Wednesday, January 11, 2012


அமெரிக்கா அழிவின் பாதையில் செல்கிறதா? - பகுதி 1


சமீப காலமாக வலையுலகில் மட்டும் இல்லாமல் பிற ஊடகங்களிலும் அமெரிக்காவின் ஆளுமை குறைந்து கொண்டிருக்கிறது என்றும் விரைவில் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு என்ற நிலையில் இருந்து கீழே இறங்கி விடும் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதார வீழ்ச்சியை பார்க்கும் பொழுது ஒரு வேளை இப்படி நடந்தாலும் நடக்கலாம் என்பதே பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா உலகின் நாட்டாமையாக பல செயல்களை செய்து வருவதால் பலருக்கும் அமெரிக்கா மீதிருந்த அதிருப்தி இப்படி வெளிவருகிறது. உண்மையில் இப்படி நடக்காவிட்டாலும் நடந்து தொலைத்தால் என்ன என்ற நப்பாசை பலருக்கு இருக்கிறது.

முதலில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் வல்லரசாக இருந்த பிரிட்டன் நாட்டை முந்தி எப்படி அமெரிக்கா இந்த நிலைக்கு வந்தது என்று பார்ப்போம். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஐரோப்பிய, ஆசிய, ஆப்ரிக்க நாடுகள் அனைத்தும் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்தன. மீளவே முடியாத நிலையில் தான் பல நாடுகளும் இருந்தன. பல ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் தேவையான உள்கட்டமைப்பு இல்லை. ஐரோப்பிய நாடுகளிலோ அவற்றை பாதுகாக்க போதுமான பொருளாதார வசதிகள் இல்லை.

இரண்டாம் உலகப் போர் நடக்கும் பொழுதே அமெரிக்கா புத்திசாலித்தனமாக ஒரு சகுனி வேலையை செய்தது. போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு யுத்த தளவாடங்கள், மருத்துகள், உணவுப் பொருட்கள் போன்றவை தேவைப் பட்டன. அதற்கு அமெரிக்காவின் உதவியை நாடின அவை. அமெரிக்காவும் அந்த நாடுகளுக்கு தான் உதவுவதாகவும், ஆனால் உதவிக்கு பணம் டாலரிலேயே செலுத்தப்படவேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஐரோப்பிய நாடுகள் வசமோ போதுமான டாலர்கள் இல்லை. அதனால் அமெரிக்காவே ஒரு வழியையும் கூறியது. அதாவது முதலில் அதிகப்படியான தங்கத்தினை ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் கொடுத்து விட வேண்டும். அமெரிக்காவும் அதன் மதிப்பில் உள்ள டாலரினை ஐரோப்பிய நாடுகளுக்கு கொடுத்து விடும். பின்னர் ஐரோப்பிய நாடுகள் தங்களது தேவையை பொருத்து டாலரினை கொடுத்து வேண்டிய உதவிகளை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். பின்னர் போர் முடிந்த உடன் மிஞ்சிய டாலர்களை கொடுத்து தங்கத்தினை மிண்டும் பெற்றுக் கொள்ளலாம். இப்படியாக பெருமளவில் தங்கமும், டாலரும் கை மாறின. டாலர் உலகப் பொதுப்பணமாக வித்திட்டது இந்த நிகழ்வுதான்.

இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்த நிலையில், அமெரிக்க இராணுவ பலத்தின் மீது கொண்ட அச்சத்தால் சில ஐரோப்பிய நாடுகளும், உயர்ந்து கொண்டே இருக்கும் டாலரின் மதிப்பினால் இன்னும் சில காலம் பொறுத்திருந்தால் அதிக தங்கம் கிடைக்கும் என்ற பேராசையினால் சில ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவிடம் தங்கத்தை மீண்டும் ஒப்படைக்க சொல்லி நிர்பந்திக்க வில்லை. அதனால் அமெரிக்கா அந்த தங்கத்தினை கொண்டு பல தொழிற்சாலைகளை தனது நாட்டில் உறுவாக்கிக் கொண்டது. அந்த காலத்தில் சுமாராக உலகின் 80 சதவிகித தங்கம் அமெரிக்காவின் வசம் இருந்ததாகவும், 40 சதவிகித தொழிற்சாலைகள் அமெரிக்காவின் வசம் இருந்ததாகவும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் பேராசிரியர்களுமான சோகன் ஷர்மா மற்றும் சூ ட்ரேசி இருவரும் குறிப்பிடுகிறார்கள்.

1944 ஆம் ஆண்டு நடந்த ப்ரெட்டன் வுட்ஸ் மாநாட்டில் உலக வங்கி மற்றும் IMF இரண்டும் அமெரிக்காவில் தொடங்கப்பட்டன. இது அமெரிக்காவின் ஆளுமையை உலகுக்கு உணர்த்தியது. அதன் பின்னர் அமெரிக்காவிற்கு ஏறுமுகம் தான். அப்பொழுது அமெரிக்காவின் வசம் இருந்த தங்கத்தினை மதிப்பு செய்து (சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதன் அடிப்படையில் அமெரிக்க டாலர் மதிப்பை முடிவு செய்தனர்.

எல்லாம் ஒழுங்காக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அமெரிக்காவிற்கு வியட்னாம் போர் என்ற பெயரில் வந்தது சனி. சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை குடித்து ஏப்பம் விட்டது அந்த போர். போர் முடிந்த நிலையில் அமெரிக்கா வசம் வெறும் 10 பில்லியன் டாலர்கள் தங்கமே இருந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு பெருமளவில் குறைந்தது.

அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த நிக்ஸன் தங்கத்தின் அடிப்படையில் இருந்த டாலரின் மதிப்பினை மாற்றம் செய்து டாலருக்கு பொய்யான ஒரு மதிப்பினை அளித்தார். இதை உலக நாடுகள் எதிர்பார்க்கவே இல்லை. இதை நிக்ஸன் ஷாக் என்றே அனைவரும் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் அமெரிக்காவின் டாலர் மதிப்பினை உயர்த்தியே வைக்க நியூயார்க் மெர்கன்டைல் மூலமாகவே எண்ணை வர்த்தகம் நடக்குமாறு சட்டங்கள் எழுப்பப்பட்டன. வல்லரசான அமெரிக்காவின் இந்த செயலுக்கு எதிராக செயல்பட ஒருவருக்கும் துணிவில்லை. அதாவது இந்தியா சவுதியிடம் இருந்து எண்ணை வாங்க வேண்டும் என்றால் இந்திய ரூபாயிலோ அல்லது சவுதி ரியாலிலோ வாங்க முடியாது. அமெரிக்க டாலர் வேண்டும். ஆக எண்ணை வளம் இல்லாத அனைத்து உலக நாடுகளும் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க தொடங்கினர். அனைத்து நாடுகளின் அன்னியச் செலாவணியில் பெரும் பகுதி அமெரிக்க டாலர்களிலேயே இருந்தது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்தே இருந்தது.

இதன் மூலம் மட்டுமே டாலர் மதிப்பை உயர்த்த முடியாது என்று எண்ணி அமெரிக்கா உற்பத்தியையும், ஏற்றுமதியையும் குறைத்து இறக்குமதியை அதிகரித்தது. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது அமெரிக்கா. மற்ற நாடுகளுக்கு டாலர்களை ஏற்றுமதி செய்தது போலவும் ஆயிற்று, மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவின் மீதுள்ள சார்பை உறுதி செய்தது போலவும் ஆயிற்று.

மற்ற நாடுகளும் டாலரும், வேலை வாய்ப்பும் கிடைக்கிறதே என்று இதை விரும்பி ஏற்றுக் கொண்டன. இப்படி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கும், கார்கள் தயாரிப்பு ஜெர்மனி மற்றும் ஜப்பானிற்கும், இயற்கை வளங்களை அழித்து தயாரிக்கும் மரம், காகிதம், மணல் போன்ற பொருட்கள் தயாரிப்பு தென் அமெரிக்க நாடுகளுக்கும், மற்ற பொருட்களின் தயாரிப்பு சீனாவிற்கும், சாஃப்ட்வேர் தயாரிப்பு இந்தியாவிற்கும் ஓரளவிற்கு முழுமையாகவே அமெரிக்காவை விட்டு நீங்கி சென்றது. இப்படி இருபதாம் நூற்றாண்டின் முடிவில் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய நுகர்வு நாடாக உருவானது. உலகின் எந்த நாட்டில் எந்த பொருள் தயாரானாலும் அதை அமெரிக்க சந்தையில் விற்றால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற நிலை உருவானது.

