
இன்று மதியம் இரண்டு மணி இருக்கும். அலுவலகத்தில் ஒரு அவசர தேவைக்காக ஒரு மூட்டை ஆணிகளை புடுங்கிக் கொண்டிருந்தேன். இரு வாரங்களாகவே அலுவலகத்தில் பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்பொழுது திடீரென்று கட்டிடமே ஆடியது. ஒரே குலுக்கல். முதலில் நான் ஏதோ பெரிய பொருளை நகர்த்துகிறார்கள் என்று நினைத்தேன். எழுந்து பார்த்த பொழுது தான் தெரிந்தது அலுவலகமே எழுந்து நின்று கொண்டிருந்தது. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். உடனே அனைவருக்கும் தெரிந்து விட்டது இது நில நடுக்கம் என்று.
வாழ்வில் இது வரை நான் நில நடுக்கத்தை அனுபவித்ததே இல்லை. உடனே அனைவரும் ஆறாவது மாடியில் இருந்து படி வழியே கீழே இறங்கி வெளியில் வந்தோம்.
அன்று என் மனைவி அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தார். அதனால் அவரும், எனது ஒரு வயது மகனும், எனது மாமியாரும் மற்றும் மாமனாரும், எங்களது செல்ல நாய் மாண்டியும் வீட்டில் இருந்தனர். அவர்களது நிலையை அறிந்து கொள்ள அவர்களுக்கு தொலை பேச முயன்றேன். ஆனால் முடியவில்லை. நெட்வொர்க் ஜாம் ஆகி விட்டிருந்தது.
சுமார் 15 நிமிடங்களில் அவசர உதவி வந்து அலுவலகம் முழுவதையும் சரி பார்த்து ஒன்றும் சேதம் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் எங்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
உள்ளே சென்று அவர்களது நலத்தை மின்னஞ்சல் செய்து உறுதி செய்து கொண்ட பின்னர் தான் நிம்மதியாக இருந்தது. மொத்தத்தில் இது ஒரு புது அனுபவம்.