Wednesday, February 07, 2007

ஏட்டுச் சுரைக்காய்......

கேம்பஸ் இன்டர்வியூ வேலை நியமன கடிதத்தை கொடுக்க மறுப்பு மாணவன் விஷம் குடித்து பலி

கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வான மாணவனுக்கு அனுப்பப்பட்ட வேலை நியமன கடிதத்தை ஆசிரியர் கொடுக்க மறுத்ததால், மனமுடைந்த மாணவன் விஷம் குடித்து இறந்தார். இதனால், பாலிடெக்னிக், அரசு மருத்துவமனை பொருட்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக, மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாம்பூரைச் சேர்ந்தவர் கண்ணன்(22). இவரது தந்தை ராஜேந்திரன் இரு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கண்ணனின் குடும்பத்தினர், பரமக்குடி நேரு நகரில் வசித்து வருகின்றனர். கண்ணன், பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் "எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ்" இன்ஜினியரிங் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.


இந்நிலையில், கண்ணன் நேற்று பாலிடெக்னிக் வளாகத்தில் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.விரக்தி அடைந்த பாலிடெக்னிக் மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த கம்ப்யூட்டர்கள், மேஜைகள், நாற்காலிகள், வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில், கல்லூரி தலைவர் பாண்டியன் மற்றும் துணைத் தலைவர் பாலுச்சாமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. பரமக்குடி அரசு மருத்துவமனை வந்த மாணவர்கள், மருத்துவமனை மீது கல் வீசி தாக்கி சேதப்படுத்தினர். பொருட்களையும் சூறையாடினர். சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அங்கு அமர்ந்து கோஷம் எழுப்பினர். போலீஸ் அதிகாரிகள் மாணவர்கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின், மாணவர்கள் கலைந்து சென்றனர். ராமநாதபுரம் எஸ்.பி., திருஞானம் விசாரணை நடத்தினார்.தொடர்ந்து துறைத் தலைவர் தங்கபாரதி, கல்லூரி முதல்வர் கமலநாதன், ஆசிரியர் பிரபு ஆகியோரை எமனேஸ்வரம் போலீசார் கைது செய்தனர்.


தற்கொலைக்கு காரணம் என்ன? கல்லூரி தலைவருக்கு மாணவன் உருக்க கடிதம்:


கடித்ததை படிக்கும் போது உயிருடன் இருக்கமாட்டேன் என பரமக்குடி முத்தாலம்மன் கல்லூரி தலைவர் பாண்டியனுக்கு இறந்த மாணவன் கண்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


நான் தங்களது கல்லூரியில் 3ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ராணிக்ஸ் இன்ஜி., பிரிவில் பயில்கிறேன். இதற்கு முன்னர் அரசு ஐ.டி.ஐ.,யில் வயர்மென் பிரிவில் 86 சதவீதம் மார்க் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று கமுதக்குடி என்.டி.சி.,மில்லில் தொழிற்பழகுனராகவும் , அதே மில்லில் எட்டு மாதம் மின் பணியாளராகவும் வேலை செய்தேன். நான் இன்ஜினியராக வேண்டும் என்ற என் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற தங்களது கல்லூரியில் சேர்ந்தேன். மூன்று, நான்கு, ஐந்தாம் பருவத்தேர்வுகளில் முதல் மார்க் பெற்றேன். நான்காம் பருவத்தேர்வில் கல்லூரி முதல் மாணவனாக தேர்ச்சி அடைந்தேன். ஐந்தாம் பருவத்தேர்வில் செய்முறை தேர்வில் முன்னர் எடுத்ததை விட அதிக மார்க் எடுத்தும் என்னால் மீண்டும் கல்லூரி முதல் மாணவனாக வர முடியவில்லை. எனது லேப் மார்க்கை துறைத்தலைவர் குறைத்துவிட்டார். 5ம் பருவத்தேர்வுக்கு முன் நடைபெற்ற யூனிட்தேர்வு பேப்பரை துறைத்தலைவர் திருத்தாமல் மாணவர்களையே திருத்த கூறி பேப்பரை விநியோகம் செய்தார். இதில் ஒரு பேப்பரை என் நண்பனிடம் இருந்து வாங்கும்போது எதிர்பாராதவிதமாக கிழிந்து விட்டது. இதனை துறைத்தலைவரிடம் தெரிவித்தால் பிரச்னை ஆகிவிடும் என பயந்து அந்த பேப்பரை மறைத்துவிட்டேன். பின்னர் துறைத்தலைவருக்கு விஷயம் தெரியவே நான் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் என்னை வகுப்பறையில் அனுமதிக்கவில்லை. எனது தாயார் மற்றும் அண்ணன் துறைத்தலைவரிடம் பேசியதால் என்னை வகுப்பறையில் அனுமதித்தார். வரும் 5ம் பருவத்தேர்வில் நீ முதல் மார்க் பெற முடியாது, மேலும் லேப் மார்க்கை குறைப்பேன் என்றார். அதுபோலவே லேப் மார்க்கை குறைக்கவும் செய்தார். ஆனால் அவர் நினைத்தது போல நடக்கவில்லை. நான் 5ம் பருவத்தேர்விலும் முதல் மார்க் பெற்றேன். இதனால் அவர் மிகவும் ஆத்திரம் அடைந்தார். 28.1.2007 அன்று மதுரை டி.என்.பி., கல்லூரியில் எச். சி. எல்., இன்போசிஸ் கம்ப்யூட்டர் நிறுவனம் சார்பில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்க கல்லூரியில் இருந்து நான் உட்பட 20 மாணவர்கள் சென்றோம். அதில் நானும், எனது நண்பர் இருவரும் தேர்ச்சி பெற்றோம். அதற்கான அறிவிப்பு கடிதம் 3.2.07 அன்று கல்லூரிக்கு வந்ததை அறிந்தேன். அந்த விபரம் அறிய கல்லூரி அலுவலரை அணுகினேன். அவர் முதல்வரை சந்திக்குமாறு கூறினார். அதன்படி நாங்கள் இருவரும் முதல்வரை சந்தித்தோம். அவர் எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதற்கான கடிதம் துறைத்தலைவரிடம் இருப்பதாக கூறினார். துறைத்தலைவரிடம் கடிதத்தை கேட்டோம். தராமல் என்னை கடிந்து பேசினார். பெரும் ஏமாற்றம் அடைந்தேன். இவரால் நான் மட்டும் அல்ல பல மாணவர்கள் துயரத்துக்கு உட்படுகின்றனர். தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன். கடிதத்தை நீங்கள் படிக்கும் பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். இப்படிக்கு மாணவன் ஆர்.கண்ணன் என கையொப்பமிட்டுள்ளார். [நன்றி : தினமலர்]


தினமும் எவ்வளவோ தற்கொலைகள். ஆனாலும் இந்த செய்தியை படித்தவுடன் என்னால் சாதாரனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.


தந்தையை இழந்த ஒரு மகன். அவரது ஆசையை நிறைவேற்ற இஞ்சினியர் ஆனவர். தேர்வுகளில் முதல் மாணவனாக தேரியவர். ஒரு மில்லில் எட்டு மாதம் பணியாற்றியவர். கேம்பஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்லதொரு நிறுவனத்தில் பணி வாய்ப்பையும் பெற்றவர். இவ்வளவு இருந்தும் உலக அறிவு துளியும் இல்லாதவர்.


ஒரு நிறுவனம் கேம்பஸ் தேர்வு நடத்தி ஒரு மாணவனை தேர்வு செய்யும் பொழுது அந்த மாணவனின் வேலை வாய்ப்புக் கடிதத்தை கல்லூரிக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் இவருக்கு ஏற்பட்டதை போன்றதொரு அனுபவம் ஏற்பட்டு ஆசிரியரோ அல்லது வேறு ஒருவரோ கடிதத்தை கொடுக்க மறுத்தால் அந்த மாணவன் நேரடியாக அந்த நிறுவனத்தின் HR Dept. ஐ அனுகினால் வேறு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்படும். ஆசிரியரின் அத்தகைய நடவடிக்கைகளைப் பற்றி புகார் தெரிவித்தால் அவர் பணி இழக்க வாய்ப்புள்ளது. மேலும் இதை பற்றி அவர் தனது நன்பர்களிடம் கூறி இருந்தாலும் கூட இதற்கு தீர்வு கண்டிருக்கலாம்.


இதை அறியாமல் தனது விலைமதிப்பில்லாத உயிரை தனது அறியாமைக்கு விலையாக கொடுத்துவிட்டார். இதன் மூலம் நமது பாடத்திட்டம் மாணவர்களை உலக அறிவு அற்ற ஒரு புத்தக புழுவாகவே வளர்க்கிறது என்பது தெளிவாகிறது.

Wednesday, January 10, 2007

குருதியை தாருங்கள்; சுதந்திரம் அளிக்கிறேன்!

'நேதாஜி' என்று அன்புடனும், மரியாதையுடனும் அனைவராலும் அழைக்கப்பட்ட திரு. சுபாஷ் சந்திர போஸ், ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள கட்டக் நகரில் 1897 ஆம் ஆண்டு, ஜனவரி 23 ஆம் தேதி பிறந்தவர். அவரது தந்தையார் திரு. ஜானகிநாத் போஸ் ஒரு அரசு வக்கீலாக இருந்து பின்னர் வங்காள சட்டசபையில் உறுப்பினரானவர். தாயார் திருமதி. பிரபாவதி தேவி.


