Saturday, December 30, 2006

குழலினிது யாழினிது!!!

சமீபத்தில் திரு.சர்வேசன் அவர்களின் "மாதவன் கலக்கல்ஸ்" என்ற ஒரு பதிவை படிக்க [பார்க்க] நேர்ந்தது. அதில் மழலை மாறாத மாதவன் அமெரிக்க மாகாணங்களின் தலை நகரங்களை சரியாக கூற, அதை அவனது தந்தை ஒளிப்பதிவு செய்திருந்தார். பதிவின் முடிவில் "Excellent Madhava!" என்று பாராட்டு வேறு. இவர் என்றில்லை, பொதுவாகவே இன்றைய இந்திய பெற்றோர்களிடையே தத்தம் குழந்தைகளை இது போன்ற செயல்களை செய்ய வைத்து பெருமை அடையும் ஒரு வித மன நோய் இருக்கிறது. ஆம் இதுவும் ஒரு வகை மன நோயே. மூன்று நான்கு வயதிலிருந்தே பாட்டு, நடனம், ஓவியம் இன்னும் பிற கலைகள் பொன்றவற்றை பயின்று வரும் குழந்தைகள் பலர் அதை TVயில் கூற நான் கேட்டிருக்கிறேன். அந்த வயதில் தனக்கு பிடித்த ஒரு துறையை தேர்வு செய்யும் அறிவு குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்? ஆக பெற்றோர் தாங்கள் விரும்பும் ஒரு துறையில் தங்களது குழந்தைகளை சாதிக்க வைத்து தாங்கள் பெருமை அடைய தங்களது குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலி கொடுக்கிறார்கள்.

ஐந்து வயது குழந்தை பொருள் தெரியாமல் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதாலும், மாகானங்களின் தலை நகரங்களை கூறுவதாலும் என்ன பலன் ஏற்படப் போகிறது? இந்திய கல்வித்திட்டத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டியது மனப்பாடம் செய்யும் முறை என்று ஆய்வாளர்கள் பல முறை கூறியும் இத்தகைய பெற்றொர்கள் திருந்தவில்லை. இவர்களின் ஊக்குவிப்பாலும், பாராட்டுகளாலும் குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்வதே அறிவை வளர்க்கும் முறை என்ற நம்பிக்கை ஏற்பட்டு விடாதா?

ஒரு மனிதனின் தற்போதைய சராசரி வாழ்நாள் 65 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் 15 ஆண்டுகள் மட்டுமே அவனால்/அவளால் உடலளவிலும் மனதளவிலும் குழந்தையாக இருக்க முடியும். ஆனால் இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை மனதளவில் குழந்தைகளாக இருக்க விடுகிறார்களா? அரட்டை அரங்கம் போன்ற TV நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் குழந்தைகள், குழந்தைகள் போலவா பேசுகிறார்கள்?

குழலையும் யாழையும் விட இனிமையானது குழந்தைகளின் மழலை என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய குழந்தைகள் பலருக்கு மழலை பேச்சே வருவதில்லை. நான்கு வயதிலேயே நன்றாக பேச தொடங்கி விடுகிறார்கள். 11 வயதில் பூப்படைந்து விடும் பெண் குழந்தைகள் பலர் இருக்கிறார்கள்.

குழந்தை திருமணத்தை தடை செய்தது போல, பெற்றோர்கள் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலி இடுவதையும் தடை செய்ய வேண்டும். சட்டத்தின் மூலம் அது முடியாது. தனி மனிதர்கள் திருந்துவதின் மூலம் மட்டுமே அது முடியும். நாம் இனியாவது நமது குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போம். அவர்களின் குழந்தை பருவம் அவர்களுக்கு சொந்தமானது. அதை அவர்களிடமிருந்து பிடுங்குவது, பிறர் சொத்துக்களை கொள்ளையடிப்பதை போன்றது.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

Monday, October 16, 2006

கமல் - ஒரு சகாப்தம்

கமல் - இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் எத்துனை விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொருப்பேற்று, துனை நடிகராகி, கதா நாயகனாக பதவி உயர்வு பெற்று இன்று உலக நாயகனாக இருக்கிறார். அவரின் இத்தகைய படிப்படியான வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் அவரது உழைப்பை என்னால் உணர முடிகிறது. இன்றும் அவர் ஒவ்வொரு படம் வெளியிடுவதற்கும் பல தடைகளை கடக்க வேண்டி இருக்கிறது.


தனக்கு தெரியாத அரசியலில் பங்கு கொள்ளாமல் தனக்கு நன்கு தெரிந்த நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்துபவர். தயாரிபாளர்களின் பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் நடிகர்களிடையே தனது சோதனை முயற்சிகளையெல்லாம் தனது சொந்த செலவிலேயே செய்பவர். தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்பவர். இன்றும் வாடகை வீட்டில் குடி இருப்பவர். சினிமாவில் மட்டுமில்லாமல் வெளி உலகிலும் உத்தமர் வேஷம் போடும் நடிகர்களிடையே வெளி வேஷம் போடத் தெரியாத நடிகர். தான் இப்படித்தான் என்று நேர்மையாக உரைக்கும் தீரம் கொண்டவர். இப்படி பல அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.


சிறு வயதிலிருந்து அவரது பல படங்களை பார்த்து ரசித்தவன் நான். அவ்வாறு நான் ரசித்த படங்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளேன்.

1) அபூர்வ ராகங்கள் (1975) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


பெயருக்கேற்ற படி அபூர்வமான கதை. முரண்பாடான உறவுகளையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் பற்றியது. பாலசந்தர் என்றாலே பிறர் தொட அஞ்சும் கதைக் களத்தை தன் கையில் எடுப்பவர் என்பதை மீண்டும் ஒரு முறை உண்மையாக்கிய படம்.

2) மன்மத லீலை (1976) இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


கமல் பெண்ணாசை பிடித்தவனாக நடித்த படம். 'பாலசந்தர் டச்' என்று பரவலாக கூறப்படுவது அதிகம் உள்ள படம். விரஸமான கதையை விரஸமில்லாமல் பாலசந்தரால் மட்டுமே கூற முடியும் என்று எடுத்துக் காட்டிய படம்.


3) 16 வயதினிலே (1977) - இயக்குனர் : திரு. பாரதிராஜா


தமிழ்சினிமா உலகை புரட்டிப்போட்ட ஒரு திரைப்படம். கிராமம் என்றால் பச்சை பசேல் என்று பசுமையாக, பணக்கார நாட்டாமையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்தெறிந்து தமிழ்நாட்டு கிராமங்களின் உண்மை நிலையை மக்களுக்கு காட்டி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய படம். பாரதிராஜா, இளையராஜா, கமல், ரஜினி, ஸ்ரீ தேவி, கவுண்டமணி போன்ற அனைவருக்கும் புகழ் சேர்த்த படம். வில்லன் 'டேய்!' என்று திட்டி விட்டாலே தனது 'இமேஜ்' போய்விடும் என்று பயப்படும் இன்றைய கதாநாயகர்கள் வெட்கி தலைகுனியும் விதம், காதல் இளவரசனாகவும், கல்லூரிப் பெண்களின் ஆதர்ச நாயகனாகவும் இருந்த காலகட்டத்தில் தனது 'இமேஜ்' பற்றிய பயமில்லாமல் கதைக்கு தேவையானதால் ஒரு புதிய இயக்குனரின் (பாரதிராஜா) சொல் கேட்டு கோவணத்துடன் நடிக்க தயங்காத கமலின் செயல் பாராட்டத்தக்கது.





4) நிழல் நிஜமாகிறது (1978) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


ஒரே ஒரு படம் 100 நாள் ஒடிவிட்டாலே அடுத்த ரஜினி நான் தான் என்று நினைத்துக் கொண்டு இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் பீதியில் ஆழ்த்தி அவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் இன்றைய இம்சை அரச நாயகர்களிடையே (வடிவேலுவை சொல்லவில்லை), 16 வயதினிலே என்ற வெள்ளிவிழா படத்தை அடுத்து தனக்கு துளியும் முக்கியத்துவம் இல்லாத கதையில் நடித்ததற்காகவே கமலை பாராட்டலாம். பாலசந்தர் உடைத்தெறிந்த தமிழ் சினிமாவின் எத்தனையோ வரையறைகளில் ஒன்று,


"ஒருவனால் கற்பழிக்கப்பட்ட பெண் ஒன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும், இல்லை அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்."


ஷோபாவை சுற்றியே பின்னப்பட்ட கமலுக்கு சிறிதும் முக்கியத்துவம் இல்லாத அருமையான கதை.



5) மரோசரித்ரா (1978 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


இப்படம் சென்னையில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. காதலுக்கு தடையாக இப்படத்தில் இயக்குனர் கையில் எடுத்திருப்பது மொழியை. தமிழ் பேசும் ஒருவனும், தெலுங்கு பேசும் ஒருத்தியும் காதலிப்பதால் வரும் விளைவுகளே படத்தின் கதை. இப்படம் 'ஏக் தூஜே கேலியே' என்ற பெயரில் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அங்கும் பெரு வெற்றி பெற்றது.


6) சிகப்பு ரோஜாக்கள் (1978) - இயக்குனர் : திரு. பாரதிராஜா


கிராமத்து இயக்குனர் என்று முத்திரை குத்தப்பட்ட பாரதிராஜாவின் பெட்டகத்திலிருந்து வந்த ஒரு 'ஸைக்கோ திரில்லர்'. தான் காதலித்து திருமணம் செய்து கொண்டவன் ஒரு ஸைக்கோ என்பதை அறிந்த உடன் ஸ்ரீ தேவியின் நடிப்பு, உயிர் மேல் உள்ள பயத்தினை அவர் காட்டிய விதம் அனைத்தும் பாராட்டப்பட வேண்டியவை.


7) அவள் அப்படித்தான் (1978) - இயக்குனர் : திரு.C.ருத்ரையா


ஜெயகாந்தனின் கதை. நாவலை இதுவரை படிக்காத காரணத்தினாலோ என்னவோ எனக்கு மிகவும் பிடித்த படம். தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து ஆடும் பெண் கற்பு நிலையை இடது காலால் உடைத்த படம். படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடிகள்.


பெண் விடுதலை பேசிக்கொண்டே பெண்ணுறிமை-பெண் விடுதலை என்றால் என்னவென்றே தெரியாத பெண்ணை திருமணம் செய்யும் நாயகனாக கமல், இருமுறை காதலித்து, கற்பிழந்த நாயகியாக ஸ்ரீ பிரியா. அட்டகாசமான படம்.

8) நினைத்தாலே இனிக்கும் (1979) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


பின்னர் வேறு வேறு பெயர்களில் பல முறை படமாக்க பட்டுவிட்ட கதை. நோயினால் பாதிக்கப்படும் கதா நாயகி. இசைக் கலைஞன் நாயகன். நாயகனின் நன்பன். இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதை. படம் பார்த்தவர்களால் மறக்க முடியாதது 'சம்போ சிவ சம்போ' கதா பாத்திரம் தான். ரஜினி, கமல் இருவருக்குமே சம்பளம் குறைவாக கிடைப்பதால், இனி இருவரும் தனித்தனியே நடிப்பது என்று முடிவு செய்தது இப்படத்தில் நடிக்கும் போது தான். சூப்பர் ஸ்டார் உருவாக அடித்தளம் இட்டது இப்படம் தான்.


9) வறுமையின் நிறம் சிகப்பு (1980) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


1980 களில் இந்தியாவில் தலைவிரித்தாடிய தீண்டாமை, பெண்ணடிமை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட திரைக்கதை. வேலையில்லா பட்டதாரிகளான மூன்று இளைஞர்கள். மூவரும் எவ்வாறு அவர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர் கொள்கிறார்கள் என்பது கதை. எக்குலத்தில் பிறப்பதும் உயர்வல்ல, எத்தொழில் செய்வதும் இழிவல்ல என்ற அருமையான கருத்தை கூறும் கதை.




10) மீண்டும் கோகிலா (1981) - இயக்குனர் : திரு. G.N.ரங்கராஜன்


மனைவிக்கு துரோகம் செய்யும் நாயகனின் கதை. அழகான மனைவியை விட்டு நடிகை மீது ஆசைப்படும் நாயகனாக கமல். அவரது மனைவியாக ஸ்ரீ தேவி. நடிகையாக தீபா. அழகான கதை; அருமையான பாத்திரப் படைப்பு.


11) ராஜ பார்வை (1981) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


இது கமலின் 100வது படம். முதல் தயாரிப்பு. பார்வையற்ற ஒரு வயலின் கலைஞனின் கதை. தனது சொந்த தயாரிப்பினாலோ என்னவோ, இதற்கு முன் நாம் பார்த்திராத கமலை இதில் பார்க்கலாம். பார்வையற்ற மனிதராகவே வாழ்ந்து காட்டி இருப்பார். நெஞ்சை தொடும் உருக்கமான கதை.


12) மூன்றாம் பிறை (1982) - இயக்குனர் : திரு. பாலு மகேந்திரா


கமலுக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்த படம். படம் முழுதும் ஸ்ரீ தேவியின் தான் நடிப்பில் ராணி என்று நிரூபித்து காட்ட, இறுதியில் ஒரே காட்சியில் கமல், தான் நடிப்பில் ராஜா அல்ல சக்கரவர்த்தி என்று பரைசாற்றிய படம்.


13) ஸிம்லா ஸ்பெஷல் (1982) - இயக்குனர் : திரு. V. ஸ்ரீனிவாசன்

கமல் முதன் முதலில் நடித்த முழு நீள நகைச்சுவை படம். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக சொல்லும் படம். கமல், S. Ve. சேகர், ஸ்ரீ பிரியா மூவரும் நகைச்சுவை நடிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்த படம்.

