Friday, June 30, 2006


85 என்ற தேன் கூடு

மிக்க மன பாரத்துடனேதான் இந்த பதிவை எழுதுகிறேன். சற்றே நீளமான பதிவு என்ற போதும், எழுதிய உடன் பாரம் குறைந்தது போன்ற ஒரு உணர்வு.


September 23, 2002 என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். சண்முகா பொறியியல் கல்லூரியில் B.E. (EEE) படித்து முடித்து விட்டு, Siemens நிறுவனத்தில் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த நான் Infosys நிறுவனத்தில் சேர்ந்த நாள். என்னை போன்ற மாப்பிள்ளை bench காரர்களுக்கு இது மிகை என்பதால், பெருமையும் , சந்தோஷமும் பீறிட்டுக்கொண்டு வந்தது. Infosys நிறுவனத்தில் Freshers என்று அழைக்கப்படும் புதிய கல்லூரி மாணவர்களையும், கணிணித்துறைக்கு புதியவர்களையும் சேர்த்துக்கொள்ளும் பொழுது, அவர்களுக்கு 4 மாதங்கள் பயிற்சி தருவார்கள். அத்தகைய பயிற்சி எனக்கு புவனேஷ்வரில் நடந்தது. பிறந்து 22 ஆண்டுகள் திருச்சியையும், சென்னையையும் தாண்டி அறியாதவனாகிய நான், முதல் முறையாக புவனேஷ்வருக்கு புறப்பட்டேன். ஆனால் எனக்கு அதை பற்றிய பயமோ கவலையோ ஒன்றும் இல்லை. போய் சேர்ந்த உடன் தான், "நான் வந்திருப்பது தென் இந்தியாவிற்கா?", என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால், அங்கு இருந்த 72 பேரில், 25 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், 20 பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள், 5 பேர் கேரளத்தை சேர்ந்தவர்கள்.

புவனேஷ்வருக்கு நான் செல்வதற்கு முன்னரே எனக்கு அறிமுகமானவன் ஜெய் என்றழைக்கப்படும் ஜெயராம் மோகன்ராம். இவன் எனது கல்லூரித்தோழன். ஒரே கல்லூரி என்றாலும் இவனது பெயர் மற்றும் department தவிர எனக்கு இவனை பற்றி எதுவும் தெரியாது. ஜெய்யைப்பற்றி கூற வேண்டும் என்றால், 'The most mis-understood' என்று கூறலாம். எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைப்பவன். அதனாலேயே தவறாக புரிந்து கொள்ளப்பட்டவன். மிகவும் நல்லவன்.

புவனேஷ்வரில் இறங்கிய உடன் எனக்கு அறிமுகமானவன் ஜினி என்ற ஜினேஷ் ஆப்ரகாம் குரியன். இவன் தான் நாங்கள் தங்கி இருந்த 'The Garden Inn' என்ற hotel அறையில் எனது room mate. கேரளாவை சேர்ந்த இவன் பேசும் மழலை தமிழுக்காகவே இவனை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். முகத்தை மிகவும் serious ஆக வைத்துக்கொண்டு நக்கல் அடிப்பதில் இவன் கில்லாடி. இவனது நக்கல்களை ஒரு தொகுப்பாக தனி வலைப்பூவே போடலாம்.

அடுத்து ஜெய் மூலமாக அறிமுகமானவன் TANK என்ற திருமலை ஈச்சம்பாடி அனந்த கிருஷ்னன். இவனுக்கும் எனக்கும் ஆழ்ந்த நட்பு ஏற்பட காரணம் என்ன என்பது எங்களுக்கும் எங்கள் நட்பு வட்டாரத்திற்குமே தெரிந்த ஒரு ரகசியம். அது ரகசியமாகவே இருந்து விட்டு போகட்டுமே. இவனை பற்றி T.R. பானியில் கூறுவதானால் "டேய்! பார்த்தா இவன் ஒரு சொம்பு; ஆனா உண்மையிலே இவன் ஒரு பிம்பு (Pimp)". என்ன மோசமாக அறிமுகப்படுத்தி விட்டேனா? ஆனால் உண்மையைத்தானே கூற முடியும். BITS, Pilani யில் படிப்பை முடித்த இவன் மூலமாக நான் அறிந்து கொண்ட BITSian களை பட்டியலிட்டால் ஒரு வலைப்பூ பத்தாது. இவனிடம் எனக்கு பிடித்ததே இவன் அடுத்தவர்களிடம் எடுத்துக்கொள்ளாத அதிகபட்ச உரிமை. எவ்வளவு எடுத்துக்கொள்ளலாமோ அவ்வளவு தான் எடுத்துக்கொள்வான். உதாரணத்திற்கு ஒரு சம்பவம். இது அவனுக்கே நினைவில் இருக்குமோ தெரியாது. ஒருமுறை நான், TANK மற்றும் பின்னால் நான் அறிமுகப்படுத்தப்போகும் TRIPLE என்ற சேரன்மாதேவி சங்கரன் சுந்தர் (ஆங்கிலத்தில் மூன்று 'S' இவனது பெயர் சுருக்கம் என்பதால் இவனுக்கு 'TRIPLE S' என்று பெயர்) மூவரும் 7 டிக்ரீ குளிரில் (அது 7 டிக்ரீ என்பது அடுத்த நாள் தான் தெரியும். பிறந்தது முதல் 30 - 40 டிக்ரீ வெய்யிலில் திருச்சியிலும், சென்னையிலும் இருந்த எனக்கு அது ஒரு உறைநிலை வெட்பமாக இருந்தது) நடந்து வந்து கொண்டிருந்தோம். TRIPLE வழக்கம் போல் யாருடனோ (யாருடன் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்) தொலைப்பேசியில் பேச சென்று விட்டான். கைத்தொலைப்பேசி வேகமாக பரவாத காலம் அது. ஆகையால் அவன் STD பூத்திற்கே சென்று பேச வேண்டிய கட்டாயம். அவ்வாறு அவன் போய் பேசத்தொடங்கிய உடன் தான் நினைவிற்கு வந்தது அவன் வீட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு போய் விட்டான் என்று. உடனே நான் TANKஇடம் 'டேய்! அவன்ட சாவி இருக்குடா.' என்று கூறி பூத்தை நோக்கி செல்ல தயாரானேன். அப்பொழுது TANK, 'பரவா இல்லடா wait பன்னலாம்.' என்று கூறி என்னை தடுத்து விட்டான். நானும் போக வில்லை. அவன் பேசி முடித்து விட்டு வருவதற்கு சுமார் 40 நிமிடங்கள் ஆனது. அவ்வளவு நேரம் அந்த உறைநிலை வெட்பத்தில் இருந்தோம். அதுதான் TANK. Decency என்றால் என்ன என்று அவனிடம் தான் நான் கற்றுக்கொண்டேன்.


