Friday, October 19, 2012


ஒரு பாம்புக் கடியும் சில அனுபவங்களும்

நான்கு வாரங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ஒரு சனிக்கிழமை காலை என்றைக்கும் இல்லாத திரு நாளாக தங்கமணி வீட்டை வாக்கூம் செய்து கொண்டிருந்தார். பொதுவாகவே இம்மாதிரி வேலைகள் எனது கஸ்டடியில் விடப்படும். அன்றைக்கு ஏதோ விதிவிலக்கு. ஆனால் பதிவு அதை பற்றியதல்ல.

அன்று மாலை நாங்கள் மாண்டியுடன் விளையாடும் பொழுது அவனது பின் கால் தொடை பகுதியில் தங்கமணி கை வைத்ததும் தனிச்சையாக கைகளை அவன் கடிக்க வந்தான். பின்னர் கைகளை முகர்ந்து பார்த்துவிட்டு சென்று விட்டான். நானும் அந்த இடத்தில் கை வைத்தேன். என்னையும் கடிக்க வந்தான். எங்களுக்கு ஒரே வியப்பு. பொதுவாகவே வீட்டு நாய்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களை கடிக்கவே கடிக்காது. அதிலும் மாண்டி பரம சாது. சில நேரங்களில் ப்ரணவ் அவனது வாலையும், காதுகளையும், முடியையும் பிடித்து இழுத்து விளையாடும் போது கூட வீல் என்று கத்திவிட்டு பரிதாபமாக எனது கால்களுக்கு நடுவிலோ அல்லது தங்கமணியின் கால்களுக்கு நடுவிலோ படுத்துக் கொள்வானே தவிர கடி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. செல்லக் கடிகள் கூட கிடையாது. அப்படி இருக்கும் பொழுது எங்களை கடிக்க வந்தது எங்களுக்கு மிகவும் கவலை அளித்தது. அப்பொழுது தான் தங்கமணி காலை வாக்கூம் செய்யும் பொழுது வக்கூம் க்ளீனர் இவனது தொடையில் மோதிவிட்டது என்று கூறினார். சரி அதனால் இவனது தொடையில் ஏதோ வலி என்று நினைத்து, விளையாடுவதை நிறுத்தி அவனது ப்ளே பென்னில் அவனை விட்டு விட்டு இரவு உறங்கி விட்டோம்.

அடுத்த நாள் ஞாயிறு அன்று கூட அவனை அதிகம் தொல்லை செய்யாமல் இருக்க வேண்டி காலை, மாலை, இரவு முன்று வேளையும் சிறிது தொலைவே வாக்கிங் சென்றோம். அன்று இரவு அவனை மடியில் வைத்துக் கொண்டு தொலைக்காட்சியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவனது பின்னங்கால் தொடையில் மொறு மொறுப்பாக ஏதோ கைகளில் அகப்பட்டது. முதலில் அது ஏதோ உணவு அவனது மேல் பட்டு காய்ந்து விட்டது என்று நினைத்தேன். சிறிது கவனித்து பார்த்த பின்னர் அது அவனது உறைந்த ரத்தம் என்பது தெரிந்தது. நன்றாக பெரிய ஒரு ரூபாய் அளவுக்கு இருந்தது.

உடனே தெரிந்து விட்டது அவனுக்கு ஏதோ காயம் ஏற்பட்டு இருகிறது என்று. ஆனால் எதனால் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. தங்கமணியோ வாக்கூம் க்ளீனர் இடித்தது லேசாக என்றும் அதனால் இவ்வளவு பெரிய காயம் எற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். நான் குழம்பி போனேன்.

அடுத்த நாள் திங்கள் என்று காலை முதல் வேலையாக 7 மணிக்கே டாக்டரிடம் கூட்டி சென்றேன். முன்னரே அப்பாயின்ட்மென்ட் எதுவும் வாங்கவில்லை. நல்ல வேளை டாக்டர் இவனை பரிசோதிக்க ஒப்புக் கொண்டார். முதலில் காயத்தை பரிசோதித்தார். நன்றாக முடிகளை ஷேவ் செய்து, உறைந்து இருந்த ரத்த திப்பிகளை நீக்கி பார்த்த போது இரண்டு பல் பட்ட ஆழமான காயம் ஒன்று இருந்தது. அதை பார்த்த உடனே எனக்கும் தெரிந்து விட்டது அந்த டாக்டருக்கும் தெரிந்து விட்டது இது பாம்புக் கடி என்று. எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும், எனது அறிவுக்கு இது விஷப் பாம்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. பின்னர் இவனது டெம்பரேச்சர், வெயிட், ஹார்ட் பீட், கண்கள் என்று அனைத்தையும் பரிசோதித்த பிறகு இவனுக்கு காய்ச்சலோ இல்லை வேறு ஏதானும் பாதிப்போ இல்லை என்பது உறுதியானது. ஆனால் கடித்த இடம் மட்டும் இல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கூட தடித்து இருந்தன. அது தான் டாக்டரை சிறிது கவலை கொள்ள செய்தது. விஷத்தினால் அந்த பகுதிகளில் உள்ள திசுக்கள் இறந்து அப்படி ஆகி இருக்க கூடும். அது மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால் எனக்கு மட்டும் அது அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்றே ஒரு நம்பிக்கை. ஒரு அடி நீளமும், அரை அடி உயரமும், 8 பவுண்டு எடையும் கொண்ட மாண்டியை விஷப் பாம்பு கடித்து இருந்தால் கடித்த சில நிமிடங்களிலேயே என்னவாகி இருக்கும் என்பது எனக்கு தெரிந்தே இருந்தது. கடித்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் அவன் நன்றாக விளையாடிக் கொண்டிருப்பதால் அது விஷப் பாம்பல்ல என்பதை நான் உறுதியாக நம்பினேன். அதே போல பாம்புக் கடியினால் அவனது உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிலை எனக்கு சிறிது ஆறுதல் அளித்தது.

இங்கே அமெரிக்காவில் க்ரேட்டர் வகை பாம்புகள் அதிகம். அவைகளுக்கு விஷம் கிடையாது. ஆனால் நான் வசிக்கும் பகுதியில் அவை அதிகம் கிடையாது. இவனை கடித்த பாம்பு ஏதாவது மழையினால் ஏற்பட்ட ஓடையில் வந்திருக்கக் கூடும். இரவில் ஏதாவது ஒரு புதற்றில் படுத்திருக்கும் பொழுது இவன் அருகில் சென்று சிறுநீர் கழிக்கும் பொழுது இவனை கடித்திருக்க வாய்ப்புகள் உண்டு. மனம் மெதுவாக புள்ளிகளை ஒன்று சேர்த்தது. எது எப்படியோ இனி இரவில் அவனை நெடுந்தொலைவு வாக்கிங் அழைத்து செல்லக் கூடாது என்று மட்டும் உறுதி செய்து கொண்டேன். ஆனால் தங்கமணிதான் பாம்புக் கடி என்றதும் மிகவும் பயந்து விட்டார்.

டாக்டர் என்னிடம் இன்ஃபெக்ஷன் வராமல் இருக்க 10 நாட்களுக்கு தேவையான ஆன்டிபயாடிக் மாத்திரைகளும், பெயின் கில்லர் மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினார். மேலும் மாண்டி புண்ணை நக்கியோ கடித்தோ இன்னும் பரவாமல் தடுக்க அவனது கழுத்தில் கோன் மாட்டப் பட்டது. 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அழைத்து வரும் படி கூறினார். என்னை தினமும் மூன்று வேளை புண்ணை ஹட்ரஜன் பெராக்ஸைட் கொண்டு சுத்தம் செய்யும் படியும், தேவை பட்டால் ஆன்டிபயாடிக் க்ரீம் ஏதாவது தடவும் படியும் சொல்லி விடை கொடுத்தார்.

அடுத்த 10 நாட்களும் நெடுந்தொலைவு வாக்கிங் செல்லாமலும், அதிகம் விளையாடாமலும், டாக்டர் சொன்னபடி தினமும் இரண்டு வேளை மாத்திரைகளை உட்கொண்டு, தினமும் மூன்று வேளை அவனது புண்ணை சுத்தம் செய்து இரண்டு வார காலத்தில் அவனது புண் முழுதாக குணமாகி விட்டது.


மேலே இருக்கும் புகைப்படம் நேற்று எடுத்தது. புண் குணமானாலும் தழும்பு இன்னும் அப்படியே இருக்கிறது. எனது நெஞ்சத்தில் எனது கவனக்குறைவினால் உண்டான தமும்பும் அப்படியே.

9 Comments:

ப.கந்தசாமி said...

சோதனையான அனுபவம். மீண்டு வந்ததிற்கு வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

படிக்கும்போதே மனசு திக் திக்.....

நல்லவேளை! அது விஷப்பாம்பு இல்லை.

இந்த சமாச்சாரத்துலே.... எங்க நாடு கொடுத்துவச்சுருக்கு. நோ பாம்பு அட் ஆல்.

மாண்டியைக் கவனமாகப் பார்த்துக்குங்க.

அவனுக்கு என் விசேஷ அன்பு.

Malligai said...

Poor Mandy. Naanum ungal city thaan.

Malligai said...

Poor Mandy. Naanum unga city thaan. First time visiting your blog. Nice.

குட்டன்ஜி said...

பாவம்.வாய் விட்டுச் சொல்லக்கூட முடியாது.நல்ல வேளை,விஷமில்லாத பாம்பு.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பழனி.கந்தசாமி சார், துளசி டீச்சர், மல்லிகை, குட்டன்.

மல்லிகை, அவனது பெயர் Monty. நீங்கள் திருச்சியை சொல்கிறீர்களா இல்லை ஆஷ்பர்னை சொல்கிறீர்களா?

வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

Malligai said...

Oops. Sorry for saying the name wrong. I am saying present hometown Ashburn.

SathyaPriyan said...

ஆஹா நம்ம ஊரா. நல்லது. உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

Malligai said...

What a small world!!!