Wednesday, April 23, 2008

ரங்க பவனம் - IX

நாட்கள் மாதங்களாகி, வருடங்களாகி உருண்டோடின. வாழ்க்கை அனைவரையும் பந்தாடி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மூலைக்கு உருட்டி தள்ளியது. அவர்களுக்கிடையில் இருந்த தொடர்புகள் மெதுவாக இற்று அறுந்து விலகிவிட்டன. அதற்கு பெரிதும் வித்திட்டவன் பார்கவ். கல்கட்டா பயணத்திற்கு பின்னர் அனைவரின் நட்பையும் படிப்படியாக துண்டித்துக் கொண்டான். "ரங்க பவனம் எல்லாம் இறங்கு.", என்ற கண்டக்டரின் குரலில் பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தான் ராமனாதன். இதோ இன்று தீபாவின் திருமணம். தீபாவிடமிருந்து சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வந்த அவளது திருமண அழைப்பிதழை பார்த்ததும் அவசியம் தான் அவளது திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான். பழைய நினைவுகள் அவனுக்கு வலியையும் மகிழ்ச்சியையும் கலந்து அளித்தன. கண்டக்டர் அவனிடம் வந்து, "தம்பி இறங்குங்க. Stop வந்துருச்சு." என்றார். அது அவனது தாத்தாவின் பேரூந்து தான்.

மெதுவாக கீழே இறங்கியவன் அருகில் உள்ள சிருங்கேரி திருமண மண்டபத்தை நோக்கி நடக்க தொடங்கினான். மண்டபத்தில் நிழைந்த உடனே அவனை வரவேற்றது சௌம்யாவின் குரல் தான். "ஏய்! ராம்....." என்று கத்திக் கொண்டே ஓடி வந்து அனைத்துக் கொண்டாள். அவளது குரலில் உண்மையான உற்சாகம் வெளிப்பட்டது.

பின்னர் அவளே "வா டா வா. இப்போ தான் வர முடிஞ்சுதா?" என்றாள்.

"இல்லம்மா, கொஞ்சம் வேல இருந்துச்சு. அதான்."

"நீ எப்படி இருக்க?"

"ம். நல்லா இருக்கேன். Manager ஆயிட்டேன்."

"Wow! Congrats."

"நீ?"

"ம். Great. Super ஆ இருக்கேன்."

இந்த பதிலில் இருந்து சௌம்யா பார்கவை முழுவதுமாக மறந்து விட்டிருந்தாள் என்பது தெளிவானது. இருந்தாலும் 'அவனை பற்றிய பேச்சை தொடங்கலாமா?' என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள், "Bharghav எப்படி இருக்கான்? இன்னும் contacts இருக்கா?" என்றாள்.

"சுத்தமா இல்லை. இப்போ எங்க இருக்கான்னு கூட எனக்கு தெரியாது. நாலஞ்சு mail அனுப்பினேன். ஒன்னுக்கும் reply வரலே. இப்போ கூட இந்த கல்யாணம் பத்தி mail அனுப்பினேன். No response."

"சரி நீ போய் tiffin முடிச்சுட்டு கீழ வா. நாம அப்புறம் detailed ஆ பேசலாம்."

அன்று மாலை திருமணமெல்லாம் முடிந்து நண்பர்கள் அனைவரும் சென்ற உடன், சௌம்யா ராமனாதனின் அருகில் வந்து மலைக் கோட்டை தாயுமானவர் சந்நிதிக்கு செல்லலாம் வா என்று அழைத்தாள். சரி என்று கிளம்பிய அவன், "உன் husband வரலயா?" என்று யதார்த்தமாக கேட்டான்.

அதற்கு அவள் போகிற போக்கில், "அதுக்கு மொதல்ல கல்யாணம் ஆகனும்." என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு அகன்றாள்.

அதிர்ச்சி அடைந்த அவன், "என்ன? இன்னும் உனக்கு கல்யாணம் ஆகலயா?" என்றான்.

"அத நான் இப்போ தமிழ்ல தானே சொன்னேன்?". அவளிடம் புன்னகை சிறிதும் குறையாமல் இருந்தது. கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்த பின்னர் ஒரு ஓரமாக அமர்ந்து மெதுவாக பேச்சை தொடங்கினான்.

"ஏன்?"

"இது என்ன கேள்வி? நான் Bharghav வ எவ்வளவு நேசிச்சேன்னு உனக்கு தெரியாதா?"

"அதான் முடிஞ்சு போச்சே?"

"இல்ல அது முடியல. அதோட ரணம் இன்னும் என் மனசுலயே இருக்கு.என்ன அவ்வளவு நேசிச்ச Bharghav வாலயே என்ன, என்னோட career ambition அ சரியா புரிஞ்சுக்க முடியல. இப்போ வேறொருத்தனோட இன்னொரு relationship start பண்ணி அதுவும் break-up ஆச்சுன்னா, என்னால தாங்கிக்கவே முடியாது. நான் கண்டிப்பா இன்னும் அவனையே நினைச்சுகிட்டு இல்ல. ஆனா அதே நேரத்துல இவ்வளவு easy யா ஒருத்தன் கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிஞ்சத நினைச்சா என் மேலயே எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது."

"ஆனா! நீ கல்கட்டா போனதுலேர்ந்து ரொம்ப மாறிட்டயே. அதானே அவன உன் கிட்டேந்து பிரிச்சுது."

"உண்மைதான், ஆனா அதுலே என்னுடைய தப்பு என்ன? பொறந்துலேந்து கையேந்தி பவன்ல சாப்புட்டு வளர்ந்தவன் ரெண்டு வருஷம் அமெரிக்கா போன உடனே மினரல் வாட்டர் கேக்கறான். Tissue இல்லேன்னா toilet போக மாட்டேங்கறான். அது மாதிரி தான் இதுவும். மனுஷன் பிறந்ததுலேர்ந்து சாகறவரைக்கும் ஒரே மாதிரியா இருக்க முடியும்? மாற்றம் ஒன்னு தானே மாற்றமில்லாதது. வாழ்க்கையில அனுபவம் கூடக் கூட மனுஷன் மாறிகிட்டே தான் இருப்பான். அதை கூட அவனால புறிஞ்சுக்க முடியலயே. என்னுடைய Career க்காக நான் நிறைய மாறி இருக்கலாம். ஆனா நான் அவன நேசிச்சது உண்மை. எனக்கு வருத்தமே அவன் இதையெல்லாம் explain பண்ணறதுக்கு கூட எனக்கு ஒரு opportunity குடுக்காம abrupt ஆ என்ன cut பண்ணினது தான். அந்த trip க்கு அப்புறம் என்னோட வேலையெல்லாம் விட்டுட்டு ஒரு நாளைக்கு 10 தடவ அவனுக்கு phone பண்ண try பண்ணி இருப்பேன். ஒரு ஆயிரம் mail அனுப்பி இருப்பேன். ஒன்னுக்கும் response இல்ல. ஏதோ பிடிக்காத செருப்ப தூக்கி எறியறது மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான். I don't think I deserved this kind of a treatment."

"சரி, இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படி இருக்க போறே?"

"எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள்."

"உங்க வீட்டுல ஒன்னும் சொல்லலயா? Deepi எப்படி கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா?"

"இதையெல்லாம் சொல்லி அம்மா, அப்பா, Deepi மூனு பேரையும் convince பண்ணறதுக்கு நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். பாவம் என்னால தான் அவங்க ரொம்ப கஷ்டப் படறாங்க. நான் கேட்டதெல்லாம் வாங்கி குடுத்த அவங்களுக்கு என்னால இந்த குறைந்த பட்ச சந்தோஷத்த கூட குடுக்க முடியல."

"அதுக்காக இப்படியே இருந்துட முடியுமா?"

"எனக்கு இப்போ life லே ஒரே ஒரு பிடிப்பு தான். அது தான் என்னோட career. நல்ல responsible job. நிறைய friends. வேற ஒன்னுமே இல்ல. ஆனா நான் சந்தோஷமா தான் இருக்கேன். எப்போவாவது உன்ன மாதிரி யாரையாவது பாக்கும் போது பழைய நியாபகம் எல்லாம் வரும். Deepi இத பத்தி ஒன்னும் பேசவே மாட்டா. No one understands me better than her."

