Wednesday, October 10, 2012


பொடிமாஸ் - 10/10/2012

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இப்பொழுது தான் நம்ம பதிவர் அண்ணன் மணிக் கூண்டு சிவாவுடன் அவர் சென்ற தேர்தலில் ஒபாமாவிற்கு பிரசாரம் செய்த பொழுது விவாதம் செய்தது போல இருக்கிறது. அதற்குள் நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. நேரம் விரைவாகத்தான் செல்கிறது. அவரிடம் நேரம் கிடைக்கும் பொழுது பேச வேண்டும். இப்பொழுதும் ஓபாமாவை தான் ஆதரிக்கிறாரா என்று கேட்க வேண்டும்.


இப்பொழுதெல்லாம் தமிழ் மண மத சண்டைகள் வயிற்றை குமட்டுகின்றன. மேலாண்மை பாடங்களில் ரூரல் மார்கெட்டிங் மற்றும் அர்பன் மார்கெட்டிங் டெக்னிக்ஸ் என்றொரு பாடம் இருக்கிறது. அதாவது நாம் எதை மார்கெட் செய்கிறோமோ அதை அந்த பொருளின் டார்கெட் ஆடியன்ஸ் முன்பு மட்டுமே மார்கெட் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு ஃபேர் அன்டு லவ்லி என்ற ஒரு ப்ராடெக்டை வெள்ளையர்கள் வசிக்கும் ஒரு நாட்டில் மார்கெட் செய்ய முடியாது. அதே போல டேனிங் ப்ராடக்ட்களை இந்தியாவில் மார்கெட் செய்ய முடியாது. இது மதத்தை மார்கெட் செய்பவர்களுக்கும் பொருந்தும். அந்த மதத்தை எதிர்த்து தொடர்ந்து பதிவெழுதுபவர்களுக்கும் பொருந்தும்.


மஹாராஷ்ட்ராவில் உத்தர பிரதேசத்தவர்களை உதைக்கிறார்கள். லக்னோவில் அஸ்ஸாம் மாநிலத்தவர்களை உதைக்கிறார்கள். பெங்களூரில் வட கிழக்கு மாநில மக்களை உதைக்கிறார்கள். காவிரியில் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுக்கிறது. முல்லை பெரியாரில் கேரளா தமிழகத்துடன் சண்டை போடுகிறது. வட நாட்டானுக்கு தென் நட்டானை கண்டால் ஆகாது. தென் நாட்டானுக்கு வட நாட்டானை கண்டால் ஆகாது. வேற்றுமையில் ஒற்றுமையாம் மண்ணாங்கட்டி. தேசியம் பேசுபவர்களை செருப்பால் அடித்தால் நன்றாக இருக்கும் என்று சில நேரங்களில் தோன்றுகிறது.


ராணி முகர்ஜியின் ஐயா படம் தமிழர்களை கொச்சை படுத்துகிறது என்று ஆளாளுக்கு பொங்கி எழுகிறார்கள். நம்மாட்களுக்கு தமிழுணர்வு ரொம்பவே பொங்கி வழிகிறது. இங்கே இல்லாத சர்தார்ஜி ஜோக்குகளா? இதையெல்லாம் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மாட்களுக்கு தேவை கொஞ்சம் நகைச்சுவை உணர்வு தான். கருப்பன் தான் பிடிக்கும் என்று ராணி முகர்ஜி சொல்வது நமக்கு கேவலமாக தெரிந்தால் கருப்பு நிறத்தை கேவலப் படுத்துவது நாமும் தான் என்பது நமது அறிவுக்கு என்றைக்கு தான் எட்டுமோ? கருப்பை கேவலமாக நாம் பார்ப்பதை முதலில் நிறுத்துவோம். பின்னர் மற்றவர்களை நிறுத்த சொல்வோம்.


சென்ற வாரம் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தேன். ஸ்ரீ தேவியின் கம் பேக் என்பதுடன் சீனி கம் மற்றும் பா படங்களை இயக்கிய பால்கியின் மனைவி இயக்கும் படம் என்ற எதிர் பார்ப்பும் சேர்ந்து கொள்ள ஒரு வித பதட்டத்துடனேயே படம் பார்த்தேன். ஞாயிறு இரவு காட்சி தான் பார்க்க முடிந்தது. அப்பொழுதும் கூட நல்ல கூட்டம். ஸ்ரீ தேவி வரும் முதல் காட்சியில் பலத்த கைதட்டல். முடிவில் ஸ்டான்டிங் ஓவேஷன். படம் எனது எதிர்பார்ப்பை நன்றாக பூர்த்தி செய்தது. என்ன படத்தின் ஒரே குறை அந்த ராமமூர்த்தி பாத்திரம் தான். பெரிதாக ஒட்டவில்லை. நம்மவர்களுக்கு ஹிந்தி தான் பிரச்சினை. இங்கிலீஷ் என்றால் பூந்து விளையாடுவார்கள்.


