Tuesday, August 07, 2012


செருப்பால் அடிக்கப்பட்ட தருணங்கள்

வாழ்க்கையில் சில நேரங்களில் சில விஷயங்களை ஏன் செய்தோம்?, எதற்காக செய்தோம்? என்று பின்னர் யோசிப்போம் இல்லையா? அப்படி ஒரு செயலை தான் நேற்று நான் செய்தேன்.

நேற்று எனது மகனை கடுமையாக திட்டி விட்டேன். பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை. அவன் சரியாக சாப்பிடவில்லை. இந்த "சரியாக சாப்பிடவில்லை" என்பதே ஒரு ரிலேடிவ் டெர்ம் தான். அவன் சிறு வயதில் இருந்தே சாப்பாட்டு விஷயத்தில் சிறிது மந்தம் தான். அன்டர் வெயிட் குழந்தை.

இரண்டு வயதாகியும், ஆறு மாத உடைகள் இன்னும் பத்துகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாடும் சாப்பிடுவதில்லை, பாலும் குடிப்பதில்லை, இப்படி இருந்தால் ஒரு தகப்பனின் மன நிலை எப்படி இருக்கும். எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாத மாதிரியான நிலை.

இந்நிலையில் நேற்று அவன் சாப்பிடும் துளி சப்பாட்டை கூட சாப்பிடாமல் ஒரே அடம். ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி கோபத்தின் உச்சியில் அவனை கடுமையாக திட்டி விட்டேன். அலுவல் டென்ஷனும் உடன் சேர்ந்து கொண்டது. கோபத்தில் திட்டுகிறேன் என்பது அவனுக்கு தெரிகிறது. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. அவனது அழுகை அதிகமானது.

சாப்பாடு கொடுப்பதை நிறுத்திய உடன் அழுகை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. சிரித்துக் கொண்டே என் அருகில் வந்து என்னை கட்டிப் பிடித்துக் கொள்கிறான். எவ்வளவு திட்டினாலும் உடனே அதை மறந்து அருகில் வந்து என்னை கொஞ்சுவது மாண்டியும் இவனும் தான். அந்த வரையில் நான் அதிர்ஷ்டசாலியே. இந்த உறவுகள் கூட இல்லாமல் எவ்வளவோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் பல நேரங்களில் இம்மாதிரியான மன நிலை பெரியவர்களுக்கு இருந்தால் வாழ்க்கை எவ்வளவு இன்பமயமாக இருக்கும் என்று நினைத்து பார்ப்பதுண்டு.

அடுத்த மாதத்தில் இருந்து இங்கே இருக்கும் ஒரு டே கேருக்கு போகப் போகிறான். இங்கே குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி எல்லாம் விட மாட்டார்கள். குழந்தைகளே எடுத்து சாப்பிட்டால் தான் உண்டு. இனி இவனது நிலை கொலை பட்டினி தான். ஆனால் டே கேரில் உள்ளவர்களோ மற்ற குழந்தைகளை பார்த்து எளிதாக தானே சாப்பிட கற்றுக் கொண்டு விடுவான் கவலை இல்லை என்கிறார்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதுவரை வாழ்க்கையை பற்றிய பயம் எனக்கு இருந்ததே இல்லை. திருமணத்தை கூட எந்த வித நெர்வெஸ்னஸும் இல்லாமல் எடுத்துக் கொண்டேன். முதல் நாள் பள்ளி, முதல் நாள் கல்லூரி, முதல் நாள் வேலை என்று எதுவும் எனக்கு பெரிதாக நினைவில்லை. ஆனால் எனது மகனின் முதல் நாள் டே கேர் எனக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. மனதிற்குள் சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகம்.

