Wednesday, November 28, 2012

சில்லறை வர்த்தகம் - ஜாக்கி சேகருக்கு பதில்

நம்ம பதிவுலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் சில்லறை வர்த்தகம் குறித்து பதிவொன்றை எழுதியுள்ளார். ஒரு வாடிக்கையாளரின் பார்வையில் இருக்கும் அதனுடன் வரிக்கு வரி உடன்படுகிறேன். ஆனால் அதே நேரத்தில், இம்மாதிரியான முதலீடுகள் வாடிக்கயாளரை மட்டும் பாதிப்பதில்லை. அதனால் பல தரப்பில் இருந்து இதை நாம் பார்க்க கடமைபட்டுள்ளோம்.

பதிவினை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு ஜாக்கி சேகரின் பதிவை படித்து விடுங்கள்.

சுட்டி: http://www.jackiesekar.com/2012/11/blog-post_28.html

இனி நாம் பதிவுக்கு போகலாம்.

அன்பின் ஜாக்கி சேகர் அவர்களே,

உங்கள் பதிவினை படித்த உடன் பின்னூட்டம் இடலாம் என்று தான் முதலில் நினைத்து தட்டச்ச தொடங்கினேன். பின்னூட்டம் பெரிதானதால் தனிப் பதிவாக போட்டு விடலாம் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு.

முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். வாடிக்கையாளருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து நீங்கள் சொன்னது நூறு சதவிகித உண்மை. அதனுடன் வரிக்கு வரி ஒத்து போகிறேன். ஆனால் அதே நேரத்தில் மளிகை கடை காரர்களுக்கு பாதிப்பு இல்லை என்று சொல்வது உங்களுக்கு விவரம் தெரியாது என்பதையே காட்டுகிறது. உங்களை குற்றம் சொல்ல அதில் எதுவும் இல்லை.

வால்மார்ட் போன்ற நிறுவனங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கீழே என்னால் முடிந்த வரையில் விரிவாக சொல்ல முயற்சிக்கிறேன்.

1. லோக்கல் கடைகளுக்கு உடனடி ஆப்பு:

இதை பற்றி விரிவாக சொல்ல ஒன்றும் இல்லை. நீங்களே சொல்லி விட்டீர்கள் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன என்று. வீட்டிற்கே வந்து பொருட்களை சப்ளை செய்வது, மிக குறைந்த விலையில் பொருட்களை கொடுப்பது, பரிசு பொருட்கள் கொடுப்பது என்று ஜிகினா வேலைகள் பல செய்து போட்டியாளர்களுக்கு ஆப்படிப்பார்கள்.

அவர்கள் கொடுக்கும் குறைந்த விலை பொருட்கள் உங்களை வாழவைக்க இல்லை, உங்கள் பக்கத்து வீட்டு கடைக்காரரை அழிக்க என்ற உண்மை உங்களுக்கு தெரிந்தால் மகிழ்ச்சி. லோக்கல் கடைக்காரர்கள் அனைவரும் அழிந்த பின்னரும் இவர்கள் குறைந்த விலைக்கே பொருட்களை கொடுப்பார்களா? இல்லை விலையேற்றம் செய்வார்களா? என்பதை நீங்களே உங்களுக்குள் கேட்டு விடை சொல்லுங்கள்.

2. வால்மார்ட்டின் சப்ளையர்களுக்கு சிறிது காலம் கடந்து ஆப்பு:

உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் 100 பொருட்கள் மட்டுமே தயாரிக்கும் திறன் கொண்ட உற்பத்தியாளருக்கு ஒரு லட்சம் பொருட்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப் படும். அவரும் கடன் வாங்கி தொழிற்சாலையை விரிவு படுத்தி, பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி ஒரு லட்சம் பொருட்களை தயாரித்து விடுவார். தயாரித்து முடிந்ததும் முதல் ஆண்டு சொன்ன விலைக்கு வாங்கப் படும். அடுத்த ஆண்டு மிகவும் குறைந்த விலைக்கே பொருட்களை கேட்பார்கள். உற்பத்தியாளரும் ஓரளவு சமாளித்து குறைந்த விலைக்கு பொருட்களை கொடுப்பார். அதற்கு அடுத்த ஆண்டு இன்னும் குறைந்த விலைக்கு கேட்பார்கள். இப்படியே தொடர்ந்து ஒரு கட்டத்தில் உற்பத்தியாளருக்கு நஷ்டம் என்ற நிலையில் வந்து முடியும்.

