Friday, November 02, 2012


பொடிமாஸ் - 11/02/2012

வட கிழக்கு அமெரிக்காவை சாண்டி புயலும், தமிழகத்தை நீலம் புயலும் தாக்கி ஓய்ந்து விட்டன. தமிழகத்திற்கு பெரிதாக பாதிப்பு இல்லை என்று தெரிகிறது. இங்கும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. புயல் எங்கே கரையை கடக்கும் என்பது சரியாக தெரியாததாலும், ஒரு வேளை வாஷிங்டன் டிசி பகுதிகளில் புயல் கரையை கடந்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என்பதாலும் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருந்தது. மின் இணைப்பு இல்லாவிட்டால் தண்ணீர் வராது, கேஸ் அடுப்பு எரியாது, ஹீட்டர் மற்றும் ஏசி வேலை செய்யாது, பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் கிடைக்காது, ATM வேலை செய்யாது, க்ரெடிட் கார்டுகள் வேலை செய்யாது, இன்னும் பல பாதிப்புகள்.

இதற்காக ஒரு வாரத்திற்கு தேவையான குடி நீர் வாங்கி, ஒரு வாரத்திற்கு தேவையான பால், பிரட், தயிர் ஆகியவற்றை வாங்கி, எல்லா பாத்டப் களிலும் தண்ணீர் பிடித்து, கார்களில் பெட்ரோல் போட்டு, தேவையான பணம் எடுத்துக் கொண்டு, டார்ச் விளக்குகள் ஏற்பாடு செய்து என்று இரண்டு நாட்கள் பரபரப்பாக இருந்தது. நல்ல வேளை பெரிதாக பாதிப்பு ஒன்றும் இல்லை. புயலினால் உயிரிழந்த மக்களுக்கு எனது அஞ்சலிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


சென்ற வாரம் முழுதும் அமெரிக்காவில் பரபரப்பாக இருந்தது சான்வி வென்னா கொலை வழக்கு. திருமணம் ஆகி வென்னா தம்பதிகளுக்கு பத்து ஆண்டுகளுக்கு பின் பிறந்த அழகு தேவதை சான்வி. ரகுநந்தன் என்ற பரதேசியின் பணத்தாசையால் அழிக்கப்பட்டு விட்டாள். அவனுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்கக்கூடும். குறைந்த பட்சம் பரோலில் வெளியில் வரமுடியாத 45 ஆண்டுகளாவது கிடைக்கும். அவனது மனைவியும் கருவுற்றிருக்கிறார். அவரது நிலையும் பரிதாபமாக இருக்கிறது. எப்படியோ இரண்டு குடும்பங்களின் மகிழ்ச்சி, நிம்மதி அனைத்தும் ஒரே நாளில் அழிந்து விட்டது.


சென்ற வாரம் இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப் பட்டது இரண்டு விஷயங்கள். அதில் ஒன்று சின்மயீ விவகாரம். இணையத்தில் பொதுவாகவே சிவிக் சென்ஸ் சற்று குறைவாகவே இருக்கிறது. நேரில் சொல்ல முடியாத பல கருத்துக்களை இணையத்தில் சொல்ல முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் சுயக்கட்டுப்பாடு என்று ஒன்று அவசியம். பேராசிரியர்கள் கூட சுயக்கட்டுப்பாட்டை இழப்பது மிகவும் வேதனையான ஒன்று.

நான் முன்னரே சொல்லி இருக்கிறேன், இணையத்தில் போலி பெயரும், முகமூடியும் கிடைக்கின்றன என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான். கருத்து சுதந்திரம், கத்திரிக்காய், கொத்தமல்லி எல்லாமே வரையரைக்குட்பட்டது. எந்த கருத்தை சொல்வதற்கு முன்பும் ஒரு கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த கருத்தை எனது சொந்தப் பெயரில், நானே நேரிடையாக சென்று, எனது குடும்பத்தினர் முன்பு, எனது வாயால், அடுத்தவரிடம் சொல்ல முடியுமா? என்பது தான் அது. முடியும் என்பது உங்கள் விடையானால் அதை இணையத்தில் சொல்லுங்கள். முடியாது என்றால் விட்டு விடுங்கள்.

