Saturday, March 31, 2012

பொடிமாஸ் - 03/31/2012

அம்மாவும் உடன் பிறவா சகோதரியும் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். எதிர் பார்த்தது தான். அவர்களுக்குள் என்ன நடந்தது என்று அவர்களுக்கே தெரியும். இனி அம்மாவின் செயலை நம்பி சசிகலாவிற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஆப்பு தான். சோ இதற்கு என்ன சொல்வார் என்று தெரிந்து கொள்ள ஆவல். ஏதேனும் சொல்லி பூசி மூடுவார். "தாயுள்ளம் கொண்டு துரோகத்தை மன்னித்தார்" என்று கூறினாலும் வியப்பு இல்லை. அந்த அளவிற்கு இப்பொழுதெல்லாம் அவர் ஜெயலலிதா ஜால்ரா போடுகிறார்.தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. இதுவும் எதிர் பார்த்தது தான். இடை தேர்தலுக்காகவே உயர்த்தாமல் இருந்தார்கள். தேர்தல் முடிந்த உடன் உயர்த்தி விட்டார்கள். ஆனாலும் கர்நாடகா மற்றும் ஆந்திராவை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்சார கட்டணம் மிகவும் குறைவு தான். அதிக கட்டணம் வசூலித்தாலும் தடையில்லாத மின்சாரம் அளித்து தொலைத்தால் நல்லது.அடுத்த வாரம் IPL போட்டிகள் தொடங்குகின்றன. தமிழகத்தில் மின்சார உபயோகம் பல மடங்கு அதிகரிக்கும். நிச்சயம் மின்வெட்டும் அதிகரிக்கும். கோடை காலம் வேறு. நினைத்தாலே பயமாக இருக்கிறது. இந்த மே மாதம் முழுவதும் இந்தியா செல்வதாக ஒரு திட்டம் இருந்தது. இப்பொழுது 10 மணி நேர மின்வெட்டை நினைத்து பயணத்தை வருட இறுதிக்கு ஒத்தி வைத்திருக்கிறோம்.திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே. என். நேருவின் இளைய சகோதரர் ராமஜயத்தின் மரணம் அதிர்ச்சியை கொடுக்கிறது. அதை விட அதிர்ச்சி தினமலரிலும் தினகரனிலும் அவரது கொலையை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ள திருச்சி மக்களின் மனநிலை. நான் திருச்சியை விட்டு வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. அதனால் திருச்சியின் இன்றைய நிலை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் கருத்து தெரிவித்துள்ள பலரும் திருச்சியை திருப்பாச்சியில் பேரரசு காட்டிய சென்னைக்கு நிகராக கூறி இருக்கிறார்கள். உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகவும் பயமாக இருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் பிடிபட வேண்டும். அப்பொழுது தான் உண்மை தெரியும்.ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மனோவிற்கும் புஷ்பவனம் குப்புசாமிக்கும் சண்டை நடப்பது போல ஏதோ ஒன்று காட்டுகிறார்கள். இன்னும் நிகழ்ச்சியை முழுதாக நான் பார்க்கவில்லை. காசுக்காக பிரபலங்கள் தங்களது டிக்னிட்டியை குறைத்துக் கொள்கிறார்கள். மானம் போனால் உயிர் போகும் என்ற காலம் போய், மானம் போனால் மயிர் தான் போகும் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரபலங்களிடம் மட்டும் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.இன்று அமெரிக்காவில் கடந்த ஒரு வார காலமாக இருந்த லாட்டரி மேனியா ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. சுமார் 3200 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள லாட்டரி பரிசு மூன்று பேருக்கு விழுந்திருக்கிறது. இதுவரை உலகில் வழங்கப்பட்டுள்ள லாட்டரி பரிசுகளிலேயே இதுதான் அதிகமானது. உலக சாதனை. டிக்கெட்டை வாங்க அமெரிக்கா முழுதும் மக்கள் வரிசைகளில் அடித்து பிடித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு நிமிடத்தில் சராசரியாக சுமார் 3 லட்சம் லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இந்த குலுக்கலில் பரிசு யாருக்கும் விழாமல் இருந்திருந்தால் அடுத்த குலுக்கலுக்கு பரிசுத்தொகை 5000 கோடியை தொட்டிருக்கும்.