அன்று இரவு வீட்டிற்கு வந்த ராமனாதனுக்கு தூக்கம் வரவில்லை. ஏனோ காலையில் இருந்த உற்சாகம் இரவில் இல்லை. அதற்கு காரணம் சௌம்யா தான் என்பதும் தெளிவாகவே அவனுக்கு புறிந்தது.

சரி மறு நாள் சனிக்கிழமையன்று முதல் வேலையாக பார்கவின் வீட்டிற்கு சென்று அவனது தொலைபேசி எண் வாங்கி அவனுடன் உரையாடலாம் என்று முடிவெடுத்தான். அடுத்த நாள் அதி காலையிலேயே எழுந்து பார்கவின் வீட்டிற்கு சென்றான். அவனது வீட்டில் யாரும் இல்லை. அவனது பெற்றோர்கள் சென்ற வாரம் தான் அமெரிக்கா சென்று இருப்பதாகவும், அவனது தந்தை இன்னும் மூன்று வாரங்களில் வருவதாகவும், தாயார் வருவதற்கு மூன்று நான்கு மாதங்கள் ஆகும் என்றும் பக்கத்து வீட்டில் இருப்பவர் குறிப்பிட்டார். அவனுக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும், தொடர்ந்து அவருடன் சிறிது நேரம் உரையாடி அமெரிக்க தொலை பேசி எண்ணை வாங்க முயன்றான்.

அவனை வாசலிலேயே நிற்க வைத்து விட்டு உள்ளே தொலைப் பேசி எண்ணை எடுத்து வர சென்றார் அவர். சிறிது நேர காத்திருப்பிற்கு பின்னர் வெளி வந்த அவர் கையில் இருந்த சீட்டில் அவனது தொலைப்பேசி எண் இருந்தது. சீட்டை பெற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறி விடை பெற்றான்.

அன்று இரவு அவனை தொலைபேசியில் அழைத்தான். மறு முனையில் மணியடித்தது. "Hello!" என்ற பார்கவின் குரலுக்கு மறு மொழியாக, "மச்சான்! நான் Ram பேசறேன்டா." என்று தொடங்கி ஒரு அரை மணி நேர மகிழ்ச்சியான உரையாடலுக்கு பின்னர் 'சௌம்யாவை பற்றிய பேச்சை தொடங்கலாமா?' என்று எண்ணிய ராமனாதனுக்கு, அவன் அன்று காலை தொலைப் பேசி எண்ணை பெற்றுக் கொண்டு புறப்பட தொடங்கும் போது, 'பேசும் போது மறக்காம, Bharghav, Bharghav சம்சாரம் ரெண்டு பேரையும் நாங்க விசாரிச்சோம்னு சொல்லுங்க தம்பி.' என்று அந்த பக்கத்து வீட்டுக்காரர் கூறியது நினைவிற்கு வரவே ஒன்றும் பேசாமல் அனைவரையும் பொதுவாக விசாரித்து விட்டு தொலை பேசியை துண்டித்தான்.

அவனது கண்களில் அவனையும் அறியாமல் இரு துளி முத்துக்கள் பூத்தன.

- முற்றும்.

Monday, April 21, 2008

ரங்க பவனம் - VIII

இப்படியே ஓராண்டு காலம் ஓடியது. அடுத்த கல்வி ஆண்டின் தொடக்க நாளான முதல் நாள், சௌம்யாவிற்கு Lehman Brothers நிறுவனத்தில் Financial Consultant வேலை கிடைத்தது. ஆண்டு வருமானம் 18 லட்சம் ரூபாய். மும்பையில் வேலை. அன்றிரவே தொலைப்பேசியில் அழைத்து செய்தியை சொன்னாள். "You know I am getting into the corporate finance. Budgetting, Operations Planning etc. etc. etc. It's going to be loads and loads of fun." என்றாள்.

ஆனால் ஏனோ அவள் தனது காதலை ஏற்றுக் கொண்ட போது, தனக்கு வேலை கிடைத்த போது, அவளுக்கு IIM இல் இடம் கிடைத்த போது அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை போல இம்முறை அவனுக்கு ஏற்பட வில்லை. இதை ராமனாதன் எளிதாக புரிந்து கொண்டான்.

"ஏன்டா! அவ thrice that of you சம்பளம் வாங்கப் போறான்னு உனக்கு problem ஆ?" என்று கேட்டே விட்டான்.

"ஏய்! என்ன பத்தி நல்லா தெரிஞ்சு நீயே இப்படி கேக்கலாமாடா? நானும் நீயும் பார்க்காத பணமா? எங்க engineering college லே ஒருத்தருக்கு management seat குடுத்தா 2 லட்சம் கிடைக்கும். அவ 5 வருஷத்துலே சம்பாதிக்கறத நான் ஒரு வருஷ admission லே சம்பாதிச்சுடுவேன். என்னமோ தெரியலே மனசு ஒரு மாதிரி சங்கடமா இருக்கு. காரணம் தெரியலே." என்றான். அவனது தந்தை திருச்சியில் சென்ற ஆண்டு புதிதாக ஒரு பொறியியல் கல்லூரி ஒன்றை துவக்கி இருந்தார். அதை தான் அவன் குறிப்பிட்டான்.

நான்கு மாதங்கள் கழித்து அந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தால் 9 நாட்கள் விடுமுறை வந்தது. அதனால் தீபா, ராமனாதன், பார்கவ் மூவரும் 9 நாட்கள் விடுமுறையை கல்கட்டா சென்று கொண்டாட முடிவு செய்தனர். பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு கல்கட்டா சென்றனர். சௌம்யாவும் முதல் ஆண்டைப் போல இரண்டாம் ஆண்டில் அவ்வளவு busy யாக இல்லை. அதனால் அவளும் அவர்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருந்தாள்.

கல்கட்டா சென்ற உடன் ஒரு பெரிய ஹோட்டலில் அறை வாடகைக்கு எடுத்து தங்கினார்கள். அவர்கள் இருவரும் மட்டும் வந்திருந்தால் ஏதாவது ஒரு லாட்ஜில் தங்கி இருப்பார்கள். கூடவே தீபாவும் வந்திருப்பதால் நல்ல ஹோட்டலில் தங்க வேண்டியது அவசியம் ஆனது. முதலில் கல்கட்டா அருங்காட்சியகம் சென்றார்கள். அங்கு தான் சௌம்யா வருவதாக கூறி இருந்தாள். மாலை காளிகாட் காளி கோவில் செல்வதாக திட்டம். சொன்ன நேரத்திற்கு சரியாக வந்திருந்தாள் சௌம்யா. கூடவே அவளது கல்லூரி தோழன் பங்கஜ் ஜங்கம் வந்திருந்தான். மத்திய பிரதேசம், போபாலை சேர்ந்தவன். அறிமுகம் செய்து வைக்கும் போது ராமனாதனையும், பார்கவையும் நண்பர்கள் என்றே அறிமுகம் செய்தாள். திருச்சியில் இருந்த போது இரண்டு மூன்று நாட்கள் இருவரும் சந்திக்காமல் இருந்து பின்னர் சந்தித்தாலே மகிழ்ச்சியில் பூக்கும் சௌம்யாவின் முகம் இப்பொழுது சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பார்கவை சந்திக்கும் போது எந்த விதமான மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த வில்லை. தீபாவை கட்டி அனைத்துக் கொண்டதும் கூட ஒரு விதமான செயற்கையான செயல் போல தோன்றியது இவனுக்கு.

பெங்களூரிலிருந்து கிளம்பும் போது இருந்த உற்சாகம் இப்பொழுது அவனிடம் தொலைந்தது போல் காணப்பட்டது. மாலை கோவிலுக்கு சென்றார்கள். நீண்ட வரிசையில் நின்று காளியை தரிசனம் செய்துவிட்டு வெளி வருவதற்கு 1 மணி நேரம் ஆகி விட்டது. மனதிற்கு சிறிது அமைதியாக இருந்தது. வெளியில் வந்ததும் ராமனாதனின் சட்டைப் பையில் கை விட்டு சிகரெட் பாக்கெட்டை எடுத்து பற்ற வைத்தான். சௌம்யாவின் முன்னால் அவனது இந்த செய்கை ராமனாதனுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. சௌம்யா ஏதாவது சொல்லப் போகிறாளே அன்று பதறியவன் திரும்பி அவளைப் பார்த்தான். அவளோ அதை கண்டு கொள்ளவே இல்லை.

