற்கு செல்ல முயலும் Nemo வலையில் சிக்கிக் கொள்கிறான். Marlin னுக்கு ஒரே ஒரு துப்பு தான் கிடைகிறது. அது Nemo சென்றது Sydney என்பது தான். உடனே Nemo வை தேடி Sydney செல்கிறான் Marlin. அவன் Nemo வை கண்டு பிடித்தானா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

4. Madagaskar

நியூ யார்க் விலங்கியல் பூங்காவில் இருந்து நாஙு விலங்குகள் தப்பி செல்கின்றன. அவை Marty (வரிக் குதிரை), Alex (சிங்கம்), Malman (ஒட்டகச் சிவிங்கி) மற்றும் Gloria (நீர் யானை). இவைகளுடன் சில பெங்குயின்களும் தப்பி செல்கின்றன.வழியில் கப்பலில் ஏற்படும் சண்டையினால் நமது நாயகர்கள் நால்வரும் மடகாஸ்கரில் கரை ஒதுங்குகிறார்கள்.

அங்கு வந்த ஓரிரு நட்களில் Alex பசியினாலும் தனது இயற்கை குணத்தினாலும், Marty யை கொன்று சாப்பிட முயற்சிக்க, மற்ற விலங்குகள் எல்லாம் சேர்ந்து Alex ஐ ஒதுக்குகிறார்கள். Alex உம் தனது குறை அறிந்து காட்டின் வேறு பகுதிக்கு ஒதுங்கி செல்கிறான். அப்பொழுது Fossa என்ற ஒரு வகை விலங்கு கூட்டங்களால் நமது நாயகர்களுக்கு ஆபத்து வர, Alex வந்தானா?, அவர்களை காப்பாற்றினானா?, நமது நாயகர்கள் மீண்டும் நியூ யார்க் சென்றார்களா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

6. Robots

Rodney ஒரு இளம் ரோபோ. அவனது தந்தை Herb. தாயார் Lydia. தான் ஒரு பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற கனவுடன் ரோபோ நகரத்திற்கு வருகிறான். அவன் தனது வழிகாட்டியாக நினைப்பது Bigweld என்ற பெரிய விஞ்ஞானியை. வந்த பிறகு தான் தெரிகிறது BigWeld அவர்களது நிறுவனத்தை Rachet மற்றும் அவனது தாய் Gasket இருவரும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அவர்களுக்கு பணம் சம்பாதிப்பதே குறிக்கோள். பழைய ரோபோக்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிப்பதோ இல்லை அவைகளை பழுது பார்ப்பதோ பணம் சம்பாதிக்க தடையாக இருப்பதால் அதனை நிறுத்தி விடுகிறார்கள் அவர்கள். தட்டி கேட்பவர்களை கொன்று விடுகிறார்கள்.

Rodney Bigweld ஐ சந்திக்க பெரு முயற்சி செய்து முடியாமல் போகவே அவனே பழைய ரோபோக்களை பழுது பார்க்க தொடங்குகிறான். இதனால் கோபம் கொண்ட Gasket அவனை கொல்ல முயற்சி செய்கிறாள். இடையே Herb உடல் நிலை சரியில்லாமல் போகவே அவருக்கு உதிரி பாகங்கள் தேவை படுகிறது. அதை Bigweld ஆல் மட்டுமே தயார் செய்ய முடியும்.

Roodney Bigweld ஐ சந்தித்தானா?, Rachet மற்றும் Gasket தண்டிக்கப்பட்டார்களா?, Herb காப்பாற்றப்பட்டாரா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

6. Toy Story

1995 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் அனிமேஷன் படங்களுக்கெல்லாம் தந்தை. முதன் முதலில் CGI டெக்னாலஜியினால் உருவாக்கப்பட்ட முழு நீள திரைப்படம் இதுவே.

Woody ஒரு கௌபாய் பொம்மை. அதை வைத்திருப்பவன் Davis. அந்த வருடம் பிறந்த நாளில் Davis க்கு Buzz என்ற ஒரு பொம்மை பரிசாக கிடைக்கிறது. அது Davis க்கு மிகவும் பிடித்து போகிறது. அது வரை Davisக்கு பிடித்தமான பொம்மையாக இருந்த Woody இதை கண்டு கோபம் கொள்கிறான். ஒரு நாள் அவர்கள் வெளியே செல்லும் பொழுது Woody யும், Buzz உம் சண்டை போட்டுக் கொண்டு காரிலிருந்து விழுந்து விடுகிறார்கள். அவர்களை Philips என்ற சிறுவன் எடுத்துக் கொள்கிறான். அவனுக்கு பொம்மைகளை உடைத்து, கொல்வது என்றால் மிகவும் பிடிக்கும். நமது நாயகர்கள் இருவரையும் கூட கொல்வதற்கு முயற்சி செய்கிறான்.

அதே நேரத்தில் Davis தனது பெற்றோர்களுடன் வேறு ஒரு ஊருக்கு செல்ல தயாராகிறான். தான் மிகவும் நேசித்த இரு பொம்மைகளையும் காணாமல் வருத்தத்தில் இருக்கிறான் அவன்.

