Tuesday, October 02, 2012


நான் கோட்ஸே பேசுகிறேன்


அந்த மேடையில் இருள் சூழ்ந்திருக்கிறது. மேடையின் நடுவில் சிறு ஒளி. அதில் நாதூராம் நின்று கொண்டிருக்கிறார். தனது பார்வையை பார்வையாளர்களின் மீது மேயவிடுகிறார். பின்னர் முகத்தை இட வலமாக ஆட்டுகிறார். ஒரு வித ஏமாற்றம் அவரது கண்களில் தெரிகிறது. பின்னர் அவர் பேச தொடங்குகிறார்.

உங்களில் ஒருவரின் முகம் கூட எனக்கு தெரியவில்லை. இல்லை. தெரியவில்லை என்பது தவறான வார்த்தை பிரயோகம். உங்கள் அனைவரின் முகங்களும் எனக்கு புதிதாக இருக்கின்றன. அந்த சம்பவம் நடந்த பொழுது உங்களில் இளைஞர்கள் யாரும் பிறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் என்னை பற்றி நிச்சயம் படித்திருப்பீர்கள். நான் ஒரு ஹிந்துத்வ வெறியன் என்று உங்களிடம் சொல்லி இருப்பார்கள். இங்கே இருக்கும் நடுத்தர வயதுள்ளோர் என்னை பற்றி வானொலியிலும் செய்தித்தாள்களிலும் அறிந்திருப்பீர்கள். உங்களது வீடுகள் பற்றி எரிந்த பொழுது "இந்த நாதூராம் யார்? இவனால் நமது வீடு ஏன் பற்றி எரிகிறது?" என்று உங்கள் வீட்டின் பெரியவர்களை கேட்டிருப்பீர்கள். ஆனால் இங்கே இருக்கும் முதியவர்களுக்கு நிச்சயம் என்னை பற்றி தெரிந்திருக்கும். உங்களில் ஒரு சிலர் நான் நடத்திய அக்ரானி பத்திரிக்கையை படித்திருப்பீர்கள். எனது கூட்டங்களுக்கு வந்திருப்பீர்கள். எனது சொற்பொழிவினை கேட்டிருப்பீர்கள். ஆனால் என்னை பற்றி தெரியும் என்பதை யாருக்கும் சொல்லி இருக்க மாட்டீர்கள்.

என்ன வியப்பாக இருக்கிறதா? எனது வயது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? 102 வயது எனக்கு. என்ன, நான் இளமையாக இருக்கிறேனா? அதற்கும் காரணம் உண்டு. எனது இளமைக்கு காரணம் எனது மரணம். நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட எனது மரணம்.

ஆம் நான் பிறந்தது 1910 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி. எனது தந்தையின் பெயர் வினாயக் ராவ். தாயார் பெயர் லக்ஷ்மி. அவருக்கு எனக்கு முன்பே மூன்று குழந்தைகள் பிறந்து மூன்றுமே உயிரிழந்து விட்டன. நான் நான்காவது.

நான் உயிருடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டாத கடவுள் இல்லை. அவர்கள் வேண்டுதல் பலித்தது. நான் உயிர் பிழைத்தேன். நான் உயிருடன் இருக்க வேண்டும் என்பது விதி. என்னுடைய 39 ஆம் வயதில் என்னை இழந்து அவர்கள் வாட வேண்டும் என்பதும் விதி. என்னால் காந்தி கொல்லப் பட வேண்டும் என்பதும் விதி.

எனது சிறு வயது அமைதியாகவே இருந்தது. நான் எனது சிறு வயதில் திருடியதில்லை. அதனால் எனது தந்தையிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இருந்தது இல்லை. நான் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட பின்னர் பிரம்மச்சர்யத்தை பின் பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை, ஏனென்றால் நான் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் அகதிகள் முகாமில் ஏழைகளுக்கும் அகதிகளுக்கும் உணவும், உடைகளும் கொடுத்திருக்கிறேன். என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு உடையில்லை என்பதற்காக நான் அரை நிர்வாணமாக அலைந்ததில்லை. எனது ஆடைகளை நானே நூற்றதில்லை. எனது கழிப்பிடத்தை நானே சுத்தம் செய்ததில்லை. இப்படி எனக்கும் காந்திக்கும் ஒற்றுமை ஒன்றும் இல்லை. ஆனால் ஒன்றை தவிர.