அடுத்ததாக TRIPLE. இவன் TANK இன் கல்லூரித்தோழன். இவன் தன்னை பற்றியும், தன் தேவைகளை பற்றியும், அத்தேவைகளை பூர்த்தி செய்யும் வழி முறைகளையும் நன்கு அறிந்த சிலர்களுள் ஒருவன். இவன் செய்யும் ஒவ்வொறு செயலும் முழுமையாக இருக்கும். பாதி கிணறு தாண்டும் பழக்கம் துளியும் இல்லாதவன். இவனது பேசும் திறன், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றிர்காகவே பெண்களிடம் பிரபலமானவன். இவன் ஒரு 'Perfect Son' என்று கூறலாம். 24 வயதில் இவன் வாங்கிய ஒரு இரு சக்கர வாகனத்திற்கு, இந்த நிறம் தான் இருக்க வேண்டும், இந்த எண் தான் இருக்க வேண்டும், இந்த நாளில் தான் வாங்க வேண்டும் என்று அவன் பெற்றோர் கூற இவனும் அவ்வாறே வாங்கினான். ஜாதகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். தனது வாழ்க்கை வெற்றிகளுக்கெல்லாம் தனது ஜாதகப்பலன்களே காரணம் என்று நினைப்பவன். இது குறித்து எங்களுக்குள் பல சமயம் விவாதங்கள் எழுந்துள்ளன.

அடுத்து, மலை என்ற விமல் கிருஷ்ணமூர்த்தி. இவனை என்னால் வேறொரு மனிதனாக பார்க்கவே முடிய வில்லை. கண்ணாடியில் தெரியும் எனது பிம்பமாகவே இவன் எனக்கு தெரிவான். இவனுக்கும் எனக்கும் ஒற்றுமைகள் பல. இவன் திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் திருச்சியில் பிறந்து வளர்ந்தவன். இவன் படித்தது திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. நான் படித்தது திருச்சி இ. ரே. மேல்நிலைப்பள்ளி. இவன் மண்டல பொறியியல் கல்லூரியில் படித்தான், நான் சண்முகா பொறியியல் கல்லூரியில் படித்தேன். 'இதில் என்ன ஒற்றுமை?', என்கிறீர்களா. நாங்கள் இருவருமே வாழ்வின் பெரும் பகுதியை திருச்சியில் கழித்தவர்கள். நாங்கள் இருவருமே தமிழ் சினிமா வெறியர்கள். வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் பார்த்து விடுவோம். அதே போல் இருவருக்குமே 'Patriotic Sense' என்பது அதிகம். இந்தியா மீதான பற்றுதலை நான் கூறவில்லை. பிறந்து வளர்ந்த ஊர், படித்த பள்ளி, படித்த கல்லூரி, வேலை பார்க்கும் அலுவலகம் போன்ற எதையும் நாங்கள் இருவருமே விட்டுக்கொடுக்க மாட்டோம். இவனிடம் பல சமயம் நான் கேட்பதுண்டு, 'மலை! life லெ எதையாவது நீ பரபரப்பா செஞ்சு இருக்கியாடா?' என்று. ஏனென்றால், அவன் அப்படி ஒரு slow coach. எல்லாவற்றையும் நிதானமாகத்தான் செய்வான். 9 மணி வண்டிக்கு 8:30க்கு வீட்டிலிருந்து கிளம்புவான். வீட்டிற்கும் ரயில் நிலையத்திற்கும் உள்ள தொலைவு 12 Km. இவனது இந்த போக்கால் நாங்கள் வண்டியை miss செய்த சம்பவங்களும் நடந்தேறி உள்ளன.