இப்பொழுது வாழ்க்கையை பற்றி முதல் முறையாக பயப்படுகிறேன். ஒரு தகப்பனாக நான் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, என் தந்தையிடம் நான் மிகவும் நேசித்தது, அவரிடம் எனக்கு பிடிக்காதது என்று மனது பெரிய பட்டியலே போடுகிறது. நட்பு வட்டத்தில் தந்தையிடம் மிகவும் பாசத்துடன் இருக்கும் குழந்தைகளை பார்க்கும் பொழுது அவர்களது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கிறேன். அவர்களை போலவே நடந்து கொள்ள முயல்கிறேன். தம்மையும் தண்ணியையும் விட்டு விடலாம் என்று யோசிக்கிறேன்.

"Let's cross the bridge when we get there" என்ற மன நிலையிலேயே இவ்வளவு நாட்கள் இருந்து விட்ட பிறகு அதிலிருந்து சட்டென்று விலகுவது சிறிது கஷ்டமாக இருக்கிறது. எனக்குள் நானே அல்லாமல் ஒரு புதிய நான் வந்து விட்டதை போல உணர்கிறேன்.

எதையோ எழுத நினைத்து எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் ஒரு சம்பந்தம் கூட இல்லாமல் பதிவு பெரிதாகிக் கொண்டே வருகிறது. வேறு ஒன்றும் எழுதுவதற்கு இல்லை என்பதால் என்னை போன்றே இரண்டுங்கெட்டான் மன நிலையில் இருந்த, இருந்து கொண்டிருக்கும் தகப்பன்களுக்கு இந்த பதிவினை சமர்பித்து இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன். நன்றி.

8 Comments:

ilavaenil said...

நண்பரே,

குழந்தையை கடுமையாக திட்டியதற்கே நீங்கள் "செருப்பால் அடித்த தருணங்கள்"
என்று சொல்லிவிட்ட பிறகு, எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை !!

இன்று என் பெண் குழந்தையை , பள்ளிக்கு கிளம்ப மிகவும் தொந்தரவு செய்கிறாள் என்று ,
அடித்து விட்டு அலுவலகம் வந்து விட்டேன் . மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

ஒரு குழந்தையால் தன்னை திட்டுபவரையோ , அடிப்பவரையோ திருப்பி எதுவும் செய்ய முடியாது ,
என்ற ஒரு காரணத்துக்காகவே , அந்த செயலை செய்ய கூடாது என படித்த மூளை சொன்னாலும் , அந்த
கணநேர கோபம் கண்ணை மறைத்து விடுகிறது.
இத்தனைக்கும் என் குழந்தை அழுதுகொண்டே என்னை அவளிடம் sorry கேட்க சொன்னாள்.

இன்னும் நிறைய நிறைய பொறுமை பழக வேண்டும் !!!

கோவி.கண்ணன் said...

//இந்நிலையில் நேற்று அவன் சாப்பிடும் துளி சப்பாட்டை கூட சாப்பிடாமல் ஒரே அடம். ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி கோபத்தின் உச்சியில் அவனை கடுமையாக திட்டி விட்டேன். அலுவல் டென்ஷனும் உடன் சேர்ந்து கொண்டது. கோபத்தில் திட்டுகிறேன் என்பது அவனுக்கு தெரிகிறது. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. அவனது அழுகை அதிகமானது//

இரண்டு வயது குழந்தைக்கு என்ன தெரியும் ? செய்வது சரியா தப்பா என்றே தெரியாது. குழந்தைகள் அடம் பிடிப்பது அவர்கள் அறிவு நிலையில் வளர்ந்திருக்கிறார்கள், அடம்பிடித்தால் கிடைக்கும் என்பதே அவர்கள் அப்போது கற்றுக் கொண்டவை. அடம்பிடிப்பதை மாற்ற உடனடியாக சூழலை மாற்ற வேண்டும், வெளியே எங்காவது தூக்கிச் செல்ல வேண்டும், அல்லது தொலைகாட்சியில் குழந்தைக்கு பிடிதததை போட்டுக் காட்ட வேண்டும், இல்லை என்றால் அதற்கு விருப்பாமன மற்றொரு பொருளைக் கொடுத்து மனதை மாற்ற முயற்சிக்கலாம், மாறாக திட்டினாலோ, அடித்தாலோ நம்ம மனதும் சேர்த்தே வலிக்கும், தவிர்க்கலாம். நானும் ஒரு இரண்டு வயது குழந்தைக்கு அப்பன் என்பதால் உங்கள் உணர்வுகள் புரிகிறது

krish said...