நாங்கள் இருவருமே ஒருவர் மரணத்திற்கு மற்றவர் காரணமானோம். அவர் அவரது கொள்கைக்காக வாழ்ந்தார். நான் எனது கொள்கைக்காக இறந்தேன்.

நான் 39 ஆண்டுகள் வாழ்ந்தேன் என்று கூறினேன் அல்லவா. அதில் உண்மை இல்லை. நான் 655 நாட்களே வாழ்ந்தேன். January 30, 1948 இல் இருந்து November 15, 1949 வரை. சரியாக 655 நாட்கள். January 30, 1948 இல் நான் பிறப்பதற்காக வித்து January 13, 1948 அன்று இடப்பட்டது. அந்தக் கதையை கூறுகிறேன் கேளுங்கள்.

நானா:நாதூராம் எங்கே?
விசு:அவர் இங்கு இல்லை.
நானா:தலைப்பு செய்தியை முடித்து விட்டாயா? இல்லையென்றால் அதனை உடனே நிறுத்து. முக்கிய செய்தி ஒன்று வந்துள்ளது.
விசு:அப்படி என்ன முக்கிய செய்தி? இப்பொழுது தலைப்பு செய்தியை மாற்றுவதென்றால் நாளை பத்திரிக்கை வெளிவருவது இயலாத காரியம்.
நானா:நாளை தாமதமாக வெளி வந்தாலும் பாதகம் இல்லை.
விசு:ஆனால்......
நானா:நாதூராம் எங்கே?
நாதூராம்:இங்கே இருக்கிறேன்.
நானா:தலைப்பு செய்தியை மாற்ற வேண்டும்.
நாதூராம்:அவசியம் இல்லை. நானே மாற்றி விட்டேன்.
நானா:மாற்றி விட்டீர்களா? இப்பொழுது தானே செய்தியை வானொலியில் கேட்டேன்.
நாதூராம்:அதை பற்றித்தான் எனது தலைப்பும் இருக்கிறது. (விசுவை பார்த்து) விசு! எங்கள் இருவருக்கும் காபி கொண்டு வா. (விசு செல்கிறார்.)
நானா:நான் எதை பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?
நாதூராம்:தெரியும். பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க மத்திய சர்கார் சம்மதித்து விட்டது. காந்தி தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டுவிட்டார்.
நானா:அதை பற்றி எழுதி இருக்கிறீர்களா? என்ன எழுதி இருக்கிறீர்கள்?
நாதூராம்:ஆம். நாளை சங்கராந்தி. ஜனவரி 14. சங்கராந்தியை கொண்டாடாதீர்கள். இனிப்புகளை சாப்பிடாதீர்கள். இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்காதீர்கள். துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வழங்குங்கள். இது போராட வேண்டிய நேரம். தெருவில் இறங்கி போராடுங்கள். எதிரிகளை கொல்லுங்கள். வெறும் பேச்சு மட்டும் நமக்கு தீர்வு வழங்காது. போராட வேண்டும். நாளை தசராவை கொண்டாடுங்கள். அது உங்களுக்கு போர்குணம் கிட்ட வழிவகுக்கும். சங்கராந்தி வேண்டாம்.
நானா:ஐயா, இதனால் மக்கள் போராட துணிவார்களா?
நாதூராம்:மக்கள் என்பவர்கள் யார்? நமது பத்திரிக்கையை படிப்பவர்களும், நமது கூட்டங்களுக்கு வருபவர்களும் மட்டும் தான் மக்களா? நீயும் நானும் தான் மக்கள். மக்கள் போராட வேண்டும் என்பதன் பொருள் நீயும் நானும் போராட வேண்டும் என்பது மட்டுமே.
நானா:இதனால் நாம் கைது செய்யப் படுவோம்.