தனது பெற்றோரின் 14 குழந்தைகளில் 9 ஆவது குழந்தையாக பிறந்தவர் நேதாஜி. "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்ற முதுமொழிக்கு இனங்க இளவயதிலேயே தேசப்பற்றும் மிகுந்த அறிவாற்றலும் கொண்டு இருந்தார் நேதாஜி. சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டார். மெட்ரிகுலேஷன் தேர்வில் கல்கட்டா மாகாணத்திலேயே முதல் மாணவராக தேரினார். கல்கட்டாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்சஸ் கல்லூரியில் தத்துவவியல் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தனது பெற்றோரின் ஆசைக்கினங்க Indian Civil Services (ICS) தேர்வில் பங்கு கொள்ள 1919 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றார். தேர்வில் நான்காவதாக தேர்ச்சி பெற்றார். ஆனாலும் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த ஜாலியன் வாலாபாக் படு கொலை அவரை வெகுவாக பாதித்தது. அதனால் தனது அலுவல் பயிற்சியை பாதியிலேயே விட்டு விட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.


இந்தியா திரும்பிய நேதாஜி, மகாத்மாவின் தலைமையில் தனது சுதந்திர போராட்டத்தை துவக்கினார். அதன் முதல் படியாக இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். காந்திஜியின் அஹிம்சை தத்துவங்களை ஏற்காமல் சிறிது காலத்திலேயே கல்கட்டா சென்று அங்கே சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் தலைமையின் கீழ் தனது போராட்டத்தினை மேற்கொண்டார். பின்னர் அவரையே தனது ஆசானாகவும் வழி காட்டியாகவும் ஏற்றுக் கொண்டார்.

1921 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வரவேற்பு ஏற்பாடுகளை கண்டித்து போராடி சிறை சென்றார். சிறையில் தனது ஆசான் சித்திரஞ்சன் தாஸ் அவர்களுக்கு பணிவிடை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார். 1924 ஆம் ஆண்டு கல்கட்டா கார்ப்பரேஷனின் CEO வாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட மாத சம்பளம் 3000 ரூபாய். ஆனால் அவர் 1500 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் தீவிரவாதத்தை பரப்பிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1925 ஆம் ஆண்டு நடந்த சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் மரணம் அவரை வெகுவாக பாதித்தது.

1930 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். அதனால் மீண்டும் சிறை சென்றார். 1931 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி கையெழுத்தான காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை முன்னிட்டு, காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டார். இதனால் உடனே நேதாஜி சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டார். அதே மாதம் 23ஆம் தேதி பகத் சிங்கை அவரது 21 ஆம் வயதில் தீவிரவாதி என்று குற்றம் சுமத்தி ஆங்கிலேய அரசு தூக்கில் இட்டது. இத்தருணத்தில் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டதை கண்டு மனம் நொந்தார் நேதாஜி. காங்கிரஸ் தலைவர்கள் பகத் சிங்கையும் அவரது கூட்டாளிகளையும் விடுவிக்க முயற்சி எதுவும் செய்யாததே அதற்கு காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.


அதே ஆண்டு வங்காளத்தில் போராட்டத்தினை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டி மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார். அவரது உடல் நிலை பாதிப்படைந்தது. பகத் சிங்கின் முடிவால் நாடே கொதித்துக் கொண்டிருந்த வேளையில், நேதாஜி சிறையில் இறந்தால் கிளர்ச்சி ஏற்படும் என்று பயந்தது ஆங்கிலேய அரசு. அதன் தொடர்ச்சியாக 1932 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நாடு கடத்தப் பட்டார்.


அவர் வியன்னாவில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டார். 1932 முதல் 1936 வரை அவர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து பல தலைவர்களை சந்தித்தார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், முஸ்ஸோலினி (இத்தாலி), ஃபெல்டர் (ஜெர்மணி), வலேரா (ஐர்லாந்து) மற்றும் ரோமா ரோலான்ட் (ஃபிரான்ஸ்). அவர் ஹிட்லரையும் சந்தித்ததாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அந்நாட்களில் இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றிய விழிப்புணர்ச்சியை ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்த முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றார். 1934 ஆம் ஆண்டு "இந்தியாவின் போராட்டம்" என்ற நூலை அவர் வெளியிட்டார். இந்நூல் வெளியிட தனக்கு உதவி செய்த எமிலி என்ற ஆஸ்த்ரியா தேசத்து பெண்ணை காதலித்து 1937 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். அவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு அனிடா என்ற மகள் பிறந்தார்.

இதற்கிடையில், 1936 ஆம் ஆண்டு அவர் தனது இந்திய வருகையை அறிவித்து விட்டு, பம்பாய் வந்தார். அதற்காக அவர் மீண்டும் கைது செய்யப் பட்டார். 1937 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப் பட்டார். அதை தொடர்ந்து 1938 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். அந்நிலையில், அவர் முஸ்ஸோலினி போன்ற தலைவர்களை ஐரோப்பாவில் சந்தித்ததை அறிந்த காந்திஜி, அவர் காங்கிரஸின் தலைவராக இருப்பதை விரும்பவில்லை. அதற்காக 1939 ஆம் ஆண்டு மீண்டும் நடந்த தேர்தலில் நேதாஜியை எதிர்த்து போட்டி இட நேரு மற்றும் ராஜேந்திர பிரஸாத் இருவரின் விருப்பத்தையும் கேட்டார். அவர்கள் இருவரும் அதற்கு இனங்காததால், நேதாஜியை எதிர்த்து போட்டி இட திரு. பட்டாபி சித்தராமையாவை நிறுத்தினார். ஆனால் நேதாஜி 1580 - 1371 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திஜி "நேதாஜியின் வெற்றி எனது தோல்வி" என்று அறிவித்தார். காங்கிரஸ் தலைவரான கையோடு ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவை இந்தியர்களிடம் ஒப்படைக்க 6 மாதங்கள் அவகாசம் கொடுத்தார். அதற்குள் ஒப்படைக்க மறுத்தால், நாடெங்கும் கிளர்ச்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கும் காந்திஜியின் ஒத்துழைப்பு கிடைக்க வில்லை. இதைத் தொடர்ந்து அவரால் பிற காங்கிரஸ் தலைவர்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போனது. அதனால் மனம் வருந்திய நேதாஜி, தனது பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் அவர் காங்கிரஸிலிருந்து 3 ஆண்டுகள் நீக்கப் பட்டார். வேறு வழி இல்லாமல் அவர் "Forward Block" என்ற கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களின் தலைமைகளை கலந்து ஆலோசிக்காமல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை போரில் ஈடுபடுத்தினர். இதற்கு நேதாஜி கடும் கண்டனத்தை தெரிவித்தார்.


இதைத் தொடர்ந்து அவர் இந்திய மக்களுக்கு போருக்கு ஆயத்தமாகுமாரு ஒரு கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கைக்கு பலனாக பல லட்சம் மக்கள் திரண்டெழுந்தனர். அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த நேதாஜி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. உலக யுத்தம் நடக்கும் நேரத்தில், நேதாஜி இறந்து இந்தியாவில் உள் நாட்டு கலவரம் நடப்பதை விரும்பாத ஆங்கிலேயர்கள், அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி அவரும் அவரது உறவினர் திரு. குமார் போஸும் காவலில் இருந்து தப்பினர். அவர் காவலில் இருந்து தப்பித்த செய்தியே அரசுக்கு, ஜனவரி 26 ஆம் தேதி தான் தெரிந்தது.


(1940 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி திரு. வீர் சவர்க்கரை நேதாஜி மும்பையில் உள்ள சவர்கர் சதன் என்ற இடத்தில் சந்தித்ததாகவும், அவரின் ஆலோசனைப்படியே நேதாஜி போருக்கு ஆயத்தமாகுமாரு இந்திய மக்களுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், காவலில் இருந்து தப்ப திட்டமிட்டதாகவும், அதை செயல் படுத்தியதாகவும் பலர் நம்புகின்றனர். ஆனால் அதை உறுதிப் படுத்த போதுமான ஆதாரம் இல்லை.)

காவலிலிருந்து தப்பிய நேதாஜி, அப்வேக்கர் என்பவரின் உதவியுடன் பெஷாவர் சென்றடைந்தார். பெஷாவரில் அவர் அக்பர் ஷா, மொஹமத் ஷா, பகத் ராம் தல்வார் ஆகியோரை சந்தித்தார். பின்னர் அவர் அக்பர் ஷாவின் நன்பரான அபாத் கான் என்பவரின் இல்லத்திற்கு சென்று மறைந்திருந்தார். பின்னர் அவர் அக்பர் ஷாவின் உதவியுடன், காது கேட்காத, வாய் பேச முடியாத அஃப்கானிஸ்தான் பழங்குடியினரை போல் வேடம் திரித்து காபுல் வழியாக அஃப்கானிஸ்தானை கடந்து ரஷ்யா சென்றார். மாஸ்கோ சென்ற அவர் ரஷ்ய தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால் அவர் எதிர் பார்த்த உதவியை ரஷ்ய தலைவர்கள் அளிக்கவில்லை. அவர்களுக்கு இந்திய விடுதலையில் அக்கறை இல்லை என்பதை உணர்ந்தார் நேதாஜி. அதனால் அவர்களின் உதவியுடன் ஜெர்மணியின் தலைவர்களுடன் பேச பெர்லினுக்கு சென்றார்.