இப்படி 50, 60 ஆண்டுகளாக ஏறுமுகத்திலேயே சென்று கொண்டிருந்த அமெரிக்கா இறங்குமுகத்தில் எப்படி சென்றது? உண்மையில் இறங்குமுகத்தில் செல்கிறதா? இல்லை அது ஒரு மாயத் தோற்றமா? அப்படி உண்மையில் சென்றால் அதற்கான காரணம் என்ன? ஒருவேளை அமெரிக்கா அழிவின் பாதையில் சென்றால் மற்ற உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் நிலை என்ன? இதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

17 Comments:

senthil said...

மிகச் சிறந்த பதிவு. குறிப்பாக, 'நிக்சன் ஷாக்' புதிய செய்தி...
வாழ்த்துக்கள்

Robin said...

Good post!

Raja said...

good article but the info's are not detailed (nicson shock etc).can u pls add/explain
thanks
raja

ராஜ நடராஜன் said...

Good one!Keep going!

ராஜ நடராஜன் said...

வேறு ஒரு தளத்திற்கு போட்ட கருத்தின் சாரல் இங்கே!

அமெரிக்கா சார்ந்த பொருளாதாரம் மாறுவதற்கு ஈரோ மாற்றாக வந்தது.இப்பொழுது ஐரோப்பியாவும் கடன்,இன்ன பிற பிரச்சினைகளில் சுழல்கிறது.பெட்ரோலியப் பொருளாதாரத்தை மாற்ற சதாம் உசேன் முயன்றார்.அமெரிக்கா சதாமையே முடித்து விட்டது.

அமெரிக்காவின் வல்லமை பொருளாதாரம் மட்டுமல்ல.மானுட சக்தியும் கூட.இதனை ரிட்டையர்டான ஜார்ஜ் புஷ் ஒரு கூட்டத்தில் சொன்னார்.உண்மையும் அதுவும் கூட.பொருளாதாரம் வெறும் காகிதக் கட்டுக்கள் அல்ல.மனிதனின் மூளை.

ஒரு வேளை நிலவிலோ,செவ்வாய் கிரகத்திலோ நீர் வளமிருந்து மனிதன் வாழமுடியும்ங்கிற நிலை வரும் போது அண்ணன் உட்கார்ந்த திண்ணை காலின்னு யாராவது புதுதாக உட்காரலாம்:)

முதலாவதாக அமெரிக்கா திருந்த அல்லது திருத்த வேண்டியது இரட்டை நிலைக் கொள்கை.லிபியாக்காரன் துப்பாக்கி தூக்கினால் ஆயுதப்புரட்சி.அதையே விடுதலைப்புலிகள் செய்தால் டெரரிஸம்.எகிப்தியனும்,டுனிசியனும் போராடினால் சுதந்திர ஆதரவு.அதுவே பஹ்ரைன்காரனும்,ஏமனியும் போராடினால் சவுதிக்காரனை டாங்கி அனுப்ப ஆதரவு.இந்தியா ஜனநாயகநாடு.பாகிஸ்தான் சர்வாதிகார நாடு.தேவை இந்திரா காந்தியல்ல...ஜியா உல் ஹக் மட்டுமே.

வலுவான,நியாயமான,நீதியான,பக்கச்சார்பற்ற ஐ.நா இயங்கும் வரை இப்பொழுதுள்ள நிலையை நீங்களும் நானும்,இன்னுமொரு தலைமுறையும் சந்தித்தே தீரவேண்டும்.

SathyaPriyan said...

//
senthil said...
மிகச் சிறந்த பதிவு. குறிப்பாக, 'நிக்சன் ஷாக்' புதிய செய்தி...
வாழ்த்துக்கள்

Robin said...
Good post!
//
வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி senthil மற்றும் Robin. தொடர்ந்து வந்து அடுத்த பகுதிக்கும் உங்கள் ஆதரவினை தெரிவியுங்கள்.