நாதூராம்:எனக்கு அப்படி தோன்றவில்லை. ஹிந்துக்கள் கொல்லப்படும் பொழுதும், அவர்கள் வீட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்படும் பொழுதும், ஹிந்து பெண்கள் கற்பழிக்கப்படும் பொழுதும் இந்த அரசாங்கம் வேடிக்கை தான் பார்த்தது. இந்த அரசாங்கத்திற்கு ஹிந்துக்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அப்படி இருக்கும் பொழுது ஹிந்துத்வம் எப்படி பொருட்டாகும்? அரசாங்கம் பொருட்படுத்தாத ஒன்றை பற்றி எழுதுவது அப்படி அவர்கள் கவனத்திற்கு செல்லும்? ஆனால் இதை பற்றியெல்லாம் அரசாங்கத்தின் கவனதிற்கு கொண்டு சேர்ப்பேன். வழக்கு விசாரணை நடக்கும் பொழுது உலகமே திரும்பி பார்க்கும்.
நானா:என்ன வழக்கு?
நாதூராம்:IPC 302, காந்தி கொலை வழக்கு.
நானா:ஐயா!, என்ன சொல்கிறீர்கள்?
நாதூராம்:ஏன் என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?
நானா:என் மீது நான் வைத்திருக்கும் நமிக்கையை விட உங்கள் மீது அதிகம் வைத்திருக்கிறேன். ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை பயனற்றது.
நாதூராம்:காந்தி தடுத்து நிறுத்தப்பட வேண்டியவர். அவரை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரது கொலை.
நானா:அதில் நான் உடன் படுகிறேன். ஆனால் நீங்கள் அவசரப் படுகிறீர்களோ என்று தோன்றுகிறது.
நாதூராம்:காந்தியை போன்ற மாபெரும் தலைவர்களின் கொலை அவசரத்தினால் வருவதில்லை நானா. அவசியத்தினால் வருவது.
நானா:நீங்கள் முடிவு செய்து விட்டீர்களா?
நாதூராம்:ஆமாம். இதை நான் செய்ய தவறினால் நமது இந்திய தேசம் அழித்தொழிக்கப்படும். கேள் நானா!, நான் காந்தி ஒரு சகாப்தம் என்பதை மறுக்கவில்லை. அவர் ஒரு மஹான். அவரது அஹிம்சை கொள்கையை நான் போற்றுகிறேன். ஆனால் அதை அவர் அவருடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதை அவர் மற்றவர் மீது திணிப்பதை நான் வெறுக்கிறேன். தன்னையே அழித்துக் கொண்டு அஹிம்சையை கடை பிடிப்பதும் ஒருவகை ஹிம்சை தான். அதனை மற்றவர் மீது திணிப்பது படு பாதகமான செயல். அதை தான் காந்தி செய்கிறார்.
நானா:ஆனால் அவரை கொல்லத்தான் வேண்டுமா? இதனை பற்றி நாம் விரிவாக எழுதலாமே?
நாதூராம்:இவ்வளவு காலமும் எழுதிக் கொண்டுதானே இருந்தோம். ஏதாவது பலன் கிட்டியதா? இன்னும் கேள், இந்திய தேசப் பிரிவினை தேவை இல்லாதது. மௌலானா ஆசாத் பக்கம் காந்தி நிற்காமல் ஜின்னா பக்கம் நின்றதால் வந்த தீங்கு. எந்த ஒரு தனி மனிதரும் தேசத்தை விட உயர்ந்தவர் இல்லை. ஆனால் காந்தி தன்னை தேசத்தை விட உயர்ந்தவராக கருதத் தொடங்கி விட்டார்.
நானா:ஆனால் ஜின்னா பிரதமராக விரும்பினாரே?
நாதூராம்:அதனால் என்ன? பெரும்பான்மை ஹிந்துக்கள் உள்ள நாட்டில் இஸ்லாமியர் ஒருவர் பிரதமராக முடியாதா? ஜனநாயகத்தில் அது சாத்தியம் தானே. அதற்காக நாட்டை துண்டாடலாமா?
நானா:காந்தி ஒருவர் மட்டும் அதற்கு காரணம் இல்லையே. மத்திய அரசாங்கம் தானே காரணம்.
நாதூராம்:ஆம். ஆனால் மத்திய அரசாங்கத்தை மிரட்டியது காந்தி. உண்ணா விரதம் இருந்தார். தனது அஹிம்சையால் தன்னை ஹிம்சித்துக் கொண்டு மற்றவர்களையும் ஹிம்சிக்கிறார். நல்ல அஹிம்சை கொள்கை. பிரிவினையின் போது சுஹ்ராவார்தியின் தொண்டர்கள் வங்காளத்தில் செய்த நாச வேலைகள் உனக்கு தெரியாதா?

