பேரூந்து எனக்கு அறிமுகமானது சிறிய வயதிலேயே என்றாலும் அது எனது வாழ்வில் ஒரு அங்கமானது நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த உடன் தான். திருச்சியில் உடையாண்பட்டி என்ற கிராமத்தில் தான் நான் வசித்து வந்தேன். அது K.K. நகரிலிருந்து ஓலையூர் செல்லும் வழியில் இருக்கிறது. அங்கிருந்து நான் படித்த E. R. பள்ளி சுமார் 22 கிலோ மீட்டர்கள் தொலைவு. பேரூந்தில் தான் செல்ல வேண்டும். சுமார் ஒரு மணி நேர பயணம். அத்தகைய பயணங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் ஒரு பதிவில் அடக்கி விட முடியாது.
நான் தினமும் செல்லும் 117 எண் தனியார் பேரூந்து பல பள்ளிகளின் வழி செல்லும் என்பதால் எங்கள் கிராமத்தில் இருந்து எனது நண்பர்கள் பலரும் அந்த பேரூந்தில் தான் வருவார்கள். நாங்களும் முன் தின இரவின் கிரிக்கெட் விளையாட்டை பற்றி பேசிக்கொண்டு போவோம். பல நேரங்களில் சினிமா பற்றியும் பேசுவோம். சில நேரங்களில் எங்களுடன் வரும் 11 ஆவது, 12 ஆவது படிக்கும் அண்ணன்களின் காதலுக்கு பேரூந்தின் முன்னால் நின்றுகொண்டிருக்கும் அக்காக்களிடம் தூது செல்வதும் உண்டு. தூது என்றால் பெரிதாக வேறு ஒன்றும் இல்லை. "அக்கா! அந்த அண்ணன் கூப்பிடறாரு.", என்பதுடன் சரி. இன்னும் சில நேரங்களில் கடிதப் பரிமாற்றங்களும் நடக்கும். இதை எல்லாம் அன்று மாலை விளையாடும் பொழுது 'கிசுகிசு' வாக தூது சென்றவன் கூற மற்ற அனைவரும் தெரிந்து கொள்வோம்.
பேரூந்தில் தினமும் பயணம் செய்யத் தொடங்கிய அந்நாட்களில் எங்களுக்கெல்லாம் ஹீரோ என்றால் அது பேரூந்து ஓட்டுனர்கள் தான். அவர்களுடன் பேசுவதும், எவ்வளவு இடம் காலியாக இருந்தாலும் பேனட்டில் அமர்ந்து பயணம் செய்வதும், ஹாரன் அடிப்பதும் மிகப் பெரிய சாகச செயல்கள். ஒரு நேரத்தில் ஒரு பேரூந்திற்கு மேல் செல்ல முடியாத அன்றைய பாலக்கரை, உறையூர் சாலைகளில் வேறு ஒரு பேரூந்தை எங்கள் வண்டி முந்திவிட்டால் போதும் உலகையே வெற்றி கொண்ட மகிழ்ச்சி எங்களுக்கு வந்து விடும். அதே நேரத்தில் எங்கள் வண்டியை வேறு பேரூந்துகள் முந்தி விட்டால் அவ்வளவு தான். ஓட்டுனரை அந்த பேரூந்தை மீண்டும் முந்தும் வரை நாங்கள் விட மாட்டோம். அவ்வாறு முந்தும் வரை எந்த நிறுத்தங்களிலும் நிற்காமல் செல்ல சொல்லுவோம். ஆனாலும் அவர் அவ்வாறு செய்யாமல் அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்துவது எங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.
ஆனால் உண்மையில் அந்த பேரூந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் மனிதநேயம் மிக்கவர்கள்.
பாய்! இது செட்டியாரோட மூத்த பொண்ணுக்கு ஆறாவது மாசம். பெரிய ஆஸ்பத்திரிக்கு போகனும்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அதுனாலே வண்டிய அவங்க வீட்டு பக்கமா விடுங்க. திரும்பி வரும் போது ஒரு மணி டிரிப்லே வருவாங்க. கதிர் கிட்டயும் சொல்லிடுங்க.
வாத்தியார் ஐயா! நேத்திக்கு நீங்க உங்க பைய மறந்து விட்டுட்டு போய்ட்டீங்க போல. அதுலே டியூஷன் பணம் இருந்துதாமே. அதான் ராத்திரியே கோபால் கிட்ட குடுத்து வுட்டேன்.
அண்ணே! நம்ம தலையாரி ரெண்டு மூட்ட உமி எடுத்து வந்திருக்காரு. கொஞ்சம் மில்லோரமா வண்டிய நிப்பாட்டுங்க. பாவம் அவராலே இவ்வளோ தூரம் எடுத்துகிட்டு வர முடியாது.
மேலே குறிப்பிட்டுள்ள உரையாடல்கள் எல்லாம் 50 - 60 ஆண்டுகளுக்கு முன்னர் கேட்கப்பட்டவை அல்ல. மனிதம் செத்து விட்டாத ஒரு கிராமத்தில் 15 - 20 ஆண்டுகளுக்கு முன்னர் என்னால் கேட்கப்பட்டவை.