SathyaPriyan said...

//
Raja said...
good article but the info's are not detailed (nicson shock etc).can u pls add/explain
thanks
raja
//
இதை விளக்குவதற்கு தனியாக ஒரு பதிவே போடலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன இதில். ஆனால் இங்கேயே சிறிது சுருக்கமாக விளக்க முயற்சி செய்கிறேன்.

ஒரு நாட்டின் பண மதிப்பு என்பது அந்த நாட்டின் பொக்கிஷத்தில் இருக்கும் தங்கத்தின் மதிப்பை கொண்டே நிர்ணயம் செய்யப்படும்.

அதாவது இந்திய ரூபாயின் 1 ரூபாய் கொண்டு எவ்வளவு தங்கம் வாங்க முடியுமோ அதே இந்திய ரூபாயின் மதிப்பு.

அதே அளவுகோலின் அடிப்படையிலேயே இந்திய ரூபாயின் அமெரிக்க டாலருக்கு ஈடான மதிப்பும் நிர்ணயம் செய்யப்படும்.

அதாவது இந்திய ரூபாயின் 1 ரூபாய் கொண்டு 1 கிராம் தங்கம் வாங்கலாம் என்றால், அமெரிக்க டாலரின் 1 டாலர் கொண்டு 5 கிராம் தங்கம் வாங்கலாம் என்றால், 1 அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 5 ரூபாய்.

இது சுருக்கமான விளக்கம். ஆனால் உண்மையில் இந்த நிர்ணயம் செய்வதற்கு பல அதிக காரணிகளும் இருக்கின்றன.

இப்படி தங்கத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யாமல் இந்திய அரசாங்கம் தனது ரூபாயின் மதிப்பு 10 டாலர் என்றோ (தனது பணத்தை உயர்த்தி மதிப்பீடு செய்வது) தனது ரூபாயின் மதிப்பு 0.1 டாலர் என்றோ (தனது பணத்தை குறைத்து மதிப்பீடு செய்வது) செய்ய இயலும். அது அரசாங்கத்தின் நிலை, நாட்டின் பொருளாதாரம், நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மதிப்பு போன்றவற்றினை கொண்டு மாறுபடும்.

தனது நாட்டின் பணத்தை குறைத்து மதிப்பிட்டால் ஒன்றும் பாதகம் இல்லை. ஆனால் வேண்டுமென்றே தனது நாட்டின் பணத்தை உயர்த்தி மதிப்பிட்டால் அதை மற்ற நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் அமெரிக்காவின் விஷயத்தில் அது தான் நடந்தது. நிக்ஸன் தனது நாட்டின் பணத்தை உயர்த்தி மதிப்பிட்டார். உலக நாடுகள் அதை அங்கீகரிக்க வில்லை என்றால் அவர்களின் அன்னியச் செலாவணியில் இருக்கும் டாலர்களின் மதிப்பு குறைந்துவிடும் என்ற அச்சத்தால் அதை அங்கீகரித்தன. இன்றும் அங்கீகரித்துக் கொண்டே இருக்கின்றன.

SathyaPriyan said...

//ராஜ நடராஜன் said...
Good one!Keep going!
//

வருகைக்கும் தங்களின் விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ராஜ நடராஜன். இரண்டாம் பகுதியில் இதை பற்றித்தான் சற்றி விரிவாக கூற இருக்கிறேன். அதையும் படித்து தங்களின் கருத்தை தெரிவியுங்கள்.

வவ்வால் said...

சத்யன்,

சொல்வதற்கு மன்னிக்கவும், பெரும்பாலும் பிழையான தகவல்கள்,இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்து ஆதாரப்பூர்வமாக சரியான தகவல்கள்,அளிக்கலாம்.

SathyaPriyan said...

//
வவ்வால் said...
சத்யன்,

சொல்வதற்கு மன்னிக்கவும், பெரும்பாலும் பிழையான தகவல்கள்,இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்து ஆதாரப்பூர்வமாக சரியான தகவல்கள்,அளிக்கலாம்.
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வவ்வால். இதில் மன்னிக்க என்ன இருக்கிறது. உங்களுக்கு நன்றி தான் கூற வேண்டும்.