நமது நாயகர்கள் Philips இடம் இருந்து தப்பித்தார்களா?, Davis ஊருக்கு செல்வதற்கு முன்னர் அவனிடம் வந்து சேர்ந்தார்களா? என்பதை DVD வாங்கி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Sunday, October 10, 2010

எந்திரன் (Robo)சூப்பர் ஸ்டாரின் படம் வெளிவரும் நாள் எல்லாம் நமக்கு தீபாவளி தான். அவரின் ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு புதுமையான அனுபவம். அமெரிக்கா வந்து முதலில் நான் பார்த்த அவரின் படம் சிவாஜி. பெரும் ஜனக் கூட்டம். அவ்வளவு கூட்டத்தை அமெரிக்காவில் நான் பார்த்ததே கிடையாது. பல பேர் சிவாஜி படம் போட்ட டி-ஷர்டுடன் வந்திருந்தார்கள். தமிழர்கள் என்றில்லை, தெலுங்கு தேசத்தவர்களுக்கும் தலைவரின் படம் வந்தால் பெரு மகிழ்ச்சி. அவர்களும் விருப்பத்துடன் சென்று பார்ப்பார்கள்.

இப்பொழுது எந்திரனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நெடு நாட்கள் காத்திருந்து படம் வெளி வந்த உடன் பார்க்க முடியாமல் நேற்று தான் பார்க்க முடிந்தது. அட்டகாசமான படம். படம் நெடுக ரஜினியின் விஸ்வரூபம் தான்.

படத்தின் கதை என்று பார்த்தால் ஒன்றும் பெரிதாக இல்லை. வசீகரன் ஒரு பெரிய விஞ்ஞானி. அவர் பல நாட்கள் உழைப்பில் சிட்டி என்றொரு எந்திர மனிதனை உருவாக்குகிறார். அதனை இந்திய இராணுவத்திற்கு பரிசளிக்க விரும்புகிறார். அவரின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட AIRD தலைவர் போரா சிட்டியை சோதனை செய்யும் பொழுது அதனிடம் வசீகரனை கத்தியால் குத்தும் படி கட்டளையிடுகிறார். அதனை சிட்டி செயல் படுத்தும் முன்னர் தடுத்தும் விடுகிறார். பின்னர் இதையே காரணம் காட்டி வசீகரனின் கண்டுபிடிப்பை நிராகரிக்கிறார்.

பின்னர் வசீகரன் சிட்டிக்கு மனித உணர்ச்சிகளை ஊட்டுகிறார். ஒரு கட்டத்தில் சிட்டி வசிகரனின் காதலியான சனா மீது காதல் வயப்படுகிறது. இதனை அறிந்த வசீகரன் சிட்டியை கண்டிக்கிறார். சனாவும் இது நடக்காத காரியம் என்று கூறுகிறாள். இதனால் மனமுடைந்த சிட்டி, இராணுவத்தின் தேர்வில் தோல்வி அடைய, கோபம் கொண்ட வசீகரன் சிட்டியை துண்டு துண்டாக்கி குப்பையில் வீசுகிறார்.

அப்பொழுது அங்கு வரும் போரா, சிட்டியின் துண்டுகளை எடுத்து அதற்கு உயிரளிக்கிறார். அதற்கு எதிர்மறை சக்தியையும் கொடுக்கிறார். அந்த சக்தியை வைத்துக் கொண்டு சிட்டி சனா வை கடத்துகிறது. போராவை கொல்கிறது. தன்னை போலவே பல இயந்திர மனிதர்களை உருவாக்குகிறது. நகரத்தையே அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. பின்னர் வசீகரன் எப்படி சிட்டியை வென்று நகர மக்களையும் சனாவையும் காப்பற்றுகிறார் என்பது தான் கதை.

படத்தில் முதல் பாராட்டு தயாரிப்பாளர் திரு. கலாநிதி மாறன் அவர்களுக்கு தான். பணத்தை தண்ணீராய் செலவு செய்திருக்கிறார். இதற்கு முன்னர் ப்ளூ என்றொரு படம் ஹிந்தியில் எடுத்தார்கள். அதற்கும் நிறைய செலவு செய்யப்பட்டது. ஆனால் படம் படு குப்பை. ஆனால் எந்திரனிலோ சரியாக திட்டமிட்டு செலவு செய்திருக்கிறார்கள். இதனை பார்க்கும் பொழுது ஒருவேளை கமலின் மருதநாயகமும், மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனும் இவரால் நிஜமாகக் கூடுமோ என்ற நம்பிக்கை கூடுகிறது.

அடுத்தது தலைவர். வசீகரனாகவும், சிட்டியாகவும் தலைவர் இரு வேடங்களில் அதகளப்படுத்தி இருக்கிறார். முன்னரே சொன்னது போல படம் முழுதும் அவரின் விஸ்வரூபம் தான். குறிப்பாக படத்தின் பிற்பகுதியில் வரும் வில்லன் ரஜினி. அட்டகாசம். "மே! மே!" என்று அவர் ஆடு போல கத்தும் பொழுது நமக்கு மயிர் சிலிர்க்கிறது. மூன்று முடிச்சு காலத்தில் இருந்து எந்திரன் காலம் வரை தமிழில் வில்லன் என்றால் தலைவர் தான்.