பல மாதங்கள் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இந்திய சுதந்திரத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தர ஜெர்மணி முன் வந்தது. இந்நிலையில், நேதாஜி இறந்து விட்டார் என்ற வதந்தியை BBC இந்தியா முழுதும் பரப்பியது. அதை இந்திய மக்களும் நம்பினர்.


அப்பொழுது நேதாஜி அவர்களே 1941 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் ஜெர்மணியில் இருந்து உருவாக்கிய சுதந்திர இந்திய வானொலியில் உரையாற்றினார். "நான் இன்றும் உயிருடன் இருக்கும் சுபாஷ் சந்திர போஸ் பேசுகிறேன்." என்று தொடங்கும் அந்த உரையில் அவர், ஜெர்மணியில் இருந்தே சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். டாகூரின் "ஜன கன மன" கீதத்தை தேசிய பாடலாகவும், ஹிந்தியை தேசிய மொழியாகவும், காந்திஜியை தேச தந்தையாகவும் அறிவித்தார். "ஜெய் ஹிந்த்" என்ற பதத்தை முதன் முதலில் பயன் படுத்தியதும் அவர் தான். அவரின் இந்த உரைக்கு பின்னரே இந்த பதம் தேசப்பற்றை குறிக்கும் பதமாக மாறியது. இந்த உரைக்கு பின்னர் தான் அவரை மக்கள் அன்புடன் "நேதாஜி" என்று அழைக்க தொடங்கினர்.

இந்நிலையில் நேதாஜி உயிரோடு இருப்பதை அவரது உரை மூலம் அறிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அவரை கொலை செய்யுமாறு உளவுத்துரைக்கு ஆணை பிறப்பித்தனர். இந்த ஆணையை ஆராய்ந்து பார்த்தால் ஆங்கிலேயர்கள் நேதாஜியை சாதாரனமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

அவர் ஜெர்மணியில் இருந்த இக்கால கட்டத்தில் தான் அவரது மனைவி கருவுற்று அனிடா பிறந்தார்.


நேதாஜியின் திட்டங்கள் பெறுமளவில் ரஷ்யாவில் ஜெர்மணியின் வெற்றியை பொருத்தே தீர்மானிக்கப் படும் என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். ஜெர்மணி ரஷ்யாவில் பெற்ற பெரும் தோல்வியினால் அப்படை வீரர்கள் இந்தியா சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து ஜப்பானின் உதவியை நாட அவர் முடிவெடுத்தார். அதற்கு பலம் சேர்க்கும் விதம் அப்பொழுது ஜப்பானின் பிரதம மந்திரியாக இருந்த திரு. தோஜோ, ஜப்பானின் பாராளுமன்றத்தில் இந்திய சுதந்திரத்திற்கு ஜப்பானின் ஆதரவை தெரிவித்தார்.

ஜெர்மணியின் U-180 மற்றும் ஜப்பானின் I-29 ஆகிய இரு நீர் முழுகிக் கப்பல்களில் பயணம் செய்து சிங்கப்பூர் சென்றடைந்தார் நேதாஜி. 1942 ஆம் ஆண்டு, ஜப்பானிய படை சிங்கப்பூரை கைப்பற்றியது. அதை தொடர்ந்து (ஆங்கிலேய) இந்திய படை வீரர்கள் சிறைக் கைதிகளாக ஜப்பானியர் வசம் ஒப்படைக்கப் பட்டனர். அதைத் தொடர்ந்து கேப்டன் மோகன் சிங் அவர்களைக் கொண்டு இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்க விரும்பினார். அதைத் தொடர்ந்து அவர் வசம் அப்படை வீரர்கள் ஒப்படைக்கப் பட்டனர். அதைத் தொடர்ந்து திரு. ராஸ்பிஹாரி போஸ் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் அவ்வீரர்களுடன் கேப்டன் மோகன் சிங் இனைந்தார்.


ஆனாலும் நாளடைவில் திரு. ராஸ்பிஹாரி போஸ் அவர்களின் தலைமையை வீரர்கள் விரும்பவில்லை. அவர் இந்தியாவின் மேன்மையைவிட அதிகமாக ஜப்பானின் மேன்மையை விரும்புகிறார் என்ற எண்ணம் வலுக்கத் தொடங்கியது. அந்நிலையில் நேதாஜியின் திட்டங்களையும், செயல்களையும் அறிந்த அவ்வீரர்களிடையே அவரின் தலைமை தேவை என்ற எண்ணம் வேர் விடத்தொடங்கியது. அப்பொழுது தான் நேதாஜி அங்கு சென்றடைந்தார். அவரிடம் இந்திய தேசிய இராணுவத்தை ஒப்படைத்தார் ராஸ்பிஹாரி போஸ். ஜப்பானும் இந்திய தேசிய இராணுவத்திற்கு தணம், யுத்த தளவாடம் போன்றவற்றை தருவதுடன், யுத்தத்தில் கைப்பற்றப்படும் இந்திய நாட்டு பகுதிகளை நேதாஜியிடம் ஒப்படைக்க உருதி தந்தனர். 85000 வீரர்கள் இருந்த அந்த இராணுவத்தில், கேப்டன் லட்சுமியின் தலைமையில் தனி பெண்கள் பிரிவு படையும் இருந்தது.

அதையடுத்து இந்தியாவை நோக்கி முன்னேறிய இந்திய தேசிய இராணுவம், ஜப்பானின் உதவியுடன் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கைப்பற்றியது. பின் முதல் முறையாக இந்தியாவின் மூவர்ணக் கொடியை (காங்கிரஸ் கொடியை சற்றே மாற்றி அமைத்து) நேதாஜி ஏற்றிவைத்தார்.


1943 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினைத் தொடர்ந்து 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். அதனால் மனம் வருந்திய நேதாஜி வங்காள மக்களுக்கு பர்மிய அரிசியை தர முன் வந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு அதை ஏற்க மறுத்தது. மேலும் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வந்த உணவுப் பொருட்களை இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் நேதாஜியின் கோபம் பல மடங்கானது.


1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பர்மாவை கைப்பற்றியது ஜப்பானிய இராணுவம். அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை இரங்கூனுக்கு மாற்றினார் நேதாஜி. அதைத் தொடர்ந்து கோஹிமாவிலும், இம்பாலிலும் நடந்த போரில் ஜப்பானியர்களுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. அதனால் அவர்கள் இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு அளித்த உதவியையும் ஊதியத்தையும் நிறுத்திக் கொண்டனர்.


அதே சமயத்தில் (ஆங்கிலேய) இந்திய இராணுவத்திலிருந்து பலர் இந்திய தேசிய இராணுவத்திற்கு வருவார்கள் என்ற நேதாஜியின் நம்பிக்கைக்கு மாற்றாக இந்திய தேசிய இராணுவத்திலிருந்து பலர் வெளியேறினர். இதனால் அவர் வீரர்களை ஊக்குவிக்க பல உரைகளை ஆற்ற வேண்டி இருந்தது. அவரது உரைகளில் மிகவும் புகழ் பெற்றது 1944 ஆம் ஆண்டு பர்மாவில் இந்திய தேசிய இராணுவத்தினருக்கு அவர் ஆற்றிய "குருதியை தாருங்கள்; சுதந்திரம் அளிக்கிறேன்" என்ற உரை. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே.


"நண்பர்களே! 1857 ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய சுதந்திர போருக்கு பிறகு நம் நாட்டு மக்கள் நிராயுதபாணிகளாகவே இருக்கிறார்கள். நவீன ஆயுதம் ஏந்தி வரும் படை முன்னே நாம் நிராயுதபாணிகளாக நின்று சுதந்திரம் அடைய முடியாது.


நண்பர்களே! இந்தியா சுதந்திரம் பெரும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஆனாலும் நம்மால் சுதந்திர இந்தியாவை பார்க்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைவதை பார்த்து மகிழுவது உங்களது லட்சியமாக இருப்பின், அதை போன்றதொரு தவரான லட்சியம் வேறு எதுவும் இல்லை. வாழ வேண்டும் என்ற கனவு உங்களுல் யாருக்கும் இருக்க கூடாது.


இனி நமக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே இருக்க வேண்டும். அது காலனைத் தழுவும் கனவு; மரணத்தை எதிர் நோக்கும் கனவு. ஆம் இந்தியா வாழ நாம் இறப்பது அவசியம்.


நான் உங்களிடம் முன்னர் இராணுவம் அமைக்க அடிப்படை தேவையான தணத்தையும், தளவாடங்களையும் கேட்டேன். உங்களது அன்பினால் அவைகளை நான் வேண்டிய அளவு பெற்று விட்டேன். ஆனால் அவை மட்டுமே நமக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்க முடியாது.


இப்பொழுது நான் வேறு ஒன்றைக் கேட்கிறேன். அதை நீங்கள் கட்டாயம் எனக்கு தர வேண்டும். ஆம் இப்பொழுது நான் கேட்பது உங்கள் குருதியை. குருதி சிந்துவதால் மட்டுமே நாம் நமது இலக்கை அடைய முடியும். குருதி ஒன்றே சுதந்திரத்திற்கான விலையாக முடியும்.