அன்றிரவு உணவை முடித்தார்கள். முடித்த உடன் வந்த சர்வரிடம் "Check please" என்றாள் சௌம்யா. அதைக் கேட்டு ராமனாதன் "என்ன சொன்னே? Check?" என்றான். தீபா உடனே "Bill னு அர்த்தம்." என்று விளக்கினாள். பங்கஜ் அதை புரிந்து கொண்டு மெலிதாக புன்னகைத்தான். பார்கவின் முகம் உடனே ஒரு மாதிரியாக மாறியது. வேறொரு நேரமாக இருந்தால் அவ்வாறு தனது உற்ற நண்பனை நடத்தியதற்கு அங்கு ஒரு பெரிய சண்டையே நடந்திருக்கும். ஆனால் இப்பொழுது அமைதி காத்தான் பார்கவ். அன்றிரவு ஹோட்டலுக்கு சென்றதும் தொலைப்பேசியில் அடுத்த நாள் பங்கஜ் வருவது தனக்கு பிடிக்க வில்லை என்பதை தெரிவித்தான். ராமனாதனை அவமானப் படுத்த அவனுக்கு ஒரு அருகதையும் இல்லை என்று பொரிந்து தள்ளினான். அதற்கு சௌம்யா அளித்த பதில் அவனை செருப்பால் அடித்தது போல இருந்தது.

"என்ன சொல்றே Saumi?"

"Yes. எனக்கு கூடத்தான் Ramanathan வர்றது பிடிக்கலே. எப்போ பார்த்தாலும் ஒன்னு நகத்த கடிக்கறது இல்லே மூக்க நோண்டறது. அருவெறுப்பா இருக்கு."

"Saumi!, this is too much. ஏன் நீ நகத்த கடிச்சதே இல்லையா? இல்லே மூக்க நோண்டினதே இல்லையா?"

"இங்கே பாரு எதுக்கு தேவை இல்லாத பேச்சு? Pankaj is my friend. என்னுடைய compri க்கு அவன் எவ்வளவோ help பண்ணி இருக்கான். அப்படியெல்லாம் அவன விட முடியாது. அவன் என் கூட தான் இருப்பான். உனக்கு கஷ்டமா இருந்தா I'll not come to meet you tomorrow."

"So உனக்கு என்னவிட அவன் தான் முக்கியமா?"

"எனக்கு அப்படியெல்லாம் இல்லே, ஆனா உனக்கு என்னவிட Ramanathan தானே முக்கியம்?"

"சத்தியமா அப்படி இல்லே. ஆனா that doesn't mean your friend can insult him."

"என்னது insult ஆ? Indecent ஆ behave பண்ணினா சிரிக்கத் தான் செய்வாங்க."

"எது indecent? மவளே! நீ இருந்ததாலே தப்பிச்சான். இல்லேன்னா ங்கோ** மூஞ்சி பு** எல்லாம் கிழிச்சுருப்பேன்."

"Yuck.... see this is what really you are. I don't want to discuss this any further." தொலைப்பேசி துண்டிக்கப்பட்டது.

பேசி முடித்து விட்டு அறைக்கு திரும்பிய பார்கவ் ஒன்றும் பேசவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று வரிசையாக சிகரெட்டுகள் ஊதப்பட்டன. ஐந்தாவது சிகரெட்டை பற்ற வைக்கும் போது அதுவரை அமைதியாக இருந்த ராமனாதன், "டேய்! என்னடா ஆச்சு உனக்கு? இங்கே வந்ததுலேர்ந்தே நீ சரி இல்லை." என்று கேட்டான். அதை கேட்டு திரும்பிய பார்கவினுடைய கண்கள் கலங்கி இருந்தன. "என்னடா ஆச்சு? எதுவா இருந்தாலும் சொல்லுடா. நான் இருக்கேன்."

அவ்வளவு தான். மடை திறந்த வெள்ளம் போல அனைத்தயும் கொட்டினான் பார்கவ். அனைத்தையும் கேட்ட ராமனாதனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. தன்னால் தனது நண்பனின் காதலில் குழப்பம் என்ற எண்ணமே அவனுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. அவனால் முடிந்த மட்டும் ஆறுதல் கூறினான். தனக்கு ஒரு வருத்தமும் இல்லை என்றும், இன்னும் சொல்லப் போனால் அந்த பங்கஜ் சிரித்ததை கூட தான் கவனிக்கவில்லை என்றும் குறிப்பிட்டான். அடுத்த நாள் தான் வரவில்லை என்றும் தன்னால் அவர்களுக்கிடையில் மனக் கசப்பு வரக் கூடாது என்றும் கூறினான். பின்னிரவு வரை சோகமாக இருந்த பார்கவ் அதன் பிறகு கொஞ்சம் தேறினான். அடுத்த நாள் முதல் வேலையாக அவளை சமாதானப் படுத்த வேண்டும் என்பதில் மட்டும் அவன் தெளிவாக இருந்தான். அவள் என்ன சொன்னாலும் கோபமே படாமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

மறு நாள் காலையிலேயே சௌம்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக முந்திய தினம் நடந்ததை பற்றி அவள் பேசவே இல்லை. காலை Tram மற்றும் Metro இரண்டிலும் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை பார்கவ் கூற அனைவரும் பயணம் செய்தார்கள். பின்னர் நேராக விக்டோரியா நினைவு இல்லத்திற்கு சென்றார்கள்.

அங்கு இருந்த போது சிறிது தனிமை கிடைத்தது. கிடைத்த நேரத்தில் தான் நினைத்ததை சொல்லி விடலாம் என்று பார்கவ் சௌம்யாவின் அருகில் சென்று "Sorry, Saumi!" என்றான்.

"எதுக்கு?"

"நேத்திக்கு நான் அப்படி பேசி இருக்க கூடாது. ரொம்ப sorry."

"பரவா இல்லே. இதுலே என்ன இருக்கு? ஏதோ கோபத்துலே பேசிட்டே. இருக்க போறது இன்னும் மூனு நாள். அதுலே எதுக்கு நாம சண்டை போட்டுக்கனும்? Let's forget it."

அன்று முழுவதும் கல்கட்டாவில் இருந்த முக்கியமான நான்கைந்து இடங்களை பார்த்தார்கள். நாள் வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டதால் சிரமமாக இல்லை. இரவு அறைக்கு திரும்பினர்.

அடுத்த நாள் காலை கிளம்பி சுந்தர்பன்ஸ் சதுப்பு நில காடுகளுக்கு செல்வதாக திட்டம். West Bengal Tourism ஏற்பாடு செய்திருந்தார்கள். இரண்டு பகல், இரண்டு இரவு முழுவதும் கப்பலில் பயணம். காடுகளில் பல இடங்களில் நிறுத்தி புலிகளும், முதலைகளும் இன்ன பிற விலங்குகளும் பார்க்கலாம். முதல் கடல்/கப்பல் பயணம் என்பதால் அனைவரும் உற்சாகத்துடன் காணப் பட்டார்கள்.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கல்கத்தாவிலிருந்து கிளம்பிய அந்த பேரூந்தில் அனைவரும் பயணம் மேற்கொண்டார்கள். சுமார் ஐந்து மணி நேர பயணமுடிவில் அவர்களுக்காக காத்திருந்தது அந்த கப்பல். கப்பலில் ஏறிய உடன் அவர்களை வரவேற்றது உயர் தரமான சைவ மற்றும் அசைவ உணவு வகைகள். அனைத்தையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு பின்னர் கப்பலின் மேற்தளத்திற்கு சென்று எங்கும் பரந்து விரிந்து கிடந்த நீர் போர்வையின் அழகை ரசிக்க தொடங்கினர். ஆங்காங்கே சிறு சிறு தீவுகளைப் போல சதுப்பு நில காடுகள். அதில் அதிசியமாக ஒன்றோ இரண்டோ குடிசைகள். குடிசை வாசலில் சில குழந்தைகள். "இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? இவர்களுக்கு கல்வி/பள்ளி என்றெல்லாம் ஒன்று இருப்பதே தெரியாமல் வளர்கிறார்களே? நாம் இவர்களைப் போல உள்ள குழந்தைகளுக்கு என்ன செய்வது?" என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அமைதியாக நின்று கொண்டிருந்தான் பார்கவ்.