14) சாகர சங்கமம் (1983 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.விஷ்வநாத்


அருமையான ஒரு இசைக் காவியம். நடனத்தையே தனது உயிர் மூச்சாக கொண்ட ஏழை நாயகனுக்கும் நடனத்தை நேசிக்கும் விதவை நாயகிக்கும் இடையில் பூக்கும் காதலை அழகாக கூறிய படம். படம் பார்க்கும் அனைவரையும் அழ வைக்கும் இறுதிக் காட்சி. (தமிழில் : சலங்கை ஒலி)


15) ஸ்வாதி முத்யம் (1986 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.விஷ்வநாத்


ஒரு வயதான மனிதனின் கடைசி கால கட்டத்தில் அவனால் அசைப்போடப்படும் அவனது இறந்த கால வாழ்க்கை, அவனது காதல். ஸைக்கோவாக சிகப்பு ரோஜாக்களில் நடித்து நம்மை பயமுறுத்திய கமல் இதில் மனநலம் குன்றியவனாக. (தமிழில் : சிப்பிக்குள் முத்து)


16) புன்னகை மன்னன் (1986) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம். இரட்டை வேடமென்றால் இருவரையும் வேறுபடுத்திக் காட்ட ஒருவருக்கு சிகப்பு சட்டையும் மற்றொருவருக்கு கருப்பு சட்டையும் தந்த காலத்தில், காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட நடன ஆசிரியராகவும், சாப்ளின் செல்லப்பாவாகவும் இரு வேறு பாத்திரங்களில் வந்து இரட்டை வேடங்களை இப்படியும் வெளிப்படுத்தலாம் என்று கட்டிய படம். ஈழத் தமிழர்களின் பிரச்சனை, தற்கொலை எதிர்ப்பு போன்றவற்றை மேலோட்டமாக தொட்டு செல்லும் படம்.

17) நாயகன் (1987) - இயக்குனர் : திரு.மணிரத்னம்

உலகின் தலை சிறந்த படங்களுள் ஒன்று. கமலுக்கு இரண்டாம் முறை தேசிய விருது அளித்த படம். அவர் வேலு நாயக்கராக வாழ்ந்து காட்டிய படம். தமிழகத்தின் முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் திரு. M. G. ராமசந்திரன் அவர்கள் தாம் இயற்கை எய்தும் முன்பு பல முறை பார்த்து ரசித்த படம். (ஒருவரை மரணப் படுக்கையில் மகிழ்விப்பதை காட்டிலும் சிறந்த செயல் வேறு உண்டா?)


18) பேசும் படம் (1987) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


கமலின் மற்றுமொரு புதிய முயற்சி. வசனமே இல்லாத படம். கதை ஒன்றும் புதிது இல்லை என்றாலும்; காதல், சோகம், பழி, நகைச்சுவை போன்ற பலவற்றை வசனமே இல்லாமலும் வெளிப்படுத்த முடியும் என்று கமல் நிரூபித்த படம்.


19) சத்யா (1988) - இயக்குனர் : திரு. சுரேஷ் கிருஷ்ணா


பொதுவாகவே சில இயக்குனர்களின் முதல் படத்தை பார்த்தீர்களானால் மற்ற இயக்குனர்களின் படத்திலிருந்து மாறுபட்டு சிறப்பாக இருக்கும். அப்படங்களை பார்த்தால் அது ஒரு புதிய இயக்குனர் இயக்கிய படம் என்று நம்மால் நம்பவே முடியாது. சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் சிறு வயதிலிருந்து அவர்களின் மனதில் பலமுறை அசைபோடப்பட்ட கதையை அவர்கள் படமாக்குவது அதற்கு ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சத்யா.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை அழிக்கும் நாயகன் என்ற அரதப்பழசான கதையை காட்சிக்கு காட்சி புதுமை கலந்து அளித்திருப்பார்கள் கமலும், சுரேஷ் கிருஷ்ணாவும்.


20) அபூர்வ சகோதரர்கள் (1989) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


இதுவும் அப்பாவைக் கொன்ற வில்லன்களை பதிவாங்கும் பழைய கதை. புதுமை என்னவென்றால், இரு கமலுக்கும் உள்ள வித்தியாசமே. தமிழ் சினிமா தொழில்நுட்பம் வளராத அன்றைய கால கட்டங்களில், காலை மடக்கி, குழிக்குள் அமர்ந்து குள்ள அப்புவை உருவாக்கிய கமலை பாராட்ட வேண்டியது அவசியம். படத்தின் திருப்புமுனை காட்சியில் இளையராஜாவின் பின்னனி இசை அவர் ஒரு இசைஞாணி என்று பரைசாற்றியது.

21) மைக்கேல் மதன காமராஜன் (1990) - இயக்குனர் : திரு.சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


கமல் நான்கு வேடங்களில் நடித்த முழு நீள நகைச்சுவை படம். தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை படங்களுள் ஒன்று. கிரேஸி மோகனின் வசனங்கள் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம். இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத, குழந்தைகளும் ரசிக்க கூடிய நகைச்சுவை. நட்சத்திரப் பட்டாளமே நமக்கு கிச்சு கிச்சு மூட்டினாலும் நம்மை அதிகம் கவர்வது காமேஷ்வரன், அவிநாசி மற்றும் பீம்பாய் மூவரும் தான்.


22) குணா (1991) - இயக்குனர் : திரு.சந்தானபாரதி


கமல் மனநிலை குன்றியவனாக நடித்த மற்றுமொரு படம். கமல் சமீபத்திய இருவேறு பேட்டிகளில் இப்படத்திற்கு 'மதிகெட்டான் சோலை' என்று பெயர் வைக்க தமிழ் சினிமாவின் சந்தை இடம் கொடுக்கவில்லை என்றும், காதல் கொண்டேன் பார்த்துவிட்டு குணாவிற்கு இப்படி ஒரு climax வைக்காமல் விட்டுவிட்டேனே என்றும் ஆதங்கப் பட்டார்.


படுதோல்வி அடைந்த ஒரு சிறந்த படம் என்பதை தவிர இப்படத்தை பற்றி சொல்ல வேறு ஒன்றும் இல்லை.

23) தேவர் மகன் (1992) - இயக்குனர் : திரு.பரதன்


தமிழ் சினிமாவின் நடிப்புலக சக்கரவர்த்திகள் இருவர் இனைந்து நடித்த படம். இப்படம் பற்றி கமல் கூறுகையில், சிவாஜியைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இப்படம் தேவர் மகன் அல்ல வெறும் மகன் தான் என்று குறிப்பிட்டார். அதை நான் வழி மொழிகிறேன். ஒருபடத்தின் வெற்றியில் கதைக்கு எத்துனை பங்கு உண்டோ அதே சதவிகித பங்கு கதாபாத்திர தேர்வுக்கும் உண்டு.