அன்று ஒரு ஏழை ஹிந்து காந்தியிடம் சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. 'மஹாத்மா!, உங்கள் பேச்சை கேட்டு நான் எனது ஆயுதத்தை கீழே போடுகிறேன். ஏனென்றால் நீங்கள் உண்ணா விரதத்தில் மடிவதை நான் விரும்பவில்லை.' என்றான். அன்று இரவு அவன் இல்லத்திற்கு நான் சென்றேன். வீடே அலங்கோலமாக இருந்தது. அவனது எட்டு வயது மகன் இஸ்லாமியர்களால் கொல்லப் பட்டான். அவனது மகனின் சடலத்தை எனது மடியில் வீசி என்னிடம் அவன் சொன்னது, 'உங்கள் மஹாத்மா விடம் இவனது சடலத்தை எடுத்து செல்லுங்கள். இவனது குருதியை குடித்து அவர் தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொள்ளட்டும்' அதை கேட்டு வெறியுடன் நான் காந்தியிடம் திரும்பி வந்தேன். ஆனால் நான் வரும் முன்பே அவர் தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார். ஆனால் அவரிடம் சொல்லியும் பயன் ஒன்றும் இல்லை. அவர் கொலைகாரனுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்வார். வேறு ஒன்றும் செய்ய மாட்டார்.

இப்பொழுது சொல் நானா. எனது முடிவு தவறா?
நானா:உங்களிடம் பேசி ஜெயிக்க முடியாது. தத்யாவிடம் ஒரு வார்த்தை...
நாதூராம்:தேவை இல்லை. அவர் வேண்டாம் என்று சொன்னாலும் நான் இதனை செய்ய முடிவெடுத்துவிட்டேன். எனக்கு நீ இரண்டு வாக்குறுதிகளை தர வேண்டும்.
நானா:தந்து விட்டேன்.
நாதூராம்:அவை என்ன என்று நீ கேட்கவே இல்லையே?
நானா:தேவை இல்லை. உடல் எங்கே செல்கிறது, எதற்காக செல்கிறது என்ற கேள்வி நிழலுக்கு அநாவசியம். அதன் கடமை உடலை தொடர்வது மட்டுமே.
நாதூராம்:நல்லது. ஆனால் இம்முறை நான் மட்டுமே தனித்து இயங்க விரும்புகிறேன். அதாவது உடல் மட்டுமே. நிழல் தேவை இல்லை.
நானா:நீங்கள் என்னை மடக்கி விட்டீர்கள்.
நாதூராம்:நான் கொலை செய்த பிறகு தப்பிக்க போவதில்லை நானா. தூக்கு மேடையை நோக்கி செல்லவே விரும்புகிறேன். ஒரு கொலை ஒரு தூக்கு.
நானா:இரண்டாவது வாக்குறுதி?
நாதூராம்:நான் இரண்டு கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். ஒன்றை நாளைக்கும், மற்றொன்றை காந்தி இறந்த மறுநாளும் நீ பதிப்பிக்க வேண்டும்.
நானா:நல்லது. அப்படியே ஆகட்டும்.

மேடையில் இருள் சூழ்கிறது.

ஒரு தேசத்தின் தந்தை தனது மக்களை எல்லாம் ஒரே முறையில் நடத்த வேண்டும். தனது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால் காந்தி அதை செய்ய தவறி விட்டார். அதனால் இந்த மண்ணின் மைந்தனாக எனது கடமையை செய்ய நான் தயாராகி விட்டேன்.

