Sunday, November 21, 2010


பொடிமாஸ் - 11/21/2010

வர வர "டீலா? நோ டீலா?" நிகழ்ச்சி எரிச்சலை கிளப்புகிறது. ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் வந்து ஒப்பாரி வைக்கிறார். நிச்சயம் நிகழ்ச்சி நடத்துபவர்கள் அதனை ஊக்குவிக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. இம்மாதிரி நிகழ்ச்சிகளில் வந்து அழுது TRP யை உயர்த்தும் உத்தியை முதலில் தொடங்கியது சன் டிவியின் அரட்டை அரங்கம் தான் என்று நினைக்கிறேன். யாருக்கு தான் வாழ்க்கையில் கஷ்டம் இல்லை? ஆனால் அதனை முன் பின் தெரியாதவர்களிடம் கூறி ஒப்பாரி வைப்பது அநாகரீகத்தின் உச்ச கட்டம். அதுவும் தொலைக்காட்சியில் பலர் பார்க்க அதை செய்வது மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது. அதுவும் நிகழ்ச்சி நடத்தும் ரிஷி பங்கேற்பாளர்களை தொட்டு, தடவி பேசுவது அதை விட அதிகம் எரிச்சல் அடைய செய்கிறது. வெளிநாட்டு நிகழ்ச்சிகளின் கருவை காப்பி அடிக்கும் இவர்கள் அங்கு நிகழ்ச்சி நடத்தும் முறையையும், நடத்துபவர்களின் நடத்தையையும் சேர்த்து காப்பி அடித்தால் நன்றாக இருக்கும்.





ஒரு வழியாக 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் கடந்த மாதம் 14 ஆம் தேதியுடன் நன்கு நடந்து முடிந்தன. இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி மற்றும் 36 பவழ பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதே போன்ற ஒரு அணியை நாம் ஒலிம்பிக் போடிகளுக்கு தயார் செய்தால் குறைந்த பட்சம் 10 பதக்கங்களாவது வாங்குவது உறுதி.



வழக்கம் போலவே இதிலும் பல கோடி ரூபாய் ஊழலும் முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. வழக்கம் போலவே CBI விசாரனை மேற்கொள்ளும். வழக்கம் போலவே குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள். என்னை கேட்டால் விசாரனை விசாரனை என்று அதற்கு அநாவசியமாக அரசு பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக லஞ்சத்தையும், ஊழலையும் சட்டபூர்வமாக்கி விடலாம். முதலில் அரசுக்கு அதனால் அதிக வருமான வரி கிடைக்கும். இரண்டாவது பணம் வெளி நாடுகளுக்கு போகாமல் நம் நாட்டிலேயே இருக்கும். மூன்றாவது அப்பணம் இங்கே பயமின்றி செலவு செய்யப் படுவதினால் நாட்டின் பொருளாதாரமும் கூடும். லஞ்ச ஒழிப்பு சட்டம் இருப்பதனால் இப்பொழுது நாட்டில் பாலாறும் தேனாறுமா ஓடுகிறது? A little bit of sarcasm adds spice to the life. Won’t it add to the constitution?



சென்ற வாரம் இங்கே இருக்கும் ஒரு இந்திய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு பல இடங்களுக்கு சென்று கடைசியாக "100 கோடி மக்கள் இருக்கும் இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு தங்கத்திற்கு முக்குகிறது" என்ற அந்நியன் வசனத்தில் வந்து முடிந்தது. கடந்த ஒலிம்பிக்கில் எட்டு தங்க பதக்கங்களை வாங்கிய அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவின் கலோரிகள் எவ்வளவு தெரியுமா? சுமார் 12000 கலோரிகள். ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் உணவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஆறு சராசரி மனிதர்கள் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவினை இவர் ஒருவர் மட்டுமே சாப்பிடுகிறார். அவர் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவு கீழே உள்ளது பாருங்கள்.

காலை: முட்டை, சீஸ், லெட்டூஸ், தக்காளி, வெங்காயம், மேயோ சேர்த்த சான்ட்விச்கள் மூன்று. ஐந்து முட்டை ஆம்லெட் ஒன்று. சாக்லேட் சிப்கள் கலந்த பான்கேக் மூன்று. ஃபிரென்ச் டோஸ்ட் மூன்று. இரண்டு கப் காபி.

மதியம்: ஒரு பவுண்டு பாஸ்தா. ஹாம், சீஸ், மேயோ சேர்த்த பெரிய சான்ட்விச்கள் இரண்டு. சுமார் 1000 கலோரி எனர்ஜி ட்ரின்க்குகள்.

இரவு: ஒரு பவுண்டு பாஸ்தா. ஒரு பெரிய சைஸ் சீஸ் பீசா. சுமார் 1000 கலோரி எனர்ஜி ட்ரின்க்குகள்.

யோசித்து பாருங்கள். இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களில் எவ்வளவு மக்களால் இப்படி தினமும் சாப்பிட முடியும்?



"இளைய நிலா" ராஜாவின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சில நேரங்களில் எனது ஐபாடில் ஷஃப்புலாகி பாடல்கள் வரும் பொழுது அந்தி மழையையும், பணி விழும் மலர்வனத்தையும் ஸ்கிப் செய்திருக்கிறேன். ஆனால் என் நினைவில் இளைய நிலாவை ஸ்கிப் செய்ததே கிடையாது. பாடல் வந்து விட்டால் முழு பாடலையும் கேட்டு விட்டுத்தான் அடுத்த வேலை. அதிலும் இடையே வரும் அந்த ஃப்ளூட் இன்ட்ரலூட் அட்டகாசம். கேட்கும் பொழுதே மனம் சொக்கும். ராஜாவால் மட்டுமே அப்படி ஒரு இசையை தர முடியும். கோல்டன் க்ளோப்களுக்கும், ஆஸ்கார்களுக்கும், க்ராமிக்களுக்கும் பின்னரும் கூட நான் ராஜா ராஜா என்று தொண்டை கிழிய கத்துவது இது போன்ற இசைகளுக்காகத்தான்.

கீழே அதன் வீடியோ இருக்கிறது. நான் சொன்ன ஃப்ளூட் இன்ட்ரலூட் 1:12 இல் தொடங்கி இருந்து 1:22 வரை இந்த வீடியோவில் வருகிறது. பார்த்து, கேட்டு மகிழுங்கள்.


0 Comments: