Thursday, January 12, 2012


அமெரிக்கா அழிவின் பாதையில் செல்கிறதா? - பகுதி 2


சென்ற பகுதியில் அமெரிக்கா எப்படி இங்கிலாந்தை ஓரம் கட்டிவிட்டு உலகின் மிகப் பெரிய வல்லரசானது என்பதை பார்த்தோம். இந்தப் பகுதியில் அமெரிக்காவின் வீழ்ச்சியை அல்லது வீழ்ச்சியை போன்ற தோற்றத்தினை பார்ப்போம்.

தொட்டதெல்லாம் பொன்னாகும் நம்ம ஊர் சூப்பர் ஸ்டாருக்கு கூட அவ்வப்பொழுது ஒரு நாட்டுக்கொரு நல்லவனோ இல்லை பாபாவோ வந்து விடுகிறது. உலகின் சூப்பர் ஸ்டார் அமெரிக்கா மட்டும் என்ன விதி விலக்கா? அமெரிக்காவிற்கும் அது போலவே மூன்று ஆப்புகள் தொடர்ச்சியாக வந்தன.

2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் அமெரிக்காவை உலக நாடுகள் முன்னிலையில் தலை குனிய வைத்தது. இது அமெரிக்காவிற்கு கிடைத்த முதல் ஆப்பு. அமெரிக்கா தனது வல்லமையை உலக நாடுகளுக்கு நிரூபிக்க ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தது. அதனால் பெரும் பொருட் சேதமும் நேர்ந்தது.

அதே நேரத்தில் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தனது நாடு இனி எண்ணை வர்த்தகத்தில் ஈடுபடும் பொழுது யூரோவிலேயே வர்த்தகம் செய்யும் என்று அறிவித்தார். முதல் பதிவில் கூறியது போன்று அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தி வைக்க ஈராக்கின் இந்த முடிவை எதிர்த்தது அமெரிக்கா. ஆனால் அமெரிக்க டாலருக்கு மாற்றாக யூரோ வரும் என்று எதிர் பார்த்த ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக ஈராக்கின் இந்த முடிவை ஆதரித்தன. இது அமெரிக்காவிற்கு கிடைத்த இரண்டாவது ஆப்பு. இதிலிருந்து மீண்டு வர ஈராக் மீது போர் தொடுப்பது அமெரிக்காவிற்கு அவசியம் ஆனது.

அமெரிக்காவிற்கு மூன்றாவது ஆப்பு சப் ப்ரைம் க்ரைஸிஸ் என்ற பெயரில் வந்தது. அதை பற்றி விரிவாகவே எனது முந்தைய பதிவான அமெரிக்காவை தொடர்ந்து அடுத்தது இந்தியாவா? என்ற பதிவில் விளக்கியுள்ளேன். சப் ப்ரைம் க்ரைஸிஸ் பற்றி தெரியாதவர்கள் அதனையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ச்சியான இந்த மூன்று ஆப்புகளாலும் அமெரிக்காவிற்கு பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. அமெரிக்காவின் மத்திய தர மக்கள் சொல்ல இயலா துயரடைந்தனர். பலர் வேலை வாய்ப்பையும் அதனால் மருத்துவ காப்பீட்டையும் இழந்தனர். பலர் தங்களது ஓய்வூதியத்தை இழந்தனர். பலர் தங்களது இல்லத்தை இழந்தனர்.

மேலோட்டமாக பார்த்தால் மீளவே முடியாத பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா இருப்பதை போலவே இது தோன்றும். ஆனால் உண்மையில் அவ்வளவு பாதிப்புகள் இல்லை. நம்ப முடியாவிட்டாலும் அது தான் நிஜம்.

முன் பதிவில் சொன்னதை போன்று அமெரிக்கா நீங்கலாக உலகின் மற்ற அனைத்து நாடுகளின் அன்னியச் செலாவணியில் பெரும் பகுதி அமெரிக்க டாலர்களிலேயே இருக்கிறது. அமெரிக்கா வீழ்ந்து அதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தால் பெரும் ஆப்பு அந்த நாடுகளுக்கு தான். அதனால் அமெரிக்காவே நினைத்தாலும் பிற நாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்க அனுமதிக்காது. பல ட்ரில்லியன் டாலர்கள் கொடுத்து அமெரிக்க பாண்டுகளை சீனா வாங்கியதும் அதனால் தான்.

அதே போல ஜெர்மன் கார்களாகட்டும், ஜப்பானிய டிவிக்களாகட்டும், இந்திய சாஃப்ட்வேர்களாகட்டும் அவற்றினை பெரிதும் உபயோகிப்பவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்கா அழிந்தால் இந்த பொருட்களின் நுகர்வோர் பெருமளவில் அழிந்ததாக பொருள். குறிப்பாக எவ்வளவு சுரண்டல்கள் நடந்தாலும் தென் அமெரிக்க நாடுகள் பெரிதும் நம்பி இருப்பது அமெரிக்காவை தான்.