உற்பத்தியாளர்களுக்கு வந்தது ஆப்பு. உற்பத்தியை அதிகரிக்க பல இன்வெஸ்ட்மென்டுகளை செய்திருப்பாளர்கள் அவர்கள். அதனால் தரத்தில் கை வைக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு வந்து விடும்.

3. வால்மார்ட்டில் வேலை செய்பவர்களுக்கு நிரந்தர ஆப்பு:

குறைந்த சம்பளத்தில் அதிக நேர வேலை, இன்ஸியூரன்ஸ் போன்ற பெனிஃபிட்ஸ் ஒன்றும் கிடையாது, 20 பேர் வேலை செய்ய வெண்டிய கடையில் 10 பேர் கூட வேலைக்கு இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நிரந்தர வேலையும் கிடையாது. பகுதி நேர வேலை மட்டுமே கிடைக்கும். வேலை செய்யும் போது ஏதெனும் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் நஷ்ட ஈடு ஒன்றும் கிடையாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

4. வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு நன்மை

வாடிகையாளர்களுக்கு நன்மை என்பது பணத்தில் மட்டுமே. வால்மார்ட் பொருட்களின் தரம் குறித்த மாற்று பார்வை இங்கே உண்டு. வால்மார்டுக்கென்றே தனியாக பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கூட இங்கே உண்டு. ஒரே பிரான்ட் பொருள் குறைந்த தரத்தில் வால்மார்ட்டுக்கும் நல்ல தரத்தில் மற்ற இடத்துக்கும் கொடுப்பார்கள். ஏனென்றால் வால்மார்ட் கொடுக்கும் குறைந்த விலைக்கு அப்படி தயாரித்து கொடுப்பதினால் மட்டுமே லாபம் சம்பாதிக்க இயலும் என்பதால்.

யோசித்து பாருங்கள் வேலை செய்பவர்களுக்கும், கஸ்டமர்களுக்கு உச்ச கட்ட பாதுகாப்பு இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இவ்வளவு கொடுமைகளை செய்யும் வால்மார்ட் இந்தியா போன்ற தேசத்துக்கு வந்தால் என்னென்ன செய்வார்கள்.

வால்மார்ட்டின் வேர்களை நம் மண்ணில் பதியவிட்டால் அது நமது நாட்டின் வாழ்வாதாரங்களை அசுர வேகத்தில் குடித்து முடித்து அழித்து விடும்.

யார் எக்கேடு கெட்டு போனால் என்ன, எனக்கு குறைந்த செலவில் பொருட்கள் கிடைத்தால் போதும் என்பவர்களுக்காக இதை நான் சொல்லவில்லை. 18 மணி நேர மின்வெட்டில் கூட கூடாங்குளம் வேண்டாம் என்று கூறி போராடிய மக்கள் போன்றவர்களுக்காக இதை சொல்கிறேன்.

ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டாலும், அரசு கூடாங்குள போராட்டத்தில் என்ன நிலை எடுத்ததோ, அதே நிலையை இதிலும் எடுக்கும். அரசுக்கு தேவையான சட்டங்கள் நிச்சயம் நாட்டில் வந்துவிடும். ஆனால் அதற்கு எதிரான நமது கருத்துக்களை பதிய வைத்தோமானால் நமது மனசாட்சிக்கு மட்டுமாவது நாம் உண்மையுள்ளவனாக இருக்க முடியும்.

பதிவினை தொடரந்து படித்தமைக்கு நன்றி. மாற்றுக் கருத்து இருப்பின் பின்னூட்டம் மூலம் தெரியப் படுத்துங்கள். தொடர்ந்து விவாதிப்போம்.

