"உண்மையில் உங்களை பொன்னியின் செல்வனை விட கவர்ந்த புத்தகம் எது?", என்று வெட்டிப்பயல் அவர்கள் என்னை கேட்டார்கள். அதன் விளைவுதான் இந்த பதிவு.
நான் படித்த வரையில் பொன்னியின் செல்வனை விட எனக்கு அதிகம் பிடித்த நாவல் எதுவும் இல்லை. ஆனால் பொன்னியின் செல்வனை விட என்னை அதிகம் பாதித்த நாவல்கள் சில உண்டு. ஏன் 'சில' என்று குறிப்பிடுகிறேன் என்றால் நான் படித்தவைகள் மிகச் சிலவே.
1. நாவல்: சுழிக்காற்று, ஆசிரியர்: கௌசிகன்
1970 களில் கல்கியில் தொடராக வெளிவந்த இந்த நாவல் நான் படித்த துப்பறியும் நாவல்களுக்கெல்லாம் ஆசான் என்று கூறுவேன். விடுமுறையை தனது காதலியின் கிராமத்தில் கழிக்க சென்னையிலிருந்து அவளது கிராமத்திற்கு வரும் துப்பறியும் நிபுணன் சேகர், அங்கே நடக்கும் தொடர் கொலைகளை கண்டு, அதற்கான காரணங்களையும், அதை செய்தவர்களையும் அனைவருக்கும் அடையாளம் காட்டுவதே கதை. கதை ஒன்றும் புதிது இல்லை என்றாலும், கதைக்களமும், சம்பவங்களும், அதை ஆசிரியர் கூறும் விதமும் என்னை வெகுவாக கவர்ந்தன. முடிவில் எல்லா முடிச்சுக்களும் அவிழும் பொழுது நமக்கு அளவில்லா ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. குற்றவாளிகள் மட்டும் நமது ஆச்சரியத்தை கூட்டவில்லை, குற்றத்திற்கான காரணங்களும் நமக்கு வியப்பளிக்கிறது. கால் நூற்றாண்டுக்கு பிறகு இப்பொழுது படித்தாலும் சுவை குன்றாமல் இருப்பதே இதன் சிறப்பாகும்.
2. நாவல்: போராட்டங்கள், ஆசிரியர்: ர. சு. நல்லபெருமாள்
இதுவும் கல்கியில் தொடராக வந்த நாவலே. இக்கதையின் சம்பவங்கள் 1960 களில் நடக்கின்றன. கதையின் நாயகன் முரளி ஒரு பத்திரிக்கை ஆசிரியர். நேர்மையாக, தரம் வாய்ந்த பாரதமணி என்ற ஒரு பத்திரிக்கை நடத்த அவர் சந்திக்கும் போராட்டங்களே கதை. இந்தோ சீன போர் நடந்த கால கட்டங்களில் சம்பவங்கள் நடப்பதாலோ என்னவோ கம்யூனிஸ, சீன, ரஷ்ய எதிர்ப்புகள் கதை முழுவதும் இருக்கின்றன.
முடிவில் தனது சொத்துக்கள் அனைத்தையும் அவர் இழந்து வெளிநாட்டுக்கு செல்லும் பொழுது நமக்கு நெஞ்சு கனக்கிறது.
3. நாவல்: அந்தக் கணல் வீசும் நேரம், ஆசிரியர்: சுதாங்கன்
"The only story that can be claimed as the best and probably the worst" என்று இந்த நாவலை எனக்கு பரிசளித்த எனது சகோதரர் குறிப்பிட்டார். அதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். 1990 களில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்த நாவல், அப்பொழுது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆறு ஆண்டுகளாக இனை பிறியாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில் புயலாக ஒரு கடிதம் வருகிறது. அது மனைவி கௌசல்யாவிற்கு அவளது கல்லூரித் தோழன் தீபக்கிடமிருந்து வருகிறது. அதில் அவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் தவறாக நடந்து கொண்டதற்கான குற்ற உணர்ச்சியை தீபக் வெளியிட அவர்கள் குடும்பத்தில் புயல் வீசுகிறது.
கதையின் கரு, 'மிகவும் தூய்மையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் அறியாமல் எப்பொழுதோ செய்த தவருக்காக வாழ் நாளெல்லாம் குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டாம்', என்பது தான்.
ஆனால் இக்கதை ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகவே நான் கருதுகிறேன்.
4. நாவல்: உண்மையே உன் விலை என்ன?, ஆசிரியர்: சோ
இது உன்மையில் ஒரு நாவல் கிடையாது. சோ அவர்களின் நாடகம் பின்னாளில் புத்தக வடிவில் எனக்கு கிடைத்தது.
கொலை குற்றம் சாட்டப்பட்ட தாமஸ் தியாகராஜன் உண்மையில் ஒரு நிரபராதி என்பதை அவனது confession இல் அறிந்து கொள்ளும் பாதிரியார் அருமை நாயகம் உண்மையை நிலை நாட்ட மேற் கொள்ளும் போராட்டங்களே கதை.
முடிவில் அவர் தனது உயிரை இழந்து உண்மையை நிலை நாட்டுகிறார். 'உண்மையின் விலை ஒரு நேர்மையான பாதிரியாரின் உயிர்' என்று தாமஸ் குறிப்பிடும் பொழுது நமக்கும் இச்சமூகத்தின் மீது வெறுப்பு வருகிறது.
5.நாவல்: கனவுத் தொழிற்சாலை, ஆசிரியர்: சுஜாதா
உங்களில் பலரும் படித்திருப்பீர்கள். புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. ஒரு தமிழ் திரைப்பட கதாநாயகனின் (அருண்) கதை. அருண் திரைத்துரையில் இருப்பதாலேயே அவனுக்கு பெண் கொடுக்க அவனது காதலியின் பெற்றோர்கள் மறுப்பதும், அதனால் ஆத்திரம் கொண்ட அவன் வேறொரு கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதும், தனது காதலியை திருமணம் செய்து கொண்டவன் அவளையும், அருணையும் சேர்த்து வைத்து சந்தேகப் படுவதையும் சுஜாதா தன் பாணியில் அழகாக குறிப்பிடுகிறார்.
அருணின் வாழ்க்கையை மட்டுமே பிரதானமாக கூறினாலும், என்னை அதிகம் கவர்ந்தது அவனது காதலியின் கதை மட்டுமே.
எவ்வளவு தான் அவள் மீது சந்தேகப்பட்டாலும், அடித்தாலும் இரவு புணர்வதை நாள் தவறாமல் செய்யும் கணவன். கர்ப காலத்தின் பொழுது கூட புணர்வதை நிறுத்தாத மிருகம். பிரசவம் முடிந்து இரண்டே மாதத்தில் அவள் மீது மிகுந்த அக்கரை கொண்டவன் போல் நடித்து அவளை மீண்டும் தனது வீட்டிற்கே அவன் அழைத்து செல்லும் பொழுது, அழும் அவளது தாயாரிடம் அவளது சகோதரன் கூறுகிறான், 'கவலைப் படாதே அம்மா. அவள் கூடிய சீக்கிரமே அடுத்த பிரசவத்திற்கு வந்து விடுவாள்'.
மனைவியை Sexual Machine ஆக கருதும் ஆண்களுக்கு இந்நாவல் ஒரு செருப்படி.
6. நாவல்: கோணல் பக்கங்கள், ஆசிரியர்: சாரு நிவேதிதா
சாருவின் பெரும்பாலான எழுத்தின் மீது எவ்வளவு தான் எனக்கு நல்ல கருத்து இல்லாமல் இருந்தாலும், அவரின் ஒரு சில படைப்புகள் மிக சிறந்தவை. அவரின் எழுத்தில் உள்ள சுய புராணத்தையும், மற்றவர்களை எள்ளி நகையாடுவதையும் ஒதுக்கி விட்டு பார்த்தோமானால் அவரின் பல எழுத்துக்கள் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கவே செய்தன.
சமூகம் தம் மீது போர்த்திய பல கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தவர் சாரு நிவேதிதா.
7. நாவல்: The Count Of Monte Cristo, ஆசிரியர்: Alexandre Dumas
நான் பொதுவாகவே ஆங்கில நாவல்கள் அதிகம் படிப்பது இல்லை. 1800 களில் ஐரோப்பாவில் நடக்கும் இக்கதை நான் படித்த வெகு சில ஆங்கில நாவல்களில் என்னை அதிகம் கவர்ந்தது.
நண்பர்கள் போல் நடித்த நான்கு துரோகிகளின் சதியால் வாழ்நாளெல்லாம் சிறையில் அடைபட்டு கிடக்கிறான் நாயகன். சிறையில் அவனுக்கு வேறொருவனது நட்பு கிடைக்க, அவன் சாகும் தருவாயில், அவனிடமிருந்து ஒரு புதையல் ரகசியத்தை அறிந்து கொண்டு, அவனது பிணம் போல் நடித்து சிறையிலிருந்து தப்பி செல்கிறான்.
14 ஆண்டுகள் கழித்து அவன் வெளிவரும் பொழுது, அவனுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அவனது தந்தை பசியால் இறந்ததையும், தனக்கு துரோகம் செய்த நால்வரில் ஒருவனை தனது காதலி திருமணம் செய்து கொண்டதையும் அறிந்து கொதித்து போகிறான்.
அவன் எவ்வாறு அவர்களை பழி வாங்குகிறான், தனது காதலியை என்ன செய்தான் என்பது தான் கதை.
நெப்போலியன் காலத்திய ஐரோப்பிய கலாச்சாரத்தை அழகாக வெளிக் காட்டுகிறது இக்கதை.
நான் மேற்கூறியவை அனைத்தும் எந்த வித வரிசைப் படுத்துதலும் இன்றி எனது நியாபகத்தில் வந்தவாறு குறிப்பிட்டவையே ஆகும்.
19 Comments:
நான் கேட்ட ஒரு கேள்விக்கு பதிப்பு கொடுத்து ஒரு பதிவே போட்டுட்டீங்க... மிக்க நன்றி!!!
இதுல ஒண்ணு கூட நான் படிச்சது இல்ல. கிடைத்தால் படிக்க முயல்கிறேன்...
சுஜாதாவின் முதல் நாவல் நைலான் கயிறு கிடைத்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள் சூப்பராக இருக்கும் (ஆண்டு 1968)
சாண்டில்யனின் "யவன ராணி"
பாலகுமாரனின் "பச்சை வயல் மனது"
அனுராதா ரமணனின் "பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா"
இது போன்று இன்னும் பல நாவல்கள் தமிழில் உள்ளன
படித்து மகிழுங்கள்
// கதையின் நாயகன் மணி ஒரு பத்திரிக்கை ஆசிரியர் //
அவர் பெயர் முரளி என்று நினைக்கிறேன்.
//
வெட்டிப்பயல் said...
இதுல ஒண்ணு கூட நான் படிச்சது இல்ல. கிடைத்தால் படிக்க முயல்கிறேன்...
//
அவசியம் படிங்க. படித்துவிட்டு ஒரு பதிவு போடுங்கள்.
நீங்கள் கூறியவற்றை நான் படித்ததில்லை திரு. SP.VR.SUBBIAH அவர்களே. அவசியம் படிக்கிறேன்.
//
லதா said...
அவர் பெயர் முரளி என்று நினைக்கிறேன்.
//
திருத்தி விட்டேன் லதா அவர்களே. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
சத்தியப் பிரியன், நிறைய படிக்கிறீர்கள். நீங்கள் படித்ததில் இரண்டு கதைகளை மட்டும் நான் படித்திருக்கிறேன். உண்மையே உன் விலை என்ன மற்றும் கனவுத் தொழிற்சாலை. உண்மையே உன் விலை என்ன திரைப்படமும் மிக அருமையாக இருக்கும். கனவுத் தொழிற்சாலையும் நல்ல புத்தகமே. கோணல் பக்கங்களும் படித்திருக்கிறேன்.
count of monte cristo...புத்தகம் இருக்கிறது. இன்னும் படிக்கவில்லை. classic படிக்கும் ஆர்வம் இருக்கிறதென்றால் the secret garden படியுங்கள். மிக நன்றாக இருக்கும்.
சத்தியப்பிரியன்!
போராட்டங்கள்;இளமையில் படித்தேன்;சோவில் சில;உண்மையே உன் விலை என்ன? உட்பட நளினமான எள்ளலுக்கு, கோணல் பக்கமும் படித்துள்ளேன், வெகுவாகப் பாதித்தவர் ஜெயகாந்தன்; ஈழத்தில் செங்கையாழியான்;டானியல் ,பால மனோகரன். ஆங்கிலப் புலமையில்லாததான் ;வாசிப்பதில்லை
யோகன் பாரிஸ்
//
G.Ragavan said...
classic படிக்கும் ஆர்வம் இருக்கிறதென்றால் the secret garden படியுங்கள். மிக நன்றாக இருக்கும்.
//
அவசியம் படிக்கிறேன் Ragavan. வருகைக்கு நன்றி.
//
Johan-Paris said...
ஈழத்தில் செங்கையாழியான்;டானியல் ,பால மனோகரன். ஆங்கிலப் புலமையில்லாததான் ;வாசிப்பதில்லை
//
தமிழில் படிக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி பிற மொழிகளில் கிடைப்பதில்லை. இது என்னுடைய கருத்து.
ஈழ எழுத்தாளர்களை அதிகம் படித்ததில்லை. நான் வளர்ந்த திருச்சி கே.கே.நகர் பகுதியில் ஈழத்தமிழர்கள் அதிகம் இருந்தும், அவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள் இருந்தும், அவர்களில் பலர் என்னுடைய நெருங்கிய தோழர்களாக இருந்தும், ஏனோ ஈழ இலக்கியங்களை படிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை.
இப்பொழுது வளர்ந்த பிறகு நான் செய்த தவறு புறிகிறது. :-)
அருமையான விமர்சனங்கள். நான் கனவுத் தொழிற்ச்சாலையும், உண்மையே உன் விலை என்னவும் படிச்சிருக்கேன். மத்ததையும் படிக்கணும் போல இருக்கு உங்க விமர்சனத்தை படிச்சதும்.
//
Priya said...
அருமையான விமர்சனங்கள். நான் கனவுத் தொழிற்ச்சாலையும், உண்மையே உன் விலை என்னவும் படிச்சிருக்கேன். மத்ததையும் படிக்கணும் போல இருக்கு உங்க விமர்சனத்தை படிச்சதும்.
//
அவசியம் படிங்க. அதுதான் எனக்கும் வேண்டும்.
பாராட்டுகளுக்கு நன்றி.
ரொம்ப நல்லா இருக்கு சதிஷ்.. நல்ல பதிவு..
சத்யா..உண்மைய சொல்லனும்னா ஒரு நாவல் படிச்சேன்னா அது முடிக்கறதுக்குள்ள முதல் அத்யாயம் என்னனு மறந்து போய்டும் எனக்கு...ஆனா நீங்க சின்ன வயசுல படிச்சது எல்லாம் ஞாபகம் வெச்சு எழுதி இருக்கீங்கனா பெரிய விசயம் தான்.... :-)
பாராட்டுகளுக்கு நன்றி Karthikeyan Muthurajan.
//
Syam said...
சத்யா..உண்மைய சொல்லனும்னா ஒரு நாவல் படிச்சேன்னா அது முடிக்கறதுக்குள்ள முதல் அத்யாயம் என்னனு மறந்து போய்டும் எனக்கு...ஆனா நீங்க சின்ன வயசுல படிச்சது எல்லாம் ஞாபகம் வெச்சு எழுதி இருக்கீங்கனா பெரிய விசயம் தான்.... :-)
//
Syam, எப்பொழுதோ நடந்தாலும் நம்மை பாதித்த சம்பவங்கள் நம் நினைவை விட்டு போகாதல்லவா?
பாராட்டுகளுக்கு நன்றி.
neengal kooriya kathaikalil ontrum nan padikka villai. Kanavu thozhirchalai nan vendam entru padikka villai. ahtu cinema patriyathu entru vittu vitten. But inimel nan padikka pokiren.
Nantri
vanakkam
//2. நாவல்: போராட்டங்கள், ஆசிரியர்: ர. சு. நல்லபெருமாள்//
இந்த புத்தகத்தின் பெயர் குருஷேத்திரம் என்று நினைக்கிறேன். நல்ல புத்தகம். இவருடைய "கல்லுக்குள் ஈரம்" படித்திருக்கிறீர்களா?"ஹேராம்" படத்தின் கதையைப் போன்றே இருக்கும்.
ரொம்ப நல்ல பதிவு.
நல்ல பதிவு சத்யா. இதுல நான் கோணல் பக்கங்கள் மட்டும்தான் படிச்சிருக்கேன். உங்க விமரிசனம் மற்ற நாவல்களையும் படிக்கத்தூண்டுது..
நான் படிச்சதில் தமிழில் நல்ல காமடி நாவல் - பட்டுக்கோட்டை பிரபாகரோட 'பிருந்தாவனத்தில் ஒரு நொந்தகுமாரன்'; நல்ல 'Inspiration'தரக்கூடிய நாவல் பாலகுமாரனோட 'கொம்புத்தேன்'. நீங்க படிச்சிருக்கீங்களா ?
//
raams said...
neengal kooriya kathaikalil ontrum nan padikka villai. Kanavu thozhirchalai nan vendam entru padikka villai. ahtu cinema patriyathu entru vittu vitten. But inimel nan padikka pokiren.
//
அவசியம் படியுங்கள். வருகைக்கு நன்றி.
//
Nandha said...
இந்த புத்தகத்தின் பெயர் குருஷேத்திரம் என்று நினைக்கிறேன். நல்ல புத்தகம்.
//
அது போராட்டங்கள் என்ற பெயரில் தான் தொடராக வந்தது. குருஷேத்திரம் என்பது பொருத்தமான பெயர்.
//
இவருடைய "கல்லுக்குள் ஈரம்" படித்திருக்கிறீர்களா?"ஹேராம்" படத்தின் கதையைப் போன்றே இருக்கும்.
//
படித்ததில்லை. அவசியம் படிக்கிறேன்.
//
ரொம்ப நல்ல பதிவு.
//
மிக்க நன்றி.
//
கதிரவன் said...
நல்ல பதிவு சத்யா. இதுல நான் கோணல் பக்கங்கள் மட்டும்தான் படிச்சிருக்கேன். உங்க விமரிசனம் மற்ற நாவல்களையும் படிக்கத்தூண்டுது..
//
அவசியம் படியுங்கள். நன்றி கதிரவன்.
//
நான் படிச்சதில் தமிழில் நல்ல காமடி நாவல் - பட்டுக்கோட்டை பிரபாகரோட 'பிருந்தாவனத்தில் ஒரு நொந்தகுமாரன்'; நல்ல 'Inspiration'தரக்கூடிய நாவல் பாலகுமாரனோட 'கொம்புத்தேன்'. நீங்க படிச்சிருக்கீங்களா ?
//
இல்லீங்க படித்ததில்லை. அதையும் படிக்க முயல்கிறேன்.
அது சரி, இதென்ன இந்த பழைய பதிவிற்கு இத்தனை பின்னூட்டங்கள் :-)
ர.சு.நல்ல பெருமாளின் போராட்டங்கள் நாவல் இரண்டாவது பதிப்பில் குருஷேத்திரம் என்று பெயர் மாற்றப்பட்டது... மூன்றாவது பதிப்பின் முன்னுரையிலே இந்த தகவல் சொல்லப்பட்டிருக்கும்
ர.சு.நல்ல பெருமாளின் போராட்டங்கள் நாவல் இரண்டாவது பதிப்பில் குருஷேத்திரம் என்று பெயர் மாற்றப்பட்டது... மூன்றாவது பதிப்பின் முன்னுரையிலே இந்த தகவல் சொல்லப்பட்டிருக்கும்
ஆச்சரியம்!
சுழிக்காற்று திராட்சைக் கொடி பங்களா, வேப்பமரத்து பங்களா மறக்கமுடியாது
போராட்டங்கள் முரளி சிவராமன் இவர்களை மறக்கமுடியாது
இவைகளை 45 வருடங்களுக்கு முன் படித்தது. இன்னும் நினைவில் நிற்கும் கதா பாத்திரங்கள்
Post a Comment