நண்பர்களே! இளைஞர்களே! இளைஞிகளே! இச்சுதந்திர போராட்டத்தில் எனக்கு தோள் கொடுக்க துணிந்தவர்களே! எனக்கு உங்களின் குருதியை தாருங்கள்; நான் உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்."

அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் நேதாஜிக்கு சாதகமாக இல்லை. ஜெர்மணி, ஜப்பான் மற்றும் இத்தாலியின் தொடர் தோல்விகள் நேதாஜியை சிந்திக்க வைத்தன. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது. உலகம் முழுவதும் 6 கோடி மக்களின் உயிரைக் குடித்த பிறகு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.


ஜப்பான் சரணடைந்தாலும் தான் சரணடைய மறுத்து, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி பாங்காக் சென்றார். 17 ஆம் தேதி அங்கிருந்து சாய்கோன் சென்றார். அவருடன் அபிபூர் ரெஹ்மான், ப்ரீதம் சிங், அபித் ஹாஸன், S.A. ஐயர், தேப்நாத் தாஸ் ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்து தாய்பேய் செல்ல இருந்த விமானத்தில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருப்பதாகவும், அவர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மட்டும் தாய்பேய் சென்றார். அங்கிருந்து டாய்ரன் செல்ல திட்டமிட்ட அவர் 17 ஆம் தேதி காலை 5 மணிக்கு இரு பெரிய பெட்டிகளில் தங்கத்துடன் மேலும் 10 ஜப்பானியர்களுடன் விமானத்தில் ஏறினார். விமானம் கிளம்பி உயரே பறந்து 30 அடி உயரம் சென்றதும் வெடித்து சிதறியது. அவரது மரணத்தை பற்றி பலர் பலவித கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அவரது மகள் அனிடா அதை நம்புவதாகவும் அதில் சந்தேகப் படுவதற்கு எதுவும் இல்லை என்றும் கூறுகிறார். தனது தந்தையின் மரணத்தை பற்றி அவர் கூறுகையில், "அவரது வாழ்வையும், சுதந்திர இந்தியா அமைய அவர் மேற்கொண்ட முயற்சிகளையும், அவரது தியாகங்களையும், அவரது போராட்டங்களையும் மட்டுமே நாம் நினைத்து பார்க்க வேண்டும். மாறாக அவர் 1945 ஆம் ஆண்டு இறந்தாரா? இல்லையா? என்பதில் நாம் கவனம் செலுத்துவது தேவையற்றது." என்கிறார். நானும் அதை முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன்.

அவரது வாழ்க்கை வரலாற்றை உற்று கவனித்தால் அவர் செய்த தியாகங்கள் நம் நெஞ்சை உலுக்குகின்றன.


    1. தனது 24 ஆவது வயதில் மிகுந்த பொருளீட்டக் கூடிய ICS பதவியை உதறியவர்.
    2. ஒரு பள்ளி ஆசிரியர் மாதம் 50 ரூபாய் சம்பளம் பெற்ற காலத்தில், மாதம் 1500 ரூபாய் சம்பளம் தந்த கல்கட்டா கார்ப்பரேஷனின் CEO பதவியை தக்க வைத்துக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அதே சமயத்தில் சுதந்திர போராட்டத்தில் தனது ஈடுபாட்டை சிறிதளவும் குறைத்துக் கொள்ளாமல் இருந்தவர்.
    3. மகாத்மாவின் அஹிம்சை போராட்டத்தில் நம்பிக்கை துளியும் இல்லாமல் இருந்தாலும் அவர் தோல்வி அடைய கூடாது என்ற காரணத்திற்காக தனக்கு கிடைத்த காங்கிரஸ் தலைவர் பதவியை உதறியவர்.
    4. தன்னை கருத்து வேறு பாடுகளினால் காங்கிரஸிலிருந்து வெளியேற்றிய மகாத்மாவை தேசத்தந்தை என்று அறிவித்தவர்.
    5. தனது காதல் மனைவியையும், பிறந்து 2 ஆண்டுகளே நிரம்பிய தனது மகள் அனிடாவையும் அதன் பிறகு பார்க்கவே முடியாது என்று நன்கு தெரிந்தும் இந்திய சுதந்திரத்திற்காக ஜெர்மணியை விட்டு சிங்கப்பூர் சென்றவர். அவர் நினைத்திருந்தால் அவர்களையும் கூட்டி சென்றிருக்க முடியும். ஆனால் அது தனது லட்சியத்திற்கு தடையாக இருக்கும் என்று அவ்வாறு செய்யவில்லை.

இவ்வளவு தியாகங்களையும் செயற்கறிய செயல்களையும் செய்தவருக்கு இந்நாடு செய்தது என்ன? என்று பார்த்தோமானால், ஏமாற்றமே மிஞ்சும். தேசப்பிதா காந்தியடிகள், நம் நாட்டின் முதல் பிரதமரான நேரு, சட்ட மேதை அம்பேத்கார், இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் போன்றோரின் தியாகங்களுக்கு சற்றும் குறைந்தது இல்லை நேதாஜியின் தியாகங்கள். ஆனால் அவருக்கு மற்றவர்களுக்கு கொடுத்ததைப் போன்றதொரு அங்கீகாரத்தை என்றுமே இந்தியா கொடுத்தது இல்லை. அவருடைய தியாகங்கள் அனைத்தும் வரலாற்று புத்தகங்களில் இருட்டடிப்பு செய்யப் பட்டன. அவருக்கு என்று இல்லை, அவரது உரைகளை கேட்டு அவர்பால் ஈர்க்கப்பட்டு அவர் பின்னால் நின்ற 1 லட்சத்திற்கும் மேலான வீரர்களுக்கு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்ற அந்தஸ்தை கூட கொடுக்கவில்லை இந்தியா. தியாகிகளுக்கான பென்சன், இலவச இரயில் பயண வசதிபோன்ற எதையும் அவர்களுக்கு நாம் கொடுக்க வில்லை. சுதந்திரம் பெற்று 55 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் காரணங்களுக்காக அவருக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்ணா விருதும் அவருக்கு அவமானத்தையே தேடித் தந்தது. ஆனாலும் அவரது உள்ளம் அதை எல்லாம் நினைத்து வருந்தி இருக்காது. இந்தியா சுதந்திரம் பெற்ற அன்றே அவரது உள்ளம் சாந்தி அடைந்து இருக்கும்.

அவரின் 110 ஆவது பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதி அவரையும், அவரது தியாகங்களையும் வளையுலகில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளவே இப்பதிவை பதிகிறேன்.

பின்குறிப்பு : இக்கட்டுரைக்காக நான் பின்வரும் தளங்களில் இருந்து செய்திகளை எடுத்துள்ளேன். மாபெரும் தலைவரைப் பற்றிய கட்டுரை என்பதால் என்னால் முடிந்த அளவில் பல முறை உறுதி செய்த பின்னரே நிகழ்வுகளை பதிந்துள்ளேன். இருப்பினும் ஏதேனும் தகவல் பிழைகள் இருப்பின் தகுந்த சுட்டிகளுடன் தெரியப் படுத்தினால் திருத்தி விடுகிறேன். தகவல் பிழைகளுக்கு நான் முழு பொருபேற்பதுடன், அதனால் யாராவது புண்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.


இக்கட்டுரை அமைய உதவிய தளங்கள் :

Saturday, December 30, 2006

குழலினிது யாழினிது!!!

சமீபத்தில் திரு.சர்வேசன் அவர்களின் "மாதவன் கலக்கல்ஸ்" என்ற ஒரு பதிவை படிக்க [பார்க்க] நேர்ந்தது. அதில் மழலை மாறாத மாதவன் அமெரிக்க மாகாணங்களின் தலை நகரங்களை சரியாக கூற, அதை அவனது தந்தை ஒளிப்பதிவு செய்திருந்தார். பதிவின் முடிவில் "Excellent Madhava!" என்று பாராட்டு வேறு. இவர் என்றில்லை, பொதுவாகவே இன்றைய இந்திய பெற்றோர்களிடையே தத்தம் குழந்தைகளை இது போன்ற செயல்களை செய்ய வைத்து பெருமை அடையும் ஒரு வித மன நோய் இருக்கிறது. ஆம் இதுவும் ஒரு வகை மன நோயே. மூன்று நான்கு வயதிலிருந்தே பாட்டு, நடனம், ஓவியம் இன்னும் பிற கலைகள் பொன்றவற்றை பயின்று வரும் குழந்தைகள் பலர் அதை TVயில் கூற நான் கேட்டிருக்கிறேன். அந்த வயதில் தனக்கு பிடித்த ஒரு துறையை தேர்வு செய்யும் அறிவு குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்? ஆக பெற்றோர் தாங்கள் விரும்பும் ஒரு துறையில் தங்களது குழந்தைகளை சாதிக்க வைத்து தாங்கள் பெருமை அடைய தங்களது குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலி கொடுக்கிறார்கள்.