இவன்,
சத்யப்ரியன்

Tuesday, November 20, 2012

அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்

2008 நவம்பர் மாதம் 26 அன்று விதைத்த பலனை நான்கு ஆண்டுகள் கழித்து 2012 நவம்பர் 21 அன்று அறுவடை செய்தான் அஜ்மல் கசாப். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவனது தூக்கை உறுதி செய்ததை ஒட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7:30 மணிக்கு அவன் தூக்கிலிடப்பட்டான்.


மிகுந்த மன மகிழ்ச்சியுடன் இதை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், இனி இவ்வாறு மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க துர்சம்பவம் செய்தவனோடு மட்டும் இல்லாமல் அதற்கு உதவிய துரோகிகளுக்கும் இதே போல தண்டனை கிடைக்கும் என்று நம்புவோம்.

Wishing you many more happy returns of today.

Sunday, November 18, 2012

பொடிமாஸ் - 11/18/2012

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளை தவிர வேறு யாருக்கும் ஜாதியத்தை எதிர்க்கும் வக்கு கிடையாது என்பதை சமீபத்தில் நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. பிராமணாள் ஹோட்டலையும், ஸ்ப்ளென்டர் ஐயரையும், பாரதி ராஜா பிராமணர்களும் தமிழர்கள் தான் என்று கூறியதையும் எதிர்க்கும் வீரியம் உள்ள திராவிடக் கட்சிகளுக்கு தேவர் குரு பூஜை சம்பவத்தையும், தர்மபுரி சம்பவத்தையும் எதிர்க்க வீரியம் கிடையாது. பிராமணர்களை எதிர்த்து பக்கம் பக்கமாக பதிவுகளை எழுதுபவர்கள் இதை கண்டித்து ஒரு வரி கூட எழுதவில்லை. பிராமணர்களை பார்த்தாலே அவர்கள் யார் என்று தெரிந்துவிடும் என்பதால் அவர்களில் ஜாதியம் போற்றுபவர்களை கூட ஒரு வகையில் எளிதாக எதிர்கொண்டு விடலாம், ஆனால் ஜாதியம் போற்றும் இடைநிலை ஜாதி வெறியர்கள் தான் உண்மையில் ஆபத்தானவர்கள் என்பதை தலித்துகள் உணர வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் உத்தபுரத்தில் பிள்ளை சமூகத்தினர் தலித்துகள் மீது வன்கொடுமை செய்த போதும் இப்படித்தான் திராவிட கட்சிகள் கள்ள மௌனம் காத்தனர். பதிவுலக போராளிகளும் அப்படியே. அப்பொழுதும் அதை கண்டித்தது கம்யூனிஸ்ட்களே.

வலையுலக போராளிகளின் பச்சோந்தித் தனத்தை தோலுரித்த இச்சம்பவங்களுக்கு நன்றி.


கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக ட்விட்டினாலே பாய்ந்து வந்து கைது செய்து கடமையாற்றும் காவல் துறை, தனது அராஜக பேச்சால் பலரை தூண்டி, வன்முறை ஏற்படுத்தி, பல தலித்துகளின் வீடுகளை பொசுக்கி, அவர்களது உடைமைகளை திருட காரணமாக இருந்த காடுவெட்டி குரு போன்ற அரசியல் ரவுடிகள் அருகில் கூட செல்ல முடியாத நிலை கேவலமாக இருக்கிறது. ஜாதி வெறிபிடித்த காடுவெட்டிகள் காடுகளில் வாழும் மிருகங்களை விட கொடியவர்கள். இவர்களை போன்றவர்கள் அரசியல் தலைவர்களாக இருப்பது நமது துரதிருஷ்டம். திருமா போன்ற தலைவர்கள் கூட அரசியல் காரணங்களுக்காக இந்த வெறியாட்டங்களுக்கு பாமக மற்றும் வன்னிய சங்கம் காரணம் இல்லை என்று கூறுவது வருத்தமான விஷயம். நல்லவேளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் காரணம் என்று சொல்லாமல் விட்டார்களே, அதுவரை மகிழ்ச்சி.