இப்படத்தின் பெரும் வெற்றியில் பங்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாரு நடிக நடிகையரை தேர்வு செய்த கமலுக்கு உண்டு.



24) மகாநதி (1994) - இயக்குனர் : திரு.சந்தானபாரதி


கமல் நடித்த 200க்கும் மேற்பட்ட படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு நல்ல படத்தை சொல்ல சொல்லி யாராவது கேட்டால் நான் யோசிக்காமல் சொல்வேன் மகாநதி என்று. அப்பாவி கிராமத்து குடும்பஸ்தனாக, சிறைக் கைதியாக, ஏமாற்றப்பட்ட ஒரு தொழிலதிபராக, மனைவியை இழந்த ஒரு கணவனாக, குழந்தைகளை இழந்த ஒரு தந்தையாக, பழிவாங்க துடிக்கும் ஒரு சராசரி மனிதனாக இப்படி பல்வேறு பரிமாணங்களில் வந்து கமல் அசத்திய படம். கொச்சின் ஹனிஃபாவின் வில்லத்தனமும் மிகவும் பாராட்டத்தக்கது.

25) சதி லீலாவதி (1995) - இயக்குனர் : திரு.பாலு மகேந்திரா


கமல் கோவை சக்திவேல் கவுண்டராக நகைச்சுவையில் பின்னியெடுத்த படம். கமல், கோவை சரளா, கல்பனா, ரமேஷ் அரவிந்த், ஹீரா அனைவருமே சிறப்பாக நடித்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.


26) குருதிப் புனல் (1995) - இயக்குனர் : திரு.P.C.ஸ்ரீ ராம்


கமல் போலீஸ் அதிகாரியாக நடித்த படம். வன்முறை சற்று அதிகம் என்றாலும் கதை மற்றும் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமானது. பாடல்களே இல்லாததும் ஒரு புதுமை. கமல் மற்றும் கௌதமி இருவருக்குமிடையே chemistry இப்படத்தில் work out ஆனது போல், வேறு எந்த நாயக நாயகிக்கும் தமிழ் சினிமாவில் work out ஆனது இல்லை.

27) இந்தியன் (1996) - இயக்குனர் : திரு.ஷங்கர்


லஞ்ச ஒழிப்பை மூலமாக கொண்ட படம். லஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் இரண்டாம் முறை போராட்டத்தில் குதித்து லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவதே கதை. கமலுக்கு மூன்றாம் முறை தேசிய விருது வாங்கிக் கொடுத்த படம். தமிழ் சினிமாவில் இரட்டை வேடங்களில் பல புதுமைகளை செய்யத் தொடங்கியது இப்படத்திற்கு பிறகு தான்.


28) அவ்வை சண்முகி (1996) - இயக்குனர் : திரு.K.S.ரவிகுமார்


97ல் வெளிவந்திருந்தால் கமலுக்கு நான்காம் முறை தேசிய விருதை வாங்கிக் கொடுத்திருக்கும். 96ல் கமல் இந்தியனுக்கு தேசிய விருது வாங்க கடும் போட்டியாக இருந்தது இப்படம். சட்டபூர்வமாக விவாகரத்து செய்யப்பட்ட கணவன், மனைவி மற்றும் அவர்களின் குழந்தை இம்மூவருக்குமிடையே நடக்கும் கதை. நகைச்சுவையாக சொல்ல முற்பட்டாலும் கதையின் கருத்து மிகவும் serious ஆனது.

29) ஹே ராம் (2000) - இயக்குனர் : திரு.கமலஹாசன்


மகாத்மாவின் மீது பலருக்கு பல விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர் தேசப்பிதா என்பது மாற்ற முடியாதது. அவரின் கொலையை மையமாக வைத்து கமல் முதல் முறையாக இயக்கிய படம். சாகேத் ராமின் மனைவி கொடூரமாக கற்பழிக்கப்படும் காட்சியாகட்டும், அவரின் நன்பன் கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சியாகட்டும் நம்மை 50 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு சென்று விடுகின்றன. படத்தை பார்த்து விட்டு மகாத்மாவின் சிலையை பார்க்கும் போது, 'இந்தியா ஒரு அஹிம்சை நாடு' என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டுத்தான் அவர் புன்னகைக்கிறாரோ என்று தோன்றுகிறது.


30) அன்பே சிவம் (2003) - இயக்குனர் : திரு.சுந்தர் C.

மகாநதிக்கு அடுத்து கமல் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அன்பே சிவம். கமல், மாதவன் இருவரின் நடிப்பு, ஒரு காதல் தோற்றதும் மறு காதலை இயல்பாய் தேடும் நாயகி, கம்யூனிஸ சிந்தனைகள் என்று பரவலாக பல நல்ல விஷயங்கள் உள்ள படம். தெருக்கூத்துக் கலையை அழகாக கையான்டிருப்பதும் மற்றுமொரு சிறப்பு.











நான் மேலே குறிப்பிட்டுள்ளது எனக்கு மிகவும் பிடித்த கமல் நடித்த 30 திரைப்படங்களை பற்றிய எனது கருத்தே ஆகும். அப்படங்களின் விமர்சனங்கள் இல்லை. இதை படிக்கும் பொழுது கமலின் பல சிறந்த படங்களை நான் விட்டு விட்டதை நீங்கள் உணரலாம்.


அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, அழியாத கோலங்கள், டிக் டிக் டிக், உல்லாச பறவைகள், உயர்ந்த உள்ளம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி விழா..... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் வேட்டையாடு விளையாடு வரை. ஆனால் என்ன செய்வது? பதிவு எழுதத் தொடங்கும் முன்பு சிறந்த 10 படங்களை மட்டுமே குறிப்பிட முடிவு செய்தேன். அது 30 ஆகி விட்டது.


நான் மேற்கூறிய படங்களை நன்கு கவனித்தீர்களானால் கமலின் திரைத்துரை வாழ்க்கை மூன்றாக பிறிந்து இருப்பதை காணலாம்.


1. ராஜ பார்வைக்கு முன்


இக்கால கட்டத்தில் அவர் நல்ல இயக்குனர்கள் இயக்கிய சில நல்ல படங்களில் நடித்தார். அவ்வளவுதான். இப்படங்களில் வேறு யார் நடித்திருந்தாலும் படங்கள் நன்றாகவே இருந்திருக்கும். அப்படங்களுக்கு கமல் தேவை இல்லை. ஆனாலும் அவ்வியக்குனர்களின் முதல் தேர்வாக கமல் இருந்ததற்கு அவரை நாம் பாராட்ட வேண்டும்.


