Friday, July 28, 2006


பார்பன வந்தேறிகளும்; இஸ்லாமிய தீவிரவாதமும்விடாது கருப்பு அவர்களின் "இஸ்லாமும் தீவிரவாதமும்" என்ற பதிவிற்கு வந்த பாராட்டு பின்னூட்டங்களை பார்த்தே, இந்த பதிவை நான் எழுதுகிறேன். கருப்பு அவர்கள் நடு நிலையாளர் என்றும், துணிச்சல் மிக்கவர் என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர். பாராட்டியவர்களில் ஒரு சிலர் பிராமணர்கள். அதுதான் என்னை இது எழுத தூண்டியது. அதாவது இவர்களின் கூற்றுப்படி பிராமணனை பாப்பான் என்று சொல்பவர், இஸ்லாமியனை துலுக்கன் என்று சொன்னால் அவர் நடு நிலையாளர். என்னய்யா நியாயம் இது?

பிராமணர்களை பாப்பான் என்றும், வந்தேறிகள் என்றும் குறிப்பிட்டது அவர்களுக்கு எத்துனை வேதனை அளித்திருக்குமோ அதே போன்ற வேதனை தானே இதை படிக்கும் ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் ஏற்படும்?உலக மக்கள் தொகையில் இருபத்தி மூன்றரை சதவிகிதம்** இருக்கும் இஸ்லாமியர்களில் ஒரு சிலர் தீவிரவாதத்திற்கு துணை சென்றதால் அனைவரையும் தீவிரவாதி என்று பட்டம் கட்டுவது எந்த வகையில் நியாயம்?

பிராமணர்களை ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்கள் என்றும், தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும், தமிழை வெறுப்பவர்கள் என்றும் கருப்பு கூறுவதற்கு மாற்றாக பாரதி முதல் வாஞ்சிநாதன் வரை ("ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று கூறியவனை ஒரு பிராமணனாக அடையாளம் காட்ட எனக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆனாலும் வேறு வழி இல்லை ஆதலால் குறிப்பிடுகிறேன்!) எத்தனை பிராமணர்களை அடையாளம் காட்ட முடியுமோ, அதே போன்று இஸ்லாமியர்களை தீவிரவாதத்திற்கு துணை போகிறவர்கள் என்ற அவரது கருத்திற்கும் மாற்றாக காயிதே மில்லத் முதல் அப்துல் கலாம் வரை நம் நாட்டுக்காகவும் நம் நாட்டு மக்களுக்காகவும் பாடுபட்ட எத்தனையோ இஸ்லாமியர்களையும் அடையாளம் காட்ட முடியும்.


பிராமணர்களையாவது அவர் வந்தேறிகள் என்று தான் குறிப்பிட்டார். ஆனால் இஸ்லாமியர்களையோ, தீவிரவாதத்திற்கு துணை போகிறவர்கள் என்றார். அதுவும் எத்தகைய சூழ்நிலையில்? உலகமே தீவிரவாத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில். இது எத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டு! இவரைப் போன்றவர்களின் கருத்துக்களால், இன்று உலகமே இஸ்லாத்தை ஏதோ அறுவருக்கத்தக்க ஒரு சித்தாந்தமாக நோக்குகின்றது.

மேலும் கருப்பு அவர்கள் தொடர்வது என்னவென்றால், "இஸ்லாமின் மீதுள்ள தீவிரவாதம் என்ற சொல் அழிக்கப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் ஐந்துவேளைக் கடமையுடன் ஆறாவதாக தங்களையும், இஸ்லாமையும் அசிங்கப்படுத்தும் தீவிரவாதிகளை பிடித்துக் கொடுப்பதை ஆறாவது கடமையாக செய்யவேண்டும்." இது மிகவும் சரி. ஆனாலும் இந்த கடமை இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல, ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த கடமை உண்டு.

"இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்." என்று திரு.ப.ஜீவானந்தம் அவர்கள் குறிப்பிட்டதையே இப்பொழுது நானும் குறிப்பிடுகிறேன் [நன்றி : தங்களது ஒரு பழைய பதிவில் பின்னூட்டம் இட்ட ஒரு அனானி]. இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்கள் அல்ல என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒரு சமுதாயத்தையே குற்றம் சாட்டுவது பல ஆண்டுகளாகவே நடந்து வரும் ஒரு விஷயம் தான். அதற்கு சரித்திரத்தின் உதவி கொண்டு நாம் சிறிது பின்னோக்கி சென்றோமானால்,


1. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமது வாழ்க்கை முறையாக மனு தர்மத்தை ஏற்றுக்கொண்ட பிராமணர்கள் இன்றும் ஜாதி வெறியர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள்.


2. ஹிட்லர் என்ற ஒரு ஃபாஸிஸ வெறியன் அரை நூற்றாண்டுக்கு முன்னர் செய்த செயலுக்காக இன்றும் ஜெர்மானியர் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.


3. ஜீவகாருண்யத்தை தங்களது வாழ்வியல் முறையாக கொண்ட புத்த பிக்குகள் கால் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் செய்த தவறுகளால் இன்றும் தவறாக பார்க்கப் படுகிறார்கள்.


இத்தகைய நிலை இஸ்லாமியர்களுக்கு அதி விரைவில் வரக்கூடும். நமக்கு பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் வரும் தலைமுறைகள் அவர்களை ஒரு கொடுங்கோளர்களாக பார்க்கக் கூடும். நாம் தூவிய இந்த விதை வளர்ந்து ஒரு விழ விருட்சமாக மாறப்போவதை அறியாமல் நாம் தொடர்ந்து விதைகளை தூவிக் கொண்டே இருக்கிறோம்.