நான் சரக்கடித்து விட்டு வாந்தி எடுத்து நெடுநாட்கள் ஆகிவிட்டன. ஆனால் நேற்று இரவு திடீரென்று அடித்த சரக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஒரே வாந்தி. இன்று முழுதும் ஹேங்கோவர் வேறு. எப்பொழுதும் அடிக்கும் ப்ராண்ட் தான். என்ன எழவோ தெரியவில்லை. இன்று திடீரென்று சுத்தி விட்டது. ஒரு வேளை எனக்கு வயசாகி விட்டதோ என்னவோ.

Puking is the worst side effect of drinking alchohol; probably the best too.சமீபத்தில் தான் மஹேஷ் பாபு நடித்த அத்தடு படம் முழுதும் பார்த்தேன். படம் அட்டகாசம். மஹேஷ் பாபுவின் ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸ் அருமை. இது அவருக்கான டெய்லர் மேட் படம். படம் கமர்ஷியலாக பெரிய வெற்றி இல்லை என்று கூறுகிறார்கள். ஒரு வேளை அதனால் தமிழில் விஜய் நடிக்கவில்லையோ என்னவோ. ஒரு வேளை நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


Thursday, March 22, 2012

அமெரிக்கா போல் இந்தியா

கடந்த பல மாதங்களாகவே இதனை பற்றிய பதிவு ஒன்று எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் கேபிள் சங்கரின் பதிவொன்றில் எனக்கும் வேறு ஒரு நண்பருக்கும் சிறு விவாதம் நடந்தது. அவர் இந்திய அரசு அலுவலகங்களின் செயல் பாட்டை விமர்சித்து அமெரிக்க அரசு அலுவலகங்கள் போல அவை செயல் பட்டால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார். நான் அவரது கருத்தில் முழுதாக உடன் படுகிறேன் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஆனால் அதே நேரத்தில் பலர் இந்தியர்களுக்கு சுத்தம், சுகாதாரம், அடிப்படை நாகரீகம், மனிதநேயம் ஒன்றும் கிடையாது என்ற அளவில் கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இத்தகைய கருத்து என்னை மிகவும் சஞ்சலப் படுத்துகிறது.

பொத்தாம் பொதுவாக உலகின் ஆறில் ஒரு பங்கு மக்களை "நாகரீகம் தெரியாத பட்டிக் காட்டான்கள்" என்று கூறுவது, அதுவும் அவர்களில் தானும் ஒருவன் என்று தெரியாமல் கூறுவது எந்த வகையில் நியாயம்?

"இந்தியர்கள் அனைவரும் மடையர்கள்" என்று ஒரு இந்தியன் சொன்னால், அந்த கருத்தை சொல்லும் அவனும் மடையன் தானே. அப்பொழுது மடையனின் கருத்தை உண்மையாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? எடுத்துக் கொள்ள முடியாதல்லவா? சரி என்று, அப்படி நினைத்து இந்த கருத்தை மறுத்தால் இந்தியர்கள் மடையர்கள் இல்லை என்று பொருள் ஆகிறது. அதனால் அந்த கருத்தை சொன்னவனும் மடையன் இல்லை என்றாகிறான். அதனால் அவன் சொன்ன அந்த கருத்தை ஏற்க வேண்டி இருக்கிறது. It's becoming a liar's paradox.

நான் இந்தியாவில் பிரச்சனைகளே இல்லை என்று கூறவில்லை. அதே நேரத்தில் பூஜ்ஜியத்தை கண்டு பிடித்தவரே ஆர்யபட்டா தான் என்று பழம் பெருமையும் பேசவில்லை. நான் சொல்ல வந்தது ஒன்றே ஒன்று தான்.

என் வாழ்வில் நான் இது வரையில் பெற்ற வெற்றிகளுக்கு எல்லாம் காரணம் எனது இந்திய பெற்றோர்கள் மற்றும் இந்தியா எனக்கு அளித்த கல்வி. ஒரு வேளை என்னை 18 வயதில் வீட்டை விட்டு வெளியில் சராசரி அமெரிக்க பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் அனுப்பி இருந்தால் நான் இந்நேரம் தேனாம்பேட்டை சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பேன். இருபத்தியோரு வயது வரை குடும்ப கஷ்டங்கள் எதுவும் தெரியாமல் என்னை வளர்த்து ஆளாக்க அவர்கள் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். "Third world attitude towards education" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உண்மையில் அத்தகைய ஒரு ஆட்டிட்யூட் அவர்களுக்கு இருந்ததினால் மட்டுமே நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

