Sunday, March 18, 2012


மோதி விளையாடு


இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அப்பொழுது எனது சகோதரர் ஸ்வீடன் நாட்டின் மிகப் பெரிய ஃபார்மஸிடிகல் நிறுவனம் ஒன்றின் இந்திய கிளையின் தலைவராக இருந்தார் (CFO & Head - India Operations). இந்தியாவில் ஒரு தொழிற்சாலை தொடங்கும் முயற்சியை அப்பொழுது அவர் மேற்கொண்டிருந்தார். அவர் அப்பொழுது சென்னையில் இருந்ததினால் தமிழகத்தில் அதை தொடங்க விரும்பினார்.

தமிழகத்தில் ஃபார்மஸிடிகல் நிறுவனங்களுக்கான ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் (SEZ) பெரம்பலூர் அருகில் இருந்தது. அதில் தனது நிறுவனத்திற்கு இடம் ஒதுக்க கடுமையாக போராடினார். மிகப் பெரிய சிபாரிசின் பேரில் தான் தமிழக அதிகாரி எனது சகோதரரை பார்க்கவே சம்மதித்தார். அதன் பிறகும் கூட அந்த அதிகாரி பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அந்த தொழிற்சாலை தமிழகத்தில் வருவதற்கு எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் எனது சகோதரரிடம் கூறியதன் சுருக்கம் கீழே.

"சார்!, தமிழகத்தில் எங்கெல்லாம் ஃபார்மஸிடிகல் நிறுவனங்களுக்கான ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் இருக்கின்றன என்பது எனக்கு தெரியாது. இதை நீங்கள் தெரிந்து கொண்டு வந்தாலும், அவற்றில் எவ்வளவு இன்னும் ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அதையும் நீங்களே தெரிந்து கொண்டு வந்தாலும், அவற்றில் இடம் பெற உங்கள் நிறுவனம் தேர்வு பெறுமா என்று தெரியாது. அப்படி உங்கள் நிறுவனம் தேர்வு பெற்றாலும், உங்கள் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய எனக்கு அனுமதி அரசாங்கத்தில் இருந்து வருமா என்று தெரியாது. பேசாமல் என்னிடம் நீங்கள் நேரத்தை செலவிடாமல் மத்தியில் பேசி அனுமதியுடன் வந்து மாநில அமைச்சகத்துடன் பேசுங்கள்."

அதே நேரத்தில் குஜராத் மாநில அரசு இணைய தளத்தில் இருக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரியை எடுத்து எந்த சிபாரிசும் இல்லாமல் ஒரே ஒரு மின்னஞ்சலை அனுப்பினார் எனது சகோதரர். அடுத்த நாளே அவரை தொலை பேசியில் அழைத்த குஜராத் மாநில அதிகாரி, எனது சகோதரரின் தேவை, நிறுவனத்தினை பற்றிய தகவல்கள் போன்றவற்றை பெற்றுக் கொண்டார். அவர் பின்னர் அடுத்த வாரமே சென்னை வந்து விட்டார். எனது சகோதரை சந்தித்து குஜராத்தில் இருக்கும் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன்களை பற்றிய தகவல்களை விளக்கி அவருக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய தங்கள் அரசின் ஒப்புதலை தெரிவித்தார். மேலும் எனது சகோதரர் விருப்பப்பட்டால் குஜராத் அரசின் செலவிலேயே எனது சகோதரரை நேரில் அழைத்து சென்று நிலத்தை காமித்து அவரையே எந்த பகுதியில் நிலம் வேண்டும் என்று தேர்ந்தெடுக்கவும் அனுமதி அளித்தார்.

மேலே நான் கூறியது அரசியல் ஆதாயத்திற்காக கூறப் படும் புனைவு அல்ல. எனது சகோதரருக்கு நேரிடையாக கிடைத்த அனுபவம். தமிழக மற்றும் குஜராத் அரசுகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடு இதுதான். ஒரு மாநிலத்தில் இப்படி ஒரு ஆட்சி நடப்பதற்கு அம்மாநில முதலமைச்சருக்கு பெரும் பங்கு இருக்கிறது. அதனால் நிச்சயம் மோதி பாராட்டுக்குரியவர்.

அவரது ஆட்சியில் குஜராத் பெற்ற வளர்ச்சியை பாராட்டி டைம் பத்திரிக்கை அவரது புகைப்படத்தை தனது அட்டையில் வெளியிட்டுள்ளது. மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், லால் பஹதூர் ஷாஸ்த்ரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்கள் இதற்கு முன்பே டைம் பத்திரிக்கை அட்டையில் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் அனைவரும் தேசிய அளவில் அரசியலில் பங்கு பெற்றவர்கள். ஒரு இந்திய மாநில அரசியல்வாதி டைம் பத்திரிக்கையின் அட்டையில் வருவது இதுவே முதல் முறை. அவருக்கு எனது பாராட்டுக்கள்.

4 Comments:

Anonymous said...

Modi விளையாடு ...-:)

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரெவெரி.

மோதியின் மீது இருக்கும் விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு அவரது நிர்வாகத்திறனை மட்டும் பார்த்தோமானால் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரது நிர்வாகத்திற்கு குஜராத் மக்கள் மற்றும் மாநில அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஒரு முக்கிய காரணம்.

இந்தியா முழுதும் அம்மாதிரியான மக்கள் இல்லாததினால் அவர் இந்திய பிரதமர் ஆனால் இந்தியாவை வல்லரசாக்கி விடுவார் என்பதெல்லாம் சுத்த பேத்தல். யார் பிரதமர் ஆனாலும் இந்தியாவை ஒன்றும் புடுங்க முடியாது என்பதே எனது கருத்து.

தொடர்ந்து வாருங்கள்.

DHANS said...

can I use this post to send it to my friend?

this is not a speculated news but its a proven one, so if you permit I wish to send it to my friend who is in a impression whatever the good news comes in support of modi is wrong.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Dhans. தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். மின்னஞ்சலில் எனது பதிவின் சுட்டியையும் சேர்த்து அனுப்பினால் நன்றியுள்ளவனாவேன்.