மேலும் ஈராக்கினை போர் தொடுத்து ஒரேயடியாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் மற்ற OPEC நாடுகளுக்கு ஒரு வலுவான செய்தியை அமெரிக்கா அளித்துவிட்டது. டாலரில் எண்ணை விற்காமல் வேறு ஒரு பணத்தில் எண்ணை விற்றால் விளைவது என்ன என்று அந்த நாடுகள் அறிந்து கொண்டுவிட்டன. பரவலாக எண்ணை வாங்கும் மற்ற நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து டாலரை புறக்கணித்தால் ஒரு வேளை அந்த நாடுகளுக்கு சிறிது துணிச்சல் வரலாம்.

அனால் அப்படி ஒரு துணிச்சல் வருவதற்கு வேறொரு வலுவான பணம் வேண்டும். பொருளாதாரம் நன்றாக இருந்த போது நன்றாக உயர்ந்து வந்த யூரோ இப்பொழுது முக்கு முக்கு என்று முக்குகிறது. மேலும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஜெர்மனி போன்ற நாடுகள் யூரோவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. ஆனால் க்ரீஸ், இத்தாலி போன்ற நாடுகள் யூரோவை கீழே தள்ளுகின்றன. யூரோவின் வருங்காலம் இந்த நாடுகளில் எவை ஜெயிக்கும் என்பதை பொருத்தே அமையும். அது எப்படி இருந்தாலும் யூரோ டாலரின் இடத்தை பிடிக்கும் என்று சொல்வது வரிசையாக இரண்டு மூன்று சூப்பர் ஹிட்களை கொடுத்த ஒரு இளம் நடிகர் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பார் என்று சொல்வதை போன்று இருக்கிறது. அது நடக்கலாம் நடக்காமல் போகலாம், ஆனால் அப்படி நடப்பதற்கு ஐரோப்பிய குழுமத்தின் ஒற்றுமையும், கடுமையான உழைப்பும், தொலை நோக்கு பார்வையும், வலுவான ஒரு தலைமையும் வேண்டும். இன்றைய நிலையில் பார்க்கும் பொழுது இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு டாலரை அசைத்துக் கொள்ள முடியாது என்பதே உண்மை.

ஒருவேளை மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக செக் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி ஏதாவது நடந்தாலும் அமெரிக்காவை ஒன்றும் புடுங்க முடியாது. அமெரிக்கா தனது எண்ணை தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளை நம்பி இருக்கிறது என்பது ஒரு பெரிய மாயை. பார்க்க US Energy Information Administration Report. முதல் 15 நாடுகளில் மூன்றே மூன்று மத்திய கிழக்கு நாடுகள் தான் உள்ளன. அவற்றில் சவுதி தவிர்த்து பிற நாடுகள் ஏற்றுமதி செய்வது துச்சமான அளவு. முதல் நாடான கனடா ஏற்றுமதி செய்யும் எண்ணையை விட சவுதி ஏற்றுமதி செய்வது பாதி அளவே. இதை தவிர்த்து உலக நாடுகள் அனைத்திற்கும் நூறு ஆண்டுகளுக்கு தேவையான எண்ணை வளம் அமெரிக்காவின் கொலராடோ மற்றும் அலாஸ்கா மாநிலங்களில் உள்ளன. வழக்கம் போலவே மற்ற உலக நாடுகளின் எண்ணை முழுதும் உறிஞ்சி எடுக்கப்படும் வரை அதை வெளியில் விடாது அமெரிக்கா. விக்கிலீக்ஸ் கோப்புகளில் அதனை பற்றிய தகவல்கள் தெளிவாக உள்ளன.

அதனால் சொல்கிறேன் நண்பர்களே! அமெரிக்கா தற்பொழுது சந்திக்கும் இந்த பின்னடைவு தற்காலிகமானது. ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயரே எழுந்து பறந்து வரும் அமெரிக்கா. அதுவே உலகத்திற்கு நன்மையும் கூட.

In God We Trust.

5 Comments:

Robin said...

புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி!

SathyaPriyan said...

//
Robin said...
புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி!
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Robin.

வவ்வால் said...

