Friday, February 29, 2008

அரிதாய் கிடைத்த ஒரு நட்பு

அது 2002 ஆம் ஆண்டு. பொறியியல் படிப்பை முடித்து விட்டு உள்வளாக நேர்முகத் தேர்வில் (Campus Interview) வெற்றி பெற்று Siemens நிறுவனத்தில் பணிபுறிந்து கொண்டிருந்த நேரம். எங்கள் நிறுவனம் கார்களுக்கு எலக்ட்ரிகல் சர்கியூட்கள் வடிவமைத்து தயாரிக்கும் நிறுவனம். தொழிற்சாலை இருந்தது செங்கல்பட்டு மறைமலையடிகள் நகர் பகுதியில்.

நான் தங்கி இருந்தது தாம்பரம் சானடோரியம் பகுதியில். ஒரு வீட்டின் out house ல் தங்கி இருந்தேன். ஒரு அறை + ஒரு குளியல் அறை, இது தான் வீடு. குளியல் அறையில் தண்ணீர் வசதியெல்லாம் கிடையாது. அருகில் உள்ள கிணற்றில் நீர் இறைத்து குளிக்க வேண்டும். துணி துவைக்க மற்றும் இதர காலைக் கடன்களுக்கும் அப்படித்தான்.

தகவல் தொழில்நுட்ப அலுவலில் உள்ள flexi timing வசதியெல்லாம் கிடையாது ஆகையால் எட்டு மணிக்கு சரியாக தொழிற்சாலையில் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அரை நாள் சம்பளம் கிடையாது.

அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து; காலை கடன்களை முடித்து; ஆறே முக்கால் மணிக்கு தாம்பரம் சாணடோரியம் ரயில் நிலையத்திற்கு விரைந்து; சரியாக ஏழு மணி மூன்று நிமிடங்களுக்கு வரும் ரயில் பிடித்து (அந்த ரயில் நேராக செங்கல்பட்டு செல்லும். இல்லையென்றால் தாம்பரம் வரை சென்று ரயில் மாற வேண்டும். நடை மேடையும் மாற வேண்டும்.); மறை மலையடிகள் நகர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் அலுவலகத்திற்கு நடந்து போய் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

இதற்கிடையில் காலை சிற்றுண்டி என்ற ஒன்றை அவசியம் முடித்து தொலைக்க வேண்டுமே என்ற கவலையை போக்க வரமாக வந்தது தான் தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் உள்ள சிற்றுண்டி வளாகம். போகிர போக்கில் ஏதாவது வாயில் போட்டுக்கொண்டு போய்விடலாம் அல்லவா?

முதல் முறை அந்த சிற்றுண்டி வளாகத்தில் உணவு வாங்கிய போது அதன் உரிமையாளர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். அது ஏன்? என்பது பின்னர் தான் எனக்கு விளங்கியது. அந்த சிற்றுண்டி வளாகத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் அந்த ரயில் நிலையதிலேயே தங்கி பிச்சை எடுக்கும் நண்பர்கள் தான். அப்படி இருக்கும் ஒரு கடைக்கு Formal Pant/Shirt/Shoe போன்றவற்றுடன் சென்று உணவு உண்ட முதல் ஆள் நானாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

தினமும் ஒரே கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சக வாடிக்கையாளர்களின் நட்பு கிடைப்பது சகஜம் அல்லவா? அது போல எனக்கும் ஒரு நட்பு கிடைத்தது. அவர் பெயர் செல்வேந்திரன். (நல்ல பெயர் என்று நினைத்துக் கொண்டேன்.) சொந்த ஊர் திண்டிவனம். சென்னைக்கு அவர் வந்து இருபது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. அவருக்கு சுமார் 40 அல்லது 50 வயதிருக்கலாம். அண்ணன் இறந்த பிறகு அண்ணியையே தனக்கு மணம் முடிக்க வீட்டில் முடிவு செய்ததாகவும் அது பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். சொந்த ஊர் சென்னைக்கு அருகில் தான் என்றாலும் அவர் சென்னைக்கு வந்த பிறகு தனது சொந்த ஊருக்கு சென்றதே இல்லை. இவையெல்லாம் முதல் நாள் எங்களுக்குள் நடந்த உரையாடல்களின் மூலம் நான் தெரிந்து கொண்டது.

அதற்கு அடுத்த நாள் எங்களுக்குள் நடந்த உரையாடல் மிகவும் சுவாரசியமானது. நான் வழக்கம் போல இரண்டு இட்லிகளை வாயில் அவசர அவசரமாக தினித்துக் கொண்டிருந்த போது அவரே பேச்சை தொடக்கினார்.

"தம்பி நீங்க ***** ஆளுங்களா?"

நான் மெலிதாக புன்னகைத்துக் கொண்டே,

"என்னவா இருந்தா என்னங்க? என்னன்னு சொன்னா தான் பேசுவீங்களா?"

"இல்ல. உங்கள பாத்தா அவுங்கள மாதிரி தெரியுது. ஆனா அவுங்க எல்லாம் என்ன மாதிரி ஆளுங்க கூட பேசுவாங்களா? அதான் சந்தேகமா இருந்துது. நீங்க ரொம்ப பவுசா பேசறீங்க."

நான் மீண்டும் சிரித்து வைத்தேன்.

அவர் மீண்டும் மீண்டும் அந்த கேள்விக்கு விடை காண முயன்றார். நான் கடைசி வரை பிடி கொடுக்கவில்லை. பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று,

"என்ன நீ இவ்வளவு கேட்டும் பதில் சொல்ல மாட்டேங்கறே?" என்று சலித்துக் கொண்டார். 'நீங்க' என்பது 'நீ' ஆனவுடன் அவர் 'நான் அவன் இல்லை' என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தார் என்று முடிவு செய்து கொண்டேன். இத்தனை நேரம் அவர் 'நீங்க' என்று விளித்தது என் மீது உள்ள மரியாதை காரணமாக அல்ல; ஒரு வேளை 'நான் அவனாக இருக்கலாமோ?' என்ற சந்தேகத்தால் மட்டுமே என்பது தெளிவானது. எனக்கு அத்தகைய போலி மரியாதைகள் ஒன்றும் தேவைப் படவில்லை. மேலும் அப்பொழுது அவருக்கோ என்னை போன்ற இரு மடங்கு வயது இருக்கும். அவர் என்னை ஒருமையில் அழைப்பதில் எனக்கென்ன ஆட்சேபம் இருக்க முடியும்?

இதற்கும் நான் மெலிதாக சிரித்துக் கொண்டே பேச்சை மாற்றி விட்டேன். அவரும் அதற்கு பிறகு அந்த பேச்சை எடுக்க வில்லை.

அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தினமும் புன்சிரிப்பு பரிமாற்றங்கள்; சில நேரங்களில் பரஸ்பர விசாரிப்புகள்; மேலும் சில நேரங்களில் சில சோகப் பரிமாற்றங்கள் (குறிப்பாக இவர் பிச்சையடுத்த பணத்தை காவல் துறையினர் மாமூல் பிச்சை கேட்டு பிடுங்கிக்கொண்டு போகும் நாட்களில்) என்று நாட்கள் அமைதியாக சென்றுகொண்டிருந்தன.

அப்பொழுது தாம்பரம் சானடோரியம் MEPZ வளாகத்தில் உள்ள IOB வங்கியில் தான் எனக்கு கணக்கு இருந்தது. ATM Debit Card எல்லாம் அப்பொழுது என்னிடம் இல்லை. பணத்தை வங்கியிலிருந்து எடுக்க வேண்டும் என்றால் காசோலை மூலமே எடுக்க வேண்டும். மேலும் வங்கிக் கணக்கில் அவ்வளவு தொகை இருக்கிறது என்பதை Pass Book ல் entry போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். மாதா மாதம் email லில் Bank Statement எல்லாம் வராது. Pass Book ல் உள்ள entry மட்டுமே Statement ஆக பயன்படும். அவ்வாறு entry போடவில்லை என்றால் வங்கியிலிருந்து என்னென்ன தேதிகளில் எவ்வளவு பணம் எடுத்தோம் என்பதற்கும், அவ்வளவு பணம் போட்டோம் என்பதற்கும், மீதம் எவ்வளவு இருக்கிறது என்பதற்கும் நம்மிடம் ஆவணம் எதுவும் இருக்காது. இதனால் overdraft ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனக்கும் இதுதான் நடந்தது. வங்கியில் பணம் எவ்வளவு இருக்கிறது என்றே தெரியாமல் நண்பன் ஒருவனுக்கு ஒரு தொகைக்கு காசோலை கொடுத்து விட்டேன். அவன் பணத்தை வங்கியிலிருந்து எடுத்த பின் தான் தெரிந்தது என்னிடம் வீட்டு வாடகை போக சொற்ப தொகையே மீதி இருந்தது என்று. அதை வைத்து ஒரு வார காலத்தை போக்க வேண்டும் என்ற நிலை. உணவிற்கான செலவு மட்டுமே என்பதால் அது அப்படி ஒன்றும் கடினமான செயல் கிடையாது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே வந்தது ஒரு மெகா சைஸ் ஆப்பு.

எனது அலுவலகத்தில் நாசிக் நகரத்தை சேர்ந்த விகாஸ் கட்லாக் என்பவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு அவருக்கு ஒரு பரிசு வழங்க அனைவரிடத்திலும் பணம் சேகரிக்கப்பட்டது. என்னிடம் பணம் கேட்கப்பட்ட போது என்னிடம் இருந்தது பத்தே ரூபாய்கள். வீட்டில் இருந்தது ஒரே ஒரு நூறு ரூபாய் நோட்டு தான். சம்பளம் மறு நாள் வந்துவிடும் என்றாலும் நான் முன்னர் கூறியது போல வங்கிக்கு சென்று பணம் எடுப்பது சனிக்கிழமைகளில் மட்டுமே சாத்தியம். மற்ற நாட்களில் சென்றால் அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டும். சனிக்கிழமைக்கோ இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன.

சரி அன்று மாலை வீட்டிற்கு வந்தவுடன் யாரிடமாவது கடன் வாங்கி சமாளிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது சரியாக ஒரு முக்கியமான அலுவல் வந்தது. அந்த முக்கியமான அலுவல் நிமித்தமாக அருகில் இருக்கும் போர்டு கார் தொழிற்சாலைக்கு செல்ல வேண்டியதானது. அலுவல் முடிந்து வீட்டிற்கு வரும் போது நேரம் இரவு 10 மணி.

மறுநாள் பணம் தர வேண்டும். கையிலோ, வங்கியிலோ பணம் இல்லை. யாரிடமும் கேட்கவோ நேரம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டே எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கி விட்டேன்.

காலையில் வழக்கம் போல விழித்து அலுவலகம் கிளம்பினேன். "பணம் எடுத்து வர மறந்து விட்டேன். நாளை தருகிறேன்." என்று கூறி சமாளித்து விடலாம் என்பது எனது திட்டம். அதே நினைவுடன் ரயில் நிலைய நடை மேடையில் நான் நின்று கொண்டிருந்த போது என் மனதை எப்படியோ படித்து விட்ட அவர், என்னிடம் வந்து "என்ன?" என்று விசாரித்தார். அவரிடம் அனைத்தையும் கூறினேன். இதில் எனக்கே வியப்பானது என்னவென்றால் எனது மனதினுள் 'அவரிடம் சொல்லலாமா? வேண்டாமா?' என்ற கேள்வி சிறிதும் எழவில்லை என்பது தான். அனைத்தையும் கேட்ட அவர், சிறிதும் தயங்காமல் தனது மூட்டையை சிறிது நேரம் கிளறி பின்னர் அதிலிருந்து ஒரு புதிய சலவை தாள் ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து என் கையில் தினித்து விட்டு எனது பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டார்.

சனிக்கிழமையன்று சம்பளம் வந்தவுடன் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து அவரை தேடி சென்று அவரது பணத்தை அளித்தேன். பெற்றுக் கொண்ட அவர் கையை நீட்டி மீதம் ஐம்பது ரூபாய் கேட்டார். நான் எதுக்கு என்ற சிந்தனையுடன் எனது புருவத்தை உயர்த்தியவுடன் அதை புறிந்து கொண்ட அவர், "ஒரு நாளைக்கு நூத்துக்கு அஞ்சு ரூபா வட்டி." என்றார். முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பின்னர் சிரித்துக் கொண்டே அவருக்கு அவர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு விலகி சென்றேன்.

இது நடந்த ஒரிரு வாரங்களில் எனக்கு இன்போஸிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்து நான் பயிற்சிக்காக புவனேஷ்வர் செல்ல வேண்டி வந்தது. அப்பொழுது Siemens நிறுவனத்தில் இருந்து என்னை relieve செய்வதில் சிறிது கால தாமதம் ஆனதாலும் வேறு சில விஷயங்களில் எனது முழூ கவனமும் ஈடுபட்டதாலும் நான் செல்வேந்திரனை முழுவதுமாக மறந்தே விட்டேன். அதற்கு இன்னும் ஒரு காரணம் அந்த இரு வாரங்களில் ரயிலில் பயணம் செய்வதற்கு பதில் பேரூந்தில் பயணிக்க தொடங்கி இருந்தேன். அப்பொழுது சரியாக எனது ஸீஸன் பாஸ் முடிந்து விட்டிருந்தது. இரு வாரங்களுக்கு மட்டும் அதனை புதுப்பிப்பது இயலாது என்பதுடன், எனது தொழிற்சாலை மறைமலையடிகள் நகர் பேரூந்து நிறுத்ததிற்கு அருகில் இருப்பதும் அதற்கு காரணம்.

நான் ஊருக்கு புறப்படும் வேளையும் வந்தது. மறுநாள் காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் ஹௌரா விரைவு வண்டியில் பயணம். முதல் நாள் மாலை செல்வேந்திரனிடம் சொல்லிவிட்டு வரலாம் என்றெண்ணி தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் அவரை தேட தொடங்கினேன். அகலப் பாதை நடைமேடை கட்டிக்கொண்டிருந்த நேரம் அது (இப்பொழுது கட்டி முடித்து விட்டார்களா என்று தெரியவில்லை). சாப்பிடும் நேரம் / பிச்சை எடுக்கும் நேரம் தவிர்த்து அவர் உறங்கும் நேரம் அந்த கட்டி முடிக்கப்படாமல் இருந்த நடை மேடையில் தான். அவரை முதலில் அங்கு தேடி அவர் இல்லை என்றதும் மற்றதொரு நடை மேடையிலும் தேடினேன். காணக்கிடைக்கவில்லை.

நான் தேடுவதை புறிந்து கொண்ட சிற்றுண்டி வளாக உரிமையாளர் "அவன் செத்து போய்டான் தம்பி. மூனு நாள் ஆச்சு." என்று சாதாரணமாக சொல்லிவிட்டு அகன்றார். பதறியபடி "எப்படிங்க?" என்றேன். "தெரியல தம்பி. ஏதாவது சீக்கு பட்டு செத்துருப்பான். போலீசு வந்து சாக்கு மூட்டையில தூக்கி போனாங்க." என்று கூறி அவரது வேலையை பார்க்க தொடங்கினார். வேறு எதுவும் கேட்க தோன்றாமல் நான் வெளியூர் செல்வதை மட்டும் கூறி அவரிடம் விடை பெற்றேன். மேலும் ஒரு வாடிக்கையாளரை இழந்த சோகம் அவர் முகத்தில் தெரிந்தது.

ஒவ்வொருவருடைய மரணமும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை ஒவ்வொருவருக்கும் தருகிறது என்றாலும் எனக்கு அது மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது. ஏதோ ஒரு இனம் புறியாத சோகம் வந்து எனது நெஞ்சை அடைத்துக்கொண்டது. வாழ்க்கை எத்தனை எத்தனையோ அனுபவங்களையும் புதிய நட்புகளையும் எனக்கு அளித்திருந்தாலும் அந்த விளிம்பு நிலை மனிதரின் நட்பு என்னால் மறக்க முடியாதது. இது நடந்து 6 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் அவரது முகம் என் நினைவில் இருந்து அகலவில்லை.



எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவிற்கு எனது அஞ்சலிகள். அவருடைய பிரிவால் வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Friday, February 08, 2008

அசத்திய Meghen Miles

"Are you smarter than a 5th grader?" நிகழ்ச்சியை நேற்று FOX 5 யில் பார்க்க நேர்ந்தது. கலந்து கொண்டவர் Meghen Miles என்ற ஒரு PhD மாணவி.

முதலில் நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சிறு முன்னோட்டம். இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ற 11 கேள்விகள் கேட்கப்படும். முதல் 10 கேள்விகள் ஒரு பிரிவாகவும், கடைசி கேள்வி ஒரு பிரிவாகவும் இருக்கும். முதல் 10 கேள்விகளுக்கான பாடப் பிரிவுகள் திரையில் காண்பிக்கப்படும் (உதாரணம்: முதல் வகுப்பு - அறிவியல்; இரண்டாம் வகுப்பு - வரலாறு). பங்கேற்கும் நபர் அதில் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுக்கலாம். மேலும் முதல் 10 கேள்விகளில் விடை தெரியவில்லை என்றால் உங்களுக்கு உதவ ஐந்து சிறுவர்/சிறுமியர் இருப்பார்கள். அவர்களிடம் விடை கேட்டுக் கொள்ளலாம். அதிக பட்சமாக மூன்று முறை நீங்கள் உதவி பெறலாம். ஆனால் கடைசி கேள்விக்கு அந்த உதவியெல்லாம் கிடைக்காது.

கீழே நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள்.

முதல் கேள்வி: What number is exactly halfway between 1 and 7 on a number line?

விடை: 4

இரண்டாம் கேள்வி: By definition, the term “bovine” refers to which of the following animals? A. Cow, B. Pig, C. Dog

விடை: A. Cow

மூன்றாம் கேள்வி: More than 95% of which continent is covered by an ice sheet?

விடை: Antartica

நான்காம் கேள்வி: What U.S. city is known as the City of Brotherly Love?

விடை: இதற்கு அவருக்கு விடை தெரியவில்லை. அருகில் உள்ள ஐந்தாம் வகுப்பு சிறுமியிடம் கேட்டு Philadelphia என்று சரியான விடையளித்தார்.

ஐந்தாம் கேள்வி: How many times does the letter “A” appear in the following word? “Abracadabra”

விடை: 5

ஆறாம் கேள்வி: True or false? An object’s mass is different on the moon than it is on Earth.

விடை: False

ஏழாம் கேள்வி: Which of the following terms refers to the relative speed of a piece of music? A. Staccato, B. Mezzo, C. Tempo

விடை: C. Tempo

அவர் இசையில் இளங்கலை பட்டம் முடித்து இருப்பதாகவும். இதற்கு விடை சொல்ல வில்லையென்றால் தனது ஆசிரியை தன்னை மன்னிக்க மாட்டார் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

எட்டாம் கேள்வி: Who became the first chairman of the People’s Republic of China in 1949?

விடை: Mao

ஒன்பதாம் கேள்வி: During what war did British troops set the White House on fire?

விடை: The War of 1812.

கேள்வியை கேட்டு முடித்த உடனே அவர் மகிழ்ச்சியில் குதிக்க தொடங்கி விட்டார்.

பத்தாம் கேள்வி: At room temperature, approximately 70 degrees Fahrenheit, two elements on the periodic table exist in a liquid state. Bromine is one of them. What is the other?

விடை: Mercury




முதல் பத்து கேள்விகளுக்கு சரியாக விடையளித்ததால் அவர் அரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக பெற்றிருந்தார். அவருக்கு அப்பொழுது இரண்டு choice கள் இருந்தன. ஒன்று அரை மில்லியன் பரிசுத்தொகையுடன் போட்டியில் இருந்து விலகுவது, அல்லது தொடர்ந்து விளையாடுவது. தொடர்ந்து விளையாடுவதில் உள்ள risk என்னவென்றால், அவர் தவறான விடையளித்தால் 25000 டாலர்கள் மட்டுமே பெற முடியும். நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே தான் பரிசுக்காக வரவில்லை என்றும், விளையாடவே வந்து இருப்பதாகவும் கூறிய Meghen அதனை அப்பொழுது உண்மை என்று நிரூபித்தார். தொடர்ந்து விளையாட முடிவெடுத்தார்.

கடைசி கேள்வி: What American pilot was the first person to exceed the speed of sound in an airplane?

விடை: Chuck Yeager

அவருக்கு அந்த விடை தெரியவில்லை. Howard Hughes என்று விடையளித்தார். அது தவறானது. இதில் கொடுமை என்னவென்றால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை ஊக்குவிக்க பார்வையாளராக வந்திருந்த அவரது தந்தை அந்த விடையை சரியாக சொல்லிவிட்டார்.



நிகழ்ச்சியில் அவர் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளித்ததை விட என்னை அதிகம் பிரமிக்க செய்தது அவரது attitude. ஒரு நிமிட நேரத்தில் நான்கு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் டாலர்களை இழந்தாலும் கொஞ்சம் கூட மன வருத்தத்தை வெளிக்காட்டாமல் இருபத்தியைந்தாயிரம் டாலர்கள் கிடைத்தது என்று மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். இந்த அளவிற்கு sportive ஆக ஒருவர் இருந்து நான் பார்த்ததே இல்லை.

நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்க்கும் வழக்கம் இல்லாததால் எனக்கு தெரியவில்லை. ஆனால் அவ்வாறு பார்க்கும் அலுவலக நண்பர்கள் இதுவரை கலந்து கொண்டவர்களிலேயே இவர் தான் அதிக கேள்விகளுக்கு சரியாக விடையளித்தவர் என்று கூறுகின்றனர்.

மேலும் Fox 5 channel அமெரிக்க வரலாறு என்று வகைப்படுத்தி விட்டு வரலாற்றிற்கு பெரிதும் தொடர்பில்லாத பொது அறிவு கேள்வியை கேட்டு அவர் பரிசு வாங்குவதை தடுத்து விட்டது என்றும் கூறுகின்றனர். எது எப்படியோ அனைவரும் கூறுவது
"She deserved a million dollar."

நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்.




Video Copyright © FOX

Thursday, February 07, 2008

கொஞ்சம் சிரிங்க


என்ன கொடுமை சார் இது?



டேய்! உண்மைய சொல்லுங்க இந்த Land Rover அ கயித்த கட்டி இழுக்கறது நம்ம gaptain அய்யா தானே?



உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா?



உஸ்....... இப்போவே கண்ண கட்டுதே



அய்யோ பாவம். தம்பி பீருக்கே மட்டையாகி கிடக்குதே. டூப்பிளிகேட் சரக்கோ?




மேலே உள்ளதெல்லாம் வெளி நாட்டு சரக்கு. கீழே இருக்கறது நம்ம ஊரு சரக்கு.

டேய்! ரூம் போட்டு யோசிப்பீங்களாடா?





Saturday, February 02, 2008

மரணங்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்

சமீபத்தில் படித்த இந்த செய்தியின் விளைவே இந்தப் பதிவு. சென்ற ஆண்டு தேன்கூடு சாகரன் மற்றும் இயக்குனர் ஜீவா ஆகியோரின் மரணங்களுக்கு பிறகே இதை எழுத முடிவு செய்தேன் ஆனாலும் அலுவல் காரணமாக என்னால் எழுத முடியவில்லை. இப்பொழுது இந்த செய்தியை படித்தவுடன் எழுதி விடுவது என்று முடிவு செய்து எழுதத் தொடங்குகிறேன்.

சமீப காலமாக 30 களில் உள்ள ஆண்கள் மாரடைப்பில் இறந்த செய்திகளை பல இடங்களில் கேட்க/பார்க்க/படிக்க முடிகிறது. விபத்துகள், இயற்கை சீற்றங்கள், கொலைகள், மற்ற அசம்பாவிதங்கள் போன்றவற்றினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் சக்தி நம்மிடம் இல்லை என்ற போதும், நோய்களால் ஏற்படும் மரணங்களை ஓரளவு நம்மால் தடுக்க முடியும். ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்; ஆரோக்கியமான வாழ்வியல் முறை போன்றவற்றினால் மட்டுமே அது முடியும் என்ற பொழுதும் நான் சொல்ல வந்தது அது இல்லை.

பின்னர் நான் சொல்ல வந்தது என்ன, என்கிறீர்களா? மரணத்தை வெற்றி கொள்வது எப்படி என்று தான் நான் சொல்ல முன்வந்தேன். மரணத்தை எப்படி வெற்றிகொள்ள முடியும், என்கிறீர்களா? முடியும். நம்மால் முடியும். மனம் இருந்தால் மார்கம் உண்டு.

ஒருவரின் மரணத்தினால் அவரது குடும்பத்திலும், உறவினர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் ஏற்படும் வெற்றிடத்தை காலத்தினால் கூட நிரப்ப முடியாது என்ற போதிலும், அத்தகைய பாதிப்புகளை நம்மால் பெருமளவில் குறைக்க முடியும். குறிப்பாக ஒருவரின் மரணத்தினால் அதிகம் பாதிப்படைபவர்கள் அவரின் குடும்பத்தினர் மட்டுமே. பல குடும்பங்கள் அக்குடும்பங்களின் ஆணிவேராக இருப்பவரின் மரணத்திற்கு பிறகு சிதறி விடுவதை நாம் கண்கூடாக கண்டு இருக்கிறோம். இதற்கு பொருளாதார காரணிகளே முன்னிலையில் இருக்கின்றன.

நீங்கள் உங்கள் பெற்றோருக்கு ஒரே குழந்தையா? உங்கள் பெற்றோருக்கு மாத வருமானம் இல்லையா? மாதந்தோரும் நீங்கள் அனுப்பும் பணத்தை நம்பியே வாழ்கிறார்களா? நீங்கள் இல்லாமல் அவர்கள் நிலை என்ன?, என்று யோசித்து பாருங்கள். உடனே சென்று ஒரு நல்ல ஆயுட் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள்.

தங்கள் மக்கள் இறந்து தாங்கள் வாழும் கொடுமை ஒன்றே அவர்களுக்கு போதும். இரந்து வாழும் கொடுமையும் அவர்களுக்கு வேண்டாம்.

நீங்கள் உங்கள் பெற்றோருக்கு மூத்த குழந்தையா? உங்கள் சகோதர/சகோதரிகளின் கல்வி உங்களின் வருமானத்தை நம்பி இருக்கின்றதா? இதற்கும் ஆயுட் காப்பீடே சிறந்த வழி.

நீங்கள் திருமணமானவரா? உங்கள் வாழ்க்கை துணை வேலைக்கு போகவில்லையா? அவசியம் கவுரவம் கருதாமல் அவரது படிப்பிற்கு எந்த வேலை கிடைக்கிறதோ அந்த வேலைக்கு அவரை அனுப்புங்கள். அவருக்கு விருப்பம் இல்லையென்றாலும் நீங்கள் ஊக்கப்படுத்துங்கள். பணத்திற்காக மட்டுமே அல்ல. கல்வியும், வேலையும், பொருளாதார தன்னிறைவும் தரும் தன்னம்பிக்கையை வேறு எதுவும் ஒருவருக்கு தர இயலாது. உங்களுக்கு பிறகு தன்னையும், உங்கள் குழந்தையையும் ஒருவரின் உதவியும் இல்லாமல் தானே வளர்க்க இந்த தன்னம்பிக்கை மட்டுமே தேவை.

நான் 12 வகுப்பில் படித்த பொழுது எங்கள் சமஸ்கிரித புத்தகத்தில் (நான் முதல் மொழியாக எடுத்து படித்தது தமிழ் தான், என்றாலும் எங்கள் பள்ளி நண்பர்கள் சிலர் சமஸ்கிரிதம் படித்ததால் அவர்களின் புத்தகத்தை ஓரிரு முறை புரட்டி இருக்கிறேன்) இருந்த இந்த வாக்கியம் என்னால் மறக்க முடியாதது ஆகும். எனது வாழ்வில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நான் பின்பற்றுவது இதை தான்.

Always hope for the best;
Be prepared for the worst.

இதன் மூலம், வாழ்வில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மரணத்தை நோக்கியே எடுத்து வைக்கப்படுகின்றது என்ற பொழுதும் நான் மரணத்தை நினைத்தே வாழுங்கள் என்று சொல்ல வரவில்லை. Worst Case Scenario விற்கு தயாராக உங்கள் குடும்பத்தினரை வைத்திருங்கள் என்று தான் குறிப்பிடுகிறேன்.

இதனை படித்த பிறகு நான் ஒரு pessimist ஆக தெரியலாம். இந்தப் பதிவே அநாகரீகமான பதிவாக தோன்றலாம். ஆனாலும் நான் முன்னரே குறிப்பிட்டது போல சமீக காலங்களில் நான் கேள்விப்படும் இத்தகைய மரணங்களின் விளைவாகவே இதனை எழுதினேன். ஆயினும் யாருடைய மனமேனும் புண்பட்டு இருந்தால் தங்கள் மன்னிப்பை கோருகிறேன்.

கடைசியாக ஒன்றே ஒன்று, Don't take your life for granted.