Thursday, December 29, 2011

ச்சும்மா விளையாட்டுக்கு

படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்.








Photos © Getty Images

Tuesday, December 27, 2011

2011 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்



எப்பொழுதும் ஆண்டின் கடைசி நாளில் தான் பின்னோட்டங்களை போடுவது என் வழக்கம். இம்முறை சிறிது முன்னதாகவே.

முந்தைய பின்னோட்டங்களை காண கீழே உள்ள சுட்டிகளுக்கு செல்லவும்.

2010 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்

2009 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்

டாப் ஐந்து கமர்ஷியல் படங்கள்:

1. மங்காத்தா
2. வேலாயுதம்
3. கோ
4. ஏழாம் அறிவு
5. காஞ்சனா

டாப் ஐந்து வித்தியாசமான படங்கள்:

1. ஆடுகளம்
2. எங்கேயும் எப்போதும்
3. ஆரண்ய காண்டம்
4. தெய்வத் திருமகள்
5. மயக்கம் என்ன?

டாப் ஐந்து தழுவிய படங்கள்:

1. காவலன்
2. சிறுத்தை
3. ஒஸ்தி
4. முரண்
5. வானம்

டாப் ஐந்து எனக்குப் பிடித்த ஆனால் ஊத்திக் கொண்ட படங்கள்:

1. ரௌத்திரம்
2. யுத்தம் செய்
3. தூங்கா நகரம்
4. 180
5. சதுரங்கம்

டாப் ஐந்து ஏமாற்றங்கள்:

1. அவன் இவன்
2. நடுநிசி நாய்கள்
3. வெடி
4. வேங்கை
5. பயணம்

டாப் ஐந்து மொக்கை படங்கள்:

1. மாப்பிள்ளை
2. எங்கேயும் காதல்
3. யுவன் யுவதி
4. ராஜ பாட்டை
5. வந்தான் வென்றான்

இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஹிட்கள்:

1. குள்ள நரி கூட்டம்
2. மௌனகுரு

இந்த ஆண்டின் வருத்தமளிக்கும் தோல்வி:

அழகர் சாமியின் குதிரை

எனது மனம் கவர்ந்த படம்:

எங்கேயும் எப்போதும்

Sunday, December 25, 2011

பொடிமாஸ் - 12/25/2011

இன்று சென்னை அருகில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஒரு படகு கவிழ்ந்ததில் சுமார் 22 பேர் இறந்து விட்டனர். அது ஒரு மீனவப் படகு என்றும், அதிகரப் பூர்வமான உரிமம் எதுவும் இல்லாமல் விடப்பட்டதாகவும் தெரிகிறது. லைப் வெஸ்ட் போன்ற பாதுகாப்புகள் இல்லாமல், தேவையான உரிமங்கள் இல்லாமல் விடப்படும் படகுகளில் உல்லாசத்திற்காக பயணித்தால் இப்படித்தான் நடக்கும். இறந்தவர்கள் மீது அனுதாபத்திற்கு பதிலாக கோபமே வருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு தான் உண்மையில் அனுதாபம் தேவை. இதை பார்த்தாவது சிலராவது திருந்தினால் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். பொதுவாக வெளி நாட்டிலிருந்து இந்தியா வரும் இந்தியர்கள் இது போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி கருத்து தெரிவித்தால் சீன் போடுவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் வெளி நாட்டில் வசிப்பவர்களுக்கு எது தெரியுமோ தெரியாதோ, மனித உயிரின் மதிப்பு அவசியம் தெரியும்.



விளையாட்டு வீரர்களுக்கும் பாரத ரத்ணா விருது வழங்க இயலும் விதமாக ஒரு சிறு விதியை மாற்றி அமைத்திருக்கிறது அரசு. பலர் இது சச்சினுக்காக செய்தது என்று கருதுகிறார்கள். எனக்கும் அப்படியே தோன்றுகிறது. ஆனால் அதில் தவறொன்றும் இல்லை. இலக்கியத்திற்காகவும், இசைக்காகவும் விருது கொடுக்கலாம் என்றால் விளையாட்டிற்காகவும் கொடுக்கலாம். என்ன?, கிரிக்கெட் அல்லது சச்சின் என்றாலே பலருக்கும் வயிற்றெரிச்சல் வந்து விடும்.



இன்று படித்த மற்றுமொரு செய்தி. இந்திய முஜாஹிதீனின் தலைவனை ஒரு கள்ள நோட்டு வழக்கில் கைது செய்து டில்லி போலீஸார் மூன்று மாதங்கள் சிறையில் வைத்திருக்கிறார்கள். பின்னர் அவன் யாரென்று தெரியாமல் அவனை விடுதலை செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அவன் திட்டமிட்டு செயல்படுத்தியது தான் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு. வாழ்க நமது புலனாய்வு.