இயல்பான உணர்வுகள்.

SathyaPriyan said...

//
ilavaenil said...
இன்று என் பெண் குழந்தையை , பள்ளிக்கு கிளம்ப மிகவும் தொந்தரவு செய்கிறாள் என்று ,
அடித்து விட்டு அலுவலகம் வந்து விட்டேன் . மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
//
அடியா... இங்கு குழந்தை மேல் கை வைத்தால் களி தான் :-)

//
ஒரு குழந்தையால் தன்னை திட்டுபவரையோ , அடிப்பவரையோ திருப்பி எதுவும் செய்ய முடியாது ,
என்ற ஒரு காரணத்துக்காகவே , அந்த செயலை செய்ய கூடாது என படித்த மூளை சொன்னாலும் , அந்த கணநேர கோபம் கண்ணை மறைத்து விடுகிறது.
//
மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். வருகைக்கு நன்றி.

//
கோவி.கண்ணன் said...
அடம்பிடிப்பதை மாற்ற உடனடியாக சூழலை மாற்ற வேண்டும், வெளியே எங்காவது தூக்கிச் செல்ல வேண்டும், அல்லது தொலைகாட்சியில் குழந்தைக்கு பிடிதததை போட்டுக் காட்ட வேண்டும், இல்லை என்றால் அதற்கு விருப்பாமன மற்றொரு பொருளைக் கொடுத்து மனதை மாற்ற முயற்சிக்கலாம், மாறாக திட்டினாலோ, அடித்தாலோ நம்ம மனதும் சேர்த்தே வலிக்கும், தவிர்க்கலாம். நானும் ஒரு இரண்டு வயது குழந்தைக்கு அப்பன் என்பதால் உங்கள் உணர்வுகள் புரிகிறது.
//
இதையெல்லாம் நாங்கள் முயற்சிக்க வில்லை என்று நினைக்கிறீர்களா கோவி. சாப்பாட்டு விஷயத்தில் தான் அவனுக்கு பிடிவாதமே.

இங்கு மருத்துவர்களிடம் கேட்டால் அவர்கள் "ஃபோர்ஸ் செய்து சாப்பாடு கொடுத்தால் அவர்களுக்கு சாப்பாடு பிடிக்காமலே போய் விடும், அதனால் விட்டு விடுங்கள்" என்று சொல்கிறார்கள்.

ஒரு வேளை இரண்டு வேளை என்றால் விட்டு விடலாம். வருடம் முழுவதும் சாப்பிடாமலே இருந்தால் எப்படி.

இருந்தாலும் நீங்கள் சொல்வது புரிகிறது. வருகைக்கு நன்றி.

//krish said...
இயல்பான உணர்வுகள்.
//
வருகைக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

"Let's cross the bridge when we get there" என்ற மன நிலையிலேயே இவ்வளவு நாட்கள் இருந்து விட்ட பிறகு அதிலிருந்து சட்டென்று விலகுவது சிறிது கஷ்டமாக இருக்கிறது.

மாற்றமுடியாத த்ருணங்கள் !

ஆதி மனிதன் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன். இருந்தும் நீங்கள் நிச்சயம் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு. நம்பிக்கைதானே வாழ்க்கை.

நீங்கள் தங்கள் மகனை பற்றி கூறியிருந்தவற்றில் பல என் (சின்ன) மகளுக்கு பொருந்தும். அதனால் என் அனுபவம் தங்களுக்கு ஒரு நம்பிக்கையை தரும் என் நினைக்கிறேன்.

முதலில் உங்கள் மகன் under weight என்ற என்னத்தை அறவே மனதில் இருந்து அகற்றி விடுங்கள். என் இரண்டு மகள்களும் பிறந்த பொது 'under weight' தான். எடையை சொன்னால் இன்னும் ஆச்சர்யப் படுவீர்கள். வேண்டாமே.