அதே போல கல்வி. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனது பத்தாம் வகுப்பு புத்தகங்கள் ஒவ்வொன்றின் விலையும் 10 ரூபாய்களுக்கும் குறைவு. ஆனால் அதன் அடக்க விலை பல நூறு ரூபாய்கள். ஏறக்குறைய ஐநூறு ரூபாய் விலை உள்ள புத்தகங்கள் எனக்கு சுமார் ஐம்பது ரூபாய்களுக்கு கிடைத்தது. எனது ஆசிரியர் ஒருவர் தமிழ் நாடு பாட நூல் கழகத்தின் தலைவராக அப்பொழுது இருந்தார். அவர் சொன்ன செய்தி அது. அதே போல எனது பத்தாம் வகுப்பில் நான் கட்டிய பாடக் கட்டணம் இருநூறு ரூபாய்களுக்கும் குறைவு. இன்று சென்னையில் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பிற்கு என்ன கட்டணம் வாங்குகிறார்கள் என்று தயவு செய்து ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

எங்கிருந்து வந்தது அந்த பணம். யார் கொடுத்தது அது? ஒவ்வொரு தமிழனும் கட்டிய வரியில் தான் நான் படித்தேன். இன்று உங்களால் பட்டிக்காட்டான்கள் என்று கூறப்படும் ஒவ்வொருவனின் உழைப்பும் இன்று நான் உபயோகிக்கும் விலையுயர்ந்த பொருட்களில் இருக்கிறது.

உங்களில் இருந்து நான் அதிகம் வேறுபட்டவன் இல்லை என்பதால் என்னால் உறுதியாக இன்னும் ஒன்றையும் கூற முடியும். என்னை போலவே உங்களின் வெற்றிகளுக்கும் பல இந்தியர்கள், தமிழர்கள் அஸ்திவாரமாக இருந்திருப்பார்கள். அவர்களை தயவு செய்து கேவலப் படுத்தாதீர்கள்.

இதையும் மீறி உங்களுக்கு இந்திய மக்களை பார்க்க ஏளனமாகவும், கேவலமாகவும், வெறுப்பாகவும் இருந்தால் இந்திய குடியுறிமையையும், பாஸ்போர்டையும் இந்திய அரசாங்கத்திடம் மீண்டும் சமர்பித்துவிட்டு அகதியாக வெளி நாட்டில் வசித்துக் கொண்டு இந்தியாவையும் இந்திய மக்களையும் விமர்சனம் செய்யுங்கள்.

வெளிநாட்டு வீசாவை இந்திய பாஸ்போர்ட்டில் வைத்துக் கொண்டு, இந்தியாவில் பெற்ற பட்டப்படிப்பையும் வைத்துக் கொண்டு இந்தியாவையும் இந்திய மக்களையும் தரம் குறைவாக திட்டுவது மல்லாந்து படுத்து எச்சில் துப்புவதை போன்றது. ஒரு வேளை நீங்கள் அப்படி துப்பினாலும் அதை துடைத்து உங்கள் முகத்தை சுத்தப்படுத்த வரும் கை ஒரு சக இந்திய பட்டிக்காட்டானின் கையாகத்தான் இருக்கும்.

கடைசியில் ஒன்றை மட்டும் கூறி பதிவை முடிக்கிறேன், "ஏற்றிவிட்ட ஏணி அதே இடத்தில் தான் இருக்கும். நீங்கள் உயரே சென்று விட்டீர்கள் என்பதற்காக ஏற்றிவிட்ட ஏணியை ஏளனமாக பார்க்காதீர்கள்".

Sunday, March 18, 2012

மோதி விளையாடு


இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அப்பொழுது எனது சகோதரர் ஸ்வீடன் நாட்டின் மிகப் பெரிய ஃபார்மஸிடிகல் நிறுவனம் ஒன்றின் இந்திய கிளையின் தலைவராக இருந்தார் (CFO & Head - India Operations). இந்தியாவில் ஒரு தொழிற்சாலை தொடங்கும் முயற்சியை அப்பொழுது அவர் மேற்கொண்டிருந்தார். அவர் அப்பொழுது சென்னையில் இருந்ததினால் தமிழகத்தில் அதை தொடங்க விரும்பினார்.

தமிழகத்தில் ஃபார்மஸிடிகல் நிறுவனங்களுக்கான ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் (SEZ) பெரம்பலூர் அருகில் இருந்தது. அதில் தனது நிறுவனத்திற்கு இடம் ஒதுக்க கடுமையாக போராடினார். மிகப் பெரிய சிபாரிசின் பேரில் தான் தமிழக அதிகாரி எனது சகோதரரை பார்க்கவே சம்மதித்தார். அதன் பிறகும் கூட அந்த அதிகாரி பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அந்த தொழிற்சாலை தமிழகத்தில் வருவதற்கு எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் எனது சகோதரரிடம் கூறியதன் சுருக்கம் கீழே.