Don 2 - The King is Back அட்டகாசமாக இருக்கிறது. ஆங்கிலப் படங்களை விட நன்றாக இருந்தது. இம்மாதிரியான ஆங்கிலப் படங்கள் பொதுவாக ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் இரண்டரை மணி நேரத்திற்கு திரைக்கதை அமைப்பது எளிதல்ல. "The King is Back" என்பது பொதுவாக ஷாருக்கை குறித்து கூறப்பட்டாலும், எனக்கு என்னவோ ஃபர்ஹான் அக்தரை குறிப்பதாகவே தோன்றியது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் படம் இயக்கி சிக்ஸர் அடித்திருக்கிறார். Welcome back Farhan.



நண்பன் டிரைலர் அட்டகாசமாக இருக்கிறது. ஓமி வைத்யா கேரக்டருக்கு சத்யன் சரியான தேர்வு. நமது எஸ். ஜே. சூர்யா எந்த பாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியவில்லை. கிளைமேக்ஸ் மாற்றி இருக்கிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். பார்ப்போம் எப்படி இருக்கிறது என்று. நிச்சயம் விஜய் காவலன், வேலாயுதத்தை தொடர்ந்து நண்பனிலும் ஹாட்ரிக் அடிப்பார் என்றே நினைக்கிறேன்.



ராஜ பாட்டை ராஜ விட்டையாக போய்விட்டது. பீமா, கந்தசாமி என்று மரண மொக்கைகளுக்கு பிறகும் இயக்குனர் சுசீந்திரனின் முந்தைய படைப்புகளின் மீதுள்ள மரியாதையினால் நம்பி போய் இம்மாதிரி ஆப்புகள் வாங்க வேண்டி இருக்கிறது. விக்ரம் நாங்க பாவம் இல்லையா? எவ்வளவு நாள் தான் நாங்க வலிக்காத மாதிரியே நடிக்கறது?



குளிர் காலம் தொடங்கி விட்டது. குளிர் உறைநிலை வெட்பத்தில் இருக்கிறது. மாண்டியை வாக்கிங் அழைத்து செல்வது கடினமாக இருக்கிறது. இரண்டு நாட்களாக ஒரே ஜலதோழம் வேறு. கிரிஸ்துமஸ் காரணமாக நாளையும் இங்கு அலுவலகம் விடுமுறை. நாளைக்குள் குணமாகி விட்டால் நல்லது. இல்லையென்றால் கஷ்டம்.



வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Wednesday, December 21, 2011

ஹிந்தி திணிப்பு பற்றி அறிஞர் அண்ணா


தேசிய மொழியாக ஹிந்தியை அங்கீகரிப்பதை பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் ராஜ்ய சபையில் ஆற்றிய உரையின் சிறு பகுதி.

தமிழில்:

"இந்தியாவில் பெரும்பான்மையாக பேசப்படுவதால் ஹிந்தியை பொதுவான தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அது சரியான வாதமாகும் பட்சத்தில் நாம் ஏன் புலியை நமது தேசிய விலங்காக கருதுகிறோம்? எலி தானே தேசிய விலங்காக இருக்க வேண்டும். அது தானே எண்ணிக்கையில் அதிகம் உள்ளது. மயிலை ஏன் தேசிய பறவையாக கருதுகிறோம்? காகம் தானே எண்ணிக்கையில் அதிகம் உள்ளது."

"இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆங்கிலத்தை கற்பிப்பதால் அதையே நாம் ஏன் பொதுவான தேசிய மொழியாக கருதக் கூடாது? அதன் மூலமே ஏன் நாம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள கூடாது? தமிழர்கள் ஏன் வெளி நாட்டினருடன் தொடர்பு கொள்ள ஆங்கிலத்தையும், மற்ற மாநிலத்தினருடன் தொடர்பு கொள்ள ஹிந்தியையும் கற்க வேண்டும்? பெரிய நாய்க்கு பெரிய கதவும், சிறிய நாய்க்கு சிறிய கதவும் அவசியமா? சிறிய நாய் ஏன் பெரிய கதவினை உபயோகிக்க கூடாது?"

ஆங்கிலத்தில்:

"It is claimed that Hindi should be common language because it is spoken by the majority. Why should we then claim the tiger as our national animal instead of the rat which is so much more numerous? Or the peacock as our national bird when the crow is ubiquitous?"

"Since every school in India teaches English, why can't it be our link language? Why do Tamils have to study English for communication with the world and Hindi for communications within India? Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!"

Monday, December 19, 2011

பொடிமாஸ் - 12/19/2011

சசிகலா கோஷ்டியினர் ஒட்டு மொத்தமாக அதிமுகவிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளனர். அம்மா எந்த சூழ்நிலையில் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. பலரும் பலவற்றை யூகிக்கிறார்கள். இனி சசிகலா கோஷ்டியினர் மீது நில அபகரிப்பு புகார்கள் எழும். கைதும் நடக்கலாம். இதிலெல்லாம் நேரத்தை செலவிடாமல் இனியாவது மக்களுக்கு நல்லது செய்வதில் முதல்வர் நேரத்தை செலவிட்டால் அவருக்கும் நல்லது, அவரது கட்சிக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது. செய்வாரா?



ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகளை செய்யும் டார்ச்சர் தாங்க முடியவில்லை. பேசவே முடியாத குழந்தைகளிடம் மைக்கை கொடுத்து பாடு பாடு என்று இம்சை செய்வதுடன் இதில் ராகம் நொள்ளை, தாலம் நொட்டை என்று டவுசரை கழட்டுகிறார்கள், பார்ப்பவர்களுக்கும் சேர்த்து. இதனிடையில் யாரேனும் வெளியேற்றப்பட்டால் ஒப்பாரி வேறு. குழந்தைகள் மனதில் சுய பச்சாதாபத்தை விதைக்கிறார்கள். இவர்கள் மீதெல்லாம் குழந்தைகள் வன்முறை சட்டம் பாய்ந்து கடித்து துப்ப வேண்டும். அப்பொழுது தான் புத்தி வரும்.



அஜித் - விஜய் யார் படம் பெஸ்ட்? என்றொரு தொடர் விளையாட்டு தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. நம்மையெல்லாம் யார் ஆட்டைக்கு அழைக்கப் போகிறார்கள். பந்தக் கால பார்த்தாலே பந்திக்கு போகும் ஆள் நான். கூப்பிட்டால் தான் ஆட்டையில் சேரனுமா என்ன? இதோ அஜித் மற்றும் விஜய் படங்களில் எனது தேர்வு.

அஜித்: முகவரி, இதன் ஒரிஜினல் கிளைமேக்ஸுடன். அம்சமான படம். அருமையான கதை களம். நல்ல நடிகர்கள் தேர்வு. வாழ்க்கையில் எப்பொழுது எந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை அருமையாக சொல்லி இருப்பார் இயக்குனர்.

விஜய்: லவ் டுடே. இதன் முடிவிலும் ஒரு சோகம் இருந்தாலும், படத்தினை பார்த்த அனைத்து இளைஞர்களையும் தனக்கும் இப்படி ஒரு அப்பா, இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் கிடைக்காதா என்று ஏங்க வைத்த படம். "புக்க டிக்கில வச்சா டிகிரி எங்கடி வாங்கறது?", "பொண்ணுங்க படிப்ப ஃபாலோ பன்றாங்க; நம்ம பசங்க அவங்க இடுப்பு மடிப்ப ஃபாலோ பன்றாங்க", "வாந்தியோட சேர்ந்து வசந்தியும் வெளிய வந்துட்டா" போன்ற வசனங்கள் எவர்கிரீன்.



இந்த மாதம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கும் இசைஞானியின் கான்சர்ட் டீசர்கள் ஜெயா டிவியில் வந்து கொண்டிருக்கின்றன. ஆவலை தூண்டுகிறது. நேரலை ஒளிபரப்பு செய்வார்களா என்று தெரியவில்லை. அதன் பேரில் "இசைஞானியின் இனிய பத்து" என்ற தலைப்பில் அவரின் பத்து பாடல்களை பட்டியலிட்டு அனுப்பி வைக்கும்படி கேட்டிருக்கிறார்கள். ராஜாவின் பாடல்களில் பத்தே பத்து பாடல்களை தேர்வு செய்வது நடக்கும் காரியமா? வைரத்தில் எந்த வைரம் உயர்ந்தது? எந்த வைரம் தாழ்ந்தது? எல்லாமே வைரங்கள் தான். எல்லாமே பொக்கிஷங்கள் தான். இருந்தாலும் எனது பத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

1. இளைய நிலா
2. பனிவிழும் மலர்வனம்
3. அந்தி மழை பொழிகிறது
4. என்ன சத்தம் இந்த நேரம்
5. இது ஒரு பொன்மாலை பொழுது
6. ராக்கம்மா கைய தட்டு
7. தூங்காத விழிகள் ரெண்டு
8. ஓ வஸந்த ராஜா
9. ராஜ ராஜ சோழன் நான்
10. பூ மாலையே தோள் சேர வா



சரி ராஜாவின் பாடல் நினைவுகள் தந்த போதையில் ரெஹ்மானையும் கொஞ்சம் கவனித்து பதிவினை முடிப்போம். கீழே உள்ள பாடலின் ஆர்கெஸ்ட்ரேஷனை கொஞ்சம் கேளுங்கள். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த படத்தில் செய்தது என்றால் நம்ப முடிகிறதா? சென்ற வாரம் வெளிவந்த பாடல் போல அவ்வளவு ஃபிரெஷ் ஆக இருக்கிறது. எனது வருத்தமே இது போன்ற முயற்சிக்கு கொடுக்காமல் ஜெய் ஹோ போன்ற மொக்கைக்கு ஆஸ்கார் கொடுத்தது தான்.