பால் தாக்ரே இந்த வாரம் இறந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவருக்கு எனது அஞ்சலிகள். மற்றபடி அவரை தேசியவாதியாக சித்தரிப்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. He is anything but a nationalist. அவர் தென்மாநில மற்றும் வடமாநில மக்கள் மீது வெறுப்புகளையே அதிகம் மஹாராஷ்ட்டிர மாநில மக்கள் மனதில் விதைத்துள்ளார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. இம்மாதிரி அரசியல்கள் ஆபத்தானது. மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு போன்ற பிரச்சனைகள் உருவாக இம்மாதிரி அரசியல்வாதிகளே காரணம். இம்மாதிரி தலைவர்கள் எல்லாம் தலை தூக்கும் போதே நாம் நிராகரிக்க வேண்டும்.


ஆனால் அதே நேரத்தில் புதுவை ராம்ஜி என்பவர் எம். எஃப். ஹூஸைன் என்ற சிறந்த ஓவியர் இந்தியாவிலிருந்து விரட்டப்பட்டதற்கு பால் தாக்ரே தான் காரணம் என்று தனது பதிவில் கூறியுள்ளார். உண்மையில் அத்தகைய போராட்டத்தை எம். எஃப். ஹூஸைனுக்கு எதிராக நடத்தியதற்காக சிவ சேனைக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் வாழ தகுதி இல்லாதவர் எம். எஃப். ஹூஸைன் என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது.

கிழே உள்ளவை எம். எஃப். ஹுஸைன் படைத்த சர்ச்சையை கிளப்பிய சில ஓவியங்களின் தலைப்புகள்.

1. நிர்வாணமாக பார்வதி
2. நிர்வாணமாக துர்கை சிங்கத்துடன் கலவியில் ஈடுபடுவது
3. நிர்வாணமாக சரஸ்வதி
4. நிர்வாணமாக லக்ஷ்மி விநாயகருடன் கலவியில் ஈடுபடுவது
5. நிர்வாணமாக சீதை ராவணனுடன் கலவியில் ஈடுபடுவது

இதையெல்லாம் மேலோட்டமாக கலையுரிமை என்று எடுத்துக் கொள்ள முடியாது. நூறு கோடி மக்கள் உள்ள நாட்டில் சிறுபான்மையினரை அனுசரித்து செல்வது எப்படி பெரும்பான்மையினரின் கடமையோ அப்படித்தான் பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது சிறுபான்மையினரின் கடமை. சல்மான் ருஷ்டிக்கு ஃபத்வா விதித்ததை சரி என்று கூறியவர்கள் எல்லாம் எம். எஃப். ஹுஸைனுக்கு ஜால்ரா தட்டுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவும் ஒரு வகை பச்சோந்தித் தனமே.


துப்பாக்கி படம் நேற்று தான் பார்க்க முடிந்தது. இங்கே ஒரு தியேட்டரில் தான் இந்திய படங்கள் திரையிடுவார்கள். ஜப் தக் ஹைன் ஜான், மற்றும் சன் ஆஃப் சர்தார் இரண்டும் வெளிவந்த காரணத்தால் துப்பாக்கி வார இறுதியில் மட்டுமே திரையிட்டார்கள். அதனால் ஒரு வார காலம் எந்த விமர்சனத்தையுமே படிக்க வில்லை. விமர்சனம் எழுதுகிறேன் என்ற பெயரில் பலரும் படத்தின் முக்கிய காட்சிகளை எல்லாம் சொல்லி விடுகிறார்கள்.

படம் அட்டகாசமாக இருக்கிறது. கதை, திரைக்கதை, சண்டை காட்சிகள், வசனம், கேமரா, விஜய்யின் நடிப்பு என்று அனைத்தும் அட்டகாசம். விஜய்யின் படங்கள் தொடர்ச்சியாக நான்கு படங்கள் எனக்கு மிகவும் பிடித்தது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். படத்தை பற்றிய மற்றொரு முக்கிய செய்தி, நான் பார்த்த காட்சி ஹவுஸ்ஃபுல். அமெரிக்கா வந்ததிலிருந்து கடந்த ஏழு ஆண்டுகளில் சிவாஜி, எந்திரன், தசாவதாரம் தவிர்த்து மற்ற படங்கள் ஹவுஸ்ஃபுல் ஆனதை நான் பார்த்ததே இல்லை. இது மனதிற்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது.துப்பாக்கி நிச்சயம் இளைய தளபதியின் உச்சம்.

