Monday, January 23, 2012


பொடிமாஸ் - 01/23/2012

குமுதம் இதழ் ஸ்ருதி ஹாசனிடம் அவரையும் தனுஷையும் பற்றிய தனது தவறான செய்திக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறது. சென்ற வாரம் நக்கீரன் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டது அனைவரும் அறிந்ததே. இது போலவே சில நாட்களுக்கு முன்னர் திருவாளர் விஜயகாந்த் கலைஞரை பற்றி ஏதோ உளறி பின்னர் வக்கீல் நோட்டீசுக்கு பயந்து மன்னிப்பும் கேட்டார். அதே போல ஒரு நீதிபதியை பற்றிய தவறான செய்தி வெளியிட்டதற்காக டைம்ஸ் நவ் பத்திரிக்கைக்கு உச்ச நீதி மன்றம் நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அசால்டாக ஏதோ ஒரு செய்தியை கொளுத்தி போட்டுவிட்டு குளிர் காயும் பத்திரிக்கைகளுக்கு இது ஒரு பாடமாக அமைந்தால் நல்லது.சல்மான் ருஷ்டியை ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு வர விடாமல் செய்ய நடக்கும் போராட்டங்கள் இயல்பானதே. எந்த ஒரு சாராரின் நம்பிக்கையை கொச்சை படுத்தும் செயலை செய்தாலும் இம்மாதிரியான விளைவுகளே ஏற்படும். ஆனால் எனது ஆச்சரியமே M.F.ஹுசைன் இந்தியாவை விட்டு கத்தார் சென்ற பொழுது கலைஞனின் சுதந்திரத்தை பற்றி வாய்கிழிய பாடம் நடத்திய அறிவுக் குஞ்சுகள் இப்பொழுது திடீரென்று காணாமல் போனது தான். அது சரி, இந்த குஞ்சுகளிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?இந்திய இராணுவ ஜெனரல் V.K.சிங் தனது பிறந்த தேதியை குறித்து நீதி மன்றதை நாடியது துரதிருஷ்டவசமானது என்றாலும் சரியான செயலாகவே படுகிறது. 1965 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 47 வருடங்களாக பலமுறை தனது பிறந்த தேதியை மாற்ற விண்ணப்பித்து விட்டு இறுதியில் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடியவே இம்மாதிரி செய்திருக்கிறார். வழக்கில் அவர் ஜெயிக்கிறாரோ இல்லையோ இனிமேலாவது வெள்ளைக்காரன் தனது வசதிக்காக கொண்டு வந்த முட்டாள்தனமான சிகப்பு நாடா சட்டங்களை மறு பரிசீலனை செய்து தொலைத்தால் நன்று.விஜய் டிவியில் ஒளிபரப்பான "என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்" நிகழ்ச்சி நன்றாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் தனது வளர்ச்சிக்கு உதவிய நண்பர்களை நினைத்து பார்த்தது நன்றாக இருந்தது. நடிகர் சத்யன் மிகவும் இயல்பாக இருந்தார். அவருக்கு நல்ல ஒரு எதிர் காலம் அமைய வாழ்த்துகிறேன். மொத்தத்தில் இது ஒரு ஃபீல் குட் படத்தை பற்றிய ஒரு ஃபீல் குட் கலந்துரையாடல்."நண்பன் படத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விஜய் வசந்த் படத்தில் ஒரு தலித் மாணவன்." - ஒரு சில புத்தி ஜீவிகளின் கண்டுபிடிப்பு. தஞ்சை கல்வெட்டுகளில் பொறிக்கப்பட வேண்டிய கண்டுபிடிப்பு. பின்னால் வரும் சந்ததியினர் பார்த்து, படித்து பின்னர் தெளிவு பெற வேண்டும் அல்லவா? மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோன்றும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை."It is better to keep your mouth shut and be thought a fool than to open it and remove all doubt" எங்கேயோ எப்பொழுதோ படித்தது. இன்று இணையத்தில் வெளிவரும் சூடான கட்டுரைகள் பலவற்றை படிக்கையில் எனக்கு இது தான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. இதை படித்த பிறகு உங்களுக்கு எந்த இணையக் குஞ்சு நினைவிற்கு வந்தாலும் நான் பொறுப்பல்ல.கீழே மாண்டியின் லேட்டஸ்ட் படங்கள் இரண்டு. நேற்று தான் குளிப்பாட்டிய பின்னர் எனது கைத்தொலைபேசியில் எடுத்தேன்.வழக்கம் போலவே காமெடியுடன் பதிவை முடிக்கலாம். அண்ணா ஹஸாரேவை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என்றும், அதை இந்தியர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் ஒரு மின்னஞ்சல் அங்கே இங்கே என்று சுற்றிவிட்டு கடைசியில் எனக்கு வந்தது. கொலைவெறி பாடலை ரசிக்கலாம், அதற்காக அதை தேசிய கீதமாக்க முடியுமா என்ன?

2 Comments:

T.N.MURALIDHARAN said...

எண்ணங்கள் அருமை. மாண்டியும் சூப்பர்.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முரளி. தொடர்ந்து வாருங்கள்.