// அமெரிக்கா தனது எண்ணை தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளை நம்பி இருக்கிறது என்பது ஒரு பெரிய மாயை. பார்க்க US Energy Information Administration Report. முதல் 15 நாடுகளில் மூன்றே மூன்று மத்திய கிழக்கு நாடுகள் தான் உள்ளன. அவற்றில் சவுதி தவிர்த்து பிற நாடுகள் ஏற்றுமதி செய்வது துச்சமான அளவு.//

சத்யன்,

அமெரிக்க புள்ளி விவரம் தான் மாயை. வளைகுடா நாடுகளில் எடுக்கப்படும் எண்ணை பெருமளவு அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களால் ஆகும்.ராயல்டி தொகை கொடுப்பார்கள். அப்படி அமெரிக்க நிறுவனங்களால் எடுத்து அமெரிக்க தேவைக்கு அனுப்பப்படும் எண்ணை இறக்குமதி எனக்காட்டப்படாது.

இப்போது வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி எனக்காட்டப்ப்ட்டிருக்கும் அளவு அந்த நாட்டு நிறுவனங்களில் இருந்து வாங்கும் அளவாகும்.

இராக்,, லிபியா மீதான போர்களுக்கு மூல காரணம் ஈரோ மட்டுமே அல்ல, அந்த நாடுகளில் எண்ணை வளம் என்பது அரசுடைமை.அந்த நாட்டு தனியார் கூட எண்ணை எடுத்து விற்க முடியாது.

அப்படிப்பட்ட நாடுகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை எனவே தான் போர். எண்ணை வளத்தை அமெரிக்க நிறுவனங்கல் சுரண்டவே.

அமெரிக்க நிறுவனங்கள் வளைகுடா நாடுகளில், மெக்சிகோ வளைகுடா பகுதி என உலகின் பலப்ப்குதியிலும் ஏகப்பட்ட எண்ணை உறிஞ்சுகின்றன. இதெல்லாம் சொந்த உற்பத்தியாக கணக்கில் வந்து விடும். இந்த நாடுகள் நாடுகள் எண்ணை எடுக்க கொடுத்திருக்கும் உரிமத்தை ரத்து செய்து விட்டால் அமெரிக்கா திண்டாட வேண்டி வரும்,ஆனால் அப்படி செய்ய துணிவில்லை.

மேலும் அமெரிக்கா பல எண்ணை இருப்புகளை கண்டுப்பிடித்து எதிர்காலத்தில் பயன்ப்ப்டுத்தலாம் என பயன்ப்படுத்தாமல் வைத்துள்ளதும் உண்மையே.

இப்போது வந்துள்ளது பீக் ஆயில் கிரிசிஸ் என்று சொல்கிறார்கள். இனிமேல் எண்ணை சுத்திகரிப்பு திறன் கீழ் நோக்கி தான் செல்லும் , நீங்கள் சொன்னது போல் 100 ஆண்டுகளுக்கு எல்லாம் எண்ணை இருக்காது இன்னும் 50 ஆன்டுகளிலேயே கடுமையான தட்டுப்பாடு வந்து விடும்.

நீங்க ரொம்ப லைட்டா எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கிங்க, இதுக்குள்ள ஏகப்பட்ட சிக்கல்,அரசியல் இருக்கு. அமெரிக்காவில புழங்குற டாலர் விட வெளில இருக்க டாலர் அதிகம் அது எல்லாம் மீண்டும் அமெரிக்க உள் நாட்டு சந்தைக்கு புழக்கத்துக்கு வந்த அமெரிக்காவில பெரிய அளவில் இன்பிலேஷன் வரும், பொருளாதாரம் வீழும், அதை தடுக்க தான் எண்ணைய டாலர்ல விக்க வைக்க அமெரிக்கா வேலை செய்யுது.

இப்போ நமக்கு மென்பொருள் வியாபார வாய்ப்பு கொடுக்குதுனு சொல்றிங்க அதனால நாம நன்மை அடைவதாக தெரிந்தாலும் அதுக்கு பின்னாடி அவங்க நாட்டில இருக்க உபரி டாலர்களை வெளிநாட்டில புழங்க வைக்கும் நோக்கமே இருக்கு.

எல்லா டாலரும் அமெரிக்காவுக்குள்ள புழங்கினா எல்லார் கைலவும் பணம் அதிகம் இருக்கும் ஆனா அதைக்கொடுத்து வாங்க பொருள் இருக்காது விலை வாசி உயரும். இதுக்கு எல்லாம் காரணம் அமெரிக்கா அச்சடிச்சு விட்டிருக்க டாலர் அளவு அதன் ஜி.டி.பி விட அதிகம் என்பதே ஆகும்.பணப்புழக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவே அவுட் சோர்சிங் செய்கிறது அமெரிக்கா.

SathyaPriyan said...

//
வவ்வால் said...
சத்யன்,

அமெரிக்க புள்ளி விவரம் தான் மாயை. வளைகுடா நாடுகளில் எடுக்கப்படும் எண்ணை பெருமளவு அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களால் ஆகும்.ராயல்டி தொகை கொடுப்பார்கள். அப்படி அமெரிக்க நிறுவனங்களால் எடுத்து அமெரிக்க தேவைக்கு அனுப்பப்படும் எண்ணை இறக்குமதி எனக்காட்டப்படாது.
//
இது எனக்கு முற்றிலும் புதிய தகவல். தெரிவித்தமைக்கு நன்றி.