கடைசியாக கபூர். இவன் பெயரை வைத்து வட இந்தியாவை சேர்ந்தவன் என்று கருதாதீர்கள். கன்னியாகுமரியை சேர்ந்தவன். பார்ப்பதற்கு தாவூத் இப்ராஹிம் போல் இருந்தாலும், உண்மையில் ஒரு வெகுளி. இவன் ஒரு complete box. நமது எந்த பிரச்சனைகளையும் இவனிடம் கொண்டு போகலாம். ஒரு அனுபவசாலி நமது இடத்திலிருந்து பார்த்து அந்த பிரச்சனைகளை ஆராய்ந்து பார்ப்பதை போன்று ஆராய்வான். உறுதியாக ஒரு நல்ல தீர்வை தருவான். மேலும் ஏன் அந்த தீர்வு என்றும் உங்களுக்கு விளக்கம் கொடுப்பான். இவனை முழுவதுமாக நம்பலாம். இவனிடம் உள்ள ஒரே தீய வழக்கம், அடுத்தவர்கள் பர்ஸை காலி ஆக்குவது. அதாவது இவனுடன் வெளியே சென்றீர்களென்றால், உங்களுக்கு சம்பந்தமே இல்லாத பொருளை மிகவும் அதிக விலை கொடுத்து வாங்க செய்து விடுவான். நான் அவ்வாறு முதலில் வாங்கியது 2500 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜாக்கெட். இரண்டாவது முறை வாங்கியது 5000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கைத்தொலைப்பேசி. அடுத்த முறை நான் விழிப்புடன் இருந்து கொண்டு விட்டேன். இவனுடன் வெளியே செல்லும் பொழுது பர்ஸை மறந்து(?) வீட்டிலேயே வைத்து விடுவேன். மற்றவர்கள் என் மூலம் பாடம் கற்றார்கள்.

இவ்வாறாக, நான், ஜினி, TANK, TRIPLE, மலை, கபூர் அறுவறும் ஒரு வீட்டில் தங்கினோம். தமிழ்நாடு மற்றும் கேரளத்தை சேர்ந்த 15 ஆண்களில், மற்ற 9 பேர் வேறு ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். ஜெய்யும் அதில் அடக்கம்.

'Training period is the honey moon period in Infosys' என்று பலர் என்னிடம் கூறினார்கள். அதிலும் கல்லூரியிலிருந்து பிரிந்து மீண்டும் அந்த வாழ்கைக்காக ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு, அது ஒரு வரமாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால், கல்லூரியை விடவும் நன்றாகவே இருந்தது. காரணம் அது ஒரு paid vacation அல்லவா? Training உம் கொடுத்து சம்பளமும் கொடுக்கிறார்களே. நாங்கள் அங்கே அடித்த கூத்து பல. கொல்கட்டா சென்றது, பூரி மற்றும் கொனார்க் சென்றது, சுந்தர்பன்ஸ் சென்றது என்று பட்டியலிடலாம். ஆனால் நான் கூறவந்தது அது அல்ல ஆகையால் அதை பின்னர் பார்ப்போம்.

ஒரு வழியாக training முடித்த எங்களுக்கு, posting வந்தது. நாங்கள் அறுவரில், ஜினி, கபூர் நீங்களாக மற்ற அனைவரும் பெங்களூருக்கே post ஆகி இருந்தோம். அவர்கள் இருவரும் சென்னைக்கு post ஆகி இருந்தனர். மற்றொரு வீட்டில் இருந்த அந்த 9 பேரில் ஜெய் உட்பட நால்வருக்கு பெங்களூர் மற்ற அனைவருக்கும் சென்னை என்று posting வந்தது. அந்த நால்வரில் குறிப்பிடத்தக்கவன் நெமி என்ற நெமிப்பிரபு நபிராஜ். அனைத்து நட்பு வட்டத்திலும் உள்ள ஒரு இளிச்சவாயனை போல் எங்களது வட்டத்தில் நெமி. எவ்வளவு நக்கல் அடித்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பான். கொஞ்சம் கூட கோபப்பட மாட்டான். "எப்படி ஒருவனால் இவ்வளவு sportive ஆக இருக்க முடிகிறது? இவன் உண்மையாகவே இளிச்சவாயனா?", என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. பெங்களூர் posting வாங்கிய நாங்கள் அனைவரும் ஒரு சுபயோக சுபதினத்தில் பெங்களூர் வந்து சேர்ந்தோம்.

பெங்களூர் வந்த உடன், நெமியின் அண்ணன் திருமணம் நடந்தது. அதற்கு பிறகு அவன் தன் அண்ணன் மற்றும் அண்ணியுடன் தங்கி இருந்தான். நான், மலை, ஜெய், TRIPLE, TANK ஐவரும் ஒரு வீட்டில் தங்கி இருந்தோம். அந்த வீட்டு எண் தான் 85. 85 என்பது எங்களுக்கு வெறும் முகவரியாக மட்டும் இல்லாமல் ஒரு அடையாளமாகவே ஆகி விட்டது. நெமி தங்கி இருந்த வீட்டிற்கும் எங்களது 85 வீட்டிற்கும் இரண்டு தெரு தான் தொலைவு. அதனால் அவனும் தனியாக இருப்பதாக எங்களுக்கு தோன்றவே இல்லை. ஏனென்றால் அடிக்கடி அவனது அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் சென்னைக்கு சென்று விட (பாவம்!, புதுசா கல்யாணம் ஆன அவங்க வீட்டுலே போய் இவன் தங்கி இம்சை பண்ணினா), இவன் தனியாக இருக்கும் நேரங்களில் 85 யில் தான் இருப்பான்.

இப்படியாக நான், TANK, TRIPLE, ஜெய், மலை ஐவரும் பெங்களூரில் 85 வீட்டில் தங்கியிருந்த போது, ஆறாவதாக வந்து சேர்ந்து கொண்டவன் சிக்கு என்ற ராம கிருஷ்ணன். இவன் TANK கின் கல்லூரித்தோழன். இவன் எங்களுடனேயே Infosys நிறுவனத்தில் சேர்ந்து, Pune யில் training முடித்து விட்டு பெங்களூர் வந்தவன். இவனைப்பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் இவன் ஒரு அறிவு ஜீவி. எனக்கு பொதுவாக அறிவு ஜீவிகளை கண்டாலே அலர்ஜி. அதுவும் இவன் தான் அறிவு ஜீவி என்பதை உணர்ந்தவன். மேலும் intellectual plane இல் நானும் இவனும் எதிர் எதிர் துருவங்கள். இதனாலோ என்னவொ இவன் மீது எனக்கு எந்த விதமான உள்ளன்புமிக்க நட்பு எற்ப்பட்டதில்லை. இத்தனைக்கும் இவனுடன் சேர்ந்து நான் ஒரே வீட்டில் வசித்தது 1 ஆண்டு.