எங்கே தவறுகள் இருக்கிறது என்று தெரியப் படுத்தினால் திருத்தி விடுகிறேன். தவறான தகவல்கள் தவறான கண்ணோட்டத்தை கொடுக்கும்.

Raja said...

thanks sathyapriyan for the explanation

Raja said...

thanks sathya

Raja said...

thanks sathyapriyan for the explanation

வவ்வால் said...

சத்யன்,அ

//இரண்டாம் உலகப் போர் நடக்கும் பொழுதே அமெரிக்கா புத்திசாலித்தனமாக ஒரு சகுனி வேலையை செய்தது. ஜெர்மனி, இத்தாலி தவிர்த்த மற்ற ஐரோப்பிய நாடுகளிடம் பேசி அவர்களிடம் இருந்த தங்கத்தை பாதுகாப்பதாக சொல்லி அவற்றை தன்னிடம் வைத்துக் கொண்டது. அந்த தங்கத்தினை கொண்டு அமெரிக்கா பல தொழிற்சாலைகளை உறுவாக்கிக் கொண்டது.

இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்த நிலையில், அமெரிக்க இராணுவ பலத்தின் மீது கொண்ட அச்சத்தால் ஐரோப்பிய நாடுகள் தங்கத்தை மீண்டும் ஒப்படைக்க சொல்ல அஞ்சின.//

இரண்டாம் உலகப்போருக்கு முன்னரே இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிடன் போன்ற நாடுகள் தங்க நிர்ணய நாணயத்தில் இருந்து பேப்பர் கரன்சிக்கு மாறி விட்டார்கள். அதாவது நாணயத்துக்கும், தங்க மதிப்புக்கும் சம்பந்தமில்லை.

இந்நிலையில் 2ஆம் உலக யுத்தம் வரவே, அப்போது அமெரிக்கா ஆரம்பத்தில் பங்கெடுக்கவே இல்லை. மற்ற ஐரோப்பிய்ய நாடுகளுக்கு ஆயுதம், மருந்து, உணவு எல்லாம் தேவைப்பட்டது,அமைதியா இருந்த அமெரிக்காவிடம் கேட்டனர்.

அமெரிக்காவோ உங்க கரன்சி பேப்பர், எங்களது கோல்ட் , எனவே நீங்க , காசா கொடுக்காம தங்கமாக கொடுங்க,மேலும் ஒவ்வொரு தடவையும் பொருள் வாங்கும் போதும் தங்கத்த தூக்கிட்டு அலைய வேண்டாம் இப்போவே கொஞ்சம் கூடுதலாக தங்கம் கொடுத்து டாலர் வாங்கி வச்சுக்கோங்க, அதை செலவு செய்யலைனா எப்போ வேண்டுமானாலும் எங்க கிட்டே கொடுத்து தங்கமா வாங்கிகலாம் சொன்னது. இப்படித்தான் அமெரிக்க டாலர் சர்வதேச செலவாணியானது.

பொருளாதாரக் காரணங்களுக்காகவே அமெரிக்கா ரொம்ப காலம் போரில் கலந்துக்கொள்ளாமல் இருந்துச்சு. எல்லாம் அடிச்சுக்கட்டும், நிறைய ஆயுதம் விற்பனை ஆகும் என்ற கொள்கை.பின்னர் பியர்ல் ஹார்பர் தாக்குதல் எல்லாம் அமெரிக்காவ தீவிரமாக இறங்க வைத்தது. ஜப்பானிய மொழிப்பெயர்ப்பின் தவறே , அமெரிக்காவை போரில் இறக்கியது.