என்ன, நல்ல படத்திற்கு திருஷ்டி பொட்டு போல சில சர்ச்சைகள் தொடங்கி விட்டன. ஆனால் எனக்கு இந்த படத்திற்கு வந்த எதிர்ப்புகள் நியாயமானவையாகவே தெரிகின்றன. படத்தில் வில்லனின் அடியாட்களை வெளி நாட்டு தீவிரவாதிகள் என்று காட்டி இருந்தால் கூட இவ்வளவு எதிர்ப்புகள் வந்திருக்காது. உள் நாட்டு ஸ்லீப்பர் செல்கள் என்று காட்டியதால் தான் இவ்வளவு எதிர்ப்பு. அதுவும் ஒரு வகையில் நல்லது தான். பார்ப்போம் இனியாவது திரையுலகினரிடம் மாற்றம் வருகிறதா என்று.


இந்த தேங்க்ஸ் கிவிங் வார இறுதியில் நாங்கள் நான்கு நண்பர்கள் சந்திக்க இருக்கிறோம். நாங்கள் நான்கு பேரும் ஒரே நாள் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தோம். நாங்கள் நால்வருமே இப்பொழுது அந்த நிறுவனத்தில் இல்லை என்றாலும் எங்கள் நட்பு தொடர்கிறது. பத்து ஆண்டுகள் ஆன நிலையில் நாங்கள் மீண்டும் சந்திப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் ஒருவனை பார்த்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த வார இறுதியை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


அஹமதாபாத் டெஸ்ட் போட்டி எதிர்பார்த்தபடியே சென்று கொண்டிருக்கிறது. நான்கு நாட்கள் ஆன நிலையில், இன்னும் ஐந்து விக்கெட்டுகளை நாளை லன்சுக்கு முன்பு வீழ்த்தி விட்டால் நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம். அம்பெயரிங் எர்ரர்ஸ் அதிகம் இருந்தது தெளிவாக தெரிந்தது. DRS ஒப்புக் கொள்ளாதது BCCI யின் பிடிவாதத்தையே காட்டுகிறது. ஆனால் க்யூரேட்டர்ஸ் மீதான குற்றச்சாட்டு எதுவும் என்னிடம் இல்லை. நாம் இங்கிலாந்து சென்ற பொழுது நல்ல ப்ளாட் ட்ராக்குகளை ப்ராக்டீஸ் மேட்சுக்கு கொடுத்துவிட்டு க்ரீன் டாப் விக்கெட்டுகளை டெஸ்ட் மேட்சுகளுக்கு கொடுத்தனர். அப்பொழுது உலகின் முதல் ரேங்க் டீம் என்றால் எல்லாவித விக்கெட்டுகளிலும் விளையாட வேண்டும் என்று நக்கல் செய்தனர் அந்நாட்டு பத்திரிக்கைகள். என்னை கேட்டால் இன்னும் பிட்சை கொஞ்சம் உழுதுவிட்டு மேட்சை நடத்தலாம். Everything is fair in love and war.


தமிழக அரசியலில் மாற்றம் வருவதற்கான காட்சிகள் தோன்ற தொடங்கி இருக்கின்றன. மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே தேவை என்ற பொழுதும் அது திமுகவிற்கு சற்று அதிகமாகவே தேவை எனலாம். தளபதி மிகுந்த எழுச்சியுடன் செயல் படுவதாகவே தெரிகிறது. கலைஞர் செய்திகளில் தொடர்ந்து அவர் நடத்தும், தலைமை தாங்கும் போராட்டங்கள், மாநாடுகள், சந்திப்புகள் போன்றவற்றை பற்றிய செய்திகளை ஒளிபரப்புகிறார்கள். ஆனால் தேமுதிகவுடன் கூட்டணி ஏற்படலாம் என்ற செய்தி எனக்கு எரிச்சலாக இருக்கிறது. பாமகவை இரண்டு கட்சிகளும் மாறி மாறி கூட்டணி வைத்து வளர்த்துவிட்டது போல தேமுதிகவையும் வளர்த்துவிட முயல்கிறார்கள். திமுகவிற்கு மாற்று அதிமுக, அதிமுகவிற்கு மாற்று திமுக, இரண்டையும் விரும்பாதவர்களுக்கு கூட்டணிகளை பொருத்து காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்டுகள் என்ற நிலை தான் தமிழகத்திற்கு நல்லது.