பெங்களூரில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வசிக்க தொடங்கி ஒரே மாதம் தான் சென்று இருக்கும், TANK கின் பெற்றோர்கள், சென்னையில் தனியாக வசிக்கும் காரணத்தினால், அவர்களையும் பெங்களூருக்கு கூட்டிக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தான். அவர்களும் பெங்களூர் வருவதற்கு ஆயத்தமானார்கள். ஆதலால், TANK கிற்கு பதிலாக வேறொருவனை தேடத்தொடங்கினோம். அப்பொழுது வந்து சேர்ந்தவன் தான் கொட்டை என்ற சத்ய நாராயணன். இவனும் ஒரு BITSian தான். கொட்டை எனக்கு நேர் எதிர். பல விஷயங்களில்.

1. நான் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை திருச்சி போவதையே பெரிய சுமையாக கருதுபவன். (பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை. சோம்பேறித்தனம் தான். அதற்கு சரியான தண்டனை நான் இப்போது அனுபவிக்கிறேன். பணி வசத்தால் அமெரிக்காவில் இருப்பதால், நினைத்தால் கூட என்னால் இப்போது அடிக்கடி திருச்சி செல்ல முடியாது.) அவனோ எல்லா வாரமும் சென்னை போய் வருபவன். கேட்டால் அக்கா, அம்மா, பாட்டி என்று ஏதாவது கதை சொல்லுவான். "பாட்டியை பார்க்க எவனாவது வாரா வாரம் சென்னை போவானா?", என்று உங்களது குறுக்கு புத்தி யோசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

2. நான் தினமும் மாலை 5 மணிக்கு முதலில் செல்லும் கம்பெனி பஸ்ஸில் முதல் ஆளாக ஒட்டுனருக்கு முன்னரே சென்று இடத்தை பிடித்துக்கொண்டு வருபவன். அவனோ இரவு 1 மணிக்கு முன்னர் வந்ததாக நினைவே இல்லை.


3. மூளை உள்ளவன். அதனாலேயே மூன்றே மாதத்தில் சென்னை Verizon னுக்கு வேலை மாற்றி சென்று விட்டான். எனக்கு......... ஹி ஹி ஹி.

அவன் வீட்டிற்கு வரும் போது கொண்டு வந்தது ஒரே ஒரு suit case. அதில் என்ன இருக்கும் என்று சத்தியமாக எனக்கு தெரியாது. அதையும் போகும் பொழுது அவன் கொண்டு சென்று விட்ட காரணத்தினால், அவனது நினைவாக வீட்டில் எதுவுமே இல்லை. அவனது ஜோக்குகளைத்தவிற. உதாரணத்திற்கு,
நான்:டேய் கொட்டை நாயே! எதுக்குடா காலங்கார்த்தால இம்சை பன்ட்ர?
அவன்:இதுக்கு தான்........

அதற்கு பிறகு ஒரு சிரிப்பு சிரிப்பானே பார்க்கனும். அது கூட பரவாயில்லை. அவனது ஜோக்கை அவனே பாராட்டி சிரித்து கொள்கிறான். ஆனால் அருகே இருக்கும் சக BITSian களும் சேர்ந்து கொண்டு சிரிப்பதை பார்க்க வேண்டுமே. சத்தியமாக அவர்களை கொன்று விடலாம் என்று தோன்றும்.
நான்:டேய் மனசுல கை வச்சு சொல்லுங்கடா, எப்படி டா உங்களாலே இந்த ஜோகுக்கெல்லாம் சிரிக்க முடியுது?
அவர்கள்:(கோரஸாக) இப்படித் தான்..........

(பிறகு முன்னதை விட பலமடங்கு பலமான ஒரு சிரிப்பு)

கொட்டை சென்னை சென்ற பல ஆண்டுகளுக்கு பிறகும் இத்தகைய உரையாடல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

கொட்டை எங்களுடன் இருக்கும் போதே, எனக்கு அறிமுகமானவன், முத்து என்ற முத்துகிருஷ்ணன் ராஜாராம். உங்கள் ஊகம் சரி. இவனும் BITSian யே. இவன் கூட ஒரு அறிவு ஜீவி என்றாலும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பனாகி விட்டவன். அதற்கு காரணம் தான் அறிவு ஜீவி என்பதை ஒரு நாளும் அவன் பரைசாற்றிக் கொண்டதில்லை. என்னிடம் பேசும் பொழுது, எனக்கு என்ன தெரியுமோ, என்ன விஷயம் பிடிக்குமோ அதை பற்றி மட்டுமே பேசுவான். இவன் எஙகள் வீட்டிற்கு அருகே குடி வந்தானாயினும், அதிக நேரம் 85 யிலேயே இருப்பான்.

கொட்டை சென்னை போவதற்கும், கபூர் சென்னையிலிருந்து மாற்றலாகி பெங்களூர் வருவதற்கும் சரியாக இருந்தது. பெங்களூர் வந்த கபூர் மறுபடியும் எனது house mate ஆனான். இம்முறை அவன் என்னை shares சில் invest செய்ய வைக்க பிரம்மப்பிரயர்த்தனம் செய்தான். ஆனால் என்னிடமா? நான் தான் சுதாசரித்துக்கொண்டு விட்டேனே. அதனால் என்னிடம் அவனது முயற்சி படுதோல்வி அடைந்தது.