மூன்றாவது இயக்குனர். படம் முழுதும் ஷங்கரின் உழைப்பு தெரிகிறது. டெக்னிகலாக இப்படம் இந்திய சினிமாவின் மைல்கல். கடைசி 15 நிமிடங்கள் ஆங்கிலப் படம் பார்ப்பது போல இருந்தது. படத்தின் எந்தப் பகுதி எந்த ஆங்கிலப் படத்தில் இருந்து சுட்டது என்ற ஆராய்ச்சியெல்லாம் எனக்கு தேவை இல்லாதது. இன்னும் 10 ஆண்டுகளில் கூட தமிழில் இப்படி ஒரு படம் வருமா என்பது சந்தேகமே.

மற்றபடி ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், மேக் அப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சண்டை பயிற்சி, பிண்ணனி இசை என்று ஒவ்வொன்றாக பாராட்டிக் கொண்டிருந்தால் பதிவு பெரிதாகி விடும். அதனால் ஒட்டு மொத்த எந்திரன் குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

குறைகள் என்று பெரிதாக கூறுவதற்கு எதுவும் இல்லை. பாடல்கள் எனக்கு சிவாஜி அளவிற்கு பிடிக்கவில்லை. இன்னும் சில முறை கேட்டால் பிடிக்குமோ என்னவோ. ஐஷ்வர்யாவை கல்லூரி மாணவியாக பார்க்க முடியவில்லை. சந்தானம் மற்றும் கருணாஸ் இருவரும் இப்படத்திற்கு தேவையே இல்லை. மேலும் இந்தியாவே வியக்கும் இயந்திர மனிதனை உருவாக்கும் விஞ்ஞானி இவர்களை போன்ற டம்மி பீஸ்களை தன்னுடன் வைத்துக் கொள்வாரா என்ற கேள்வி வருகிறது. வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.

இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும் தலைவர் தலைவர் தான். அவரால் மட்டுமே இப்படி ஒரு படத்தை அளிக்க முடியும். மொத்தத்தில் தளபதியை போலவே, பாட்ஷாவை போலவே, படையப்பாவை போலவே, சந்திரமுகியை போலவே, சிவாஜியை போலவே எந்திரனும் ஒரு மறக்க முடியாத அனுபவம்.

Friday, October 01, 2010

அஞ்சலி!!!

Monday, September 20, 2010

மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய் கசிவு

ஒரு வழியாக சரியாக ஐந்து மாத போராட்டத்திற்கு பின்னர், 11 மனித உயிரினை குடித்து விட்டு, பல லட்சம் கடல் வாழ் உயிரினங்களை கொன்று விட்டு, சுமார் 775 மில்லியன் லிட்டர் எண்ணையை மெக்ஸிகோ வளைகுடாவில் கலந்த பின்னர், சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் BP நிறுவனத்திற்கு செலவு வைத்த பின்னர் ஒருவழியாக இந்த மாதம் 19 ஆம் தேதி பாதிப்பு ஏற்படுத்திய கிணறு மூடப்பட்டது.

தனியார் நிறுவனங்கள் மீது அரசு வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க தொடங்கி இருக்கின்றன.BP நிறுவனம் பாதிப்புகளை சரி செய்வதற்காக 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை அளித்துள்ளது. தவறுகளை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமெரிக்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. குற்றம் செய்தவர்களுக்கு விரைவில் தண்டனை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இது என்ன இந்தியாவா? சுமார் 10000 உயிர்களை வாங்கிய போபால் விஷ வாயு தாக்குதலில் சம்பந்த பட்டவர்களுக்கு 25 ஆண்டுகள் கழித்து வெறும் 14000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்க?

Saturday, September 18, 2010

100சும்மா ஒரு விளம்பரம் தான். "சரி, அதுல என்ன பெருமை? கெட் அவுட்." என்று நீங்கள் கூறுவதற்குள் நான் அப்பீட்டுகிறேன். நன்றி.

Tuesday, September 14, 2010

அஞ்சலி!!!

Thursday, September 09, 2010

அஞ்சலி!!!சென்ற மாதம் தான் அவரது மகன் அதர்வா நடித்த பானா காத்தாடி படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை கடமை முடிந்தது என்று சென்று விட்டாரா? கடைசி வரை கல்லூரி மாணவராகவே நடித்து விட்டு சென்றுவிட்டார். 46 வயது சாகும் வயதா? தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே மாரடைப்பு வந்து இறந்திருக்கிறார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

Saturday, August 14, 2010

இன்று முதல் நான் அப்பா!

நண்பர்களே!

இன்று முதல் இந்திய சுதந்திர தினத்தை நான் கொண்டாடுகிறேனோ இல்லையோ, பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் போகிறேன். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்து, கேக் வெட்டி, விருந்து வைத்து சிறப்பாக கொண்டாட முடிவு செய்து விட்டேன்.

காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை, இன்று நான் அப்பாவாகி விட்டேன். சுமார் இருபத்திரண்டு மணிநேர பிரசவ போராட்டத்திற்கு பின்னர் அழகான குழந்தையாக ப்ரணவ் பிறந்து விட்டான் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.

எனது மனைவியுடன் பிரசவ அறையில் இருந்த அந்த இருபத்திரண்டு மணித்துளிகளும் என் வாழ்வில் மறக்க முடியாது. பிரசவம் என்றால் என்ன? தாய்மை என்றால் என்ன? என்பதை கடந்த பத்து மாதங்களில் அறிந்து கொண்டேன்.

குழந்தையை முதலில் பார்த்து வருடிய அந்த நொடியில் நான் உணர்ந்ததை வார்த்தையில் விவரிக்க இயலாது.

எனக்கு தகப்பன் என்ற அந்தஸ்தையும், பூப்போன்ற அழகான புதிய உறவையும் அளித்த எனது மனைவிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

இவன்,
சத்யப்ரியன்

Saturday, June 19, 2010

ஆண்டு நிறைவு

பதிவுகள் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. பதிவுகள் தொடங்கிய முதல் மூன்றாண்டுகள் நிறைய எழுதினேன். ஆனால் இப்பொழுது அதிகம் எழுத நேரம் இல்லை. திரட்டிகளில் இருந்து விலகியும் விட்டேன். பின்னூட்டங்களும் அதிகம் இடுவதில்லை. நட்பு வட்டமும் அவ்வளவாக இப்பொழுது இல்லை.

இருந்தாலும் தமிழில் எழுதும் ஆர்வம் மட்டும் இன்னும் குறையவில்லை. தமிழ்மணத்தில் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். இப்பொழுது எழுதும் பலர் இன்னும் சிறப்பாக எழுதுகிறார்கள். முன் போல அரசியல் அவ்வளவாக இல்லை. மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

Sunday, May 23, 2010

மங்களூர் விமான விபத்துஇறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள். அவர்களின் ஆத்மாக்களுக்கு இறைவன் சாந்தி அளிக்கட்டும்.

Saturday, May 15, 2010

Learn to say "No"

"A 'No' uttered from the deepest conviction is better than a 'Yes' merely uttered to please, or worse, to avoid trouble." – Mahatma Gandhi

பொதுவாக யாருக்குமே "இல்லை", "கிடையாது", "முடியாது" போன்ற சொற்களை சொல்ல பிடிப்பதே இல்லை, என்னையும் சேர்த்து. முதல் காரணம் யாரையும் காயப்படுத்தவோ இல்லை ஏமாற்றவோ விரும்பாத மனம், இரண்டாம் காரணம் உறவுகள் முறிந்துவிடுமோ என்ற பயம். அதனாலேயே "சரி" என்று கூறுவது நமக்கு இலகுவாகிறது. ஆனால் "சரி" என்ற பதில் அதனுடன் முடிந்து விடுவதில்லை. "முடியாது" என்று கூறுவதில் சில சங்கடங்கள் உள்ளது போலவே "சரி" என்று சொல்வதிலும் சில சங்கடங்கள் உள்ளது. என்ன பல நேரங்களில் அது நமக்கு தெரிவதில்லை.

நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு முறை ஏதோ ஒன்றுக்கு நாம் "சரி" என்று கூறும் பொழுதும் வேறு ஏதோ ஒன்றுக்கு "முடியாது" என்ற மறைமுக பதிலை அளிக்கிறோம்.

உதாரணத்திற்கு,

1. நமக்கு பிடிக்காத ஒரு திருமணத்திற்கு "சரி" என்று கூறும் பொழுது, நமக்கு பிடித்த திருமணத்திற்கு "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.
2. நமக்கு பிடிக்காத ஒரு வேலைக்கு "சரி" என்று கூறும் பொழுது, நமக்கு பிடித்த வேலைக்கு "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.
3. வார இறுதியில் வேலைக்கு வர மேலாளரிடம் "சரி" என்று கூறும் பொழுது, வீட்டில் உள்ளவர்களிடம் நேரம் ஒதுக்க "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.
4. தேவை இல்லாத செயல்களுக்கு "சரி" என்று கூறும் பொழுது தேவையான செயல்களுக்கு "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலரது வாழ்க்கையை கூர்ந்து கவனித்தோமானால் அவர்கள் சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்பிற்கு "சரி" கூறியதுடன் நில்லாமல் தவறான பல வாய்ப்புகளுக்கு சரியாக "முடியாது" என்ற பதிலை அளித்திருப்பார்கள்.

நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையை நேசிக்கிறீர்களா? உங்கள் கனவுகளை நேசிக்கிறீர்களா? உங்கள் தொழிலை நேசிக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தை நேசிக்கிறீர்களா? உங்கள் நேரத்தை நேசிக்கிறீர்களா? இதற்கான பதில் "ஆம்" என்றால், இவற்றினை மதிக்காத எந்த ஒரு செயலுக்கும் நீங்கள் "முடியாது" என்ற பதிலையே அளிக்க வேண்டும்.இனி எவ்வாறு இலகுகாக "முடியாது" என்று மறுத்தளிப்பது என்பதை பார்க்கலாம்.

1. உங்கள் சிந்தனையில் தெளிவாக இருங்கள்

பல நேரங்களில் நாம் "சரி" என்று கூறுவதன் காரணம், நமக்கு "முடியாது" என்று மறுத்தளிக்க போதுமான காரணம் தெரியாதது தான். கவனிக்கவும், "முடியாது" என்று மறுத்தளிக்க நமக்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆனால் அது என்ன என்று தெரியாததினால் பல நேரங்களில் "சரி" என்று கூறிவிடுகிறோம். அதனால் தான் சொன்னேன் உங்கள் சிந்தனையில் தெளிவாக இருங்கள் என்று. உங்களுக்கு தெளிவான சிந்தனை இருந்தால், ஒரு செயலை தொடங்கு முன், இது தேவையா? இல்லையா? அவசியமா? அவசியம் இல்லையா? என்று பகுத்தறிந்து பதிலை அளிக்க முடியும்.