//அமெரிக்காவிற்கு வியட்னாம் போர் என்ற பெயரில் வந்தது சனி. சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை குடித்து ஏப்பம் விட்டது அந்த போர். போர் முடிந்த நிலையில் அமெரிக்கா வசம் வெறும் 10 பில்லியன் டாலர்கள் தங்கமே இருந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு பெருமளவில் குறைந்தது.
அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த நிக்ஸன் தங்கத்தின் அடிப்படையில் இருந்த டாலரின் மதிப்பினை மாற்றம் செய்து டாலருக்கு பொய்யான ஒரு மதிப்பினை அளித்தார். இதை உலக நாடுகள் எதிர்பார்க்கவே இல்லை. இதை நிக்ஸன் ஷாக் என்றே அனைவரும் கூறுகிறார்கள். //

வியட் நாம் போரில் அவ்வளவு செலவு ஆகவில்லை. நிக்சன் ஷாக் கொடுக்க காரணம் அதுவல்ல. அமெரிக்கா அது வரைக்கும் தங்க நிர்ணய நாணய நாடாகவே இருந்தது. எனவே பல நாடுகள் 2 ஆம் உலகபோரில் வாங்கிய டாலர்களை எல்லாம் தங்கம் ஆக்கி கொண்டிருந்தன. போருடன் சேர்ந்து இது ஒரு கூடுதல் சுமை , எனவே இனிமே டாலருக்கு பதில் தங்கம் இல்லைனு சொல்லிட்டார் நிக்சன். அமெரிக்கா தான் கடைசி நாடாக முழுக்க பேப்பர் கரன்சி நாடானது.

//அதே நேரத்தில் அமெரிக்காவின் டாலர் மதிப்பினை உயர்த்தியே வைக்க நியூயார்க் மெர்கன்டைல் மூலமாகவே எண்ணை வர்த்தகம் நடக்குமாறு சட்டங்கள் எழுப்பப்பட்டன. வல்லரசான அமெரிக்காவின் இந்த செயலுக்கு எதிராக செயல்பட ஒருவருக்கும் துணிவில்லை. அதாவது இந்தியா சவுதியிடம் இருந்து எண்ணை வாங்க வேண்டும் என்றால் இந்திய ரூபாயிலோ அல்லது சவுதி ரியாலிலோ வாங்க முடியாது. அமெரிக்க டாலர் வேண்டும். ஆக எண்ணை வளம் இல்லாத அனைத்து உலக நாடுகளும் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க தொடங்கினர். அனைத்து நாடுகளின் அன்னியச் செலாவணியில் பெரும் பகுதி அமெரிக்க டாலர்களிலேயே இருந்தது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்தே இருந்தது. //

இதுவும் சரியல்ல, எங்க வேண்டுமானாலும் எண்ணை வாங்கலாமே.இப்போ யு.கே எண்ணை வாங்க டாலர் கொடுக்க வேண்டாம் , அதனை அந்த நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன.

இதனை ஃபுல்லி கன்வெர்டிபில், பார்ஷியல்லி கன்வெர்டிபில் கரன்சி என்பார்கள்.

உ.ம் அமெரிக்க,ஐரோப்பிய ஈரோ, பிரிட்டன் பவுண்ட் எல்லாம் ஃபுல்லி கன்வெர்டிபில், இந்திய ரூ பார்ஷியல்லி கன்வெர்டிபில்.

அரபு நாடுகள் டாலரை விரும்பும் ரகசியம் எல்லாம் பெரிய அரசியல்.

SathyaPriyan said...

முதல் தகவல் பிழையை சுட்டிக்காட்டி சரி செய்தமைக்கு நன்றிகள் பல. நான் தகவல்கள் எடுத்த தளங்களில் நான் குறிப்பிட்டபடியே இருந்தன. ஆனால் இப்பொழுது அதை சரி பார்த்து விட்டேன். தகவல் பிழைகளுக்கு எனது வருத்தங்கள்.

கடைசி இரண்டும் தகவல் பிழைகளாக என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. நான் குறிப்பிட்டது சரியென்றே நான் நினைக்கிறேன்.