அந்நாட்களில் கபூர் முலமாக அறிமுகமானவன் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி. இவனை போன்ற ஒரு குடிகாரனை நான் பார்த்ததே இல்லை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் tea break எடுப்பதை பார்த்து இருப்பீர்கள். மணிக்கு ஒரு முறை சென்று cutting போட்டு விட்டு வருபவனை பற்றி தெரியுமா?. அது இவன் தான். அப்படிப்பட்ட இவனும் சபரி மலைக்கு மாலை போட்டுக்கொண்டு தண்ணி அடிக்காமல் இருந்த நாட்கள் உண்டு. எங்களுக்கே ஆச்சரியமாக இருந்த விஷயம் அது. அதை பற்றி பின்னர். கிச்சா பெங்களூர், அல்சூரில் தங்கி இருந்த போதும், அவனது அலுவலகம் எங்களது வீட்டிற்கு பக்கத்தில் இருந்த காரணத்தினால் தினமும் காலையும், மாலையும் attendence குடுத்து விடுவான். சனி மற்றும் ஞாயிற்றிக்கிழமைகளிலோ அவனும் இங்கேயே தங்கி விடுவான். 6 பேர் வாடகைக்கு இருக்கும் வீட்டில் சில சமயம் 15 பேர் கூட தங்கி இருக்கிறோம். அத்தகைய தினங்கள் எங்களுக்கு கொண்டாட்டம் , பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு திண்டாட்டம்.

அப்பொழுது எங்களுக்கெல்லாம் திடீரென்று சமைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. யோசித்து பார்க்கும் பொழுது, எனக்கு அந்த ஆசை வரக் காரணம் hygiene, hygiene என்று சதா உயிரெடுத்துக் கொண்டு இருக்கும் மலை தான் என்று இப்பொழுது தெரிகிறது. மலையின் இம்சையால் சமைக்க ஆரம்பித்தோம் நாங்கள். (சமையல் என்றால் ஒன்றும் பெரிதாக இல்லை. வீட்டிலிருந்து பருப்பு, கொத்தமல்லி போன்ற பொடிகளையும், ready made புளியோதரை பொடி போன்றவற்றையும் வைத்துக் கொண்டு, தயிர் வெளியே வாங்கி விட வேண்டியது. பிறகு சாதம் மட்டும் வைத்து விட்டு பிசைந்து சாப்பிட வேண்டியது. கூடவே முட்டை வேக வைப்பது, omelette போடுவதும் உண்டு.) இந்த பிரமாதமான சமையலுக்கு நாங்கள் செய்யும் ஆர்பாட்டம் இருக்கிறதே அதற்கு ஒரு அளவே இல்லை. சில சமயம் திருச்சியில் இருக்கும் எனது பாட்டியை நினைத்துக் கொள்வேன். 100 பேர் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு அலட்டிக்கொள்ளாமல் சமைக்கும் அவரிடம் ஒரு முறை ஊருக்கு சென்ற பொழுது எனது சமையல் சாகஸங்களை கூறினேன். உடனே அவர் "பாவம் குழந்தை (???) சமைத்து கஷ்டப்படுகிறான். உடனே அவனுக்கு கல்யாணம் செய்து விடலாம்", என்ற அருமையான யோசனையை எனது தாயாரிடம் கூறினார். அவருக்கு தெரிந்து என்ன பயன். எனது பெற்றோர்களுகல்லவா தெரிய வேண்டும்.

இவ்வாறு வாழ்க்கை போய்க்கொண்டு இருந்த போது இரண்டு விஷயங்கள் நடந்தன.

1. எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது (சத்தியமா என் பாட்டி காரணம் இல்லீங்கோ.),

2. கபூருக்கு மீண்டும் சென்னைக்கே மாற்றல் ஆனது.

எனக்கு பதிலாக கிச்சா வீட்டிற்கு வர ஏற்ப்பாடானது. கபூருக்கு பதில் நெமியின் நண்பன் கர்த்திக்கும், பிறகு அவன் கொரியா சென்றதால் , ஜெய்யின் நண்பன் முகுந்தும் பிறகு அவனும் சென்னை சென்றதால், TANK கின் நண்பனான வேறொரு கார்த்திக்கும் வந்தார்கள். நெமியின் நண்பன் கார்த்திக் மற்றும் ஜெய்யின் நண்பன் முகுந்த் இவர்களை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாததால் அவர்களை விட்டு விடுவோம். நடுவே நெமியும் வேறு வேலை கிடைத்ததால் சென்னைக்கு சென்று விட்டான். இந்நிலையில் ஜெய் US சென்றதால், மலையின் cousin தீபு என்கிற தீபக்கும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

கார்த்திக் 6 அடிக்கு சற்றே அதிகமான உயரம். எங்கள் செட்டிலேயே அவன் தான் மிகவும் உயரமானவன். சென்னையில் MCA முடித்து விட்டு, பெங்களூர் Sapient டில் வேலை செய்து கொண்டிருப்பவன். இவனது சாகஸங்கள் பல. ஆனால் உதாரணம் கூற முடியாத வகையில் அனைத்துமே censor செய்யப்பட்டு விட்டது. ஆகையால் மன்னிக்கவும்.