ஐந்து வயது குழந்தை பொருள் தெரியாமல் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதாலும், மாகானங்களின் தலை நகரங்களை கூறுவதாலும் என்ன பலன் ஏற்படப் போகிறது? இந்திய கல்வித்திட்டத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டியது மனப்பாடம் செய்யும் முறை என்று ஆய்வாளர்கள் பல முறை கூறியும் இத்தகைய பெற்றொர்கள் திருந்தவில்லை. இவர்களின் ஊக்குவிப்பாலும், பாராட்டுகளாலும் குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்வதே அறிவை வளர்க்கும் முறை என்ற நம்பிக்கை ஏற்பட்டு விடாதா?

ஒரு மனிதனின் தற்போதைய சராசரி வாழ்நாள் 65 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் 15 ஆண்டுகள் மட்டுமே அவனால்/அவளால் உடலளவிலும் மனதளவிலும் குழந்தையாக இருக்க முடியும். ஆனால் இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை மனதளவில் குழந்தைகளாக இருக்க விடுகிறார்களா? அரட்டை அரங்கம் போன்ற TV நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் குழந்தைகள், குழந்தைகள் போலவா பேசுகிறார்கள்?

குழலையும் யாழையும் விட இனிமையானது குழந்தைகளின் மழலை என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய குழந்தைகள் பலருக்கு மழலை பேச்சே வருவதில்லை. நான்கு வயதிலேயே நன்றாக பேச தொடங்கி விடுகிறார்கள். 11 வயதில் பூப்படைந்து விடும் பெண் குழந்தைகள் பலர் இருக்கிறார்கள்.

குழந்தை திருமணத்தை தடை செய்தது போல, பெற்றோர்கள் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலி இடுவதையும் தடை செய்ய வேண்டும். சட்டத்தின் மூலம் அது முடியாது. தனி மனிதர்கள் திருந்துவதின் மூலம் மட்டுமே அது முடியும். நாம் இனியாவது நமது குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போம். அவர்களின் குழந்தை பருவம் அவர்களுக்கு சொந்தமானது. அதை அவர்களிடமிருந்து பிடுங்குவது, பிறர் சொத்துக்களை கொள்ளையடிப்பதை போன்றது.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

Monday, October 16, 2006

கமல் - ஒரு சகாப்தம்

கமல் - இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் எத்துனை விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொருப்பேற்று, துனை நடிகராகி, கதா நாயகனாக பதவி உயர்வு பெற்று இன்று உலக நாயகனாக இருக்கிறார். அவரின் இத்தகைய படிப்படியான வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் அவரது உழைப்பை என்னால் உணர முடிகிறது. இன்றும் அவர் ஒவ்வொரு படம் வெளியிடுவதற்கும் பல தடைகளை கடக்க வேண்டி இருக்கிறது.


தனக்கு தெரியாத அரசியலில் பங்கு கொள்ளாமல் தனக்கு நன்கு தெரிந்த நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்துபவர். தயாரிபாளர்களின் பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் நடிகர்களிடையே தனது சோதனை முயற்சிகளையெல்லாம் தனது சொந்த செலவிலேயே செய்பவர். தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்பவர். இன்றும் வாடகை வீட்டில் குடி இருப்பவர். சினிமாவில் மட்டுமில்லாமல் வெளி உலகிலும் உத்தமர் வேஷம் போடும் நடிகர்களிடையே வெளி வேஷம் போடத் தெரியாத நடிகர். தான் இப்படித்தான் என்று நேர்மையாக உரைக்கும் தீரம் கொண்டவர். இப்படி பல அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.


சிறு வயதிலிருந்து அவரது பல படங்களை பார்த்து ரசித்தவன் நான். அவ்வாறு நான் ரசித்த படங்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளேன்.

1) அபூர்வ ராகங்கள் (1975) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


பெயருக்கேற்ற படி அபூர்வமான கதை. முரண்பாடான உறவுகளையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் பற்றியது. பாலசந்தர் என்றாலே பிறர் தொட அஞ்சும் கதைக் களத்தை தன் கையில் எடுப்பவர் என்பதை மீண்டும் ஒரு முறை உண்மையாக்கிய படம்.

2) மன்மத லீலை (1976) இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


கமல் பெண்ணாசை பிடித்தவனாக நடித்த படம். 'பாலசந்தர் டச்' என்று பரவலாக கூறப்படுவது அதிகம் உள்ள படம். விரஸமான கதையை விரஸமில்லாமல் பாலசந்தரால் மட்டுமே கூற முடியும் என்று எடுத்துக் காட்டிய படம்.


3) 16 வயதினிலே (1977) - இயக்குனர் : திரு. பாரதிராஜா


தமிழ்சினிமா உலகை புரட்டிப்போட்ட ஒரு திரைப்படம். கிராமம் என்றால் பச்சை பசேல் என்று பசுமையாக, பணக்கார நாட்டாமையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்தெறிந்து தமிழ்நாட்டு கிராமங்களின் உண்மை நிலையை மக்களுக்கு காட்டி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய படம். பாரதிராஜா, இளையராஜா, கமல், ரஜினி, ஸ்ரீ தேவி, கவுண்டமணி போன்ற அனைவருக்கும் புகழ் சேர்த்த படம். வில்லன் 'டேய்!' என்று திட்டி விட்டாலே தனது 'இமேஜ்' போய்விடும் என்று பயப்படும் இன்றைய கதாநாயகர்கள் வெட்கி தலைகுனியும் விதம், காதல் இளவரசனாகவும், கல்லூரிப் பெண்களின் ஆதர்ச நாயகனாகவும் இருந்த காலகட்டத்தில் தனது 'இமேஜ்' பற்றிய பயமில்லாமல் கதைக்கு தேவையானதால் ஒரு புதிய இயக்குனரின் (பாரதிராஜா) சொல் கேட்டு கோவணத்துடன் நடிக்க தயங்காத கமலின் செயல் பாராட்டத்தக்கது.





4) நிழல் நிஜமாகிறது (1978) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


ஒரே ஒரு படம் 100 நாள் ஒடிவிட்டாலே அடுத்த ரஜினி நான் தான் என்று நினைத்துக் கொண்டு இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் பீதியில் ஆழ்த்தி அவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் இன்றைய இம்சை அரச நாயகர்களிடையே (வடிவேலுவை சொல்லவில்லை), 16 வயதினிலே என்ற வெள்ளிவிழா படத்தை அடுத்து தனக்கு துளியும் முக்கியத்துவம் இல்லாத கதையில் நடித்ததற்காகவே கமலை பாராட்டலாம். பாலசந்தர் உடைத்தெறிந்த தமிழ் சினிமாவின் எத்தனையோ வரையறைகளில் ஒன்று,


"ஒருவனால் கற்பழிக்கப்பட்ட பெண் ஒன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும், இல்லை அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்."


ஷோபாவை சுற்றியே பின்னப்பட்ட கமலுக்கு சிறிதும் முக்கியத்துவம் இல்லாத அருமையான கதை.



5) மரோசரித்ரா (1978 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


இப்படம் சென்னையில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. காதலுக்கு தடையாக இப்படத்தில் இயக்குனர் கையில் எடுத்திருப்பது மொழியை. தமிழ் பேசும் ஒருவனும், தெலுங்கு பேசும் ஒருத்தியும் காதலிப்பதால் வரும் விளைவுகளே படத்தின் கதை. இப்படம் 'ஏக் தூஜே கேலியே' என்ற பெயரில் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அங்கும் பெரு வெற்றி பெற்றது.


6) சிகப்பு ரோஜாக்கள் (1978) - இயக்குனர் : திரு. பாரதிராஜா


கிராமத்து இயக்குனர் என்று முத்திரை குத்தப்பட்ட பாரதிராஜாவின் பெட்டகத்திலிருந்து வந்த ஒரு 'ஸைக்கோ திரில்லர்'. தான் காதலித்து திருமணம் செய்து கொண்டவன் ஒரு ஸைக்கோ என்பதை அறிந்த உடன் ஸ்ரீ தேவியின் நடிப்பு, உயிர் மேல் உள்ள பயத்தினை அவர் காட்டிய விதம் அனைத்தும் பாராட்டப்பட வேண்டியவை.


7) அவள் அப்படித்தான் (1978) - இயக்குனர் : திரு.C.ருத்ரையா


ஜெயகாந்தனின் கதை. நாவலை இதுவரை படிக்காத காரணத்தினாலோ என்னவோ எனக்கு மிகவும் பிடித்த படம். தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து ஆடும் பெண் கற்பு நிலையை இடது காலால் உடைத்த படம். படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடிகள்.


பெண் விடுதலை பேசிக்கொண்டே பெண்ணுறிமை-பெண் விடுதலை என்றால் என்னவென்றே தெரியாத பெண்ணை திருமணம் செய்யும் நாயகனாக கமல், இருமுறை காதலித்து, கற்பிழந்த நாயகியாக ஸ்ரீ பிரியா. அட்டகாசமான படம்.

8) நினைத்தாலே இனிக்கும் (1979) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


பின்னர் வேறு வேறு பெயர்களில் பல முறை படமாக்க பட்டுவிட்ட கதை. நோயினால் பாதிக்கப்படும் கதா நாயகி. இசைக் கலைஞன் நாயகன். நாயகனின் நன்பன். இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதை. படம் பார்த்தவர்களால் மறக்க முடியாதது 'சம்போ சிவ சம்போ' கதா பாத்திரம் தான். ரஜினி, கமல் இருவருக்குமே சம்பளம் குறைவாக கிடைப்பதால், இனி இருவரும் தனித்தனியே நடிப்பது என்று முடிவு செய்தது இப்படத்தில் நடிக்கும் போது தான். சூப்பர் ஸ்டார் உருவாக அடித்தளம் இட்டது இப்படம் தான்.