//
நீங்க ரொம்ப லைட்டா எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கிங்க, இதுக்குள்ள ஏகப்பட்ட சிக்கல்,அரசியல் இருக்கு.
//
:-)

//
அமெரிக்காவில புழங்குற டாலர் விட வெளில இருக்க டாலர் அதிகம் அது எல்லாம் மீண்டும் அமெரிக்க உள் நாட்டு சந்தைக்கு புழக்கத்துக்கு வந்த அமெரிக்காவில பெரிய அளவில் இன்பிலேஷன் வரும், பொருளாதாரம் வீழும், அதை தடுக்க தான் எண்ணைய டாலர்ல விக்க வைக்க அமெரிக்கா வேலை செய்யுது.

இப்போ நமக்கு மென்பொருள் வியாபார வாய்ப்பு கொடுக்குதுனு சொல்றிங்க அதனால நாம நன்மை அடைவதாக தெரிந்தாலும் அதுக்கு பின்னாடி அவங்க நாட்டில இருக்க உபரி டாலர்களை வெளிநாட்டில புழங்க வைக்கும் நோக்கமே இருக்கு.
//
ஆமாம். இதை தான் முதல் பகுதியில் விவரித்துள்ளேன். அதனாலேயே அமெரிக்கா ஏற்றுமதியை முற்றிலும் குறைத்து இறக்குமதியை அதிகரிக்கிறது. அதிகரித்து விட்டது.

முதல் பகுதியிலிருந்து சில வரிகள் கிழே.

இதன் மூலம் மட்டுமே டாலர் மதிப்பை உயர்த்த முடியாது என்று எண்ணி அமெரிக்கா உற்பத்தியையும், ஏற்றுமதியையும் குறைத்து இறக்குமதியை அதிகரித்தது. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது அமெரிக்கா. மற்ற நாடுகளுக்கு டாலர்களை ஏற்றுமதி செய்தது போலவும் ஆயிற்று, மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவின் மீதுள்ள சார்பை உறுதி செய்தது போலவும் ஆயிற்று.

வருகைக்கு நன்றி. தங்களுக்கு இதை பற்றி பல தகவல்கள் தெரிந்துள்ளன. விளக்கமாக ஒரு பதிவிடுங்களேன் நேரம் கிடைக்கும் பொழுது. பலருக்கும் பயன்படும்.

அணில் said...

உங்களது இந்த பதிவிற்கு முதற்கன் என் நன்றிகள். இன்றைக்கு அமெரிக்க பொருளாதாரத்தைப் பற்றி தமிழில் தேடினாலும் போதிய விவரங்கள் இல்லை. 2008, 2012 சரிவுகளே ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கூகுள் தேடல் வழியாகவே உங்கள் வலைப்பூவிற்கு முதன்முறை வந்திருக்கிறேன்.

வவ்வால் அவர்களது பின்னூட்டம் இப்பதிவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
டாலரில் வர்த்தகம் செய்யும் நாடுகள் தங்கள் நாட்டு பண மதிப்பு போய்விடும் என அஞ்சி டாலர் வீழ்வதற்கு விட மாட்டார்கள் என சொல்லியிருக்கிறீர்கள். இது கடந்தகால உண்மையாகி விட்டது. தனது தவறான வெளியுறவு கொள்கைகளாலும் போலிப் பொருளாதார நடவடிக்கைகளாலும் (printing press money - Quantitative Easing) தனக்குத்தானே குழி வெட்டி பேராபத்தில் இருக்கிறது. இப்பதிவின் தொடர்ச்சியை உடனே எழுதுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் எழுதிய பதிவை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கதறும் கனவு தேசம். என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
http://tamilcpu.blogspot.in/2016/02/blog-post.html

People should not get fooled by mainstream media. Corporate media are run by the same fellows who run the government. Now the same criminals are waging a war threat worldwide now covertly to hide their inabilities and crimes. More Scalia and Sherrifs will rise to protect the nation. But it is too late. Now it's time to get prepared and warn the fellow people about inevitable danger coming to the whole world but especially the great United States. If you are in stock markets pls get out of it immediately. Today's US Derivatives Bubble is more than 500 Trillion dollars. If it collapses it will make previous economic falls look like a child play. Banks are pushing for cashless society (only digital money which is very easy to manipulate virtually through a cheap computer) which is even more dangerous. Real economy and growth is very very different than what the world is projecting now. சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் எனப் பாடினானே பாரதி, அவனல்லவா பொருளாதார மேதை.