2. ராஜ பார்வைக்கு பின்; நாயகனுக்கு முன்


இக்கால கட்டத்தில் தனக்கு பொருத்தமான படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அவர் சற்று பின்தங்கினார் என்று தான் கூற வேண்டும். 100வது படமான ராஜ பார்வையிலிருந்து 170வது படமான நாயகன் வரை அவர் நடித்த 70 படங்களில் அவரால் விரல் விட்டு எண்ணக்கூடிய நல்ல படங்களையே தர முடிந்தது. இதற்கு கமல் மீது மட்டுமே நாம் குற்றம் சாட்டுவது தவறு. கமலின் இந்த பின்தங்கலுக்கு ராஜ பார்வையை படுதோல்வி அடைய செய்து சகலகலா வல்லவனையும், தூங்காதே தம்பி தூங்காதேவையும் வெள்ளிவிழா காண வைத்த தமிழ் ரசிகமணிகளும் முக்கிய காரணம். 'Survival Fear' என்பது இக்கால கட்டத்தில் கமலுக்கு அதிகம் இருந்திருக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன்.


3. நாயகனுக்கு பின்


இக்கால கட்டத்தில்தான் நாம் கமலின் விஸ்வரூபத்தை கண்டோம். காதல் இளவரசன் கமலஹாசனாக இருந்தவர், பத்மஸ்ரீ, உலக நாயகன், கலைஞாணி, டாக்டர் கமலஹாசனாக மாறியது இக்கால கட்டத்தில்தான். DTS, Digital Film Making, Digital Live Sound Recording, Make-Up ல் புதுமை போன்ற பல புதுமைகளை தமிழ் சினிமாவிற்கு அவர் அறிமுகப்படுத்தியதும் இக்கால கட்டத்தில் தான்.

இதோ அவரின் தசாவதாரத்தை அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். Nov 7 அன்று பிறந்த நாள் காணும் நமது உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர் மேன்மேலும் பல சாதனைகள் புறியவும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, September 22, 2006

என்னை அதிகம் பாதித்த நாவல்கள்


"உண்மையில் உங்களை பொன்னியின் செல்வனை விட கவர்ந்த புத்தகம் எது?", என்று வெட்டிப்பயல் அவர்கள் என்னை கேட்டார்கள். அதன் விளைவுதான் இந்த பதிவு.

நான் படித்த வரையில் பொன்னியின் செல்வனை விட எனக்கு அதிகம் பிடித்த நாவல் எதுவும் இல்லை. ஆனால் பொன்னியின் செல்வனை விட என்னை அதிகம் பாதித்த நாவல்கள் சில உண்டு. ஏன் 'சில' என்று குறிப்பிடுகிறேன் என்றால் நான் படித்தவைகள் மிகச் சிலவே.


1. நாவல்: சுழிக்காற்று, ஆசிரியர்: கௌசிகன்

1970 களில் கல்கியில் தொடராக வெளிவந்த இந்த நாவல் நான் படித்த துப்பறியும் நாவல்களுக்கெல்லாம் ஆசான் என்று கூறுவேன். விடுமுறையை தனது காதலியின் கிராமத்தில் கழிக்க சென்னையிலிருந்து அவளது கிராமத்திற்கு வரும் துப்பறியும் நிபுணன் சேகர், அங்கே நடக்கும் தொடர் கொலைகளை கண்டு, அதற்கான காரணங்களையும், அதை செய்தவர்களையும் அனைவருக்கும் அடையாளம் காட்டுவதே கதை. கதை ஒன்றும் புதிது இல்லை என்றாலும், கதைக்களமும், சம்பவங்களும், அதை ஆசிரியர் கூறும் விதமும் என்னை வெகுவாக கவர்ந்தன. முடிவில் எல்லா முடிச்சுக்களும் அவிழும் பொழுது நமக்கு அளவில்லா ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. குற்றவாளிகள் மட்டும் நமது ஆச்சரியத்தை கூட்டவில்லை, குற்றத்திற்கான காரணங்களும் நமக்கு வியப்பளிக்கிறது. கால் நூற்றாண்டுக்கு பிறகு இப்பொழுது படித்தாலும் சுவை குன்றாமல் இருப்பதே இதன் சிறப்பாகும்.

2. நாவல்: போராட்டங்கள், ஆசிரியர்: ர. சு. நல்லபெருமாள்

இதுவும் கல்கியில் தொடராக வந்த நாவலே. இக்கதையின் சம்பவங்கள் 1960 களில் நடக்கின்றன. கதையின் நாயகன் முரளி ஒரு பத்திரிக்கை ஆசிரியர். நேர்மையாக, தரம் வாய்ந்த பாரதமணி என்ற ஒரு பத்திரிக்கை நடத்த அவர் சந்திக்கும் போராட்டங்களே கதை. இந்தோ சீன போர் நடந்த கால கட்டங்களில் சம்பவங்கள் நடப்பதாலோ என்னவோ கம்யூனிஸ, சீன, ரஷ்ய எதிர்ப்புகள் கதை முழுவதும் இருக்கின்றன.

முடிவில் தனது சொத்துக்கள் அனைத்தையும் அவர் இழந்து வெளிநாட்டுக்கு செல்லும் பொழுது நமக்கு நெஞ்சு கனக்கிறது.

3. நாவல்: அந்தக் கணல் வீசும் நேரம், ஆசிரியர்: சுதாங்கன்

"The only story that can be claimed as the best and probably the worst" என்று இந்த நாவலை எனக்கு பரிசளித்த எனது சகோதரர் குறிப்பிட்டார். அதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். 1990 களில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்த நாவல், அப்பொழுது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆறு ஆண்டுகளாக இனை பிறியாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில் புயலாக ஒரு கடிதம் வருகிறது. அது மனைவி கௌசல்யாவிற்கு அவளது கல்லூரித் தோழன் தீபக்கிடமிருந்து வருகிறது. அதில் அவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் தவறாக நடந்து கொண்டதற்கான குற்ற உணர்ச்சியை தீபக் வெளியிட அவர்கள் குடும்பத்தில் புயல் வீசுகிறது.

கதையின் கரு, 'மிகவும் தூய்மையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் அறியாமல் எப்பொழுதோ செய்த தவருக்காக வாழ் நாளெல்லாம் குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டாம்', என்பது தான்.

ஆனால் இக்கதை ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகவே நான் கருதுகிறேன்.

4. நாவல்: உண்மையே உன் விலை என்ன?, ஆசிரியர்: சோ

இது உன்மையில் ஒரு நாவல் கிடையாது. சோ அவர்களின் நாடகம் பின்னாளில் புத்தக வடிவில் எனக்கு கிடைத்தது.

கொலை குற்றம் சாட்டப்பட்ட தாமஸ் தியாகராஜன் உண்மையில் ஒரு நிரபராதி என்பதை அவனது confession இல் அறிந்து கொள்ளும் பாதிரியார் அருமை நாயகம் உண்மையை நிலை நாட்ட மேற் கொள்ளும் போராட்டங்களே கதை.

முடிவில் அவர் தனது உயிரை இழந்து உண்மையை நிலை நாட்டுகிறார். 'உண்மையின் விலை ஒரு நேர்மையான பாதிரியாரின் உயிர்' என்று தாமஸ் குறிப்பிடும் பொழுது நமக்கும் இச்சமூகத்தின் மீது வெறுப்பு வருகிறது.