ஒரு விடுமுறை நாளில் அந்த பேரூந்து எங்கள் வீட்டின் அருகில் பழுதாகிவிட, பழுது பார்க்கும் ஓட்டுனருக்கும் நடத்துனர்கள் இருவருக்கும் எனது நண்பன் ஒருவன் அவனது வீட்டிலிருந்து இளநீர், மோர் அளித்து உதவி செய்தான். அதற்கு பிரதியுதவியாக அவர்கள் அவனை மட்டும் பேரூந்தில் ஏற்றி ஒரு 10 நிமிடங்கள் சுற்றி வரலாம் என்று அழைத்தார்கள். ஆனால் அவனோ அதை வேண்டாம் என்று சொல்லி, ஒரு கட்டு பயணச்சீட்டை காட்டி அதை தருமாறு வேண்டினான். ஆனால் அவர்கள் சிரித்துக் கொண்டே அதை தர மறுத்து விட்டார்கள். அது ஏன் என்பது எனது அறிவிற்கு எட்ட சில ஆண்டுகள் ஆனது. ஆனாலும் அன்று அவர்கள் அதை கொடுக்க மறுத்ததற்காக மிகவும் கோபம் கொண்டான். அவனது கோபத்தை போக்க இஸ்மாயில் அண்ணன் அவனை சமாதானம் செய்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
ஆண்டிற்கு ஒருமுறை பேரூந்து FC க்கு சென்று விட்டு வரும் பொழுது புத்தம் புதிதாக இருக்கும். ஆயுத பூஜை அன்றும் பேரூந்து சந்தனம் எல்லாம் பூசப்பட்டு அலங்கரிக்கப் பட்டு இருக்கும். அந்த இருநாட்களிலும் எங்களுக்கு சாக்லேட் தருவார்கள்.
அப்பொழுது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேரூந்தில் பயணம் செய்ய இலவச கடவுச்சீட்டு அளித்தது. அதனை பெறுவதற்கு நான் விண்ணப்பத்தில் எனது தந்தையின் கையொப்பத்தை பெற முயன்றேன். அதற்கு எனது தந்தை "அது ஏழை மாணவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகை. பேரூந்து பயணத்திற்கு பணம் செலவு செய்ய முடியாத நிலையில் நாம் இல்லை. நமக்கு அது வேண்டாம்." என்று கூறி விட்டார். அதனால் தொடர்ந்து தனியார் பேரூந்திலேயே பயணிக்க தொடங்கினேன்.
ஆனாலும் சில நேரங்களில் நண்பர்கள் பயணம் செய்வதால் நானும் அரசுப் பேரூந்தில் பயணம் செய்ய நேரிடும் பொழுது, இலவச பயண கடவுச்சீட்டை பயன் படுத்தும் எனது நண்பர்களை அரசு பேரூந்து நடத்துனர்கள் சிலர் மிகவும் கேவலமாக நடத்துவதை கண்டிருக்கிறேன். பேரூந்தில் இடம் இருந்தாலும் அவர்களை அமர அனுமதிக்க மாட்டார்கள். ஏதோ இவர்கள் சொந்த பணத்தில் அவர்கள் பயணம் செய்வது போல நினைத்து பல விதங்களில் அவமதிப்பார்கள்.
சிறிது வளர்ந்து மீசை முளைக்க தொடங்கிய உடன் படிக்கட்டில் தொங்குவது, ஓடும் வண்டியில் ஏறுவது, இறங்குவது என்று எங்கள் சாகசங்கள் வேறு பரினாமத்திற்கு சென்றன. இன்று நினைத்து பார்க்கும் பொழுது அதன் அபத்தங்கள் புறிகின்றன. ஆனால் அந்த வயதில் அவை அனைத்தும் சாகசங்களாக கருதப்பட்டன.
பள்ளியின் இறுதியாண்டில் பாடச்சுமைகள் அதிகமானதாலும், பல டியூஷன் வகுப்புகளுக்கு செல்ல நேர்ந்ததாலும் எனது தந்தை எனக்கு ஒரு TVS Champ வாகனம் வாங்கி கொடுத்தார். ஆனால் நானோ அந்த டியூஷன் வகுப்புகளுக்கு செல்லாமல் டியூஷன் ஃபீஸை மட்டும் எனது தந்தையிடம் பெற்றுக்கொண்டு அந்த வண்டியில் ஊர் சுற்ற தொடங்கினேன். இதனால் எனது பேரூந்து பயணங்கள் வெகுவாக குறைந்தன. எனது மதிப்பெண்களும் தான்.
பள்ளி முடிந்த பின்னர் கல்லூரி வாழ்விலும் சரி அதன் பின்னர் பெங்களூரில் அலுவலகத்தில் சேர்ந்த உடனும் சரி பேரூந்துடனான எனது தொடர்பு இற்றுவிடவில்லை. அவ்வளவு ஏன்?, இதோ இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் அலுவலகத்திற்கு தினமும் பேரூந்தில் தான் பயணிக்கிறேன். ஆனாலும் நன்றாக உடையனிந்து, நுணி நாக்கு ஆங்கிலம் பேசி, வரிசையில் நின்று, பேரூந்தில் ஏறிய உடன் ஓட்டுனருக்கு அந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகளை சொல்லி, இறங்கும் முன் நன்றி சொல்லி பயணிக்கும் இந்த சொகுசு பேரூந்து பயணத்தில்; பின்னால் பொதி மூட்டை போல புத்தகங்களும், கையில் சாப்பாட்டு கூடையும், எண்ணை வழிய படிய வாரிய தலையும், உடுத்தும் போது தும்பை பூ நிறத்தில் இருந்து உடுத்திய அரை மணி நேரத்தில் பழுப்பு நிறத்திற்கு மாறும் மாயாஜால சட்டை அணிந்து கொண்டு, சக பயணிகளிடம் திட்டும் சில சமயம் அடி கூட வாங்கி இன்னும் பல சாகசங்கள் செய்து மேற்கொண்ட அன்றைய பயணங்களின் சுகம் எங்கே என்று தேடுகிறேன்............. ஏரியல் சோப்பு விளம்பரம் போல "தேடினாலும் கிடைக்காது" என்கிறது அது.