இவ்வாறு மேலோட்டமாக அவனது எண்ணங்கள் எழுந்தாலும், அவனது உள் மனது மிகவும் துயருற்றிருந்தது. அவனுக்கும் சௌம்யாவிற்கும் இடையில் கண்ணிற்கு தரியாத ஒரு வித சுவர் எழும்பியதை உணர்ந்தான். வாழ்க்கை அவர்கள் இருவரையும் எண்ணச் சமநிலையின் இருவேறு துருவங்களுக்கு தள்ளி விட்டிருந்தது. பயணம் தொடங்குவதற்கு முன்னர் அதனை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது "எப்போது பயணம் முடியும்? எப்போது பெங்களூர் செல்லலாம்?" என்று எண்ணத் தொடங்கினான்.

அவனது நிலையை நன்கு உணர்ந்து ராமனாதன் அவனது அருகில் அமைதியாக நின்றான். அன்று இரவு ஒரு மணிக்கு மற்ற அனைவரும் தூங்கிய உடன் ராமனாதனும் பார்கவும் தனித்து இருக்கும் நேரத்தில் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான். அவனுக்கு ஆறுதல் கூறுவதற்காக பேச்சை தொடங்கிய ராமனாதன் அடுத்த அரைமணி நேர உரையாடலில் பார்கவ் சௌம்யாவை முழுவதுமாக பிறிய முடிவு செய்து விட்டான் என்பதை அறிந்து கொண்டான்.

"என்னடா சொல்றே? மப்புல இருக்கியா?"

"இல்லடா. எனக்கும் அவளுக்கும் ஒத்து வரும்னு தோனல. படம், music, books, career இப்படி எதுலயும் எனக்கும் அவளுக்கும் ஒரே thinking இல்லை. இப்போ பாரு அந்த Pankaj நம்ம கூட வர்றது எனக்கு பிடிக்கலே. இது அவளுக்கு நல்லா தெரியும். Tour முடிஞ்ச உடனே அவ அவன் கூட தான் இருக்க போறா. ஒரு அஞ்சு நாளைக்கு எனக்காக அவன் இல்லாம இருந்தா என்ன? எனக்காக இந்த சின்ன விஷயத்த கூட செய்யாதவளோட எப்படிடா வாழ்க்கைய ஓட்ட முடியும். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் பார்த்து பேசி பழகி காதலிச்ச சௌம்யாக்கும் இப்போ இருக்கற சௌம்யாக்கும் வித்தியாசம் நிறைய இருக்குடா. இந்த சௌம்யா எனக்கு வேண்டாம்."

"சரி. நீ easy யா சொல்லிட்டே. அவ எவ்வளோ கஷ்டப்படுவான்னு யோசிச்சியா?"

"டேய்! உனக்கு அவள பத்தி தெரியலே. நான் ஊருக்கு போன உடனே ஒரு ரெண்டு மாசம் அவளுக்கு phone பண்ணாம mail அனுப்பாம இருந்தா அவளே என்னோட பேசறத நிறுத்திடுவா. இன்னும் சொன்னா என்ன மறந்தாலும் மறந்துடுவா."

"நீ ரொம்ப exaggerate பண்ணறயோன்னு எனக்கு தோணுது."

"இல்ல நீ பாரு."

பார்கவின் உதடுகளில் ஒரு வரண்ட மெல்லிதான புன்னகை பரவியது. அவனது மனதின் வேதனையும், வலியும் ராமனாதனால் நன்கு உணரப்பட்டன. மேலும் அவனை கிளராமல் அமைதியாக இருந்தான் ராமனாதன்.

Tuesday, April 15, 2008

ரங்க பவனம் - VII

பார்கவ் தான் அவளது தேர்வு முடிவை முதலில் பார்த்தவன். மதியம் 12 மணிக்கே முடிவு வெளியானாலும், 2 மணிக்கு தான் IIM இணையதளம் உயிர்ப்பு பெற்றது. அவனுக்கு தெரியும், tension காரணமாக சௌம்யா முடிவுகளை பார்க்க வரமாட்டாள் என்று. அதனால் அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து முதலில் பார்த்து அவளிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக கணிணி முன்பே அமர்ந்து இருந்தான். அவளது முடிவு தெரிந்த உடன் அவனுக்கு தலை கால் புரியவில்லை. 98.9 percentile வாங்கி இருந்தாள். அவள் முன்னரே குறிப்பிட்டது போல Verbal தவிர்த்து மற்ற பிரிவுகளில் எல்லாம் உச்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். இதற்கு கட்டாயம் 3 interview calls ஆவது வரும் என்பது அவனுக்கு தெரியும். நேரில் சென்று சொல்லி சௌம்யாவின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால் அவளது வீட்டிற்கு சென்றான்.

தேர்வு முடிவை அறிந்த சௌம்யாவிற்கு உலகையே வெற்றி கொண்டது போன்ற ஒரு பெருமிதம் வந்தது. அவ்வளவு நிறைவாக சௌம்யா இருந்து பார்கவ் பார்த்ததே இல்லை. வழக்கமான சம்பிரதாய வாழ்த்துக்கள், treat கள் என்று அடுத்த ஒரு வார காலம் அமர்க்களப் பட்டது. அவன் நினைத்தது போலவே IIM C, L மற்றும் K என்று மூன்று இடங்களில் இருந்து interview call வந்தது. சௌம்யாவும் GD மற்றும் interview விற்கு தயாராவதில் கவனம் செலுத்தினாள். பார்கவ், தீபா இருவரும் அதற்கு பெரிதும் உதவினார்கள். C, L, K alumni list இல் இருந்து ஒரு சிலரின் மின்னஞ்சல் முகவரியை எடுத்து அவர்களிடம் அறிவுரை கேட்டு அதன் படி தன்னை தயார் செய்தாள்.

அவளது உழைப்பு வீணாகவில்லை. C, L, K ஆகிய மூன்றில் C மற்றும் L இரண்டும் convert செய்யப்பட்டன. IIM C யில் சேருவது என்று முடிவு செய்தாள். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது பார்கவிற்கு. அவனுக்கும் தீபாவிற்கும் நல்ல வேலை. நல்ல சம்பளம். சௌம்யாவிற்கோ அவன் கனவிலும் நினைத்து பார்க்காத வாய்ப்பு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவள் படிப்பு முடித்து நல்ல நிலைக்கு சென்று விடுவாள். திருமணம் செய்து கொள்ள ஒரு தடையும் இல்லை.

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது


என்கிறது குறள். ஆனால் இவனது காதலோ இன்பத்தை மட்டுமே தந்து இருக்கிறது. துன்பம் என்பது ஒரு துளி கூட இல்லை. இதை விட வேறு என்ன வரம் வேண்டும். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான் பார்கவ்.

பார்கவ், தீபா, சௌம்யா, ராமனாதன் அனைவரும் தத்தம் பாதைகளில் பயணிக்க தொடங்கினர். பார்கவ் பெங்களுர் வந்தான். தீபாவும், ராமனாதனும் கூட அவனுடன் வந்தார்கள். ராமனாதன் வேலை தேடி அங்கு வந்தான். பார்கவ், ராமனாதன் மற்றும் பார்கவுடன் TI நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அமுதன் அழகப்பன் மூவரும் ஒரே வீட்டில் வசித்தார்கள். அமுதன் படித்தது சென்னை IIT யில். பழகுவதற்கு மிகவும் இனிமையானவன். ராமனாதன் ஒவ்வொரு நேர்முக தேர்வுக்கும் செல்லும் போதும் பல அறிவுரைகள் கூறி அவனுக்கு உதவினான். அமுதனுடைய உதவியினால் ராமனாதன் இரண்டே மாதங்களில் பெங்களூர் Infosys நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான்.

புதிய வேலை, புதிய நண்பர்கள், புதிய வாழ்க்கை, புதிய பழக்க வழக்கங்கள், பல நேரங்களில் மகிழ்ச்சியையும் சில நேரங்களில் அயர்ச்சியையும் கொடுத்தது பார்கவிற்கு. சௌம்யா வேறு இல்லாதது அவனுக்கு பெரிய துக்கமாக இருந்தது. ஆனாலும் அந்நேரங்களில் அமுதனும், ராமனாதனும், தீபாவும் அவனுக்கு துணையாக இருந்தார்கள். அது ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது.