ஜனவரி 30, மதியம் 12 மணி. பிர்லா பவன். காந்தி வெளியில் கட்டிலில் அமர்ந்து இருக்கிறார். அவரது அருகில் கீழே சர்தார் வல்லபாய் பட்டேலின் பேத்தி அமர்ந்து இருக்கிறார். என்னிடம் அப்பொழுது துப்பாக்கி இருந்தது. அக்கம் பக்கம் யாரும் இல்லை. அப்பொழுது என்னால் அவரை எளிதாக சுட்டுக் கொன்றிருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்வதை விரும்பவில்லை. தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பலரது மத்தியில் காந்தி கொல்லப்படவே நான் விரும்பினேன். மாலை வழிபாட்டுக் கூட்டம் நடக்கும் பொழுது அவரை கொல்வதுதான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.

ஜனவரி 30, மாலை 4:45 மணி. பிர்லா பவன். வாசலை கடந்து உள்ள செல்ல முயன்றேன். பாதுகாவலுக்கு இருந்த காவலன் அனைவரையும் பரிசோதித்துக் கொண்டிருந்தான். எனக்கு சிறிது கவலை வந்தது. அப்பொழுது பெரிய கூட்டம் ஒன்று வாசலை கடந்து உள்ளே சென்றது. அவர்களுடன் நானும் உள்ளே சென்றேன். காந்தியின் வரவுக்காக காத்திருந்தேன்.

ஜனவரி 30, மாலை 5 மணி. பிர்லா பவன். போலீஸ் அதிகாரி அர்ஜுன் தாஸ் காந்தியை பார்க்க வருகிறார்.