நாளை மறுநாள் இங்கே மாற்றான் வெளியாகிறது. கே. வி. ஆனந்த் படங்கள் எனக்கு ஒரு மாதிரியாக பிடிக்கும். அதாவது அவரின் படங்களை ஒரு முறை பார்க்க முடியும். அவ்வளவு தான். அவரது படங்களில் கனா கண்டேன் எனக்கு மிகவும் பிடிக்கும். அயன் சுமாராக பிடிக்கும். கோ பிடிக்கவே இல்லை. ஆனால் மக்களின் ரசனை வேறு மாதிரி இருந்தது. சூர்யாவிற்காக இந்த படத்தை பார்க்கிறேன். நன்றாக இருக்க வேண்டும். விஷ்வரூபம், அலெக்ஸ் பாண்டியன், நீ தானே என் பொன் வசந்தம் இந்த மூன்று படங்கள் கூட மாற்றானுடன் வெளி வரும் என்று செய்திகள் வந்தன. ஆனால் வர வில்லை. அனைத்து படங்களும் ஒரே நாளில் வெளி வந்திருந்தால் நான் இந்த வரிசையில் தான் படங்களை பார்த்திருப்பேன்.

நீ தானே என் பொன் வசந்தம் -> விஷ்வரூபம் -> மாற்றான். அலெக்ஸ் பாண்டியன் சத்தியமாக பார்த்திருக்க மாட்டேன். பின்னே, சுராஜ் படங்களை எல்லாம் திரையில் பார்க்க முடியுமா என்ன?


இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு நாளை 70 ஆவது பிறந்த நாள். அவரை பற்றி புதிதாக கூற என்ன இருக்கிறது. அவரது சுப்கே சுப்கே, நமக் ஹராம், ஜஞ்சீர், டான், தீவார், அக்னீ பத், ஷோலே, கபி கபி போன்ற பெரும் வெற்றி பெற்ற படங்கள் மட்டும் இல்லை தோ அவுர் தோ பான்ச், மர்த் போன்ற மொக்கை படங்களை கூட வியந்து பார்த்திருக்கிறேன். திரையில் அவரது ஆளுமையை பற்றி நான் கூறுவதை விட சமீபத்தில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஐந்து நிமிட கௌரவ தோற்றத்தில் அமிதாப்பை பாருங்கள். குறிப்பாக அமெரிக்க இமிக்ரேஷன் ஆபீசரிடம் அவர் பேசுவதையும் தல அஜித் பேசுவதையும் ஒப்பிட்டு பாருங்கள். அவரது ஆளுமை தெரியும். தலையை குறைத்து மதிப்பிட இதை சொல்லவில்லை. தலையின் ரசிகர்கள் என் மீது கொலைவெறி கொண்டு பாய வேண்டாம். அந்த இரு காட்சிகளையும் ஒப்பிடும் பொழுது அமிதாப் பல மடங்கு அதிகம் தலையை விட ஸ்கோர் செய்கிறார் என்பது தான் உண்மை. இந்திய திரை ரசிகர்களை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தனது திறமையினால் ஆட்கொண்டிருக்கும் மஹா கலைஞனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.


தங்கமணி ஆப்பிள் ஐஃபோன் 5 வாங்கி இருக்கிறார். முதல் நாளே ப்ரீ ஆர்டர் செய்து சென்ற வாரம் வந்து சேர்ந்தது. ஃபோன் அட்டகாசமாக இருக்கிறது. என்ன ஆப்பிளின் புதிய OS தான் ஆப்படிக்கிறது. அதிலும் ஆப்பிள் மேப்ஸ் படு மொக்கை. அப்பிள் ஸ்டோரில் இருக்கும் போதே நான் எங்கே இருக்கிறேன் என்பதை சொல்ல மறுக்கிறது. அதே போல எந்த இடத்திற்கும் முழூ விலாசத்தை எதிர் பார்க்கிறது. கூகுள் போல பெயரை வைத்தே விலாசத்தை கண்டுபிடிக்க பாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. பார்ப்போம் அடுத்த வெர்ஷனில் சரி செய்கிறார்களா என்று.


சமீபத்தில் தான் தடையற தாக்க படத்தை பார்த்தேன். அட்டகாசமான க்ரைம் த்ரில்லர். இயக்குனர் மகிழ் திருமேனிக்கு எனது பாராட்டுக்கள். அருண் விஜய் நல்ல ஒரு ரவுண்டு வருவார் என்று நம்புவோம்.

3 Comments:

கார்த்திக் சரவணன் said...

//தேசியம் பேசுபவர்களை செருப்பால் அடித்தால் நன்றாக இருக்கும் என்று சில நேரங்களில் தோன்றுகிறது.//

CORRECT...

அஜீம்பாஷா said...

நாம் தமிழர்கள்தான் , இந்தியா நம் தாய்நாடு நாமெல்லாம் இந்தியர்கள் என்று படித்துவிட்டு இப்போதும் நம்பிகொண்டிருக்கிறோம், அரபு நாடுகளில் வாழும் ஒரு மலயாளியிடம் கேட்ட்டால் I am from Kerala என்பான் இந்தியா என்று சொல்லமாட்டன்.
நீங்கள் சொன்னது நூறு சதவீதம் சரி, தேசியம் என்று சொல்பவர்களை செருப்பால் அடிக்கவேண்டும்.

SathyaPriyan said...

வாங்க ஸ்கூல் பையன், அஜீம் பாய். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.