"சார்!, தமிழகத்தில் எங்கெல்லாம் ஃபார்மஸிடிகல் நிறுவனங்களுக்கான ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் இருக்கின்றன என்பது எனக்கு தெரியாது. இதை நீங்கள் தெரிந்து கொண்டு வந்தாலும், அவற்றில் எவ்வளவு இன்னும் ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அதையும் நீங்களே தெரிந்து கொண்டு வந்தாலும், அவற்றில் இடம் பெற உங்கள் நிறுவனம் தேர்வு பெறுமா என்று தெரியாது. அப்படி உங்கள் நிறுவனம் தேர்வு பெற்றாலும், உங்கள் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய எனக்கு அனுமதி அரசாங்கத்தில் இருந்து வருமா என்று தெரியாது. பேசாமல் என்னிடம் நீங்கள் நேரத்தை செலவிடாமல் மத்தியில் பேசி அனுமதியுடன் வந்து மாநில அமைச்சகத்துடன் பேசுங்கள்."

அதே நேரத்தில் குஜராத் மாநில அரசு இணைய தளத்தில் இருக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரியை எடுத்து எந்த சிபாரிசும் இல்லாமல் ஒரே ஒரு மின்னஞ்சலை அனுப்பினார் எனது சகோதரர். அடுத்த நாளே அவரை தொலை பேசியில் அழைத்த குஜராத் மாநில அதிகாரி, எனது சகோதரரின் தேவை, நிறுவனத்தினை பற்றிய தகவல்கள் போன்றவற்றை பெற்றுக் கொண்டார். அவர் பின்னர் அடுத்த வாரமே சென்னை வந்து விட்டார். எனது சகோதரை சந்தித்து குஜராத்தில் இருக்கும் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன்களை பற்றிய தகவல்களை விளக்கி அவருக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய தங்கள் அரசின் ஒப்புதலை தெரிவித்தார். மேலும் எனது சகோதரர் விருப்பப்பட்டால் குஜராத் அரசின் செலவிலேயே எனது சகோதரரை நேரில் அழைத்து சென்று நிலத்தை காமித்து அவரையே எந்த பகுதியில் நிலம் வேண்டும் என்று தேர்ந்தெடுக்கவும் அனுமதி அளித்தார்.

மேலே நான் கூறியது அரசியல் ஆதாயத்திற்காக கூறப் படும் புனைவு அல்ல. எனது சகோதரருக்கு நேரிடையாக கிடைத்த அனுபவம். தமிழக மற்றும் குஜராத் அரசுகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடு இதுதான். ஒரு மாநிலத்தில் இப்படி ஒரு ஆட்சி நடப்பதற்கு அம்மாநில முதலமைச்சருக்கு பெரும் பங்கு இருக்கிறது. அதனால் நிச்சயம் மோதி பாராட்டுக்குரியவர்.

அவரது ஆட்சியில் குஜராத் பெற்ற வளர்ச்சியை பாராட்டி டைம் பத்திரிக்கை அவரது புகைப்படத்தை தனது அட்டையில் வெளியிட்டுள்ளது. மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், லால் பஹதூர் ஷாஸ்த்ரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்கள் இதற்கு முன்பே டைம் பத்திரிக்கை அட்டையில் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் அனைவரும் தேசிய அளவில் அரசியலில் பங்கு பெற்றவர்கள். ஒரு இந்திய மாநில அரசியல்வாதி டைம் பத்திரிக்கையின் அட்டையில் வருவது இதுவே முதல் முறை. அவருக்கு எனது பாராட்டுக்கள்.

Friday, March 09, 2012

Rahul Dravid


சுவரில் தான் சித்திரம் எழுத வேண்டும். ஆனால் இந்த சுவரே சித்திரம் ஆனது. இனி இவர் போல ஒருவர் கிரிக்கெட் உலகுக்கு கிடைக்க மாட்டார். சிறிதும் ஈகோ இல்லாதவராகவே இவர் பார்க்கப்பட்டார். தனது கிரிக்கெட் வாழ்வை அடகு வைத்து அணிக்காக கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு மேல் விக்கெட் கீப்பிங் செய்தவர். அணியின் தேவைகளை தனது தேவைகளுக்கு முன்பு எப்பொழுதும் வைப்பவர். இன்னும் இவரை பற்றி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவரது டெஸ்ட் ஆட்டங்களில் சிறந்ததாக நான் கருதும் முதல் ஐந்து ஆட்டங்களை கீழே தொகுத்து அளித்துள்ளேன்.