You are responsible for your life and actions.


சென்ற வாரம் இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப் பட்ட மற்றொரு விஷயம் கமல் - முக்தா விவகாரம். கமல் ரசிகர்கள் பலர் இணையத்தில் பொங்கி இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே யாரும் நாயகன் மட்டமான படம் என்றோ, கமல் மட்டமான நடிகர் என்றோ, அவர் நாயகனுக்காக ஒரு கஷ்டமும் படவில்லை என்றோ சொல்லவில்லை. கமலும், மணியும் அப்படத்திற்காக கஷ்டப் பட்டார்கள், அவர்களே அப்படத்தின் வெற்றியின் பலனை அனுபவித்தார்கள். அவர்களுக்கு பணம், பெயர், புகழ் எல்லாம் கிடைத்தது. முக்தா கஷ்டப் படவில்லை. அவருக்கு அவ்வெற்றியில் பெரிய பங்கு ஒன்றும் கிடைக்க வில்லை. உண்மை இவ்வாறு இருக்க 25 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் தயாரிப்பாளரை பொதுவில் அசிங்கப் படுத்தி இருக்க வேண்டாம் என்று தான் குறிப்பிடுகிறோம். ஒரு வேளை முக்தா ஒரு கஷ்டமும் படாமலேயே இப்படத்தின் வெற்றியில் பெரிய பலன் அடைந்திருந்து கமலுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய் இருந்தால் கமலின் ஆதங்கத்தில் ஒரு அர்த்தம் உண்டு என்று சொல்லலாம். கமலின் கடிதம் துவேஷத்தின் வெளிப்பாடு. அவர் படைத்த குணா பாத்திரம் பேசும் "அசிங்கம், அசிங்கம்.." வசனத்தின் ஒட்டு மொத்த எடுத்துக் காட்டு.

அதற்கு சரியான பதில் சொல்வதை விட்டு விட்டு, கமல் செய்தது சரிதான் என்று நிரூபிக்கும் முயற்சியில் உகாண்டாவில் வெளியான நாயகன் விமர்சனத்தை வெளியிடுவதோ அல்லது முக்தா ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எனக்கு அளித்த பேட்டியில் கமலை புகழ்ந்தார் இப்பொழுது இகழ்கிறார் என்றெல்லாம் கூறுவதோ சிறு பிள்ளை தனமாக இருக்கிறது. நாயகனை நல்ல படம் என்று கூற உகாண்டாவிற்கெல்லாம் போக தேவை இல்லை, நம்ம கேபிள் சங்கரிடம் சொன்னால் அதை விட நல்ல விமர்சனத்தை அவர் எழுதித் தருவார். அதே போல ஒரு நூற்றாண்டுக்கு முன்பு முக்தா கமலை பாராட்டி பேசினார் என்பது அவரது சபை நாகரீகத்தை காட்டுகிறது. ஒரு குழுவில் பணியாற்றும் பொழுது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். அதை ஒன்று மறந்து விட வேண்டும், அப்படி முடியாவிட்டால் மனதிற்குள் அதனை வைத்துக் கொள்ள வேண்டும். முக்தா அவரது மனக் கசப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டு கமலை பாராட்டி இருக்கிறார். இப்பொழுது கமல் தரப்பில் இருந்து அருமையாக பதில் மரியாதை கிடைத்ததால் எதிர்வினையாற்றி இருக்கிறார்.

பொதுவெளியில் மனக் கசப்புகளை அதுவும் 25 ஆண்டுகள் கழித்து வெளியிடுவது நடு வீட்டில் மலம் கழிப்பது போன்றது. நான் அப்படித்தான் நடு வீட்டில் மலம் கழிப்பேன், நீ பொத்திக் கொண்டு அருகில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவது எந்த வகை நியாயமோ தெரியவில்லை.

