சென்ற மாதம் மட்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆறு ரயில் விபத்துகள் நடந்திருக்கின்றன. சுமார் இருபது பேர் இறந்திருக்கிறார்கள். நூறு பேர்களுக்கும் மேல் காயமடைந்திருக்கிறார்கள். ரயில்வே அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.
நேற்று பூனாவில் உள்ள ஒரு ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பில் சுமார் இருபது பேர் இறந்து விட்டார்கள். அறுபது பேர் காயமடைந்திருக்கிறார்கள். யூதர்களை குறிவைத்து நடந்த தாக்குதல் என்று தெரிகிறது. மனித உயிரின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
அடுத்த மாதம் தமிழகத்தின் புதிய தலைமை செயலகம் திறக்கப்படும் என்று தெரிகிறது. சென்னையை பற்றி அதிகம் தெரியாததால் இதன் அமைப்பை பற்றி கூற நான் தகுதியானவன் கிடையாது. இது தேவை என்று திமுகவினரும்; தேவை இல்லை என்று அதிமுகவினரும் வழக்கம் போலவே கூவிக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்த தேர்தலில் ஆட்சி மாறினால் இந்த கட்டிடத்தில் இருந்து அரசு செயல் படாது என்றுதான் நான் நினைக்கிறேன். அதுதானே ஜனநாயகம்.
எனக்கு கோவாவை விட தமிழ் படம் மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் படத்தில் இவர்கள் அவர்கள் என்றில்லாமல் அனைவரையும் சகட்டுமேனிக்கு ஓடியிருக்கிறார்கள். கிளைமேக்ஸ் சற்று யோசித்திருக்கலாம். அது மட்டும் எனக்கு பிடிக்கவில்லை. கோவாவின் டிரைலர் அமர்க்களமாக இருந்தது. ஆனால் படம் சொதப்பல். இரண்டாம் பகுதியில் உட்கார முடியவில்லை. பாடல்களும் சுமார். பார்ப்போம் எந்த குதிரை ஜெயிக்கும் என்று.
கோவா என்றாலே "தில் சாத்தா ஹை" நினைவிற்கு வருவதை என்னால் தடுக்க முடியவில்லை. முதல் பாதியில் வரும் கோவா காட்சிகள் அனைத்தும், குறிப்பாக சைஃப் அலி கான் வரும் காட்சிகள் அனைத்தும் அருமையாக கொரியோகிராஃப் செய்யப்பட்டிருக்கும். அட்டகாசமான படம். ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு விதமான அனுபவம் தரும்.
அனைவருக்கும் எனது காதலர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.