இப்போது என் இரண்டு மகள்களையும் யாரும் பார்த்தால் அவர்கள் எடை குறைவாக பிறந்தவர்கள் என யாருமே கூற மாட்டார்கள். அவர்கள் பிறந்த போது பல நாட்கள் இதற்காக நான் வருந்தி அழுதிருக்கிறேன். அதே போல் தான் சாப்பாடு பிரச்னையும். ஒரு அரை டம்ளர் பால் குடிக்க நான் படாத பாடு படுவேன். அதை பற்றியும் கவலை படாதீர்கள். அவனுக்கு எது பிடிக்கிறது (அது மிகவும் கெடுதல் இல்லையென்றால்) அதையே கொடுங்கள். அவ்வப்போது சிறிது சிறிதாக ஏதாவது சாப்பிடக் கொடுங்கள். அதில் கால்வாசி சாப்பிட்டால் போதும். அந்த வயதில் அவனுக்கு ஒன்றும் பெரிதாக எனர்ஜி தேவையில்லை. நீங்கள் வலுக்கட்டாயமாக கொடுப்பதால் அவன் உடம்பில் ஓட்ட கூட ஒட்டாது. இது சிறந்த மருத்துவர்கள் கூறும் அறிவுரையும் கூட. நன்றாக ஓடி ஆடி விளையாடுவது மூலம் அவனுக்கு நல்ல பசி வர வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் பசித்தால் கூட சாப்பிட வேண்டும் என குழந்தைகளுக்கு தெரியாது.

டே கேர் செல்வது அவனுக்கு நிச்சயம் பெரிய மாற்றத்தை கொடுக்கும். ஆதலால் சந்தோசப் படுங்கள். மற்ற குழந்தைகளை பார்த்து இவனும் அவனாக சாப்பிட ஆரம்பித்து விடுவான். நம் இந்தியர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று சிறி வயது முதலே குழந்தைகளை மடியில் தூக்கிவைத்துக் கொண்டு ஊட்டி விடுவதுதான். எனக்கென்னமோ இதில் மேலை நாட்டவர்கள் பாணியே சரி என்று படுகிறது.

வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அதுதானே (குறிப்பாக இந்தியர்களின்) வாழ்க்கை. இரண்டு மூன்று வயது வரை என் சின்ன மகள் என் பக்கத்தில் கூட வரமாட்டாள். இப்போது எப்போதும் அப்பா, அப்பா என புலம்பி தள்ளுகிறாள். நாங்கள் இரு மாதங்களுக்கு முன் இந்தியா திரும்பி விட்டோம். என்னிடம் அவள், அப்பா நாம் மீண்டும் அமெரிக்கா போவோம். அம்மாவும் அக்காவும் வரவில்லைஎன்றால் அவர்கள் இங்கேயே இருக்கட்டும். நாம் மட்டும் போவோம் என்கிறாள். இது மிக பெரிய maatram thaaney.

அதே போல் பல வருடங்கள் அதிகம் சாபிடாமல் இருந்த என் சின்ன மகள் தற்போது அதிகம் சாப்பிட அவளே கூறும் காரணம். எனக்கு டைபாய்டு வந்துச்சுல்ல அதிலேர்ந்து தான் நான் அதிகம் சாப்பிட ஆரம்பித்து விட்டேன் என்று. கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் இந்த மழலை பேச்சுக்கு ஈடாகுமா?

பையனிடம் இனி கோவம் காட்டாதீர்கள். அவன் பேசி ஓடி ஆடி விளையாடுவதை பார்த்து மகிழுங்கள்.

இதையெல்லாம் சொல்வதால் நான் கிழடு என நினைத்து விடாதீர்கள். எல்லாம் அனுபவம் தான்.

SathyaPriyan said...

உங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல ஆதி மனிதன்.

Dubukku said...

ஆதிமனிதனின் பதில் அருமை.

Take it easy !!