அர்ஜுன்:நான் ஒரு முக்கியமான காரியதிற்காக பாபுஜியை பார்க்க வேண்டும்.
மஹதேவ்:இப்பொழுது யாரும் அவரை பார்க்க முடியாது. மாலை வழிபட்டு நேரம் நெருங்குகிறது.
அர்ஜுன்:எனக்கு தெரியும். ஆனால் இது மிகவும் முக்கியம்.
காந்தி:மஹதேவ்! யார் அது?
மஹதேவ்:யாரோ உங்களை பார்க்க வந்திருக்கிறார்.
காந்தி:யார் நீ?
அர்ஜுன்:DCP அர்ஜுன் தாஸ், பாபுஜி.
காந்தி:உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன்.... ஆம் ஜவஹருடன் ஹைதராபாத் வந்திருந்தாய் அல்லவா?
அர்ஜுன்:ஆம் பாபுஜி. உங்கள் நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது. அப்பொழுது உங்கள் உடல் நிலை சரியில்லை.
காந்தி:உடலுக்கும் மனதிற்கும் சம்பந்தம் இல்லை அர்ஜுன். இப்பொழுது இங்கே எதற்கு வந்தாய்? வழிபாட்டுக்கா?
அர்ஜுன்:ஆம் பாபுஜி. உங்களுடன் வழிபாட்டுக்கு வர விரும்புகிறேன்.
காந்தி:தாராளமாக வரலாம். ஆனால் இந்த உடையில் இல்லை. துப்பாக்கியுடன் இல்லை.
அர்ஜுன்:ஆனால் பாபுஜி, உங்கள் பாதுகாப்பு....
காந்தி:யாராவது என்னை கொல்ல வந்தால் நீ அவர்களை கொன்று விடுவாயா? அதுவும் வழிபாடு நடக்கும் நேரத்தில்.
அர்ஜுன்:அப்படி ஏதேனும் நடந்து விட்டால்?
காந்தி:நடக்கட்டுமே. எனது நாட்டு மக்கள் என்னை கொல்ல விரும்பினால் கொன்று விட்டு போகட்டுமே. நீ யார் அதை தடுப்பதற்கு?
அர்ஜுன்:ஆனால் என்னை பிரதமர் அனுப்பி இருக்கிறார். நான் அவரது பாதுகாவலன்.
காந்தி:அப்படியென்றால் அங்கே போ. இங்கே உனக்கு வேலை இல்லை.
அர்ஜுன்:பிரதமரும் பட்டேலும் உங்கள் பாதுகாப்பு மீது மிகுந்த கவலை கொண்டுள்ளனர். 10 நாட்களுக்கு முன்பு கூட உங்களை கொல்ல இங்கே குண்டு வைத்தனர். உளவுத்துறையும் உங்களை பாதுகாக்க சொல்லி இருக்கிறார்கள்.
காந்தி:இதற்கெல்லாம் நான் பயப்படுவேன் என்று நினைக்கிறாயா?
அர்ஜுன்:பாபுஜி, உங்களுக்கு நான் எப்படி புரியவைப்பது? இங்கே உள்ள கூட்டத்தினை பார்த்தீர்களா? அதில் உள்ள ஒருவன் கொலை காரனாக இருக்கலாம். வழிபாட்டுக்கு வரும் எல்லோரும் பக்தர்கள் கிடையாது.
காந்தி:கொலைகாரர்கள் வழிபாட்டுக்கு வர மாட்டார்கள். இங்குள்ள அனைவரும் பக்தர்களே.
அர்ஜுன்:10 நாட்களுக்கு முன்பு இங்கே குண்டு வைத்தவர்களும் பக்தர்களா? அவர்கள் ஹிந்து மஹாசபையை சேர்ந்தவர்கள்.
காந்தி:ஹிந்து மஹாசபைக்கும் முஸ்லீம் லீகுக்கும் என்னை பொருத்தவரை வேறுபாடு கிடையாது. எனக்கு இருவரும் இரண்டு கண்கள். நான் உண்ணா விரதத்தை மேற்கொண்ட போது என் மீது கொண்ட அன்பினால் இருவருமே ஆயுதங்களை கீழே போட்டார்கள்.
அர்ஜுன்:ஆனால் துப்பாக்கியின் குண்டுகளுக்கு அது தெரியுமா?
காந்தி:துப்பாக்கியை இயக்குபவனுக்கு தெரியும்.
அர்ஜுன்:உங்களுக்கு இதில் உள்ள ஆபத்து தெரியவில்லை. பிரிவினைக்கு நீங்கள் தான் காரணம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் இஸ்லாமியர்களின் பக்கம் நிற்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். உங்களை கொல்ல முயல்கிறார்கள்.
காந்தி:என்ன கூறுகிறாய்? எனது உயிருக்கு பயந்து வழிபாட்டை முடித்துக் கொள்ள சொல்கிறாயா? கஸ்தூரி பாய் இறந்த பொழுது வழிபாட்டை முடித்துக் கொண்டே அவளது இறப்புக்கு அழுதேன். இப்பொழுது எனது உயிர் என்பதால் வழிபாடு நிறுத்தப்படலாமா?
அர்ஜுன்:ஆனால் உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம். அதனை பாதுகாப்பது எங்கள் கடமை. கொலைகாரன்....
காந்தி:யார் கொலைகாரன்? சரி வந்திருப்பவர்களில் ஒருவன் கொலைகாரன் என்றே வைத்துக் கொள். மற்றவர்கள் எல்லோரும்? ஒரு கொலைகாரனுக்காக மற்ற அனைவரையும் காக்க வைக்கலாமா?
அர்ஜுன்:ஆனால் பாபுஜி....
காந்தி:கேள் அர்ஜுன், ஜவஹர் ஒரு குழந்தை. நீயும் கூட. உனக்கு உன்னிடம் உள்ள துப்பாக்கியில் நம்பிக்கை இருக்கிறது. அந்த கொலைகாரனுக்கு அவனது துப்பாக்கியில். ஆனால் எனக்கு இருக்கும் நம்பிக்கை அஹிம்சையில். துப்பாக்கியில் நம்பிக்கை எனக்கு கிடையாது. நான் தென் ஆப்ரிக்காவில் இருந்த போது என்னிடம் துப்பாக்கி இல்லை. நீயும் ஜவஹரும் என்னுடன் இல்லை. என்னிடம் இருந்தது நம்பிக்கையும் அஹிம்சையும் தான். என்னிடம் இருந்த அந்த ஆயுதங்களால் நான் வெற்றி அடைந்தேன். எனக்கு ராமும், ரஹீமும், கிருஷ்ணனும், கரீமும் ஒன்றுதான். ஹிந்துவாக பிறந்ததற்காக நான் பெருமை படவில்லை. இஸ்லாமியனாக இல்லாததற்காக நான் வருத்தப் படவில்லை. இதுவரையில் நான் எனது மனசாட்சிக்கு விரோதமாக எதுவும் செய்ததில்லை. இனியும் செய்ய போவதில்லை. என்னை கொல்ல அங்கே கொலைகாரன் காத்திருந்தால், வரட்டும், வந்து என்னை கொல்லட்டும். அவனால் காந்தியை தான் கொல்ல முடியும். காந்தியிஸத்தை அல்ல. நீ என்னுடன் வருவதாக இருந்தால் துப்பாக்கியை இங்கேயே வைத்து விட்டு வா.