2. "சரி" என்று கூறுவதன் பின்விளைவுகளை உணர்ந்து கொள்ளுங்கள்

பல நேரங்களில் நாம் சிறு சிறு செயல்கள் தானே என்று நம்மால் இயலாது என்ற நிலையிலும் "சரி" என்று சொல்லிவிடுகிறோம். அதன் பின்விளைவுகளை பற்றி அறிந்து கொள்ளாமல். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல பல சிறு செயல்கள் சேர்ந்து பெரியதாகி நம்மால் நமக்கு தேவையான எந்த முக்கியமான செயலையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். இன்னும் சில நேரங்களில் "சரி" என்று ஒப்புக் கொண்டு நம்மால் செய்ய முடியாமல் போனால் தேவை இல்லாத வருத்தங்களும், ஏமாற்றங்களும் ஏற்படும்.

3. "முடியாது" என்று கூறுவது ஒன்றும் பெரிய பாவம் இல்லை என்பதை உணருங்கள்

நம்மிடம் முடியுமா? இல்லை முடியாதா? என்ற ஒரு கேள்வி கேட்கப்படும் பொழுது "முடியும்" என்று சொல்வதற்கு நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை "முடியாது" என்று சொல்வதற்கும் இருக்கிறது. அப்படி சொல்வதினால் நம்மை தவறாக நினைப்பார்களோ? நம் மீது கோபம் கொள்வார்களோ? நம்மை பற்றிய அவதூறாக பேசுவார்களோ? அவர்கள் மனது புண்பட்டு விடுமோ? என்ற கவலையெல்லாம் தேவையற்றது. வாழ்வில் இன்பமும், துன்பமும் கலந்து இருப்பதை போலவே, கேள்விகளுக்கு "சரி", தவறு", "முடியும்", "முடியாது" போன்ற பதில்களும் கலந்தே இருக்கின்றன. ஒருவரால் வாழ்நாள் முழுதும் "சரி" என்ற பதிலை எல்லா கேள்விகளுக்கும் அளித்துக் கொண்டே இருக்க முடியாது. அப்படி ஒரு வேளை யாராவது நீங்கள் அளித்த "முடியாது" என்ற பதிலால் உங்கள் மீது கோபம் கொண்டாலும், அதனால் வருந்த தேவை இல்லை. நூறு முறை "முடியும்" என்று சொல்லி விட்டு நூற்றியோராவது முறை "முடியாது" என்று சொல்லி நட்பை கெடுத்துக் கொள்வதை விட முதல் முறையே அப்படி சொல்லி கெடுத்துக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை.

4. மரியாதையாக மறுத்தளியுங்கள்

"இல்லை", "கிடையாது", "முடியாது" போன்ற பதில்கள் கத்தியின் மீது நடப்பதினை போன்றது. சரியாக சொல்லத் தவறினால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். "முடியாது" என்று கூறுவதினாலேயே மற்றவரின் மீது நமக்கு மரியாதை இல்லை என்று பொருள் இல்லை. அதனால் மிகவும் மரியாதையுடன் மறுத்தளியுங்கள். தன்மையாக கூறுங்கள். எழுத்தின் மூலம் தெரியப் படுத்த வேண்டும் என்றால் முதலில் எழுதியதை ஒருமுறைக்கு நான்கு முறை படித்து பாருங்கள். தொலைப் பேசியிலோ, நேரிலோ தெரியப் படுத்த வேண்டும் என்றால் குரலில் அமைதி தெரியவேண்டும். பதட்டத்துடனோ இல்லை கோபமாகவோ எதையும் மறுக்க கூடாது. முடிந்தால் அவர்களுக்கு மாற்று ஆலோசனை கூறுங்கள். தாங்கள் மறுப்பதற்கான காரணத்தையும் அமைதியாக கூறுங்கள்.

5. மாற்று பதில்களை தேடுங்கள்

பல நேரங்களில் நமக்கு முன் பின் தெரியாதவர்கள் அல்லது நன்கு பழக்கம் இல்லாதவர்கள் நம்மால் அளிக்க முடியாத உதவியை கேட்க நேரிடும். அத்தகைய நேரங்களில் பதிலை தாமதமாக அனுப்பியோ இல்லை பதிலே அனுப்பாமலோ கூட நமது மறுமொழியை அளிக்கலாம். No reply is also a form of reply.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், "முடியாது" என்று மறுத்தளிப்பது பல நேரங்களில் அவசியமான ஒன்று. அதை எப்படி செய்வது என்று புறிந்து செய்யுங்கள். வெற்றி உங்களுக்கே.

Sunday, April 18, 2010

நியூசிலாந்து - 4

Christchurch

A view from Christchurch gondala.

Christchurch

Cathedral Square

Christchurch

Taken during a trip from Christchurch to Greymouth.

Queenstown

Taken from Lake Wakatipu.

Queenstown

Taken during trip to Milford Sound.

Queenstown

Another view of lake Wakatipu.

Queenstown

Lake Wakatipu again.

Queenstown

Lake Wakatipu taken from the top of Queenstown gondala.

Milford Sound

On the way to Milford Sound from Queenstown.

Milford Sound

Another view from Milford Sound.

Milford Sound

A view from Milford Sound.

Milford Sound

Milford Sound near Queenstown.