தீபு விவேகின் popular dialogue ஆன "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!" என்பதற்கு சரியான உதாரணம். டில்லியில் பள்ளிப்படிப்பையும், பெங்களூரில் கல்லூரிப்படிப்பையும் முடித்த ஒரு "Yo! bugger". நாங்களோ டூரிங் டாக்கீஸில் மணலை குமித்து வைத்துக் கொண்டு படம் பார்க்கும் லோக்கல் பார்டிகள். 85க்கு வருவதற்கு முன்பு தீபு, தமிழ் படங்களே அவ்வளவாக பார்த்ததில்லை. தமிழ் படப்பாடல்களை அவ்வளவாக கேட்டதில்லை. Guitar வாசிப்பவன், மேல் நாட்டு இசைக்கலைஞர்களின் பாடல்களை கேட்பவன். வந்த ஆறே மாதங்களில் Sun Music ஹேமாவின் ரசிகனாகி, Sun Music கிற்கு phone செய்து பாடல் கேட்கும் அளவிற்கு மாறி விட்டான். எங்களுக்கே கூட கொஞ்சம் வருத்தம் தான். ஒரு நல்லவனை சீரழித்து விட்டொமே என்று. ஆனால் என்ன செய்ய முடியும்? நாங்களெல்லாம் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் ரசிகர்கள். கடமையை செய்யும் பொழுது sentiments க்கு இடம் கொடுக்க மாட்டோம்.

நான் என் மனைவியுடன் வசித்த வாடகை வீடும் இவர்களது வீட்டிற்கு அருகில் என்பதாலும், நானும் மலையும் ஒரே office, ஒரே department, அருகருகே உட்கார்ந்து கொண்டு இருப்பதாலும், 85யில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு தெரிந்து கொண்டிருந்தன. நானும் அடிக்கடி அங்கே செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். "கொஞ்சம் time கிடச்சா போதுமே, எப்போ பாத்தாலும் friends வீடு தான்", இது என் மனைவி அடிக்கடி சொல்லும் வாக்கியம்.

இவ்வாறாக தீபு சீரழிந்து கொண்டிருந்த வேளையில், எனது மனைவி US செல்ல ஒரு வாய்ப்பு வந்தது. அவள் சென்ற பிறகு நானும் தனியாக இருப்பது இம்சையாக இருந்ததால், எனது ஜாகையை, 85க்கு மாற்றிக்கொண்டேன். அதாவது, காலை எழுந்து குளித்து முடித்து விட்டு, அலுவலகம் கிளம்பும் போது எனது வண்டியை அவர்களது வீட்டில் வைத்து விட வேண்டியது, மாலை நேராக அவர்கள் வீட்டிற்கு வந்து, இரவு 12 மணிக்கு மேல் கிளம்பி தூங்க செல்ல வேண்டியது. சனி மற்றும் ஞாயிறுகளில் அவர்களது வீட்டிலேயே குடி இருக்க வேண்டியது. திருமணத்திற்கு பிறகு வந்த இந்த இரண்டாம் bachelor life முன்னதை விட நன்றாக இருந்தது. சுமார் 7 மாதங்கள் அவ்வாறு சென்ற போது நடந்த நிகழ்வுகள் பல. கிச்சா மாலை போட்ட சம்பவமும் இப்பொழுது தான் நடந்தது.

பொதுவாகவே சனி மற்றும் ஞாயிறுகளில் 85 இல்லம் ஒரு மாநாட்டுத்திடல் போல் இருக்கும். காரணம், எங்களுடைய அலுவலக நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், cousins என்று யாராவது வீட்டிற்கு வந்து விடுவார்கள். நங்களே பெரிய கும்பல். இதில் அவர்களும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்? நாங்கள் திரைப்படத்திற்கு போகாத வெள்ளி மற்றும் சனி இரவுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். திரைப்படத்திற்கு போகாத வேளையில், Brigade Road, M.G. Road, Forum Mall, Bangalore Central Mall, NASA/TGIF/Purple Haze/Legends Of Rock போன்ற pub கள் என்று எங்காவது சுற்றித்திரிந்து கொண்டிருப்போம். அலுவலக நாட்களிலோ வீட்டிலேயே கணிணியில் படம் பார்ப்பது, விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது, cards விளையாடுவது என்று ஏதாவது நடந்து கொண்டே இருக்கும். மாலை நேரங்களில் அலுவலகத்திலிருந்து அரைமணி நேர இடை வெளியில் ஒவ்வொருவராக வர ஆரம்பிப்பார்கள். முதலில், 5:45 மணிக்கு நான் வருவேன். வரும் போதே வீட்டிற்கு அருகே உள்ள tea கடையில் tea குடித்து விட்டு கிளம்புவேன் (tea என்றால் tea யுடன் தம்மும் என்று பொருள் கொள்க). அதற்கு பிறகு ஒவ்வொருவர் வரும் போதும் அவர்கள் tea குடிப்பதற்காக நானும் போய் tea குடிப்பேன். இவ்வாறு ஒரு 5 அல்லது 6 tea குடித்த பிறகு இரவு உணவை முடித்து விட்டு சீட்டு கச்சேரிக்கு உட்காருவோம். இரவு 12 மணி வரை நடக்கும் இந்த கச்சேரி முடிந்து நான் இரவு வீட்டிற்கு சென்று , வீட்டிலிருந்த படி எனது மனைவியுடன் சிறிது நேரம் உரையாடி விட்டு 1:30 மணிக்கு மேல் தான் படுக்க செல்வேன். சில வெள்ளி மற்றும் சனி இரவுகளில், முழு இரவும் வெட்டிக்கதை பேசிக்கொண்டு இருக்கும் சம்பவமும் நடக்கும். Sun Music ல் அட்டு figure ஹேமாவா இல்லை சந்தியாவா? போன்ற அதி முக்கியமான விஷயங்களை விவாதிக்கும் நாங்கள் சமயத்தில் சில நல்ல கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வோம். அவற்றுள் TRIPLE சொல்லும் mythological கதைகள், TANK மூன்று முறை ஜெர்மனி சென்றவன் ஆகையால், அவன் கூறும் ஜெர்மனியின் வாழ்க்கை முறை. குறிப்பாக நானும் முத்துவும் தனியே இருக்கும் பொழுது (என் மனைவி ஊருக்கு சென்ற தினத்திலிருந்து இவன் எனது வீட்டிலேயே தங்கி இருந்தான்) எங்களுக்குள் நடக்கும் உரையாடல் பொருளுடையதாகவே இருக்கும்.

