Saturday, December 30, 2006


குழலினிது யாழினிது!!!

சமீபத்தில் திரு.சர்வேசன் அவர்களின் "மாதவன் கலக்கல்ஸ்" என்ற ஒரு பதிவை படிக்க [பார்க்க] நேர்ந்தது. அதில் மழலை மாறாத மாதவன் அமெரிக்க மாகாணங்களின் தலை நகரங்களை சரியாக கூற, அதை அவனது தந்தை ஒளிப்பதிவு செய்திருந்தார். பதிவின் முடிவில் "Excellent Madhava!" என்று பாராட்டு வேறு. இவர் என்றில்லை, பொதுவாகவே இன்றைய இந்திய பெற்றோர்களிடையே தத்தம் குழந்தைகளை இது போன்ற செயல்களை செய்ய வைத்து பெருமை அடையும் ஒரு வித மன நோய் இருக்கிறது. ஆம் இதுவும் ஒரு வகை மன நோயே. மூன்று நான்கு வயதிலிருந்தே பாட்டு, நடனம், ஓவியம் இன்னும் பிற கலைகள் பொன்றவற்றை பயின்று வரும் குழந்தைகள் பலர் அதை TVயில் கூற நான் கேட்டிருக்கிறேன். அந்த வயதில் தனக்கு பிடித்த ஒரு துறையை தேர்வு செய்யும் அறிவு குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்? ஆக பெற்றோர் தாங்கள் விரும்பும் ஒரு துறையில் தங்களது குழந்தைகளை சாதிக்க வைத்து தாங்கள் பெருமை அடைய தங்களது குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலி கொடுக்கிறார்கள்.

ஐந்து வயது குழந்தை பொருள் தெரியாமல் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதாலும், மாகானங்களின் தலை நகரங்களை கூறுவதாலும் என்ன பலன் ஏற்படப் போகிறது? இந்திய கல்வித்திட்டத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டியது மனப்பாடம் செய்யும் முறை என்று ஆய்வாளர்கள் பல முறை கூறியும் இத்தகைய பெற்றொர்கள் திருந்தவில்லை. இவர்களின் ஊக்குவிப்பாலும், பாராட்டுகளாலும் குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்வதே அறிவை வளர்க்கும் முறை என்ற நம்பிக்கை ஏற்பட்டு விடாதா?

ஒரு மனிதனின் தற்போதைய சராசரி வாழ்நாள் 65 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் 15 ஆண்டுகள் மட்டுமே அவனால்/அவளால் உடலளவிலும் மனதளவிலும் குழந்தையாக இருக்க முடியும். ஆனால் இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை மனதளவில் குழந்தைகளாக இருக்க விடுகிறார்களா? அரட்டை அரங்கம் போன்ற TV நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் குழந்தைகள், குழந்தைகள் போலவா பேசுகிறார்கள்?

குழலையும் யாழையும் விட இனிமையானது குழந்தைகளின் மழலை என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய குழந்தைகள் பலருக்கு மழலை பேச்சே வருவதில்லை. நான்கு வயதிலேயே நன்றாக பேச தொடங்கி விடுகிறார்கள். 11 வயதில் பூப்படைந்து விடும் பெண் குழந்தைகள் பலர் இருக்கிறார்கள்.

குழந்தை திருமணத்தை தடை செய்தது போல, பெற்றோர்கள் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலி இடுவதையும் தடை செய்ய வேண்டும். சட்டத்தின் மூலம் அது முடியாது. தனி மனிதர்கள் திருந்துவதின் மூலம் மட்டுமே அது முடியும். நாம் இனியாவது நமது குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போம். அவர்களின் குழந்தை பருவம் அவர்களுக்கு சொந்தமானது. அதை அவர்களிடமிருந்து பிடுங்குவது, பிறர் சொத்துக்களை கொள்ளையடிப்பதை போன்றது.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

13 Comments:

Anonymous said...

இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கவே இல்லையே?

SathyaPriyan said...

//
ஜி said...
இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கவே இல்லையே?
//

அதனால் என்ன ஜி? இனிமே நீங்க யோசிச்சீங்கன்னா எனக்கு சந்தோஷம்.

Anonymous said...

நான் "குழந்தைக்காக" படம் பார்த்த காலத்திலிருந்து; குழந்தைகளை குழந்தையாக பேச,வாழ விடுவார் இல்லை என ஆதங்கப்படுவதுண்டு. தொல்லைக்காட்டியின் பின் உச்சத்தனக் கோமாளித்தனம்...இது பற்றிப் நான் பேசக்கூடாது காரணம் எனக்குக் குழந்தை இல்லை. யானைக்கால் வியாதிக்காரனை ஒரு யானைக்கால் வியாதிவந்த வைத்தியரே!வைத்தியம் பார்க்கவேண்டுமெனும் சமுதாய அமைப்பு நம் அமைப்பு. என் செய்வது. பலருக்கு உறைக்க வேண்டிய பதிவு.
இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
யோகன் பாரிஸ்

Priya said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சத்யா.

ரொம்ப சரியா சொல்லி இருக்கிங்க. பெற்றோர்கள் யோசிச்சா நல்லது.

இப்ப குழந்தைகளுக்கு school போக ஆரம்பிச்சதுமே ஏகப்பட்ட pressure. அது போதாதுனு parents வேர 'school போரதுக்கு முன்னாடியே என் குழந்தைக்கு இதெல்லாம் தெரியும்'னு பெருமை அடிச்சிக்கறத்துக்காக குழந்தைகள போட்டு பாடா படுத்தறாங்க.
பள்ளிகளும் admission க்காக 2 1/2 வயசு குழந்தைகள interview ங்கர பேர்ல test பண்றாங்களே, அதுக்கு என்ன சொல்றிங்க?
அப்புறம், உச்சக் கட்ட கொடுமை குழந்தைகள ஆபாசமான சினிமா பாடல்களுக்கு நடனமாட சொல்லி பெற்றோர் ரசிக்கறது..

குழந்தைகளை குழந்தைகளா இருக்க விடுங்க பெற்றோகளே..

Anonymous said...

சரி - என்பது ஒரு 70%
!= சரி என்பது ஒரு 10%
context based approach என்பது 20%

Yes i tightly agree with ur inception point -
that kids should grow( mental maturitiy ) based on their age group.
even though Baby ஷாமிலி, Baby ஷாலினி எல்லாம் cute இருந்தாலும் acting konjam tortureaa dhaan irukum.
anyways ippo matteru vandhu உங்க blog-title ikku ஒரு salute.

10% negation வந்து its parents responsbility to generate a platform or start-up ground to their kids. Later depends on their progress n interest of the kid it can be eased rather than constrainted. why i am saying this because certain arts are very good to learn at the tender age rather than later.

for example music which i picked up couple of years back and i used to learn compete with young kids of age group less 10.
i am suprised( not like b.shalini case ) about their interest,dedication, involvement. nothing should be constrainted but it should be felt.

In our days thirukural memorizing contest is one famous thing. i know lot of people used to tell all the kurals. its a good effort but its not carried over further and lost in the middle.

குழந்தை பருவம் ஒரு இனிமையான பருவம் parents should not put more pressure or better word is do not do "Information Overloading" to kids

Anonymous said...

இனிய புத்தான்டு வாழ்த்துகள் - என் நன்பனின் நன்பா == என் நன்பா

Machi said...

நன்றாக சொல்லியுள்ளிர்கள். சொல்லவந்த கருத்து நன்றாக புரிகிறது.

/11 வயதில் பூப்படைந்து விடும் பெண் குழந்தைகள் பலர் இருக்கிறார்கள்./

இது தான் புரியவில்லை.

SathyaPriyan said...

//
Johan-Paris said...
பலருக்கு உறைக்க வேண்டிய பதிவு.
இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.யோகன் பாரிஸ் அவர்களே.

//
Priya said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் சத்யா.

ரொம்ப சரியா சொல்லி இருக்கிங்க. பெற்றோர்கள் யோசிச்சா நல்லது.
//

அது தான் நான் விரும்புவதும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. SFO பயனம் நன்றாக இருந்ததா?

//
Adiya said...
சரி - என்பது ஒரு 70%
!= சரி என்பது ஒரு 10%
context based approach என்பது 20%

இனிய புத்தான்டு வாழ்த்துகள் - என் நன்பனின் நன்பா == என் நன்பா
//

I totally agree with your point Adiya. Thank you for your visit and comments.

//
குறும்பன் said...
நன்றாக சொல்லியுள்ளிர்கள். சொல்லவந்த கருத்து நன்றாக புரிகிறது.

/11 வயதில் பூப்படைந்து விடும் பெண் குழந்தைகள் பலர் இருக்கிறார்கள்./

இது தான் புரியவில்லை.
//

நான் சொல்ல வந்தது, இயற்கையே குழந்தை பருவத்திற்கு எதிராக செயல் படுகிறது, நாமும் அவ்வாறு செய்ய வெண்டாம் என்பது தான். மன்னிக்கவும். சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்ல தவறி விட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குறும்பன்.

ஜி, யோகன் பாரிஸ். Priya, Adiya, குறும்பன் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தான்டு வாழ்த்துகள்.

ஷைலஜா said...

நல்ல பதிவு..தாமதமாய்ப்படித்து பதில் போடுகிறேன் மன்னிக்க.
குழந்தைகள் தினம் அன்றுகூட யாரோ இப்படி எழுதி இருந்ததை பத்திரிகையில்படித்தேன் அதுவும் ஒருகுழந்தையே பேசுவதுபோல..'எங்களை விட்டுவிடுங்களேன் ப்ளீஸ்?' என்னும் தலைப்பில்.
I need yr mail Id plz.
ஷைலஜா
centreville

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷைலஜா. தங்களது பதிவில் என்னால் பின்னூட்டம் இட முடிய வில்லை. நீங்கள் எனது பதிவில் பின்னூட்டமாக தங்களது மின்னஞ்சலை தந்தால் நான் மின்னஞ்சல் செய்கிறேன்.

Arunkumar said...

நல்ல பத்வு சத்யா.. நான் கூட இந்த அரட்டை அரங்கம் பார்க்கும் போது நினைப்பதுண்டு. "எதற்காக வயதானவர்கள் பேச வேண்டியதை இந்த குழந்தையை பேச வைக்கிறார்கள் பெற்றோர்கள்" என்று. மனப்பாடம் செய்து ஒப்பித்தலில் என்ன இருக்கிறது? பெற்றோர்கள் ஏன் இதை புரிந்துகொள்வதில்லை?
அதே நேரம் பாட்டு,நடனம்,நீச்சல்,இசை,கராத்தே,டென்னிஸ் போன்றவை குழந்தைகளுக்கு அந்த பருவத்திற்கேற்ற மகிழ்ச்சியையும் நல்ல ஈடுபாட்டையும் கொடுக்கும் என்பது என் கருத்து. சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடும்போது அதை நாம் கண்டிப்பாக ரசிக்கிறோம். இல்லயா?

SathyaPriyan said...

//
Arunkumar said...
பாட்டு,நடனம்,நீச்சல்,இசை,கராத்தே,டென்னிஸ் போன்றவை குழந்தைகளுக்கு அந்த பருவத்திற்கேற்ற மகிழ்ச்சியையும் நல்ல ஈடுபாட்டையும் கொடுக்கும் என்பது என் கருத்து. சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடும்போது அதை நாம் கண்டிப்பாக ரசிக்கிறோம். இல்லயா?
//
நாம் கண்டிப்பாக ரசிக்கிறோம் Arunkumar. அதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை. ஆனால் அதில் குழந்தைகள் தானாகவே இயல்பாக ஈடுபடுகிறார்களா? என்பது தான் எனது கேள்வி. இதை பேராசிரியர் திரு. சத்யசீலன் அவர்கள் ஒரு மேடையில் கூறினார்கள், "ஒரு முட்டை உள்ளிருந்து தானாக உடையும் போது ஒரு உயிர் உருவாகிறது. ஆனால் அது வெளியிலிருந்து உடைபடும் போது உயிர் அழிகிறது." என்று. எத்துனை அழகான கருத்து.

Arunkumar said...

"ஒரு முட்டை உள்ளிருந்து தானாக உடையும் போது ஒரு உயிர் உருவாகிறது. ஆனால் அது வெளியிலிருந்து உடைபடும் போது உயிர் அழிகிறது."
//

என்ன ஒரு அருமையான சிந்தனை.