5.நாவல்: கனவுத் தொழிற்சாலை, ஆசிரியர்: சுஜாதா


உங்களில் பலரும் படித்திருப்பீர்கள். புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. ஒரு தமிழ் திரைப்பட கதாநாயகனின் (அருண்) கதை. அருண் திரைத்துரையில் இருப்பதாலேயே அவனுக்கு பெண் கொடுக்க அவனது காதலியின் பெற்றோர்கள் மறுப்பதும், அதனால் ஆத்திரம் கொண்ட அவன் வேறொரு கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதும், தனது காதலியை திருமணம் செய்து கொண்டவன் அவளையும், அருணையும் சேர்த்து வைத்து சந்தேகப் படுவதையும் சுஜாதா தன் பாணியில் அழகாக குறிப்பிடுகிறார்.

அருணின் வாழ்க்கையை மட்டுமே பிரதானமாக கூறினாலும், என்னை அதிகம் கவர்ந்தது அவனது காதலியின் கதை மட்டுமே.

எவ்வளவு தான் அவள் மீது சந்தேகப்பட்டாலும், அடித்தாலும் இரவு புணர்வதை நாள் தவறாமல் செய்யும் கணவன். கர்ப காலத்தின் பொழுது கூட புணர்வதை நிறுத்தாத மிருகம். பிரசவம் முடிந்து இரண்டே மாதத்தில் அவள் மீது மிகுந்த அக்கரை கொண்டவன் போல் நடித்து அவளை மீண்டும் தனது வீட்டிற்கே அவன் அழைத்து செல்லும் பொழுது, அழும் அவளது தாயாரிடம் அவளது சகோதரன் கூறுகிறான், 'கவலைப் படாதே அம்மா. அவள் கூடிய சீக்கிரமே அடுத்த பிரசவத்திற்கு வந்து விடுவாள்'.

மனைவியை Sexual Machine ஆக கருதும் ஆண்களுக்கு இந்நாவல் ஒரு செருப்படி.

6. நாவல்: கோணல் பக்கங்கள், ஆசிரியர்: சாரு நிவேதிதா

சாருவின் பெரும்பாலான எழுத்தின் மீது எவ்வளவு தான் எனக்கு நல்ல கருத்து இல்லாமல் இருந்தாலும், அவரின் ஒரு சில படைப்புகள் மிக சிறந்தவை. அவரின் எழுத்தில் உள்ள சுய புராணத்தையும், மற்றவர்களை எள்ளி நகையாடுவதையும் ஒதுக்கி விட்டு பார்த்தோமானால் அவரின் பல எழுத்துக்கள் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கவே செய்தன.

சமூகம் தம் மீது போர்த்திய பல கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தவர் சாரு நிவேதிதா.

7. நாவல்: The Count Of Monte Cristo, ஆசிரியர்: Alexandre Dumas

நான் பொதுவாகவே ஆங்கில நாவல்கள் அதிகம் படிப்பது இல்லை. 1800 களில் ஐரோப்பாவில் நடக்கும் இக்கதை நான் படித்த வெகு சில ஆங்கில நாவல்களில் என்னை அதிகம் கவர்ந்தது.

நண்பர்கள் போல் நடித்த நான்கு துரோகிகளின் சதியால் வாழ்நாளெல்லாம் சிறையில் அடைபட்டு கிடக்கிறான் நாயகன். சிறையில் அவனுக்கு வேறொருவனது நட்பு கிடைக்க, அவன் சாகும் தருவாயில், அவனிடமிருந்து ஒரு புதையல் ரகசியத்தை அறிந்து கொண்டு, அவனது பிணம் போல் நடித்து சிறையிலிருந்து தப்பி செல்கிறான்.

14 ஆண்டுகள் கழித்து அவன் வெளிவரும் பொழுது, அவனுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அவனது தந்தை பசியால் இறந்ததையும், தனக்கு துரோகம் செய்த நால்வரில் ஒருவனை தனது காதலி திருமணம் செய்து கொண்டதையும் அறிந்து கொதித்து போகிறான்.

அவன் எவ்வாறு அவர்களை பழி வாங்குகிறான், தனது காதலியை என்ன செய்தான் என்பது தான் கதை.

நெப்போலியன் காலத்திய ஐரோப்பிய கலாச்சாரத்தை அழகாக வெளிக் காட்டுகிறது இக்கதை.

நான் மேற்கூறியவை அனைத்தும் எந்த வித வரிசைப் படுத்துதலும் இன்றி எனது நியாபகத்தில் வந்தவாறு குறிப்பிட்டவையே ஆகும்.

Monday, August 21, 2006

பொறியியல் கல்லூரிகளின் பரிதாபமான நிலை

இந்த ஆண்டும் தமிழ் நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் நடை பெறுகிறது. ஆகஸ்டு 15, 2006 தேதி வரை 22000 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மாணவர் சேர்க்கை முடியும் போது இது 17000 என்ற அளவில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


மேலும் மொத்தம் உள்ள 250 கல்லூரிகளில் 12 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பி இருக்கின்றன.


தமிழ் நாடு என்று இல்லை. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற பல மாநிலங்களிலும் இந்த நிலை தான்.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் போட்டி பொட்டுக் கொண்டு இருந்தனர். இன்று மட்டும் ஏன் இந்த நிலை?


இதோ எனக்கு தெரிந்த சில காரனங்கள்
  • புற்றீசல் போல கிளம்பிய சுய நிதிக் கல்லூரிகள்
  • அவற்றின் கல்வித் தரம் பற்றி மாணவர்களிடையே இருக்கும் சந்தேகம்
  • வருவாய்க்காக எந்த விதமான பரிசோதனைகளும் செய்யாமல் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கும் அரசு
  • ஆங்கில இலக்கியம், Visual Communication போன்ற துறைகளுக்கு மாணவர்களிடையே அன்மை காலமாக வளர்ந்து வரும் வரவேற்பு
  • Call Centre, BPO போன்ற நிருவனங்களில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள்

இந்நிலையில் சற்றும் மாறாத ஒன்று, தங்களின் பிள்ளைகள் பொறியியல் கல்லூரிகளிலோ அல்லது மருத்துவ கல்லூரிகளிலோ படிப்பதே தங்களுக்கு பெருமை என்று பல பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருப்பது. அவ்வாறு படிப்பதே அவர்களது வாழ்க்கையை நன்கு அமைக்கும் என்று நினைக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சில மாணவ மாணவியரும் அவ்வாறு படிப்பதே பெருமை என்றெண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளிலோ வருடாந்திர கட்டணங்கள் ஆயிரங்களை தாண்டி லட்சங்களில் வந்து நிற்கிறது. பணம் படைத்த பெற்றோர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டில்லை. ஆனால் ஏழை/நடுத்தர குடும்பத்தை சேர்ந்தோருக்கு?