9) வறுமையின் நிறம் சிகப்பு (1980) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


1980 களில் இந்தியாவில் தலைவிரித்தாடிய தீண்டாமை, பெண்ணடிமை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட திரைக்கதை. வேலையில்லா பட்டதாரிகளான மூன்று இளைஞர்கள். மூவரும் எவ்வாறு அவர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர் கொள்கிறார்கள் என்பது கதை. எக்குலத்தில் பிறப்பதும் உயர்வல்ல, எத்தொழில் செய்வதும் இழிவல்ல என்ற அருமையான கருத்தை கூறும் கதை.




10) மீண்டும் கோகிலா (1981) - இயக்குனர் : திரு. G.N.ரங்கராஜன்


மனைவிக்கு துரோகம் செய்யும் நாயகனின் கதை. அழகான மனைவியை விட்டு நடிகை மீது ஆசைப்படும் நாயகனாக கமல். அவரது மனைவியாக ஸ்ரீ தேவி. நடிகையாக தீபா. அழகான கதை; அருமையான பாத்திரப் படைப்பு.


11) ராஜ பார்வை (1981) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


இது கமலின் 100வது படம். முதல் தயாரிப்பு. பார்வையற்ற ஒரு வயலின் கலைஞனின் கதை. தனது சொந்த தயாரிப்பினாலோ என்னவோ, இதற்கு முன் நாம் பார்த்திராத கமலை இதில் பார்க்கலாம். பார்வையற்ற மனிதராகவே வாழ்ந்து காட்டி இருப்பார். நெஞ்சை தொடும் உருக்கமான கதை.


12) மூன்றாம் பிறை (1982) - இயக்குனர் : திரு. பாலு மகேந்திரா


கமலுக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்த படம். படம் முழுதும் ஸ்ரீ தேவியின் தான் நடிப்பில் ராணி என்று நிரூபித்து காட்ட, இறுதியில் ஒரே காட்சியில் கமல், தான் நடிப்பில் ராஜா அல்ல சக்கரவர்த்தி என்று பரைசாற்றிய படம்.


13) ஸிம்லா ஸ்பெஷல் (1982) - இயக்குனர் : திரு. V. ஸ்ரீனிவாசன்

கமல் முதன் முதலில் நடித்த முழு நீள நகைச்சுவை படம். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக சொல்லும் படம். கமல், S. Ve. சேகர், ஸ்ரீ பிரியா மூவரும் நகைச்சுவை நடிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்த படம்.

14) சாகர சங்கமம் (1983 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.விஷ்வநாத்


அருமையான ஒரு இசைக் காவியம். நடனத்தையே தனது உயிர் மூச்சாக கொண்ட ஏழை நாயகனுக்கும் நடனத்தை நேசிக்கும் விதவை நாயகிக்கும் இடையில் பூக்கும் காதலை அழகாக கூறிய படம். படம் பார்க்கும் அனைவரையும் அழ வைக்கும் இறுதிக் காட்சி. (தமிழில் : சலங்கை ஒலி)


15) ஸ்வாதி முத்யம் (1986 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.விஷ்வநாத்


ஒரு வயதான மனிதனின் கடைசி கால கட்டத்தில் அவனால் அசைப்போடப்படும் அவனது இறந்த கால வாழ்க்கை, அவனது காதல். ஸைக்கோவாக சிகப்பு ரோஜாக்களில் நடித்து நம்மை பயமுறுத்திய கமல் இதில் மனநலம் குன்றியவனாக. (தமிழில் : சிப்பிக்குள் முத்து)


16) புன்னகை மன்னன் (1986) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம். இரட்டை வேடமென்றால் இருவரையும் வேறுபடுத்திக் காட்ட ஒருவருக்கு சிகப்பு சட்டையும் மற்றொருவருக்கு கருப்பு சட்டையும் தந்த காலத்தில், காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட நடன ஆசிரியராகவும், சாப்ளின் செல்லப்பாவாகவும் இரு வேறு பாத்திரங்களில் வந்து இரட்டை வேடங்களை இப்படியும் வெளிப்படுத்தலாம் என்று கட்டிய படம். ஈழத் தமிழர்களின் பிரச்சனை, தற்கொலை எதிர்ப்பு போன்றவற்றை மேலோட்டமாக தொட்டு செல்லும் படம்.

17) நாயகன் (1987) - இயக்குனர் : திரு.மணிரத்னம்

உலகின் தலை சிறந்த படங்களுள் ஒன்று. கமலுக்கு இரண்டாம் முறை தேசிய விருது அளித்த படம். அவர் வேலு நாயக்கராக வாழ்ந்து காட்டிய படம். தமிழகத்தின் முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் திரு. M. G. ராமசந்திரன் அவர்கள் தாம் இயற்கை எய்தும் முன்பு பல முறை பார்த்து ரசித்த படம். (ஒருவரை மரணப் படுக்கையில் மகிழ்விப்பதை காட்டிலும் சிறந்த செயல் வேறு உண்டா?)


18) பேசும் படம் (1987) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


கமலின் மற்றுமொரு புதிய முயற்சி. வசனமே இல்லாத படம். கதை ஒன்றும் புதிது இல்லை என்றாலும்; காதல், சோகம், பழி, நகைச்சுவை போன்ற பலவற்றை வசனமே இல்லாமலும் வெளிப்படுத்த முடியும் என்று கமல் நிரூபித்த படம்.


19) சத்யா (1988) - இயக்குனர் : திரு. சுரேஷ் கிருஷ்ணா


பொதுவாகவே சில இயக்குனர்களின் முதல் படத்தை பார்த்தீர்களானால் மற்ற இயக்குனர்களின் படத்திலிருந்து மாறுபட்டு சிறப்பாக இருக்கும். அப்படங்களை பார்த்தால் அது ஒரு புதிய இயக்குனர் இயக்கிய படம் என்று நம்மால் நம்பவே முடியாது. சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் சிறு வயதிலிருந்து அவர்களின் மனதில் பலமுறை அசைபோடப்பட்ட கதையை அவர்கள் படமாக்குவது அதற்கு ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சத்யா.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை அழிக்கும் நாயகன் என்ற அரதப்பழசான கதையை காட்சிக்கு காட்சி புதுமை கலந்து அளித்திருப்பார்கள் கமலும், சுரேஷ் கிருஷ்ணாவும்.


20) அபூர்வ சகோதரர்கள் (1989) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


இதுவும் அப்பாவைக் கொன்ற வில்லன்களை பதிவாங்கும் பழைய கதை. புதுமை என்னவென்றால், இரு கமலுக்கும் உள்ள வித்தியாசமே. தமிழ் சினிமா தொழில்நுட்பம் வளராத அன்றைய கால கட்டங்களில், காலை மடக்கி, குழிக்குள் அமர்ந்து குள்ள அப்புவை உருவாக்கிய கமலை பாராட்ட வேண்டியது அவசியம். படத்தின் திருப்புமுனை காட்சியில் இளையராஜாவின் பின்னனி இசை அவர் ஒரு இசைஞாணி என்று பரைசாற்றியது.

21) மைக்கேல் மதன காமராஜன் (1990) - இயக்குனர் : திரு.சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


கமல் நான்கு வேடங்களில் நடித்த முழு நீள நகைச்சுவை படம். தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை படங்களுள் ஒன்று. கிரேஸி மோகனின் வசனங்கள் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம். இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத, குழந்தைகளும் ரசிக்க கூடிய நகைச்சுவை. நட்சத்திரப் பட்டாளமே நமக்கு கிச்சு கிச்சு மூட்டினாலும் நம்மை அதிகம் கவர்வது காமேஷ்வரன், அவிநாசி மற்றும் பீம்பாய் மூவரும் தான்.


22) குணா (1991) - இயக்குனர் : திரு.சந்தானபாரதி


கமல் மனநிலை குன்றியவனாக நடித்த மற்றுமொரு படம். கமல் சமீபத்திய இருவேறு பேட்டிகளில் இப்படத்திற்கு 'மதிகெட்டான் சோலை' என்று பெயர் வைக்க தமிழ் சினிமாவின் சந்தை இடம் கொடுக்கவில்லை என்றும், காதல் கொண்டேன் பார்த்துவிட்டு குணாவிற்கு இப்படி ஒரு climax வைக்காமல் விட்டுவிட்டேனே என்றும் ஆதங்கப் பட்டார்.


படுதோல்வி அடைந்த ஒரு சிறந்த படம் என்பதை தவிர இப்படத்தை பற்றி சொல்ல வேறு ஒன்றும் இல்லை.

23) தேவர் மகன் (1992) - இயக்குனர் : திரு.பரதன்


தமிழ் சினிமாவின் நடிப்புலக சக்கரவர்த்திகள் இருவர் இனைந்து நடித்த படம். இப்படம் பற்றி கமல் கூறுகையில், சிவாஜியைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இப்படம் தேவர் மகன் அல்ல வெறும் மகன் தான் என்று குறிப்பிட்டார். அதை நான் வழி மொழிகிறேன். ஒருபடத்தின் வெற்றியில் கதைக்கு எத்துனை பங்கு உண்டோ அதே சதவிகித பங்கு கதாபாத்திர தேர்வுக்கும் உண்டு.