ஜனவரி 30, மாலை 5:10 மணி.

காந்தி அவரது அறையிலிருந்து வெளியே வந்தார். அவரை பிடித்துக் கொண்டு இரண்டு பெண்கள் அவருடன் வந்தார்கள். அனது பையில் துப்பாக்கி வெடிக்க தயாராக இருந்தது. காந்தி என் அருகே வந்தார். அவரை சுற்றி பலர் இருந்தனர். எனக்கும் காந்திக்கும் இடையில் ஒருவரும் இல்லாத நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். அவரை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன். முதலில் இந்த நாட்டுக்கு அவர் செய்த சேவைகளுக்காக அவரை தலை தாழ்த்தி வணங்கினேன். அவரை நோக்கி இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தேன். அவரது அருகில் இருந்த பெண்ணை எனது ஒரு கையினால் தள்ளினேன். பின்னர் எனக்கு ஒரு நொடி தான் தேவை பட்டது. எனது துப்பாக்கியை இயக்கினேன். காந்தி மிகவும் பலவீனமாக இருந்தார். 'ஆ' என்ற லேசான சத்தத்துடன் அவரது உயிர் அவரை விட்டு பிரிந்தது. அடுத்த முப்பது நொடிகளுக்கு யாருமே என் அருகில் வரவில்லை. அருகில் இருந்த போலீஸ் ஒருவரிடம் என்னை கைது செய்யும்படி தலையாட்டினேன். அவன் வந்து எனது கையை பிடித்துக் கொண்டான். இந்திய நாட்டுக்காக எனது கடமையை செய்த கர்வத்துடன் அவனுடன் நடந்து சென்றேன்.

எங்கும் இருள் சூழ்கிறது.

"Friends and comrades, the light has gone out of our lives, and there is darkness everywhere, and I do not quite know what to tell you or how to say it. Our beloved leader, Bapu as we called him, the father of the nation, is no more. Perhaps I am wrong to say that; nevertheless, we will not see him again, as we have seen him for these many years, we will not run to him for advice or seek solace from him, and that is a terrible blow, not only for me, but for millions and millions in this country" - Jawaharlal Nehru

ப்ரதீப் தால்வி எழுதிய மே நாதுராம் கோட்ஸே போல்தா ஹூன் என்ற மராத்தி நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.

3 Comments:

அஜீம்பாஷா said...

அடடே இவர்தானா அந்த காந்தி நம்ம ஊரு மார்க்கெட் ஓனர்,ஆமா இவர் தெப்பகுளம் போஸ்ட் ஆபீஸ் பக்கத்துலே உட்கார்ந்து எதோ படிச்சுகிட்டு இருப்பார் பாவம் நல்ல மனுஷன் காய்கறி ரொம்ப மலிவா தருவார்.
சாரி நண்பா நீங்க திருச்சிகாரர் அதனால் சதாய்ச்சேன்.
எப்பேர்பட்ட மஹானை சிலையாக்கி ரோடு ஓரத்தில் உட்கார வச்சாச்சு.
அந்த மரியாதை அவருக்கு போதும் என்று நினைத்து ஆள்பவர்களும் அவர்களை ஆள வாய்த்த நாமும் மறந்து விட்டோம்.
நல்ல பதிவு நன்றி. நானும் திருச்சிதான்.

SathyaPriyan said...

அடேடே, நீங்களும் திருச்சியா. நல்லது. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Unknown said...

அதெல்லாம் சரி அவ்ளோ பெரிய யோக்கிய சிகாமணி கோட்சே தன கையில் இஸ்மாயில் என்று முஸ்லீம் பெயரை பச்சை குத்திக்கொண்டு காந்தியை கொன்றதன் காரணமென்னவோ?