//
இரண்டாம் உலகப்போருக்கு முன்னரே இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிடன் போன்ற நாடுகள் தங்க நிர்ணய நாணயத்தில் இருந்து பேப்பர் கரன்சிக்கு மாறி விட்டார்கள். அதாவது நாணயத்துக்கும், தங்க மதிப்புக்கும் சம்பந்தமில்லை.
//
இல்லை அது ப்ரெட்டன் வுட்ஸிற்கு முந்தைய நிலை. ப்ரெட்டன் வுட்ஸ் கையெழுத்தான உடன் அனைத்து நாடுகளும் தங்கத்தின் அடிப்படைக்கு மீண்டும் வந்தன. அமெரிக்க டாலரின் மீதுள்ள நம்பிக்கையே அதற்கு காரணம். அமெரிக்கவும் தனது டாலரை தங்கத்திற்கு எதிராக சிறிது சரி செய்தது.

//
வியட் நாம் போரில் அவ்வளவு செலவு ஆகவில்லை. நிக்சன் ஷாக் கொடுக்க காரணம் அதுவல்ல. அமெரிக்கா அது வரைக்கும் தங்க நிர்ணய நாணய நாடாகவே இருந்தது. எனவே பல நாடுகள் 2 ஆம் உலகபோரில் வாங்கிய டாலர்களை எல்லாம் தங்கம் ஆக்கி கொண்டிருந்தன. போருடன் சேர்ந்து இது ஒரு கூடுதல் சுமை , எனவே இனிமே டாலருக்கு பதில் தங்கம் இல்லைனு சொல்லிட்டார் நிக்சன். அமெரிக்கா தான் கடைசி நாடாக முழுக்க பேப்பர் கரன்சி நாடானது.
//
வியட்னாம் போருக்கு சுமார் 140 பில்லியன் டாலர்கள் செலவானது. ஆனால் அதனால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் போன்றவற்றை கணக்கிடும் பொழுது தொகை சுமார் 500 பில்லியன் டாலர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள்.

உதாரணத்திற்கு ஈராக் போரினால் இதுவரை சுமார் 1 ட்ரில்லியன் டாலர்கள் செலவாகி இருக்கிறது. ஆனால் பொருளாதார நஷ்டங்களை கூட்டி பார்த்தால் பல ட்ரில்லியன் டாலர்கள் செலவாகவே அது தெரியும். அதன் உண்மை தொகை வெளிவர இன்னும் 10 ஆண்டுகளாவது ஆகும்.

மேலும் நிக்ஸன் ஷாக் கொடுக்க வியட்னாம் போர்தான் வலுவான காரணம். வியட்நாம் போரினாலேயே அமெரிக்காவிற்கு கடும் தங்க இழப்பு நேர்ந்தது. ஐரோப்பிய நாடுகள் ப்ரெட்டன் வுட்ஸிலிருந்து விலக தொடங்கினர். அதனால் டாலர் பெருமளவில் சரிந்தது.

//
இதுவும் சரியல்ல, எங்க வேண்டுமானாலும் எண்ணை வாங்கலாமே.இப்போ யு.கே எண்ணை வாங்க டாலர் கொடுக்க வேண்டாம் , அதனை அந்த நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன.
//
இல்லை அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் OPEC நாடுகளால் அப்படி செய்ய முடியாது. அமெரிக்கா OPEC நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி அவை எண்ணையை டாலருக்கு தான் விற்க முடியும். 1971 ஆம் ஆண்டிலேயே அதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

//
அரபு நாடுகள் டாலரை விரும்பும் ரகசியம் எல்லாம் பெரிய அரசியல்.
//
முழுதும் உடன் படுகிறேன்.

SathyaPriyan said...

வவ்வால், உங்களின் தகவல்கள் அடிப்படையில் மீண்டும் அவற்றினை உறுதிசெய்து கொண்டு பதிவினை சிறிது திருத்தி அமைத்துள்ளேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து வந்து இவ்வாறு ஊக்கப்படுத்துங்கள்.

அணில் said...

விரிவான அலசல்களுடன் அசத்தி விட்டீர்கள்.
ராஜ நடராஜன், வவ்வால் பின்னூட்டம் கூடுதல் அழகு சேர்க்கிறது. நிக்சன் ஷாக் அமெரிக்க பொருளாதாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனைதான்.
உங்களது இப்பதிவை எனது பதிவில் இணைப்பு அளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். தயவுசெய்து எழுதுவதை நிறுத்த வேண்டாம். அவ்வப்போதாவது எழுதுங்கள்.