சௌம்யாவோ போய் சேர்ந்த முதல் இரண்டு மூன்று வாரங்களில் தினமும் தொலைப்பேசியில் பேசியவள், பின்னர் வாரத்திற்கு ஒருமுறையாகி, இப்பொழுது மாதத்திற்கு ஒரு முறையானது. ஒரு முறை பார்கவ் அதற்காக கோபித்துக் கொண்ட போது, "Dont be kiddish, Bharghav! நான் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் தான் தூங்கறேன். எவ்வளோ வேலை இருக்கு தெரியுமா?" என்றாள். இவனும் அவளது நிலை உணர்ந்து அவளை அதிகம் தொந்திரவு செய்யாமல் இருந்தான். மாதத்திற்கு ஒருமுறையோ இல்லை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ அவளிடம் இருந்து அழைப்பு வரும். "You know some thing, yesterday Vivek Paul came and took a session on Standardization Wars. It was awesome. Then we had a dinner and chat session with him. He appreciated my questions and gave me a firm hand shake. I felt infinitely delightful." என்று ஏதாவது கூறுவாள். அடுத்த முறை Vivek Paul என்பது வேறு ஒருவராக மாறி இருக்கும். இவனும் அதை கேட்டு "சந்தோஷம்", "Good luck", "Great" என்று ஏதாவது சொல்லி வைப்பான்.

அதே மாதிரி இவன் அன்பே சிவம் படத்தை பற்றி "ஆஹா! ஓஹோ!" வென்று புகழுவது அவளுக்கு அந்நியமானது. திருச்சியில் இருந்த போதும் சரி; இப்பொழுதும் சரி; பார்கவ் ஒரே மாதிரி தான் இருந்தான். அலுவலகத்திலும் வட நாட்டு நண்பர்களிடம் அவ்வளவாக பேசுவதில்லை. அலுவல் நிமித்தம் பேசுவதுடன் சரி. தமிழ் மக்களுடனேயே நட்பு கொண்டிருந்தான். அதே தமிழ் படம், அதே தமிழ் பாட்டு, அதே ஆனந்த விகடன், அதே சன் டி.வி. என்று எந்த மாறுதலுக்கும் ஆளாகாமல் அவன் இருந்தான். ஆனால் சௌம்யாவோ முழுவதுமாக மாறி இருந்தாள். IIM படிப்பு, கல்கட்டா வாசம், பல வட நாட்டு நண்பர்களின் நட்பு ஆகியவை அவளை முழுவதுமாக மாற்றி இருந்தது. "To be a successful entrepreneur you need to be successful in establishing contacts" என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். அதனால் பல புதிய நட்புகளை அவள் தேடிக் கொண்டாள். "In another 5 years I want to take decisions for big corporates" என்றாள்.

ஒரே வண்டியில் பூட்டப் பட்ட இரு வேறு குதிரைகளைப் போல ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருந்த இருவரின் மனங்களும் இப்பொழுது வேறு வேறு திசைகளில் பயணிக்க தொடங்கின.

Monday, April 14, 2008

ரங்க பவனம் - VI

ஒரு 6 மாத காலம் கடந்த பிறகு, அந்த சனிக்கிழமை ராமனாதனை சந்தித்தான் பார்கவ். அவனிடம் அதுவரை நடந்த அனைத்தையும் கூறியவன் இத்தனை நாள் சொல்லாமல் விட்டதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். தீபா அதைப் பற்றியெல்லாம் அவனிடம் ஒன்றும் சொல்லாதது அவனுக்கு தீபாவின் மீது இருந்த மதிப்பை பல மடங்கு கூட்டியது. ஆனால் ராமனாதனோ அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டான். அவன் முன்னரே ஊகித்த ஒன்று தான் என்பதால் அவனுக்கு அதில் ஒன்றும் வியப்பு இல்லை.

இப்படியே நாட்கள் கடந்தன. பார்கவ் தனது மூன்றாம் ஆண்டு படிப்பையும், சௌம்யா தனது M.Com. படிப்பையும் முடித்தார்கள். சௌம்யா தனது படிப்பை முடிக்கும் வரை தூங்கிக் கொண்டிருந்த அவளது கல்யாண பூதம் அதற்கு பிறகு மீண்டும் எழுந்தது.

இப்பொழுதும் ஏதாவது convincing ஆக சொல்ல வேண்டும் என்பதற்காக இம்முறை CAT preparation கையில் எடுக்கப்பட்டது. சௌம்யாவின் தந்தை பேராசிரியர் என்பதால் இம்முறையும் மிகவும் கஷ்டப்படாமல் அவர்களை சம்மதிக்க செய்ய முடிந்தது. IMS இன்ஸ்டிட்யூடில் சேர்ந்தாள் சௌம்யா.

முழு நேர வகுப்பு என்பதாலும், கல்லூரி முடிந்து அலுவலகமும் செல்லாததாலும் NIIT போல் அல்லாமல் இங்கே ஒழுங்காக வகுப்பிற்கு சென்றாள். நாளாக நாளாக அவளுக்கு அந்த படிப்பின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டு அதனை serious ஆக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

திருமணத்தை தவிர்க்க வேண்டும் என்பதில் தொடங்கியது ஒரு கட்டத்தில் அவளது வாழ்க்கை லட்சியம் ஆனது. IIM இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்று எண்ணத் தொடங்கினாள். பொழுது போக்குகளை முழுவதுமாக தவிர்த்து பாடத்தில் மட்டும் கவனம் செலுத்தினாள். அது மேலும் தீவிரமாகி பார்கவுடன் மணிக்கணக்கில் பேசுவது, ஊர் சுற்றுவது போன்ற அனைத்தையும் கூட தவிர்த்தாள். பார்கவும் தனது இறுதி ஆண்டு படிப்பு, Campus Interviews, Final year project என்று busy ஆக இருந்தான். கேம்பஸ் தேர்வில் பெங்களூர் TI (Texas Intruments) நிறுவனத்தில் ஆண்டிற்கு 4.5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் அவனுக்கு வேலையும் கிடைத்தது. தீபாவிற்கும் பெங்களூரில் CISCO நிறுவனத்தில் அதே சம்பளத்தில் வேலை கிடைத்தது.

இந்நிலையில் CAT தேர்வு நாளும் வந்தது. முதல் நாள் சனியன்று காலை மலைக் கோட்டை தாயுமானவர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து பிரார்த்தித்துக் கொண்டாள். பின்னர் தேர்வு எழுதுவதற்காக திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னை சென்றாள். பார்கவும் அவளுடன் சென்றான். அடுத்த நாள் பார்கவ், தீபா, பெற்றோர்கள், மற்ற நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் தேர்வு எழுத சென்றாள் சௌம்யா. தேர்வு நடந்து முடியும் வரை அவளுக்காக வெளியிலேயே காத்திருந்தான் பார்கவ். வெளியில் வந்த சௌம்யாவிடம் "எப்படி போச்சு?" என்றான். அவள் சிரித்துக் கொண்டே வந்தது இவனுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தது.

"நல்லா போச்சு. DI, Quans and Anals ரொம்ப easy யா இருந்துது. Verbal லே சொதப்பிட்டேன். RC was ok. IIMs நம்பிக்கை இல்லை. May be வேறே ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம்." என்று சொன்னவள் மீண்டும் தொடர்ந்தாள்.

"Question paper pattern அதே தான். But number of sectional questions கொஞ்சம் மாத்தி இருந்தாங்க. Last year மாதிரி இல்லே. But on the whole it wasn't that tough. இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா நல்லா பண்ணி இருக்கலாம் ப்ச்..." அவளது ஆதங்கம் வெளிப்பட்டது.

"கவலை படாதே Saumi. You have put in your 100%. You'll get what you deserve." என்று அவன் ஆறுதல் கூறினான்.

படிப்பு முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் அவன் GRE/TOEFL எதுவும் எழுதவில்லை. வேலைக்கு செல்வது, உடனே திருமணமும் செய்வது என்று முடிவு செய்தான். ஆனால் சௌம்யாவோ CAT தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது.

Thursday, April 10, 2008

ரங்க பவனம் - V

"Hello!" என்றான் பார்கவ்.

"Hello! என்ன ரெண்டு நாளா phone பண்ணலே?

"சும்மா தான். Nothing unusual."

"Deepi வேற ஏதோ சொன்னா? Is it true?"