VRS வாங்கிக் கொண்டு, வீட்டை விற்று, நகைகளை விற்று அவர்கள் தங்களது பிள்ளைகளை பொறியியல் கல்லூரிகளில் சேர்கிறார்கள். அவ்வாறு சேர்த்த கல்லூரி நன்றாக அமைந்தால் கவலையில்லை. ஆனால் 80% மேற்பட்ட கல்லூரிகள் அடிப்படை வசதி கூட இல்லாமலே இருக்கின்றன.

இதன் உச்ச கட்டமாக பல கல்லூரிகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதே கல்லூரியில் படித்து முடித்து வேறு வேலை கிடைக்காத முன்னாள் மாணவர்களை கொண்டே பாடம் நடத்துகின்றனர். நல்ல ஆசிரியர்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாத காரனத்தினால் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்களை படிப்பதற்கோ, தேர்வுகளில் அகிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெருவதற்கோ மாணவர்களால் இயலவில்லை.

உலகிலேயே அதிகமான பொறியியல் பட்டதாரிகளை தேர்விக்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தரும் முன் இனியாவது இதை கவனிப்பார்களாக. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் பொறியியல் மீதான மோகம் நீங்கி பல புதிய துறைகளில் நுழைந்து படித்து சாதனை புரிவார்களாக.

Tuesday, August 15, 2006

பிரதாப முதலியார் சரித்திரம் - ஒரு பார்வை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது (நன்றி : http://www.tamil.net/projectmadurai/) தமிழின் முதல் நவீனம் அல்லவா அது. எந்த விஷயத்திலுமே முதல் முயற்சி என்பது பாராட்டப் படவேண்டியதே ஆகும். அந்த வகையில் இதை படித்த உடன் இதை பற்றிய எனது கருத்துக்களை எழுத முடிவு செய்தேன்.

இந்த நவீனத்தில் முதலில் என்னை கவர்ந்தது இதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளே. இதில் உள்ள பல துணுக்குகள் தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக இடம் பெற்றிருக்கின்றன. கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரின் பல சிறந்த நகைச்சுவைகள் இந்த நவீனத்திலிருந்தே சுடப்பட்டிருக்கின்றன (வாழைப்பழ காமெடி இதில் இல்லை:-)). முன்னரே பல முறை பார்த்து, கேட்டு ரசித்து விட்ட காரனத்தினாலோ என்னவோ இப்பொழுது இதை படிக்கும் போது சிரிப்புணர்ச்சி அதிகம் வரவில்லை. ஆனாலும் அக்காலத்தில் இதை அனைவரும் வியந்து ரசித்திருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

உதாரணத்திற்கு, கண்களை மூடிக்கொண்டு மணலை கண்களில் போட்டுக்கொள்வது, போர்க்களத்தில் எதிரியின் தலையை கொய்யாமல் காலை கொய்ததற்கான காரனமாக அவன் முன்னரே இறந்து விட்ட செய்தியை கூறுவது போன்றவற்றை குறிப்பிடலாம்.

திரைப்படத்தில் இடம் பெறாத நல்ல நகைச்சுவைகளும் பல இதில் உள்ளன. குறிப்பாக, கனகசபை உட்பட நால்வரின் திருமணத்தின் போது ஒருவருக்கு தாலி எடுத்துக் கொடுக்க மறந்து விட்ட புரோகிதர், பின்னர் அதை தெரிந்து கொண்டு இரவு மணப்பெண்கள் தூங்கும் அரைக்கு வந்து தாலி இல்லாத ஒரு பெண்ணிற்கு தாலி கட்டி விட முயற்சிக்கும் செயல் நல்ல தமாஷ்.


இதில் அடுத்ததாக என்னை கவர்ந்தது, பல இடங்களில் மிக நல்ல கருத்துக்களை ஆங்காங்கே கதைகள் மற்றும் பல கதா பாத்திரங்களின் வாயிலாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது.


உதாரணத்திற்கு, கல்வி செல்வம் படைத்தவருக்கு தேவை இல்லை என்று பிரதாப முதலியார் குறிப்பிடும் பொழுது, அவரது அண்ணை, கல்வியின் சிறப்பை அழகாக விளக்குகிறார். பிரதாப முதலியார் கல்வி கற்று முடித்த உடன், அவரது ஆசிரியர், "ஏட்டுக்கல்வி தான் முடிந்ததே அன்றி கல்வி முடியவில்லை. பள்ளியில் கற்பது வெறும் அஸ்திவாரமே. அனுபவக்கல்வியாகிய கட்டடத்தை இதன் மீது நீ கட்டவில்லை என்றால் அஸ்திவாரத்திற்கு பலனே இல்லை." என்று அழகாக கூறுகிறார்.


மேலும் பெண்களை உயர் பண்புள்ள கதாபாத்திரங்களாக உலவ விட்டிருக்கிறார். பிரதாப முதலியாரின் தாயார் மற்றும், அவரது மனைவி ஞானாம்பாள் இருவரின் உயர் பண்புகளும் பல இடங்களில் தெரிகின்றன.


உதாரணத்திற்கு வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்யலாம் என்ற பிரதாப முதலியாரின் யோசனையை நிராகரித்து, ஞானாம்பாள் சொல்லும் பதில். அழகாக இருக்கிறது.

மற்றொரு பொழுதில் தங்களது கணவன்மார்கள் அனைவருக்கும் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டு அவர்களின் மனைவியர் அழுது புலம்ப, பிரதாப முதலியாரின் தாயார் மட்டும் சிந்தித்து செயல் பட்டு அவர்களை அந்த இக்கட்டிலிருந்து மீட்டெடுக்கிறார்.

தையற்காரனிடன் ஒரு ரூபாய் திருடி அகப்பட்டு கொண்ட திருடன் தனது பக்க நியாயத்தை தேவராஜ பிள்ளையிடம் அழகாக விளக்குகிறான். தான் ஒரு ரூபாய் திருடியதற்கு தண்டனை என்றால், அரசர்கள் பலரும் பல நாடுகளுக்கு படை எடுத்து சென்று அங்கே கொள்ளையடிக்கின்றனரே அதற்கு என்ன தண்டனை என்று கேட்கிறான்.

மேலும் தான் கடன் வாங்கிய சொற்ப பணத்தை திருப்பி தர இயலாத நிலையில் வழக்கை சந்திக்கும் ஒரு கடனாளி, "வறுமையின் காரனமாக சொற்ப பணத்தை திருப்பி தராத எனக்கு கடும் தண்டனை என்றால், வங்கிகளில் பல ஆயிரம் கடன் வாங்கி திருப்பி தராதவர்களுக்கு என்ன தண்டனை?", என்று வினவுகிறான்.

இதை படிக்கும் பொழுது ஆச்சரியமாக இருந்த மற்றொரு விஷயம்,


1. லஞ்ச ஊழல்

2. பொய் சாட்சியம் உரைத்தல்

3. பொய் சான்றிதழ் அளித்தல்

4. பிறர் மனைவியை பெண்டாடுதல்

5. அரசாங்க சொத்தை அபகரித்தல்


போன்ற பல குற்றங்களை அக்காலத்திலும் அரசு பதவியில் இருந்தோர் செய்து வந்தனர் என்று ஒருவர் குறிப்பிடுகிறார்.