நடிகர் கார்த்திக் அவர்களின் பரம ரசிகன் நான். நவரச நாயகன் என்ற பட்டத்திற்கு மிகவும் ஏற்புடையவர் அவர். அவர் நடித்த படங்களில் கோகுலத்தில் சீதை படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படத்தில் இருந்து ஒரு காட்சி கீழே பார்த்து மகிழுங்கள். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ரசித்து ரசித்து நடித்திருப்பார் கார்த்திக். மற்றொரு காட்சியில் சுவலக்ஷ்மி இவரை புகழ்ந்து ஒரு நிமிடத்திற்கு வசனங்கள் பேச அதை கேட்டு இவர் மௌனமாக கண்களால் பரவசப்படுவார் பாருங்கள், அட்டகாசம்.


Friday, November 02, 2012

பொடிமாஸ் - 11/02/2012

வட கிழக்கு அமெரிக்காவை சாண்டி புயலும், தமிழகத்தை நீலம் புயலும் தாக்கி ஓய்ந்து விட்டன. தமிழகத்திற்கு பெரிதாக பாதிப்பு இல்லை என்று தெரிகிறது. இங்கும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. புயல் எங்கே கரையை கடக்கும் என்பது சரியாக தெரியாததாலும், ஒரு வேளை வாஷிங்டன் டிசி பகுதிகளில் புயல் கரையை கடந்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என்பதாலும் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருந்தது. மின் இணைப்பு இல்லாவிட்டால் தண்ணீர் வராது, கேஸ் அடுப்பு எரியாது, ஹீட்டர் மற்றும் ஏசி வேலை செய்யாது, பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் கிடைக்காது, ATM வேலை செய்யாது, க்ரெடிட் கார்டுகள் வேலை செய்யாது, இன்னும் பல பாதிப்புகள்.

இதற்காக ஒரு வாரத்திற்கு தேவையான குடி நீர் வாங்கி, ஒரு வாரத்திற்கு தேவையான பால், பிரட், தயிர் ஆகியவற்றை வாங்கி, எல்லா பாத்டப் களிலும் தண்ணீர் பிடித்து, கார்களில் பெட்ரோல் போட்டு, தேவையான பணம் எடுத்துக் கொண்டு, டார்ச் விளக்குகள் ஏற்பாடு செய்து என்று இரண்டு நாட்கள் பரபரப்பாக இருந்தது. நல்ல வேளை பெரிதாக பாதிப்பு ஒன்றும் இல்லை. புயலினால் உயிரிழந்த மக்களுக்கு எனது அஞ்சலிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


சென்ற வாரம் முழுதும் அமெரிக்காவில் பரபரப்பாக இருந்தது சான்வி வென்னா கொலை வழக்கு. திருமணம் ஆகி வென்னா தம்பதிகளுக்கு பத்து ஆண்டுகளுக்கு பின் பிறந்த அழகு தேவதை சான்வி. ரகுநந்தன் என்ற பரதேசியின் பணத்தாசையால் அழிக்கப்பட்டு விட்டாள். அவனுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்கக்கூடும். குறைந்த பட்சம் பரோலில் வெளியில் வரமுடியாத 45 ஆண்டுகளாவது கிடைக்கும். அவனது மனைவியும் கருவுற்றிருக்கிறார். அவரது நிலையும் பரிதாபமாக இருக்கிறது. எப்படியோ இரண்டு குடும்பங்களின் மகிழ்ச்சி, நிம்மதி அனைத்தும் ஒரே நாளில் அழிந்து விட்டது.


சென்ற வாரம் இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப் பட்டது இரண்டு விஷயங்கள். அதில் ஒன்று சின்மயீ விவகாரம். இணையத்தில் பொதுவாகவே சிவிக் சென்ஸ் சற்று குறைவாகவே இருக்கிறது. நேரில் சொல்ல முடியாத பல கருத்துக்களை இணையத்தில் சொல்ல முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் சுயக்கட்டுப்பாடு என்று ஒன்று அவசியம். பேராசிரியர்கள் கூட சுயக்கட்டுப்பாட்டை இழப்பது மிகவும் வேதனையான ஒன்று.