** 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 6313.78 மில்லியன். அதில் இஸ்லாமியர்கள் 1565.28 மில்லியன்.

8 Comments:

குமரன் (Kumaran) said...

மிக நல்ல பதிவு சத்யப்ரியன். பெயருக்கேற்ற மாதிரி பதிவு இடுகிறீர்கள்.

அப்பாவித்தமிழன் said...

போச்சு! உங்களுக்கு பின் நவீனத்துவமும் எழுதத்தெரியல, அ.ஜீ.பி சங்கத்துல இடம் கிடைக்கவும் இனிமே வாய்ப்பில்லை. ஜாதி சண்டைகளில் பங்கெடுக்கறதும் கஷ்டந்தான். இனிமே நீங்க ஏதோ கதை, கட்டுரை இல்லை கவிதைன்னு எழுதி பொழச்சுக்க வேண்டியதுதான்.

சிறில் அலெக்ஸ் said...

என்னத்த சொல்லி என்னத்த செய்ய...
கன்னைய்யாதான் நியாபகத்துக்கு வருகிறார்.

நல்ல பதிவு.

venkat said...

Sathya priyan,
I agree with you.Majority of muslims are moderate and peace loving. But this is nothing to do with Islam rather due to love & tolerance which are the foundations our Indian civilization(Indian Psych).However if you read medieval history(with serious effort),you will be terrorised to know the brutal inhuman killings & vandalism of muslim invaders and their concept of jehad.(please don't read the books by letist historians such as Romalia Thapar- these people are now called negationists-deniers of holocoust)These were recorded (proudly!!!)by the same muslim invaders.
Twisting history & truth will not be good for future.Mistakes of history will not repeat only when our future generations know what those were in the first place.
The pseudo secularist would however not reopen those topics for vote bank politics. Sections of the so-called academia,the elite & educated today display a singular lack of national consciousness.Truth will not always be sweet in taste.Todays happenings are not new, they are repetition of medieval islamic idelogies by people like Bin-laden, our contemporary Gajini-Momd. We must all wake-up together and try to give true secular education all muslim children(before they get indoctrinated by terrorists and thier evil ideology) lest peace in future will be distant deram.

I don't know how to make comments in tamil.Pls fogive me.
Venkatesh
Singapore

SathyaPriyan said...

வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

raj said...

///உலக மக்கள் தொகையில் இருபத்தி மூன்றரை சதவிகிதம்** இருக்கும் இஸ்லாமியர்களில் ஒரு சிலர் தீவிரவாதத்திற்கு துணை சென்றதால் அனைவரையும் தீவிரவாதி என்று பட்டம் கட்டுவது எந்த வகையில் நியாயம்.// 100% எதார்த்தமான உண்மை.

இதைத்தான் நானும் விடாது கருப்புவிடம் கேட்டேன். நேரிடையாக பதிலளிக்க அவருக்கு திரானியில்லை. புரிந்துணர்வுடன் நடுனிலைமையில் சிந்தித்து அதை பதிவாக இட்டமைக்கு நன்றிகள் பல. மனிதம் செத்துவிடவில்லை,நம்பிக்கை அளிக்கிறது உங்கள் பதிவு.
சிங்கை இஸ்மாயில்

SathyaPriyan said...

கருத்திற்கு நன்றி திரு.சிங்கை இஸ்மாயில் அவர்களே. நான் நினைப்பது என்னவென்றால், அவரவர் தங்களது கருத்துக்களை பதியவே வளைப்பூ உள்ளது. ஆனாலும் சில நேரங்களில் அடுத்தவர் மனது புண்படும் விதம் நமது கருத்துக்கள் அமைந்தால் அதை வெளிப்படுத்துவதில் ஒரு நாசூக்கு வேண்டும். அடுத்தவரை புண்படுத்தும் உரிமையை நமக்கு தந்தவர் யார்?

கருப்பு அவர்கள் இச்சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளுக்கெல்லாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகம் மீது குற்றச்சாட்டை வீசுகிறார். இவ்வுலகில் எந்த சமூகத்தில்/நாட்டில்/சித்தாந்தத்தில் சீர்கேடுகள் இல்லை. ஒரு நாளில் 'இரவு' மற்றும் 'பகல்' கலந்து இருப்பதை போன்று, அனைத்திலுமே நல்லவை மற்றும் தீயவை கலந்தே இருக்கிறது. நம் மனித மனங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன். நானோ, நீங்களோ இல்லை கருப்பு அவர்களோ நல்லதை மட்டுமே நினைக்கிறேன் என்று கூற முடியுமா? அதே போன்றுதான் இவ்வுலகும். நம்மால் நம் மனதையே நல்வழியில் செலுத்த முடியாத போது நம்மை சுற்றி இருப்பவை எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது யதார்த்த வாழ்வில் நடக்க முடியாத ஒன்று.

இதற்காக நான் சமுதாய சீர்கேடுகளுக்கு துணைபோகிறேன் என்று பொருள் இல்லை. சீர்கேடுகளை அகற்ற, அதற்கு ஒரு சமூகத்தின் மீது குற்றம் சாட்டுவதை தான் எதிர்கிறேன்.

அது அவரது உரிமை என்றாலும் அதை பாராட்டுபவர்களின் கருத்திற்கு தான் நான் எனது பதிவில் ஆட்சேபனை தெரிவித்தேன். அடுத்தவரை புண்படுத்தும் செயல்களுக்கு பாராட்டு தெரிவிப்பதும் தவறே அல்லவா?

Iniyavan Haji Mohamed said...

நண்பரே! தங்களின் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

நேசத்துடன்,
இனியவன் ஹாஜி முஹம்மது