1. 2nd Innings, 2001 India Vs Australia at Eden Gardens, Score : 180 (353)

முதல் இன்னிங்க்ஸில் 274 ரன்கள் குறைவு. ஃபாலோ ஆன் வேறு கொடுக்கப்பட்டு விட்டது. எதிர் அணியோ இந்த நூற்றாண்டின் தலை சிறந்த அணி. இந்த நிலையிலிருந்து வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு இமாலய முயற்சி தேவை. அதை லக்ஷ்மனுடன் சேர்ந்து செய்தது நிச்சயம் என் மனதில் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்ற ஒரு முயற்சி. இது ஆஸ்திரேலியாவின் சாதனையான தொடர்ந்த 16 டெஸ்ட் வேற்றிகளை நிறுத்தியது பந்தியில் இடம் பெற்ற கூடுதல் இனிப்பாக இனித்தது.

2. Both Innings, 2003 India Vs Australia at Adelaide, Score : 233 (446) & 72* (170)

இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய மண்ணில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த வெற்றி. சிலர் இந்த போட்டியில் ட்ராவிட் ஆடிய ஆட்டத்தை கொல்கட்டா ஆட்டத்தை விட சிறப்பானது என்று கருதுகிறார்கள். முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியாவின் 556 க்கு பதிலாக களம் இறங்கிய இந்தியா 85 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விட்டது. அப்பொழுது ஒன்று சேர்ந்த லக்ஷ்மன் மற்றும் ட்ராவிட் கொல்கத்தாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்ததை மீண்டும் செய்தார்கள். அபாரமாக விளையாடி இந்தியா 523 ரன்களை எடுக்க உதவினர். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 196 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. வெற்றி பற 230 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கியது இந்திய அணி. களமோ மிக மோசமான நிலையில் இருந்தது. நூறு ரன்களை கடப்பதே மிகவும் கடினமான செயலாக தெரிந்தது. அந்த நிலையில் முதல் இன்னிங்க்ஸில் 233 ரன்கள் எடுத்த ட்ராவிட் மீண்டும் களம் இறங்கி ஆட்டம் இழக்காமல் 72 ரன்களை எடுத்தது அவரது சாதனைகளின் மகுடம் என்று கூறலாம்.

3. Both Innings, 1997 India Vs South Africa at Johannesburg, Score : 148 (162) & 81 (146)

ட்ராவிடின் முதல் டெஸ்ட் சதம். அது தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக வருவது ஒரு அருமையான விஷயம் அல்லவா? டொனால்டு, பொல்லாக் மற்றும் மக்மில்லன் போன்றவர்களின் பந்து வீச்சை சமாளித்து இரண்டு இன்னிங்க்ஸிலும் நன்றாக அவர் விளையாடினார். அடுத்த நாள் பள்ளியில் எங்கள் ஆசிரியர் அனைவருக்கும் இனிப்பு கொடுத்தார். அதனாலேயே இதுவும் என்னால் மறக்க முடியாத ஒரு போட்டியானது.

4. 1st Innings, 2002 India Vs England at Headingley, Score : 148 (307)

ஆஸ்திரேலிய பவுன்ஸி ட்ராக்குகளில் கூட ஓரளவு விளையாடி விடலாம். ஆனால் இங்கிலாந்தின் ஸீமிங் ட்ராக்குகளில் விளையாடுவது மிகவும் கஷ்டமான செயல். அதிலும் முதலில் பேட் செய்வது சொல்லவே வேண்டாம். அப்படிப்பட்ட நிலையில் முதலில் பேட் செய்து சச்சின் மற்றும் கங்குலியுடன் சேர்ந்து 148 ரன்களை பெற்றது நிச்சயம் அருமையான ஒரு ஆட்டம். என்னால் மறக்க முடியாததும் கூட.

5 : 1st Innings, 1996 India Vs England at Lords, Score : 95 (267)

1996 ஆம் ஆண்டு உலக கோப்பையில் தோற்ற பின்னர் கடும் வீழ்ச்சியில் இருந்த இந்திய அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கு விதமாய் தனது முதல் ஆட்டத்திலேயே 95 ஓட்டங்கள் எடுத்து அவரது வரவை உலகுக்கு அறிவித்த இந்த போட்டி என்னால் மறக்க இயலாதது.

Farewell, my beloved, fare thee well.
The elements be kind to thee, and make
Thy spirits all of comfort: fare thee well.
-William Shakespeare