நான் முன்னரே சொல்லி இருக்கிறேன், இணையத்தில் போலி பெயரும், முகமூடியும் கிடைக்கின்றன என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான். கருத்து சுதந்திரம், கத்திரிக்காய், கொத்தமல்லி எல்லாமே வரையரைக்குட்பட்டது. எந்த கருத்தை சொல்வதற்கு முன்பும் ஒரு கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த கருத்தை எனது சொந்தப் பெயரில், நானே நேரிடையாக சென்று, எனது குடும்பத்தினர் முன்பு, எனது வாயால், அடுத்தவரிடம் சொல்ல முடியுமா? என்பது தான் அது. முடியும் என்பது உங்கள் விடையானால் அதை இணையத்தில் சொல்லுங்கள். முடியாது என்றால் விட்டு விடுங்கள்.

You are responsible for your life and actions.


சென்ற வாரம் இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப் பட்ட மற்றொரு விஷயம் கமல் - முக்தா விவகாரம். கமல் ரசிகர்கள் பலர் இணையத்தில் பொங்கி இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே யாரும் நாயகன் மட்டமான படம் என்றோ, கமல் மட்டமான நடிகர் என்றோ, அவர் நாயகனுக்காக ஒரு கஷ்டமும் படவில்லை என்றோ சொல்லவில்லை. கமலும், மணியும் அப்படத்திற்காக கஷ்டப் பட்டார்கள், அவர்களே அப்படத்தின் வெற்றியின் பலனை அனுபவித்தார்கள். அவர்களுக்கு பணம், பெயர், புகழ் எல்லாம் கிடைத்தது. முக்தா கஷ்டப் படவில்லை. அவருக்கு அவ்வெற்றியில் பெரிய பங்கு ஒன்றும் கிடைக்க வில்லை. உண்மை இவ்வாறு இருக்க 25 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் தயாரிப்பாளரை பொதுவில் அசிங்கப் படுத்தி இருக்க வேண்டாம் என்று தான் குறிப்பிடுகிறோம். ஒரு வேளை முக்தா ஒரு கஷ்டமும் படாமலேயே இப்படத்தின் வெற்றியில் பெரிய பலன் அடைந்திருந்து கமலுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய் இருந்தால் கமலின் ஆதங்கத்தில் ஒரு அர்த்தம் உண்டு என்று சொல்லலாம். கமலின் கடிதம் துவேஷத்தின் வெளிப்பாடு. அவர் படைத்த குணா பாத்திரம் பேசும் "அசிங்கம், அசிங்கம்.." வசனத்தின் ஒட்டு மொத்த எடுத்துக் காட்டு.

அதற்கு சரியான பதில் சொல்வதை விட்டு விட்டு, கமல் செய்தது சரிதான் என்று நிரூபிக்கும் முயற்சியில் உகாண்டாவில் வெளியான நாயகன் விமர்சனத்தை வெளியிடுவதோ அல்லது முக்தா ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எனக்கு அளித்த பேட்டியில் கமலை புகழ்ந்தார் இப்பொழுது இகழ்கிறார் என்றெல்லாம் கூறுவதோ சிறு பிள்ளை தனமாக இருக்கிறது. நாயகனை நல்ல படம் என்று கூற உகாண்டாவிற்கெல்லாம் போக தேவை இல்லை, நம்ம கேபிள் சங்கரிடம் சொன்னால் அதை விட நல்ல விமர்சனத்தை அவர் எழுதித் தருவார். அதே போல ஒரு நூற்றாண்டுக்கு முன்பு முக்தா கமலை பாராட்டி பேசினார் என்பது அவரது சபை நாகரீகத்தை காட்டுகிறது. ஒரு குழுவில் பணியாற்றும் பொழுது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். அதை ஒன்று மறந்து விட வேண்டும், அப்படி முடியாவிட்டால் மனதிற்குள் அதனை வைத்துக் கொள்ள வேண்டும். முக்தா அவரது மனக் கசப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டு கமலை பாராட்டி இருக்கிறார். இப்பொழுது கமல் தரப்பில் இருந்து அருமையாக பதில் மரியாதை கிடைத்ததால் எதிர்வினையாற்றி இருக்கிறார்.