"அவ உன் தங்கை Saumi. அவ உண்மை சொல்றாளா பொய் சொல்றாளான்னு உனக்கு தானே தெரியும். எனக்கு எப்படி தெரியும்?"

"Be serious Bharghav."

"Okie, I'm serious. I love you Saumi. I love you with all my heart."

"Serious ஆ சொல்றியா?, இல்லை எப்போதும் மத்த பொண்ணுங்க கிட்ட விளையாடற மாதிரி விளையாடறயா?"

"100% serious."

"இதை பத்தி யோசிச்சு பார்த்தியா?"

"எதை பத்தி?"

"You are 2 years younger than me."

"Honestly I don't mind. I am 100% sure that you and only you can make my life happy."

"What about our parents?"

"We'll wait. We'll convince them."

"Thanks Bharghav."

"You mean....."

"Yes, I love you too."

காற்றில் மிதப்பது போல இருந்தது பார்கவிற்கு. அதன் பிறகு நாட்கள் நிமிடங்களாக ஓடின. காயத்ரீஸ், மும்தாஜ் போன்ற இடங்களில் பழியாக கிடந்தவன் அதன் பின் Rainbows, Baskin-Robbins, TAB என்று இடங்களை மாற்றிக் கொண்டான். கல்லூரி இருவருக்கும் வேறு வேறு ஆகையால் இருவரும் NIIT யில் JAVA சேர்ந்தார்கள். பாதி நேரம் இன்ஸ்டிட்யூட் போகாமல் ஊர் சுற்றினார்கள். நாளாக நாளாக இருவரின் காதலும் வேகமாக வளர்ந்தது. பார்கவ் வீட்டின் தொலைப் பேசி கட்டணம் 6000, 7000 என்று ஏறிக்கொண்டே போனது. தீபாவையும், ராமனாதனையும் மற்ற நண்பர்களையும் முழுவதுமாக மறந்தான் பார்கவ். தீபாவுடன் கல்லூரியில் பேசுவதுடன் சரி. தினமும் மூன்று மணி நேரம் சௌம்யாவுடன் தொலைப்பேசியில் பேசுபவன் தீபாவிற்கு "Hi" மட்டும் சொல்வான், அதுவும் அவள் தொலைப் பேசியை எடுத்தால் மட்டுமே. ராமனாதனையோ பார்ப்பதே இல்லை.

ஒரு நிலையில் தீபாவிற்கு இரண்டு சிறந்த நண்பர்களை இழந்துவிட்டோம் என்ற நினைப்பு வாட்ட தொடங்கியது. அதற்கு வடிகாலாக இருந்தவன் தான் ராமனாதன். பார்கவின் மூலமாக அறிமுகம் ஆனவன். பார்கவ் மற்றும் சௌம்யாவின் புறக்கணிப்புகள் தீபாவிற்குள் ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தாக இருந்தவன் ராமனாதன்.

இருவருக்கும் இடையில் இருந்த நட்பு வளர்ந்தது. ஒரு கட்டத்தில் தீபாவிற்கு பார்கவைவிட நெருங்கிய நண்பனானான் ராமனாதன். இதை எதையுமே உணரும் நிலையில் பார்கவ் இல்லை. சௌம்யாவே உலகம் என்று இருந்தான். அவனது முதல் ஆண்டு படிப்பும் முடிந்தது. கூடவே சௌம்யாவின் இறுதி ஆண்டு படிப்பும் முடிவிற்கு வந்தது. சௌம்யாவின் வீட்டிலும் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.

"இப்போ என்ன பண்ணலாம் Bharghav?"

"We can't ignore them Saumi. We need to do something."

"அதான் என்ன?"

"Tell them you are not yet ready for the marriage. Tell them you want to do your post graduation. ஒரு 2 or 3 years ஓட்டலாம்."

"நல்ல idea. சொல்லி பாக்கறேன்."

"நான் படிப்பு முடிக்கறதுக்கே இன்னும் 3 வருஷம் ஆகும் Saumi. அதுக்கு அப்புறம் வேலை கிடச்சு ஒரு ரெண்டு வருஷமாவது ஆகும் settle ஆகறதுக்கு. So we need to make your parents wait for atleast another 5 years. அதுக்கு ஒரே வழி நீ ஏதாவது PG படிச்சுட்டு வேலைக்கு போறது தான்."

"இதுக்கு தான் இந்த வயசு வித்தியாசம் ஒரு பிரச்சினையாக இருக்கும்னு முன்னாடியே சொன்னேன். நீ தான் கேக்கலே."

"Forget it Saumi. இப்போ ஆக வேண்டியத பாரு."

ஒரு வழியாக வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் தனது எண்ணத்தை சொல்லி சம்மதம் வாங்கினாள் சௌம்யா. இதுவரை மேல்படிப்பு பற்றி வாயே திறக்காதவள் இப்பொழுது திடீரென்று தனது ஆசையை சொல்லியது அவர்களுக்கு வியப்பளித்தது. ஆனாலும் அவர்கள் பெரிதாக ஒன்றும் அவளை வற்புறுத்தவில்லை. அவளது விருப்பம் போலவே விட்டுவிட்டார்கள். அவளும் தான் படித்த அதே SRC கல்லூரியில் M.Com. சேர்ந்தாள். மீண்டும் காதல் தேர் அசுர வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது.

Tuesday, April 08, 2008

ரங்க பவனம் - IV

அவன் எதிர் பார்த்தபடியே வெளியிலேயே காத்திருந்தாள் தீபா. "என்ன? சீக்கிரம் சொல்லு. அப்பா இன்னும் தூங்கலே."

"இங்கே சொல்ல முடியாது. வா மொட்டை மாடிக்கு போகலாம்." என்று கூறி அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஆறாவது மாடியை கடந்து மொட்டை மாடிக்கு விரைந்தான்.

"என்ன? இப்போவாவது சொல்லு."

"Deepa...." 'Deepi' என்பது 'Deepa' ஆனதை கவனித்தாள். அதிலிருந்தே சொல்ல வந்த விஷயம் மிக முக்கியமானது என்பதை உணர்ந்தாள்.

"இதை எப்படி உன் கிட்ட சொல்றதுன்னு தெரியல. I think I am in love with Saumya and I have none other than you to share this with." என்று பட்டென்று சொல்ல வந்ததை போட்டு உடைத்தான்.

எந்த சலனமும் இல்லாமல் அவன் சொல்லியதை கேட்ட தீபா, "Well good luck with that. எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசிக்கலாம்." என்று சொல்லி கீழே இறங்கினாள்.

சொல்லி முடித்ததும் அவள் கோபப்படுவாள். அவளை சமாதானப் படுத்தலாம் என்றெல்லாம் எண்ணி வந்தவனுக்கு அவளின் இந்த செயல் திகைப்பை ஏற்படுத்தியது. மெதுவாக அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். பின்னர் தானும் மெதுவாக திரும்பி சென்றான்.

மறுநாள் தீபா, சௌம்யா இருவரும் அவர்களின் குல தெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட, அன்றைய பொழுது அவனுக்கு ஒரு யுகம் போல கழிந்தது. திங்களன்று வகுப்பில் தீபாவும் அவனுடன் சரியாக பேசவில்லை. இவன் இருமுறை அவளிடம் சென்று பேச முயன்றும் அவள் இவனை தவிர்த்து விட்டாள். அடுத்த நாள் செவ்வாயன்று அவனது வகுப்பு நண்பன் சிவாவின் பிறந்த நாள் என்பதால் அவன் கல்லூரிக்கு வரவில்லை. திரைப்படத்திற்கு சென்று விட்டான்.

புதன் கிழமை லேப் இருப்பதால் தீபா கட்டாயம் அவனை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்து அவன் அமைதி காத்தான். அந்த மூன்று நாட்களில் அவன் சௌம்யாவுடனும் கூட தொலைப்பேசியில் பேசவில்லை. 'தனது காதலைப் பற்றி சௌம்யாவிடம் தீபா சொல்லிவிட்டாளா? அவளது பதில் என்ன? தீபா என்ன நினைக்கிறாள்?' என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தான்.

புதனன்று லேப்பில் சோதனை தொடங்கும் முன்னர் சோதனையை விரிவுரையாளர் விளக்கிக் கொண்டு இருந்தார். அப்போது அருகில் இருந்த தீபாவிடம், "Deepi, this is too much. Say something." என்றான்.

"About what?"

"About my love. What else?"