Orewa Beach

Beautiful Orewa Beach near Auckland.

Muriwai Beach

My nephew Abhishek playing in Muriwai Beach.

Muriwai Beach

A small rock in the Muriwai Beach near Auckland.

Saturday, April 10, 2010

நியூசிலாந்து - 3

Queenstown விமான நிலையத்திலிருந்து Wakatipu ஏரிக்கரையில் இருக்கும் எங்களின் ஹோட்டலுக்கு செல்லும் வழியெல்லாம் பசுமை பசுமை பசுமை. கண்கொள்ளா காட்சி. ஹோட்டலுக்கு சென்று பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள Gondala ride செல்லலாம் என்று இருந்தோம். ஆனால் அன்று ஒரே மழை. அதனால் எனது மனைவியும் அவரது சகோதரியும் ஷாப்பிங் சென்று விட, நானும், எனது மனைவியின் சகோதரியின் கணவரும் பஞ்ஜீ ஜம்பிங் சென்றோம்.

அது உலகின் முதலில் உருவான பஞ்ஜீ ஜம்பிங் இடம். Kawarau Bridge என்று பெயர். குஷி படத்தில் "மொட்டு ஒன்று மலர்ந்திட" பாடலுக்கு முன்னர் விஜய் குதிப்பாரே அந்த இடம் தான் அது. எனது முதல் அனுபவம். அருமையாக இருந்தது.

அன்று இரவு Gondala ride சென்று பின்னர் ஒரு படகு சவாரியும் சென்றோம். மறுநாள் முழுதும் Milford Sound பயணம். ஒரே நாளில் சென்று திரும்பினோம். முழுதும் கண்ணாடியினால் ஆன ஒரு பேரூந்தில் நான்கு மணி நேர பயணம். பின்னர் இரண்டு மணி நேரம் படகில் பயணம். வழி முழுதும் அருமையான காட்சிகள்.

மொத்தத்தில் அதுவும் ஒரு இனிமையான பயணமாக அமைந்தது. ஆனால் ஒரே குறை. நாங்கள் Queenstown இல் இருந்தெ அந்த மூன்று நாட்களில் தான் மும்பை தாக்குதல்கள் நடந்தன. பலர் கொன்று குவிக்கப்பட்டனர். நாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் அங்கே உள்ள அனைவரும் மும்பையை பற்றி எங்களிடம் விசாரித்துக் கொண்டே இருந்தனர்.

மறுநாள் அங்கிருந்து கிளம்பி Auckland சென்றோம். நியூசிலாந்தில் இருக்கும் மிகப் பெரிய நகரம் இது. இங்கும் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம் ஏற்பட்டது. முதல் நாள் நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து Auckland நகரத்திற்கு வருவதற்கு பேரூந்தில் பயணம் செய்தோம். ஓட்டுனரிடம் வழி விசாரித்தோம். அதற்கு அவர், நகரத்தின் பிரதான சாலையில் வண்டியை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி வந்து எங்களுக்கு வழி காட்டிவிட்டு பின்னர் சென்றார். சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வண்டி அங்கே நின்றிருக்கும். அவ்வளவு தோழமையுடன் பழகுகிறார்கள் நியூசிலாந்து மக்கள்.

அங்கே உள்ள Sky Tower உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்று. அதன் மேலே சென்று நகரின் அழகை கண்டு ரசித்தோம். மேலும் அங்கே பல கடற்கரைகள் உள்ளன. Muriwai Beach அங்கே உள்ள மிக அழகான ஒரு கடற்கரை.

பத்துநாட்கள் சந்தோஷமாக கழித்துவிட்டு மனம் நிறைய மகிழ்ச்சியுடன் அமெரிக்கா வந்து சேர்ந்தோம். வாழ்வில் மறக்க முடியாத ஒரு பயண அனுபவமாக இது அமைந்தது.

அங்கு நான் எடுத்த புகைப்படங்களை முன்னரே எனது புகைப்பட பதிவில் ஏற்றி இருக்கிறேன். இருந்தாலும் அடுத்த பதிவில் இங்கும் அளிக்கிறேன்.

Wednesday, March 10, 2010

நியூசிலாந்து - 2

சரியாக நாங்கள் ஊர் கிளம்பும் அந்த நாளில் எனது மனைவிக்கு உட்ல நிலை சரியில்லை. கடுமையான இடுப்பு வலி. எதனால் என்றே தெரியவில்லை. நாங்கள் வரவில்லை என்றும் எனது மனைவியின் சகோதரியை கிளம்பும் படியும் கூறிவிட்டோம். அடுத்த நாள் அதிகாலை கிளம்ப வேண்டும். முதல் நாள் நள்ளிரவு எனது மனைவி தான் வருகிறேன் என்று கூறினார்.

உடனே துணிகளை மூட்டையாக்கி பெட்டிகளில் அடுக்கி ஒரு வழியாக கிளம்பி விட்டோம். Los Angeles மாநகரத்தில் சுமார் ஏழு மணிநேர காத்திருப்பு. அந்த நேரத்தில் நகரினை சுற்றி பார்க்க முடிவு செய்தோம். முன்னரே ஒரு முறை சென்றிருந்தாலும் இம்முறையும் அழகான அனுபவமாக அது அமைந்தது.