பொதுவெளியில் மனக் கசப்புகளை அதுவும் 25 ஆண்டுகள் கழித்து வெளியிடுவது நடு வீட்டில் மலம் கழிப்பது போன்றது. நான் அப்படித்தான் நடு வீட்டில் மலம் கழிப்பேன், நீ பொத்திக் கொண்டு அருகில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவது எந்த வகை நியாயமோ தெரியவில்லை.

தன்னை புத்திசாலி என்றும் மற்றவர்களை அடி முட்டாள்கள் என்றும் நினைத்துக் கொண்டு மற்றவர்களை தன்னை விட ஒரு படி கீழே வைத்து நோக்குவது கூட ஒரு வகை ஜாதீயம் தான். இந்த உண்மை கமலுக்கு ஒரு வேளை புரிந்தாலும் புரிந்து விடும், ஆனால் அவருக்கு ஜால்ரா தட்டும் உலக சினிமா ரசிகர்களுக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்.

உலக சினிமா ரசிகர்களே, பூவை பூவுன்னும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம், நீங்கள் சொல்வது போலவும் சொல்லலாம்.


சன் டிவி குழுமத்தினர் சென்ற வாரம் ஹைதராபாத் IPL டீமை வாங்கி விட்டார்கள். வாங்கி விட்டார்கள் என்று சொல்வதை விட ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்று சொல்வது தான் சரி. சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, ரேடியோ, அச்சு ஊடகம், சினிமா, விமான சேவை என்று பல துறைகளில் ஈடுபடும் நிறுவனம் இப்பொழுது விளையாட்டிலும் கால் பதித்துள்ளது. இதிலும் அவர்கள் வெற்றி வாகை சூடுவார்கள் என்று நம்புவோம். எனது வாழ்த்துகளை இந்த பதிவின் மூலம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் ஆஜீத் வென்றதற்கு அவருக்கு எனது வாழ்த்துகள். ப்ரகதி ஆஜீத்தை விட நன்றாக பாடினாலும் மக்கள் சொல்லே மஹேசன் சொல் அல்லவா? நான் இதையும் முன்பே சொல்லி இருக்கிறேன். வைல்டு கார்ட் சுற்றில் மக்கள் வாக்கை பெற்று முதலில் வருபவருக்கு ஒரு unfair advantage கிடைக்கும். பல லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவருக்கே மக்கள் மீண்டும் சைக்கலாஜிகலாக வாக்களிக்க விரும்புவார்கள். போன போட்டியில் சாய்சரன் ஜெயித்ததற்கும் அது தான் காரணம். இந்த போட்டியில் ஆஜீத் ஜெயித்ததற்கும் அது தான் காரணம். ப்ரகதி பாலாவின் பரதேசி படத்தில் ஒரு பாடல் பாடியதாக தெரிகிறது. அவருக்கும் எனது வாழ்த்துகள்.


அம்மாவுக்கும் கேப்டனுக்கும் இடையில் நடக்கும் அரசியல் கேவலமாக இருக்கிறது. சென்ற ஆட்சியில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட கலைஞர் இம்மாதிரி செயல்களில் ஈடுபட்டதாக தெரியவில்லை. நாட்டில் விலைவாசி உயர்வு, மின் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை என்று பல முக்கியமான விஷயங்கள் இருக்கையில் இம்மாதிரி செயல்களில் ஈடுபடுவது ஒரு மாநில முதல்வருக்கு அழகல்ல. ஆட்சி இது போலவே அமைந்தால் அடுத்த தேர்தலில் தளபதியா, கேப்டனா இல்லை அம்மாவா என்ற கேள்விக்கு மக்கள் தயங்காமல் தளபதி என்று பதில் கூறுவார்கள். தளபதி நிச்சயமாக நல்ல ஆட்சி தருவார் என்று தான் நான் நம்புகிறேன்.