"அதை பத்தி உன் கிட்ட நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?"

"இங்கே பாரு, இந்த Hide & Seek விளையாட்டு என்கிட்டே வேண்டாம். You are more important to me than anybody else in this world. You are my best friend. உன்கிட்டே தான் நான் என்னோட love பத்தி சொல்ல முடியும். If my lady love happens to be your sister, do you think I should send my feelings to graves? அது என்னால முடியாது. I am sorry."

"நான் அப்படி செய்ய சொன்னேனா?"

"Then why didn't you tell this to Saumya?"

"My foot. I care a damn. Had you known me as much as I know you, you wouldn't have asked this Bharghav."

சட்டென்று இருவருக்கும் இடையில் ஒரு திரை வந்தது போல் இருந்தது அவனுக்கு. இது நாள் வரையில் அவள் அப்படி பேசியதில்லை. 'தவறு யார் மீது?' என்பது அவனுக்கு தெரியவில்லை. 'ஒரு வேளை தவறு தனதாக இருந்தாலும் அது என்னவென்று சொன்னால் அல்லவா திருத்திக் கொள்ளலாம். ஒன்றுமே சொல்லாமல் போனால் எப்படி?' என்றெல்லாம் மனம் நினைத்து வருந்தியது. தீபாவும் மிகவும் காயப்பட்டிருக்க வேண்டும். அவளும் ஏதோ சிந்தனையிலேயே இருந்தாள். இருவராலும் சோதனையில் கவனம் செலுத்த இயலவில்லை. எல்லாம் முடித்துவிட்டு விரிவுரையாளரிடம் விடையை காட்டிய போது மேலும் கீழுமாக 5 நிமிடங்கள் பார்த்தார்.

"Are you guys given Castor Oil?"

"Yes Sir!"

"The numbers aren't correct. It's not even in the range. It's showing the viscosity of Honey." என்று சொல்லி இரண்டு நிமிடங்கள் யோசிப்பது போல் இருந்தார். பின்னர் "Okie. Please copy the numbers from Ranjani and redo your calculations".

வெளியே வரும் போது "Thanks Deepi." என்றான்.

"எதுக்கு?"

"நீ இருந்ததால தான் அவன் free யா விட்டான். இல்லேன்னா இந்நேரம் சாவு மணி அடிச்சுருப்பான். I think he loves you." என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

வேறொரு நேரமாக இருந்திருந்தால் அதற்கு தீபாவின் விடை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் அப்பொழுது ஒன்றும் சொல்லாமல் அமைதியாக சென்றுவிட்டாள். அன்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தொலைப் பேசி ஒலித்தது. எடுத்து பேசிய அவன் தந்தை இவனிடம், "Saumya" என்று கூறி மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். நாக்கு வரண்டு உதடுகள் ஒட்டிக் கொள்ள வேகமாக சென்று அவளுடன் பேச தயாரானான்.

Thursday, April 03, 2008

ரங்க பவனம் - III

தீபாவினுடைய நட்பு கிடைத்ததிலிருந்து தினமும் மாலை ஒரு மணி நேரமாவது இருவரும் தொலைப்பேசியில் உரையாடுவது வழக்கம். ஆனால் சௌம்யாவை பார்த்த அன்றைய தினத்திலிருந்து தினமும் தொலைப்பேசியில் தீபாவிற்கு "Hi!" சொல்லிவிட்டு சௌம்யாவுடன் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டான். நான்கே நாட்களில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

"நாளைக்கு என்ன plan? Movie போலாம்னு சொல்லிட்டு ஒன்னுமே சொல்லாம இருக்கே?" வெள்ளிக்கிழமை அவனிடம் கிசி கிசுத்தாள் தீபா.

"நாளைக்கு matinee show படம் பார்த்துட்டு, அப்படியே evening dinner Sangam போறோம். I will be there to pick you tomorrow afternoon."

மறுநாள் அவளது வீட்டிற்கு தனது புதிய மாருதி எஸ்டீம் காரில் வந்தான் பார்கவ். பின்னர் மூவரும் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள். முன்னிருக்கையில் ஏற முற்பட்ட தீபாவை பின்னிருக்கைக்கு தள்ளி விட்டு, சௌம்யாவை முன்னால் அமர வைத்தான் பார்கவ். திரையரங்கிலும் சௌம்யாவின் அருகே அமர அவன் அடித்து பிடித்து ஓடியது தீபாவிற்கு சிரிப்பையே வரவழைத்தது.

படம் முடிந்த பின்னர் மூவரும் அங்கிருந்து கிளம்பி சங்கம் ஹோட்டலுக்கு சென்றனர். சௌம்யாவிற்கு அசைவம் பிடிக்கவே பிடிக்காது. பார்கவிற்கோ அசைவம் இல்லை என்றால் சாப்பிடவே பிடிக்காது. இதனைக்கும் அவனது வீட்டில் அனைவரும் சைவமே. ஆனாலும் சௌம்யாவிற்காக நல்ல பிள்ளையாக சைவமே சாப்பிட்டான். பிறகு வேண்டுமென்றே "Taste பார்க்கனும்" என்று சொல்லி சௌம்யாவின் ஐஸ்கிரீமையும் இரண்டு ஸ்பூன்கள் சாப்பிட்டான்.

இதையெல்லாம் கவனிக்க தவறவில்லை தீபா. அவளுக்கு இவனது மாற்றம் நெருடலாக இருந்த போதிலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மற்ற பெண்களிடம் கடலை போடுவது போலத்தான் இவன் சௌம்யாவுடனும் கடலை போடுகிறான் என்றே அவள் நம்பினாள். 'சரி இன்று வேண்டாம் நாளை பார்த்துக் கொள்ளலாம்' என்று விட்டு விட்டாள்.

அன்று இரவு வீட்டிற்கு சென்றதும் வழக்கம் போல பார்கவ் தொலைப்பேச முயன்றான். தொலைப்பேசியை எடுத்த தீபா "என்ன விஷயம்? இவ்வளோ நேரம் ஒன்னா தானே இருந்தோம்." என்றாள்.

பார்கவ், "Saumi கிட்ட குடு Deepi" என்றான்.

"அவ தூங்கிட்டா. நாளைக்கு பேசு." என்று தொலைப்பேசி வைக்கப் பட்டது.

இத்தனை நாளில் தீபாவிடமிருந்து இப்படி ஒரு பதிலை அவன் பெற்றதில்லை. சட்டென்று கடந்த ஒரு வார காலமாக தீபாவை அவன் புறக்கனித்தது அவனுக்கு தெளிவாக தெரிந்தது. 'என்ன இருந்தாலும் Deepi is more important to me. No matter what happens she is my best friend. I can't afford to lose her. எனக்கு சௌம்யாவை பிடித்திருந்தால் அதை முதலில் தீபாவிடமல்லவா சொல்ல வேண்டும்? அவளிடம் எதற்கு மறைக்க வேண்டும்?' என்று முடிவு செய்த அவன் மீண்டும் தீபாவை தொலைப்பேசியில் அழைத்தான்.

தொலைப்பேசியை எடுத்த தீபா 'Hello!' சொல்வதற்குள் "Deepi! I want to meet you, now." என்றான்.

"என்ன உளர்றே? இப்போ time என்ன தெரியுமா? It's 10 O' Clock in the night."

"Doesn't matter. I want to tell you something really important. I will come there. நீ உங்க apartment வாசல்லயே wait பண்ணு." என்று சொல்லி அவளின் பதிலுக்கு காத்திராமல் தொலைப்பேசியை வைத்துவிட்டு யமஹாவை கிளப்பினான்.

இரவு நேரம் என்பதால் சாலை காலியாக இருந்தது. 5 நிமிடத்தில் தீபாவின் வீட்டை அடைந்த அவன், படிகளில் குடு குடு வென்று ஓடி ஐந்தாவது மாடியில் உள்ள அவளின் வீட்டை அடைந்தான்.

Tuesday, April 01, 2008

ரங்க பவனம் - II

திருவாணைக்காவலில் இருந்து திருவரங்கத்திற்கு பத்தே நிமிடங்களில் வந்தான் பார்கவ். ரங்க பவனத்தில் இருக்கும் தீபாவின் வீட்டை அடைந்த பின்னர் தான் கவனித்தான் மணி இன்னும் 6:20 ஐ காட்டிக் கொண்டு இருந்தது. 'அடடா! மணி தெரியாமல் வந்து விட்டோமே.' என்று யோசித்தவன் சட்டென்று "டேய், Bharghav!" என்ற குரல் கேட்டு திரும்பினான். பார்த்தால் அவனது பள்ளித் தோழன் ராமனாதன். ராமனாதனின் தாத்தா திருச்சியில் மிகவும் பிரபலமான ஒரு பஸ் கம்பெனியின் முதலாளி.