இடையே கிச்சாவின் அலுவலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு அம்மாவை 85க்கும் சமைக்க ஏற்பாடு செய்தார்கள். அவர்களை பற்றி கூறியே ஆக வேண்டும். அவர்களுக்கு 3 பெண்கள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இதை வைத்துக் கொண்டு அவர்களது வயதை நீங்கள் ஊகித்து கொள்ளலாம். நாங்களோ அவர்களது வயதில் பாதி கூட நிறம்பாதவர்கள். ஆனால் கிச்சா அவர்களது அலுவலகத்தில் வேலை செய்யும் பாவத்திற்காக எங்கள் எல்லோரையும் அவர்கள், "வாங்க sir, போங்க sir" என்றே அழைப்பார்கள். அவர்கள் எங்களிடம் மாட்டிக் கொண்டு பட்ட பாடு இருக்கிறதே..... நாங்கள் ஒரு மாதத்திற்கு என்று வாங்கி வைத்த அரிசி, பருப்பு மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் ஒரே வாரத்தில் தீர்ந்து விடும். இதற்கு எங்களது பகாசுர பசி மட்டுமே காரணம் அல்ல. நான் முன்னரே கூறியது போல, 6 பேருக்கு வாங்கிய பொருளைக் கொண்டு 10 பேருக்கு சமைத்தால்?. அவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே வாங்கி வைக்கும் படி சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நாங்கள் வழக்கம் போல் மறந்து விடுவோம். அவர்களும் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் போட்டு (செருப்பு, துணி மணி நீங்கலாக) எப்படியோ சமாளித்து ஒரு வாரத்தை ஓட்டி விடுவார்கள். கடைசியில் பொறுமை இழந்து அவர்களே போய் வாங்கி வந்து விடுவார்கள். இதில் என்ன அதிசயம் என்றால், 3 ஆண்டுகளாக அங்கே வசிக்கும் எங்களுக்கு 5 ரூபாய் கூட கடனாக கொடுக்காத பக்கத்து கடைக்காரர், அவர்களுக்கு காசே வாங்காமல் நூறு, இருநூறு என்று கடனாக பொருட்கள் கொடுப்பார். பல சமயம் எங்கள் வீட்டில், அறுவருக்கு சமைத்த உணவை, 10 பேர் சாப்பிடுவதால், எதுவுமே மீந்து போகாது. ஆனால் 10 பேர் சாப்பிடுகிறார்கள் என்று அந்த அம்மாவிற்கு தெரியாது. இதனால் எங்களது சாப்பிடும் திரணை தவறாக புரிந்து கொண்டவர், நிறைய உணவு தயாரிக்க ஆரம்பித்தர். அப்பொழுது சில சமயம் சாப்பாடு மீந்து விடும். அந்நாட்களில் சீக்கிரம் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருபவர்கள் (நான் மட்டுமே வேறு யார்?) தொலைந்தார்கள்.


அவர்கள்:ஏன் sir சாப்பாடு அப்படியே இருக்கு? நல்லா இல்லையா?
நான்:அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. ரொம்ப நல்லா இருந்துது. எங்களுக்கு தான் வயிரு fullஆ இருந்துது. அதான் சாப்பிடலே.
அவர்கள்:நல்லா இல்லேன்னா சொல்லுங்க sir, right பன்னிக்கலாம். ஒங்களுக்கு புடிச்ச மாதிரி சமைக்கலாம். சொல்லுங்க sir
நான்:ஐயோ, அதெல்லாம் சத்தியமா நல்லா இருக்குங்க. நேத்திக்கு நிறைய பேர் வெளில சாப்பிட்டாங்க அதான் சாப்பிடலே. எங்க வீட்டு சமையல் மாதிரி இருக்குங்க. (அம்மா என்னை மன்னித்து விடு.)
அவர்கள்:என்ன sir, விலை வாசி விக்கர விலையில, நீங்க இப்படி சப்பாட waste செய்றீங்க. waste செய்யாதீங்க sir.

இது தினமும் நடக்கும் ஒரு உரையாடல். யாராவது லேசாக அவர் முன் இருமினாலே போதும், MBBS டாக்டர் போல் வரிசையாக வைத்தியம் செய்ய தொடங்கி விடுவார். அன்று அனைவருக்கும் சுக்கு கஷாயமும், வேப்பிலை ரசமும் தான். இருமியவன் வெளியே சாப்பிட போய் விட, இரவு 11 மணிக்கு எல்லா கடைகளும் மூடிய உடன் (பெங்களூரில் இது ஒரு இம்சை. இரவு 11 மணிக்கு மேல் கொலை நடந்தாலும் ஏன் என்று கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்) அலுவலகத்திலிருந்து களைப்புடன் வருபவர்கள், சுக்கு கஷாயத்தையும், வேப்பிலை ரசத்தையும் பார்த்தால் எப்படி இருக்கும் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

இவ்வாறு எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்த போது புதிதாக 85 வீட்டிற்கு குடி வந்தவன் விஸ்வநாதன். மலையின் நண்பன். எல்லா அயோகியத் தனங்களையும் செய்து விட்டு, சாமியார் வேடம் போட்டு ஊரை ஏமாற்றுபவன். தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சனைகளிடையே, தானே சம்பாதித்து MBA படித்தவன். இப்பொழுது CA படித்துக் கொண்டு இருப்பவன். இவனது துர்போதனையால் தான் கிச்சா மாலை போட்டுக் கொண்டு உத்தமனாக மாறினான். அந்த 45 நாட்களில், wine கடைக்காரன் நஷ்டம் தாங்காமல் தூக்கு போட்டுக் கொண்டு விட்டதாக செய்தி வருகிறதா என்று நான் தினமும் நாளிதழில் பார்த்துக் கொண்டிருப்பேன்.