ஊர் சுற்றி பார்த்து விட்டு, திரும்பி வந்து, அமெரிக்க டாலர்களை நியூசிலாந்து டாலர்களாக மாற்றி ஒரு வழியாக நியூசிலாந்து செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தோம். ஏர் நியூசிலாந்தில் இதுவே எங்கள் முதல் பயணம். எகனாமி க்ளாஸே படு அமர்களமாக இருந்தது. நல்ல லெக் ஸ்பேஸ், அருமையான உணவு, பொழுதை கழிக்க பல நல்ல படங்களின் தொகுப்பு என்று குறையே இல்லாமல் கொடுத்த காசிற்கு மேல் கூவினார்கள்.

போய் இறங்கிய இடம் Auckland. அங்கே இருந்து அடுத்த அரை மணி நேரத்தில் Christ Church செல்லும் விமானம். போய் இறங்கிய உடன் தான் தெரிந்தது எனது மனைவியின் சகோதரியின் ஒரு பெட்டி காணவில்லை என்று. உடனே அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு எங்கள் ஹோட்டலுக்கு வந்தோம். அங்கே நாங்கள் Ridges என்ற ஹோட்டலில் தங்கி இருந்தோம்.

Cathedral Square, Antartic Center, Gondola Ride, Tram ride என்று இரண்டு நாட்கள் பல இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தோம். இதற்கிடையே எங்கள் பெட்டியும் வந்து சேர்ந்தது. அடுத்த நாள் Christ Church இல் இருந்து Greymouth செல்ல ரயில் பயணம். வழி நெடுக அழகான இயற்கை காட்சிகள். மீண்டும் Greymouth இல் இருந்து Christ Church பயணம். மறக்கவே முடியாத ஒரு அனுபவம்.

அடுத்த நாள் அங்கிருந்து Queenstown செல்ல வேண்டும். அப்பொழுது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம் நடந்தது. முதல் நாளிரவு நாங்கள் ஊர் சுற்றிவிட்டு இரவு சுமார் 12 மணிக்கு வந்தோம். மறு நாள் காலை 4 மணிக்கு நாங்கள் கிளம்ப வேண்டும். எங்களை இறக்கிவிட்ட கார் டிரைவரையே மீண்டும் வர முடியுமா என்று கேட்டோம். அதற்கு அவர் தன்னால் வர முடியாதென்றும் ஆனால் தான் வேறு ஒருவரை அனுப்புவதாகவும் கூறினார். சிறிது அவ நம்பிக்கையுடனேயே அறைக்கு திரும்பினோம். ஆனால் சரியாக அடுத்த நாள் அதிகாலை 3:50 மணிக்கு வந்து விட்டார் அந்த டிரைவர். நாங்கள் அனைவரும் வண்டியில் அமர்ந்த உடன், அந்த டிரைவருக்கு ஒரு ஃபோன் வந்தது. அது முதல் நாள் எங்களை இறக்கிவிட்ட டிரைவரிடமிருந்து. அவர் சரியாக வந்து விட்டாரா? எங்களை ஏற்றி விட்டாரா? என்பதை அறிந்து கொள்ள. அசந்து விட்டோம்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி Queenstown வந்து சேர்ந்தோம்.

Wednesday, March 03, 2010

நியூசிலாந்து - 1

There's a real purity in New Zealand that doesn't exist in the states. It's actually not an easy thing to find in our world anymore. It's a unique place because it is so far away from the rest of the world. There is a sense of isolation and also being protected.

-Elijah Wood

உலக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய தேசங்கள் இரண்டு ஒன்று ஸ்விட்ஸர்லாந்து மற்றொன்று நியூசிலாந்து. இதில் ஒன்றான நியூசிலாந்திற்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு 2008 ஆம் ஆண்டு எனக்கு கிடைத்தது.

2008 ஆம் ஆண்டு thanks giving விடுமுறைக்கு எங்காவது செல்ல வேண்டும் என்று எனது மனைவியும் நானும் முடிவு செய்து விட்டோம். எங்கு சென்றாலும் எங்களுடன் எனது மனைவியின் சகோதரியின் குடும்பமும் வருவதாக திட்டம். அதுவரை முடிவுகள் எடுப்பது எளிதாக இருந்தது. ஆனால் எங்கு செல்லலாம் என்று முடிவு செய்வது மிகவும் கடினமாக இருந்தது. முதலில் உள் நாட்டிலிருந்து தொடங்கினோம். எனது மனைவிக்கும் சரி, அவரது சகோதரிக்கும் சரி, குளிர் மிகவும் தாங்க முடியாதாகையால் பல இடங்கள் அடிபட்டுக் கொண்டே வந்தன. கடைசியில் உள் நாட்டில் இருந்தது இரண்டே இடங்கள். ஒன்று ஃப்ளோரிடா, மற்றொன்று ஹவாய்.

இதில் ஃப்ளோரிடா வில் மையாமி போய் பின்னர் பஹாமாஸ் போகலாமா இல்லை ஓர்லான்டோ சென்று டிஸ்னீ மற்றும் யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் போகலாமா என்ற விவாதத்தில் ஃப்ளோரிடா முற்றிலுமாக அடிபட்டு போனது. எஞ்சி இருந்தது ஹவாய் மட்டுமே.