தன்னை புத்திசாலி என்றும் மற்றவர்களை அடி முட்டாள்கள் என்றும் நினைத்துக் கொண்டு மற்றவர்களை தன்னை விட ஒரு படி கீழே வைத்து நோக்குவது கூட ஒரு வகை ஜாதீயம் தான். இந்த உண்மை கமலுக்கு ஒரு வேளை புரிந்தாலும் புரிந்து விடும், ஆனால் அவருக்கு ஜால்ரா தட்டும் உலக சினிமா ரசிகர்களுக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்.

உலக சினிமா ரசிகர்களே, பூவை பூவுன்னும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம், நீங்கள் சொல்வது போலவும் சொல்லலாம்.


சன் டிவி குழுமத்தினர் சென்ற வாரம் ஹைதராபாத் IPL டீமை வாங்கி விட்டார்கள். வாங்கி விட்டார்கள் என்று சொல்வதை விட ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்று சொல்வது தான் சரி. சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, ரேடியோ, அச்சு ஊடகம், சினிமா, விமான சேவை என்று பல துறைகளில் ஈடுபடும் நிறுவனம் இப்பொழுது விளையாட்டிலும் கால் பதித்துள்ளது. இதிலும் அவர்கள் வெற்றி வாகை சூடுவார்கள் என்று நம்புவோம். எனது வாழ்த்துகளை இந்த பதிவின் மூலம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் ஆஜீத் வென்றதற்கு அவருக்கு எனது வாழ்த்துகள். ப்ரகதி ஆஜீத்தை விட நன்றாக பாடினாலும் மக்கள் சொல்லே மஹேசன் சொல் அல்லவா? நான் இதையும் முன்பே சொல்லி இருக்கிறேன். வைல்டு கார்ட் சுற்றில் மக்கள் வாக்கை பெற்று முதலில் வருபவருக்கு ஒரு unfair advantage கிடைக்கும். பல லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவருக்கே மக்கள் மீண்டும் சைக்கலாஜிகலாக வாக்களிக்க விரும்புவார்கள். போன போட்டியில் சாய்சரன் ஜெயித்ததற்கும் அது தான் காரணம். இந்த போட்டியில் ஆஜீத் ஜெயித்ததற்கும் அது தான் காரணம். ப்ரகதி பாலாவின் பரதேசி படத்தில் ஒரு பாடல் பாடியதாக தெரிகிறது. அவருக்கும் எனது வாழ்த்துகள்.


அம்மாவுக்கும் கேப்டனுக்கும் இடையில் நடக்கும் அரசியல் கேவலமாக இருக்கிறது. சென்ற ஆட்சியில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட கலைஞர் இம்மாதிரி செயல்களில் ஈடுபட்டதாக தெரியவில்லை. நாட்டில் விலைவாசி உயர்வு, மின் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை என்று பல முக்கியமான விஷயங்கள் இருக்கையில் இம்மாதிரி செயல்களில் ஈடுபடுவது ஒரு மாநில முதல்வருக்கு அழகல்ல. ஆட்சி இது போலவே அமைந்தால் அடுத்த தேர்தலில் தளபதியா, கேப்டனா இல்லை அம்மாவா என்ற கேள்விக்கு மக்கள் தயங்காமல் தளபதி என்று பதில் கூறுவார்கள். தளபதி நிச்சயமாக நல்ல ஆட்சி தருவார் என்று தான் நான் நம்புகிறேன்.

3 Comments:

krish said...

சுவையான பொடிமாஸ்.

Senthil Kumaran said...

நல்ல பதிவு. உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன். ஆனால் விஜயகாந்தை எல்லாம் அம்மாவுடனும், கலைஞருடனும் ஒப்பிடுவது கொஞ்சம் டூ மச்.

SathyaPriyan said...

வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டுகளுக்கும் நன்றி krish மற்றும் Senthil Kumaran. தொடர்ந்து வாருங்கள்.