இப்படத்தின் பெரும் வெற்றியில் பங்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாரு நடிக நடிகையரை தேர்வு செய்த கமலுக்கு உண்டு.



24) மகாநதி (1994) - இயக்குனர் : திரு.சந்தானபாரதி


கமல் நடித்த 200க்கும் மேற்பட்ட படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு நல்ல படத்தை சொல்ல சொல்லி யாராவது கேட்டால் நான் யோசிக்காமல் சொல்வேன் மகாநதி என்று. அப்பாவி கிராமத்து குடும்பஸ்தனாக, சிறைக் கைதியாக, ஏமாற்றப்பட்ட ஒரு தொழிலதிபராக, மனைவியை இழந்த ஒரு கணவனாக, குழந்தைகளை இழந்த ஒரு தந்தையாக, பழிவாங்க துடிக்கும் ஒரு சராசரி மனிதனாக இப்படி பல்வேறு பரிமாணங்களில் வந்து கமல் அசத்திய படம். கொச்சின் ஹனிஃபாவின் வில்லத்தனமும் மிகவும் பாராட்டத்தக்கது.

25) சதி லீலாவதி (1995) - இயக்குனர் : திரு.பாலு மகேந்திரா


கமல் கோவை சக்திவேல் கவுண்டராக நகைச்சுவையில் பின்னியெடுத்த படம். கமல், கோவை சரளா, கல்பனா, ரமேஷ் அரவிந்த், ஹீரா அனைவருமே சிறப்பாக நடித்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.


26) குருதிப் புனல் (1995) - இயக்குனர் : திரு.P.C.ஸ்ரீ ராம்


கமல் போலீஸ் அதிகாரியாக நடித்த படம். வன்முறை சற்று அதிகம் என்றாலும் கதை மற்றும் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமானது. பாடல்களே இல்லாததும் ஒரு புதுமை. கமல் மற்றும் கௌதமி இருவருக்குமிடையே chemistry இப்படத்தில் work out ஆனது போல், வேறு எந்த நாயக நாயகிக்கும் தமிழ் சினிமாவில் work out ஆனது இல்லை.

27) இந்தியன் (1996) - இயக்குனர் : திரு.ஷங்கர்


லஞ்ச ஒழிப்பை மூலமாக கொண்ட படம். லஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் இரண்டாம் முறை போராட்டத்தில் குதித்து லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவதே கதை. கமலுக்கு மூன்றாம் முறை தேசிய விருது வாங்கிக் கொடுத்த படம். தமிழ் சினிமாவில் இரட்டை வேடங்களில் பல புதுமைகளை செய்யத் தொடங்கியது இப்படத்திற்கு பிறகு தான்.


28) அவ்வை சண்முகி (1996) - இயக்குனர் : திரு.K.S.ரவிகுமார்


97ல் வெளிவந்திருந்தால் கமலுக்கு நான்காம் முறை தேசிய விருதை வாங்கிக் கொடுத்திருக்கும். 96ல் கமல் இந்தியனுக்கு தேசிய விருது வாங்க கடும் போட்டியாக இருந்தது இப்படம். சட்டபூர்வமாக விவாகரத்து செய்யப்பட்ட கணவன், மனைவி மற்றும் அவர்களின் குழந்தை இம்மூவருக்குமிடையே நடக்கும் கதை. நகைச்சுவையாக சொல்ல முற்பட்டாலும் கதையின் கருத்து மிகவும் serious ஆனது.

29) ஹே ராம் (2000) - இயக்குனர் : திரு.கமலஹாசன்


மகாத்மாவின் மீது பலருக்கு பல விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர் தேசப்பிதா என்பது மாற்ற முடியாதது. அவரின் கொலையை மையமாக வைத்து கமல் முதல் முறையாக இயக்கிய படம். சாகேத் ராமின் மனைவி கொடூரமாக கற்பழிக்கப்படும் காட்சியாகட்டும், அவரின் நன்பன் கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சியாகட்டும் நம்மை 50 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு சென்று விடுகின்றன. படத்தை பார்த்து விட்டு மகாத்மாவின் சிலையை பார்க்கும் போது, 'இந்தியா ஒரு அஹிம்சை நாடு' என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டுத்தான் அவர் புன்னகைக்கிறாரோ என்று தோன்றுகிறது.


30) அன்பே சிவம் (2003) - இயக்குனர் : திரு.சுந்தர் C.

மகாநதிக்கு அடுத்து கமல் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அன்பே சிவம். கமல், மாதவன் இருவரின் நடிப்பு, ஒரு காதல் தோற்றதும் மறு காதலை இயல்பாய் தேடும் நாயகி, கம்யூனிஸ சிந்தனைகள் என்று பரவலாக பல நல்ல விஷயங்கள் உள்ள படம். தெருக்கூத்துக் கலையை அழகாக கையான்டிருப்பதும் மற்றுமொரு சிறப்பு.











நான் மேலே குறிப்பிட்டுள்ளது எனக்கு மிகவும் பிடித்த கமல் நடித்த 30 திரைப்படங்களை பற்றிய எனது கருத்தே ஆகும். அப்படங்களின் விமர்சனங்கள் இல்லை. இதை படிக்கும் பொழுது கமலின் பல சிறந்த படங்களை நான் விட்டு விட்டதை நீங்கள் உணரலாம்.


அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, அழியாத கோலங்கள், டிக் டிக் டிக், உல்லாச பறவைகள், உயர்ந்த உள்ளம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி விழா..... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் வேட்டையாடு விளையாடு வரை. ஆனால் என்ன செய்வது? பதிவு எழுதத் தொடங்கும் முன்பு சிறந்த 10 படங்களை மட்டுமே குறிப்பிட முடிவு செய்தேன். அது 30 ஆகி விட்டது.


நான் மேற்கூறிய படங்களை நன்கு கவனித்தீர்களானால் கமலின் திரைத்துரை வாழ்க்கை மூன்றாக பிறிந்து இருப்பதை காணலாம்.


1. ராஜ பார்வைக்கு முன்


இக்கால கட்டத்தில் அவர் நல்ல இயக்குனர்கள் இயக்கிய சில நல்ல படங்களில் நடித்தார். அவ்வளவுதான். இப்படங்களில் வேறு யார் நடித்திருந்தாலும் படங்கள் நன்றாகவே இருந்திருக்கும். அப்படங்களுக்கு கமல் தேவை இல்லை. ஆனாலும் அவ்வியக்குனர்களின் முதல் தேர்வாக கமல் இருந்ததற்கு அவரை நாம் பாராட்ட வேண்டும்.


2. ராஜ பார்வைக்கு பின்; நாயகனுக்கு முன்


இக்கால கட்டத்தில் தனக்கு பொருத்தமான படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அவர் சற்று பின்தங்கினார் என்று தான் கூற வேண்டும். 100வது படமான ராஜ பார்வையிலிருந்து 170வது படமான நாயகன் வரை அவர் நடித்த 70 படங்களில் அவரால் விரல் விட்டு எண்ணக்கூடிய நல்ல படங்களையே தர முடிந்தது. இதற்கு கமல் மீது மட்டுமே நாம் குற்றம் சாட்டுவது தவறு. கமலின் இந்த பின்தங்கலுக்கு ராஜ பார்வையை படுதோல்வி அடைய செய்து சகலகலா வல்லவனையும், தூங்காதே தம்பி தூங்காதேவையும் வெள்ளிவிழா காண வைத்த தமிழ் ரசிகமணிகளும் முக்கிய காரணம். 'Survival Fear' என்பது இக்கால கட்டத்தில் கமலுக்கு அதிகம் இருந்திருக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன்.


3. நாயகனுக்கு பின்


இக்கால கட்டத்தில்தான் நாம் கமலின் விஸ்வரூபத்தை கண்டோம். காதல் இளவரசன் கமலஹாசனாக இருந்தவர், பத்மஸ்ரீ, உலக நாயகன், கலைஞாணி, டாக்டர் கமலஹாசனாக மாறியது இக்கால கட்டத்தில்தான். DTS, Digital Film Making, Digital Live Sound Recording, Make-Up ல் புதுமை போன்ற பல புதுமைகளை தமிழ் சினிமாவிற்கு அவர் அறிமுகப்படுத்தியதும் இக்கால கட்டத்தில் தான்.

இதோ அவரின் தசாவதாரத்தை அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். Nov 7 அன்று பிறந்த நாள் காணும் நமது உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர் மேன்மேலும் பல சாதனைகள் புறியவும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, September 22, 2006

என்னை அதிகம் பாதித்த நாவல்கள்


"உண்மையில் உங்களை பொன்னியின் செல்வனை விட கவர்ந்த புத்தகம் எது?", என்று வெட்டிப்பயல் அவர்கள் என்னை கேட்டார்கள். அதன் விளைவுதான் இந்த பதிவு.

நான் படித்த வரையில் பொன்னியின் செல்வனை விட எனக்கு அதிகம் பிடித்த நாவல் எதுவும் இல்லை. ஆனால் பொன்னியின் செல்வனை விட என்னை அதிகம் பாதித்த நாவல்கள் சில உண்டு. ஏன் 'சில' என்று குறிப்பிடுகிறேன் என்றால் நான் படித்தவைகள் மிகச் சிலவே.