நம்மில் பலர் ஏதோ சுதந்திரம் கிடைத்த பின்னர் தான் இதெல்லாம் தலை தூக்க ஆரம்பித்தது என்றும், பிரிட்டிஷார் ஆண்டிருந்தால் இந்த தேசம் நன்றாக இருந்திருக்கும் என்றும் நினைத்துக் கொண்டிருக்க, அவர்கள் ஆட்சியிலும் அரசியல் மற்றும் சமூக சீர்கேடுகள் பல இருந்தன என்பது தெளிவாகிறது.

வேட்டைக்கு சென்ற கணவனை தேடிச் சென்ற ஞானாம்பாள் தற்செயலாக ஒரு நாட்டின் அரசியாகி விட, அதை அவள் மறுத்தளிக்கும் காரனம் அழகாக சொல்லப்பட்டிருக்கின்றது.

இராஜ்ய பாரம் எத்தகையது என்றும், அரசனானவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் அழகாக அவள் குறிப்பிடுகிறாள். பிற ஸ்த்ரிகள் காணாத மார்புடையவனாகவும், எதிரிகள் காணாத முதுகுடையவனாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

அதே போன்று, வக்கீல்கள் தமக்கு வரும் வழக்குகளை எவ்வாறு ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் தமிழிலேயே வழக்கு விசாரனையின் போது பேச வேண்டிய அவசியத்தையும் அழகாக விளக்குகிறார்.

இவ்வாறு பாராட்டத்தக்க விஷயங்கள் பல இருக்கும் இந்த நவீனத்தில் என்னை முகம் சுளிக்க வைத்த சிலவற்றை பார்ப்போம்.


இந்த நவீனத்தில் அக்காலத்து வாழ்க்கை முறை தெளிவாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அக்காலத்தில் இருந்த குல ஏற்றத்தாழ்வுகள்.


உதாரணத்திற்கு, பிரதாப முதலியார் நகைச்சுவையாக இவ்வாறு குறிப்பிடுகிறார். "எல்லோருக்கும் மரியாதை தர வேண்டும் என்று என் தாயார் குறிப்பிட்டதால் நான் என் வீட்டிற்கு வரும் வண்ணானுக்கும் தோட்டிக்கும் கூட மரியாதை குடுத்தேன்". மேலும் பிரதாப முதலியாரின் தந்தையும், சம்பந்தி முதலியாரும் சண்டை போடும் பொழுது, "நீ வண்ணான் பரம்பரை அல்லவா?" என்றும், "நீ அம்பட்டன் பரம்பரை அல்லவா?" என்றும் திட்டிக் கொள்கிறார்கள்.


அதாவது முடிதிருத்தும் தொழிலோ அல்லது துணி துவைக்கும் தொழிலோ செய்வதே பாவம் என்றும், அவர்களுக்கு மரியாதை கொடுப்பதும் நகைப்புக் குறிய செயலென்றும் குறிப்பிடுகிறார்.


மேலும் ஆங்காங்கே அக்காலத்தில் இருந்த பெண்ணடிமைத்தனம் நன்றாகவே தெரிகிறது. உதாரணத்திற்கு, பிரதாப முதலியார், தனது மனைவியான ஞானாம்பாளிடம் பெண்களை உயர்த்தி பேசும் பொழுது, "இந்நாட்டில் தனது கணவர் இறந்த உடன் தானும் உடன்கட்டை ஏறிய பதிவிரதைகள் பலர் உள்ளனர்." என்கிறார். மேலும் பொல்லாத கணவன் , மனைவி பற்றி அவர்கள் பேசும் பொழுது, பொல்லாத கணவனை (விபச்சாரிகளிடன் சென்ற கணவனை) பொருமை காட்டி மனைவி திருத்தினாள் என்றும், பொல்லாத மனைவியை (பிடிவாத குணம் உள்ள மனைவியை) பிறம்பால் அடித்து கணவன் திருத்தினான் என்றும் கூறுகிறார்.


இதில், ஒழுக்கம் இல்லாத கணவனை திருத்த மனைவிக்கு வழியாக கூறியது பொருமை, ஆனால் பிடிவாத குணம் கொண்ட மனைவியை திருத்த கணவனுக்கு வழியாக கூறியது தண்ட உபாயம். மேலும் உடன்கட்டை ஏறியவர்களே பதிவிரதைகள் என்ற சான்றிதழ் வேறு.

அதே போன்று, புலி துரத்திக் கொண்டு வரும் பொழுது தங்களுடைய மனைவிகளை விட்டு விட்டு ஓடி ஒளிந்த கணவர்களை பார்த்து அவர்களது மனைவியர் ஓடிய பொழுது அவர்களது கால்களில் முட்கள் குத்தி இருக்குமே என்று கவலை கொள்கிறார்கள்.

பிரதாப முதலியாரின் தாயார் அவரது கணவரையும், பிரதாப முதலியாரையும் மற்றும் பலரையும் ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றிய உடன் அவரை பாராட்ட பலர் வருகிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் அநேகம் பேர் பிற புருஷர்கள் ஆகையால் அவர்களை பிரதாப முதலியாரின் தாயாரை பார்க்க அனுமதிக்கவில்லை.


அதாவது உறவினர்கள் அல்லாத வேற்று ஆண்கள் தம் வீட்டு பெண்களை பார்க்க கூட அனுமதி இல்லை என்ற நிலைதான் அக்காலத்தில் இருந்தது.


இதன் உச்ச கட்டமாக கலாச்சார சீரழிவு என்று ஒரு உதாரணம் குறிப்பிடுகிறார். அது என்னவென்றால், ஒரு ஆண் பிற புருஷர்கள் பங்கு கொள்ளும் பல விசேஷங்களுக்கு தன்னுடைய மனைவியை கூட்டி செல்கிறான். இதனால் அவன் கெட்டு சீரழிந்தான் என்று கூறுகிறார்.


இதை எல்லாம் பார்க்கும் பொழுது தீண்டாமையும், பெண்ணடிமையும் அக்காலத்தில் (1850 களில்) படித்த மக்களிடையே கூட தலை விரித்து ஆடியது என்பது தெளிவாகிறது.

ஆனாலும் இத்தகைய முகம் சுளிக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் கருத்தாக கொள்ளாமல் அக்காலத்து வாழ்க்கை முறை இவ்வாறு தான் இருந்தது என்பதை உணர்ந்து பார்க்கும் பொழுது இது ஒரு நல்ல நவீனம் என்று கூறலாம். தமிழ் இலக்கிய உலகில் இது முதல் நவீனம் என்ற ஒரு உண்மையை சேர்த்து பார்த்தோமானால், இது ஒரு சிறந்த படைப்பு, அனைவரும் அவசியம் படித்து மகிழ வேண்டிய ஒரு படைப்பு.