சரி ஹவாய் போகலாம் என்று முடிவு செய்து, நண்பர்களிடமும் இணையத்திலும் தகவல்கள் சேகரித்து விமான டிக்கட் பதிவு செய்யும் நாளில் எனது மனைவி, கிட்டத்தட்ட அதே செலவில் நியூசிலாந்து சென்று விடலாம் என்ற தகவலை கூறினார். உடனே அதற்கான தகவல்களை சேகரிக்க முடிவு செய்தோம். ஒரு வார ஆராய்ச்சிக்கு பின்னர் ஹவாய் பயணத்திற்கான செலவை விட நியூசிலாந்து பயணத்திற்கான செலவு சுமார் மூன்று மடங்கு அதிகம் வந்தது. இருந்தாலும் மனதில் எழும்பிவிட்ட ஆசையினால் நங்கள் அனைவரும் நியூசிலாந்து செல்வதாக முடிவி செய்தோம்.

முதலில் விமான டிக்கட் பதிவு செய்ய எங்கள் பயண அட்டவனை தயாரானது. Washington, DC -> Los Angeles -> Auckland -> Christ Church -> Queenstown -> Auckland -> Los Angeles -> Washington, DC என்று முடிவு செய்து, அனைத்திற்கும் விமான டிக்கட் வாங்கினோம். எனது மனைவியின் சகோதரி, அவரின் கணவர் மற்றும் அவர்களின் மகன் மூவரும் அமெரிக்க நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் அவர்களுக்கு நியூசிலாந்து செல்ல விசா தேவை இல்லை. ஆனால் எனக்கும் எனது மனைவிக்கும் விசா வாங்க வேண்டும். பின்னர் அதற்கு விண்ணப்பித்து இன்று நாளை என்று நீட்டி அதுவும் ஒரு வழியாக ஒரு வார காலத்தில் எங்களுக்கு கிடைத்தது.

பின்னர் துளசி டீச்சர் மற்றும் பிற நண்பர்களிடம் நியூசிலாந்தை பற்றி விசாரித்து அங்கே என்ன செய்வது என்று முடிவு செய்து கொண்டோம். அனைத்தும் முடிவான பின்னர் அலுவலகத்தில் சொல்லி விடுப்பு எடுத்து ஒரு வழியாக நாங்கள் நியூசிலாந்து செல்லும் அந்த நாளும் வந்தது.

Thursday, February 25, 2010

200!!!

வாழ்த்துக்கள் சச்சின். வேறு யாரையும் விட நீங்கள் இந்த சாதனையை செய்ய அதிகம் பொருத்தமானவர். அடுத்த தலைமுறையினருக்கு ஒன்றிரண்டு சாதனைகளையாவது விட்டு வையுங்கள் :-)
Photos © Associated Press

Sunday, February 14, 2010

பொடிமாஸ் - 02/14/2010


சென்ற மாதம் மட்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆறு ரயில் விபத்துகள் நடந்திருக்கின்றன. சுமார் இருபது பேர் இறந்திருக்கிறார்கள். நூறு பேர்களுக்கும் மேல் காயமடைந்திருக்கிறார்கள். ரயில்வே அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.நேற்று பூனாவில் உள்ள ஒரு ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பில் சுமார் இருபது பேர் இறந்து விட்டார்கள். அறுபது பேர் காயமடைந்திருக்கிறார்கள். யூதர்களை குறிவைத்து நடந்த தாக்குதல் என்று தெரிகிறது. மனித உயிரின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.அடுத்த மாதம் தமிழகத்தின் புதிய தலைமை செயலகம் திறக்கப்படும் என்று தெரிகிறது. சென்னையை பற்றி அதிகம் தெரியாததால் இதன் அமைப்பை பற்றி கூற நான் தகுதியானவன் கிடையாது. இது தேவை என்று திமுகவினரும்; தேவை இல்லை என்று அதிமுகவினரும் வழக்கம் போலவே கூவிக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த தேர்தலில் ஆட்சி மாறினால் இந்த கட்டிடத்தில் இருந்து அரசு செயல் படாது என்றுதான் நான் நினைக்கிறேன். அதுதானே ஜனநாயகம்.எனக்கு கோவாவை விட தமிழ் படம் மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் படத்தில் இவர்கள் அவர்கள் என்றில்லாமல் அனைவரையும் சகட்டுமேனிக்கு ஓடியிருக்கிறார்கள். கிளைமேக்ஸ் சற்று யோசித்திருக்கலாம். அது மட்டும் எனக்கு பிடிக்கவில்லை. கோவாவின் டிரைலர் அமர்க்களமாக இருந்தது. ஆனால் படம் சொதப்பல். இரண்டாம் பகுதியில் உட்கார முடியவில்லை. பாடல்களும் சுமார். பார்ப்போம் எந்த குதிரை ஜெயிக்கும் என்று.கோவா என்றாலே "தில் சாத்தா ஹை" நினைவிற்கு வருவதை என்னால் தடுக்க முடியவில்லை. முதல் பாதியில் வரும் கோவா காட்சிகள் அனைத்தும், குறிப்பாக சைஃப் அலி கான் வரும் காட்சிகள் அனைத்தும் அருமையாக கொரியோகிராஃப் செய்யப்பட்டிருக்கும். அட்டகாசமான படம். ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு விதமான அனுபவம் தரும்.அனைவருக்கும் எனது காதலர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, February 03, 2010

அஞ்சலி!!!

Friday, January 01, 2010

Happy New Year!!
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.