யாரைப் பற்றி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் எங்கள் house owner ஐ பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவர் பெயர் திரு.பிரஹல்லாதன். தஞ்சையை சேர்ந்த அவர் பெங்களூரில் settle ஆகி பல ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு இரண்டு புதல்வர்கள். ஒரு முறை கூட அவர் எங்களை அதிர்ந்து பேசியதே இல்லை. எங்கள் வீட்டு மின்சார மற்றும் குடிநீர் பில்லை அவரே கட்டி விடுவார். வீட்டில் எந்த பிரச்சனை என்றாலும் உடனே வந்து கவனித்து விடுவார். எங்கள் சத்தங்கள், இம்சைகள் எதையும் அவர் பொருட்படுத்தியதே இல்லை (அல்லது பொருட்படுத்தாதது போல் இருந்தாரோ. எனக்கு தெரியாது.). நாங்கள் அங்கே நால்வர் two wheeler வைத்திருந்தோம். எங்களது வண்டிகளை வைக்கவே அங்கே இடம் சரியாக இருக்கும். அதனால் அவர்களது வண்டிகளை road டிலேயே வைத்து விடுவார்கள். வீட்டை நாங்கள் குப்பை மேடாக வைத்திருப்போம். ஆனாலும் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார். இதை எல்லாவற்றையும் விடக்கொடுமை என்னவென்றால் முதன் முதலில் வந்த அந்த அறுவரே இன்னமும் அந்த வீட்டில் இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டு இருப்பது தான்.

இந்நிலையில், நானும் வேறு வேலை கிடைத்து அமெரிக்கா வர வேண்டியதாகி விட்டது. கல்லூரியை விட்டு பிரியும் போது இருந்த அதே மன நிலையுடன் தான் 85யை விட்டு நான் பிரிந்தேன். நான் சென்ற 3 மாதங்களுக்குள், மலை சென்னைக்கு MBA படிக்க சென்று விட்டான். இதோ TRIPLE லுக்கு இன்று திருமணம். அவனும் வேறு வீட்டிற்கு சென்று விடுவான். கார்த்தி அடுத்த மாதம் சென்னையில் வேறொரு அலுவலகத்தில் சேர இருக்கிறான். தீபுவும் சென்னையில் வேறொரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறான். கிச்சா பதிவு செய்திருந்த சொந்த வீட்டை இந்த ஆண்டு இறுதியில் கட்டி முடித்து விடுவார்கள் ஆகையால், அவனும் சென்று விடுவான்.

பெண்கள் திருமணத்திற்கு பிறகு பெற்றோர்கள், நண்பர்கள் , சொந்த பந்தங்கள் அனைவரையும் இழக்கிறார்கள், ஆனால் ஆண்கள் வாழ்க்கையில் ஒன்றுமே இழப்பதில்லை என்று பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளே!, யார் சொன்னார்கள் ஆண்கள் ஒன்றையும் இழப்பதில்லை என்று? காவிரிக்கரை, கொள்ளிட நீச்சல், பின் மாலை நேர மலைக்கோட்டை, இரவு நேர காவிரிப்பாலம், காயத்ரீ's (சத்தியமா இது பொண்ணு இல்லீங்க. திருச்சிலெ இருக்கும் ஒரு tea கடை.), சிதம்பர விலாஸ் பேரூந்துப் பயனம், 85 வீட்டு வாழ்க்கை, நண்பர்களுடன் PVR சினிமா ........ வாழ்க்கை போராட்டத்தில் நான் இழந்த பலவற்றுள் சில. இவற்றில் எதெல்லாம் எனக்கு திரும்பக்கிடைக்கும், எதெல்லாம் கிடைக்காது என்பதை காலம் தான் கூற வேண்டும். வாழ்க்கை அதற்கே உரிய சுவாரசியங்களுடன் போய்க்கொண்டு இருக்கின்றது. ஆனால் ஒன்று. இனி நான் இந்தியா திரும்பும் பொழுது 85 வீட்டிற்கு செல்ல முடியாது. 85யில் தங்கி பழைய நினைவுகளை அசை போடலாம் என்ற எனது எண்ணம் நிறைவேறப் போவதும் இல்லை. 85 என்ற தேன் கூடு என் கண் முன் கலைவதை கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

பின்குறிப்பு : இந்த பதிவில், என்னுடன் 85 இல்லத்தில் வசித்தவர்கள் அல்லது 85 இல்லத்திற்கு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்கள், இவர்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். அது சரி, 85க்கு துளியும் சம்பந்தமே இல்லாத ஜினியை பற்றி ஏன் குறிப்பிட்டேன்? ஜினியைத் தவிர்த்து புவனேஷ்வர் வாழ்க்கையை நினைக்க முடியாத எனது இயல்பும் ஒரு காரணமோ என்னவோ!!!

0 Comments: