Sunday, April 15, 2012


நிழல் வீரனின் கடைசி நிமிடங்கள்

அங்கிருந்து தப்பித்து செல்வது இயலாத செயல். அந்த அறை மிகவும் சிறியது. எட்டு அடி நீளம், பத்து அடி அகலம். மண் சுவற்றினால் ஆனது. அந்த அறையில் பூட்டிய கதவை தவிர்த்து ஒரே ஒரு கம்பி வைத்த ஜன்னல் மட்டுமே இருந்தது. அந்த ஜன்னல் மட்டுமே வெளிச்சம் மற்றும் காற்றுக்கான மூலம். அந்த அறையை சுற்றி பொலிவியா நாட்டு போர் வீரர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு ஒன்று மட்டுமே தேவையாக இருந்தது. அவர்களுக்கு சிறைக்கைதிகள் தேவை இல்லை. அவர்களுக்கு பிணங்கள் மட்டுமே தேவை. கொரில்லாக்கள் அனைவரும் செத்தொழிய வேண்டும். நான் கதவை திறந்து கொண்டு அந்த அறைக்கு சென்றேன். கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கிடந்தான் அவன்.

அந்த அறைக்கு பின்னால் இருந்த அதே போன்றதொரு அறையில் ஆண்டோனியோவும், அர்ட்யூரோவும் இறந்து கிடந்தனர். இது அவனுக்கு தெரியும். பக்கத்து அறையில் ஆனிஸெக்டோ இறப்பதற்கு தயார் நிலையில் இருந்தான். இதுவும் அவனுக்கு தெரியும்.

நான் அவன் அருகில் சென்று பார்த்தேன். அந்த அறையில் இருந்த மரப்பலகையின் விளிம்பை பிடித்துக் கொண்டிருந்தான். அவனது உடம்பில் பல காயங்கள் இருந்தன. அவனது உடை பல இடங்களில் கிழிந்து இருந்தது. அவனது சிகையும் தாடியும் சேறும் சிகதியுமாக இருந்தது. அவனது கால்களில் ஷூக்கள் இல்லை. தோல் பை ஒன்றை கால்களை சுற்றி அதன் மீது கயிற்றினால் கட்டி இருந்தான்.

ஒரு டாக்டர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாட்டின் அமைச்சராக இருந்தவன். இன்று எனது காலடியில் கிடப்பது எனக்கு வியப்பாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பே ஆஃப் பிக்ஸ் சண்டையில் எனது நண்பன் பிணோ இவனது காலடியில் இப்படித்தான் நாய் போல கிடந்தான்.

பிணோவை உயிருடன் பிடித்த காஸ்ட்ரோவின் வீரர்கள் அவனை அடித்தே கொல்ல முடிவு செய்தனர். அவன் மீது தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த அடிகள் திடீரென்று நிறுத்தப் பட்டன. காரணம் அறிய கண்களை திறந்த பிணோவிற்கு அருகில் நன்கு பாலீஷ் செய்யப்பட்ட பூட்ஸ்கள் அணிந்த இரு கால்கள். அது இவனுடையது. பிணோவின் காதுகளில் இவன் சொன்னது, "உங்கள் அனைவரையும் நாங்கள் கொல்லப் போகிறோம்."

ஆனால் இன்று நிலைமை அனைத்தும் முற்றிலும் மாறி விட்டது. இவன் எனது காலடியில் நாய் போல கிடக்கிறான். இவனை நான் இப்பொழுது என்ன செய்தாலும் ஏன் என்று கேட்பதற்கு நாதியே கிடையாது. அவனது இன்றைய நிலையை அவனுக்கு உணர்த்த விரும்பி அவனிடம் சிறிது உரையாடலாம் என்று அவனிடம் பேசத் தொடங்கினேன்.

"ஏய்!, நான் உன்னிடம் சிறிது பேச வேண்டும்."

அவ்வளவு நேரம் அங்கே சுருண்டு கிடந்த அவனுள் இருந்த போர் வீரன் விழித்துக் கொண்டான்.

"என்னை கேள்வி கேட்கும் ஆண்மகன் இன்னும் பூமியில் பிறக்கவில்லை."

அவன் எனக்கு பதிலளித்ததே எனக்கு வியப்பாக இருந்தது.

"நான் உன்னிடம் கேள்வி கேட்க விரும்பவில்லை. நம் இருவரின் நம்பிக்கைகளும், சித்தாந்தங்களும் வேறு வேறு. ஆனாலும் நான் உன்னை கண்டு வியக்கிறேன். உனது வீரத்தை கண்டு, உனது கொள்கையில் நீ காட்டிய உறுதியை கண்டு, அதற்காக நீ செய்த தியாகத்தை கண்டு, இப்பொழுது உனது மரணத்தை கண்டு. உன்னிடம் நான் உரையாடவே விரும்புகிறேன்."

"எதை பற்றி?"

"ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நீ க்யூபா நாட்டு அமைச்சர், ஒரு மருத்துவர். ஆனால் இப்பொழுது? உனது நிலையை பார்த்தாயா? உனது கொள்கைகளே உன்னை இங்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றன."

அவன் அதற்கு பதில் சொல்லாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"இந்த பெஞ்சில் அமர்ந்து கொள்ளட்டுமா?"

நான் உடனே ஒரு போர் வீரனை கூப்பிட்டு அவனது கட்டுக்களை அவிழ்க்க செய்து அவனை பெஞ்சில் அமர்த்தினேன். அவன் புகை பிடிப்பதற்காக சுருட்டை அளித்தேன்.

பின்னர் இருவரும் சுருட்டு பிடித்துக் கொண்டே உரையாட தொடங்கினோம். அவனது போர் திட்டங்களை பற்றி, கொரில்லா படையினரின் திட்டங்களை பற்றி அவன் ஒன்றும் சொல்ல மாட்டான் என்பது எனக்கு தெரியும். நேரத்தை வீணாக்காமல் பொதுவான விஷயங்களை பற்றி கேட்கத் தொடங்கினேன்.

"இவ்வளவு தென் அமெரிக்க நாடுகள் இருக்கையில், நீ ஏன் க்யூபாவின் வெற்றியினை தொடர்ந்து பொலிவியாவை தேர்ந்தெடுத்தாய்?"

"அதற்கு முன்று காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் வெனிஸூலா போன்ற நாடுகளை நாங்கள் கைப்பற்ற முனைந்தால் அமெரிக்கர்களால் அழித்தொழிக்கப் படுவோம். அதற்காக அமெரிக்காவிற்கு தொலைவாக இருக்கும் நாடுகளை கைப்பற்ற நினைத்தோம்.

இரண்டாவது காரணம், பொலிவியா ஏழை நாடு. அரசு அதிகாரிகளும், இராணுவ ஜெனரல்களும், அமைச்சர்களும் சொகுஸு கார்களின் வலம் வரும் போது பொலிவியா நாட்டு மக்கள் மூன்று வேளை உணவுக்கே கஷ்டப் படுகிறார்கள்.

முன்றாவது காரணம், பொலிவியாவின் பூகோள அமைப்பு. பொலிவியாவை நாங்கள் கைப்பற்றினால் அதன் சுற்றியுள்ள நாடுகளான பெரு, அர்ஜென்டினா, ப்ரேஸில், பராகுவேய், சிலி போன்ற நாடுகளுக்கு செல்ல எங்களுக்கு எளிதாக இருக்கும்."

"க்யூபாவில் பெற்ற வெற்றியினை ஏன் உன்னால் பொலிவியாவில் பெற முடியவில்லை?"

"பொலிவியாவில் எங்களது போராட்டத்திற்கு அவ்வளவாக ஆதரவில்லை. அவர்களுக்கு க்யூபா நாட்டவனான எனது தலைமையின் கீழ் போராட விருப்பம் இல்லை."

அதன் பிறகு நாங்கள் க்யூபா நாட்டின் நிலைமை பற்றிய பேச்சை தொடங்கினோம்.

"அமெரிக்கா க்யூபாவின் மீது பொருளாதார தடைகளை விதித்த உடன் க்யூபாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டதே? ரஷ்யாவின் உதவியும் க்யூபாவிற்கு பெரிய அளவில் உதவ வில்லையே?"

அவன் அதற்கு ஒப்புக் கொள்வது போல தலையசைத்தான்.

"உன்னை க்யூபாவின் நிதியமைச்சராக்கிய பொழுது நீ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லையா? நீ ஒரு மருத்துவன். உனக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்?"

அதற்கும் பதிலில்லை. அதன் பிறகு காஸ்ட்ரோவை பற்றிய எனது கேள்விகள் ஒன்றுக்கு கூட அவனிடமிருந்து பதில் இல்லை. காஸ்ட்ரோவை பற்றிய எந்த தவறான கருத்தையும் அவனது வாயால் அவன் கூற அவன் விரும்பவில்லை என்பது மட்டும் எனக்கு தெரிந்தது.

"உனக்கு என்னை பற்றியும் க்யூபாவை பற்றியும் நிறைய தெரிந்திருக்கிறதே. நீ பேசுவதை கேட்கும் பொழுது நீ ஒரு பொலிவியனா என்று சந்தேகம் வருகிறது."

"நீ கூறுவது உண்மை தான். நான் யாராக இருக்கும் என்று யூகிக்க முடிகிறதா?"

"நீ ஒரு க்யூபனாக இருக்கக் கூடும். அமெரிக்க உளவுத்துறையில் வேலை செய்பவனாக இருக்கலாம்."

"சரியாக சொன்னாய். பே ஆஃப் பிக்ஸ் சண்டையில் உங்களுக்கு எதிராக இருந்தவன்."

"உனது பெயர் என்ன?"

"ஃபெலிக்ஸ்."

"முழூ பெயர்?"

"ஃபெலிக்ஸ்." சற்று அழுத்தமாக சொன்னேன்.

வேறு எதுவும் என்னை பற்றி நான் அவனிடம் கூறவில்லை. ஒருவேளை அவன் இந்த சிறையிலிருந்து தப்பித்து சென்றால் என்னை பற்றிய வேறு எந்த தகவலும் அவனுடன் வெளியேறுவதை நான் விரும்பவில்லை.

அப்பொழுது பக்கத்து அறையிலிருந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. ஆனிஸெக்டோ கொல்லப்பட்டான் என்பது அவனுக்கு தெரிந்தது. இட வலமாக தலையை பல முறை ஆட்டினான். அவனது எண்ண ஓட்டங்களை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

அப்பொழுது எனது ரேடியோ ஒலித்தது. இராணுவ தலைமையிடமிருந்து அழைப்பு. எடுத்து பேசினேன்.

"கேப்டன்! அவன் இறந்து விட்டானா?"

"அவனை தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான்."

"அவனை எப்பொழுது கொல்லப் போகிறீர்கள்?"

"எதற்கு கேட்கிறீர்கள்?"

"அவன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகளை வெளியிட்டு விட்டோம். சீக்கிரம் முடித்து விடுங்கள்."

மீண்டும் அவனிடம் சென்றேன்.

"என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டேன். என்னை மன்னித்து விடு."

"அவசியம் இல்லை கேப்டன். நான் போரில் செத்துவிட்டதாக மக்கள் நம்புவதையே விரும்புகிறேன். அதற்காக பொலிவிய இராணுவத்திற்கு நன்றி. ஒரு ஆண்மகனை கொல்லப் போகிறீர்கள். மகிழ்வுடன் இருங்கள்."

அப்பொழுது நானே வியக்கும் படி ஒரு செயலை செய்தேன். அவனை கட்டித் தழுவிக் கொண்டேன். அதற்கு சில மணித்துளிகள் முன்பாக யாராவது நான் அவனை கட்டித் தழுவுவேன் என்று கூறியிருந்தால் சிரித்திருப்பேன். ஆனால் அப்பொழுது நான் இருந்த நிலை வேறு. இப்பொழுது நான் இருக்கும் நிலை வேறு.

நேற்று வரை நான் கொல்ல வேண்டும் என்று தேடி அலைந்தவனை இன்று கொல்லும் முன்பு எனது இதயம் லேசாக வலிக்கிறது. மரணத்தை இப்படி எதிர் கொண்டவனை இதற்கு முன்னர் நான் பார்த்தது இல்லை.

நான் அறையிலிருந்து வெளிவந்தேன். கடிகாரம் மணி மதியம் 1 என்று காட்டியது. வெளியில் எனது ஆணைக்காக இராணுவ வீரன் ஒருவன் காத்திருந்தான். அவனிடம் தலையசைத்தேன். பின்னர் அவனது காதில் அவனை கழுத்துக்கு கீழே சுடும் படியும் முகத்தில் சுட வேண்டாமென்றும் கட்டளையிட்டேன். மாபெரும் வீரனுக்கு என்னால் முடிந்த மரியாதை.

எனது அறைக்கு திரும்பிய பின்னர் நான் எனது அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்காக குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தேன். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. மணி மதியம் 1:10 என்று காட்டியது.

எனது கை எழுதிக் கொண்டிருந்தது, "சே குவாரா இறந்து விட்டான்."

"மரணம் எப்பொழுது எங்கே நம்மை நெருங்கினாலும் இருகரம் கொண்டு அதனை தழுவுங்கள். ஆனால் அதற்கு முன்பு நமது குரலை அதிகாரத்தில் உள்ளவர்களின் காதுகளிலும், நமது ஆயுதங்களை நமக்கு பின்னர் இப்போராட்டத்தை எடுத்து செல்லும் கைகளிடமும் சேர்த்து விடுங்கள்." - சே குவாரா




ஃபெலிக்ஸ் ரொட்ரீக்வெஸ் எழுதிய ஷேடோ வாரியர் (நிழல் வீரன்) புத்தகத்திலிருந்து.

ஃபெலிக்ஸ் ரொட்ரீக்வெஸ் முந்நாள் CIA உளவாளி. இவரிடம் சே குவாரா இறக்கும் பொழுது கட்டி இருந்த ரோலெக்ஸ் கடிகாரம் இன்னும் இருக்கிறது.

8 Comments:

Anonymous said...

Very interesting...Thanks for sharing bro...

SathyaPriyan said...

வருகைக்கு நன்றி ரெவெரி. தொடர்ந்து வந்து என்னை ஊக்குவிக்கிறீர்கள். அதற்கு ஒரு சிறப்பு நன்றி.

Arunkumar said...

Thanks for sharing bro.. Nice article.

SathyaPriyan said...

நன்றி தலைவா.

Kalee J said...

Very nice narration.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Kalee. நீங்களும் தொடர்ந்து வந்து என்னை ஊக்குவிக்கிறீர்கள். அதற்கும் எனது நன்றிகள்.

Senthil Kumaran said...

நல்ல பதிவு.

SathyaPriyan said...

வருகைக்கு நன்றி Senthil Kumaran. தொடர்ந்து வாருங்கள்.