1. நாவல்: சுழிக்காற்று, ஆசிரியர்: கௌசிகன்

1970 களில் கல்கியில் தொடராக வெளிவந்த இந்த நாவல் நான் படித்த துப்பறியும் நாவல்களுக்கெல்லாம் ஆசான் என்று கூறுவேன். விடுமுறையை தனது காதலியின் கிராமத்தில் கழிக்க சென்னையிலிருந்து அவளது கிராமத்திற்கு வரும் துப்பறியும் நிபுணன் சேகர், அங்கே நடக்கும் தொடர் கொலைகளை கண்டு, அதற்கான காரணங்களையும், அதை செய்தவர்களையும் அனைவருக்கும் அடையாளம் காட்டுவதே கதை. கதை ஒன்றும் புதிது இல்லை என்றாலும், கதைக்களமும், சம்பவங்களும், அதை ஆசிரியர் கூறும் விதமும் என்னை வெகுவாக கவர்ந்தன. முடிவில் எல்லா முடிச்சுக்களும் அவிழும் பொழுது நமக்கு அளவில்லா ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. குற்றவாளிகள் மட்டும் நமது ஆச்சரியத்தை கூட்டவில்லை, குற்றத்திற்கான காரணங்களும் நமக்கு வியப்பளிக்கிறது. கால் நூற்றாண்டுக்கு பிறகு இப்பொழுது படித்தாலும் சுவை குன்றாமல் இருப்பதே இதன் சிறப்பாகும்.

2. நாவல்: போராட்டங்கள், ஆசிரியர்: ர. சு. நல்லபெருமாள்

இதுவும் கல்கியில் தொடராக வந்த நாவலே. இக்கதையின் சம்பவங்கள் 1960 களில் நடக்கின்றன. கதையின் நாயகன் முரளி ஒரு பத்திரிக்கை ஆசிரியர். நேர்மையாக, தரம் வாய்ந்த பாரதமணி என்ற ஒரு பத்திரிக்கை நடத்த அவர் சந்திக்கும் போராட்டங்களே கதை. இந்தோ சீன போர் நடந்த கால கட்டங்களில் சம்பவங்கள் நடப்பதாலோ என்னவோ கம்யூனிஸ, சீன, ரஷ்ய எதிர்ப்புகள் கதை முழுவதும் இருக்கின்றன.

முடிவில் தனது சொத்துக்கள் அனைத்தையும் அவர் இழந்து வெளிநாட்டுக்கு செல்லும் பொழுது நமக்கு நெஞ்சு கனக்கிறது.

3. நாவல்: அந்தக் கணல் வீசும் நேரம், ஆசிரியர்: சுதாங்கன்

"The only story that can be claimed as the best and probably the worst" என்று இந்த நாவலை எனக்கு பரிசளித்த எனது சகோதரர் குறிப்பிட்டார். அதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். 1990 களில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்த நாவல், அப்பொழுது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆறு ஆண்டுகளாக இனை பிறியாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில் புயலாக ஒரு கடிதம் வருகிறது. அது மனைவி கௌசல்யாவிற்கு அவளது கல்லூரித் தோழன் தீபக்கிடமிருந்து வருகிறது. அதில் அவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் தவறாக நடந்து கொண்டதற்கான குற்ற உணர்ச்சியை தீபக் வெளியிட அவர்கள் குடும்பத்தில் புயல் வீசுகிறது.

கதையின் கரு, 'மிகவும் தூய்மையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் அறியாமல் எப்பொழுதோ செய்த தவருக்காக வாழ் நாளெல்லாம் குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டாம்', என்பது தான்.

ஆனால் இக்கதை ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகவே நான் கருதுகிறேன்.

4. நாவல்: உண்மையே உன் விலை என்ன?, ஆசிரியர்: சோ

இது உன்மையில் ஒரு நாவல் கிடையாது. சோ அவர்களின் நாடகம் பின்னாளில் புத்தக வடிவில் எனக்கு கிடைத்தது.

கொலை குற்றம் சாட்டப்பட்ட தாமஸ் தியாகராஜன் உண்மையில் ஒரு நிரபராதி என்பதை அவனது confession இல் அறிந்து கொள்ளும் பாதிரியார் அருமை நாயகம் உண்மையை நிலை நாட்ட மேற் கொள்ளும் போராட்டங்களே கதை.

முடிவில் அவர் தனது உயிரை இழந்து உண்மையை நிலை நாட்டுகிறார். 'உண்மையின் விலை ஒரு நேர்மையான பாதிரியாரின் உயிர்' என்று தாமஸ் குறிப்பிடும் பொழுது நமக்கும் இச்சமூகத்தின் மீது வெறுப்பு வருகிறது.

5.நாவல்: கனவுத் தொழிற்சாலை, ஆசிரியர்: சுஜாதா


உங்களில் பலரும் படித்திருப்பீர்கள். புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. ஒரு தமிழ் திரைப்பட கதாநாயகனின் (அருண்) கதை. அருண் திரைத்துரையில் இருப்பதாலேயே அவனுக்கு பெண் கொடுக்க அவனது காதலியின் பெற்றோர்கள் மறுப்பதும், அதனால் ஆத்திரம் கொண்ட அவன் வேறொரு கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதும், தனது காதலியை திருமணம் செய்து கொண்டவன் அவளையும், அருணையும் சேர்த்து வைத்து சந்தேகப் படுவதையும் சுஜாதா தன் பாணியில் அழகாக குறிப்பிடுகிறார்.

அருணின் வாழ்க்கையை மட்டுமே பிரதானமாக கூறினாலும், என்னை அதிகம் கவர்ந்தது அவனது காதலியின் கதை மட்டுமே.

எவ்வளவு தான் அவள் மீது சந்தேகப்பட்டாலும், அடித்தாலும் இரவு புணர்வதை நாள் தவறாமல் செய்யும் கணவன். கர்ப காலத்தின் பொழுது கூட புணர்வதை நிறுத்தாத மிருகம். பிரசவம் முடிந்து இரண்டே மாதத்தில் அவள் மீது மிகுந்த அக்கரை கொண்டவன் போல் நடித்து அவளை மீண்டும் தனது வீட்டிற்கே அவன் அழைத்து செல்லும் பொழுது, அழும் அவளது தாயாரிடம் அவளது சகோதரன் கூறுகிறான், 'கவலைப் படாதே அம்மா. அவள் கூடிய சீக்கிரமே அடுத்த பிரசவத்திற்கு வந்து விடுவாள்'.

மனைவியை Sexual Machine ஆக கருதும் ஆண்களுக்கு இந்நாவல் ஒரு செருப்படி.

6. நாவல்: கோணல் பக்கங்கள், ஆசிரியர்: சாரு நிவேதிதா

சாருவின் பெரும்பாலான எழுத்தின் மீது எவ்வளவு தான் எனக்கு நல்ல கருத்து இல்லாமல் இருந்தாலும், அவரின் ஒரு சில படைப்புகள் மிக சிறந்தவை. அவரின் எழுத்தில் உள்ள சுய புராணத்தையும், மற்றவர்களை எள்ளி நகையாடுவதையும் ஒதுக்கி விட்டு பார்த்தோமானால் அவரின் பல எழுத்துக்கள் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கவே செய்தன.

சமூகம் தம் மீது போர்த்திய பல கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தவர் சாரு நிவேதிதா.

7. நாவல்: The Count Of Monte Cristo, ஆசிரியர்: Alexandre Dumas

நான் பொதுவாகவே ஆங்கில நாவல்கள் அதிகம் படிப்பது இல்லை. 1800 களில் ஐரோப்பாவில் நடக்கும் இக்கதை நான் படித்த வெகு சில ஆங்கில நாவல்களில் என்னை அதிகம் கவர்ந்தது.

நண்பர்கள் போல் நடித்த நான்கு துரோகிகளின் சதியால் வாழ்நாளெல்லாம் சிறையில் அடைபட்டு கிடக்கிறான் நாயகன். சிறையில் அவனுக்கு வேறொருவனது நட்பு கிடைக்க, அவன் சாகும் தருவாயில், அவனிடமிருந்து ஒரு புதையல் ரகசியத்தை அறிந்து கொண்டு, அவனது பிணம் போல் நடித்து சிறையிலிருந்து தப்பி செல்கிறான்.

14 ஆண்டுகள் கழித்து அவன் வெளிவரும் பொழுது, அவனுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அவனது தந்தை பசியால் இறந்ததையும், தனக்கு துரோகம் செய்த நால்வரில் ஒருவனை தனது காதலி திருமணம் செய்து கொண்டதையும் அறிந்து கொதித்து போகிறான்.

அவன் எவ்வாறு அவர்களை பழி வாங்குகிறான், தனது காதலியை என்ன செய்தான் என்பது தான் கதை.

நெப்போலியன் காலத்திய ஐரோப்பிய கலாச்சாரத்தை அழகாக வெளிக் காட்டுகிறது இக்கதை.

நான் மேற்கூறியவை அனைத்தும் எந்த வித வரிசைப் படுத்துதலும் இன்றி எனது நியாபகத்தில் வந்தவாறு குறிப்பிட்டவையே ஆகும்.