"டேய்! இங்கே என்னடா பண்ணறே?", இது ராமனாதன்.

"சும்மா தான்டா"

"College லாம் எப்படி இருக்கு?"

"பரவா இல்லை. ஏதோ போய்கிட்டு இருக்கு."

"Ragging லாம்?"

"அதெல்லாம் சுத்தமா கிடையாதுடா. பாதி seniors நம்ம school தான். So no problem. உனக்கு?"

"உனக்கு என்னடா? நல்ல college. Campus placement லாம் இருக்கு. எனக்கு அப்படியா?"

"ஏய், தூ... செட்டியார் சேர்த்து வச்சுருக்கற சொத்துக்கு உக்காந்து தின்னாலே மூனு தலைமுறைக்கு வரும். இதுலே வேலைய பத்தி கவலை படறே."

ராமனாதனின் தாத்தாவை திருச்சியில் எல்லோரும் செட்டியார் என்று தான் அழைப்பார்கள். அதை தான் பார்கவ் குறிப்பிட்டான்.

"சரி வாடா போய் அந்த டீக்கடையிலே தம் போட்டு போலாம்." என்று அழைத்தான் ராமனாதன்.

"இல்லேடா. ஒரு friend வீட்டுக்கு dinner க்கு போறேன். வேணாம். நீ அடி." என்று மறுத்தான் பார்கவ்.

"யாருடா அது, எனக்கு தெரியாம உன் friend?"

"College friend டா. பேரு Deepa. Dinner க்கு கூப்பிட்டா. அதான் போறேன்."

"டேய்! உண்மைய சொல்லு. friend ஆ? இல்ல friendi யா?"

"அட ச்சீ. அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. Just friend."

"சரி டா. நான் கிளம்பறேன். You carry on. உன்கிட்டே நிறையா பேசனும்டா. முடிஞ்சா saturday morning 10 O' Clock காயத்ரீஸ் வந்துடு." என்று கூறி விடை பெற்றான் ராமனாதன். அதற்குள் மணி 7 ஆகி விடவே, தீபாவின் வீட்டை நோக்கி சென்றான் பார்கவ்.

வண்டியை வேகமாக செலுத்தி தீபாவின் வீடு இருக்கும் ரங்க பவனம் தெருவில் திரும்புகையில் அவனது வேகத்தையும் மீறி அவனது கண்கள் அந்த தேவதையை படம் பிடித்தன. உருண்டை முகம், எலுமிச்சை நிறம், கன்னத்தில் சிரிக்கும் பொழுது லேசாக விழும் குழி, வகிடு எடுக்காமல் தூக்கி வாரிய முடி, peach colour சல்வார், கழுத்தை ஒட்டி பின்புறம் போடப்பட்ட துப்பட்டா, காதுகளில் அதற்கு பொருத்தமான முத்து பதித்த studs, வலது கையில் bracelet, இடது கையில் watch என்று அவளை அந்த ஒரு கணத்தில் முழுவதுமாக அளந்தன பார்கவின் கண்கள். 'ஒக்காமக்கா super figure' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். வேறொரு நேரமாக இருந்தால் அவளை கடந்து சென்றிருக்கவே மாட்டான். அங்கேயே வண்டியை நிறுத்தி விட்டு அவளை தொடர்ந்து சென்று அவளது வீட்டை கண்டு பிடித்திருப்பான். ஆனால் இப்பொழுது தீபாவின் வீட்டிற்கு சாப்பிட செல்வதால் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவளை கடந்தான்.

பார்கவ், தீபாவின் வீட்டின் அழைப்பு மணியை அமுக்கி காத்திருந்தான். கதவை திறந்த தீபா, "வாடா வா. 6 மணிக்கு கிளம்பி இங்கே வர்ரதுக்கு ஒரு மணி நேரமா? இப்போ தான் உங்க வீட்டுக்கு phone பண்ணினேன்."

"அதுக்குள்ளே CID வேலைய ஆரம்பிச்சுட்டியாக்கும். ராமனாதன பார்த்தேன். அதான் பேசிகிட்டு இருந்தேன்."

"யாரு அது?"

"அதான் சொல்லி இருக்கேனே, நம்ம செட்டியார் பேரன். என்னோட school mate."

"சரி சரி உள்ள வா."

உள்ளே சென்ற பார்கவிற்கு தீபாவின் தந்தையின் அறிமுகம் கிடைத்தது. அவர் இவன் நினைத்ததை விட இளமையாக இருந்தார். வரலாற்று பேராசிரியரான அவரிடம் இவன் பேசுவதற்கு பல விஷயங்கள் இருந்தன. நேரம் போவதே தெரியாமல் இருவரும் வரலாறு, பொருளாதாரம், இந்திய மற்றும் மேல் நாட்டு வாழ்க்கை, அரசியல், சமூகம் என்று சகலத்தையும் பேசி சலித்தெடுத்துக் கொண்டிருந்த போதுதான் இவனுக்கு சௌம்யாவின் நினைவு வந்தது. "Deepi, where is Saumya?" என்று கேட்டான். "அவளுக்கு ஏதோ project report spiral binding பண்ணனுமாம். அதான் போயிருக்கா. இப்போ வந்துடுவா." என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அழைப்பு மணி ஓசை எழுப்பியது. கதவை திறந்து பார்த்த தீபா, "வா வா. உனக்கு ஆயுசு நூறு. இப்போ தான் Bharghav உன்னை பத்தி கேட்டுக்கிட்டு இருந்தான். Think of the devil." என்றாள். அதை கேட்டு சிரித்துக் கொண்டே உள்ளே வந்த சௌம்யாவை பார்த்து பார்கவ் மயங்கி விழாத குறை தான். பின்னே, வெளியே பார்த்து தவரவிட்ட அதே தேவதையை மீண்டும் பார்த்தால்? சம்பிரதாய அறிமுகப் படலத்தின் போது கை குடுத்த சௌம்யாவின் மென்மையான கையை 'ஹி! ஹி!' என்று வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டே 5 நிமிடங்கள் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான். பின்னர் பின் மண்டையில் திடீர் என்று ஒரு bulb எரிய decent ஆக நடிக்கத் தொடங்கினான்.

ஆனாலும் அதன் பின் அங்கே நடந்த உரையாடல்கள் எதிலும் அவனது கவனம் இல்லை. அவனது கவனம் எல்லாம் சௌம்யாவிடமே இருந்தது. சாப்பிடும் போது தீபாவின் அருகில் இருந்த இருக்கையில் வேண்டுமென்றே தண்ணீரைக் கொட்டிவிட்டு சௌம்யாவின் அருகில் போய் அமர்ந்தான். சௌம்யாவை பற்றி முழு விபரங்களையும் கேட்டறிந்தான். விடை பெரும் போது சௌம்யா "அடுத்து எப்போ meet பண்ணலாம்?" என்றாள். இதற்காகவே காத்திருந்தவன் போல சட்டென்று "How about a movie this weekend?" என்றான்.

"Sure. Which one?"

"காதல் கவிதை at Maris?"

"Okie. Catch you this saturday."

"Bye!"

"Bye! Good night. பார்த்து மெதுவா போ."

அன்று இரவு வீடு திரும்பிய பார்கவின் மனதில் இனம் புரியாததொரு மகிழ்ச்சி நிலவியது. அது எதனால் என்று அவனுக்கே தெரியவில்லை. இதற்கு முன்னர் எத்தனையோ அழகான பெண்களிடம் அவன் கடலை போட்டு இருக்கிறான். பெண் நண்பிகளும் அவனுக்கு நிறைய உண்டு. ஆனாலும் சௌம்யா அவனுக்கு 'Something Special' ஆக தெரிந்தாள். அவளது அழகையும் மீறி அவளிடம் இருந்த ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது. 'Is this love or infatuation?' அவனே அவனிடம் கேட்டுக் கொண்டான். வரப்போகும் சனிக்கிழமைக்காக ஏங்கியது அவன் மனம்.